Blog Archive

Tuesday, March 15, 2011

அணு உலைகள் தரும் பாடங்கள்




ஆழி அலைகள் கண்டு கண்டு கண்ணே பழுதானது.
மனமோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை உள் வாங்கிக் கொண்டது.
இத்தனைக்கும் நான் ஒரு  பார்வையாளி மட்டுமே.

ஜப்பானின் பேரிடர் முப்பதடி அரக்கனாக பத்தாயிரம் கரங்கள் கொண்ட
கார்த்தவீர்யார்ஜுனனாக
ஆவேசத்துடன் நகரங்களையும் , உயிர்களையும், பெரிய பேருந்துகளையும்,
கப்பல்களையும் விழுங்கிய காட்சி,இனி மனதை விட்டு அகலுமா என்பது சந்தேகமே.

ஆனால் அதைவிட  மோசமான  செய்தி இந்த அணூலைகளின் வெடிப்பு. ஒன்றல்ல மூன்று.
இன்னும் அதிகார பூர்வமாக அவர்கள் அதை வெளியிடாவிட்டாலும்,

அணு உலைபற்றிய விஞ்ஞானம் அறிந்தவர்கள்   வெளியிடும் அறிக்கைகள்
  மனதைக் கலக்குகின்றன.

நம் ஊரில் சுனாமி வந்த போது ,கல்பாக்கம் அணு உலை  பற்றிய கவலை
இருந்த போதும், அது சீக்கிரமாக அடங்கி விட்டது. அடக்கப் பட்டுவிட்டது.

நமக்குத் தான் நம் வாழ்க்கையை நடத்த வேண்டிய அவசரம் இருக்கிறதே...
சமூக அலுவலர்கள்,என் ஜி ஓஸ், கருணை உள்ளம் கொண்ட தனிப்பட்ட
மனிதர்கள்.  இவர்களின் சேவைக்கு நம்மால் முடிந்த அளவில்  ,
பணமும் உடைகளும், பாத்திரங்களும் கொடுத்தோம்.

இப்பொழுது நடந்திருக்கும் அழிவு, ஆபத்தையும் பெரிய அளவில் கொண்டுவந்திருக்கிறது.
எல்லோராலும் போற்றப் பட்டு நாடு முழுவதும் மின்சாரம் அள்ளிக்
கொடுக்கப் போகும் அணு உலைகள்.
அவைகளே இப்பொழுது உயிருக்கும் உலை வைக்கும் அபாயங்களாக நொடிக்கு நொடிக்கு
மாறி வருகின்றன,.

எங்கள் பெற்றோர் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தார்கள். எங்களுக்கு  மஞ்சள் பல்ப்
வெளிச்சம்.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பால் வண்ண மெர்க்குரி விளக்கு ஒரே ஒரு கூடத்துக்கு.
நாங்கள் சந்தோஷமாகவே வளர்ந்தோம்.

பிறகு வந்தவை அணு மின் உலையும் அதன் அற்புதங்களும். நாமும் வளர்கிறோமே
என்கிற பெருமை. மும்பையில் பாபா அணு உலை.
போக்ரானில் அணு குண்டு வெடிக்கப் பட்டு நாமும் அணுஇயக்க நாடுகளில்
 பெருமைப் பட்டுக் கொள்ள இன்னோரு  இறகு.
பிறகு வந்தது ரஷ்யாவின் செர்னோபில்.

அதில் இருந்து மீண்டவர்கள் கொஞ்சம். மீண்டவர்களில் புற்று நோயால்
 பாதிக்கப் பட்டவர்கள் ஆயிரக்கணக்கில்.
இப்போது ஜப்பானின் அணு உலைகளின்(வெடித்தது என்று ஒரு சாரார்)
இல்லை தயார் நிலையில் இருக்கிறோம்  என்று அரசு தரப்பு.) மக்களை
இருபது கிலோ மீட்டருக்குத் தள்ளிச் செல்லுமாறு  உத்தரவிட்டிருக்கிறது.

1 பூகம்பம்,
2,சுனாமி,
3, அணுமின் உலை வெடிக்கும் அபாயம்,
4,நானூறுக்கும் மேற்பட்ட  ஆஃப்டர் ஷாக்ஸ்.

