Blog Archive

Wednesday, May 30, 2007

ஸ்விட்ஸர்லாண்ட் போக்குவரத்து
























ரயிலில் போவது ஒரு சுகானுபவம்.


எங்க நாட்கள் புகை விடற வண்டிலேருந்து இந்த நாள் ஸ்விஸ் இண்டர்சிடி எக்ஸ்ப்ரஸ் வரை எல்லாமே சுவையானவை.

என்ன அப்போது தண்ணீர்,படுக்கை உணவு எல்லாம் கூட எடுத்துக் கொண்டுபோகணும்.


இப்போது டைனிங் கார் வண்டியோடயே வருகிறது.

இந்த ரயில்களில் நாம் உட்காரும் இருக்கைகளின் அருகிலேயே

சைட் டேபிள்.

அதில் எது வைத்தாலும் விழாத வாறு ஏற்பாடு.

அதிலேயே நாம் போய்க்கொண்டு இருக்கும் இடங்களுக்கான வரைபடம்.

அந்த அந்த ஸ்டேஷனுக்கான அறிவிப்பு.


ஒலி வடிவிலும், படிக்கும் வண்ணம் ரயிலின் கூரையிலும் கண்ணுக்கு எதிராப்போல போய்க் கொண்டு இருக்கும்.

நாங்கள் செர்மாட் என்னும் மலைச் சிகரத்துக்குப் போய்த் திரும்ப எடுத்துக் கொண்ட இரண்டு நாளில்

போட் க்ரூயிஸ்,பஸ்,ரயில்,கேபிள் கார் என்று எல்லாவிதமான


ஊர்திகள்,வாகனங்களில் ஏறி இறங்கினோம்.

களைப்பே இல்லை.

காட்சிகளின் குளிர்ச்சியா.இல்லை இந்த ஊர் வெப்பதட்ப நிலையா

தெரியாது.

ஆனால் பயணம் என்றால் இங்கேதான் சுகம்.
இங்கிருந்து லூசெர்ன் என்னும் இடத்திற்கு ஒரு முழுநாள் டிரிப் திட்டம் போட்டால் முன்னாலெயே வகையாக அங்குள்ள படகுகள் அதில் பயணிக்கும் நேரம் எல்லாம் கணித்து வைத்துக் கொண்டு கச்சிதமாக இரவு 10 மணிக்குள் திரும்பலாம்.
நமக்குனு வண்டி இல்லையேனெல்லாம் கவகை வேண்டாம்.
அத்தனை சௌகரியம்.
இங்கே இருக்கிற காரெல்லாம் சின்ன சின்ன வடிவம்தான்.
பழைய கால பக் ஃபியட் ,ஃபோக்ஸ்வாகன் மாதிரி வண்டிபோல நாலு
சின்ன சைஸ் நபர்கள் உள்ளே இருக்கலாம்.
உலா வருகிற மாதிரி
இவை ஓடும் அழகும் நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் நம்ம் ஊரில் நம்ம நினைச்சா ரோடு க்ராஸ் செய்யற மாதிரி இங்கே ஓட முடியாது.
முதல்தரம் வந்த போது பராக்கு பார்த்துக்கொண்டெ நடைபாதையில் இருந்து காலைக் கீழே வைத்துவிட்டேன்.
சினிமாவில் வர மாதிரி க்றீச் சப்தத்தோடு வண்டி நின்னு விட்டது.
ஓட்டி வந்த கனவான் கனவான் தான்.ஒரு ஸ்ட்ராங் சைலண்ட் ஹீரொவா வந்து திட்டியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்னு நான் யோசிப்பதற்குள்
அந்த வண்டி ஓடிவிட்டது.
பிறகென்ன, சாலை விதிகள் பற்றி தந்தையும்,மகனும்,மருமகளும்
(அப்போ பேத்தி பிறக்கவில்லை,இல்லாட்டா அவளும் முழங்கி இருப்பாள்)
பொறுமையாக விவரமாகச் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.
நான் சுவாரஸ்யமாக அந்த ஏரியில் போகும் அன்னங்களையும்,வாத்துக் கூட்டத்தையும் ரசித்தபடி தலையை மட்டும்
அசைத்தபடி வந்தேன். இந்த வாத்துக்கெல்லாம் டிராஃபிக் ரூல்ஸ் ஒண்ணும்
கிடையாது.
பார்க்கப்போனா அமெரிக்கா மாதிரி மான்கள் கடக்குமிடம்,
வாத்துகள் ஜாக்கிரதை போர்டும் கிடையாது.
ஏனெனில் அதுங்களுக்கும் அறிவு நிறைய.
கட்டுப்பாடு நிறைய.
மென்மையாத்தான் சத்தம் போடும்.
தண்ணீர் அலுங்காம சர்ரென்று போகும்.
என்ன, இந்த ஊர்க்குழந்தைகள் பெற்றோருக்குத் தெரியாம போடற
ரொட்டித்துண்டுகளுக்காக குட்டி வாத்துகள் மட்டும் சண்டைபோடும்.
அதே போல குழந்தைகள் கீழே விழுந்து அழுதால் கூட
பெற்றோர்கள் அவ்வளவாக் கண்டுகொள்வதில்லை.
நீ விழுந்தியா,நீயே தட்டி விட்டுக்கோ,
சமாதானம் ஆகிக்கொ.இதுதான் பெற்றோர்களின் தத்துவம்.
நம்மளை மாதிரி குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி,
தடுகின கல்லை "அச்சு,அச்சு " சொல்கிற வழக்கமும் கிடையாது.
அப்புறம் பார்க்கலாமா.:-)

