Friday, October 02, 2026

வாழ நினைத்தால் வாழலாம்...........

வல்லிசிம்ஹன்


எல்லோரும்  நலமுடன் வாழ  பிரார்த்தனைகள்.



வீழாத இலைகள்   மனத்தின் உறுதி. விழும் இலைகள் மண்ணுக்கு உரம்.
சுற்றிச் சுழலும் அக்டோபர் காற்று.  அத்துடன் சுழலும்  காய்ந்த
இலைகள்.
இயற்கையே கண் முன் ஆடும் நாடகம்.

இன்னும் கொஞ்ச நாட்களில்  மரம் தன் இலைகள் எல்லாவற்றையும் துறந்து
தன் உடலை மட்டும் உறுதியாக நிறுத்தும் காட்சி வருடா வருடம் கண்டாலும்  அலுக்காது.

நம் வாழ்க்கையின் பலபகுதிகளை மரம் வாழ்ந்து காட்டுகிறது.
ஒரே ஒரு  பைன் மரம் மட்டும் தன் இலைகளை உதிர்ப்பதில்லை.
அதன் பாதுகாப்பை உணர்ந்து அங்கே குடியிருக்கும் பறவைகள்

பரம்பரையாக வாழ்ந்து வருகின்றன. 
ஒரு குடும்பம் பறந்து போகும் மறு குடும்பம் அங்கே அடைக்கலமாகும்.

சில வீடுகள் மட்டும்  தனிமைப் படுகின்றன.  இங்கும் மலை நேரத்தில்
விளக்குகள் ஏற்றப்படுகின்றன. சூரியன் எழுந்ததும் அணைக்கப் 
படுகின்றன. கண்ணுக்குத் தெரியாத நினைவுகள்
மனதால் உணரப்படும். சுற்றி இருக்கும் மரங்களும் செடிகளும் 
தோட்டக்காரர் கைகளில்  பாதுகாப்புப் பெறுகின்றன.

அவரது குடும்பத்துக்கு மழையின் போதும் வெய்யிலின் போதும்
அடைக்கலமாகிறது வீடு.

முன் இருந்த உயிரோட்டம், பின் வரும் தலைமுறையால்
காப்பாற்றப்படும். இதுதானே வாழ்க்கை.

காக்க வேண்டியவர்கள் நம் மூதாதையர். காப்பார்கள்.
என்றும் வாழ்க வளமுடன்.





4 comments:

கோமதி அரசு said...

ஆமாம், வாழ நினைத்தால் வாழலாம்.
முன்னோர்கள் வழிபாடு புரட்டாசி மாதம் நல்லது என்பார்கள். (மகாளய பட்சம்)
சென்னை வீட்டின் நினைவுகளும் அதில் வாழ்ந்த
முன்னோர்களை நினைத்து கொண்டதும் அவர்களின் ஆசியை வேண்டி கேட்டதும் அருமை.

காலங்கள் மாறும் போது இயற்கை அதற்கு ஏற்றார் போல தன்னை காட்டிக் கொள்கிறது. மரங்கள் பூத்து குலுங்குவதும், பறவைகள், மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் அடைக்கலம் தருகிறது.
படங்கள் எல்லாம் அருமை.

ஸ்ரீராம். said...

கவிதையாக எழுதி இருக்கிறீர்கள்.    மூதாதையரை நினைவுகூரும் நாட்கள்தானே மாளயபட்சம்..   நிச்சயம் வந்து கூட நின்று உதவி புரிவார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி, வாழ்க வளமுடன். இயற்கையின் பாதிப்புகள் சிலசமயம் அதிர்ச்சி அளித்தாலும் பலம் கொண்ட மரங்கள் முடிந்த வரை எதிர்த்தும் அனுசரித்தும் வாழ்வைத் தொடர்கின்றன. வாழ்வு பல பாடங்களைத் தொடர்ந்து தருகிறது. தெளிவுடன் எதிர்காலத்தைத் தொடர இறைவனே துணை.மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு ஶ்ரீராம். ஆமாம், இங்கேயும், மற்ற இடங்களிலும் மஹாலய பக்‌ஷம் மிகவும் நம்பிக்கையுடன் செய்யப்படுகிறது. பிற்றுக்கள் நம்முடன் இருக்கும் காலங்கள். தொடர்ந்து வரும் சந்ததிகள் நலமுடன் வாழ முன்னோரின் ஆசிகள் வழி வகுக்கும்.

ஒரு ஐப்பசி மாத ஆரம்பத்தில் ......2

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.  எங்க வீட்டு மஹாலக்‌ஷ்மி  பசுமலை. முன்பே எழுதி இருப்பதை நினைவூட்டல்  பதிவாக எழுத விரும்புகிறேன். ...