Blog Archive

Thursday, November 30, 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


தஞ்சாவூர்ப் பயணமும் வெள்ளமும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அம்மா போட்மெயில் ஏறியதும் எனக்கு வேணும்கிற புத்திமதிகளைச் சொல்லி
வண்டியும் கிளம்பியது.
அப்போது அம்மாவோட அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. உதவிக்கு
அம்மா சென்றார்.
கும்பகோணம் தாண்டி ரயில் மெதுவாகச் செல்ல ஆரம்பித்ததாம்.
தஞ்சாவூர்,திருச்சி அரியலூர் என்று வந்ததும் வண்டி
தண்டவாளத்திலியே நின்று விட்டதாம். தண்டவாளமெல்லாம்
தண்ணீர்.
குடும்பத்தை விட்டுத் தனியாக மாட்டிக் கொண்டோமே.
இந்த இரவு சரியாகக் கழிய வேண்டுமே ,கையில் ,திருமணத்துக்குக்
கொண்டு வந்த நகைகள்,புடவைகள்.
இப்போது நினைத்தாலும் அம்மாவை நினைத்துக் கலக்கம் வருகிறது.
காட்டாற்று வேகத்தில் வண்டியே ஆடியது போல இருந்ததாம்.
அந்த வண்டியைச் செலுத்திய எஞ்சின் ட்ரைவருக்கு எல்லோரும்
மனமார நன்றி சொல்லுகிறபடி அவர் திருச்சி கொண்டுவந்து சேர்த்தாராம்.
மறு நாள் சென்னையை அடைய காலை பத்து மணிக்குப் போய்ச் சேர்ந்ததாம் வண்டி.
நாங்கள் அதற்குள் திண்டுக்கல் வந்துவிட்டோம். அப்பா ஆபீசில் மாமா கொடுத்த
தந்தி வந்திருந்தது.
அம்மா இரண்டு மூன்று நாட்கள் கழித்து வந்தார்.
இனிமேல் நீங்க எல்லாம் இல்லாமல் நான் வெளியே
போக மாட்டேன் என்று டிக்ளரேஷன்.
எனக்கெல்லாம் மிக சந்தோஷம். இரண்டாவது மாமாவுக்குப் பெண் வேறு பார்த்துவிட்டு வந்திருக்கிறார்.
எல்லாம் நல்ல படியானால் சித்திரையில் திருமணம் என்று சொன்னதும்
பாட்டியிலிருந்து எல்லோருக்கும் மன நிறைவு.
இந்த சமயத்தில் தான் பாலும் பழமும், படித்தால் மட்டும் போதுமா, பாசமலர்,
கல்யாணியின் கணவன் ,படங்கள் பார்த்தோம். தியேட்டர் சோலைஹால் என்று நினைக்கிறேன்.
பதினோராம் வகுப்பும் வந்தாchchu.. அப்பாவுக்கு பசார் அலுவலகத்துக்கு மாற்றல். தனி ஆபீஸ், ஆபீஸோட ,சேர்ந்த அலுவலகம். பக்கத்திலியே சக்தி தியேட்டர்.....திண்டுக்கல் கோடை ரோடில் இந்த அலுவலகம் இருந்தது. மீண்டும் பார்க்கலாம்..

Wednesday, November 29, 2017

1962 படிப்பு, பயணங்கள்,அனுபவங்கள்

 Vallisimhan
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்,

    அப்பாவின் இரண்டு அக்காக்களில் ஒருவர் சென்னை மந்தை வெளியிலும்,
இன்னொருவர் தில்லியிலும்  இருந்தார்கள்.
என் அம்மாவிடம் மிகவும் பிரியம் வைத்திருந்தவர்கள்.

அவர்கள் வந்துவிட்டால் வீட்டில் இன்பம் ,பேச்சு, கும்மாளம் தான்.
 பெரிய அத்தையின் அத்திம்பேர் பெரிய எழுத்தாளர்.
ஆங்கிலப்   பத்திரிக்கைகளுக்கு  எழுதுவார். இவர்தான்  எங்க வீட்டுக்காரரின் ஜாதகத்தை 3 வருடங்களுக்குப் பிறகு 1965இல்
கொண்டு வந்தவர். 
ஸ்ரீமத் ராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார்.
வால்மீகியின் ஒரு சொல் கூட பழுதில்லாமல் தமிழில்
கொண்டு வந்தவர். 
அத்தை ஒரு அப்பாவி. எப்பொழுதும் கணவருக்கு சேவை
செய்வதுதான் தெரியும். இருவரும் வெற்றிலை,வாசனை சுண்ணாம்பு,
வாசனைப் பாக்கு என்று  வாசனையாகவே இருப்பார்கள்.இவர்களுக்கு இரண்டு
மகன்கள். எங்களைவிடப் பத்து,பனிரண்டு வயது மூத்தவர்கள்.
அத்தை வீட்டுக்குப் போனால், ஒரு சினிமா, ஒரு பீச்,ஒரு கோவில் என்று வெளியே அழைத்துச் சென்று விடுவார்.

