Thursday, October 08, 2026

நவராத்திரிபதிவு 5

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.








ஶ்ரீ பட்டீஸ்வரம்  துர்கா.
1956   திருமங்கலம் கொலு


நான் சிறப்பாக நினைப்பது பிறந்த வீட்டுக் கொலுவைத்தான். பெற்றோரும், குழந்தைகளுமாய் உழைத்துக் கொலுப்படி நிர்மாணம் செய்யப்படும்.

அம்மாவின் கையழகில் அந்த 22ஆம் எண்,சன்னிதிதெரு வீடு புதுப் பொலிவு பெறும். ஒரே ஒரு பெரியதெருவைக் கொண்ட அந்தத் திருமங்கலம் ஊரில்,

ஒரு முனையில் பஸ் நிலையம், ஆனந்தா திரையரங்கு.

மறு முனையில் மீனாட்சி அம்மன் கோவில்.

நடுவில் இரு பக்கங்களிலும் முறையே ஒரு உடுப்பி ஹோட்டல்,ஒரு தபாலாபீஸ், ஒரு ஜவுளிக்கடை, ஒரு அரசமரத்தடிப் பிள்ளையார் இவ்வளவும் அடங்கும்.



கிளைபிரியும் இடங்களில் வலது பக்கம் ஒரு குட்டித் தெருவும் இடதுபக்கம் ஒரு ச்சின்னக் கடைத்தெருவும்

உண்டு. அங்கு முதலாக ஒரு பிரசித்தி பெற்ற வேர்க்கடலைக் கடையும் இருக்கும்.

ஒரு ஐந்து பைசாவுக்கு இரண்டு எட்டு வயது வயிறுகள்

நிரம்பிவிடும். கடலைமணிகளும் பெரிதாக இருக்கும்.
வலது பக்கம் போகும் தெருவில் ஒரு ஐய்யனார் கோவில் இருந்ததாக நினைவு. அதற்கு எதிர்த்தாற்போல் ஒரு பெரிய சுற்றுச்சுவர் இல்லாத கிணறு ஒன்றும் இருக்கும்.

தினம் ஆதாரப் பள்ளிக்குப் போகும்போது அந்த இரண்டு இடங்களையும் ஓடியே தாண்டிவிடும் வழக்கம் எங்களுக்கு.
இப்போது நினைத்தால் கூடக் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. அங்கே(கோவிலுக்குள் இருக்கும் )கொடுக்காப்புளி மரத்தின் பழங்கள் அப்படியே இன்னும்
நாவின் நினைவில் இருக்கிறது
அந்தக் கிணற்றில் கோட்டி இருப்பதாகவும் சொல்லுவார்கள்.





எனக்கும் என் தோழிகளுக்கும் மிகப் பிடித்தமான கொலு இருக்கும் ரஜினியின் வீடு இந்த இரண்டு அட்வென்சர் ஸ்பாட்ஸ் தாண்டிதான் போகணும். அவங்க வீட்டில 11 படிகள் நிறைய மிகப் பெரிய அளவில் பொம்மைகள் வீற்றிருக்கும். அவர்கள் சொந்த ஊர், தென்னாற்காடு. பண்ருட்டியில் செய்த வளப்பமான,செழுமை கொஞ்சும் ராமர்பட்டாபிஷேகம், ஆலிலை கிருஷ்ணன்,செட்டியார் கடை, மலையப்பன், வெள்ளைக்கார துரைகள்,தேர்கள் இன்னும் நிறைய வகைகளில் பொம்மைகள் வண்ணமயமாக இருக்கும்..





அதைப் பார்த்துவிட்டு நம்ம வீட்டுக்கும் அது போல வாங்க வேண்டும் என்றால்,அப்பா மாட்டேன் என்று மறுப்புச் சொல்ல மாட்டார். நாமே அதைவிடப் பிரமாதமாகச் செய்யலாம்மா என்று, உறுதி அளித்து அதை நிறைவேற்றுவார்.
முதலில் வாங்குவது கலர்க் காகிதங்கள் அதில் இரண்டு நாட்களில் தோரணங்கள் உருவாகிவிடும்.
அடுத்தப் ப்ராஜெக்ட் தெப்பக்குளம். அப்பாவுக்குக் கிடைத்தது
 ஒரு பெரிய சதுர பிஸ்கட் டின். அதை ஒரு ஒரு உப்புத்தாளால் தேய்த்து பளபளவென்று ஆக்கிவிட்டார்.
அப்புறம் என்ன!! சுற்றிக் காவியும் சுண்ணாம்பும் அடித்தால் குளம் ரெடி:)) வாசலில் பொம்மைகள் விற்ற மதுரைக்காரரிடம் ஒரு ஸ்ரீரங்கநாதரும், தெப்பக் குளத்தில் ஓட ஒரு குட்டிப் படகு,படகோட்டியோடு கிடைத்தது.

அடுத்தாற்போல குளத்தைச் சுற்றிப் பார்க் வேணுமே. 