Monday, May 28, 2007

அஞ்சலி அம்மாவுக்கு




மென்மைக்கு மறுபெயர் அம்மா.
அன்புள்ள அம்மா,
உனக்குக் கடிதம் எழுதி ரொம்ப நாளாகிவிட்ட்டது.
ஒரே ஊரில் குடி இருந்தால் கடிதம் எழுதக் கூடாது என்று எழுதப்படாத ரூல் இருக்கிறதே.
இப்போ நீ எழுதின பழைய சமையல் குறிப்புகளிலும், மருந்துகளுக்காக எனக்குத் தந்த கடைக்குறிப்புகளிலும் உன்னைத் தேடுகிறேன்.
முடிந்தபோது வாங்கித்தருகிறாயானு நீ கேட்கும்போது,
.அதுக்கென்னமா இதோ கொண்டு வந்து தருகிறேன்னு நான் சொல்லவில்லை.
ராகவேந்திரர் கோவிலுக்கு வருகிறேன் அப்படியே அங்கேயும் வரேன்
இதுதான் என் பதில்.
ஆனால் பாட்டு மட்டும் .அம்மா என்றால் அன்பு...
இதுவே நான் பெற்ற குழந்தைகள் எனக்கு சொல்ல எத்தனை நேரம் ஆகும்...
இப்படி மென்மையாக ஒரு ரோஜாவின் பனித்துளியாக நீ இருந்துவிட்டுச் சத்தமில்லாமலேயே போய் விட்டாய்.
எனக்கு இன்னோரு தரம் வாய்ப்பு கொடும்மா.
மீண்டும் பிறந்துவா.

Saturday, May 26, 2007

பாட்டி சுட்ட தோசை

தோசை என்றால் பிடிக்காத மனிதர்கள் உண்டா.?

அதுவும் ஒரு அம்மாவோ பாட்டியோ
ஒரு கரி அடுப்பு,
இல்லாட்டா ஒரு கெரசின் வாசனை அடிக்காத ஒரு ஸ்டவ் அடுப்பில் செங்கோட்டைக்கல்லைப் போட்டு
முதல்நாள் ஊறப்போட்டு அரைச்சு வைத்துப் புளித்த மாவில் ..அதாவது நாலு பங்கு புழுங்கலரிசி ஒரு பங்கு கறுப்பு உளுந்து போட்டு ,நல்லாக்
களைந்து பிறகு ,உரல்ல போட்டு ஊர்க்கதையெல்லாம் நான் கேட்க
நிதானமாக அரைத்து வழித்து
பெரிய கல்சட்டி ,அதுஇல்லைன்னா ஒரு பீங்கான் ஜாடியில் வைத்துப்
புளித்த மாவு.

சீனிம்மா , மாவு அரைக்கிற பாங்கும்,அடுப்பை நிதானமாக எரிய விட்டு வேலை செய்யும் அழகும்,
இலையில் ,கையால் தைத்த தையல் இலையில் சிறிது அளவு
சாப்பாடே போட்டுக் கொண்டு,கருவேப்பிலை கூட மிச்சம் வைக்காமல்
உண்ணும் விதமும் என்னைக் கண் கொட்டாமல் பார்க்க வைக்கும்.

அந்தத் தோசையின் ருசி ,வேறு இடத்தில் நான் கண்டதில்லை.
எங்க அம்மா வார்க்கும் தோசையிலும் வட்டம்,அளவு எல்லாம் வேறு விதமாக இருக்கும்.

