|
புதுப்பிக்கப்பட்ட கோதண்டராமர் கோவில் தனுஷ்கோடி |
|
சங்குகள், சிப்பிகள் |
|
சந்நிதித் தெரு |
|
புதுச் சாலை |
|
தனுஷ்கோடி |
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
|
புதிதாக வந்திருக்கும் செம்பருத்தி. 1967 செப்டம்பர் மாதம் பெரியவனுக்குப் பத்துமாதங்கள் ஆகி இருந்தன. சிங்கத்துக்கு வருடாந்திர லீவுக்கான நேரம். பெற்றொர் அப்போது இராமேஸ்வரத்தில் இருந்தார்கள். அங்கே போய் வர இருவரும் முடிவெடுத்தோம். போகவர செலவு கம்பெனி ஏற்கும். சேலத்திலிருந்து திருச்சி. திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் மெயில். குழந்தைக்கான சாப்பாடு, ஹாமர்மாஸ்டர் ஃப்ளாஸ்க் இரண்டு என்று இரண்டு பெட்டி. அதிகாலையில் விழித்துக் கொண்டு பாம்பன் பாலத்துக்காக் காத்துக் கொண்டிருந்தேன். ரயில் நெருங்க நெருங்க மனம் முழுவதும் உற்சாகம். அம்மா வெகு விவரமாக ராமேஸ்வர வாழ்க்கையையும் ,அடிக்கும் காற்று,மழை,புடவை தீன்னும் மாடுகள், பர்வதவர்த்தினி அம்பாள் என்று ஒவ்வொரு கடிதத்திலும் எழுதி வந்தார். ஆடி மாதம் காற்றில் சிலசம்யம் வண்டிகள் பாம்பன் பாலத்தில் வரத்தடை உண்டு அதனால் அடுத்த மாதம் வரலாம் என்று யோசனை சொல்லி இருந்தார். அப்போது மதுரை ராமேஸ்வரம் சாலை கிடையாது . ழோசித்துக் கொண்டிருந்தபோதே தங்கச்சி மடம் வந்துவிட்டது. பிறகு பாம்பன் ஸ்டேஷன். அதைத் தாண்டியதும் பாலம். கண்ணுக்கெட்டிய வரை கடல். ரயில் பாலத்துக்கு மேல் மெதுவாக ஊறத்தொடங்கியது. இவருக்கோ ஒரே துடிப்பு. குழந்தை இதையெல்லாம் பார்க்க வேண்டும். ரேவ்,பாபுவை எடுத்துக் கொண்டு வா. கீழே அலை மோதுகிறது பார். அப்பா ஜீஸஸ் என்ன காத்து. எஞ்சாய் மா என்று கதவோரம் நின்று அழைத்துக் கொண்டிருந்தார். எனக்கோ ஜன்னல் வழி பார்த்த கடலே போதும் என்றாகிவிட்டது. பரபரப்பு இருந்தாலும் பயமும் இருந்தது. நீங்கள் முதலில் உள்ளே வாருங்கள் குழந்தை கூப்பிடுகிறான் என்று போய் இழுக்காத குறையாக அழைத்து வந்தேன்.
ஆஹா. உங்க அம்மாவைப் பாருடா குட்டிப்பையா இதுக்குப் போய் பயப் படுகிறாள். நான் இங்கே இருந்தே கடலில் டைவ் அடிப்பேன் தெரியுமா. என்றதும் எங்கே சொன்னதைச் செய்துவிடுவாரோ என்று குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டேன்:))நான் பெட்டிகளைச் சரியாக எடுத்து வைக்கிறேன் . நீங்கள் இவனை வைத்துக் கொள்ளுங்கள். அப்பா ஸ்டேஷனுக்கு வந்திருப்பார். நாம் ரெடியாக இருந்தால் இறங்கிவிடலாம். வீட்டுக்குப் போய்க் குளிக்கணும். கோவிலுக்குப் போகணும். அம்மா கிட்டப் பேசணும் என்று எதேதோ பேசிசமாளிக்கப் பார்த்தேன். நிமிர்ந்து பார்த்தால் ஆளைக் காணொம். என்னடா இந்த மனுஷனோட அவஸ்தையாப் போச்சு என்றபடி கம்பார்ட்மெண்ட் கதவுக்குப் பக்கத்தில் போனால் அப்பாவும் பிள்ளையும் ஹாய் ஹூய் என்று கடலை அழைத்தவண்ணம் இருந்தனர். இவர் கையில் பையன்.அவன் கையில் கரடி பொம்மை.
