Blog Archive

Wednesday, April 03, 2019

அன்னை பராசக்தி காத்தாள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .

அடுத்த நாள் ஸ்ரீரங்கம், சமயபுரம் சென்று தரிசனம் செய்துவிட்டு
 மாமா அன்புடன் வாங்கிக் கொடுத்த கொசுவலை, மின் விசிறி,
குடை மேஜை விளக்கு எல்லாம் எடுத்துப் பத்திரப் படுத்தினாள்
லலிதா.

சாந்தாவின் கடுமையான பேச்சு அவளை மேலும் உறுதிப்
படுத்தியது. அக்கா வசந்தாவின் திடீர் வருகை
மனதை அமைதிப் படுத்தியது.
மாமாவுக்கு ,தன் அக்காவின் செல்வங்களைச் சேர்த்துப் பார்த்ததில்
அளவிட முடியாத சந்தோஷம்.
சனிக்கிழமை தன் விடுதிக்குக் கிளம்புவதாக இருந்த
லலிதா ஞாயிறு காலை கிளம்பினாள்.


மாமி அழகம்மை அவளுக்குப் பிடித்த வகைப் பலகாரங்களைச் செய்து
 டப்பாவில் அடைத்துக்
கொடுத்தாள். சிறிது கூச்சத்துடனே வாங்கிக் கொண்ட லலிதா,
இரண்டு பெரிய பெட்டிகளுடன் வண்டியில் ஏறினாள்.

கிளம்புவதற்கு முன் அண்ணன் சரவணன் ,அவளிடம் வந்து
தான் அங்கு வந்து பார்ப்பதாகச் சொன்னான்.

முதல் மாதம் தன் வேலைகள் அதிகமாக இருக்கும் என்று அவனைச்
 சமாதானம் செய்து, அடுத்த மாதம் இரண்டாம் வார இறுதியில்
சந்திக்கலாம். மாமா,மாமியை அழைத்து வா என்றபடிக்
கிளம்பிவிட்டாள்.
அக்காவும் மாமாவும் வந்து  அவள் அறையில் எல்லாப் பொருட்களையும் சீர் செய்து வைத்துவிட்டுக் கிளம்பினார்கள்.
கண்டிப்புக்குப் பெயர் போன அந்தப் பள்ளியில்
அதற்கு மேல் யாரும் தங்கக் கூடாது.

வெறிச்சோடிக் கிடந்த தங்கையின் முகத்தைப் பார்த்து
வசந்தாவுக்கும், மருமகளின் தனிமை மாமாவுக்கும்
துன்பம் கொடுத்தன.

சமீபத்திய நிகழ்வுகள் லலிதாவை உறுதிப் படுத்திவிட்டன.
தனியே வாழப்,படிப்பும், கையில் பணமும்,
தொலைபேசியிலாவது அன்பைத்தர அண்ணா,அக்கா,மாமா ,மாமி என்று
உறவுகள் இருக்கத் தான் வருந்துவதில் பொருள் இல்லை
என்ற தீர்மானம் உறுதியாகப் படிந்தது அவள் மனத்தில்.

ஆறு மாதங்களில் எத்தனையோ மாற்றங்கள்.
அண்ணனுக்கு மகன் பிறந்தான்.
அத்தை சீராக லலிதா,குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்
பார்க்க வந்த அண்ணனிடம் கொடுத்தாள்.

நேரில் போய் யாரையும் துன்புறுத்த அவளுக்கு விருப்பம் இல்லை.
மனமுடைந்து வருந்திய அண்ணனையும்,மாமாவையும் தேற்றினாள்.
இருமாதங்களுக்கு ஒரு முறை, அக்காவும் அவள் மகனும்
அவளைப் பார்க்க வந்தனர்.

ஓய்வு நேரம் அவளுக்குக் குறைவாகவே கிடைத்தது. தன் சக
மாணவிகளுடன் சுற்றி இருக்கும் ஆதாரப் பள்ளிகளுக்குச் செல்லும் வாய்ப்பும்,
அந்தக் குழந்தைகளுடன்
கல்வி போதிக்கும் சந்தர்ப்பங்களூம்,
அவளது மனபாரத்தை வெகுவாகக் குறைந்தன.

