Sunday, April 19, 2026

திருக்குறுங்குடி நோக்கி....2


திருக்குறுங்குடி





வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.


                                                          குறத்தி,  தன் குழந்தைகளுடன்  ,,,,நம்பி கோயிலில்.
மதுரைக்கு அடுத்த  நிறுத்தம்  ஶ்ரீவில்லிபுத்தூர்.  மொத்த குடும்பத்துக்கும்  ஆண்டாள் அம்மாவிடம் அதீதப்  ப்ரேமை.

அதனால்  ஓட்டுனர் மாயாண்டி  ,தாத்தா வின் விருப்பபடி கோவில் அருகே வந்து நிறுத்தினார்.  பலராமா பல பத்திரா சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நாங்கள் நால்வரும் கீழே இறக்கப் பட்டோம்:)"வெறும் சீட்டு விளையாட்டு மட்டுமல்ல அது, நாங்களே கார்ட்போர்டு அட்டைகளைச் சதுரமாக வெட்டி, கைப்பட எழுதித் தயாரித்த எங்களின் பொக்கிஷம். மொத்தம் 54 கார்டுகள்! காரில் வரும்போது அந்தச் சீட்டுகளோடு எங்கள் நேரமும், நினைவுகளும் அத்தனை அழகாகக் கழிந்தன."

"அன்றைய காலத்து வண்டிகளில் 'டிக்கி' என்பது ஒரு தனி உலகம். சுமார் 5 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட அந்தப் பெரிய இடத்தில், அப்பா மெத்தை விரித்துத் தயார் செய்திருந்தார். எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு அது ஒரு மகா சௌகரியமான சொர்க்கம். வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது அந்த மெத்தையில் அமர்ந்து கொண்டு பலராமா பலபத்திரா விளையாடுவது ஒரு தனி சுகம்."

பலராமா கார்டுகள் நாங்களே தயாரிப்போம். வீட்டுக்கு வரும் எந்த அட்டையும் எங்களைத் தாண்டிப் போகாது.:)
சின்னச் சின்னக் கத்திரிக்கோலால் 3"பை 3" கத்திரித்துக்
கடவுள்கள் பெயர்களை பென்சிலால் எழுதி( பேனாவுக்கு அனுமதி 
இல்லை) மிகுந்த சிரமப் பட்டுத் தயாரிப்போம்.
இங்கே  தாத்தா பாட்டி பற்றி ஒரு சிறு குறிப்பு.

"எங்கள் பாட்டி திருவேங்கடம், தாத்தா ஸ்ரீநிவாசன். பெயரிலேயே மஹா பெயர்ப் பொருத்தம்! அந்தப் பெயர்களுக்குள் அடங்கியிருந்த தெய்வீகமும் அன்பும் தான் எங்களை அந்த 14 ஆண்டுகள் பத்திரமாக அரவணைத்தன. பாட்டிக்குச் சர்க்கரை வியாதி இருந்தும், எங்களைப் பசி ஆற வைப்பதிலேயே அவர் குறியாக இருந்தார்."



பாட்டி  கொண்டு வந்திருந்த ஜமக்காளத்தைக் 
கோவில்
முன் பிரகாரத்தில் கடைகளிலிருந்து ஒதுங்கி இருந்த
இடத்தில் இரண்டு தூண்களுக்கு இடையில்
விரித்தார் அப்பா. சித்தப்பா உணவுப் பாத்திரங்களையும் 
பெரிய  தெர்மாஸ்  குடுவையையும்  கொண்டு வர
தண்ணீர்க் குடத்தை நான் தூக்கிவந்தேன். 
முதல்னாளே  தயாரித்து வைத்திருந்த பொல பொல சாதம்.
இரண்டு பெரிய பாத்திரங்களில் புளியோதரையாகவும் , தயிர் சாதமாகவும்   மணம் வீசியபடி இருந்தன. 
கூடவே ஒரு கூடையில் அப்பள வடகங்கள்.  ஒரு சின்ன எவெர்சில்வரில் சம்புடத்தில்  துண்டு போட்ட மாங்காய் ஊறுகாய்

என்று ஒரே  அமர்க்களம் தான்.  அம்மா, சித்தி,பாட்டி அனைவரும் விறகடுப்பில் சமைத்த உணவு.
இந்தத் தாம்பாளம் எங்கே போச்சோ:)
ஸ்ரிவில்லிபுத்தூர் கோவில் பிராகாரம்,   அங்கே இனிமையாகக்
கூவிக்கொண்டிருந்த கிளிகள், பூக்கடைகளின் 
மல்லிகை மணம், யானைக் கொட்டாரத்திலிருந்து வந்த
பிளிறல் சத்தம், கோவில் மேளக் கொட்டு,நாதஸ்வர இசை,
உள்ளே தாயாருக்கு நடக்கும் அர்ச்சனைகள் ஒலிகள்

எல்லாம் மிக இனிமையாக இன்னும் என் மனதில் நிற்கின்றன.
அடுத்தாற்போல்  திருனெல்வேலி பக்கம் நகர வேண்டும்.
மீண்டும் பார்க்கலாமா. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!




11 comments:

ஸ்ரீராம். said...