சீனிம்மா வீட்டு சமையலறை ஓடு மேய்ந்தது.
கூரையில் வெளிச்ச வர ஒரு சின்னக் கண்ணாடி.
ஒரு மேடை கட்டி அதில் தினம் சாணி போட்டு மெழுகுவதுபோல
மண்ணால் ஆன அடுப்பு.
கொடி அடுப்புனு கூட ஒன்று இருக்கும்.
பெரிய அடுப்பில் நாலு விறகு என்றால் அதில் வரும் சூட்டில் சாதம் கொதிக்கும் போதே, கொடியடுப்பில் பருப்பு ஒரு குண்டானில் வேகும்.

கீழே தரையில் மாமாக்கள் உட்கார்ந்து அன்று வேண்டிய
காய்கறிகளை அரிந்து கொடுக்க
ஒரு பத்து நபர்களுக்கான சாப்பாட்டை இரண்டு மணி நேரத்தில் சமைத்து விடுவார்.
இப்போது அந்தத் தோசை நாட்களை நினைத்து
உச்சுக் கொட்டுவதற்குக் காரணம்,இங்கே ஸ்விஸில்
அரிசி,பருப்பு எல்லாம் சேர்ந்து நல்ல தோசை கிடைக்கவில்லை,
அதான் காரணம்.
உயர்ந்த வகை க்ரைண்டர்தான். அளவும் அதேதான்.
வார்ப்பதும் நானே.

அந்த மாவு அரைக்கும்போதெ அந்தப் பாட்டி அன்பும் பொறுமையும் கலந்து அரைத்தாளோ.
லீவுக்கு வந்திருக்கும் பேரன் பேத்திகள் வயிறு வாட விட்டு
ஊருக்கு அனுப்பக் கூடாது என்று
பொன்னிறத்தில் கொஞ்சம் கூடக் கருகாமல் உணவு தயாரித்தாளோ.

அவள் மனம் பூரிக்க நான்கு வார்த்தையாவது சொல்லி இருப்பேனா.
இல்லை நாங்கள் சாப்பிட்டு விளையாடுவதையே
பாராட்டாக எடுத்துக் கொண்டாளோ...
எதையும் யாரிடத்திலும் எதிர்பாராமல் கடமையும் நேர்மையுமே
எங்கள் எல்லோருக்கும் சொத்தாகக் கொடுத்தாள்.
அதனால்தான் எதிர்காலம் எதிர்கொள்வது சுலபமாக இருந்தது எங்களுக்கு.

Thursday, May 24, 2007

அன்பு மகளுக்கு அம்மா




அன்பு பாப்பா,
வயதானாலும் பெற்றபெண் எப்பவுமே பாப்பாவாக இருப்பது நம்ம குடும்பங்களில் வழக்கம்தான்.

அனேகமாக எல்லாக் குடும்பங்களிலும் ஒரு பாப்பா,ஒரு அம்பி,ஒரு தங்கச்சி என்று பெயர் கொண்டவர்கள் இருப்பது புதிது இல்லை.
நம்ம வீடும் அப்படித்தான்.
பெயரினால் முதிர்ச்சி கூடுவதோ குறைவதோ இல்லை என்பதற்கு பாப்பாக்கள் எடுத்துக்காட்டு.
என் அம்மா,உன் பாட்டி வளர்ந்த சூழலில் அம்மா வீட்டில் வேலைகளை முடித்துப் ,,புகுந்த வீட்டில் வேலை செய்யவே
புறப்பட்டாளோ என்று நான் நினைப்பேன்.

அப்படி ஓயாமல் ஒழியாமல் ஏதாவது செய்து கொண்டே இருப்பாள்.
வேலை இல்லாத நேரம் நிட்டிங், எம்ப்ராய்டரி, பட்டன் தைக்கும் வேலை
என்று நேரம் ஓடும்.
அதனால் நான் தேர்ந்த தையல்  தெரியாத ஆள்  ஆனேனா என்று தெரியாது.
எனக்கு நூலும் ஊசியும் பிடிக்காமலே போனது.~


என் பாட்டி(இன்னுமொரு உழைப்பாளி)யிடம் சொல்லுவேன்,
உன்னை மாதிரி இப்படிக் கார்த்தாலே எழுந்து உடம்பு வலிக்க வலிக்க வேலை எல்லாம் செய்ய மாட்டேன்..
கலெக்டர் உத்யோகம் தான் எனக்கு.
நகத்தில அழுக்குப் படாமல் வாழ்க்கையை சந்தோஷமாகக் கழிப்பேன்.
சுற்றிலும் தமிழ் நாவல்கள்,ரேடியோ,கொறிக்க வத்தல் வடகம்
இது மாதிரிதான் அமைத்துக் கொள்வேன்.
பாட்டி கேட்டுவிட்டுச் சிரிப்பார்.

