|
காரடையான் நோம்பும் நம் லக்ஷ்மியும் |
|
பங்குனி உத்திர நிலா. |
பெற்றோர் இட்ட பிக்ஷை அன்பு
இப்போது
பிள்ளைகள் இடும் பிக்ஷையாகிறது.
.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
கதை நடக்கும் இடம் நெல்லை.
காலம் வருடம்1944.
திருமணம் முடிந்து ஒருவருடம் கழித்து பூப்பெய்தின பிறகுஅம்மாவும்,
அவரைப் புக்ககத்தில் கொண்டுவிடஅவரது தந்தையும்
சீர்வரிசைகளோடு நெல்லைக்கு வந்தார்கள்.
அப்போது அப்பாவின் தந்தை நெல்லையில் தபால் அலுவலக
போஸ்ட்மாஸ்டராக இருந்தார். இரண்டு வகைப்பாட்டிகளின் தங்கைகளும்
அங்கே பக்கத்தில் கல்லிடைக் குறிச்சியிலும், காருகுறிச்சியிலும் இருந்தார்கள்.
திருநெல்வேலியில் வண்ணாரப் பேட்டை என்னும் இடம்.
அதில் ஒரு ஸ்டோர் என்று சொல்லப் படும் முதலியார் ஸ்டோர் வரிசை
வீடுகளில் ஒன்றில்
தாத்தா தன் பிள்ளைகளோடு குடியிருந்தார்.
முதல் மருமகள் வரும் நேரம் தனக்கு வெகு நல்ல பதவி உயர்வு கிடைத்ததாக
எங்களிடம் மிகவும் பிரியத்துடன் சொல்வார்.
அம்மாவுக்கு 15 வயது.அப்பாவுக்கு தபால் அலுவகத்தில் குமாஸ்தாவாக
வேலை கிடைத்துக் கயத்தாறு என்கிற கிராமத்துக்கு மாற்றலாகி இருந்தது.
அம்மாவின் அப்பாவுக்கு(மெட்ராஸ் தாத்தா) அம்மாவை விட்டுச் செல்ல ஏகத்தயக்கம். பூப்போல
மென்மையான குணம் என்பதால் அம்மாவுக்குப் புஷ்பா என்று கூட ஒரு பெயர்.
அது அவர் படித்த
ப்ரசண்டேஷன் கிறித்தவப்பள்ளியில் அவருக்கு வைக்கப் பட்ட பெயர்.
(பின்ன பாப்பா என்கிற பெயரோடு பள்ளிக்குப் போனால் ?):0)
செல்லமகளை அவ்வப்போது வந்து பார்த்துப் போகும்படி தன்
மைத்துனரான வரதாச்சாரியிடம் சொல்லி இருந்தார்.
அவரும் தன் மகனை இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை
வண்ணாரப் பேட்டைக்கு அனுப்பி அக்காவுக்குப் பூ பழங்கள்
கொண்டுபோய்க் கொடுத்து
அக்காவுடன் அரைமணிநேரம் பேச முயற்சிப்பார்.
அந்த மாதிரி ஒரு தடவை போகும்போதுதான் அக்கா கர்ப்பிணியாக
இருந்தது தெரிய வந்தது.
மதிய வேளையில் தம்பி ராகவன் வருவான் என்று தெரியாத, புஷ்பா என்கிற பாப்பா ,
பின்கட்டில் கிணற்றில் தண்ணீர் இறைத்தவண்ணம் இருந்திருக்கிறார்.
அக்கா பக்கத்தில் போனதும்தான் தம்பிக்கு அக்காவின்
கைகளின் சிவப்புக் கண்ணில் பட்டது.
''சேச்சிப் பாப்பா ஏன் உன்கை இப்படிச் சிவந்திருக்கு, என்ற சொல்லியபடியே
அக்காவின் கால்களையும் பார்த்திருக்கிறார்.
அவையும் வெய்யிலில் நின்று பித்தவெடிப்பால் பிளந்து சிவப்பாக இருந்திருக்கின்றன.
அக்கா மேல் மிகவும் பாசம் கொண்ட தம்பி. என்ன செய்வார் சிறுவயது 13 வருடங்களான
பள்ளிப் பையன்.
அக்காவை உள்ளே கொண்டுவந்து உட்காரச் சொல்லிவிட்டு, மிச்சம் இருக்கும்
அண்டா தவலைகளை நிரப்பி உள்ளே கொண்டுவந்து வைத்திருக்கிறார்.
சென்னையில் கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் அப்போது நிறையக் கிடைக்கும் .