இவ்வளவையும் மீறி குடும்பத்தைப் பிரிந்த பெற்றோர்.
பெற்றொரை இழந்த குழந்தைகள்.
அபூர்வமாகத் தப்பிய மனிதர்கள். அனைவருக்கும் வேண்டியது ஆறுதல், அடுத்த வேளைச் சாப்பாடு,
தண்ணீர்,
குளிருந்து காப்பாற்ற நான்கு சுவர்கள்.
அதற்கு மேல் அணு அபாயத்தைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் கூட அவர்கள் இல்லை.

நாம் சிந்திக்க வேண்டும். எல்லாத் தண்ணீர் வளங்களையும் அழித்து குளிர்பானங்களை உருவாக்குகிறோம்.
இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று மின்சாரத்துக்கு
என்று கூடங்குளத்தில் அணுமின் உலை கட்டுகிறோம்.
கடவுள் வேறு அவதாரம் எடுத்துவருவாரோ.
இல்லை நாம்தான் விழித்துக் கொண்டு ஆவன செய்வோமோ.

மனிதம் பிறக்க, நாடு தழைக்கும்.
ஜப்பானின் மனித இனத்துக்காக நாம் பிரார்த்தனை செய்யும் நேரம் இது.
நமக்காகவும் செய்து கொள்வோம்.

பின் குறிப்பு.

எந்தவகையிலும் விஞ்ஞான வளர்ச்சியை
அலட்சியப் படுத்தவில்லை.

இயற்கையை எந்த வேளையிலும் பகைக்க வேண்டாம் என்பதே என் எண்ணம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

33 comments:

சமுத்ரா said...

good ..இயற்கை எத்தனை நாள் தான் பொறுமையாக இருக்கும்?

Anonymous said...

சாது மிரண்டால் காடுக் கொள்ளாது, பூமி மிரண்டால் எதுவுமே கொள்ளாது. நுனிக்கிளையில் இருந்து அடிக்கிளையை வெட்டும் மனிதனின் மூளையால் வந்த வினை ..........

pudugaithendral said...

அருமையான விழிப்புணர்வு பதிவு வல்லிம்மா.

ஆமாம் எனக்கு ரொம்ப நாளா சந்தேகம். கலிமுத்தினா இப்படியெல்லாம் நடக்கும்னு அந்தக்காலத்துக்காரங்க புலம்பி கேட்டிருக்கேன். ஆனா இந்தக்கோவில்களில் மந்திரம் சொல்லும் பொழுது “கலியுகே ப்ரதம பாதே!!”ன்னு சொல்றாங்க, அப்படின்னா கலியுக முதல் பாதத்துக்கே இந்தக் கதின்னா மத்த 3 பாதங்கள்........ கடவுளே!!!

ஜப்பான் மக்களுக்கு என் பிரார்த்தனைகள்.

பாச மலர் / Paasa Malar said...

இயற்கையைப் பகைக்கின் வேரோடு கெடும்..

துளசி கோபால் said...

உண்மைதான். நமக்குக் கிடைத்த ஒருவித அமைதியும் சுதந்திரமுமான வாழ்க்கையை நினைக்கும்போது...... என்னாலேயே நம்ம முடியலை.

இப்ப எல்லாத்துலேயும் வேகம் வேகம். இப்பத்து சுகத்துக்காக என்னவேணா செய்யலாம், இயற்கையை எவ்வளவு வேணுமுன்னாலும் பாழ்படுத்தலாம்.

கேடுகாலம் வந்துக்கிட்டே இருக்கு. இதுக்கான எச்சரிக்கைதானோ இப்போ நடப்பதெல்லாம்!

மனசு ஒன்னும் சரி இல்லைப்பா.

ஐயோ.....எத்தனை உயிர்கள்?

வல்லிசிம்ஹன் said...

நன்றி சமுத்ரா. உண்மையாகவே இயற்கை சீற வேண்டிய இடங்களை நினைத்தால் குலை நடுங்குகிறது.
பொறுமையில் பூமா தேவி போல என்பார்கள்.