நானும் வந்து பார்க்கிறேன் நீ எப்படிக் குடித்தனம் பண்றேனு...
விடாப்பிடியாக கல்லூரியை எட்டிவிட்டேன்.
கோடைவிடுமுறையிலேயே மணம் பேசி அடுத்த தையில் திருமணம்.
ஸோ, அம்மா கலெக்டர் கனவு பி.யூ.சியுடன் முடிந்தது.
அதற்கெல்லாம் வருத்தமே படவில்லை.
என்ன இடம் தானே மாறியது.~
~
எனக்கு தேவையான  புத்தகங்கள் அப்பா வாங்கித் தந்தார்.
எல்லாம் ஆங்கிலம்.
நமக்கு கழுதைக்குக் காகிதத்தின் மேல் எவ்வளவு மோகமோ அதற்கு ஒரு பிடி மேலேயே ஆசை படிக்க.
உன் அண்ணன் பிறக்கும் வரை என் அரசாங்கம் நன்றாகவே நடந்தது.
அதற்குப்பின்னால் ஒரு சிடு சிடு அம்மா
என்னுள் புகுந்து விட்டாள்.
தொடர்ந்து நீயும் உன் தம்பியும் வந்ததில் அம்மாவின் கற்பனை உலகம் கீழே
வந்துவிட்டது.

அப்பவும் உங்கள் நோட்டுப்புத்தங்களும்,புத்தகங்களும்
என் எழுத்துப்பசிக்கு உணவு போட்டன.
இவ்வளவு பீடிகையும் எதற்கு என்று நீ யோசிக்கலாம்.
குடும்பவாழ்க்கை ஆரம்பித்துக் கொஞ்ச நாட்கள் சம்பாதிக்க முடிந்து இப்போது மீண்டும் வீட்டில் புதிதாக வந்து இருக்கும் குழந்தையைக் கவனிக்க வேண்டிய சூழல் உனக்கு.
சுதந்திரம் குறைந்த இந்த நாட்களில் செய்ய முடியாத
எல்லாப்பணிகளுக்கும் நிறைவேற்ற முடியாத ஆசைகளுக்கும் ஏக்கம் வரத்தான் செய்யும்.

உனக்கோ குழந்தைகளைக் காப்பகத்தில் விட மனமில்லை.
அடுத்த வழி மேற்கொண்டு எப்படி முன்னேறுவது என்ற கேள்விக்குறிக்குக் கொஞ்ச நாட்கள் விடுதலை கொடுத்து விடு.

குழந்தைகள் நமக்குக் கிடைத்த வரம் என்பதை நீயும் அறிவாய்.
அவர்கள் வளரும் காலத்தில் ஒரு அம்மாவின் ஆதரவு எத்தனையோ
விதங்களில்,வகைகளில் அவர்களை நேர் பாதையில் அழைத்துச் செல்லும்.
அன்பும் அரவணைப்பும் கிடைக்கப் பெறும் குழந்தைகள் வழிதவறி நடக்க வாய்ப்புகள் குறைவு.

அதனால் மீண்டும் சம்பாதிக்கவும், திறமையை வளர்த்துக் கொள்ளவும் நேரம் வரும் வரை,
இப்போது கிடைத்திருக்கும் காலத்தைக் குழந்தைகள் பாதுகாவலுக்குச் செலவழித்துவிடு.
ஐம்பத்தெட்டு வயதில் அம்மாவின் எழுத்தாசை நிறைவேறியது.
அதுபோல மகளின் ஆடிட்டர் கனவும்
இதோ இன்னும் சில வருடங்களில் நிறைவேறிவிடும்.(நிறைவேறியது)
முயலுவோம்,வெற்றியும் காண்போம்..
மகிழ்ச்சியுடன் மகள் வாழ,
அதைப் பார்த்து நானும் மகிழ மிக ஆசைப்படுகிறேன்.
பிறிதொரு சமயம் இதேபோல நீயும் உன் மகனிடம் பேசுவாய்.