இங்கே வந்தால் பேச்சுதான்.
சின்ன அத்தை வரும்போதே  தில்லி பிஸ்கட் மணம் வீசும்.
ஒரு டின் நிறையக் கொண்டு வருவார். அவர் மகனுடைய திருமணத்துக்குத் தான் நான்,அம்மா,அப்பா
பாட்டி, சித்தப்பா எல்லோரும் திண்டுக்கல்லில் இருந்து தஞ்சாவூர்
சென்றோம்.
அருமையான பயணம். தெரியாத ஒன்று கர்னாடகாவில் பெய்த மழை.
அத்தை மகனின் திருமணம் வெகு அழகான முறையில் நடந்தேறியது.
நாங்கள் திண்டுக்கல் திரும்ப, அம்மா சென்னை செல்வதாக
திட்டம்.
திருமணம் முடிந்து ,பாலிகை கரைக்க சத்திரத்தின் பக்கம் ஓடிய
வெண்ணாற்றங்கரைக்குச் சென்றோம்.
பத்துப் பதினைந்து பெண்களாக ஆற்றங்கரை மேட்டுக்கு வந்தோம். உற்சாகக் களிப்பில் ஆறு
சிவந்த வண்ணத்தில் ஓடுவதைக் கவனிக்கவில்லை.
பட்டுப் பாவாடைகள், பூக்கள், தட்டுகளில் பாலிகை கரைக்க வேண்டிய குவளைகள்
எல்லாமாகக் காவிரிக்குப் போட்டியாக நாங்களும் ஓடினோம்.
திடீரென எதிர்க்கரையிலிருந்து ஒரு குரல்.
பொண்ணுகளா இறங்காதீங்க, வெள்ளம் வருது ,பின்னாலே போயிடுங்க.
  என்று கூச்சல் போட்டார்.
நாங்கள் மிரண்டு போனோம்.
பார்த்துக் கொண்டிருந்தபோதே  ஹோவென்ற பேரிரைச்சலோடு
பாய்ந்த வந்த நீர் மிரட்டியது எங்களை.
கிளைகள், மரங்கள் ,பறவைகள் என்று ஆர்ப்பாட்டத்தோடு வந்த காவிரி
எங்களை பயமுறுத்த மீண்டும் சத்திரத்துக்கே வந்தோம்.
அன்றிரவு சென்னைக்குப் புறப்பட்ட அம்மாவைக் கும்பகோணம் சென்று வண்டி ஏற்றினோம்.
 அந்தப் பயணம் அம்மாவின் வாழ்க்கையில் மறக்க முடியாததாக
அமைந்தது. பார்க்கலாம்.
Add caption
Add caption

Tuesday, November 28, 2017

திண்டுக்கல் 1962

 திண்டுக்கல்  பள்ளியில் கற்ற பாடங்கள் அத்தனையும் கல்வெட்டுப் போல மனதில் பதிந்ததற்குக் காரணம்,  கணிதம், தமிழ், விஞ்ஞானம்,ஆங்கிலம் கற்றுத் தந்த ஆசிரியர்கள்
  நல்ல படிப்பாளிகளாக இருந்ததை விடச் சொல்லிக் கொடுக்கும் விதத்தில் சிறந்தவர்கள்.

காலையில் எட்டரை மணிக்குப் பள்ளியில் இருக்க வேண்டும்.

தினமும் அசெம்ப்ளி உண்டு.  ஸ்கூல் லீடர் ஜி. ஞானம். 
11 ஆவது வகுப்பு. ஆணித்தரமாகப் பேசுவார். 
 எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கலாம்..
அசெம்ப்ளி முடிந்து அனைவரும் ,//தந்தானைத் துதிப்போமே//
பாடல் ஒலி பெருக்கியில் ஒலிக்க, வரிசையாகப் படிகளில் ஏறி அவரவர் வகுப்படைவோம்.

அப்பொழுது கிடைத்த தோழிகள் ஷாந்தா, பிற்காலத்தில் டாக்டரானதாகக் கேள்வி,
  உஷா கிருஷ்ணன், சுருட்டை முடியில் இரட்டைப் பின்னல் நினைவுக்கு வருகிறது,
ஜி. மீனாக்ஷி, என் போட்டியாளர்களில் இவளும் ஒருத்தி.

இதைத்தவிர வி ஆர் செவன் என்றபாடலை ஆங்கிலத்தில் கற்றதின் 
எதிரொலிப்பு, இன்னோரு குழு.
கமருன்னிசா, ஹெலன், செலின், சீத்தாலக்ஷ்மி, தங்கம்,ஆறுமுகத்தாய்,, நான்.
கனகா பிறகு சேர்ந்து கொண்டாள். 
பள்ளிக்குள் எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்வது, மரத்தடியில் உண்பது, உணவைப் பகிர்ந்து கொள்வது
 பரீட்சை நாட்களில் பாடங்கள் பிரித்துப் படித்து ஒவ்வொருவரிடமும்
 ஒப்பிப்பது. யாருக்கு எந்த மிஸ் பிடிக்குமோ அவர்களுக்கு ரோஜா கொடுப்பது.
ஸ்டாஃப் ரூம் சென்று  ஓய்வாக இருக்கும் டீச்சர்களிடம் வம்படிப்பது.
எல்லாம் உண்டு. ஒரு மாற்றத்தில் எங்கள் தமிழ் மாஸ்டர் ரெட்டியார் சார்
ரிடயராகிப் புதிதாக செல்வம் என்று ஒரு இளைஞர் வந்தார்.
23 வயது இருக்கலாம்.  நல்ல மானிறம். கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்,
மேஜை பின்னாலிருந்து வெளியவே  வரமாட்டார்.
எடுப்பதோ நள தமயந்தி. சொல்லி முடிப்பதற்குள் 
வியர்த்துவிடும். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிடுவார். இது எங்கள் பத்தாம் வகுப்பில்.
வேறு வகுப்புக்குப் போகும் போதோ வரும்போதோ, நாங்கள் கண்ணில் பட்டால்
சுவரோடு ஒட்டிக் கொண்டுவிடுவார்.
மரியாதை நிமித்தம் சிரிக்க மாட்டோம். ஓடி மரத்தடிக்குப் போய் புத்தகங்களைப் பிரித்து
வைத்துக் கொண்டு சிரிப்போம். ஏம்பா இப்படி பயப்படுகிறார். ம்ஹூம். இன்னும் ஒரு மாததில் கிளம்பிவிடுவார். 
சரசர  சாரக்காற்று காற்றுப் பாட்டு//// பார்க்கும் போதெல்லாம் அவர் நினைவுதான் வரும். எங்கே இருக்கிறாரோ.
மீண்டும் பார்க்கலாம்.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
திண்டுக்கல் பூட்டுகள் 

