Blog Archive

Sunday, April 28, 2019

மதுரை அருள்மிகு செல்லத்தம்மன் கோவில் ,Simmakkal

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ என் பிரார்த்தனைகள்.

மதுரை  அருள்மிகு செல்லத்தம்மன் கோவில்

திரு துரை  செல்வ ராஜு   அவர்களின் ஸ்ரீ கண்ணகி  காளி
பதிவைப் பார்த்து படித்ததும்
மதுரையில் கண்ணகிக்கு  கோவில் இல்லையா
என்ற துக்கம் ஏற்பட்டது.

அவள் சினத்தால் எரியுண்ட  மதுரைக்காரர்களுக்கு அவளிடம் பயமே  இருந்திருக்குமோ.

மன்னனும், பொற்கொல்லனும் செய்த தவறு
மக்கள் மீது விடிந்தது.

இதை எல்லாம் தாண்டிவந்து, அந்தக் கற்புக்கரசிக்கும் கோவில் கட்ட முனைந்திருக்கிறார்கள் மதுரைக்காரர்கள் .
 ஒரு தடவை கட்டி அந்த இடமே எரிந்து விட்டதாம்.
பிறகு   கண்ணகி அம்மா சிலையோடு
அன்னை பராசக்தியின்  வடிவத்தையும்
ஸ்தாபித்தார்களாம்.  அதன் பிறகு  அந்தக் கோவில் செழிப்படைந்ததாம்.

செண்பகத்தம்மன் மருவி செல்லத்தம்மன்  ஆனதாம்.

என் சித்தி மதுரையில் பிறந்து இப்பொழுதும் மதுரையில் இருப்பவர்.

பழைய காலங்களில் ,நாங்கள் சிறுவர்களாக, அவர்கள் கையில் பிசைந்து போட்ட தயிர் சாதம் சாப்பிடும்போது
பல  மந்திர தந்திர கதைகள் சொல்வார்.
அதில் இந்தக் கதையும் கேட்டிருக்கிறேன்.
இப்போது  கூகிள்  சித்தியிடமும் கேட்ட பொது படங்களுடன் செய்திகள் வந்தன.
இப்பொழுது புரிகிறது , எங்கள் உறவினர்களின் பெண் குழந்தைகளுக்குச் செல்லி என்று
பெயர்  வைத்தார்கள் என்று. எனக்கும் இன்னும் ஒரு தோழி அந்தப் பெயரில் மதுரையில் இருக்கிறாள் .

https://temple.dinamalar.com/en/new_en.php?id=479
இந்த இணைப்பில் படங்களும் புராணமும்
இருக்கின்றன.

ஒரு நிம்மதி. மதுரைக்காரர்கள்  கண்ணகியை
மறக்கவில்லை. கீதா சாம்பசிவம், துரை செல்வராஜு, கோமதி அரசு ,எங்கள்பிளாக் ஶ்ரீராம் அனைவருக்கும்.  நன்றி.

Saturday, April 27, 2019

1978 இல் ஒரு திருமலா பயணம்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும் .

 1978 இல் ஒரு திருமலா பயணம்.
++++++++++++++++++++++++++++++++++++++1977இல் சிங்கத்தின் அப்பா
ஒரு வைகாசி மாதம் இறைவனடி சேர்ந்தார்.. ஒரு வருடம் மாதா மாதம் வைதீகக்
காரியங்கள் முடிந்த பிறகு
திருப்பதி செல்வது வழக்கம்.
பாட்டி சொல்லிவிட்டார்.  குழந்தைகள் புதிதாக வேறு வேறு பள்ளிகளில் சேர்ந்திருந்ததால்
உடனே விடுமுறை எடுக்கத் தயக்கமாக இருந்தது.

மாமியார் இரண்டு நாட்களுக்குத் தான் பார்த்துக் கொள்வதாகவும்
நானும் இவரும் நாத்தனார் கல்யாணி குடும்பத்துடன்
அவர்கள் பெரிய வண்டியில் திருப்பதி போய் வரலாம் என்றும் சொன்னார்.

கல்யாணியின் கணவர் இன்னோரு மகன் மாதிரி தான் நடந்து கொள்வார்.

மிக மிக இதமான மனிதர்.
அவர்கள் ஐவரும்,நாங்கள் இருவருமாகக் கிளம்பிவிட்டோம்.
ஒரு நல்ல காலை நேரம்.
இப்போது இருக்கும் கனத்த சரீரம் அப்போது இல்லை இருவருக்கும்

அதனால் சிங்கம் காரை ஓட்ட ,அத்திம்பேரும் ,அவர்களின்
மூத்தமகனும் முன்னால் உட்கார், கல்யாணி,நான்,அவர்களது பெண், இளையமகன்
பின்னால் உட்கார பத்தரை மணி அளவில் கீழ்த் திருப்பதிக்கு வந்து விட்டோம்.

