Blog Archive

Monday, March 28, 2011

1954 லிருந்து 1960 வரை தொடர்கிறது வாழ்க்கை.திருமங்கலம்

செம்பருத்தி  அப்பாவின் கைவளம்
நித்யமல்லி  அம்மாவுக்கு
நந்தியாவட்டைப் பூ  கோவிலுக்கு


6:17 AM 3/28/2011
வரலாறு  1954 லிருந்து 1960 வரை திருமங்கலம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
  வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்  இந்தக்கதையை எழுதலாம் என்ற யோசனையை
எனக்கு  உணர்த்திய,
வல்லமை இதழ் ஆசிரியர்

திரு அண்ணா கண்ணனுக்கு என் நன்றிகள் பல.
************************************************************
1954இல்  திருமங்கலம் இப்பொழுது போலப் பெருமைகள் எல்லாம் (!!)
இல்லாமல் ஒரு சாதாரணமான டவுன் மாதிரியும் இல்லாமல் கிராமம்
ஆகவும் இல்லாமல்  ஒரு தாலுகா ஆஃபீஸ், ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரே ஒரு தபால் அலுவலகம், ஒரு பி.டபிள்.யு.டி
ஆபீஸ்,
நகரத்துக்குப் பிரதானமாக ஒரு சொக்கநாதர் மீனாட்சி கோவில்,
ஆனந்தா தியேட்டர், ஒரு கஸ்தூரிபாகாந்தி ஆதாரப் பள்ளி, ஒரு பெண்களுக்கான
ஹைஸ்கூல்,
ஆண்களுக்கான  பி.கே.என் பள்ளி.
ஒரு தரமான ஆனந்தபவன் ஹோட்டல், கோவிலை ஒட்டி ஒரு சத்திரம்,
அதைத் தாண்டிப் போனால் ஒரு ஆறு.
 அப்போது அது பழையாறு என்று சொல்வார்கள்.
வைகை ஆற்றின் கிளை என்று நினைக்கிறேன். அதில் நாங்கள்
 நடந்தே கடப்போம். அம்மாவுக்குத் தெரியாமல் தான்:)
ஒரு அரசு மேற்பார்வையில் இயங்கும் நல்ல ஆஸ்பத்திரி.
 என்னுடைய பல காயங்களுக்கு  மருந்து போட்டுக் குணப்படுத்திய
 மருத்துவர் அம்மாவும்,கம்பவுண்டரும் அங்கே இருந்தார்கள்.

ஸ்ரீவில்லிப் புத்தூரிலிருந்து அப்பாவுக்குத் திருமங்கலத்துக்கு மாற்றியது,
அம்மாவுக்குத்தான் மிகவும் சந்தோஷம்.
நீண்ட நெடும் பயணமாகச் சென்னைக்கு எங்களை அழைத்துப் போவது அவருக்குக் கொஞ்சம் சிரமம்
என்பதற்காக இல்லை.
சென்னைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் வந்துவிட்டோம் என்று சொல்வார்.

எங்களை உற்சாகப் படுத்தவோ ,நோயுற்ற நாட்களில்,கூடவே உட்கார்ந்து நேரங்களில்
தலைவலியோ,உடம்பு வலியோ அம்மாவின் வார்த்தைகளில் ஓடிவிடும்.
இதோ முழுப்பரீட்சை வந்துடும். அப்புறம் என்ன பண்ணனும்???
என்று ஒரு கேள்வி வைப்பார்.
மெட்ராஸ் போணும்'' என்று ஒரே கோரஸாக நாங்கள் பதில் சொல்ல.

ஓ!! அப்படின்னால் இந்த மருந்தெல்லாம் சீக்கிரம் சாப்பிட்டு மூணுநாளில்
சரியாகப் போகணும் சரியா' என்றபடி கசப்பு மிக்ஸரையும்
 விழுங்கவைத்துவிடுவார்,

திருமங்கலம் வீடு அமைந்தது ஒரு அதிர்ஷ்டம். வெகு அழகான வீடு.
 ''அங்குவிலாஸ்'' என்று எழுதப் பட்டிருக்கும் கட்டிடம் இன்னும் அங்கேதான் இருக்கிறது.
 அந்தப் புகையிலைக் கம்பெனியின் கோடவுன் அங்கே இயங்கி வந்தது.