அவளுக்கும் எல்லை இருக்கிறது என்று காட்டிவிட்டாள்.
அதில் அறியாத இளசுகளும் மாட்டிக் கொண்டதைப் பார்க்கத்தான் வருத்தம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் இக்பால் செல்வன்.
எல்லாரையும் வேதனையில் ஆழ்த்தும் இந்த அணுமின் நிலையத்தின் வீச்சு டோக்யோ வரை வந்த செய்தி இதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி. தென்றல்
ஆமாம் பிரதம பாகத்தில் தான் இருக்கிறோம்.அதற்கே இவ்வளவு கொடுமைகளைப் பார்க்க வேண்டி இருக்கிறது.
அடுத்து வரும் மூன்று பாதங்கள்...ம்ஹூம் பயங்கரமாக இருக்கும். ஆனால் அதற்கும் மனிதர்கள் பழகிவிடுவார்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மை. நாமக்குப் பாலபாடமாகப் போதிக்கப் பட்ட கருத்து. யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பாச மலர்.

Yoga.s.FR said...

அணுவால் விளைந்த அனர்த்தம் இன்னமும் ஜப்பானில் முற்று முழுதாக முடிந்து விடவில்லை!அதாவது அன்று அமெரிக்கர் வீசிய அணுக்குண்டு பற்றி சொல்கிறேன்!இருந்தும் ஆக்கத்துக்கு என்று ஜப்பானியர்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வரிசையில் அணு உலைகளை நிறுவிய போது யோசித்திருக்க வேண்டாம்?அதுவும் நான்கு தட்டுகளின் இணைப்பில் ஜப்பான் இருக்கிறது.ஒன்றன் பின் ஒன்றாக ஆண்டு தோறும் நிலம் நடுங்குவது வாடீக்கையாயிருக்கையில் இந்த அபிவிருத்தி????????????????????????????

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசிமா.
அல்றும் குரல்கள் வேறு நம்மைச் சித்றடிக்கின்றன.
பாவம். . ஒரு வீட்டில் ஒரு அநாதையாகக் கரடி பொம்மை. இன்னோரு வீட்டில் ஒரு பியனோ. குழந்தைகளின் படங்கள்...பயங்கரம்.இதிலிருந்து மீள்வதே கஷ்டம். இப்போது மூன்றாவது வெடிப்பும் நிகழ்ந்திருக்கிறது.
அடுத்து வரும் பின்னூட்டத்தைப் பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க யோகா. நானும் இதையே நினைத்தேன். இரண்டாம் உலகப் போரில் விளைந்த க்கலகங்களின் வடுக்களே மாறாத நிலையில்,
இந்த அதிவேக முன்னேற்ற வெறி எதற்காக. டோக்கியோவிற்கு உறவினர் போய் வந்த போது சொன்னார் 6' க்கு 4' அளவில் பெட்டிபோல அறையில் படுத்த படி வசிக்கும் மக்களைப் பற்றி.எல்லாவசதிகளும் உண்டாம்.

ஒரு பூகம்பத்தில் இந்த அறைகள் என்ன வாகும்?நினைக்கவே கதிகலங்குகிறது.

இனியாவது சுகம் நிலவட்டும்.
நல்லதொரு கருத்தை எடுத்துச் சொன்னீர்கள். நன்றி.

mak said...

நம் வாழ்கையில் சில விஷயங்கள் தவிர்க்க முடியாததாகி விட்டன
நாம் விரும்பா விட்டாலும் அணு உலை மின்சாரம் தவிர்க்க முடியாதது
மேலும் நடந்த அணு உலை விபத்துகளில் மனித தவறே மேலோங்கி இருக்கிறது
இனி வரும் காலங்களின் மின் தேவையை நினைக்கும் போது
விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்பங்களை மேம்படுத்தி
மனித தவறுகளை கூடிய மட்டும் தவிர்த்து அணு உலை மின்சாரத்தை
பயன் படுத்துவதை தவிர வேறு வழியில்லை

உங்கள் என்ண்ணம் மிகவும் சரியானதே
எந்த வகையிலும் இயற்கையை பகைக்க வேண்டாம்

mak said...

நம் வாழ்கையில் சில விஷயங்கள் தவிர்க்க முடியாததாகி விட்டன
நாம் விரும்பா விட்டாலும் அணு உலை மின்சாரம் தவிர்க்க முடியாதது
மேலும் நடந்த அணு உலை விபத்துகளில் மனித தவறே மேலோங்கி இருக்கிறது
இனி வரும் காலங்களின் மின் தேவையை நினைக்கும் போது
விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்பங்களை மேம்படுத்தி
மனித தவறுகளை கூடிய மட்டும் தவிர்த்து அணு உலை மின்சாரத்தை
பயன் படுத்துவதை தவிர வேறு வழியில்லை

உங்கள் என்ண்ணம் மிகவும் சரியானதே
எந்த வகையிலும் இயற்கையை பகைக்க வேண்டாம்

Jayashree said...