அதனால் வீடுகளில் குளிக்கும் அறையிலும், சமையல் அறையிலும்
இரண்டு இணைப்புகள் இருப்பதை நானும் பார்த்திருக்கிறேன்.
அப்படி வளர்ந்த பெண்ணுக்குப் புத்தம்புது தாம்புக் கயிறைக் கையாளத் தெரியவில்லை.
உங்கள் வீட்டில் வேலைக்கு ஆள்வைத்துக் கொள்ளவில்லையா என்று ஆரம்பித்த தம்பியை
ஆசுவாசப் படுத்த முனைந்த அக்காவைப் பார்த்து அந்தப் பிள்ளை அழ ஆரம்பித்துவிட்டது.
புறா மாதிரி உன் கால்கள் இருக்குமே அக்கா,இப்படி ஆகியிருக்கிறதே.''என்று விசும்பியபடியே
ஓடிவிட்ட தம்பியைப் பிந்நாட்களில் அம்மா,
எங்களிடம் காட்டி''அன்னிக்கு ஓடினவந்தான் ,இன்னிக்கு உன்
கல்யாண விஷயம் கேட்டுவந்திருக்கிறான்'' என்று என்னிடம் சொல்லிச் சிரிப்பார்.
அந்த மாமா இப்போது இல்லை. அவர் எழுதின கடிதம் சென்னைக்கு அம்பாய்ப் பாய்ந்து
தாத்தாவே நெல்லைக்கு வந்துவிட்டார்.
கையோடு பூச்சூட்டல்,ஸ்ரீமந்தம் எல்லாம் செய்து அழைத்துச் சென்று விட்டார் பெண்ணை.
எங்கள் மதுரைப் பாட்டியும் இந்த அதிசயத்தை என்னிடம் சொல்லுவார்.
உங்க மெட்ராஸ் தாத்தாவுக்குப் பெண்கள் கடுமையான வேலைகள் செய்வது
பிடிக்காது போல்ருக்கு.
நாங்க எல்லாம் இறைக்காத தண்ணீரா, தேய்க்காத பாத்திரமா என்று
கன்னத்தில் கைவைத்துக் கொண்டு என்னிடத்தில் சொல்லுவார்.
அவர் நல்ல உழைப்பாளி. அதே போல எல்லோரும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார் .
அவ்வளவுதான்.:)
*8******************
6:32 AM 9/4/1948 லிருந்து 1954 வரை
*****************************************
திருமணமாகி நாலு வருடங்கள் கழித்துப் பிறந்த பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு
ஜயலக்ஷ்மியாகப் பேர் சூட்டப் பட்ட ஜயா ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து சேர்ந்தாள்.
இரண்டு மச்சினர்கள் .மாமனார்மாமியார்,வேலைக்குச் செல்லும் கணவன்
எல்லோரையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தானாக வந்து சேர்ந்தது.
நெல்லையில் இருந்த குடித்தனத்தைக் காலி செய்துவிட்டு,
புதுப் பேத்தியுடன் இருக்க பாட்டி தாத்தா இங்கு வந்த போது மச்சினர்கள்
இருவருக்கும் மதுரையில் இருந்த டிவிஎஸ் கம்பெனியில் வேலை கிடைத்தது.
அப்போதுதான் தங்கள் சாதுவான மகன் நாராயணன் தன் பெண்ணைப் பார்ப்பதற்காக
மதியம் வீட்டுக்குச் சாப்பிட வரும் அழகையும், தூளியில் குழந்தை அழுதால்
ஆட்டிவிட்டுப் போவதையும் பார்த்து வியந்தார்கள்.
''பார்த்தியோ இந்த நாராயணனை!!
என்ன ஆசை என்ன ஆசை!! என் வீட்டுக்காரரோ உன் வீட்டுக்காரரோ , இந்த மாதிரி வேலை செய்திருப்பார்களோ !!
என்று மதுரைப் பாட்டி தன் தங்கையிடம் பேசுவதைக் கேட்ட அம்மாவுக்கு ரோசமாக இருந்ததாம்:)
ஏன் என்று நமக்குத் தோன்றும். அம்மாவுக்கு ஏன் ரோஷம் வரணும்.
அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்த வேளைகளில் மருமகள்களின் வேலைகள் சமையலறை,
அதை விட்டால் பின்னால் கிணற்றங்கரை.
தம்பதிகளுக்குத் தனி அறை கிடைப்பதே அதிசயம்.
