|
அன்புமனங்கள் |
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்,
அன்பு அம்மாவுக்குப் பாப்பா
அநேக தண்டம்சமர்ப்பிவித்த விண்ணப்பம்.
இங்கெ எல்லோரும் க்ஷேம. அங்கும் அப்படியே என்று நினைக்கிறேன்.
பகவத்சங்கல்பத்தில் ஆண்டாளுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
அவள் மாமியாரும் உடன் இருப்பதால் எனக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது.
பெரியவன் தான் ஆண்டாளோடு ஒட்ட மாட்டேன் என்கிறேன்.
சவலையாகிவிட்டது இல்லையாம்மா.
பாவமா இருக்கு. கையில டெட்டி பொம்மையை வச்சிண்டு கண்ணு பூரா ஏக்கமா
மத்யானம் அவர் வரத்துக்குள்ள ஒரு குட்டி அமர்க்களம் பண்ணிடறான்.
சாப்பாடு ஊட்டுவதற்குள்,
அவனோட அப்பா ஜீப் வர சத்தத்துக்குக் காத்திண்டு இருக்கான்.
நானும் குழந்தைகளையும் ஆண்டாளையும் அழைத்துக் கொண்டு காரைக்குடிக்குக் கிளம்பணும்.
30 நாட்கள் ஆகட்டும்னு பார்க்கிறேன்.
ஆண்டாள் அப்பாவும் ரங்கனும் ராமேஸ்வரத்திலிருந்து
எல்லாத்தையும் பார்சல் பண்ணி குட்ஸ் வண்டில போட்டு விட்டு,இன்னோரு ரயிலில் வருகிறார்கள்.
இவருக்கு தன் கை சமையல் ஒத்துக் கொள்ளவில்லை.
அந்தப் பிள்ளைக்கும் ஒண்ணும் செய்யத் தெரியாது.
மாப்பிள்ளை காரிலியே எங்களைச் சேலத்திலிருந்து காரைக்குடிக்குக்
கொண்டு விடுவதாக இருக்கிறார்.
அதற்குள் ஆண்டாளுக்குக் கவலை. திரும்பிப் போகும்போது அவர் தனியாகப் போகணுமே.பாவம் மா என்கிறாள்.
இந்தப் பொண்கள் தான் எவ்வளவு மாறிப் போயிடறார்கள்.!!
அம்மா உன்னிடம் காரைக்குடிக்கு வரச் சொல்லி அழைக்கத்தான் இந்தக் கடிதம்
எழுதுகிறேன். நீ வந்தயானால் சின்னக் குழந்தையைக் குளிப்பாட்டக் கொள்ள
சவுகரியமா இருக்கும்.
நான் பத்திய சமையலையும் ,மத்த சமையலையும் பார்த்துப்பேன்.
காரைக்குடி எப்படிப்பட்ட இடம். சவுகரியம் எப்படி என்று தெரியவில்லை.
நீ வந்தால் எனக்குத் தைரியமாக இருக்கும்.
ஆண்டாளை இரண்டு மாதத்துக்கு மேல் இருக்கவேண்டாம்
சிம்மு சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவாராம்.
என்று அவள் மாமியார் சொல்லிவிட்டார்.
இந்தப் பொண்ணுக்கு உடம்பில சத்து போறாது.
இரண்டு குழந்தையை எப்படி சமாளிக்கும்.
என்ன செய்யலாம். அவா சொன்ன நாம் கேட்கத்தானே வேணும்.
எல்லாம் பகவத் சங்கல்பம்.
மே 17 மத்யானம் காரைக்குடியில் இருப்போம் என்று நினைக்கிறேன்.
அந்த நாளும் நன்றாகத்தான் இருக்கிறது.
நீ வரும் விஷயத்தை எழுது.
அம்பி,ராமசாமி,சீனி,கோபு எல்லோரையும் விசாரித்ததாகச் சொல்லவும்.
கோபுக்கு ஏதாவது புது ஜாதகம் வந்ததா.
உன்னிடம் நிறையப் பேசணும்மா.
அன்புடன்,
பாப்பா.
நாங்கள் காரைக்குடியில் இறங்கிய பிறகுதான் தெரியும், மே17 அவர்களது கல்யாணநாள் என்றும்,அன்று 25 வருடங்கள் பூர்த்தியாகிறது என்றும்.
அம்மா அப்பா உங்கள் தியாகத்துக்கு எல்லாம்
நான் என்ன பதில் செய்ய முடியும்.
இன்னும் உன்னைப் பற்றி நிறைய எழுதணும்..