எங்களுக்குப் பிடித்தது அந்த வீட்டின் பெரிய முற்றம் தான். வாயில் கதவுக்கும்
 வீட்டின் கதவுக்கும் நடுவில் நீண்ட பாதையாக சிமெண்ட் தளத்தில்
போடப்பட்டிருந்த அந்த முற்றமும் அதில் நிழலுக்கு  அப்பா போடச்சொன்ன பந்தலும்
மதுரையிலிருந்து வரும் தாத்தா பாட்டிக்கு
மிகவும் பிடிக்கும். ஒரு ஈஸிச்சேரில் தாத்தா படுத்துக் கொள்வார்.
பாட்டி அந்தப் பந்தலின் குளிர்ச்சியில் இரவு வெக்கையைத் தாக்குப் பிடிக்க
 ஒரு பனைவிசிறியைக் கையில் பிடித்துப் பாயில் படுத்துக் கொள்வார்,.
மாமியார் மாமனாருக்கு வேண்டும் உபசாரங்களைச் செய்துவிட்டு அம்மா
சமையல் அறையைச் சுத்தம் செய்வார்.

இரவு எட்டுமணிக்கெல்லாம் பெரியதம்பி படுத்துக் கொள்வான் தூங்கியும் விடுவான்.
 சின்னவனுக்கு அப்பாவிடம்
 கதை கேட்காமல் தூங்க முடியாது.
அப்பாவின் பனியனை ஒரு கையில்  பிடித்துக் கொண்டு, ஒரு விரலைச் சூப்பியபடி
ராமாயண மஹாபாரதைக் கதைகளையும்,
பவான்ஸ் ஜர்னல் என்னும் ஆங்கிலப் பத்திரிகையின் வழி தான்
அறிந்து கொள்ளும் முற்றும் புதிதான கதைகளை அப்பா சுவை படச் சொல்லுவார்.
தாத்தவும் நாராயணா குழந்தைகளுக்கு எப்பவும் நல்ல சத்துள்ள
ஆகாரம் இந்த மாதிரி நீதிக் கதைகள் தான்.
வளர்ந்த பிறகு தப்பு செய்யக் கூடத் தோன்றாது'' என்று சொல்வார்.
முற்றத்துக் கீற்றுப் பந்தலின் ஓட்டை வழியாக
நிலா தெரிந்து கொண்டே இருக்கும்.

நிலாவின் இதமும் அப்பாவின் குரலும் தூக்காத்துக்குத் தாலாட்டு.
அதற்குப் பிறகு அப்பா அம்மாஅவுக்கு உதவியாச் சிறு சிறு வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு
ஒன்பது மணி ஆங்கிலச் செய்தியில் மெல்வின் டிமெல்லொ அன்றைய நிலவரத்தைச் சொல்ல
அத்துடன் அன்றையப் பொழுது முடியும்.
திருமங்கலத்தில் இருக்கும் போது அம்மாவையே நடுங்க வைத்த
இரு நிகழ்ச்சிகள்.
ஒரு கட்டுவிரியன் பாம்பின் வருகையும்,
திருடன் கிணற்றங்கரையில் வைத்திருந்த வெண்கல  பெரிய
 அரிக்கன் சட்டியையும், வெந்நீர்ப்பானையையும்
எடுத்துச் சென்றதுதான்.
எங்கள் வீட்டுக்குப் பின்னால் ஒரு எல்லைச் சாமிகள் கோவில் இருந்தது. அதில் சாதாரணமாக
மாலை நான்கு மணியிலிருந்து உறுமி மேளச் சத்தமும் ,உடுக்கைச் சத்தமும்
 மெதுவாக ஆரம்பித்து இரவு பன்னிரண்டு மணிஅளவில் உச்ச கட்டத்தை அடையும்.
இது வருடத்துக்கு இரண்டு மூன்று முறை நடப்பது வழக்கம்.

