Blog Archive

Monday, November 20, 2017

திண்டுக்கல் மூன்றாம் பாகம்.

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

   ரெஜினா நிலையத்துக்கு நாங்கள் பழகிக் கொண்டோம்.
மூவருக்கும் பள்ளிக்கூடங்கள் பிடித்தன. முரளி
செயிண்ட் மேரி பள்ளியில் நல்ல பெயர் பெற்றான்.
அப்போதிருந்த மரியாதைக்குரிய  சகோதரர் மைக்கேல்
அவனிடம் நல்ல அன்பு வைத்திருந்தார்.
சின்னவன் எங்கள் பள்ளிக்குப் பின்னால் இருந்த லிட்டில் ஃப்ளவர்ஸ்
பள்ளியில் நான்காம்  வகுப்பு சேர்ந்தான்.
தினம் அவனும் நானும் ஒன்றாகக் கிளம்புவோம்.முரளி முன்னாடியே கிளம்பிவிடுவான்.
ஒரு செகண்ட் தாமதமானாலும் ஃபைன் 4 அணா கட்டவேண்டும்.
அப்படிச் சேர்த்துக் கட்டிய பணத்தை வைத்தே ஒரு ஃபைன் பில்டிங்க் வந்ததாக

பள்ளி இறுதி நாட்களில் சொன்னார்கள்.

நடுவில் தாத்தாவுக்கு எண்பது வயது பூர்த்தியை ஒட்டி நடந்த சதாபிஷேகத்துக்கும் போய் வந்தோம்.
இரண்டு நாட்கள் தான் போய் வர முடிந்தது. படிப்பு தீவிரம் பிடித்துக் கொண்டது.
அப்படியும் படிக்காத மேதை படம் பார்க்க மறக்கவில்லை.

நவராத்திரி வந்தது. அம்மா அழகாக ஐந்து படிகள் நிறைய
பொம்மைகள் வைத்தார். பள்ளித் தோழிகளை அழைத்து வந்து
காட்டி மகிழ்ந்தேன். கொலு வைத்து ஐந்தாம் நாள் அப்பாவுக்குத் தொலைபேசி வந்தது.
தாத்தாவுக்கு மூச்சுத் திணறல் என்றும் எங்களை எல்லாரையும் பார்க்க ஆசைப் படுவதாகவும் சித்தப்பா  சொன்னார்.

இப்பொதானே பார்த்தோம் அண்ணாவை. என்ன இது திடீரென்று
என்று மனம் நிறை பாரத்தோடு  ,பள்ளிக்கூடங்களுக்கு லீவு லெட்டர் கொடுத்துவிட்டு
 மதுரை பஸ்ஸில் கிளம்பினோம். 40 மைல் தூரம் தான் மதுரை என்று நினைக்கிறேன்,.
 இரண்டரை மணி நேரம் ஆச்சு. பழங்கானத்ததில் தாத்தாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் எல்லாம் வைத்து
பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது.
நினைவுடந்தான் இருந்தார். நல்ல காய்ச்சல் வேறு.
கட்டில் அருகில்  நாற்காலியில் பாட்டி.
சித்தப்பாவுக்கு அப்பாவைப் பார்த்ததும் கண்ணில் நீர்.
டெல்லி அத்தை, சென்னைஅத்தை  இருவரும் வந்திருந்தார்கள்.
டிவிஎஸ் ஹாஸ்பிடல் பெரிய டாக்டர் கிட்டு வந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
டிவிஎஸ் உறவுகள் எல்லாரும்  வந்து பாட்டிக்கு ஆறுதல் சொல்லிப் போனார்கள்.
கூடவே ஒரு நர்ஸும் இருந்ததால் எங்களால் தாத்தா பக்கத்தில்
அதிகம் போக முடியவில்லை.
அப்பா அடிக்கடி வீட்டிற்குப் பின்னால் போய்க் கண்களைத் துடைத்துக் கொள்வதைப்
பார்த்தேன்.
எந்த முயற்சியும் பலிக்காமல் ,செப்டம்பர் 27 ஆம் தேதி காலை தாத்தா இறைவனடி
சேர்ந்தார். முதல் நாள் மாலை நல்ல நினைவோடு எங்களை அருகில் அழைத்து ராம நாம
மகிமையை மீண்டும் சொல்லி, பெற்றொர் சொல்லைத் தட்டாமால் இருக்க வேண்டும்
என்று நல்ல வார்த்தைகள் சொன்னார்.
அன்று இரவு முழுவதும், பேரன் பேத்திகள் தரைவிரிப்பில் பயத்தோடு சுருண்டு கிடந்தது நினைவுக்கு  வருகிறது
. அடுத்த நாள்
தாத்தாவை தயார் செய்ய ,எங்களையெல்லாம் அவர் மேல் நீர் சேர்க்கச் சொன்ன போது, தாத்தாவில் மெல்லிய உடலைப் பார்த்து அழுத நினைவு.
தொடங்கி 13  நாட்களும் அப்பாவும் சித்தப்பாவும்
கர்மாக்களைத் திருப்தியாகச் செய்து முடித்தார்கள்.
எப்பவும் சிரிப்பும் சொல்லுமாக இருக்கும் பாட்டி வாயே திறக்கவில்லை.
அந்த அக்டோபர் மாதம் கிருஷ்ணா ராவ் அக்ரஹாரம் வந்துவிட்டோம்.
 மீண்டும் நல்ல நினைவுகளோடு பார்க்கலாம்.
Add caption

12 comments:

நெல்லைத் தமிழன் said...