பள்ளியில் சேர்ந்த எட்டு மாதங்களில் ஃபின்லாந்திலிருந்து
ந்து வந்த ஆசிரியப் பயிற்சிக் குழுவினர்
லலிதாவின் உழைப்பைக் கண்டு வெகுவாகப் பாராட்டித் தங்கள்
வருமாறு அழைப்பும் விடுத்தனர்.
 இந்த யோசனை மிகவும் பிடித்தது லலிதாவுக்கு.

அடுத்த வாரம் பார்க்க வந்த மாமாவிடம் தன் தீர்மானத்தைச் சொன்னாள்.
அங்கும் பயிற்சி பெற்றால், என் எதிர்காலத்துக்கு நன்மை மாமா.
அந்த நாட்டுக் கல்வி முறை பற்றி நூலகத்தில் படித்தேன்.
குழந்தைகளை நண்பர்களாக மதித்து நடத்துகிறார்கள்.

இரண்டு வருடங்கள் நிமிடமாகப் பறந்துவிடும்.
எனக்கும் மாறுதல் கிடைக்கும் என்று சொன்னவளைக்
கவலையுடன் நோக்கினார் மாமா.
அவ்வளவு தூரம் செல்லும்படி எங்களைக் கண்டால்
பிடிக்காமல் போய்விட்டதா அம்மா என்று கல்ங்கினார்.

சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் மாமா. ஒருவர் வாழ்விலும்
குறுக்கிட விரும்பவில்லை.கல்விதான் கண்களைத் திறக்கும்.

ஏன் நீங்கள் கூட மாமியை அழைத்துக் கொண்டு இரண்டாவது தேன் நிலவு அங்கே
வரலாமே என்று குறும்பாகச் சிரித்த மருமகளை ஆற்றாமையுடன்
அணைத்துக் கொண்டார் மாமா.
ஜூன் மாதமும் வந்தது.
சென்னையை விட்டு வந்து சரியாகப் பதின்மூன்று
மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னை வந்தடைந்தாள்.
மாமா,மாமியை விட்டுப் பிரிவதுதான் மிக வேதனை
கொடுத்தது.

சரவணன்,சாந்தா அவர்கள் குழந்தை ஷண்முகப்ரியன்
அனைவரையும் சந்தித்து சுருக்கமாகப் பேசி விடை பெற்றாள்.
குழந்தையை அள்ளிக் கொள்ள ஆசை இருந்தும் கட்டுப் படுத்திக் கொண்டு
சிரித்தபடியே வெளியே வந்து விட்டாள்.

சென்னை வீட்டை வாடகைக்கு விட ஏற்பாடு செய்திருந்தார் அக்காவின்
கணவர்.

சென்னையில் இறங்கியதும் அண்ணா நகருக்குச்
 சென்று வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்துமுக்கியமான் பொருட்களை மாடி அறையில் பந்தோபஸ்து
செய்துவிட்டு அக்கா வீட்டுக்கு வந்துவிட்டாள்.
ஒரு வினாடி கூடத் தேங்கி நிற்காமல் வேலை செய்வதில் ஏதோ
நிம்மதி.
இனி அந்த வீடு தனக்கு வேண்டாம் என்று தோன்றியது.
ராமன் நினைவிலிருந்து சிறிதாவது விடுபட்டு அழுகையும் துன்பமும் இல்லாத
வாழ்க்கை நோக்கித் தன்னைச் செலுத்த விரும்பினாள்.

ஜூன் மாதக் கடைசியில் பம்பாய்க்கு விமானம் ஏறினாள். அங்கிருந்து
ஹெல்சிங்கிக்குப் பயணம் பத்து மணி நேரம்.

இனி எதிர்காலத்தில் அவள் துணை தேடிகொள்ளலாம். இல்லையென்றால்
தனியாகவும் இருக்கலாம்.

பொதுவில் அவள் தேர்ந்தெடுத்த சுதந்திர வாழ்க்கை நிம்மதியாக
இருக்க வேண்டும்.
இந்தக் கதையில் வந்த லலிதா உண்மை.
நிஜக்கதையில் கணவனின் சந்தேகம் தாங்காமல்
விலகிச் சென்றாள்..