Sunday, November 26, 2017

கோதுமை மாவு சுலப அல்வா.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 2006 நவம்பர்,
 நன்றி சொல்லும் நாளுக்கு ஏதாவது செய்து
கொடுக்க ஏற்பாடு. சிங்கத்துக்கும்  வாயில் இனிப்பில்லாமல்
சரிப்படவில்லை.
அதற்காகச் செய்தது தான் இந்த ஈஸி ஹல்வா.
. இளமையில் அதாவது திருமணமான புது நாட்களின்
, போது சமைத்துப் பார் புத்தகத்தில் படித்த மிகக் கடினமாயிருந்தது. கோதுமையை ஊறவைத்து அரைத்து, முதல் பால் ,இரண்டாம் பால் எடுத்து, சர்க்கரைப் பாகு வைத்து
கோதுமைப் பாலை விட்டுக் கிளறி, கிளறி, கிளறிக் கை சலித்த பிறகு அல்வா
வரும் என்று தோன்றியது.
ஆளைவிடு சாமி. நமக்குத் தேங்காய் பர்ஃபி போதும் என்று விட்டு விட்டேன்.
புக்ககம் வந்த பிறகு  க்ஷீரா  பார்த்துப் பழகிக் கொண்டேன்.
ரவா கேசரி மாதிரி கோதுமை மாவில் செய்வது.
இந்தத் தடவை வேறு மாதிரி செய்யலாம் என்று
இந்த செய்முறையைத் தேர்ந்தெடுத்தேன்..
புளியம்பூ வர்ணத்தில் வறுத்துக் கொண்ட

 கோதுமை மாவு ஒரு கப்
 கண்டென்ஸ்ட் மில்க் ஒரு டப்பா,
 சர்க்கரை  இரண்டு கப்
 நெய் இரண்டு கப்.
 அலங்கரிக்க முந்திரி,பாதாம் துண்டுகள்,
கொஞ்சம் குங்குமப்பூ.
 கனமான உருளி , இல்லாவிட்டால் இப்போது வந்திருக்கும் செரமிக் கோட்டட்
வாணலி பெரியது.
 கொஞ்சம் நெய் விட்டு முந்திரி,பாதாம் வறுத்து வைத்துக் கொண்டு,
  ஒரு டம்ப்ளர் நீரில் இரண்டு கப் சர்க்கரை கரைந்து கொஞ்சமாகப்
பாகு வந்ததும்
 கோதுமை மாவு ,கண்டென்ஸ்ட் மில்க் இரண்டையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.
இரண்டும் சேர்ந்து வரும்போது
 பாலில் கரைத்த குங்குமப்பூவை விட்டு , உருக்கிய நெய் விட்டுக்
 கிளறிய கொஞ்ச நாழிகையில்  பொங்கிவிடும் கலவை.
அப்படியே  அணைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் கோதுமை மைசூர்பாகு ஆகிடும்.
 இதை அப்படியே இன்னோரு கண்ணாடிப் பாத்திரத்துக்கு
மாற்ற வேண்டியதுதான், மேலே முந்திரி,பாதாம் துண்டுகளைத் தூவினால் ஆச்சு.
 சிரமமில்லாத ஹல்வா ரெடி.

Wednesday, November 22, 2017

1961 திண்டுக்கல்/மதுரை/ திண்டுக்கல்

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption


Add caption

   எதோ நினைவுகள்    பாடல் பின்னணியில், எழுத  ஒரு ஊக்கம்.
 பாட்டியும் எங்களுடன் வந்து தங்க ஒரு யோசனை இருந்ததால்
 வீட்டை மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தது.
 பள்ளிக்கூடத்துக்கு அந்தப் பக்கம் ,அதாவது பின் வாசல்   வழியாகப் போனால்  ஒரு குறுக்கு ரோடு வரும். அது வழியாக  மெயின் ரோடு. அதைக் கடந்தால் பன்றிமலை சுவாமிகள் பங்களா  வரும்.
அதற்கு எதிராகப் பத்து வீடுகள்   வரிசையாகக் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தன.
5 ஆம் நம்பர் வீட்டுக்கு நாங்கள்  கிரஹப் பிரவேசம் செய்தோம் .
கார்த்திகை மாதம் என்று நினைக்கிறேன்.
 வீடுகளுக்கு சுற்றி நல்ல சுற்றுச் சுவர் எழுப்பப் பட்டிருந்தது. அடக்கமான வீடு. வாசலில் மூங்கில் தப்பைகளால் அழி போட்டு அடைத்த பெரிய வராந்தா.
அதற்கப்புறம் ஒரு வராந்தா, முடிவில் பெரிய கூடம். கூடத்துக்கு  இரு  வாசல் ஒன்று தனி அரைக்கும், இன்னொன்று சமையலறைக்கு. பிறகு இப்பொழுது  சொல்லப்படும்   யுடிலிட்டி வெராந்தா.  பாத்திரங்கள் தேய்க்க.
 தண்ணீர் நிரப்ப இரண்டு பெரிய தவலை களும் அண்டாக்களும். கொண்ட நல்ல முற்றம்.
 அங்கே இருந்து இறங்கினால் குளிக்கும் அறையும் ,தோய்க்கும் கல்லும்.
 ஒரு துளி மண்ணோ ,செடியோ இல்லை. அம்மா எப்படியோ துளசி மாடம் வாங்கி துளசியும் நட்டு விட்டார்.
பத்துவீடுகள் முடிவில் ஒரு பெரிய  கிணறு. அப்பாடி  நல்ல தண்ணீர்க்  கிணறு. அதற்குப் பின்னால் வயல் வெளி. அதற்குப்
பிறகு ரயில் பாதை. தூரத்தில்  சவுந்திரராஜா மில்ஸ் வீடு. தனி விமானம் வைத்திருந்தவர்கள்.

