Tuesday, November 10, 2026

அன்றைய தீபாவளி. புதுப்பதிவு அறுபதுகள்.1961

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

1961 ஒரு தீபாவளி நாள்.  இடம் திண்டுக்கல்.
அஜீரணம், அதீதம் இவை இரண்டுமே
வாழ்வில் இல்லாத நாட்கள்.  மருதாணி வாசனை
நிரம்பிய ஐப்பசி மாதம்.

எல்லாமே உணவோ உடையோ ,  பொழுது போக்கு
சாதனங்களோ அதிகம் கிடையாது
புத்தகங்கள் நிறைய உண்டு. தோழமைகள், வெய்யில்

பேச்சு ,நேரம்  இவை நிறைந்திருந்தன.

ஆட்டம் ஓட்டம், பள்ளி நேரம் எல்லாமே அருமை.

1960இல் தீபாவளி கொண்டாட முடியவில்லை. அப்பாவின் அப்பா மறைந்த வேளை.

தாத்தா மறைந்தால் தீபாவளி இல்லையா என்று  சின்னத்தம்பி 
கேட்டான். 
பாட்டி எங்களுடன் வந்து இருந்தார்.
உடனே பதில் சொன்னவர் அவர்தான். '' நாராயணா, முத்தண்ணா

82 வயதில்தான் மறைந்திருக்கிறார்.
குழந்தைகளுக்கு ஏதும் குறைக்காதே.

கம்பி மத்தாப்பு, சின்னப் பட்டாசு வாங்கிக் கொடு.''
என்று அறிவுறுத்தினார்.
தாத்தா மறைந்த போது அப்பாவும் சித்தப்பாவும் எல்லோருக்கும் 
நல்ல உடைகள் வாங்கி இருந்தனர்.

அதையே அம்மா பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுக்க

சந்தோஷமாக அவற்றை உடுத்திக் கொண்டோம். 
அந்த  ஆகாயக்கலர் நீலம் புது மைசூர் பட்டு வந்திருந்தது.
அந்தப் பாவாடை எனக்கு. தம்பிகளுக்கு
புஷ் ஷர்ட் எனப்படும் சட்டைகளும் பள்ளி யூனிஃபார்ம்
நிஜாரும்.

மருதாணி இரவு.தீபாவளிக்கு முந்தைய நாள்.

 திண்டுக்கல் பெரிய வீதி

அந்தச் சின்ன வயதில் பெரிய வீதியாகவே தெரியும். 
அதில் இருக்கும் ஒரு ஜவுளிக்கடையில் தான் அப்பா வருடத்துக்கு இரண்டு தடவை  துணிமணிகள் வாங்குவார்.

அக்காவும் தம்பிகளும் கடைத்தெருவில்.மத்தாப்பு வாங்கப்
போகிறார்கள்.


அப்போது இருந்த பாம்பு மத்தாப்பு இன்னும் நினைவில்.
ஒரு கறுப்பு  மாத்திரை போல் இருக்கும். அதை ஏற்றினால்
பாம்பு அதிலிருந்து வருவது போல ஒரு தோற்றம்:)கொஞ்சம்
பயமாகக் கூட இருக்கும். அதிலிருந்து வரும் புகை வெளியேற வெகு நேரமாகும்.வாசனையும் நன்றாக இராது. பைத்தியம் பிடித்தது போல் வருடா வருடம் வாங்கினோம். இது என் திருமணம் வரை நீடித்தது.
வீட்டுப் பின்புறத்துக் கதவில் நிஜப் பாம்பைப் பார்த்ததும்
இதை வாங்குவதற்கு அப்பா தடை போட்டு விட்டார்.

நாங்கள் பூரணமாக ரசித்த காலங்கள் திண்டுக்கல்லில் கழிந்தன.
வெறும் விறகடுப்பிலும் கரியடுப்பிலு, பின்னர் ஜனதா ஸ்டவ்விலும்  அம்மா த்ஹிரட்டுப்பால், மனங்கொம்பு, மைசூர்பாகு
ஓமப்பொடி என்று செய்து விடுவார். தீபாவளி அன்று
அம்மாவுக்கு  உதவியாக வடைக்கு அரைத்தல், காய்கறி
நறுக்குதல் இதையெல்லாம் நானும் செய்வேன்.
சாப்பிடத்தான் ஒரு மணியாவது ஆகிவிடும்.

அப்பாவின் பூஜை முடிய அத்தனை நேரம்:)
இனிய காலங்களை நினைக்க முடிந்ததற்கு இறைவனுக்கு நன்றி.
எல்லோரும்    இனிதே ஆரோக்கியம், அமைதியுடன் வாழ வேண்டும்.

உங்கள் வாழ்க்கையும் தீப ஒளியைப் போல பிரகாசிக்கட்டும். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!





No comments:

அன்றைய தீபாவளி. புதுப்பதிவு அறுபதுகள்.1961

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வாழ வேண்டும். 1961 ஒரு தீபாவளி நாள்.  இடம் திண்டுக்கல். அஜீரணம், அதீதம் இவை இரண்டுமே வாழ்வில் இல்லாத நாட்கள்.  ...