அப்போதெல்லாம் இப்போதிருக்கும் கூட்டம் தள்ளு முள்ளு இருந்ததாக நினைவில்லை.
அலர்மேல்மங்கைத்தாயாரை மனமார வழிபட்டு

அங்கேயே  ஒரு மரத்தடியில் கொண்டு போயிருந்த உணவைப்
பகிர்ந்து உண்டுவிட்டு,மதியம் மூன்று மணி அளவில்

மலையேறத் துவங்கினோம்.
ஒன்றரை மணி நேரம் கழித்து ஏற்கனவே  பதிவு செய்திருந்த
மூன்று அறைகள் கொண்ட  காட்டேஜ் ஒன்றில்
இறங்கிக் கொண்டோம். எனக்கு அங்கப் பிரதட்சிண வேண்டுதல் இருந்ததால்

சீக்கிரம் உறங்கத் தயாரானேன்.. தானும் துணைக்கு வருவதாகக் கல்யாணி சொல்லவே
எட்டு மணி அளவில் வுட்லாண்ட்ஸ்  உணவு விடுதியில்
சாப்பாட்டை  முடித்துக் கொண்டோம். நல்ல சாப்பாடு கிடைத்த காலம்.

குளிர்காற்று சில்லென்று வீடிய காலம் அது. திருமலை தெய்வீகக் காட்சி கொடுக்கும்.
இப்போது மக்கள் வசதிக்காக பலவிதமாகச் சாலைகள்
பலவித வசதி கொண்ட விடுதிக் கட்டடங்கள் அப்போது இல்லை.
உயர்ந்த மரங்கள் வளைந்து செல்லும் பாதைகள்

அமைதியாகச் செல்லும் மக்கள் வரிசை எல்லாமே என் மனதுக்கு
இதமாக இருந்த நினைவு இருக்கிறது.
அப்புறம் திருமலைக்குச் சென்ற வருடங்களில் கூட ஸ்வெட்டரோ
சால்வையோ எடுத்துச் சென்ற ஞாபகம்.

விடுதிக்கு வந்து உறங்கி,  ஒரு மணி அளவில்,குளித்துவிட்டு
கோவில் வாசலுக்குச் சென்றுவிட்டோம்.
அப்போது  கோபுரவாசலிலிருந்தே அங்கப் பிரதட்சிணம் செய்பவர்கள்
நேரே உள்ளே போய்விடலாம்.
அங்கப் பிரதட்சணம் செய்யும் போது புடவை விலகாத வண்ணம்
பார்த்துக் கொண்டு ,முனை வந்தால் சரியாகத் திருப்பிவிட்டு
கோவிந்தா கோஷங்களோடு பெருமாள் கருணையால்
நல்லபடி பூர்த்தி செய்து சன்னிதி வாசலுக்கு துவஜஸ்தம்பம் அருகிலிருந்து
வரிசையில் சேர்ந்து கொண்டோம்.

அந்தத் தரிசனத்தை என்னவென்று சொல்வேன்.

அங்கப்பிரதட்சணம் செய்தவர்களுக்கான்  தனி வரிசை.
குளிர் காற்று,புடவையைக் காயவைத்த அதிசயம்.
மனம் முழுவதும் கோவிந்த நாமம்.கண்முன்னே நீண்ட நெடிய தங்க மய ஜோதியாக
கோவிந்தன்.
என்ன புண்ணியம் செய்தேன் என்று என்னை அழைத்தாய் கோவிந்தா
என்று அரற்றியவாறு கூப்பிய கைகளுடன் ஜருகண்டி சொல்லாத தள்ளாத
மனிதர்களுக்கு நடுவில் அடுத்து வருபவர்களுக்கும்
நான் அருள்வேண்டும் என்று அவன் சொல்வது போல ஒரு தோற்றம்.
கல்யாணிக்கும் அதே நிலை. முடக்குவாதம் ஆரம்ப நிலை அவருக்கு.

அதை அவன் சரி செய்துவிடுவான் என்று சொன்னபடியே சன்னிதியைச் சுற்றி வெளிப்பிரகாரத்தில் கிடைத்த சர்க்கரைப் பொங்கலையும்
புளியோதரயையும் அந்த  அதிகாலை மூன்று மணிக்கு
மனதினிக்க சாப்பிட்டது அமிர்தமான நினைவு.
 கால் நடையாகவே விடுதிக்கு வந்து புடவை மாற்றி உறங்க நினைத்தேன்.
பெருமாளைத் தரிசித்த நிறைவு எங்களைத் தூங்க விடவில்லை.
மீண்டும் திருமண உத்சவத்துக்குப் போக வேண்டும் என்று நினைப்பில்
வெளியே வந்து காப்பி விற்றவரிடம் எல்லோருக்கும் காப்பி வாங்கிக் கொண்டு
எல்லோரையும் எழுப்பினோம்.
உத்சவத்துக்கு ஏற்பாடு செய்திருந்த கல்யாணி ,சின்னி அத்திம்பேர் இருவரும்
வைணவ உடையாக முறையாகப் பஞ்சகச்சம், ஒன்பது கஜப் புடவை என்று
உடுத்திக் கொள்ள,மற்ற அனைவரும் புதிய உடைகளை அணிந்து
கொண்டு  காலை உணவை  முடித்து மீண்டும் கோவிலுக்குப் புறப்பட்டோம்.
அந்த முறையும் நேராகக் கல்யாண மண்டபத்துக்குப் போய்விட்டோம்.

தம்பதிகள் சங்கல்பம் செய்து கொள்ள இரண்டு மணி நேரம்.
தாயாரும் பெருமாளும் ஆனந்த தரிசனம் கொடுத்தார்கள்.