பத்து வீடுகளுக்கு வெளியே அழகான பிள்ளையார் கோவில். அரச மரத்தடிப் பிள்ளையார்.
தினம் காலையில் நானும் பக்கத்து வீட்டு  ஜில்லுவும்,
தம்பி ரங்கனும்   8 .15ற்கு கிளம்பிவிடுவோம்.
மாதா மாதம் அப்பா மதுரை சென்று பாட்டியைப் பார்த்துவிட்டு, இரண்டு நாள் காரியங்களை முடித்து வருவார்.
சித்தப்பா நல்லபடியாக வீடு ஒன்று கட்டி முடித்தார். தாத்தா வருஷாப்திகம்  முடிந்ததும்  கிரஹப் பிரவேசம் நடத்த தீர்மானம்.
எங்கள்  நாட்கள்  ஆனந்தமாக விளையாட்டும் தோழர்கள் தோழிகளோடு ஆட்ட ஓட்டத்தோடு
ஓடியது.    நானும் ஒன்பதாம் வகுப்பு போயாச்சு. முரளி எட்டாம் வகுப்பு, ரங்கன் ஆறாம் வகுப்பு செயின்ட் மேரி பள்ளியில் சேர்ந்தாச்சு.
அடுத்த புரட்டாசியில்  மதுரைக்கு நாங்கள் சென்று திரும்பும் போது பாட்டி எங்களோடு வந்துவிட்டார்.
பிறகென்ன ஒரே சந்தோஷம் தான்.

Monday, November 20, 2017

திண்டுக்கல் மூன்றாம் பாகம்.

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

   ரெஜினா நிலையத்துக்கு நாங்கள் பழகிக் கொண்டோம்.
மூவருக்கும் பள்ளிக்கூடங்கள் பிடித்தன. முரளி
செயிண்ட் மேரி பள்ளியில் நல்ல பெயர் பெற்றான்.
அப்போதிருந்த மரியாதைக்குரிய  சகோதரர் மைக்கேல்
அவனிடம் நல்ல அன்பு வைத்திருந்தார்.
சின்னவன் எங்கள் பள்ளிக்குப் பின்னால் இருந்த லிட்டில் ஃப்ளவர்ஸ்
பள்ளியில் நான்காம்  வகுப்பு சேர்ந்தான்.
தினம் அவனும் நானும் ஒன்றாகக் கிளம்புவோம்.முரளி முன்னாடியே கிளம்பிவிடுவான்.
ஒரு செகண்ட் தாமதமானாலும் ஃபைன் 4 அணா கட்டவேண்டும்.
அப்படிச் சேர்த்துக் கட்டிய பணத்தை வைத்தே ஒரு ஃபைன் பில்டிங்க் வந்ததாக

பள்ளி இறுதி நாட்களில் சொன்னார்கள்.

நடுவில் தாத்தாவுக்கு எண்பது வயது பூர்த்தியை ஒட்டி நடந்த சதாபிஷேகத்துக்கும் போய் வந்தோம்.
இரண்டு நாட்கள் தான் போய் வர முடிந்தது. படிப்பு தீவிரம் பிடித்துக் கொண்டது.
அப்படியும் படிக்காத மேதை படம் பார்க்க மறக்கவில்லை.

நவராத்திரி வந்தது. அம்மா அழகாக ஐந்து படிகள் நிறைய
பொம்மைகள் வைத்தார். பள்ளித் தோழிகளை அழைத்து வந்து
காட்டி மகிழ்ந்தேன். கொலு வைத்து ஐந்தாம் நாள் அப்பாவுக்குத் தொலைபேசி வந்தது.
தாத்தாவுக்கு மூச்சுத் திணறல் என்றும் எங்களை எல்லாரையும் பார்க்க ஆசைப் படுவதாகவும் சித்தப்பா  சொன்னார்.