அந்தக் கோவில் சுவரிலிறுந்து எட்டிப்பார்க்கும் கொடுக்காப்புளிப் பழம் நன்றாக
இருக்கும்.
ஒரு மதிய வேளையில் பக்கத்துவீட்டுக்குப் போககொல்லைப் புறக் கதவின்
அருகே வந்த போது ஏதோ வித்தியாசமான டிசைனில் அச்சுப்
 பதித்தாற்போல் பதிந்திருந்த  பழுப்பும் கறுப்பான அந்த
 ஜந்துவைப் பார்த்ததும் பயத்தில் கலவரப் பட்டவர்,
உடனே சுதாரித்துக் கொண்டு மாடிப் படிகள் வழியாக மொட்டை மாடியில் ஏறி
 அடுத்த வீட்டைப் பார்த்து அழைத்திருக்கிறார்,.
கூடவே அங்கு விலாஸ்  லாரிப் பணியாளர்களையும் அழைக்க
அவர்கள் அந்தப் பாம்பை அடித்திருக்கிறார்கள்.
நாங்கள் வரும் வரை அம்மா சின்னத்தம்பியை வைத்துக் கொண்டு
 வீட்டிற்கு உள்ளயே இருந்தார்கள்.
எங்களையும் வெளியெ விடவில்லை.
அப்பா வந்ததும் முதல் வேலையாக  வீட்டின் சமையலறைக் கிணற்றுக்கு மேலே
 நெருக்கமான வலை போடச் சொன்னதுதான்.
ஒரே கிணற்றுக்கு இரண்டு பக்கம் இறைக்கும் வசதி இருந்தது.
கிணற்றின் ஒரு பக்கம் சமையல் அறையும் ,பாத்திரம் தேய்க்கும் முற்றமும்.
மறுபக்கம் தோய்க்கும் கல்,  தண்ணீர்த்தொட்டி,அதனருகே  வெளியே
 தோட்டத்துக்கான பாத்திகள் கட்டின வழித்தடங்கள்.
அப்போதெல்லாம் ட்ரை லெட்ரின் தான். அதற்குத் தனியாக ஒரு அம்மா  வருவார்.
 அவரிடம் அம்மா அரிசி கழுவிய நீரையும் கொஞ்சம் வடித்த சாதத்தையும் போட்டு
 அவருடைய பானையில்  கொடுப்பார். அடுத்த நாள் பசும் சாணம்
வாசலில் ரெடியாக உட்கார்ந்திருக்கும் .பண்ட மாற்று.

நாகம்மா என்பவர் வந்து எல்லா உதவியும் செய்துவிட்டுப் போவார்.
உமி வேண்டுமா இதோ என்று ஒரு ஓட்டம்.
வெந்நீர்  அடுப்புக்கு  வரட்டி வேண்டுமா அதற்கும் ஓட்டம்.
அவர் ஓடினால் கூடவே நானும் ஓடுவேன்.

அம்மா  உமியைக் குமித்துக் கற்பூரம் ஏற்றி உள்ளே வைத்து
அது உமிக்கரி ஆகும் வரை நானும் கூட இருந்து பார்த்துக் கொள்வேன்.
ஒவ்வொரு மாதத்துக்கும் அதுதான் பல்பொடி. அம்மா அதில் உப்பும் சேர்ப்பார்.
மணக்க மணக்க  வாயில் போட்டுப் பற்களைத் தேய்த்தால் அந்த சுகானுபவமே தனி.


இன்னும் வரும்:0)












எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

26 comments:

துளசி கோபால் said...

திருமங்கலம் அவ்வளவா எனக்கு ஞாபகம் இல்லைப்பா. உங்க பதிவு படிச்சதும்தான் இவ்வளவெல்லாம் இருந்துருக்கான்னு ............

கூடவே தொடர்ந்து வருகிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

எப்படித்தான் இவ்வளவையும் ஞாபகம் வெச்சிருக்கீங்களோ.. உமிக்கரி தயாராகும்போது வரும் வாசனை அலாதியா இருக்கும் :-))

நானானி said...

வெயிலுக்குப் போடப்பட்ட பந்தலும்,
ஈசிச்சேரில் தாத்தாவும், பனையோலை விசிறியோடு பாட்டியும்...ஆஹா...நானும் அவர்களோடு கூடவே நானும் பந்தலடியில் ஒண்டிக் கொள்ளலாம் போல குளுகுளுன்னு இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

அப்ப உங்களுக்கு நான்கு வயது இருந்தால் அதிசயம்,
எப்படி நினைவு இருக்கும்பா.
பரவாயில்லை எனக்கு நினைவு இருக்கிறவரை நான் எழுதறேன்.:)

Jayashree said...