தெய்வத் திருமணம் முடிந்த கையோடு மீண்டும் ஸ்ரீனிவாச தரிசனம்..
 மீண்டும் எங்களை அழைத்துத் தரிசனம் அருள்வாய்
என்று மனதார வேண்டிக் கொண்டு  பனிரண்டு பெரிய லட்டுகள்,
வடைகள் எல்லாம் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு,
தயிர்சாதம், புளியோதரை என்று கூவிகூவிக் கொடுத்ததை வாங்கி அங்கேயே மண்டபத்தில்
உட்கார்ந்து சாப்பிட்டுக்
கொண்டுபோயிருந்த பாட்டில்கள் நிறைய திருமலைத் தீர்த்தத்தை நிரப்பிக்
கொண்டு வண்டி ஏறினோம்.
நானும் சிங்கமும் மீண்டும் மீண்டும் கல்யாணிக்கும் அத்திம்பேருக்கும்
 நன்றி சொல்லிக் கொண்டே வந்தோம்.
அது போல நிறைவான பயணம் கிடைக்க வழி செய்த என் அருமை நாத்தனார்
 மூன்று நாட்களுக்கு முன் உண்மையிலியே வைகுந்த தரிசனத்துக்குக் கிளம்பிவிட்டார்.

Wednesday, April 24, 2019

திருமணம் கைகூடும் 2

வல்லிசிம்ஹன்

 எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

ஷிகிக்கு 30 போய்,31 ம் போய்  32 வந்தது.
காஞ்சிபுரம்  போய் நாடி ஜோதிடம் பார்த்தார்கள்.

அவனுக்கு 25 வயதிலே திருமணம் நடந்திருக்கணுமே. இனி 33 வயதில்தான் நடக்கும் . பெண் மனத்துக்குப் பிடித்தவளாக வருவாள். பெற்றோர் நல்லவர்களாக அமைவார்கள்.

திருமணம் முடிந்த 6 வருடங்களில்  மழலைச் செல்வம் வரும்.
எதோ பரிகாரமாக  நவக்கிரகங்கள் இருக்கும் ஊர்களுக்கு முக்கியமாக ஆலங்குடி குரு  பகவான்  தரிசனமும், திருவெண்காட்டு ஈசன் தரிசனமும் செய்யச் சொன்னார்கள்.
அங்குதான் புதன் க்ஷேத்திரம் என்பதால் அங்கே
அவன் வயதுக்கு ஒத்த அகல்விளக்குகளை ஏற்றினால் நன்மை கிடைக்கும் என்றார்கள்.

ஷிகியும்
அம்மாவை அழைத்துக் கொண்டு  தன வண்டியில் ஓட்டுனரை ஏற்பாடு செய்து கொண்டு

அத்தனை கோவில்களுக்கும் சென்று வந்தான்.
மனதுக்கு அமைதி கிடைத்தது.

வழக்கம் போல் வாழ்க்கை நடந்தது.
அம்மா  பலரிடமும் சொல்லி ஏற்பாடு செய்த
பெரிய இடத்துப் பெண்களை  அவன் போய்ப் பார்க்கக் கூட விரும்பவில்லை.

அம்மாவின் கவலை அதிகரித்தது .
தன்னைப் பார்க்க வந்த, தம்பியிடம்  நீ கொஞ்சம் சொல்லுடா. இப்படி பிடி கொடுக்காமல் இருக்கானே .
தினம் பிள்ளையார் கோவிலுக்குப்  போய்விட்டு இரவுதான் வருகிறான்.

அப்படியா என்று  கேட்டுக் கொண்டவர் ,ஷிகியிடம்  மனம் விட்டுப் பேசினார்.
அவன் வந்ததும் அவனுடனேயே  பிள்ளையார் கோவிலுக்கும் போனார்.
என்னப்பா உனக்கு  சங்கடம் என்றதும்,
மாமா, அம்மாவுக்குப்  பக்கத்தில் இருக்கிற  நாவல் பழம்
கண்ணில்  படவில்லை. உச்சியில் இருக்கும் மாம்பழம் தான் வேண்டும் என்கிறார்  என்றான்.
 அது யாருடா நாவல் பழம் என்று  சிரித்துக் கொண்டே கேட்டார்.
அத்தை மாமாவைத்தான் சொல்கிறேன் .
அவர்கள் குடும்பம்  அப்பா இருக்கும் போது நிறைய வந்து போவார்கள்.
அவர்களின் நிலைமை எங்களைவிட இப்போது தாழ்ந்துதான் இருக்கிறது.

ஆனால் அவர்கள் பெற்ற  பெண்கள் இருவரும்
நல்ல பெண்மணிகள்.
  மூத்தவளுக்கு   அப்பாவின் நண்பர் மகனை முடித்து வைத்தார்கள்.

அவர்களுக்கு  ஆரணியில் ஜவுளி வியாபாரம்.
நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

இளையவளுக்கு இப்போது 26 முடிந்து விட்டது.
பட்டப்  படிப்பு முடித்து   சாதாரண வேலைக்குச்  சென்று வருகிறாள்.

நல்ல பண்பு  மிக்க பெண் மாமா என்றான். நீ அங்கே இன்னும் போய் வருகிறாயா  என்று  கேட்டார்.

அம்மாவை மீறி செய்ய மாட்டேன் மாமா. அவர்களே இந்த இரத்தின விநாயகர் கோவிலுக்கு வருவார்கள்.
இங்கே கதை சொல்பவர்கள் அதிகமாக வருகிறார்கள். எனக்கு அமைதி கிடைக்கிறது  என்று முடித்தான்.

