Tuesday, October 13, 2026

ஃபிசியோ தெரபி 15 வருடங்களுக்கு முன்னால்.......

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

கால் புராணம்
+++++++++++++++++++++++



ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி:(
பிசியோ வலியோ தெரபி
1998  ஒரு தரம். 2000 , 2004 ஒரு  தரம். அப்புறம்  கணக்கு மறந்துவிட்டது.
அநேகமாக எக்ஸ் ரே எடுக்கப்பட்டது காலும் பாதமும் தான்.

ஏது இந்த அம்மா இன்னும் வரலையே நாலு மாசங்கள் போய் விட்டதே
என்று அப்போதைய
  தேவகியும் (இப்போதைய மீனாட்சி ) ஆசுபத்திரி  எமர்ஜென்சி
நர்ஸ் நினைச்சிருப்பாங்க,.

மண்ணோ, கல்லோ, தண்ணீரோ  எதுவாயிருந்தாலும்
ஆக்ஷேபனையே இல்லை. தடுக்குமா தடுக்காதா என்று என் கால்கள் தேடும்.
தடுக்கி விழுந்தால்  வலி வராமல் இருக்குமா. இல்லை வைத்தியருக்குக்
கொடுக்கவேண்டியதைக் கொடுக்காமல்தான் சரியாகப் போகுமா.

முதல் தடவை விழுந்தபோதே  வைத்தியர் சொன்னது  , 
முதுகெலும்பு தேய்ந்து
உதிருவது போல இருக்கு.ஆமாம்!! அப்படித்தான் சொன்னார். இப்போ கூடத் தொட்டுப் பார்த்துக்கொள்கிறேன்:)))))
கால்ஷியம் மாத்திரை எடு.  உடல் எடையைக் குறைத்துவிடு.
உடல் தானே  சமநிலைப் பட்டுவிடும் என்றார்.

அதற்காக அகஸ்தியர் மாதிரி இமயம் முதல் பொதிகை வரை நடக்க
என்னால்  முடியுமா.:)
அவ்வப் பொழுது விழுவதும் எழுவதும் கால்கட்டு போடுவதும்
வழக்கமாகப்  போனது,.,  ஆறு மாதங்கள் முன்னால்   காலில் பட்ட  அடி
வலி குறையவே இல்லை.

சரிசெய்தே ஆகவேண்டிய நிலையில்   எலும்பு  வைத்தியரிடம் போய்
வந்து ஒரு வாரம் ஓடிவீட்டது.
டாக்டரின் உதவியாளினி  என் காலில் ஒரு அங்குலம் கூட விடவில்லை.

இரண்டுகைகளினாலும்    அழுத்தி இத்தனை நாட்களாக எனக்குத் தெரியாமல் இருந்த தசைநார்கள், செல்லணுக்கள்  எல்லாவற்றையும் வன்மையாக ச்  சிறந்த  முறையில்    அறிமுகப்   படுத்தினார்.:(

உங்களை  ஒரே மாதத்தில்  சரிப் படுத்திவிடுகிறேன். தினம்
ஃபிசியோதெரபி எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்தப் பயிற்சிகளைச்   சரிவர  வீட்டிலும் செய்தால்  தசைகள் பலம் பெறும் என்று    புத்திமதி சொல்லி அனுப்பினார்..

தமிழ்மண நட்சத்திரம் அப்படி இப்படின்னு நான்கு நாட்கள்     வாய்தா வாங்கி  வைத்துக் கொண்டேன்.
எங்கள் குடும்பத்திலேயே  அவரிடம் சிகித்சை எடுத்துக் கொண்டவர்களின் அனுபவங்கள்  என்னைப் பயமுறுத்தின.   உடல் பூராவும்
வலி க்கும்  ஆனால் பழகிவிடும்.பூரண    குணம் நிச்சயம்.!!!!

மதில்மேல்  பூனையாக வீட்டுக்குப் பக்கத்து   தெருவிலேயே  இருக்கும்
வைத்திய சாலைக்குப் போன முதல் நாள்   ' ராஷி'
(அதுதான் அந்தப் பெண்ணின் பெயர்)   பூப்போல்  கால்களுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல  எங்கெல்லாம் வலியிருக்கிறது என்று தெரிந்து கொண்டார்.

