Blog Archive

Monday, February 19, 2018

மீண்டும் செம்பருத்தி

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  அன்பு கீதா ரங்கன், செம்பருத்தியின் அழகை வர்ணித்ததும்
தொடர்ந்து , கீதா சாம்பசிவம் பூவின் மகிமையைச் சொன்னதும்
அம்மா,அப்பா நினைவு அதிகமானது.
அப்பாவுக்குப் பூச்செடிகள் மிகப்பிடிக்கும்.

எங்கு சென்றாலும் , ஒரு செம்பருத்தி, ஒரு நந்தியா வட்டை, ஒரு நித்தியமல்லிப் பந்தல்
மந்திரம் போட்டது போல நட்டுவிடுவார். கூடவே  அவரைப் பந்தல், புடலைப் பந்தலும் வந்துவிடும்.

சுற்றிப் போட்டிருக்கும் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து அம்மா தலைவாரி விடும் அழகைப் பார்த்து ,என் தோழி பத்து
உச் கொட்டிப் பாராட்டுவாள்.

செம்பருத்தி பூத்ததும் பிள்ளையார் கோவிலுக்கு அம்மா அனுப்பிவிடுவார்.
செம்பருத்தித்தைலம் தயாரிக்க, அந்தப்பூக்கள் தரையிலுதிரும்வரை காத்திருப்பார்.
பத்துப் பதினைந்து , இருப்து என்று சேரும்.

வாடியிருக்கேம்மா என்பேன்.மாஜிக் பாக்கறியா என்று வெண்கலப்பாத்திரத்துச் சில தண்ணீரில் போடுவார்.
அவை சர்ரே விரிந்து கொள்ளும்.
அரை லிட்டர் தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி அதில் மேந்தியம் போட்டு ஊற வைப்பார்.
வாயகன்ற பாட்டில் ஒன்றில் காந்தாரிடின் எண்ணெயை விட்டு,செம்பருத்தியை அதில் போட்டது ஒரு சிவப்பு வண்ண உலகம் விரியும். அத்தடன் ஆறி ந  தேங்காய்   எண்ணெயும் சேர்ப்பார்.

எங்கள் கூ ந்தல் தைலம் தயார்.

10 comments:

KILLERGEE Devakottai said...

தகவல்கள் அருமை அம்மா ஆனால் இக்கால பெண்மணிகளுக்கு இதைச் செய்யக்கூட பொறுமை கிடையாது.

ஸ்ரீராம். said...

சுலப கூந்தல் தைலம்! செல்லுமிடம் எல்லாம் செடிகள் வைத்து வளர்த்த அப்பாவின் சுறுசுறுப்பு..

வெங்கட் நாகராஜ் said...

செம்பருத்தி போட்டு கூந்தல் தைலம் - வாவ். அப்படிச் செடி கொடிகளிடையே அமர்ந்து பேசுவது ஒரு சுகானுபவம்.... இப்போதைய அடுக்கு மாடி குடியிருப்பு களில் இல்லாதது.

நெல்லைத் தமிழன் said...

விவரித்த விதம் அருமை. நீங்கள் இதனைத் தயாரித்திருக்கிறீர்களா?

வல்லிசிம்ஹன் said...

அன்பு கில்லர்ஜி,
அம்மாவுக்கு இந்த, மை,சாந்து இதை எல்லாம் வாங்க
விருப்பம் கிடையாது.
நம் வீட்டிலும் செம்பருத்தி உண்டு.
நான் பூக்களை உலர வைத்துப் பொடி செய்து ,கருவேப்பிலையும் சேர்த்துக் கொள்வேன்.
அருமையாக வளர்த்தகூந்தல் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், ஆமாம் அப்பாவால் சும்மாவே இருக்க முடியாது. வீட்டில் கடப்பாறை மண்வெட்டி இருக்கும்.அதே மாதிரி சின்ன டூல் பாக்ஸ். வீட்டுப் பொருட்களின் மீது ,நல்ல கவனம் வைப்பார்.நன்றி மா.
தாழ்ப்பாள்கள் எண்ணெய் போட்டு வைப்பார். அடுப்புகளுக்கு புது பெயிண்ட் அடிப்பார். கொலுவுக்கு, படங்கள் வரைவார். அழகான மணி மண்டபம், தேர் எல்லாம் செய்வார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
சுகமான நாட்கள் அவை,
கல்பாக்கம், வீட்டில் இருந்த போது குழந்தைகள் விளையாட மணல் கொண்டு வந்து போட்டார்.. அந்த நந்தியாவட்டை மர நிழலில் நேரம் காலம் தெரியாமல் குழந்தைகள் விளையாடுவார்கள்.ஒவ்வொரு விடுமுறையும் அவர்களுக்கு இனிமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன்,
நானும் செய்திருக்கிறேன். இப்போது எல்லாம்
முடிவதில்லை.

Geetha Sambasivam said...

நீலி பிருங்காதித் தைலம் பயன்படுத்தியதால் செம்பருத்தித் தைலம் காய்ச்சியது இல்லை. ஆனால் கஷாயம் சாப்பிட்டிருக்கேன். அம்மா போட்டுக் கொடுப்பார். சீயக்காயுடன் சேர்த்து அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்திருக்கிறேன். உங்க அப்பா போலத் தான் நம்ம ரங்க்ஸும். எங்கே போனாலும் பூச்செடிகள், காய்கறிச் செடிகள் போடுவோம். இப்போ ஶ்ரீரங்கத்தில் தான் எதுவும் இல்லை! :) செம்பருத்தியையே எங்கேயானும் யார் வீட்டிலானும் பூத்திருக்கும்போது பார்ப்பது தான்! கண் மை, நெற்றிக்குச் சாந்து எல்லாம் அம்மா தயாரிப்புத் தான் வீட்டில். இல்லைனா அம்மாவின் அம்மா செய்யும்போது எங்களுக்கும் கொடுத்தனுப்புவார். அந்தச் சாந்தைக் கொட்டாங்கச்சியில் தான் சேர்த்து வைப்பார்கள். அதைக் குழைக்க ஒரு குச்சி இருக்கும். பின்னர் நெற்றியில் இட்டுக்கொள்ள வித விதமான டிசைன்களில் கொத்துச் சாவி போல் பொட்டுக் குச்சிகள் விற்கும். ஒரு கொத்தில் 30,40 டிசைன்கள் இருக்கும். கறுப்புச் சாந்து ஜாஸ்தி தயாரிக்க மாட்டாங்க. கொஞ்சம் போல், வீட்டில் சின்னக் குழந்தை இருந்தால் வைக்க. மற்றபடி கண்மையும், சிவப்புச் சாந்தும் நிறையத் தயாரிப்பார்கள்.

கோமதி அரசு said...

அருமையான நினைவலைகள்.
அம்மவின் படம் அழகு.
கூந்தல் தைலம், தேய்த்து குளிக்க பொடி தலைக்கு தனியாக, உடலுக்கு தனியாக எல்லாம் அம்மாவின் சொற்படி குழந்தைகளுக்கும் செய்து கொடுத்த காலங்களை நினைக்க வைக்கிறது பதிவு.

இப்போது ஷாம்புதான்.