Tuesday, May 22, 2007

சாக்கலேட்,சீஸ்..ஸ்விட்சர்லாண்ட்...3

























இந்தப்பதிவில் இடம் பெறும் படங்கள்
ரைன் நதியும் அதன் மேலிருக்கும் பாலமும்
வீட்டுக்கு எதிரில் உள்ள மலைப்பகுதி,பாசல்
சிட்டி என்று அழைக்கப்படும் இடத்திலுள்ள மேசை அலங்காரம்.
சாக்கலேட்டும் ஸ்விட்சர்லாண்டும் பிரிக்க முடியாதவை.
இத்தனை மாடுகள் தரும் பாலையும் என்ன பண்ணுவது.
அத்தனையும் சீஸ் ஆகவும்,சாக்கலேட் ஆகவும் மாறுகின்றன.
இதோ ஒரு யூ டுயூப் க்ளிப்.
இந்தப் பசுக்கள் மேயும் அழகே தனி.
கழுத்தில் பெரிய மணி.
டிசைன் டிசைனாக் கட்டி இருக்கும்.
அதன் கனம் நிறையவே இருக்கும்னு நினைக்கிறேன் .
குனிந்த தலை நிமிராமல் புல்லை மேய்ப்தபடி இருப்பதைப் பார்த்துவிட்டு மகனிடம் விசாரித்தேன்.
அவன் சொன்னபடி,
இந்தப் பசுக்களுக்குக் குளிர்காலம் வரும் வரை எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவு சாப்பிடத்தான் இந்த வெயிட்டான ஏற்பாடு.
கழுத்துமணியின் பாரத்தினால் தலை நிமிரவே முடியாது.
சாயந்திரமானதும் கொஞ்சம் ரிலீஃப் இருக்கும்.
மறுபடி காலையில் இப்படியே மேய்ந்து கொண்டே இருக்கும்.
பசுக்களின் புஷ்டியைப் பார்த்து எனக்கு அதிசயப்பட்டு மாளவில்லை.
அதுதான் இந்த ஊர்ப்பாலும் அப்படி ஒரு சுவையாக இருக்கு என்று தெரிந்தது.
பால்,தயிர் எல்லாம் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
ஸ்விஸ் சீஸும் பிரபலம் தானே.
பாலில் ஷெர்மானி எனப்படும் பாக்டீரியாவைச் சேர்த்து ஸ்பெஷல்
சீஸ் வித் ஐஸ்(EYES) தயாராகிறது.
எனக்கு இதைப் பார்த்ததும் டாம் அண்ட் ஜெர்ரிதான் ஞாபகம் வந்தது.
சீஸுக்குள்ளயே இந்த ஜெர்ரி குடும்பம் நடத்துமே...:) :-) :)) :-))
இந்த ஸ்மைலி உபயம் நம்ம இ. கொத்தனார்.
அதனால இந்த சாக்கலேட் ,சீஸ் பதிவு அவருக்குக் கொடுத்தடறேன்.
அப்புறம் இந்தச் சாக்கலேட் தனியாப் படங்கள் போடணும்.
அந்த வாசனையே நமக்கு ஆகாமப் போயிட்டதாலே
*[பிடிக்கும். ரொம்பப் பிடிக்கும்.உடம்புக்கு ஒத்துக்காது]
அடுத்தபதிவிலெ பார்க்கலாம்.



ஒரு மருத்துவமனை விசிட்



எப்பொழுதும் யாருக்குமே

பிடிக்காத விஷயங்கள் எத்தனையோ இருக்கும்.

அதில் பள்ளிக்கூடத்துக்குப் போவதிலிருந்து,

பல் வைத்தியர் காது,மூக்கு,தொண்டை என்று லிஸ்ட் நீளும்.

நானும் அந்த வகையைச் சேர்ந்தவள்தான்.

எத்தனை நாட்கள் வேதனை தாங்க முடியுமோ அத்தனை நாள் பொறுத்துக் கொண்டு இனி நம்மால் முடியாது என்று வைத்தியரை அணுகுவது என் வழக்கம்.

எத்தனை நாளாக இந்தத் தொல்லை என்று அவர் கேட்டால் பொய் சொல்லவும் தெரியும்.

இதோ நேத்திலேருந்துதான் இப்படி இருக்கு என்றதும்

அவர் ஒரு மாதிரி தான் பார்ப்பார்.

என்ன மருந்து எடுத்தீர்கள் என்று கேட்டல் இருப்பதிலியே சாதாரண மாத்திரைகள் பெயர் சொல்லிப்

போக்கு காட்டுவதும் உண்டு.

அதே மாதிரி மெடிக்ளைம் இன்ஷுரன்ஸ் எடுக்கப் போனபோதுதான் எத்தனை இனிப்பான

நபர் நான் என்று தெரிந்தது.

மற்றவர்கள் நினைப்பு இத்தனை நாட்கள் ெப்படி வராமல் இருந்தது? இவள்தான் நாற்காலியில் இருந்து எழுவது

மூன்று வேளை தான்.

