
கோவையில் நம் நட்பு துளிர் விட்ட நேரம் வார விடுமுறைகள் உங்களுடனும் உங்கள் குழந்தைகள் கணவர் இவர்களிடமும் எங்கள் குடும்பம் களிப்பாகக் கழித்த நேரங்கள் இன்னும் பசுமையாக மனதில் இருக்கின்றன,.

நாங்களும் சென்னைக்கு வந்தோம். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் உங்கள் மகன் மகள் படிப்பு திருமணம் என்று சென்னைக்கு வரவேண்டிய அவசியம்
வந்தது.
நாம் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதுவும் பக்கத்திலேயே வீடும் அமைந்தது. மிகவும் வசதியாகப் போயிற்று.
உங்கள் கணவரும் இவரும் மிகச்சிறந்த உயிர்க் சிநேகிதர்களா இருந்தது நமக்கு இன்னும் இன்பம் கூட்டியது.
அவரவர் ,வேலைகள் முடிந்ததும் ஒன்றாக கடைகளுக்குப் போவதும், குழந்தைகளையும் கணவர்களையும் ஒன்றாக விட்டு விட்டு விட்டு சினிமா பார்க்கப் போவதென்ன தீபாவளிக்கு நீங்கள் எங்களுக்கு பரிசுகளும் உடைகளும் கொடுப்பதும் ,
டிசம்பரில் கிறிஸ்துமஸ் வரும்போது விதம் விதமான பலகாரங்கள் எங்கள் வீட்டிலிருந்து, உங்கள் கணவருக்குப் பிடித்த கொழுக்கட்டை yஇலிருந்து வீட்டிற்கு நடக்கும் மகிழ்வு....
எட்டு வருடங்கள் ஓடுவது போல பறந்தன. உங்கள் மகன்,மகள் திருமணங்களும் முடிந்து குழந்தைகளும் பிறந்தார்கள்.
அப்போது வந்தது ஒரு இறுதி ஒலை உங்கள் கணவருக்கு. அந்த அன்பும் ஆதரவும் தந்த செழுங்கிளையைக் ,கனவானைக் கொண்டு போவதற்கு காலனுக்குத்தான் எத்தனை கொடூரம்..
உங்கள் இறைநம்பிக்கை இவைகளையும் மீறி . இந்தப் பயங்கர விபரீதம் நம்மையும் கலைக்கப் பார்த்தது. அதை மீறி நாம் நல்ல தோழியராகவே இருந்தோம். இதோ அப்போது நீங்கள் எழுதிய கடிதங்கள் இன்னும் மணி மணியான எழுத்துக்களோடு ,அனுசரணையோடு என்னைப் பார்க்கின்றன அந்தக் கடிதங்கள்.

அதற்குப்பிறகு இந்த வீட்டில் பிள்ளைகள் படிப்பு,வேலை, திருமணம் என்று நானும் கவனத்தைத் திருப்பினேன்.
நீங்களும் ஆன்மீகத்துறையில் ஆழமாக இறங்கி, நீங்கள் உண்டு, உங்கள் காப்பித் தோட்டம், உங்கள் பெற்றொர் பிரிவு,
அவர்களுக்காக நீங்கள் எடுத்துக் கொண்ட சிரமம்
எல்லாம் நம்மை மெதுவாகப் பிரித்தனவா.
எத்தனையோ மகிழ்ச்சிகளையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட நல்ல தோழிகள் ஏன் மாறினோம்.
கடலில் ஒரு கப்பலின் விளக்குகள் , கொஞ்சம் தள்ளிச் செல்லும் இன்னோரு கப்பலின் விளக்குகளுக்கு ஒரு குட்டி ஹலோ சொல்லுவது போல ஆகிவிடக் கூடாது
அக்கா., நம் நட்பு.
இதை ஒரு மீட்புப் பணியாக நான் தொலைத்த தோழியைத் தேடப் போகிறேன்.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.