இப்பொதானே பார்த்தோம் அண்ணாவை. என்ன இது திடீரென்று
என்று மனம் நிறை பாரத்தோடு  ,பள்ளிக்கூடங்களுக்கு லீவு லெட்டர் கொடுத்துவிட்டு
 மதுரை பஸ்ஸில் கிளம்பினோம். 40 மைல் தூரம் தான் மதுரை என்று நினைக்கிறேன்,.
 இரண்டரை மணி நேரம் ஆச்சு. பழங்கானத்ததில் தாத்தாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் எல்லாம் வைத்து
பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது.
நினைவுடந்தான் இருந்தார். நல்ல காய்ச்சல் வேறு.
கட்டில் அருகில்  நாற்காலியில் பாட்டி.
சித்தப்பாவுக்கு அப்பாவைப் பார்த்ததும் கண்ணில் நீர்.
டெல்லி அத்தை, சென்னைஅத்தை  இருவரும் வந்திருந்தார்கள்.
டிவிஎஸ் ஹாஸ்பிடல் பெரிய டாக்டர் கிட்டு வந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
டிவிஎஸ் உறவுகள் எல்லாரும்  வந்து பாட்டிக்கு ஆறுதல் சொல்லிப் போனார்கள்.
கூடவே ஒரு நர்ஸும் இருந்ததால் எங்களால் தாத்தா பக்கத்தில்
அதிகம் போக முடியவில்லை.
அப்பா அடிக்கடி வீட்டிற்குப் பின்னால் போய்க் கண்களைத் துடைத்துக் கொள்வதைப்
பார்த்தேன்.
எந்த முயற்சியும் பலிக்காமல் ,செப்டம்பர் 27 ஆம் தேதி காலை தாத்தா இறைவனடி
சேர்ந்தார். முதல் நாள் மாலை நல்ல நினைவோடு எங்களை அருகில் அழைத்து ராம நாம
மகிமையை மீண்டும் சொல்லி, பெற்றொர் சொல்லைத் தட்டாமால் இருக்க வேண்டும்
என்று நல்ல வார்த்தைகள் சொன்னார்.
அன்று இரவு முழுவதும், பேரன் பேத்திகள் தரைவிரிப்பில் பயத்தோடு சுருண்டு கிடந்தது நினைவுக்கு  வருகிறது
. அடுத்த நாள்
தாத்தாவை தயார் செய்ய ,எங்களையெல்லாம் அவர் மேல் நீர் சேர்க்கச் சொன்ன போது, தாத்தாவில் மெல்லிய உடலைப் பார்த்து அழுத நினைவு.
தொடங்கி 13  நாட்களும் அப்பாவும் சித்தப்பாவும்
கர்மாக்களைத் திருப்தியாகச் செய்து முடித்தார்கள்.
எப்பவும் சிரிப்பும் சொல்லுமாக இருக்கும் பாட்டி வாயே திறக்கவில்லை.
அந்த அக்டோபர் மாதம் கிருஷ்ணா ராவ் அக்ரஹாரம் வந்துவிட்டோம்.
 மீண்டும் நல்ல நினைவுகளோடு பார்க்கலாம்.
Add caption

Saturday, November 18, 2017

திண்டுக்கல் 1960 ஜூன். 1964 ஜூன். 2 ND part.


Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்..
   திண்டுக்கல்லில் இருக்கும் ராஜாமணி மாமாவுக்கு அப்பா
தந்தி அனுப்பி, அவசரமாக வீடு ஒன்று பார்த்துக் கொடுக்கணும்.
வேலையில் மே கடைசியில் சேர வேண்டும் என்று சொல்லி இருந்தார்.

ஓ , சொல்ல மறந்துவிட்டேனே. அப்பா, தாத்தா கூட
தபாலாபீஸ் , தந்தி வழியாகச் செய்திகள் அனுப்பிக் கொள்வார்கள்.

கட்டுக் கட கட.கட்டுக் கட்டு கட கட நானும் கொஞ்ச நாட்கள் கற்றுக் கொண்டேன்.
மோர்ஸ் கோட்.
 ராஜாமணி மாமா பார்த்த வீடு செயிண்ட் ஜோசஃப் பள்ளியிலிருந்து
மணி அடிக்கும் சத்தம்  வீட்டில் கேட்கும் என்று சொல்லி அப்பா
எங்களை அழைத்துப் போனார்.
ரெஜினா விலாஸ் என்ற பெயர்  அந்த வீட்டுக்கு. சுற்றுப்புறம் தான் சரியாக இல்லை.
சித்தப்பாவின் ஜீப்பில் மதுரையிலிருந்து
வந்த நாங்கள்  முதலில் பார்க்க விரைந்தது  கிணற்றைத்தான்.
தண்ணீர்  நிறைய இருந்தது. குடிக்கத்தான்  நன்றாக இல்லை.
குளித்தாலும் சோப் நுரை வராது போல இருந்தது.

வீட்டு சொந்தக்காரர் பெரிய வீட்டை இரண்டாகப் பிரித்திருந்தார். எங்களுக்கு அடுத்த
வீடு முயல் வீடு. ஏகப்பட்ட முயல்கள் இருந்தன. வாயில் கதவைத் திறந்தால் உள்ளே
வந்துவிடும். பின்னால் குட்டிப் பெண் ஒன்றும் வரும். கை நிறைய முயல்களை
அள்ளிக் கொண்டு சின்னச் சிரிப்பை உதிர்த்து விட்டு  ஓடி விடும்.
 வாசலில்  trellis work   இருக்கும்.
அதற்கப்புறம் ஒரு அறை பீரோ ,மேஜை, rack,   எல்லாம் கொண்டு ,சாப்பிட, படுக்க அறையாக
அது உபயோகப் பட்டது. கிணற்றுக்குப் பக்கத்தில் சமையல் அறை. ஓடு போட்டு புகைபோக்கி
எல்லாம் வைத்திருந்தது. கீழே  அடுப்புகள் அமைக்கப் பட்டு சுத்தமாக இருந்தது.
பாவம் அம்மா, நாங்கள் இங்கே உட்கார்ந்திருக்க ,மழையோ,வெய்யிலோ
  அங்கேயே இருப்பார். சமையல் முடிந்ததும்
எல்லா பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு இங்கே வந்து விடுவார்.

இங்கே எங்களைப் பார்க்க தாத்தாவும் பாட்டியும் வந்தார்கள்.
 நல்ல தண்ணீர் எடுத்து வரும் வேலை எனக்கு. அந்தக் கிணறு
இருக்கும் இடம் கொஞ்சம் தள்ளி இருந்தது. என் உயரத்தில் பாதி இருக்கும்
குடம்.
அதைப் பார்த்துப் பாட்டிக்கு மனசாகவில்லை.
நாராயணா சீக்கிரம் வேற வீடு  பாருடா. குழந்தைக்கு உடம்புக்கு வந்துவிடும்
என்று சொல்லிவிட்டு இரண்டு நாட்களிலேயே   கிளம்பி விட்டார்கள்.