அதில் குழந்தைக்குத் தூளி அமைத்து அகத்துக்காரரும் கொஞ்சுவது அதிசயத்திலும்
அதிசயம். தன் கணவர் குழந்தையைக் கொஞ்சுவது ஒரு சந்தோஷம். அதை மற்றவர்கள் கேலிக்குரிய
விஷயமாக எடுத்துக் கொண்டது அவளுக்கு வருத்தமாகிவிட்டது. அவ்வளவுதான்.
அடுத்த நாள் குளத்தில் குளிக்கப் போகும்போது இந்தவிஷயம் துணிகளோடு அலசப்பட்டது:)
குழந்தைக்குத் திருவேங்கட வல்லி என்ற பெயரும், வில்லிபுத்தூரில் இருந்த போது பிறந்ததால்
ஆண்டாள் என்றும் நாமகரணம் செய்து மகிழ்ந்தார்கள்.
குழந்தைக்கு ஒரு வயது பூர்த்தியானதும் ,
தாத்தா பாட்டி இருவரும் மதுரையில் பழங்கானத்தத்தில் வீடெடுத்து
அங்கு போய் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்
இரண்டாவது பிள்ளைக்குப் பெண்பேசி முடித்தார்கள்.
அந்த அழகான பெண்ணும் நாங்குநேரி எனும் இடத்தைச் சேர்ந்தவர் தான்.
திருமணத்துக்குப் போய்வந்த ஒரு மாதத்தில் தம்பிக்குக்
கோயம்பத்தூருக்கு வேலை மாற்றம் கிடைத்தது.
மனைவியை அழைத்துக் கொண்டு அண்ணா மன்னியிடம்
ஆசிகள் வாங்கி இருவரும் கிளம்பினர்.
அண்ணா தம்பி இருவருக்கும் சில மாத வித்தியாசங்களில்
குழந்தைகள் பிறந்தன.
அண்ணா நாராயணனுக்கு முரளிதரனும் ,
தம்பி சுந்தரராஜனுக்குச் சந்திராவும் பிறந்தார்கள்.
மெட்ராஸில் தாத்தாவுக்குத் திடீரென்று உடல் நலம் கெட்டது.
குழந்தை முரளிதரன் பிறக்கும் முன்பே அவர் மறைந்தார்.
.
குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு 17 வயது மாமாவின் பொறுப்பில் வந்தது.
இப்பொழுது புதிதாகப் பிறந்த குழந்தையையும் , முதல் குழந்தை ஆண்டாளையும்
ஜயாவையும் சீர்செனத்தியோடு மாமா, மதுரைக்கு அவர்களை
அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்..
தங்க விக்கிரகம் போல என்ன அழகு குழந்தை என்று
மதுரைத் தாத்தாவிற்கு இந்தக் குழந்தையின் மேல் அவ்வளவு பிரியம்.
நினைத்தால் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குக் குழந்தைகளைப் பார்க்க வந்துவிடுவார்கள்.
கை நிறைய மதுரை மல்லி, அரக்கில் கட்டம் போட்ட ஒன்பது கஜம் பட்டுப் புடவை,
பேத்திக்கு புதிதாக வந்திருந்த ரப்பர் வாத்து, பேரனுக்குத் தொட்டில் என்று
ஒரே பரிசுகள் தான்.
முரளிதரனுக்கும் இரண்டு வயதானது.
அக்கா பக்கத்தில் இருக்கும் ஒரு சின்னப் பள்ளிக்கூடத்துக்குப் போவதைப்
பார்த்துத் தானும் போக வேண்டும் என்று அடம் பிடிப்பான்.
அக்காவுக்குப் பள்ளிக்குப் போவதைவிட பக்கத்தில் கோவிலில் என்ன நடக்கிறது.
எந்தக் கடையில் மிக்சர் நன்றாகச் செய்வார்கள், , பால்கோவா கடை வாசனை
என்று ரசித்து நடந்து செல்வாள்.
பள்ளியில் தான் ஒன்றும்
நடக்கவில்லையே என்று தோள் பையை(உள்ளே ஒரு ஸ்லேட்டும் குச்சியும்) எடுத்துக் கொண்டு
நட்டநடு மதியத்தில் வீட்டுத் திண்ணைக்குத் தோழியரோடு வந்து விடுவாள்.
அம்மா உள்ளே தம்பியோடு தூங்குவது ஜன்னல் வழியே தெரியும்.
பக்கத்துவீட்டு அம்மணியைப் பார்த்தால் கேட்பது கிடைக்கும் என்று ''அம்மணி'' என்றழைத்தபடி
அவர்கள் வீட்டுக்குப் போய்விடுவாள்.
அம்மணி வீட்டில் நல்ல பெரிய ஊஞ்சல் ஒன்று இருக்கும்.