இந்த செய்தியை அப்படியே ஜானம்மாவிடம் சொன்னார்
மாமா.

நமக்குச் சரியான இடம் அதுதானா. குழப்பமாக இருக்கிறதே என்று  குழம்பினார் ஜானம்மா.

இல்லை அக்கா. அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது.

நீதான் அங்கே போக வேண்டும். நல்லதே நினைத்து செய் என்றபடி
அடுத்த நாள் காலையில் கிளம்பினார்.
சித்திரை மாதம் முடியும் நிலை. ஒரு வெள்ளிக்கிழமை ஷிகி இடம்
சொல்லிவிட்டு  தன தம்பி மனைவியையும் அழைத்துக் கொண்டு தாம்பரத்தில்
இருக்கும்  நாத்தனார் வீட்டுக்கு ப் போனார்.

அவர்கள் இவரைப் பார்த்து திகைத்தார்கள்.
அண்ணி வாங்க என்று ஆதரவாககே கைகளை பிடித்துக் கொண்டால் அன்னம்.
ஜானம்மாவுக்குக் கணவர் நினைவு வந்தது.
வாங்க உள்ள வாங்க  மகன் மகள் எல்லாம் சவுக்கியமா
என்று  மகிழ்ச்சி யுடன் வரவேற்ற அன்னத்தின் கணவரைப் பார்த்து வணக்கம் சொன்ன  ஜானம்மாவுக்கு அவர் பின்னால் வந்த ஷெண்பக வல்லியைப் பார்த்து பிரமித்தாள் .
 நாகரீ கத்தின் சுவடு படாத அழகிய

பதவிசான பெண்ணாய் அவள் வந்து வணங்கியதும்
கண்கள் கலங்கின.
இந்த அன்பை எல்லாம் விட்டு இருந்தேனே.

என்றபடி செண்பகத்தை அணை த்துக் கொண்டாள் .
அண்ணி  நீங்க வருவீங்கன்னு தெரியாது
ஒரு நிமிடம்  இதோ பஜ்ஜி தயார் செய்கிறேன் என்ற அன்னத்தைப்
பார்த்து  செண்பகம்  அம்மா நான் செய்து கொண்டு வருகிறேன்.
அத்தைக்கு  மருதாணி செடியைக் காண்பி என்றாள்

ஜானம்மாவுக்கு ஒரே ஆச்சசர்யம். எப்பொழுது ஒரு தீபாவளிக்கு  எல்லோரும் மருதாணி வைத்துக் கொண்டதை இந்தப் பெண் நினைவு வைத்திருக்கிறதே  என்று மகிழ்ந்தாள்.

எல்லாமே  கனவு போல நடந்தது.
பஜ்ஜி போட்ட கையோடு. மருதாணியைப்   பறித்து,
அத்தையிடம் கொடுத்தாள்  அந்த  அருமைப் பெண்.
அத்தை நீங்க அடிக்கடி வரணும் என்றும் கேட்டுக் கொண்டாள் .

அப்போதுதான் தான் வந்த  வேலை நினைவுக்கு வர,
ஜானம்மா, செண்பகத்திடம், கைநிறைய மல்லிகைச் சரத்தைக் கொடுத்து  , நீ வந்துடுடா கண்ணு எங்க வீட்டுக்கு. நல்ல நாளாகப்  பார்த்து என்று சொல்லி உச்சி முகர்ந்தாள் .
அன்னமும்  சந்தானமும்  திகைப்புடன்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

உங்களுக்கு  மனசம்மதம் இருந்தால்  ஷிகிவாகனனுக்கு
செண்பகத்தை மணமுடிக்க நினைக்கிறேன்
என்றாள்  கண்களில் மகிழ்ச்சியோடு.

அன்றிலிருந்து ஆரம்பித்த  மகிழ்ச்சி, வைகாசி மாத நன்னாளில்  திருமணத்தில் வந்துதான் பூர்த்தியானது.

இந்தப் பெண் நம் வீட்டுக்கு வருவதற்காகத்தான் இத்தனை தாமதமாகி விட்டது.

இனி சிக்கியின் நலனே என் நலன்  என்று தீர்மானித்தாள்  ஜானம்மா.

மனங்கள் ஒன்று பட்டதில் இல்லறமும் நல்லறமாகியது.

மணமக்கள்  வாழ மாமியாரும் நலம் பெற்றாள் .






Tuesday, April 23, 2019

திருமணம் கைகூட .....1

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

1996  தாம்பரத்துக்கு அருகே  ஊரப்பாக்கம்  இன்னும் வளராத
நிலைமையில்   பாதி டவுன், பாதி கிராமம் என்ற அளவில்

எப்போதோ கணவன் கட்டிய வீட்டில் இருக்கும்  ஒரு அம்மாவின் கதை.
ஜானம்மா  தன்  பெண் ,பையனுடன் அந்தச் சிறிய வீட்டில் இருந்தார் .
கணவர் வேலாயுதம்   அவர்களை இங்கே  கொண்டு வந்து சேர்த்து வைத்த ஆறு மாதங்களில்
திடீர் மாரடைப்பால் இறந்தார். வயது 52.
 ஒரு பெரிய வாகனங்கள் தயாரிக்கும்  நிறுவனத்தில் 
போர்மன்  வேலை.
இஞ்சினீரிங் இறுதி வகுப்பில் மகன்  ஷிகிவாஹனன் படித்துக் கொண்டிருந்தான்.