சந்தேகம் நுழைந்த வாழ்க்கையில் நிம்மதி ஏது.
கூட வந்த அனைவருக்கும் நன்றி. இரண்டு நாட்கள்
காய்ச்சலில் படுத்ததால் உடனே முடிக்க முடியவில்லை.
வாழ்கவளமுடன்.

21 comments:

ஸ்ரீராம். said...

அந்த உறுதி... அந்த மன உறுதி இருந்தால் எதையும் சாதிக்கலாம். பாடம்.

Geetha Sambasivam said...

முதலில் உங்கள் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள் ரேவதி. உடல் நிலை சீராகப் பிரார்த்தனைகள். கதை அல்ல, அல்ல நிகழ்வு நன்றாகவே இருந்தது. ஒருவழியாக லலிதாவுக்கு நல்லதொரு வாழ்க்கை கிடைத்திருக்கும் என நம்புகிறேன். நல்லபடியாய்க் கதையை முடித்ததற்கும் எதையும் தாங்கும் இதயம் கொண்ட லலிதாவுக்கும் வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

எல்லாம் நல்லபடியாகவே முடிந்தது. மகிழ்ச்சி.

கோமதி அரசு said...

கதை நல்லபடியாக நிறைவு பெற்றது மகிழ்ச்சி.
லலிதா வாழ்க்கையில் இனி நல்லதே நடக்க அன்னை பராசக்தி அருள்புரிய வேண்டும்.

உங்கள் உடல் நிலை இப்போது எப்படி இருக்கிறது?
பருவநிலை மாறுவதால் அப்படித்தான் இருக்கும் இல்லையா?

உடல் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், கருத்துக்கும் கவனத்துக்கும் மிக நன்றி.ரோஷ்ணிக்கு அன்பு வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ந்தேன்
நன்றி சகோதரியாரே

ஸ்ரீராம். said...

உடல்நிலைக்கு என்ன?

அம்மா.. உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். கால நிலை மாறுகிறது. ஒரு நாள் வெய்யில் .ஒரு நாள் மழை குளிர்.
வெளியில் போகாமலேயே வந்துவிட்டது. இருமல்.உடம்பு வலி ,எல்லாம்.
நம் சர்க்கரை இருமல் சிரப்பும் எடுத்துக்கொள்ள விடாது. தாண்டி வர நான்கு
நாட்கள் தேவைப்பட்டது. பரவாயில்லை. நோ வொர்ரீஸ்.
நன்றி மா. லலிதா ஜி நன்றாகவே இருக்கிறார். நான் நிறைய
கற்றுக் கொண்டேன் அவரிடமிருந்து.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா.
அந்த 80 களில் அந்தத் தைரியம் எங்களை
வியக்க வைத்தது.தனியாக அந்தக் குளிர் தேசத்தில்
எப்படி சமாளிப்பார் என்று நினைத்தோம்.அங்கேயே
பத்து வருடங்கள் இருந்து பிறகு இந்தியாவில் மும்பை
அருகே ஒரு பள்ளியில் தலைமைப் பொறுப்பு எடுத்துக் கொண்டார்.

அக்காவைப் பார்க்க சென்னை வருவார்.அக்கா எங்கள் காலனிக்குள்
இருந்ததால் இவ்வளவு விஷயமும் தெரியும்.அடக்கம் தைரியம் ஒரு சேர அமைந்தது
அவருக்கு. வியக்கத்தக்க பெண்மணி.

மறுமணம் எல்லாம் செய்து கொள்ளவில்லை.
உடல் நலம் எவ்வளவோ தேவலை மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
ஆமாம்.நல்ல மன உறுதி கொண்ட பெண்மணி.
நன்றாகவே இருக்கிறார். கருத்துக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
உண்மையில் பாராட்டப்பட வேண்டிய பெண் தான். 32
வயதிலிருந்து தனிமையை எதிர் கொண்டார். எந்தப் பேச்சுக்கும் இடம் கொடுக்கவில்லை.
நல்லாசிரியர் மானில விருதுக்கும் சிபாரிசு செய்யப் பட்டார்.