அதற்குள் அப்பா என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாச்சு.
முதல் தடவை கன்யா ஸ்திரிகளைப் பார்த்துக் கொஞ்சம்
பயம் தான்.
எட்டாம் வகுப்பில் சேர்க்கப் பரிட்சை வைக்க வேண்டுமே
என்று ஸிஸ்டர் வணக்கத்துக்குரிய ரெடெம்ப்டா மேரி சொல்ல,
நானும் ஒத்துக் கொண்டேன். படிக்க, எழுத, ஆங்கிலம், கணக்கு, தமிழில்
 டெஸ்ட் வைத்தார்கள்.
 என்ன எழுதினேனோ. சேர்த்துக் கொண்டார்கள்.
அப்பா,  ஸிஸ்டர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏதாவது தப்பு செய்தால் தனக்குக் கடிதம் எழுத வேண்டும்
 ஏகத்துக்கு அப்பாவி😐😐😐 என்றேல்லாம் சொல்லி
விட்டு விட்டுப் போனார்.
ஐயோப் பாவமே இந்த அப்பா என்றிருந்தது.
 முதல் மாடியிலிருந்த எட்டாம் வகுப்புக்கு
அழைத்துச் செல்லப்பட்டேன். என் மிக மகிழ்ச்சியான நாட்கள் துவங்கின.
ஆறு மாதத்தில் பல மாற்றங்கள். அடுத்துப் பார்க்கலாமா.
Add caption
.
.

Thursday, November 16, 2017

திண்டுக்கல் 1960 ஜூன். 1964 ஜூன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வண்டியூர்   தெப்பக்குளம்.
4.50  மாலை 15 நவம்பர்.
திண்டுக்கல் 1960 ....1964 ஜூன்.
+++++++++++++++++++++++++++++++++++
 1960 ஆம் வருடம், ஏப்ரில் மாதம் ,  அப்பாவுக்கு
திண்டுக்கல் நகரத்துக்குத் தலைமை தபால் அலுவலகத்தில்
சேரும்படி ஆர்டர் வந்தது. பதவி உயர்வோடு...
ஆளாளுக்கு திருமங்கலத்தையும் தோழர் தோழிகளை விட்டுக் கிளம்ப வருத்தம்.
முரளிக்கு அக்கி வந்த போது அதற்கான செம்மண் கொண்டு வந்து கொடுத்த
துணிதோய்ப்பவர், ரங்கனுக்கு ,அம்மை ஊசி குத்தி செப்டிக் ஆனபோது மருந்து கொண்டு வந்து
கொடுத்த நாகம்மா,  பூக்காராம்மா, தயிர்,வெண்ணெய் கொண்டு வருபவர்கள் அனைவருக்கும் மிக வருத்தம். நிறைய பேசாத அம்மாவுக்கு இவ்வளவு நட்புகளா என்று
கொஞ்சம் யோசனை வந்தது.
பாப்பா உனக்கு வயசாகுது. அம்மா சொல்படி நடந்துக்க என்று வீட்டு வேலை செய்யும் நாகம்மா என் கைகளைப் பிடித்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது.
ம்ம்ம் என்னடா அப்படி அடாவடி செய்தோம் என்று யோசித்தேன்.
வெய்யில் வீணாகாமல் பத்மா,மாதவி,ரஜினி, சந்த்ரலேகா மற்றும்  தீக்குச்சி அடுக்கி
குடிசைத்தொழில் செய்த மாரி, பக்கத்துவீட்டுக் கல்யாணராமன் மாமா,மாமியோடு அரட்டை
இதெல்லாம் தான் காரணமாக இருக்கணும் என்று நினைத்துக் கொண்டு ,அந்த அம்மாவிடம் தலையாட்டினேன்.

 அந்த அங்குவிலாஸ் என்று எழுதிய வீடு இன்னும் கண்ணில் நிற்கிறது.
///////1993இல் ஒரு தடவை மதுரை போய் வந்தோம். முருகனையும் , மீனாட்சியையும்,அழகர் மலைப் பெருமாளைத் தரிசிக்கவும்  மூன்று நாட்கள்
சிங்கத்தின் தோழர் வீட்டில்  தங்கி, ஒரு நாள் திருமங்கலம் வரை
 போய் வந்தோம். நான் மிகப் பெரிய வீதி என்று நினைத்த இடம்
எல்லாம் சிறியதாக, நெரிசல் மிகுந்த இடமாகக் காட்சி அளித்தது,
நம் உருவம் பெரிதானால், காட்சி சிறிதாகிவிட்டது என்றே தோன்றியது.
 அங்குவிலாஸ் என்று எழுதிய மாடி கண்ணில் பட்டது.
வண்டியை நிறுத்த சொல்ல ஆசைதான். மாலை வண்டியைப் பிடிக்க வேண்டியதால்
திரும்பினோம். மனம் சங்கடப்பட்டது.
 பை பாஸ் என்று வண்டி ஓட்டி அழைத்துப் போனார்.
பசுமலை,பழங்கா நத்தம் எல்லாம் கண்ணில் படவே இல்லை.
5ஆம் நம்பர் பஸ்ஸாவது கண்ணில் படுமோ என்று
தேடினேன்.
  இறந்த காலமாகிவிட்டது எல்லாமே. ஹாஜி மூசாவில் போய் பெண்ணுக்கு
ஒரு கோரா பட்டுப் புடவை மட்டும் எடுத்துக் கொண்டோம்.
புது மண்டபம்  அழகு மாறி   கூட்ட நெரிசிலில் கடைகளில்  என்ன விற்கிறது
என்ன என்று புரிவதே
கஷ்டமாக இருந்தது. தாழம்பூ குங்குமம் மட்டும்
வாங்கிக் கொண்டேன்.அதுவும் மதுரை மல்லியும் மாறவில்லை./////
திண்டுக்கல் கிளம்புவதற்கு முன் மதுரைக்குப் போய்விட்டேன்.
மீண்டும் தொடர்கிறேன்.