மகள் கிருத்திகா  பள்ளிப்படிப்பை முடித்திருந்தாள்.
கல்லூரி, வேலைபார்க்கும் நிறுவனம்,எல்லாமே அருகில் இருந்ததால்
அவர்கள்  வாழ்க்கை அழகாகவே நடந்து கொண்டிருந்தது.

ஒரு  வருட காலமாகவே முதுகு வழியால் அவதி பட்டுக் கொண்டிருந்தஆர் .
 வேலை பளு அதிகமாக இருந்ததும் ,அடிக்கடி லிய்வு போடா முடியாததாலும், குடும்ப மருத்துவரிடம் அவ்வப்போது மருந்துகள் வாங்கி வலியை க் குறைக்கப் பார்த்தார்.

டாக்டர் சொன்ன இதய பரிசோதனைகளில் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.

ஒரு வார விடுப்பில் இருந்து மீண்டும்  வேலைக்குச் சென்று விட்டார்.

ஒரு ஆடி மாதப் பிறப்பன்று ,தூங்கப் போனவர் எழுந்திருக்கவில்லை.

பக்கத்தில் இருக்கும் மருத்துவர் ஓரு மணி நேரமாகிவிட்டது.
என்று கைவிரித்துவிட்டுப் போய் விட்டார்.

இதோ பத்து வருடங்கள் ஆகி விட்டன.
33 வயது மகனுக்குத் திருமணம்  செய்ய முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஜானம்மா.

மக்கள் படித்து முடித்தவுடன் அவளது 25 வயதில் அண்ணன் மகனுக்கே  மணமுடித்ததில்
அந்தக் கடமை முடிந்தது.

வேலாயுதம் அவர்களின் அலுவலகம்  மிக்கது தாராளமாக
வராது 30 வருட சேவையைப் பாராட்டி
ஒரு நல்ல தொகையைக் கொடுத்திருந்தார்கள். சிக்கியின் மேற்படிப்புக்கு, கிருத்திகாவின் திருமணத்துக்கும் அந்தத் தொகை உதவியது.

அடுத்த வருடம் நல்ல கணினிக்  கம்பெனியில்
வேலைக்குச் சேர்ந்ததும், கிருத்திகாவின் முதல் குழந்தை பிறந்தது.
எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட அண்ணனைக் கண்டு தங்கைக்கு  ஏக மகிழ்ச்சி.

இன்னும் இரண்டு வருடங்கள் போனது . மகளின் இரண்டாவது பிள்ளைப்  பேற்றையும்  ஜானம்மா ஏற்றுக் கொண்டார்.

நடுவில் அவர்களை பார்த்து  விசாரித்தவர்கள் சிக்கியின் திருமணத்தைப் பற்றி பேசும்போது அவன் 30 வயதை அடைந்திருந்தான்.
ஜானம்மா மனம் குறுக்கிப் போனார்.
இந்தப் பையனைக் கவனிக்காமல் விட்டோமே.

என்ற பாதி ப்பில் தெரிந்த ஜோசியர்களிடம் எல்லாம் அவன் ஜாதகத்தை  எடுத்துக் கொண்டு போக ஆரம்பித்தாள்.

மகன் விரும்பும் வண்ணம் ஒரு வரனும்  அமையவில்லை..



Saturday, April 20, 2019

பிரச்சினைகள் முடிவுகள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

புது வருடம் பிறந்து, மதுரை மீனாள் சொக்கர்  திருமணமும் நடந்து , அழகர் ஆற்றிலும் இறங்கி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோச்சனமும் கொடுத்தாகி விட்டது. இங்கே இன்று சித்ரா பவுர்ணமி.
கடவுள் கிருபையில் மேகமூட்டம் இல்லை.
தமிழ்நாட்டுக்கு வந்த நிலா இங்கேயும் வரக்

காத்திருக்கிறேன்.
சென்ற வார  மருத்துவர் சந்திப்பில் ,
இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகச் சொல்லி எச்சரிக்கை விடுத்தார். இந்த விடாத தலைவலிக்கான காரணமும் தெரிந்தது.

ஒரே ஒரு கவலைப் பல பதிவுகளை படிக்க முடியவில்லை.
பிடித்த பாடல்களை  பார்க்க முடியவில்லை என்பதே.

சத்தமே  அதிர்ச்சி கொடுக்கிறது.
இதுவும் கடந்து போகும்.

தேர்தல்,
Notre Daum  அக்னி க்குப்  பாதி பலியானது,

அபத்தமான சொற்பொழிவுகள் சில வாட்ஸாப்பில் வந்தது

இவற்றையும் தாண்டி வந்தாகிவிட்டது.
நம் ஊருக்கு நல்லது நடக்க வேண்டும். படித்த ,நல்ல புத்திசாலிகள்
ஆட்சிக்கு வரவேண்டும்.

அனைவரும் வாழ்க வளமுடன்.






Saturday, April 13, 2019

Sree Rama Nee Naamam (Dr.M.Balamuralikrishna at Perla)

Sree Rama Nee Naamam (Dr.M.Balamuralikrishna at Perla)
 வல்லிசிம்ஹன்

  அனைவருக்கும் ராமனின் நல் அருள் கிடைக்கட்டும். ராமா சரணம்.