சரிதான் என்று நானும் அங்கேயே நின்று கொண்டேன். ஒரு வழியாகத் தொங்கு பாலம் கடந்து ராமேஸ்வரம் ஸ்டேஷனும் வந்தது. மதியம் 12 மணி இருக்கும். என் அப்பாவைப் பார்த்ததும் கையில் குழந்தை தாவி விட்டான். கூட வந்த ரங்கனுக்கோ உடம்பெல்லாம் மகிழ்ச்சி. அவனுக்கு என்னிடம் சொல்ல நூறு செய்தி. ராமேஸ்வரத்துக்கு வரும் வி ஐ பி களுக்கெல்லாம் அவன்தான் அஃபிஷியல் கைட். உங்களையும் எல்லா இடத்துக்கும் அழைத்துப் போகிறேன் என்று அவன் சொன்னதுதான் தாமதம். இவர் அவனை வளைத்துக் கொண்டார். கோவில் அக்கா போகட்டும் .நானும் நீயும் தனுஷ்கோடி போகலாம் சரியா என்றார். கிட்டத்தட்ட ஏழு மைல் நடக்கவேண்டும். அப்பா சரின்னு சொன்னால் போகலாம் என்றது அந்தப் பிள்ளை. அப்பா தயங்கினார். சீக்கிரம் காலையில் போகணும். கொஞ்ச நேரமானாலும் டைட்ஸ் வந்து வழி மூடி விடும். பிறகு தண்ணீர் வடிந்தபிறகே வரமுடியும் என்றார்.
சரி நாளைக்காலை நாம போறோம் என்னடா என்றதும் , ஓ யெஸ் அத்திம்பேர் நான் ரெடி என்று விட்டான் தம்பி. நான் ஒன்றும் மறுப்பு சொல்ல முயலவில்லை. சொன்னாலும் கேட்க மாட்டார். சரி நாளைக்குக் கவலை நாள் என்று முடிச்சுப் போட்டுக் கொண்டேன்.
அடுத்தநாள் காலை இட்லி சட்னி காலை உணவை முடித்துக் கொண்டு இருவரும் கிளம்பினார். அப்பா நூறு ஜாக்கிரதை சொல்லி அனுப்பினார். நான் பார்த்துக்கறேன் மாமா என்று இவர் சொல்ல மச்சினனும் மாப்பிள்ளையும் கிளம்பினார்கள். அப்பாவிடம் எவ்வளவு நேரம் ஆகும்பா என்றேன். 2 அல்லது மூன்றுமணிக்குள் வந்துவிடலாம்மா. அலைகள் உள்ளே வருவதற்குள் கிளம்பணும் அதுதான் முக்கியம் என்றார்.
இரண்டானது. மூன்று மணியும் ஆனது. காணோம். அப்பாவுக்கே கவலை வந்துவிட்டது. இவ்வளவு நேரம் ஆகாதே. என்ன ஆச்சு. என்றவர் என் முகத்தை ப் பார்த்ததும் ,ஒண்ணும் இல்லமா. வெறும் மணல்தான். வெய்யிலில் எங்கயாவது உட்கார்ந்து விட்டு வருவார்கள். அங்கே எல்லாம் ஒரே இடிபாடுகள் தான்.பார்க்க வேற ஒன்றும் கிடையாது. அப்ப ஏன் இன்னும் வரலைப்பா. அலையடிச்சால் ரங்கன் பயப்படுவானோ. என்ன் ஆச்சு தெரியலையே ....... இப்படிப் புலம்பிக்கொண்டிருந்தேன். சரியாக ஆறுமணிக்குத் தொப்பலாக நனைந்த ஆடைகளோடு நடந்தபடி இருவரும் வந்தனர். அம்மா என்னைக் கையமர்த்தினாள். குழந்தைக்கு முதலில் பால் கரைத்துக் கொடு நானவர்களுக்குக் காப்பியும் டிபனும் தரேன் என்ற படி அம்மா விரைந்தாள். ரங்கா உங்க அக்காவைப் பார்த்தால் தான் நடுங்குகிறதுடா என்றவரை முறைத்தேன்.