Monday, November 13, 2017

November 13th 1966

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்












அழகான ஐப்பசி 22 ஆம் நாள். தலை தீபாவளி முடிந்து சிங்கம் சேலத்துக்குத் திரும்பிச் சென்றார்.
அடுத்த நாள் ஆரம்பித்த  பிரசவ வலி, அதற்கடுத்த நாள் காலையில் பொன் போன்ற குழந்தையை என் கையில் கொடுத்தது.

மூன்று வாரங்கள் முன் பிறந்துவிட்டான் . தலையில் பேருக்கு ஒரு முடி இல்லை.
 பார்க்க வந்தவர்களுக்கு அதிசயம்.
சிம்மு பிள்ளையா இது என்று  ஒரே சிரிப்பு. இப்பொழுது வாரம் ஒரு முறை தலை முடி    திருத்தம் 😊😊😊செய்ய வேண்டி இருக்கிறது.
தந்தையின் பரிபூரண அன்பைப் பெற்ற  மகன்.

என்றென்றும்  நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சி நலன்களுடனும், மக்கள் ,மனைவி  யுடன்  நல்  வாழ்வு   பெற இறைவனை வேண்டுகிறேன்.
மனம் நிறை வாழ்த்துக்கள் மகனுக்கு.









Thursday, November 09, 2017

நிலையில்லாத நிலை.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  மாலை 4.30க்கு இருட்டி விடுகிறது. காலை 7 மணிக்கு சிறிது வெளிச்சம் பரவுகிறது.
 காலையில் கணினி முகத்தில் விழித்து என்ன சுரங்கத்தைக் காணப் போகிறாய் என்று மகள் கேட்கிறார்.
 இது என் நண்பர்களுடனான உரையாடல்.
ஒரே விதமான எண்ண அலைகளின்  பரிமாற்றம். பலப்பல விவாதங்கள் , தோழமைப்
புரிதல்கள்.
 பிடித்த இசை கேட்பது.
 பல தோழிகளின் தோழர்களின் பதிவுகளுக்குப் போய்ப் படிப்பதை
 மெதுவாகவே செய்கிறேன்.
      நம் மனஓட்டம் அனைவருக்கும் எளிதில் புரியாது.
என்னுடன் இருக்கும்  என் குடும்ப உறுப்பினர்களின் நினைவுகள்
என்னை இழுத்துக் கொண்டு போகும் நிலையில்
கணினியை மூடிவிடுகிறேன்.
   இருக்கவே இருக்கிறது CNN, TCM, HGTV.
   நூலகப் புத்தகங்கள்.  அவ்வப் போது சமையல்.
   இப்போதைக்கு என் நிலை இதுதான்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கதை அம்மா அப்பா 3ஆம் பகுதி. +++

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  ஸ்ரீவில்லிபுத்தூர்  கதை அம்மா அப்பா 4 ஆம் பகுதி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆண்டாள், ரங்கமன்னார் அவர்களின் அழகுத் தேர்,
தாழம்பூ வைத்துப் பின்னல் ,கோலாட்ட ஜவந்தரை,

மார்கழிக் கோலங்கள்,அவற்றில் பூக்கள் சட்டென்று
வந்து போகும் நினைவுகள். அழகான பெரிய வீடு. மெழுகப்பட்ட திண்ணை. அதன் மேல் போடப்பட்ட கூரை. எப்பாவாவது பெய்யும் மழையில்
திண்ணையில் உட்கார்ந்து கைகளை  அளைந்து காகிதக் கப்பல்
விட்ட நாட்கள்.
திண்ணையைக் கடந்ததும் பெரிய கூடம். தொங்கும் தூளி. அதில் சின்னத் தம்பி ரங்கன்.
கூடவே அபாகஸ் பொருத்தப்பட்ட குட்டி நாற்காலி ஊஞ்சல், அதில் பெரிய தம்பி,.....
எனக்காக
மாமா வாங்கி வந்த அழகான நீல வர்ணக் குதிரை.

கூடத்தின் முனையில் சமையல் அறை. அதைக் கடந்து முற்றம்.
அந்தச் சுற்றில் ஒரு கிணறும் //தண்ணீர் இல்லாத கிணறு//
வென்னீர் அடுப்பு, அம்மா  கண் மை, சாந்து செய்யும் இடம்.
அப்புறமாக வரும் கொல்லைப் புறம். அங்கேயும் ஒரு கிணறு.

அப்பா ஆபீசிலிருந்து நல்ல தண்ணிர் கொண்டு வரும் ஆயிரத்தான்.
அதென்ன பெயர் என்று தெரியாமலேயே, கூப்பிடுவேன். அப்பா
பிறகு சொன்னார் அது பெருமாள் பேரம்மா. சஹஸ்ர நாமம் மாதிரி...
ஓஹோ  என்று கேட்டுக் கொண்டேன்.
ஆயிரத்தானுக்கும் தம்பி முரளியை மிகவும் பிடிக்கும். குட்டி சைக்கிளில் அவன் உட்கார்ந்து ஓட்ட,
பின்னாலெயே போய் வருவார்.
அப்பா தினம் டென்னிஸ் விளையாடும் இடத்துக்குப் போய் வருவார்கள்.