Wednesday, April 10, 2019

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
காலம் ஓடிக்கொண்டு  தான் இருக்கிறது.
தினம் ஒரு செய்தி.
மகிழ்ச்சி ,திகைப்பு என்று போகிறது.
அதை  எல்லாம்  சொல்வதற்கும், விவரமாகப்
பேசவும்  நம் நட்புகள்   இருக்கிறார்கள்.

ஒரு பிறந்த நாள் என்றால் எல்லோரும்
ஒன்று கூடுகிறோம் .
ஒருவருக்கு உடல் நலம் சரி இல்லையானால் அனைவருக்கும் கவலை.
எத்தனை பெரிய குடும்பம் எனக்கு,நமக்கு கிடைத்திருக்கிறது.

இனி துன்பமில்லை ஒரு சோகநிலை இனி என்றும் இல்லை.
இது எனக்கு நானே சொல்லிக் கொள்வது.
அனைவருக்கும் என் நன்றி.
இந்தப்  பாசத்துக்குப் பதிலே கிடையாது.
மனம் நிறை நன்றி.

Wednesday, April 03, 2019

அன்னை பராசக்தி காத்தாள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .

அடுத்த நாள் ஸ்ரீரங்கம், சமயபுரம் சென்று தரிசனம் செய்துவிட்டு
 மாமா அன்புடன் வாங்கிக் கொடுத்த கொசுவலை, மின் விசிறி,
குடை மேஜை விளக்கு எல்லாம் எடுத்துப் பத்திரப் படுத்தினாள்
லலிதா.

சாந்தாவின் கடுமையான பேச்சு அவளை மேலும் உறுதிப்
படுத்தியது. அக்கா வசந்தாவின் திடீர் வருகை
மனதை அமைதிப் படுத்தியது.
மாமாவுக்கு ,தன் அக்காவின் செல்வங்களைச் சேர்த்துப் பார்த்ததில்
அளவிட முடியாத சந்தோஷம்.
சனிக்கிழமை தன் விடுதிக்குக் கிளம்புவதாக இருந்த
லலிதா ஞாயிறு காலை கிளம்பினாள்.


மாமி அழகம்மை அவளுக்குப் பிடித்த வகைப் பலகாரங்களைச் செய்து
 டப்பாவில் அடைத்துக்
கொடுத்தாள். சிறிது கூச்சத்துடனே வாங்கிக் கொண்ட லலிதா,
இரண்டு பெரிய பெட்டிகளுடன் வண்டியில் ஏறினாள்.

கிளம்புவதற்கு முன் அண்ணன் சரவணன் ,அவளிடம் வந்து
தான் அங்கு வந்து பார்ப்பதாகச் சொன்னான்.

முதல் மாதம் தன் வேலைகள் அதிகமாக இருக்கும் என்று அவனைச்
 சமாதானம் செய்து, அடுத்த மாதம் இரண்டாம் வார இறுதியில்
சந்திக்கலாம். மாமா,மாமியை அழைத்து வா என்றபடிக்
கிளம்பிவிட்டாள்.
அக்காவும் மாமாவும் வந்து  அவள் அறையில் எல்லாப் பொருட்களையும் சீர் செய்து வைத்துவிட்டுக் கிளம்பினார்கள்.
கண்டிப்புக்குப் பெயர் போன அந்தப் பள்ளியில்
அதற்கு மேல் யாரும் தங்கக் கூடாது.

வெறிச்சோடிக் கிடந்த தங்கையின் முகத்தைப் பார்த்து
வசந்தாவுக்கும், மருமகளின் தனிமை மாமாவுக்கும்
துன்பம் கொடுத்தன.

சமீபத்திய நிகழ்வுகள் லலிதாவை உறுதிப் படுத்திவிட்டன.
தனியே வாழப்,படிப்பும், கையில் பணமும்,
தொலைபேசியிலாவது அன்பைத்தர அண்ணா,அக்கா,மாமா ,மாமி என்று
உறவுகள் இருக்கத் தான் வருந்துவதில் பொருள் இல்லை
என்ற தீர்மானம் உறுதியாகப் படிந்தது அவள் மனத்தில்.

ஆறு மாதங்களில் எத்தனையோ மாற்றங்கள்.
அண்ணனுக்கு மகன் பிறந்தான்.
அத்தை சீராக லலிதா,குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்
பார்க்க வந்த அண்ணனிடம் கொடுத்தாள்.

நேரில் போய் யாரையும் துன்புறுத்த அவளுக்கு விருப்பம் இல்லை.
மனமுடைந்து வருந்திய அண்ணனையும்,மாமாவையும் தேற்றினாள்.
இருமாதங்களுக்கு ஒரு முறை, அக்காவும் அவள் மகனும்
அவளைப் பார்க்க வந்தனர்.

ஓய்வு நேரம் அவளுக்குக் குறைவாகவே கிடைத்தது. தன் சக
மாணவிகளுடன் சுற்றி இருக்கும் ஆதாரப் பள்ளிகளுக்குச் செல்லும் வாய்ப்பும்,
அந்தக் குழந்தைகளுடன்
கல்வி போதிக்கும் சந்தர்ப்பங்களூம்,
அவளது மனபாரத்தை வெகுவாகக் குறைந்தன.