சாப்பிட,சாமிகும்பிட,தூங்க.

ரொம்ப நாளா இருந்து இருக்கும்.

இப்பதான் தெரிய வந்தது.

இப்போ நமக்கு வரும் ஞானம் எதிர்காலத்தைப் பற்றி.

முதல் கண்டிஷன் ரெகுலர் டைபெடிக் க்ளினிக் விசிட் .

அப்படி நேற்றும் எனக்குக் கட்டாய (:-)) பரிசோதனை

ஒன்று இருந்தது.

அப்படி வழக்கமாகப் போவது போல க்ளினிக்கிற்கு

சென்றேன்.

போனதும் கண்ணில் படுவது இரண்டு வகை மனிதர்கள்,

ரொம்ப குண்டாக இருப்பவர்கள்.ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள்.

எனக்கு ஏனென்று புரியவில்லை.

அப்புறம் இந்த டைபெடிக்கிலும் ரெண்டு ஜாதியாம்.

ஊசி போட்டுக்கிற ரகம் ஒல்லியா இருக்குமாம். மாத்திரை

(நான்) மட்டும் எடுத்துக் கொள்ளும் ரகம் (கொஞ்சம்)

ஓவெர் வெயிட்டாக இருக்குமாம்

இதல்ல நான் சொல்ல வந்தது.

நேற்று நான் போய் உட்கார்ந்ததும் என் கண்களில் பட்டவர்கள் என்னை ஆச்சரியப் பட வைத்தனர்.

ஒரே கலப்படமாக ஜோடிகள்.அம்மா பெண், கணவன்பெண்டாட்டியும், மாமியார் மருமகள்.

வயசான முன்பு பிரபலமாக இருந்த டாக்டர்,

ஒரு கர்னாடக இசைப் பாடகி

என்று.

அதில் ஒரு அம்மா தனியாகத் தெரிந்தார்,.

நாற்காலி பூராவும் அவர் நிறைந்து இருந்ததால்

அவருக்கு நம்ம 'சுகரினம்' என்று நினைத்தேன்.

அவர் கணவர் அவரைவிட சோகமாக தன்னுடைய முறைக்காகக் காத்து இருந்தார்,.

அவர் அந்த அம்மாவை என்ன , எல்லாம் ரெடியா வச்சு இருக்கியா, மருந்து டப்பா சரியா இருக்கா எல்லாத்தையும் கவனம் பண்ணிக்கோனு சொல்லிக் கொண்டே இருந்தார்.

அவங்களும் தலையை ஆட்டி சரி சரின்னு பதில் சொன்னாங்க.

அவர்கள் முறை வந்தது ,இருவரும் மருத்துவர் அறையில் போனார்கள்.

பத்து நிமிடத்தில் வெளியில் வந்ததும் கணவர் உட்கார்ந்து கொண்டார்,.

அந்த அம்மா அங்கிருந்த உதவியாளரிடம், பக்கம் போய் நின்று விவரம் கேட்டுக் கொள்ள ஆரம்பித்தார்.

அவர்களுக்குள் எதிர்பாராமல் வார்த்தைகள் சூடாக வந்தன.

அந்த அம்மா திடீரென ஆங்கிலத்தில் பேசஆரம்பித்தார்.

நாங்க வெளியூரிலிருந்து வருகிறோம்.

ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமென்றால் எங்களுக்கு முதலில் நீங்கள் சொல்ல வேண்டும்.//

"you shd have thought of informimg us before hand.

It is not easy to commute from chengalpat

and be told we have to stay here for three more days!!"

அப்படியே எல்லாரும் திகைப்புடன் பார்க்கும்

போது, எனக்குப் புரிந்தது யார் நோயாளி, யார் கூட வந்தவர் என்று,.

இந்த அம்மா நடக்கும் வேகத்துக்கும் அவர் உடலுக்கும்

சம்பந்தமில்லை.

அவர் தோற்றத்திற்கும் அவர் அறிவுக்கும்

சம்பந்தமில்லை.

அதே போல, வெள்ளையும் சள்ளையுமாய் இருந்த அவர் கணவருக்கும் அவர் உடல் நலக்குறைவுக்கும் சம்பந்தமில்லை.

அந்த அம்மாவுக்கும் அதிகாரம் செய்யும் அவர் கணவருக்கும் மட்டும் ஏதோ பொருத்தம் இருந்தது.

வெறும் சந்தர்ப்பங்களையும், உடை,தோற்றங்களையும் வைத்துமனிதர்களை அறிய முடியாது,

என்ற உண்மை மீண்டும் என் அறிவில் உரைத்தது.