பொன் தாமரைக் குளமும், மதுரை மல்லிகைப் படங்களும் அருமை.

உங்கள் பள்ளி அனுபவங்களும் நல்லாத்தான் இருக்கு. இருந்தும் சோகத்தில் முடித்துவிட்டீர்கள். எல்லாம் வாழ்க்கையில் ஒரு பகுதிதானே.

ராஜி said...

எனக்கு மதுரை மல்லி வேணும்ம்மா

பூ விழி said...

இரவும் பகலும் கொண்டது தானே வாழ்க்கை

ஸ்ரீராம். said...

ஒரு வீட்டில் தாத்தாக்கள், பாட்டிகள் மரணமடைவதுதான் இளவயதில் நாம் மரணத்தைச் சந்திக்கும் முதல் அனுபவமாக இருக்கும். சமயங்களில் "என்னது? நமக்கும் மரணம் உண்டா?" என்கிற முதல் அதிர்ச்சியே அந்த மாதிரி சமயங்களில்தான் வரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன். இதைப் போல் நிகழ்வுகளை
வரும் வாரிசுகள் படிக்க எனக்கு ஆசை. அதை எல்லாம் நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்.
எல்லா வீட்டிலும் நிகழும் சோகம்தானே .
எல்லோரும் கூடி இருந்தோம் . தாத்தா பாட்டிக்கு
9 பேரன் பேத்திகள். இப்போது என்னையும் சேர்த்து ஆறு பாக்கி.
இரு கோடுகள் போல வாழ்க்கை மேலும் கீழும் போகிறது அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜி, மதுரை சென்று வாருங்கள். இந்த மாதம் நவம்பர் சில்லென்று
இருக்கும். கதம்பம் கிடைக்கும்.
எனக்கும் சேர்த்து நீங்கள் தலை நிறைய வைத்துக் கொள்ளுங்கள் சரியா.

வல்லிசிம்ஹன் said...

அதேதான். இறைவன் என்றும் என்னை மறக்க விட்டதில்லை பூ விழி.

கோமதி அரசு said...

எனக்கு என் பாட்டியின் இறப்புதான் முதல் முதலில் பார்த்தது. இரண்டாம் வகுப்பு என்று நினைக்கிறேன்.

நினைவுகளில் இன்பமும், துன்பமும் கலந்து வருகிற்து.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம்.
முதன் முதலாக மரண அனுபவம் தாத்தாவோடதே.
அப்பா எங்களை அடுத்த பங்களாவுக்கு அனுப்பி விட்டார். எல்லோரும் அழுவதைப் பார்க்க வேண்டாம் என்ற பாதுகாப்பு உணர்ச்சிதான்.
ஹ்ம்ம்.சாலை வழியாகச் சத்தம் போட்டபடி போகும் அது போல ஊர்வலங்களைப் பார்த்து ஜுரம் வந்ததும் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
ரொம்ப வருத்தப் பட்டிருப்பீர்கள்.
ஆமாம் அதுதானே வாழ்க்கை.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா நல்ல நினைவுகள்.

தாத்தாவின் மரணம் என் அப்பா வழித் தாத்தாவின் மரணத்தை (திருக்குறுங்குடியில்) நினைவு படுத்திவிட்டது. தாத்தாவுக்கு நினைவில்லாமல் இருக்கார் என்று (நாங்கள் அப்போது நாகர்கோவிலில் இருந்தோம்) தகவல் வந்ததுமே நாங்கள் சென்று தாத்தாவுக்கு வீட்டிலேயே ட்ரிப்ஸ் ஏற்றி டாக்டர் வீட்டிற்கே வந்து பார்த்தார். நான் தினமும் தாத்தாவின் தலைமாட்டிலேயே இருந்து கண் விழிபபரா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது என்னைப் பார்த்து நினைவு கொண்டார். அப்புறம் அவர் தங்கையைக் கேட்டார். அவர் தங்கை வரவும் அலமேலு என்று பார்த்து கண்ணை மூடினார்!.. ஒரு வாரம் தான்..எனக்குப் பல கதைகளைத் தன் மடியில் உட்கார்த்தி வைத்துச் சொன்னவர்.

தொடர்கிறோம் அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

எத்தனை நினைவுகள் மனசில் வலம் வருகின்றன.
தங்கையைப் பார்க்கும் வரை உயிர் ஓடிக் கொண்டிருந்தது என்றால் எத்தனை பாசம். எனக்கே தொண்டை அடைக்கிறது.
தாத்தாவுக்கு என் நமஸ்காரங்கள். இந்த உறவுச் சங்கிலிகள் நாம் தான் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லணும். பேரன்கள், பேத்திகளுக்கு இப்பொழுது நேரம் கிடைத்து
நான் எப்போது சொல்லப் போகிறேனோ.
சின்னப் பேரன் கேட்பான். எல்லாரும் நன்றாக இருக்கட்டும்.