பள்ளியில் சேர்ந்த எட்டு மாதங்களில் ஃபின்லாந்திலிருந்து
ந்து வந்த ஆசிரியப் பயிற்சிக் குழுவினர்
லலிதாவின் உழைப்பைக் கண்டு வெகுவாகப் பாராட்டித் தங்கள்
வருமாறு அழைப்பும் விடுத்தனர்.
 இந்த யோசனை மிகவும் பிடித்தது லலிதாவுக்கு.

அடுத்த வாரம் பார்க்க வந்த மாமாவிடம் தன் தீர்மானத்தைச் சொன்னாள்.
அங்கும் பயிற்சி பெற்றால், என் எதிர்காலத்துக்கு நன்மை மாமா.
அந்த நாட்டுக் கல்வி முறை பற்றி நூலகத்தில் படித்தேன்.
குழந்தைகளை நண்பர்களாக மதித்து நடத்துகிறார்கள்.

இரண்டு வருடங்கள் நிமிடமாகப் பறந்துவிடும்.
எனக்கும் மாறுதல் கிடைக்கும் என்று சொன்னவளைக்
கவலையுடன் நோக்கினார் மாமா.
அவ்வளவு தூரம் செல்லும்படி எங்களைக் கண்டால்
பிடிக்காமல் போய்விட்டதா அம்மா என்று கல்ங்கினார்.

சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் மாமா. ஒருவர் வாழ்விலும்
குறுக்கிட விரும்பவில்லை.கல்விதான் கண்களைத் திறக்கும்.

ஏன் நீங்கள் கூட மாமியை அழைத்துக் கொண்டு இரண்டாவது தேன் நிலவு அங்கே
வரலாமே என்று குறும்பாகச் சிரித்த மருமகளை ஆற்றாமையுடன்
அணைத்துக் கொண்டார் மாமா.
ஜூன் மாதமும் வந்தது.
சென்னையை விட்டு வந்து சரியாகப் பதின்மூன்று
மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னை வந்தடைந்தாள்.
மாமா,மாமியை விட்டுப் பிரிவதுதான் மிக வேதனை
கொடுத்தது.

சரவணன்,சாந்தா அவர்கள் குழந்தை ஷண்முகப்ரியன்
அனைவரையும் சந்தித்து சுருக்கமாகப் பேசி விடை பெற்றாள்.
குழந்தையை அள்ளிக் கொள்ள ஆசை இருந்தும் கட்டுப் படுத்திக் கொண்டு
சிரித்தபடியே வெளியே வந்து விட்டாள்.

சென்னை வீட்டை வாடகைக்கு விட ஏற்பாடு செய்திருந்தார் அக்காவின்
கணவர்.

சென்னையில் இறங்கியதும் அண்ணா நகருக்குச்
 சென்று வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்துமுக்கியமான் பொருட்களை மாடி அறையில் பந்தோபஸ்து
செய்துவிட்டு அக்கா வீட்டுக்கு வந்துவிட்டாள்.
ஒரு வினாடி கூடத் தேங்கி நிற்காமல் வேலை செய்வதில் ஏதோ
நிம்மதி.
இனி அந்த வீடு தனக்கு வேண்டாம் என்று தோன்றியது.
ராமன் நினைவிலிருந்து சிறிதாவது விடுபட்டு அழுகையும் துன்பமும் இல்லாத
வாழ்க்கை நோக்கித் தன்னைச் செலுத்த விரும்பினாள்.

ஜூன் மாதக் கடைசியில் பம்பாய்க்கு விமானம் ஏறினாள். அங்கிருந்து
ஹெல்சிங்கிக்குப் பயணம் பத்து மணி நேரம்.

இனி எதிர்காலத்தில் அவள் துணை தேடிகொள்ளலாம். இல்லையென்றால்
தனியாகவும் இருக்கலாம்.

பொதுவில் அவள் தேர்ந்தெடுத்த சுதந்திர வாழ்க்கை நிம்மதியாக
இருக்க வேண்டும்.
இந்தக் கதையில் வந்த லலிதா உண்மை.
நிஜக்கதையில் கணவனின் சந்தேகம் தாங்காமல்
விலகிச் சென்றாள்..

சந்தேகம் நுழைந்த வாழ்க்கையில் நிம்மதி ஏது.
கூட வந்த அனைவருக்கும் நன்றி. இரண்டு நாட்கள்
காய்ச்சலில் படுத்ததால் உடனே முடிக்க முடியவில்லை.
வாழ்கவளமுடன்.

Monday, April 01, 2019

அன்னையைச் சரண் புகுந்தால் அதிக வரம் 5

வல்லிசிம்ஹன்








 எல்லோரும்   நலமாக வாழ வேண்டும்.