இவ்வளவுதானா. இதற்காப்  பயந்தோம்  என்றவாறு

 எல்லோரிடமும்
தொலைபேசி என் ஆநந்தத்தைப் பகிர்ந்து கொண்டு   நீங்க எல்லாரும் அங்கே
வைத்தியம் செய்து கொள்ள தாராளமாகப்   போகலாம்.
வலியே      இல்லை என்று சொல்லிப் பெருமை சொல்லிக்கொண்டே அடுத்தநாள்    வைத்தியத்திற்குப்   போனேன்..

கோதுமை மாவு    ,சப்பாத்திக்குப்  பிசைவோம் இல்லையா....
அதுபோல  என் கால்களில் உள்ள     தசைகள் அழுத்தப்பட்டுப் பிசையப் பட்டு,
வலி தாங்காமல் போன போது,
பனிக்கட்டி நிரம்பிய பையினால்   ஒத்தடம் கொடுத்தார் அந்தப் பெண்.

இப்போது    நான் முழங்கால் வலி என்றே சொல்வதில்லை.
உடல் முழுவதும் புது ரத்தம் ஓடுபவது போல புத்துணர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்.
டாக்டர்   அப்படித்தான் சொல்லி இருக்கிறார்.  இன்னும்  பத்து நாட்கள்  இந்தப் பயிற்சி மேற்கொண்டால் போதும்.
ராஷி (பிசியோ தெரப்பிஸ்ட்)என்னை ரொம்பவே மெச்சிக் கொள்கிறார்.
இங்க வரவங்க இரண்டு நாட்களுக்கு மேல  வரத்தயக்கம் காட்டுகிறார்கள்
ஆந்டி..
உங்களுக்குப்  பொறுமை  அதிகம்.
நீங்க   மூணு நாள் வந்துட்டீங்க.
இனிமே  வலி குறைந்துவிடும். முன்னைவிட வேகமா நடப்பீங்க  பாருங்க.
என்று அவள் சொன்ன அடுத்த நாள் ஏதோ  ஒரு தடங்கல் வந்துவிட்டது.
போக முடியவில்லை.


அடுத்தநாள்     பயிற்சியை நினைத்தால்   இரண்டு கைகளுக்கு   நடுவில் அகப்படும்    பரோட்டா மாவுதான் நினைவுக்கு  வருகிறது.
பரவாயில்லை இதையும்  தாண்டிவிடலாம்  மெள்ள,:)

பிறகு  அதே வைத்தியரின்  பயிற்சிக் கூடத்துக்குச் சென்று
ஒற்றைக் காலில் நிற்கப் பழகினேன்.:(
அது ஒரு பயங்கரம்:(
அடுத்த நாள்  கீழே உட்காரப் பயிற்சி நடந்தது.

ஒவ்வொரு நாள் பயிற்சிக்கும் 450 ரூபாய்தான்
பயிற்சிகளைத் தொடர்ந்து  ஆறு மாதங்கள் கற்றுக் கொள்ளுமாறு அங்கே இருக்கும்  ஆன்ட்ரு  வற்புறுத்தினார். பத்து நாட்களுக்குப் பிறகு போகவில்லை.

இப்பொழுது  ஒரு மாதிரி (வேகம் )குறைந்த நடையாதலால்  விழவில்லை.

மெரினா,வீட்டு வாசல்,துபாய்  ஏர்போர்ட், சுவிஸ்  நிலம் எல்லாவற்றையும்  என் கால்  ஸ்பரிசித்திருக்கிறது.

இனி விழாமல் அவன் பார்த்துக் கொள்ளுவான். நடை தளர்ந்துவிட்டதல்லவா.

சிங்கத்துக்குப் பிறகு  சூரிக்  எஸ்கலேட்டரில் விழுந்தது 
எல்லாம் பின் கதை:) தலை தப்பியது  தம்பிரான் புண்ணியம்.




10 comments:

ஸ்ரீராம். said...

என் மாமியாரின் தங்கை கணவரும் கீழே விழுவதில் ஸ்பெஷலிஸ்ட்.  ஆனால் குச்சி போன்ற உடம்பு என்பதால் உடனடியாக எலும்புக்கு சேதாரம்.  பல வருடங்களாக போதிய இடைவெளியில் விழுந்து கொண்டுதான் இருக்கிறார்.  எண்பதை நெருங்குகிறார்.  சுடச்சுட 15 நாட்களுக்கு முன் விழுந்தார்!

ஸ்ரீராம். said...

நானும் பிசியோதெரபி மூன்று முறை சென்று வந்திருக்கிறேன்.  முழங்கால் வலிக்கு.  என்னமோ செய்து அனுப்புகிறார்.  அப்புறம் அவர் செய்யச் சொல்லும் பயிற்சிகளை நானும் செய்வதேயில்லை.  எப்படி சரியாகும்?!