இருக்கவே இருக்குக் கிணத்தில தூறு வாருகிற தொறட்டிகரண்டி. புரட்டாசி மாதம் மழைக்குமுன்னால கொஞ்சம் தண்ணீர் குறைவாகத்தான் இருக்கும். வாளியை இறக்கினாலே மண்ணும் தண்ணீருமாகத்தான் வரும்.

அதனால வண்டல் மண்ணும் கிடைத்து கடுகு,கேழ்வரகு போட்டாச்சு. குட்டிச் செடிகளும் முளைத்து நந்தவனமும் ஆச்சு. நடுவில ப்ளாஸ்டிக் நாற்காலிகள்,மேஜைகள், இதைதவிர தீப்பெட்டிகளால் உருவான பீரோக்கள், சாக்கலேட் சுற்றிவந்த ஜிகினாப் பேப்பரில் உருவான பெண்கள், பழைய கிராமபோன் இசைத்தட்டுகளில் வரையப்பட்ட பூக்கள் இன்னும் எத்தனையோ அம்மா அப்பா கைகளில் மல்ர்ந்த அழகு உருவங்கள் அந்த மூன்று
படிகளை அலங்கரிக்கும்.
செலவில்லாத கொலு.


காலையில் எழுந்திருக்கும் போதே இன்று புதிதாக என்ன செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு கொலு பக்கத்தில் உட்கார்ந்து அசை போட்டுவிட்டு, பொம்மைகளைத் தொடாமல் தள்ளி நின்று அழகு பார்த்து, மாலை வந்ததும், வீட்டுக்குக் கொலு பார்க்கவரும் சிறுவர் சிறுமியரின் அருட்புரிவாய் கருணைக்கடலே, எனையாளும் மேரி மாதா, பாடல்கள் எல்லாம் கேட்டுஊர்சுற்றல் முடிந்து


நம் வீட்டுச்சுண்டலையும் சாப்பிட்டு ஒவ்வொரு பொம்மைக்கும் குட்நைட் சொல்லாத குறையா பார்த்துவிட்டுப் படுக்கப் போகும் ஆனந்தத்திற்கு ஈடேது??
சரஸ்வதி பூஜை அன்று படிக்கவேணும்கிற ஆர்வம் கட்டுக்கடங்காமல் போகும்:)அன்று இரவு சாஸ்திரத்திற்கு ஒரு பொம்மையை அம்மா படுக்க வைத்துவிடுவார்கள். படு சோகமாக இருக்கும்.
ஒரு நாள் தான். விஜயதசமி அன்று பள்ளிக்குப் போய் விட்டால் தீபாவளிப் பட்டாஸ்,எங்கள் பேச்சில் வந்துவிடும்.

12 comments:

ஸ்ரீராம். said...

அப்பா அங்கிருக்கும் திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவமனையில் சில காலம் பணிபுரிந்தார்.  அது 80 களின் தொடக்கம் என்று நினைக்கிறேன். 

நான் விருதுநகரில் பணிபுரிந்தபோது ஒரு நாள் திருமங்கலம் ஆனந்தா திரையரங்கில்தான் ஆனந்தகும்மி பார்த்தேன் = நண்பருடன்.

ஸ்ரீராம். said...

சில மாதங்கள் திருமங்கலம் தானி நேராக விருதுநகர், சாத்தூர் ஆகிய இடங்களிலும், சில மாதங்கள் திருமங்கலம் தாண்டி வலதுபுறம் திரும்பி வத்ராப், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களிலும் பனி புரிந்திருக்கிறேன்.  திருமங்கலம் தாண்டித்தான் செல்லவேண்டும்.  அது 89 ஆம் வருடம்.

ஸ்ரீராம். said...

திருமங்கலத்தில் பெரிய சர்ச் ஒன்று மெயின் ரோட்டிலேயே இருந்தது.  மதுரையிலிருந்து தினசரி அதைத்தாண்டித்தானே நான் அலுவலகம் செல்லவேண்டும்.   ஒருநாள் மிக பயத்துடன் நான் இருந்தபோது அதன் சுவரில் இருந்த வாசகம் என்னை அப்படியே புரட்டிப் போட்டு தைரியமாக்கியது.

ஸ்ரீராம். said...

கொலு நினைவுகள் சுவாரஸ்யம்.  அப்பாவும் இதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உங்களுக்காக எல்லாம் செய்திருக்கிறார் என்பது நெகிழ்ச்சி. 

ஸ்ரீராம். said...

'எனையாளும் மேரி மாதா' வேறு பாடுவீர்களா?  அதில் இரண்டாவது வரியை நான் இப்படி பாடுவேன்.."துணை நீயே ஸ்ரீநிவாஸா.."!! 

அருள்புரிவாய் கருணைக்கடல் பாடல் என் அக்காவின் பேவரைட்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது. கொலு நினைவுகள் மனதை விட்டு என்றுமே நீங்காது.