பொறுமையோடு காத்திருந்தபிறகு கதை வெளியே வந்தது. இருவரும் போய்ச் சேருவதற்கே நேரமாகிவிட்டதும். அர்ச்சகரும் கிளம்பிவிட்டாராம். சுத்துவட்டாரம் கொஞ்சம் நடக்க ஆரம்பித்ததுமே கடல் உள்ளே வர ஆரம்பித்துவிட்டதாம். இவர்கள் கோவில் வாசலில் நின்றால் அங்கேயும் வந்துவிட்டதாம். அப்பவே மணி ஒன்றாகி விட்டது. இருவருக்கும் பசி தாங்கவில்லை. சரி அலையோடு நடந்து வந்துவிடலாம் என்று கிளம்பி யிருக்கிறார்கள்.
கொஞ்ச தூரத்தில் அதுவும் முடியாமல் போகவெ இவர் நீந்திப் போய் விடலாம்டா என்று தம்பியிடம் சொல்ல அவன் தயங்கி இருக்கிறான். என் கையைப் பிடித்துக் கொள்ளுப்பா. தலையை மட்டும் தண்ணிக்கு மேல் வைத்துக்கொள் என்றிருக்கிறார். அவனும் தண்ணிர் வரும் வேகத்தில் சிங்கத்தின் கையை இறுகப் பிடித்துக் கொண்டுவிட்டானாம். ஒரு அரைமணி நேரத்துக்குப் பிறகு மீன் பிடி படகு ஒன்று கண்ணில் படவும் இவர் சத்தம் போட்டு அவர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் அருகில் வந்ததும் ராமேஸ்வரம் கடற்கரையில் விடமுடியுமா என்று ஆளுக்கு பத்து ரூபாய் என்று கொடுத்தாராம்.
இருவரும் படகு வரை போய் ஏணிபிடித்து உள்ளே சென்று மீன்களோடு மீன்களாக உட்கார்ந்து கொண்டார்களாம். பாவம் ஐய்யர் வீட்டுப் பிள்ளைங்க. உங்களுக்கு நாற்றமாக இருக்கும் என்றால் சிங்கம் தான் தாவர பட்சிணி மட்டும் இல்லை. மற்றதும் சாப்பிடுவேன் என்றதும் அவர்கள் சிரித்துவிட்டார்களாம். ஆண்டாள் நீ சொல்லவே இல்லையே அத்திம்பேர் இதெல்லாம் சாப்பிடுவார் என்று ,இது தம்பி. இப்ப விட்டுவிட்டேண்டா. உங்க அக்காவுக்கு அதெல்லாம் பிடிக்காது.
எப்படியோ பத்திரமாக வந்து சேர்ந்தார்கள்.
அந்தப் பாண்ட் சட்டையில் மீன் வாசனைப் போகத்தான் நாளாச்சு.
here is the link for dhanushkodi
http://en.wikipedia.org/wiki/Dhanushkodi |
26 comments:
ஹைய்யோ!!!!
இந்தப்பகுதி பயங்கர விறுவிறுப்பு!!!
ராமேஸ்வரம் படங்கள் எல்லாம் அள்ளிக்கிட்டுப்போகுதுப்பா.
ஒருக்கா போயே ஆகணும் போல இருக்கே:-)
ரொம்பவே சுவாரஸ்யமான சம்பவம். ரயிலிலிருந்து எங்கே குதித்து விடுவாரோ என்ற உங்கள் பயம், அதைச் சமாளிக்க நீங்கள் கையாண்ட பேச்சுகள், தனுஷ்கோடி அனுபவங்கள்... எல்லாமே ரசித்துப் படித்தேன் வல்லிம்மா. எவ்வளவு சுவாரஸ்யமான மனிதர்!
பாண்டில் மீன் வாசனை போகத்தான் ரொம்ப நாளாச்சு.... :))))
பாம்பன் பாலத்திலிருந்து அப்படியே டைவ் அடிச்சு நீச்சல் அடிப்பேன் எனும் தைரியம்....
அப்பப்பா.... படிக்கும்போதே எங்களுக்குள்ளும் அந்த சூழல். இப்போதெல்லாம் தனுஷ்கோடிக்கு ஜீப் மூலம் இங்கே செல்கிறார்கள். அப்போது நடைப்பயணம் தான் போல...