இப்போது நலமே அம்மா. ஆமாம் கால நிலை மாற்றம் தான்
மூச்சு விடுவதிலிருந்து சிரமம் ஆகிவிட்டது.
சகித்துக் கொள்ள வேண்டியதுதான்.பெண் நல்ல படியாகக் கவனித்துக் கொள்கிறார்.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
கதையோ, வாழ்வோ எல்லாமே நலமே இருந்தால் மகிழ்ச்சிதான் மா.
நன்றி.

நெல்லைத்தமிழன் said...

கதைக்கு நல்ல முடிவு.

ஆமாம் உண்மை நிகழ்ச்சியிலும் நல்ல முடிவாக இருந்ததா?

வல்லிசிம்ஹன் said...

உண்மை வாழ்விலும் அவளுக்குத் திருப்தியாக
வெற்றி கிடைத்தது.கல்வியைத் தவிர வேறொன்றும் அவள் நாடவில்லை.
முரளி மா. அப்படிப்பட்ட மனம் கிடைப்பதும் ஒரு நிம்மதிதான்.

Bhanumathy Venkateswaran said...

உங்களின் தெள்ளிய நடை லலிதாவை கண்முன் கொண்டு நிறுத்தியது.
//தொலைபேசியிலாவது அன்பைத்தர அண்ணா,அக்கா,மாமா ,மாமி என்று
உறவுகள் இருக்கத் தான் வருந்துவதில் பொருள் இல்லை//. அப்போது துயரம் வந்தபொழுது அதைத் தாங்கி உயர, சுற்றம் என்னும் ஆதரவு இருந்தது. இன்று மற்ற எல்லாம் இருந்தும் உறவுகள் இல்லாத வாழ்க்கை.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்ம உங்கள் உடல் நலம் தேவலாமா? இப்போது எப்படி இருக்கிறீர்கள். உடல் நலம் பார்த்துக் கொள்ளவும்.

லலிதாவின் வாழ்க்கை நல்லபடியாக அமைந்தது மகிழ்ச்சி. மன உறுதிதான் அவளை நல்லபடியாக நல்ல முடிவெடுத்து வாழ வைத்திருக்கிறது. உண்மையும் அறிய முடிகிறது. அவள் பின்ன எப்படி ஒரு சந்தேகப்பிராணியுடன் வாழ முடியும்.

முடிவு அருமை.

துளசிதரன், கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எங்க்ள் கமென்ட் வந்ததோ அம்மா. கமென்ட் மாடரேஷன் இருக்கோ இப்ப..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

விநாயகனெ வினை தீர்ப்பவனே பாடல் அருமையான பாடல். ரொம்ப நாள் கழித்துக் கேட்கிறேன் அம்மா.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, கீதா,
இப்போது சளியைத்தவிர எல்லாம் விலகிவிட்டது.

ஆமாம், மாடரேஷன் வைத்திருக்கிறேன்.

இப்போது பார்க்கும் போதும் தெளிவான சிந்தனையோடு
தீர்க்கமான பார்வையுடன் நன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்.
அந்த வயதில் துணிவும் கலங்காத மனமும் இல்லாவிட்டால்
நைந்து போயிருப்பார். நன்றி மா கீதா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா.
இப்போழ்து உறவுகள் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்லை.
நீ சௌக்கியம் நான் சௌக்கியம் ரேஞ்ச் தான்.

வாய் வார்த்தையாகக் கூட எங்கள் வீட்டுக்கு வாங்கன்னு சொல்ல
ஆளில்லை.
குழந்தைகள் நல்ல படியாக இருந்தால்
அதுவே போதும்னு ஆகிவிட்டது.

இப்பொழுதும் அந்த மனோதைரியமே நம்மைக் காக்கும்.
அதுவும் கடவுளிடம் சரண் அடைவதுமே நமக்குத் துணை.

அன்பு வருகைக்கு நன்றி பானு மா.

வல்லிசிம்ஹன் said...

Yes dear Geetha. Sirkazhis voice rides ober anyone else. thank you.