உமிக்கரி உப்பு !! அதே அதே . அழுத்தி தேச்சா க்லிங்க் க்லிங்க்னு பீங்கான் மாதிரி சத்தம் பல்லுல வரும்:)) பளிச்சுன்னு ஆயிடும்.!! கைல பொடி வச்சுண்டு முதல்ல பெரிசா மீசை வரைஞ்சப்பறம் தான் பல் தேய். உசிலம்பட்டி பள்ள பட்டி போற வழில ஒரு கோவில் அம்மன் இருக்கும் இல்லை ? ம்.. எத்தனையொ வருஷம் ஆச்சு :))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சாரல்,
எனக்கு மறந்து கூடப் போய்விட்டது.
வாய்க்கு நல்ல மணம். என் பத்துவயது வரை உமிக்கரிதான்.:0)

வல்லிசிம்ஹன் said...

அங்கேயிருந்த திண்ணைகளை மறந்துவிட்டேன் நானானி.
எத்தனை தாயக் கட்டமும் பல்லாங்குழிகளும் விளையாடி இருப்போமோ.
இடம் பெரியதாக இருந்ததால் என் தோழிகள் அனைவரும் இங்கயே கூடுவோம்.எல்.ஓ.என்.டி.ஓ.என் முதற்கொண்டு:)

வல்லிசிம்ஹன் said...

அட ஜயஷ்ரீக்கு எப்படி இந்த ஊரெல்லாம் தெரியும்!நாங்க இருந்த தெருவின் முனையில் படத்திலிருக்கும் மீனாட்சி அம்மன் கோவில். அந்த ரோடும் உசிலம்பட்டி மதுரை போகிற ரோடுதான்.
உசிலம்பட்டி வழி டி.கல்லுப்பட்டி என்று பஸ்ஸில் போட்டு இருக்கும்.
உமிக்கிரி எஃபெக்ட் நீங்க சொல்கிற மாதிரிதான். கிறீச் சத்தம் வருகிறவரைத் தேய்க்கணும் என்பது அப்பா போடும் உத்தரவு;0)அதற்குப் பிறகு பயோரியா பல் பொடி, கால்கேட் பேஸ்ட்:)

மாதேவி said...

பழைய திருமங்கலத்தின் அன்றைய பொழுதுகளைக் கண்டு கொண்டோம்.

அப்பாதுரை said...

அண்ணா நகர் கிட்டே இருக்கும் திருமங்கலமா? உமிக்கரி பல்பொடி என் நண்பன் வீட்டில் எண்பதுகளிலும் உபயோகித்தார்கள்.

வல்லிசிம்ஹன் said...

பழைய திருமங்கலத்துக்கு, இந்தத் தேர்தல் விவகாரப் பெயர் எல்லாம் கிடையாது. முழுமையான அழகான ஊராக இருந்தது.
நன்றி மாதேவி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஒரு ஈஸிச்சேரில் தாத்தா படுத்துக் கொள்வார்//
காட்சியை கண் முன் கொண்டு வரும் எழுத்து...சூப்பர்...

//முற்றத்துக் கீற்றுப் பந்தலின் ஓட்டை வழியாக நிலா தெரிந்து கொண்டே இருக்கும்//
நேரில் பாக்கணும்னு ஆசை வருது போங்க..:)

தொடர்ந்து வருகிறேன்... நன்றிங்க வல்லிம்மா...

வல்லிசிம்ஹன் said...

துரை,
நான் எழுதினது வைகை நதி பக்கத்தில இருக்கிற திருமங்கலம் பற்றி. மதுரையிலிருந்து பனிரண்டாவது மைலில் இருக்கிறது மா.

வல்லிசிம்ஹன் said...

புவனா, உண்மைதான் அந்த மாதிரி ஒரு பாதுகாப்பு கிடைப்பது அரிது.

பாட்டிக்கு நான் விசிறி விடுவேன். பொறுமையாக இருந்து நான் தூங்கினபிறகு கையிலிருந்து எடுத்து வைத்துவிட்டுத் தூங்குவார்.
எல்லோரும் இந்தப் பதிவு மூலம் என் மனசுக்குள் வந்துவிட்டார்கள் மீண்டும்.:)
நன்றி மா.

ஸ்ரீராம். said...