சம்பவம் ரொம்பவே சுவாரஸ்யம் அம்மா...
நாங்கள் தனுஷ்கோடி சென்றதுமே சொன்னார்கள்.. இன்று அமாவாசை கிரகணம் வேறு .. சீக்கிரம் கிளம்பிவிடுங்கள் என்று..
அந்த அலை ஓசை அமானுஷ்யமானது
இப்போது நினைத்தாலும் நடுக்கம் தான் ..
தனுஷ்கோடிக்கு நாங்களும் ஜீப் (?) மூலம் தான் போனோம். அது தண்ணியிலும் போகும், தரையிலும் போகும். :))) அதிசயமான அனுபவங்கள். படிக்கையிலேயே அவரோட தைரியம் பிரமிக்க வைக்கிறது. என்ன சொல்லறது! போங்க. நமக்குக் கொடுத்து வைக்கலை! :(
தொடர
பயங்கர சுவாரஸ்யம் தனுஷ்கோடி பதிவு. ராமேஸ்வரம் இது வரை போனதில்லை. நீங்கள் விவரித்ததைப் படிக்கும் போது பாம்பன் பாலத்தின் மேலே போவதற்காகவாவது போயக வேண்டும் என்று தோன்றுகிறது.
மிகவும் அழகாய் பதிவு செய்கிறீர்கள் உங்கள் அனுபவங்களை.
தொடருங்கள் மேடம்.....
துளசி மா.அதெல்லாம் கூகிள் படம். நாங்கள் போனபோது எடுத்த படங்கள் சரியாகப் பராமரிக்காத்தால் வீணாகப் போயிற்று. நீங்க இன்னும் போகலியா.மதுரை போகும்போது ஒரு ப்ளான் இருந்தது இல்லையா. இப்ப ரொம்ப சுலபம் நாங்உ மணி நேரத்தில் போய் விடலாம் தனுஷ்கோடி ஒரு ஆவி உலகம் மாதிரி எனக்குப் பட்டது.இப்போழுது தமிழர்கள் நிறைய அங்கே வசித்தாலும் அடிப்படை வசதிகள் இல்லை. ஆனாலும் வீட்டு வாசலில் அழகாகக் கோலம் இட்டு வெகு சுத்தமாக இருந்தது.
ஆமாம் ஸ்ரீராம்.ஃபுல் ஆஃப் லைஃப்னு சொல்லுவோம் இல்லையா அதுபோல. அவ்வளவு உயரமான பாலம்.அதிலிருந்து குதிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் நடக்காது. இருந்தாலும் என்னை கலாட்டா செய்வதில் மன்னர். நன்றி மா.
ஆமாம் வெங்கட் .இப்போது தனுஷ்கோடி டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிவிட்டது. அதனால் இருபது நிமிடங்களில் போய்விடலாம்.கடலோரமாகவே ரயில் தண்டவாளங்கள் கூடத் தெரிகின்றன. நாங்கள் 2003 இல் மீண்டும் ராமேஸ்வரம் போனோம். நீத்தார் கடன் கொடுக்க. 1967இல் முப்பது ரூபாய்க்கு வாங்கின பெரிய வெண்சங்கு இப்போது 3000 ரூபாய்.தனுஷ்கோடி கடல் அத்தனை உயிர்களையும் உள் வாங்கிக் கொண்டு இன்னும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது.
வரணும் தனபாலன். எழுதும்போது சுவாரஸ்யம் தான்.பாவம் இவ்வளவு தைரிய சாலியான் மனிதருக்கு என்னை மாதிரி ஒருத்தி மனைவியாகி இருக்கவேண்டாம்.>(
அன்பு ராஜராஜேஸ்வரி, அங்கே பார்த்தீர்களா ஒருபக்கம் கடல் அமைதியாக இருக்கும் இன்னோரு பக்கம் ஆக்ரோஷ்மாக இருக்கும். அங்கெ கடைசியாகப் போனபோது ஏதோ ஒரு சோகம்தான் எனக்கு உணர்வானது.ராமர்கோவிலையும் வடநாட்டார் ஒருவர் செப்பனிட்டிருக்கிறார்.