 மாமா மாமி முகத்தைப் பார்த்ததும் லலிதாவுக்கு வேறு கவலை வந்து
விட்டது.
வண்டியை அனுப்பிவிட்டு வாங்கிய பொருட்களைக்
கொண்டு வந்தவள், ஏன் இத்தனை கவலையோடு இருக்கிறீர்கள்,
சாந்தா நலமா என்றதும்,
மாமி , உன்னைப் பற்றித்தானம்மா கவலை. நாலு மணி நேரமாகக் காணமே என்று
மாமா யோசித்துக் கொண்டிருந்தார். ஏன் மா இவ்வளவு நேரம்
என்றதும் மனம் தெளிந்தவளாக மாமி அழகம்மாவிடம்
கோவில் குங்கும பிரசாதத்தைக் கொடுத்தபடி
அகிலாண்டேஸ்வரியின் கோவிலில் சிறிது நேரம் தியானம் செய்தேன் மா. மன்னிக்கணும்,
இனித் தாமதமாக எதுவும் செய்ய மாட்டேன் என்றாள்.
வா வா, இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்.
உனக்கு வேண்டும் என்பது கிடைத்ததா என்றதும்
தான் வாங்கி வந்த பயிற்சிக்கான உபகரணங்களைக்
காண்பித்தாள்.
இதை எல்லாம் செய்ய வேண்டுமா நீ என்று மாமா விசாரித்தார்.
இப்போதே இல்லை மாமா இரண்டு மாதங்கள் கழித்து வரைவது ,சிறிய மாடல்களை உருவாக்குவது என்று பல வேலைகள்  செய்ய வேண்டி இருக்கும்.

அங்கேயே தங்குவதால் ,எனக்கு நேரம் நிறையக் கிடைக்கும்.
நீங்கள் கூட வந்து பார்க்கலாம்  என்று மலர்ந்த முகத்தோடு
அவள் பேசுவதைக் கண்ட சோமு மாமாவுக்குத் தன் அக்காள்
நினைவே வந்தது. அவளுக்கும் விதவிதமான கைவேலைகள் மிகப்
பிடிக்கும்.

நன்றாக இரு அம்மா. இப்பொழுது உள்ளே வா.
திருச்சி வெய்யில் உனக்குப் பழக்கம் இல்லை,
குடையில்லாமல் எங்கும் வெளியே வரக்கூடாது.
நாளைக்கு என்னுடன் வா  ,தேவையானதை நான் வாங்கித் தருகிறேன்
என்ற மாமாவை அன்புடன் பார்த்த லலிதா உடனே மறுப்பு சொல்லவில்லை.

கட்டாயம் போகலாம், மாமியும் கூட வரட்டும் என்றபடி உள்ளே நுழைந்தாள்.
உள்ளே இருந்து சினிமா இசை வந்தது.
அண்ணா ,சாந்தா இருவரும் டாக்டரைப் பார்த்துவிட்டு வந்தார்களா
மாமி என்று கேட்டபடி தன் அறையில் நுழைந்தவளிடம்,
இல்லை அம்மா,நீ அந்தப் பக்கம் போனே இந்தப் பக்கம்
மனதை மாற்றிக் கொண்டு விட்டாள் சாந்தா.

உலாவச் சென்று திரும்பி வந்தார்கள்.,என்று பெருமூச்சுடன்
சொன்ன மாமி, நீ அவளைத் தவறாக நினைக்காதே, சுபாவத்தில் நல்லவள் தான்,
இப்போது இந்த நிலையில் மனத்தை விட்டுவிடுகிறாள்.
குழந்தை பிறந்தால் மாறிவிடும்//என்ற மாமியைப் பார்த்துப்
புன்னகைத்த லலிதா, பாவம்மா, அவளுக்கு அண்ணாவின் அருகாமை அவசியம்,
நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. நீங்கள் வருந்தாதீர்கள்.

எல்லாம் சரியாகிவிடும். நான் நாளை சாயந்திரமே ஹாஸ்டலுக்குப் போகிறேன்.

ஒரு மாத முடிவில் வந்து உங்களைப் பார்க்கிறேன்.
என்றப்படி கைகால் கழுவப் போனாள்.

சந்தடி கேட்டு வெளியே வந்தான் சரவணன். என்ன லல்லி,
அகிலாண்டேஸ்வரி என்ன சொன்னா. என்று புன்னகைத்தவனிடம்
உங்க அண்ணானுக்கு நானே வந்து பிறக்கிறேன்னு சொல்லிட்டா.
எதுக்கும் வைரத்தோடு 20 ஆயிரத்துக்கு செஞ்சு வச்சுக்கோ.
மாப்பிள்ளை வீட்டில் போடச்சொல்லுவாங்க
என்று விளையாட்டாகப் பரிகாசம் செய்தாள்.

ஏன் பையனாப் பொறந்தா அடுக்காதா உனக்கு. அந்த ஈஸ்வரி
தபசு செய்யற மாதிரி என் பொண்ணும் தவமிருக்கணுமா
என்று பட்டென்று குரல் வந்தது சாந்தாவிடமிருந்து.

வாயடைத்துப் போனாள் லலிதா.
சோமு மாமா ஒரு சத்தம் போட்டாரே பார்க்கணும். உனக்குக் கூடத்தான்
 சாந்தம்மைன்னு பேர் வச்சேன் ,நீ பேசற பேச்சு பெண்ணா லட்சணமா இல்லையே.
நிதானமா இருந்துக்க. அம்மா நல்லதா நினைச்சா வர பிள்ளையும் நல்லா இருக்கும் என்று
வெளி வராந்தாவுக்குப் போய்விட்டார்.

பாத்தியாம்மா. அப்பா ஒரு நாள் என்னை ஏசி இருப்பாரா
இவளைக் கண்டதும் அவமேலப் பாசம் கூடிப் போச்சோ
என்று அழுதபடி தன் அறைக்குள் சென்றவளைப்
பின்தொடர்ந்தான் சரவணன். அடுத்த பதிவில் பூர்த்தியாகும்.