Sunday, November 29, 2026

ஷிர்டி பாபாவின் மகிமை 2.

வல்லிசிம்ஹன்
எல்லொரும் வளமாக வாழ இறைவன் அருள வேண்டும்.

டாக்டரிடம் போன போது  கருவுற்றிருக்கும் போது
இந்த மாதிரி அலர்ஜி , இருமல் எல்லாமே நல்லதில்லை.

உதவிக்கு  யாரையாவது வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பின் அருகில் நிற்க
வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.

கூடவே நின்று கொண்டிருந்த சிங்கம்
உடனே   என் பெற்றோருக்கு தொலைபேசி விட்டார்.  
அடுத்த நாள்  காலை காரைக்குடியிலிருந்து கிளம்பி 
வந்து விட்டார்கள். என்னால் எத்தனை தொந்தரவு என்று வருத்தமாக இருந்தது.

முதல் நாளிலிருந்து எனக்கு உதவியாக இருந்தவர்கள் சிங்கத்தின்  அஸிஸ்டண்ட் மானேஜரும் அவரது மனைவியும் தான்.
திரு ஷண்முக நாதனும் அவர் மனைவி  செண்பக வடிவும்
குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு, சமைத்தும் 
கொடுத்தார்கள்.

அவர்கள் கொண்டு வந்ததுதான் ஷிர்டி பாபாவின் படம்.
 எங்கள் லே அவுட் பக்கத்தில் இருந்த சாய் பாபா காலனியில் 
பாபா கோவிலுக்கு வருவதாக வேண்டிக் கொள்ளச் சொன்னார்கள்.

அங்கே போய்  வந்து பக்கத்து தர்காவில் ஊதிக் கொண்டு
வந்தால் இந்த அலர்ஜி போய்விடும்  என்றும் 
அவர்கள் சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது.

ஊதுவது என்றால் என்ன என்று தெரியாது.

அடுத்த நாளைக்கே  அவருடன் ஆட்டோவில் ஶ்ரீ பாபா கோவிலுக்குப் போகும் போதே இனம் தெரியாத அமைதி வந்தது.
 கூட்டமான கூட்டம்.

ஶ்ரீ நாகஸாயி மந்திர். சாயி பாபா காலனி ,கோவை.
எனக்கு உதவிய அந்த அம்மாவின் முகம் கூட எனக்கு நினைவில்லை. அதுதான் வருத்தமாக இருக்கிறது.

இந்தக் கோவில் வாசனை, சுற்று வட்டாரம் எல்லாமே எனக்குப் புதிதாக இருந்தது. ஸாயிராம்  பஜன் உள்ளே நடந்து கொண்டிருந்தது.

ஷண்முக வடிவு  அம்மா, உள்ளே சென்று என்னைக் காட்டி அங்கே இருந்த
அர்ச்சகரிடம் ஏதோ சொன்னார்.

அவர் எங்களை அங்கே  உட்காரச் சொன்னார்.
அர்ச்சனை ஆரத்தி முடிந்ததும் எங்களை அங்கே இருந்த வேப்ப மரத்தடிக்கு அழைத்துச் சென்று  வேப்பிலையால்  மந்திர  உச்சாடனம் செய்து

பாபா சன்னிதி அருகே இருந்த பெரியவரை அழைத்து ஏதோ சொன்னார். 
அவரும் கையில் பெரிய சாம்பிராணிக் கிண்ணத்துடன் வந்து
என்  முகம் கைகள் என்று  மயில் தோகையால் மெல்ல வருடி
சாம்பிராணி வாசம் படும்படி 
ஊதினார்.
நிஜமாகவே மந்திரம்  போட்ட மாதிரி இருந்தது.
அரிப்பு உடனே நின்று விட்டது.

இது என்னால் நம்பவே முடியவில்லை.

இது நாள் வரை இல்லாத பசியும் வந்தது. ஷண்முக வடிவு அம்மா, அங்கேயே வினியோகிக்கப் பட்ட  அன்னதான இடத்திலிருந்து

எனக்கு  கதம்ப சாதமும் தயிர் சாதமும் வாங்கிக் கொடுத்தார்.

கொஞ்சம்  குழந்தைகளுக்கும் வாங்கிக் கொண்டு
 வீடு வந்து சேர்ந்தோம்.

அம்மாவும் அப்பாவும் மத்தியான சாப்பாட்டுடன் காத்திருந்தார்கள்.

அவர்களுக்கும் பாபா பிரசாதங்களைக் கொடுத்து 
அவர்களும் உண்டார்கள்.

அடுத்த நாள் அலர்ஜியின் தடம் கூட என்னிடம் இல்லை.

இரண்டு நாட்கள் இருந்து பார்த்து விட்டு பெற்றோர் கிளம்பினார்கள்.


இரண்டு மாதங்களுக்குப் பிறகு  பெரிய தம்பி வந்து
எங்களை அழைத்துக் கொண்டு

ரயில் மார்க்கமாகக்  காரைக்குடி வந்து சேர்ந்தோம்.
ஒன்பதாம் மாதக் கடைசியில் 
எங்கள் சின்னவன் ஹரியும் பிறந்தான்.

குறையொன்றும் இல்லை கோவிந்தா._/\_
சீரடி நாதன் பெருமையே பெருமை.




No comments:

ஷிர்டி பாபாவின் மகிமை 2.

வல்லிசிம்ஹன் எல்லொரும் வளமாக வாழ இறைவன் அருள வேண்டும். டாக்டரிடம் போன போது  கருவுற்றிருக்கும் போது இந்த மாதிரி அலர்ஜி , இருமல் எல்லாமே நல்லத...