/நம் வீட்டுச்சுண்டலையும் சாப்பிட்டு ஒவ்வொரு பொம்மைக்கும் குட்நைட் சொல்லாத குறையா பார்த்துவிட்டுப் படுக்கப் போகும் ஆனந்தத்திற்கு ஈடேது??
சரஸ்வதி பூஜை அன்று படிக்கவேணும்கிற ஆர்வம் கட்டுக்கடங்காமல் போகும்:)அன்று இரவு சாஸ்திரத்திற்கு ஒரு பொம்மையை அம்மா படுக்க வைத்துவிடுவார்கள். படு சோகமாக இருக்கும்.
ஒரு நாள் தான். விஜயதசமி அன்று பள்ளிக்குப் போய் விட்டால் தீபாவளிப் பட்டாஸ்,எங்கள் பேச்சில் வந்துவிடும்./

அப்படியே என் நினைவாக இந்த பாரா வந்துள்ளது. எனக்கும் சிறுவயதில் அந்த விஜயதசமி அன்று படு சோகமாக இருக்கும்.பிறகு நானே கொலு வைத்து கொண்டாடும் போதும் (புகுந்த வீட்டுக்கு மகளை திருமணம் செய்து அனுப்பும் ஒரு தாயின் பிரிவு சோகம் மாதிரி ) விஜயதசமியன்று சிறிது சோகம் வரும். நல்ல அழகாக நம் உள்ளத்து உணர்வுகளை பற்றி எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம். திருமங்கலம் வழியாக நீங்கள் சென்று வந்த நாட்களைப் பற்றி அறிய மிக மிக சந்தோஷம்.ஆனந்தா தியேட்டர் அப்பொழுதும் இருந்ததா!! என்ன ஒரு ஆச்சரியம். நினைவு தெரிந்து பார்த்த முதல் படம் வீரபாண்டிய கட்ட பொம்மன் ஆனந்தாவில் தான்..அப்பாவும் அங்கே பணி புரிந்திருக்கிறார் என்பது அடிஷனல் சந்தோஷம்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் திருமங்கலம் வழியே சென்ற வருடங்களில் நான் சென்னை வந்து 13 ஆண்டுகள் கடந்திருக்கிறேன்:) கேட்பதற்கே அருமையாக இருக்கிறது. ஏதோ ஒரு சம்பந்தம் நமக்கு வாய்த்திருக்கிறது. கேட்க மிக மிக சந்தோஷம்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அப்படியா. நாங்கள் இருக்கும் போது சர்ச் ஏதும் இல்லை. தம்பி படித்த பி கே நாடார் உயர் நிலைப் பள்ளி தான் இருந்தது. நம் வீட்டு வழியாகத்தான். எல்லா பஸ்ஸும் போகும். என்ன வாசகம் என்று சொல்லவில்லையே. பாவம் அந்த இளம் வயதில் எதைப் பார்த்து பயந்தீர்களோ:(((((

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம். அப்பா என்றாலே நெகிழ்வுதான். என்னால் தான் அவருக்கு நிறைய சோதனைகள் வந்தது. கொண்டாடப் படாத மனிதர்களில் அவரும் ஒருவர். அந்த நவராத்திரி சமயம் அப்பாவுக்குத் தேர்வு சமய ஸ்டடி ஹாலிடேஸ். படுத்துக் கொள்ள முடியாத இருமல் வேறு தொந்தரவு செய்தது. கைத்தொழிலாக இந்தப் பொம்மைகள் செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றியும் பெற்றார்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அட!!!! என்ன ஒரு சாமர்த்தியமான கற்பனை. துணை நீயே ஶ்ரீனிவாசா!!! ஆஹா. சூப்பர் மா ஶ்ரீராம்!!!!! அருள் புரிவாய் பாடல் எல்லாமே வானொலியில் கேட்டுத் தெரிந்து கொண்ட நேரம் அப்பா. உங்கள் அக்காவைப் பற்றி அறிய மனம் நிறை மகிழ்ச்சி மா. வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சகோதரி கமலா, என்ன ஒரு அதிசய ஒற்றுமை நம் வாழ்வு. ''(புகுந்த வீட்டுக்கு மகளை திருமணம் செய்து அனுப்பும் ஒரு தாயின் பிரிவு சோகம் மாதிரி ) விஜயதசமியன்று சிறிது சோகம் வரும்'' அடடா. உங்களுக்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. உங்கள் எழுத்தில் என்னைப் பார்க்கிறேன். பலவித சோகங்களுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் நம்மை கடவுள் பதப் படுத்துகிறார். நவராத்திரியின் அடி நாதமே அதுதான் என்று நினைக்கிறேன். மிக மிக நன்றிமா. எப்பொழுதும் நலமாக இருக்க வேண்டும்.

நவராத்திரிபதிவு 5

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். ஶ்ரீ பட்டீஸ்வரம்  துர்கா. 1956   திருமங்கலம் கொலு நான் சிறப்பாக நினைப்பது பிறந்த வீட்டுக் கொலுவைத...