ஆமாம் கீதா.மனதில் உறுதி,வாக்கில் இனிமை நினைவு நல்லது. எல்லாம் உண்டு. பிடிவாதம் அதற்கு மேல. எல்லாவிஷயத்தையும் நல்லபடியாக எடுத்துச் சொன்னால் ஒத்துக் கொள்வார். சண்டையெல்லாம் பலிக்காது:))))
அன்பு ராஜலக்ஷ்மி, கட்டயம் போக வேண்டிய இடம். ஆடிமாதம்,அப்பசி கார்த்திகை மாதம் எல்லாம் ரயில் போவது அப்போது சிரமம். இரண்டுபக்கமும் கடல். அலைகள் மேலே ழும்பி ரயிலைத் தொட வருவது போல இருக்கும். இப்போதேல்லாம் நிறையக் கற்கள் போட்டு கடல் வேகம் குறைந்திருக்கிறது.நல்ல அனுபவம் .போய் வாருங்கள்.
வாவ்! சிலிர்க்குதுனு சொல்லணும். தனுஷ்கோடி பாலம் மூழ்கினது அப்போ தானா?
இப்போ போக முடியுமோ? படங்கள் சமீபமாகத் தோன்றுவதால் கேட்கிறேன்.
எனக்கு ராமேஸ்வரத்தில் தங்கிவிட ரொம்ப நாளாக ஒரு எண்ணம் உண்டு.
//நல்லபடியாக எடுத்துச் சொன்னால் ஒத்துக் கொள்வார். சண்டையெல்லாம் பலிக்காது:))))
முரணால்லே இருக்கு? தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் கேஸ் மாதிரியா? இதுல பாருங்க.. அடுத்தவங்க நம்ம ரேஞ்சுக்கு திங்க் பண்ண மாட்டாங்கனு ஒரு விபரீத தன்னம்பிக்கை. (ஹிஹி.. நிறைய விஷயத்துல நானும் அப்படித்தான்).
வரணும் துரை. புயல் அடித்தது 1964இல். அப்போதுதான் ரயிலோடு 100க்கு மேற்பட்ட பயணிகள் இறந்தனர். அப்போது ராமர் கோவிலும் பாதிக்கப் பட்டது. பிறகு புதுப்பிக்கப் பட்டது. அப்போது சாலை வழியும் கிடையாது. ராமர் கோவில் அர்ச்சகர் தினம் நடந்து போழ் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து விட்டு அதே கையோடு திரும்பிவிடுவார்.அங்குதான் இவர்கள் போய் வந்தார்கள்.
அருமையான பதிவு! பகிர்விற்கு நன்றி! தனுஷ்கோடிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது.
நன்றி சேஷாத்ரி.கட்டாயம் போய் வாருங்கள். திருப்புல்லாணியில் புல்லணை ராமனையும் சேவிக்கலாம்.
நன்றி சேஷாத்ரி.கட்டாயம் போய் வாருங்கள். திருப்புல்லாணியில் புல்லணை ராமனையும் சேவிக்கலாம்.
முயலுக்கு மூணு காலொ ஐஞ்சு காலோ ஸ்மூத்தா தான் போகிற வழியில் எல்லோரும் வரணும். நாலைந்து வார்த்தைகளில் என்னை சரின்னு சொல்ல வைத்துவிடுவார். அப்புறம் நான் முணுமுணுன்னு சொன்னாலும் கண்டுக்க மாட்டார். வக்கீல் பரம்பரை. வாதத்துக்குக் கேக்கணுமா. நீங்களும் அந்த மாதிரியா. பாவம் மிஸஸ் துரை.:))))) துரை அவர் எண்ணங்களே எனக்கு விசித்திரமா இருக்கும். இப்படித்தான் மினி கார் செய்ய ஆரம்பித்து ஓட்டவும் செய்தார். செங்கல்பட்டு வரை சென்று வந்தோம். டெல்லி போய் பேடண்ட் கொடுக்கும் போது சிக்கல். எங்கள் எல்லோருக்கும் ஏமாற்றாம். மனுஷன் அசரவில்லை. பார்ட் பார்டா கழட்டிக் காயலான் கடையில் போட்டுவிட்டார். குழந்தைகளைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.
சுவாரஸ்யமான நினைவுகள்.
Post a Comment