விடுமுறை நாள் ஒன்றில்,
 சாலையைக் கடக்கும் போது ஒரு சைக்கிள் என் மேல் ஏறியதும் இங்க தான்.
அந்தத் தழும்பு இன்னும் இருக்கிறது.
முதுகில் சைக்கிள் ஏறி இறங்கி, அந்த மனிதர் பயந்து ஓடிவிட்டார்.
தலையிலும் உடையிலும் மண்ணும் கோலமுமாக நான் உள்ளே நுழைந்ததும்
குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த அம்மவுக்கு முதலில் வந்தது கோபமே.
 உன்னை யாரு ரோட்டுக்குப் போகச்சொன்னார்கள்
என்று பளிச்சுனு முதுகிலேயே  ஓர் அறை. பிறகுதான் ரத்தக் கறையைப் பார்த்தார்.

முகம் சிவந்து அம்மா அழுவதைப் பார்த்து நான் அழ,அம்மணி வந்து என்னை வைத்தியரிடம் அழைத்துப் போக ,காயம் ஆற இரண்டு வாரங்கள் ஆனது.
வெகு வருடங்கள் கழித்து ,அம்மாவிடம் கேலி காட்டிக் கொண்டே இருப்பேன்.
சும்மா இரு. தெரியாமல் அடித்துவிட்டேன் என்று சொல்வார்.
சரியான ட்ரம்ப் கார்ட்.அம்மாவை மடக்க.
Add caption
Add caption

Tuesday, November 07, 2017

அம்மா அப்பா கதை இரண்டாம் பாகம் 1946////48


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
கயத்தாறு கிராமமாக இருந்த காலம். கட்டபொம்மன்
கதை கூடப் பிறகுதான் அம்மாவுக்குத் தெரியுமாம்.
கூடவே கொண்டு வந்திருந்த பாட்டுப் புத்தகத்திலிருந்து
தான் கற்ற கீர்த்தனைகளைப் பாடிப் பழகுவாராம்.
அப்பா படிக்கக் கொண்டு வரும் புத்தகங்களைத் தவிர
அப்போது கல்கியில் வந்து கொண்டிருந்த கதைகளை அம்மாவின் அம்மா
சீனிம்மாப் பாட்டி இன்லண்ட் லெட்டரில்
எழுதி அனுப்புவாராம். கல்கியின்
அலை ஓசையும், அமரதாராவும் அம்மாவுக்கு மிகப் பிடித்த
தொடர் கதைகள்.
அம்மா முதலில் கருவுற்றது இங்கே தான்.
ஐந்தாம் மாதம் அம்பி மாமா வந்து அழைத்துப் போனாராம்.
தாத்தா அப்போது நலமாக இருந்தார். புரசவாக்கம் எம் சி.டி எம்
பள்ளியில் சயின்ஸ் மாஸ்டர்.
எட்டாம் மாதம் சீமந்தம் திரு நெல்வேலி வண்ணாரப் பேட்டை வீட்டில் நடை பெற்றதும்
மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார்..
அதற்குள் அப்பாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றல் ஆகி இருந்தது.
அப்போதெல்லாம் வீட்டில் தான் பிரசவம் நடக்கும்.
ஆங்கில இந்தியப் பெண்மணி மருத்துவம் பார்க்க வருவார். அப்படி
அழகாக முதலில் பிறந்த பிள்ளை ரங்கராஜன். சுருட்டை,முடியும்
வெள்ளை வெளேர் என்ற நிறமும் கருவண்டு விழிகளுமாய்
வந்த குழந்தைக்கு ஆயுசு பகவான் எழுதவில்லை.
ஆறு மாதமே இருந்தது. .ஏதோ கரப்பு என்ற நோயாம்.
அந்தக் குழந்தையைப் பற்றி அம்மா என்னிடம் சொன்னதே இல்லை.
மாமா சொல்லிதான், எனக்கு தெரியும் .அதுவும் நான் மிக வளர்ந்த பிறகு.
//எப்படி இருப்பான் தெரியுமா.வெள்ளிக்கட்டியாட்டம்.
கொடுத்துவைக்கவில்லையே நமக்கு /////என்று சொல்வார்.
18 வயதில் இது பெரிய சோகம் தான்.

தாத்தாவுக்கு இந்த வருத்தத்தில் ரத்த அழுத்தம் வந்துவிட்டது.
அருமைப் பெண்ணின் மேல் அத்தனை பாசம்.
தானே திரு நெல்வேலிவரை கொண்டு வந்து விட்டுப் போனாராம்.

1948 இல் இரண்டாவது பிரசவம். இந்தப் பெண் குழந்தை
சுகமாக இருந்ததில் குடும்பம் ஆனந்தப் பட்டது. நிம்மதியாகக்
ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் பெயரை வைத்துக். கூடவே ரேவதி என்றும்
நாமகரணம் ஆகி   மாமா,துணைக்கு வர,குழந்தைக்கான ஸீர்களுடன்   வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் தாயும் ஆண்டாளும்.

Sunday, November 05, 2017

பூர்த்தி.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

மழையின்  கும்மாளத்துக்கு நடுவே   புதல்வர்கள்
தங்கள் வேலைகளையும் தந்தைக்கு வேண்டிய
பிதுர்க் கடன் களையும் நிறைவேற்ற
முடிந்தது  கடவுளின்  கிருபையே.

  பின் வரும் தலைமுறைகள் நன்றாக ஆசிகள் பெறும்
வகையில்  பெரியோர்களால் தீர்மானிக்கப்பட்ட இந்த சிரார்த்த விஷயங்களுக்கு  ,முக்கியம் சிரத்தை. தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடமை.

அதுவும் அவருடைய வீட்டில் செய்ய முடிந்தது
தான் எனக்கு நிம்மதி.
எத்தனையோ நபர்கள் வெளியில் செய்து கொள்ளலாம் என்று சொன்ன போதும்   பசங்க மனம் மாறவில்லை.
என்றும் என் ஆசிகளும் சிங்கத்தின் ஆசிகளும் அவர்களுடனும் குடும்பத்துடனும் இருக்கும்.