ஒரு சின்ன நாடு !! ஊக்கத்துக்கும் விடா முயற்சிக்கும் எடுத்துக்காட்டா இருந்த நாடு. உலகத்தின் third largest economy . ஒரு நிமிஷத்துக்கு கீழ இப்படி தரைமட்டமாயிடுத்தே . எத்தனை உயிர்கள். ஜப்பானியர்கள் என்றுமே controlled emotion உடையவர்கள். ஒவ்வொருத்தரும் விக்கித்து போய் அழுவது வேதனை சாமி.இந்த ப்ரளயத்திலும் உயிர்கள் காப்பாத்தப்பட்டதுன்னு சந்தோஷப்படக்கூட விடல்ல இது இப்ப !! 2வது உலகத்துப்போரில் அணு குண்டு!! இப்போது இது .எவ்வளவுதான் தாங்கும் இந்த நாடும் இந்த மக்களும். குஜராத் பூகம்பம் உண்டாக்கின சங்கடம் இதுவும் தந்தது!! இதோடு நிக்கட்டும் கடவுளே !!

Geetha Sambasivam said...

எங்கள் பெற்றோர் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தார்கள். எங்களுக்கு மஞ்சள் பல்ப்
வெளிச்சம்.//

நான் எட்டாம் வகுப்பு வரையிலும் அரிக்கேன் விளக்கும், சிம்னி விளக்கிலும் தான் படிச்சிருக்கேன். மதுரை நகரின் மத்தியில் வசித்தாலும் நாங்க குடி இருந்த வீட்டிற்கு மின்சாரம் வாங்கிக்கவில்லை. அப்புறம் தான் வந்தது. அந்த ஒளியில் சூடும் தெரியாது. மின் விளக்குப் போட்டதுமே சூடும் கூடவே வருது! :(((((

Geetha Sambasivam said...

இயற்கையை வென்று, அணுவை வென்று வாழ நினைத்தார்கள். யாருமே யோசிக்கவே இல்லை என்பது தான் உண்மை. இன்று லக்ஷக்கணக்கான மக்கள். எங்க உறவினர் மகன் டோக்யோவில் இருக்கிறார். நலம் என்று செய்தி வந்தது. அப்புறமா இந்த அணு உலை வெடிச்சதுக்கப்புறமா ஊரை விட்டுப் போகச் சொல்லிட்டாங்களாம். :((((((((

ஸ்ரீராம். said...

அணு சக்தியை வைத்து மிரட்டும் அனைத்து நாடுகளுக்கும் 'நீங்கள் யாரும் என்னை மீறி அல்ல' என்று இயற்கை கொடுத்திருக்கும் பாடம். எங்களை மீறி என்ன நடந்து விடும் என்ற மனித ஆணவத்தின் மீது விழுந்த அடி.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு நன்றி மாக்.
நான் அணுமின்சாரத்திற்கு எதிரில்லை.

அது ஒன்றுதான் உலகை உய்விக்கப் போகிறது என்ற கருத்தைத்தான் வேண்டாம் என்று நினைக்கிறேன்.
எத்தனையோ மாற்று சக்திகளுக்கான ஆராய்ச்சிகளும் நடக்கின்றன.எத்தனையோ அறிவாளிகளின் முன்யோசனைகளுடன் இவை அமைக்கப் படுகின்றன. இருந்தும் ஹ்யுமன் எர்ரர் என்று ஒரு ஃபாக்டர் அதில் இருக்கும்போது(எதில் தான் இல்லை)
இன்னும் கவனம் தேவை.சொல்வது எளிது செய்வது கடினம். தெரிந்தே மனித உயிர்களுக்கு விலை இல்லாமல் போகிறதே என்ற ஆதங்கம் தான். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா. நினைத்துப் பார்த்துக் களிப்படைய வைக்கும் அந்த நாட்கள்.
இன்னும் வரப் போகிற நாட்களில் நமது சந்ததிகளுக்கு விட்டுப் போகும் பூமி?சிட்டுக் குருவிகள் போன வழியில் இன்னும் எத்தனை பறவைகளோ.

வல்லிசிம்ஹன் said...

இதையே நானும் நினைத்தேன்.ஸ்ரீராம்.யுகம் யுகமாக நடக்கும்
போராட்டங்களில் பலியாவது காலாட்படைகள் தான். பட்டனை அழுத்தும் விரல்கள் எப்போதுமே பாதுகாப்பாக இருக்கின்றன.