சீட்டுகளை நீங்களே தயாரித்துக் கொள்வது ஆஹா...   வண்டி ஓடும்போது டிக்கியில் அமர்ந்தா..  ஆ...   நினைக்கவே திகிலாக இருக்கிறதே...

விரிக்கப்பட்ட ஜமக்காளத்தின் படமும், புளியோதரை, தயிர் சாதங்கள் படமும் அருமையோ அருமை.  புளியோதரை சற்று நிறம் கம்மியாக இருக்கிறதே...  அது எலுமிச்சை சாதமோ...  மஞ்சளாக இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை இனிமையான நினைவுகள் மா... இது போன்ற பயணங்கள் எனக்கு சிறு வயதில் அதிகம் வாய்க்கவில்லை. அப்போதைய சூழலில் வெளியே பயணிப்பது அறவே இல்லை. அதற்குச் சேர்த்து வைத்து இப்போது பயணிக்கிறேன்!

ஆலய வளாகத்தில் கலந்த சாதமும் வடகமும் - ஆஹா... என்னவோர் Combination! படிக்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது.

தொடரட்டும் உங்கள் அனுபவங்கள். நானும் தொடர்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

இந்த வாசலில் நின்றுகொண்டு பல முறை படங்கள் எடுத்திருக்கிறேன். தெருவுக்குத்தான் சென்றதில்லை. கோயிலைச் சுற்றியுள்ள மற்ற தெருக்களுக்குச் சென்றிருக்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

அந்தக் காலத்து ஆடம்பரமின்மையை நல்லா எழுத்தில் கொண்டு வருகிறீர்கள்.

இப்போது கோயில் மாடவீதிகளில் வீடுகள் விலை ஆகாயத்துக்குச் சென்றுவிட்டது (கோடிகளில்)

கோமதி அரசு said...

திருக்குறுங்குடி கோபுர தரிசனம் அருமை.
சிறு வயதில் கார்ட் விளையாட்டு மலரும் நினைவுகள் அருமை. வீட்டிலிருந்து அப்போது எல்லாம் எங்கே போனாலும் சாப்பாடு(கட்டுசாதங்ககள்) தண்ணீர் கொண்டு போவோம் அது இன்னும் கூடுதல் ருசியை தரும். நன்றாக சாப்பிடுவோம்.
அந்தக் காலம் பொற்காலம் தான்.

வல்லிசிம்ஹன் said...

ஹாஹா!!! ஶ்ரீராம், நன்றி மா. அந்த கார் மஹா பெரிசு. இந்த ஊரில் தான் மீண்டும் பார்க்கிறேன்.
எட்டு பெரியவர்கள் ஒரு சின்னக் குழந்தை, நாங்கள் மூவர்.கப்பல் கார் என்று பழைய கதைகளில் வரும் பார்த்திருப்பீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

''விரிக்கப்பட்ட ஜமக்காளத்தின் படமும், புளியோதரை, தயிர் சாதங்கள் படமும் அருமையோ அருமை. புளியோதரை சற்று நிறம் கம்மியாக இருக்கிறதே... அது எலுமிச்சை சாதமோ... மஞ்சளாக இருக்கிறது.''

அது கூகிள் புளியோதரை. பாட்டி செய்தது பரலோகம் போயிருக்கும் மா. மிக மிக நன்றி. சுவாரஸ்யமா எழுதப் பார்க்கிறேன்:))))))))))))))))))))))

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட், நலமுடன் இருங்கள். உடனே பதில் போட முடியவில்லை. மாத ரத்தப் பரிசோதனை அதிக நேரம் எடுத்துக் கொண்டு விட்டது:) எல்லாம் நலமே. ''ஆலய வளாகத்தில் கலந்த சாதமும் வடகமும் - ஆஹா... என்னவோர் Combination! படிக்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது.''

உங்கள் பயணங்களில் இடம் பெறும் உணவுப் பொருட்களை ஆவலுடன் படிப்பேன். எத்தனையோ சிரமங்களுக்கு நடுவே சென்று வந்தீர்கள். உங்களின் பயணங்கள் தொடர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இனி உங்கள் எல்லோரையும் படிக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். முரளி. எனக்கு கீதா ரங்கன் நினைவுதான் வந்தது. அருமையான பெண். .இப்போது கூட கீழனத்தத்திலிருந்து பாஷ்யகாரர் த்ஹிரு நட்சத்திரப் படங்கள் வந்தன.

வல்லிசிம்ஹன் said...

அப்படியா. எங்கள் வீட்டை அப்பாவும் சித்தப்பாவும் 2000 ரூபாய்க்கு19 60இல் விற்றார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி வாழ்க வளமுடன். உண்மைதான். அந்தக் காலம் இப்போது மிக நீண்ட தொலைவில் போய்விட்டது. அதை நினைவு கொள்ளத்தான் எழுத ஆரம்பித்தேன். வெய்யில் அதிகம் உறைக்காத நாட்கள் அப்போது. அதனால் பயணத்தை ரசிக்க முடிந்தது. இப்போதும் இரண்டு தங்கைகளுடன் தொடர்பு இருக்கிறது மிக நன்றி மா.

திருக்குறுங்குடி நோக்கி....2

திருக்குறுங்குடி வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.                                                           குறத்தி,  தன் குழந்தை...