ஸ்ரீராம். said...

உங்கள் அனுபவங்கள் கொடுமையாயிருக்கின்றன.  இப்போதைய நவீன உபகரணங்கள் எதுவும் அப்போது வந்திருந்திருக்காது.  கைத்தான் Fan போல கைதான் மெஷின்!  இப்பவும் ஒரு சிட்டிங்குக்கு 450 ரூபாய்தான் வாங்குகிறார்கள்.  மெஷின் வைத்தால் அந்த மெஷின் வைத்து கொஞ்சம் கூடலாம்.

Bhanumathy Venkateswaran said...

ஓஓஓஓஓ! விழுவதும், எழுவதும்தான் வாழ்க்கை இல்லையா? சென்ற வருடம் ஒரு பிக்னிக்கில் என் வயதை ஒத்த மாமியும் நானும் ஒரு விளையாட்டில் அவர் ஓட, நான் துரத்த.. அவர் பாவம் கீழே விழுந்து இடுப்பில் ஹேர்லைன் கிராக்.:((

வல்லிசிம்ஹன் said...

சுடச்சுட 15 நாட்களுக்கு முன் விழுந்தார்!''' அடப் பாவமே. :) உங்கள் எழுத்து சிரிப்பை வரவழைத்தாலும் அவரது நிலை பரிதாபம் தான். நலம் பெறட்டும் மா.

வல்லிசிம்ஹன் said...

முழங்கால் வலி நம்மைக் காதலிக்கிறது.:) ஶ்ரீராம். இந்த வலி எண்ணெய் தேய்த்துக் கொள்வதில் சிறிது குறைகிறது. நல்ல தூக்கமும் அவசியம். இப்படிக்கு இப்பவும் சிரமப்படும் வல்லிம்மா:)))))

வல்லிசிம்ஹன் said...

இன்னமும் அதே 450 ஆ? அதிசயமா இருக்கே. டாக்டர் புகழேந்தியா மா ஶ்ரீராம்.? ஆமாம் அங்கே அந்தக் கொடுமைக்கு என் பிரதான வலியே தேவலை என்று ஆகிவிட்டது.:( அந்த மெஷினினால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை மா. வலியா பார்த்து நம்மைவிட்டு விலகணும். இதோ காலையில் எழுந்து இருப்பதே வலியின் தீவிரத்தால் தான். பகவானே கதி!!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானு.நன்றி மா. ஆமாம் விழுவதும் எழுவதுமே அப்போது வாழ்க்கையாக இருந்தது. உங்கள் தோழியை நினைத்தால் வருத்தமாக இருக்கு. ரொம்ப வலித்திருக்கும் பாவம். உண்மையான ஃப்ராக்சரை விட ஹேர்லைன் ரொம்பக் கொடுமை.

கோமதி அரசு said...

நானும் கீழே விழுந்து கொண்டே இருப்பேன். என் கணவரின் "தரையை பார்த்து நட "என்ற எச்சரிக்கை குரல் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது.
நிறைய பிசியோ தெரபிகளிடம் போய் வந்து இருக்கிறேன். என் கணவர் தான் பிசியோதெரபியிடம் அழைத்து கொண்டு போய் விட்டு வெளியில் அமர்ந்து கஷ்டபடுவார்கள்.

இப்போது முன்பு அடிக்கடி விழுந்ததின் விளைவு இப்போது நடக்கமுடியாமல் இருப்பதற்கு காரணம் என்கிறார் மருத்துவர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி கோமதி வாழ்க வளமுடன். மருத்துவர் சொல்வதும் உண்மைதான். பாவம் சார். உங்கள் வலியைப் பார்த்து வருத்தப் பட்டிருப்பார். நம் எலும்புகள் வலிமையை இழக்கத் தொடங்கும் காலம் விழுந்து விடுகிறோம். அதன் பின் விளைவிப்போது அதிகம் நடக்க முடியாமல் போகிறது. வலியைப் பொறுத்து நடக்கச் சொல்கிறார் இஙே இருக்கும் மருத்துவர். இறைவன் நம்மைக் காப்பார்.

அக்டோபர் 31 ,1965

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக நலமாக வாழ வேண்டும். அக்டோபர் 31 2012. வண்டி போகும் பாதை எல்லாம் புதிதாக இருந்தது. சிங்கம் அப்பா மாமா எல்லோரும் ...