சுந்தரா said...

பார்த்தும் படித்தும் மனசு பதறிப்போயிருக்கிறது வல்லிம்மா.

அதிகமா ஆசைப்பட்டு இப்படி ஆபத்துக்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நமக்கு எல்லாம் முடியுமென்ற ஆணவம் மேலோங்குகையில் ஆக்ரோஷமாய் அடித்து அதை சமப்படுத்திக்கொண்டிருக்கிறது இயற்கையின் கரங்கள்.வேறென்ன சொல்ல :(

தனிமரம் said...

Iyakkayai Nam palakkirom athan koopam tirumpumpotoo kavalaikolvatu enn

சாந்தி மாரியப்பன் said...

நச்ன்னு சொல்லிட்டீங்க வல்லிம்மா.. இயற்கையோட விளையாடுவதை மனிதன் எப்போதான் நிறுத்திக்கப்போறானோ :-(

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் திரு நேசன்.
அதைத்தான் நானும் சொன்னேன்.
இயற்கையை வெல்வதாக நினைத்துச் செய்யும் எல்லாமே நம்மை நோக்கித்தான் திரும்பும். அதை பாழாக்குபவர்கள் இந்த உண்மையை எப்போது உணர்வார்களோ.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுந்தரா,முந்நாளில் நிலத்துக்காகப் போர் புரிந்தார்கள். இப்போது சக்தியை வெல்ல அதனோடயே போராடுகிறார்கள்.

எரிமலை வாயை மூட முயல்வது போல. ஒருபக்கம் அதை அடக்கினால் இன்னோரு பக்கம் அது சுற்றிவந்து பழி வாங்குகிறது.

சிவகுமாரன் said...

வேண்டாம் தாயே என்று வேண்டுவதை தவிர வேறென்ன செய்ய?

Kavinaya said...

சிந்திக்க வேண்டிய கருத்துகளை சரியான நேரத்தில் முன் வைத்திருக்கிறீர்கள் அம்மா. இந்நிலையிலும் மன உறுதி குலையாத, நாட்டுப் பற்று மிக்க ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அவர்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள்.

கோமதி அரசு said...

இயற்கை சீற்றத்திலிருந்து மீண்டு வந்து நலமாய் வாழ இறைவன் அருளவேண்டும்.

இயற்கையை மதித்து வாழ்ந்தால் இந்த இழப்புக்களை தவிர்க்கலாம் என்பது உண்மை தான் அக்கா. அருமையான பதிவு.

மக்கள் விழித்துக்கொண்டால் நல்லது.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இயற்கையை எந்த வேளையிலும் பகைக்க வேண்டாம் என்பதே என் எண்ணம்//

நூத்துல ஒரு வார்த்தை'ம்மா.... இது எல்லாரும் நினைச்சா நெறைய விபரீதங்கள் தவிர்க்க படலாம்... ஜப்பான் படங்களும் வீடியோ'வும் பார்த்து அன்னைக்கி சரியா தூங்க கூட முடியல...

G.M Balasubramaniam said...

ஒவ்வொரு விளைவிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்கிறோம். சுனாமி வரும் என்ற எச்சரிக்கை சுமார் இருபது நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.அணு உலைகள் பற்றிய சேஃப்டி முன்னேற்பாடுகள் பரிசீலிக்கப்படும். முன்னேற்றம் என்றுகருதும்போது பின்விளைவுகளையும் சில நேரங்களில் சந்திக்க வேண்டித்தான் இருக்கிறது.பெருமூச்சு விடுவதாலோ கவலை கொள்வதாலோ என்ன செய்ய முடியும். முடிந்தவரை பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு திரு பாலசுப்ரமணியம்,
வருகைக்கு நன்றி. அணு உலைகளின் சக்தி அவசியமே.அதைப் பாதுகாப்பு விஷயங்களில் கண்டிப்பு கொஞ்சமும் குறையக் கூடாது என்றுதான் என் அணுகல்.
நடந்ததை மாற்ற முடியாதுதான். :(

மாதேவி said...

"எந்த வகையிலும் இயற்கையை பகைக்க வேண்டாம்"

நடக்கும் சோகங்களைப் பார்த்தாவது விழித்துக்கொள்ள வேண்டும்.