அதில் உட்கார்ந்து எப்பவும் பாடம் படித்துக் கொண்டிருக்கும் அண்ணா சுந்தரம் இல்லாத
சமயத்தில் , குட்டிக்காலாய் இருந்தாலும் ஏறி உட்கார்ந்து கொண்டுவிடுவாள்.
அம்மணிக்கோ பெண் குழந்தை இல்லாத குறை.
ஒரு கிண்ணத்தில் பால் கோவாவும், வேக வைத்த வேர்க்கடலையும் கொடுத்து
குட்டி ஆண்டாளைப் பாடச் சொல்லுவாள்.
அம்மணிக்குச் சினிமாப் பைத்தியம் ஜாஸ்தி. இரவு நேரத்தில் ஆண்டாளைத் துணைக்கு அழைத்துக்
கொண்டு பாதாள பைரவி, வேதாள உலகம், பராசக்தி என்று அழைத்துச் சென்று விடுவாள்.
இரண்டு வீட்டுக்கும் நடுவில் ஒரு கதவு இருக்கும்.
அம்மாவின் கவனம் தம்பி மேல் இருக்கும்போது அந்தக் கதவைத் திறந்துகொண்டு
பக்கத்துவீட்டுக்குப் போகும் பெண்ணைப் பார்த்து ஜயா அம்மாவுக்குக் கோபம் வரும்.
அதுவும் மதிய நேரத்தில் 'பெண்ணின் கணீர் குரலில்'' உலகே மாயம், வாழ்வே மாயம் ''
பாடல் கேட்டதும்அம்மாதீர்மானித்துவிட்டாள்.;)
மூன்றாவது குழந்தை உருவாகிக் கொண்டிருந்த நேரம்.,
உடல் மிகவும் பலவீனமாக இருந்ததால்
மெட்ராஸ் பாட்டிக்குக் கடிதம் அனுப்பினாள்.
முதல் வகுப்பு முடித்திருந்த ஆண்டாள், தனக்கு மிகவும் செல்லமான பிடித்த சீனிம்மாவோடு(மெட்ராஸ் பாட்டி)
சந்தோஷமாகச் சென்னை வந்து புரசவாக்கம் வெள்ளாளத்தெரு
கார்ப்பரேஷன் பள்ளியில் சேர்க்கப் பட்டாள்.
பாட்டியோடு கோவில். மாமாக்களோடு மிருகக்காட்சி சாலை, சர்க்கஸ் என்று படு சந்தோஷமாகக் கழிந்தது.
மூன்றாவது பையனின் பிரசவத்துக்கு அம்மாவும் வந்தாள்.
அப்பொழுது இருந்த புரசவாக்கம் நெரிசல் இல்லாத வீதிகளும், கை ரிக்க்ஷாக்களும்,
எந்த இடத்துக்குப் போனாலும் இரண்டு அணாவுக்கு மேல் கேட்காத முனுசாமியும்,
நேரு பார்க்கும், பஸ் ஏறிப்போனால் புதையப் புதைய மணல் நிறைந்த மெரினா பீச்சும்,
மியூசியமும் ஒரு ஐந்து வயதுக் குழந்தைக்குச் சொர்க்க பூமியாகத் தெரிந்திருக்க வேண்டும்.
நீண்ட நாட்கள், அம்மா பெண்ணை சென்னையில் விடவில்லை.
புதிதாகப் பிறந்த
ரங்கநாதன் என்று நாமம் சூட்டப்பட்ட கொழுக் மொழுக் குழந்தையோடு,
ஜயலக்ஷ்மி நாராயணனின் வாழ்க்கை மீண்டும் கணவன் இல்லத்தில் ஆரம்பித்தது.
இந்த வரலாறு என் அம்மாவின் வாழ்வில் நடந்த சில நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
அம்மாவோடு நடத்தின சம்பாஷணைகளில் நான் கிரஹித்துக் கொண்டது.
திருமங்கலத்தில் 1954இல் மீண்டும் இல்லறம் தொடர்ந்தது.
அப்பாவுக்கு வேலை மாற்றல் ஆகித் திருமங்கலம் டவுனுக்கு(மதுரை அருகில்) வந்திருந்தார்.
ஒரு அழகான குடித்தனம் ஆரம்பித்தது.
டிஸ்கி,
நண்பர்களே இந்த பழைய காலக் கதையைத்
தொடரக் கொஞ்ச காலம் ஆகும்..
எப்படி இருக்கிறது என்ற உங்கள் மதிப்பீடுகளைப் பொறுத்தே
அது அமையும்.
--