என்ன பொருத்தம் உலகில் இந்தப் பொருத்தம்?

Sunday, May 20, 2007

உண்ணும் சோறும் பருகும் நீரும்
















ஸ்விட்சர்லாண்ட் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு.
ஏற்கனவே படைக்கப்பட்ட காலத்திலிருந்தே செழுமை.
அதைத் தொடர்ந்து அவர்கள் செழிப்பாக இருக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளும்,
இன்னும் தங்கள் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றிக்கொள்ள எந்த
வித இழப்பையும் தாங்கிக் கொண்ட விதம்.
அவர்கள் இந்த நிலையில் இருக்க அவர்கள் நடுனிலை அரசியலும் ஒரு காரணம்.
உலகம் முழுவதும் வலது,இடது என்று இரு பாகமாகப் பிரிந்தாலும்
தங்கள் நாடு பிரியாமல்
ஒற்றுமை காத்து இருக்கின்றனர்.
இத்தனைக்கும் வேறு வேறு மொழிகள் பேசுபவர்கள்.
ஜெர்மானியர், பிரெஞ்சு,இத்தாலியர்கள்
என்று பல மொழி பேசுபவர்களும்
ஜெர்மன் மொழியைப் பிரதானமாக எடுத்துக் கொண்டு
முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
உடல் அமைப்பைக் கொண்டு ஒரொரு இனத்தவரையும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
சர்வ சுதந்திரமாக அனைவரும் இயங்குகின்றனர்.
நல்ல சுகாதாரம்,படிப்பு,பணப் புழக்கம் இத்தனையும் சேர்ந்து உழைப்பும் உண்டு.
சரித்திரத்தை மறக்காமல் ஒரு சின்னத் தெருவைக்கூடக்
கட்டிக் காப்பாற்றிப் பிற்காலச் சந்ததியினருக்கு
தங்கள் பெருமை புரியும் வண்ணம் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.
நம் நாட்டு இளைஞர்களின் உழைப்பும் இப்போது இங்கே
பயன்பட்டு வருகிறது.
அநேகமாக எல்லாக் கணினி சம்பந்தப்பட்டத் தனியார் நிறுவனங்களும் இங்கே தங்கள்
பிரிவு அலுவலகங்களை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
மீண்டும் பார்க்கலாம்.

Saturday, May 19, 2007

புரிந்த மனிதரும் புரியாத மொழியும்


























இந்த ஊருக்கு வருவது ஒரு அலுப்பில்லாத நிகழ்வு.


பொட்டியைத்திற.


அங்கே போ, இங்கே போ விவகாரம் கிடையாது.




இறங்கினதும், பாகேஜ் கலெக்ஷன்,


வெளீயில் நடக்க வேண்டியதுதான்,


படிகள்


இறங்கினால் நாம் போக வேண்டிய ஊருக்கான வண்டி.


நம்ம ஊரிலிருந்து இந்த ஊர் வித்தியாசப்படுவது சத்தமில்லாமல் இருப்பது .




அதென்ன ,ஒரு குரலே எழும்பாமல் ஒரு மொழி பேசுவாங்களோ.~


அதுவும் முன்ன இருந்த இடத்தில மக்கள் அவ்வளவு மோசம் இல்லை




ஒரு ஹை, சொன்னா பக்கத்துவீட்டுக்காவது கேட்கும்.




இங்கே குழந்தைகூட அம்மாவைப் பார்த்துவிட்டு,அப்ரூவல்


வாங்கிண்டு தான் அழுகிறது


ஏகத்துக்குச் செழுமை.


விதவிதமான பூக்கள்.பாலுக்கும் அதன் கூடவே வரும் தயிர்,வெண்ணை


ஒன்றுத்துக்கும் குறைவில்லை.


முன்னரே சொல்லியபடி லாண்ட் ஆஃப் பிளெண்டி.


அதற்காக எல்லோரும் உடல் பெருத்து ,கனத்துக் காணப்படவில்லை.


அழகாக அளவோடுதான் இருக்கிறார்கள்.நல்ல ஆரோக்கியம். தொண்ணூறு


வயதுக் கிழவர்,கிழவிகளும் வாக்கிங் ஸ்டிக் உதவி இல்லாமல்


நிதானமாக நடக்கிறார்கள். வாழ்க்கைக்குத் தேவையான உற்சாகம்.சுதந்திரம்
எல்லாம்...சற்று மேலோட்டாமாக இருந்தாலும் , உணர முடிகிறது.
போக்குவரத்துக்குப் பயன்படும் டிராமில் ஏறினால்
வயதானவர்களுக்கும் ,குழந்தைகளுக்கும்,வளர்ப்புச் செல்லங்களுக்கும் முதலிடம்.
மீண்டும் பார்க்கலாம்.