பனை ஓலை விசிறி, எட்டிப் பார்க்கும் கீற்று நிலா......எங்களையும் உடன் அழைத்துச் செல்கிறீர்கள் அந்தக் காலத்துக்கு. திருமங்கலத்தைத் தாண்டிக் கொண்டு வத்ராப் ஸ்ரீவில்லிப் புத்தூர் போன்ற இடங்களும் வளையாமல் சாத்தூர் விருதுநகர் போன்ற இடங்களும் பணி நிமித்தம் போய் வந்திருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.
வெகு எளிமையான வாழ்க்கை. வருமானத்துக்குத் தகுந்த சாப்பாடு,துணிமணி, படிப்பு.நிறைய எதிர்பார்ப்புகளும் கிடையாது. ஏமாற்றங்களும் கிடையாது. அப்பா புத்தகங்கள் நிறைய ,லைப்ரரியிலிருந்து எடுத்து வருவார். அவை போதும் எங்களுக்கு. சந்தோஷமாகவே இருந்தோம்.:) நன்றிமா.

அப்பாதுரை said...

சென்னைத் தவளைங்கறது அப்பப்ப சத்தம் போட்டுக் காட்டிக் கொடுத்துடுது. தடுக்கி விழுந்தா திருமங்கலமா? சரி.

வல்லிசிம்ஹன் said...

அப்படி இல்லை துரை. என்னைச் சென்னையில் மைலாப்பூரும் டி நகரும்,திருவல்லிக்கேணியைத் தவிர வேற ஏதும் தெரியாது.
இங்கயும் ஒரு வண்ணாரப்பேட்டை இருப்பதும் அது இரண்டு இடங்களில் இருக்கிறது என்பது புரியவே ரொம்ப நாட்களாச்சு.
அதனால் உங்கள் குழப்பத்தில் தப்பேதும் இல்லை.

திவாண்ணா said...

//என்னுடைய பல காயங்களுக்கு மருந்து போட்டுக் குணப்படுத்திய....///

அடப்பாவமே!

கோமதி அரசு said...

//முற்றத்துக் கீற்றுப் பந்தலின் ஓட்டை வழியாக
நிலா தெரிந்து கொண்டே இருக்கும்.

நிலாவின் இதமும் அப்பாவின் குரலும் தூக்காத்துக்குத் தாலாட்டு.//

எவ்வளவு அருமையான காலங்கள்.
அவை மீண்டும் வந்தது போல் இருக்கிறது, உங்கள் பதிவைப் படிக்கும் போது.

வல்லிசிம்ஹன் said...

மருத்துவர் தம்பி வாசுதேவனை அப்போ தெரியாமல் போச்சு:)

ஏதோ அவசரம் .ஓட்டம்.
இப்போ நினைச்சால் கூட முடியாது.
எல்லோருக்கும் இந்தக் குட்டிக் காயங்கள்
இல்லாத குழந்தைப் பருவம் இருக்க முடியுமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி, நாம் கொடுத்து வைத்தவர்கள். நம் பேரக்குழந்தைகளுக்கு இத்தனை நல்ல விஷயங்களையும் கொடுக்க முடியவில்லை என்பதில் எனக்குச் மனத்தாங்கல் உண்டு.
நன்றிம்மா.

ராமலக்ஷ்மி said...

அந்தக் காலக் கட்டத்துக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். மேலே வாசிக்க வருகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. ஊருக்குக் கிளம்புவதற்கு முன் பதிவு போட முயற்சிக்கிறேன்.

Geetha Sambasivam said...

இதை எப்படியோ படிக்காமல் விட்டிருக்கேனே. திருமங்கலம் என்றால் என் நினைவில் எதுவும் வருவதில்லை. சொந்தக்காரங்க யாரோ இருந்தாங்க. அம்மா, அப்பா, அண்ணாவோட போன நினைவு. ஒரே அழுகையாக அழுது பயத்தில் அடிபட்டுக் கொண்டு என்றே நினைவில் இருக்கு. பெரிய கூடம் உள்ள ஓர் அறை. அதில் ஊஞ்சல், ஊஞ்சல் ஆடியதில் தான் கீழே விழுந்தேனோ? தெரியலை! 54 ஆம் வருஷம் என்றால் அப்போ மூணு வயசுக்குள் தான். இது எந்த வருஷம்னு தெரியலை! ஆனால் தம்பி பிறக்கலை. என் நினைவுகளே தம்பி பிறந்ததில் இருந்தே ஆரம்பிக்கின்றன. :))))

Geetha Sambasivam said...

@ஜெயஶ்ரீ, நீங்க சொல்வது வீரபாண்டி மாரியம்மன் கோயில்னு நினைக்கிறேன். அதான் அந்த வழியில் உள்ள பிரபலமான கோயில். மேல்மங்கலம், பெரியகுளம் போறச்சே பார்த்திருப்பீங்க! :)))