Friday, May 18, 2007

பதிவு,பின்னூட்டங்கள்,லேபல்ஸ்,குறியீடுகள்







திரு திருனு முழிக்கிறது சகஜமான ஒண்ணுதான்.
இருந்தாலும்
எப்பப் பார்த்தாலும் தானே தனக்கு அறிவாளினு பட்டம் சூட்டிப்பாங்க.பக்கைத்தில வர அப்பாவிகளை
மட்டம் தட்டித் தட்டி, அவங்களுக்கு
ஏதோ துளி, புத்தி இருந்தாலும் மழுங்க வச்சுடுவாங்க.
நான் ஒண்ணும் பெரிய மேதாவியோ,மேல்தாவியோ இல்லை.
அதுக்காக இடத்,வலது தெரியலைன்னு சொன்ன்னா எப்படி.
இதோ நேத்திக்கு வண்டியில் வந்துகொண்டு இருக்கோம்.
இங்கேயோ எல்லாத்துக்கும் டான்க்கே சொல்ல வேண்டிவரது.
பஸ்ஸை ஓட்டி வந்தவர், பின்னால் பார்த்து
நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது
என்கிறார்.
இவர் ரைட் சொல்ல
நான் டான்க்கே சொல்ல
அவர் வண்டியை ஸ்டார்ட் செய்வதற்கு பதிலா நிறுத்த
வண்டி குலுங்க
மீண்டும் டான்க்கெ,பைபை,ஆவ் விடர்சன்,மெர்சி
எல்லாம் சொல்லி ஒரு வழியா இறங்கினோம்.
போச்சு. ,வெளில வந்தா ரைட்ல இறங்கணும்னு தெரியாதா_
நான்...நான் ரைட்லதான் இறங்கினேன், மறந்துபோய்
இறங்கிற பட்டனை மறுபடி அழுத்திட்டென்..என்று நான்
சொல்ல,
வீட்டுக்கு வந்ததும் மகனிடம்
>>பையா,அம்மாவை வெளில கூப்பிட்டுக் கொண்டு போக வேண்டியது நீயே
பார்த்துக்கோ.>>
மனுஷனுக்கு நிம்மதி இல்லாமல் போச்சு.
ஏறனும்னா இறங்கறா.
இறங்கணும்னால் நிக்கிறாள்
ரொம்ப டூ மச்///
என்று பொரிய
எனக்கு சிரிப்புதான் வந்தது.
மனுஷனுக்கு நான் மறுபடி எங்கேயாவது விழுந்து வைக்கப் போறேனோ என்ற கவலை.
இப்ப எனக்கென்ன கவலை தெரியுமா.
இந்த மடிக்கணினியில்
கமா,செமிகோலன்,கேள்விக்குறி ஒண்ணும் போட முடிய வில்லை.
எல்லாம் சிரிப்பாச் சிரிக்கபோகிறதே என்றுதான்.
இதோ பின்னூட்டம் போடமுடியலை.
பின்ன நானே கமெண்ட் போடலைன்னால்
யார் போடுவாங்க.
ஸ்விஸ் மலையப்பா நீயே காப்பாத்து.

Tuesday, May 15, 2007

பால் வாசம் வீசும் பசுமை
















அங்கே போய் இறங்கினதும் சிகாகோவில் நடந்த கோளாறுகளெல்லாம் தெளிந்து
ஒரு மாதிரி செட்டில் ஆகி முடிந்த வரை உதவியாக இருந்துவிட்டு'_
இங்கே ஸ்விட்சர்லாந்துக்கும் வந்தாச்சு .
இங்கே அவ்வளவு களேபரம் செய்ய வசதி இல்லை.
நிலைமை அப்படி.
நம்ம சொல்லுக்கு மேல் யாரும் சொல்ல மாட்டாங்களா...
அதுவே ஒரு சோதனை.
ஏதாவது வாயாடாமல் தினம் அமைதியாகப் போனால் போரடிக்குமே..
ஊரை விட்டுக் கிளம்பும்போது மாமரமே,தென்னை மரமேனு உருகினது போய்
இப்ப அமெரிக்கா பேரன்கள் சாப்பிட்டார்களோ.
பள்ளிக்கூட ஹோம்வொர்க் முடிக்க நேரம் இருக்கோ
இப்படி இரண்டு நாளாகச் சிந்தனை.
பூனைக் கண்ணை மூடிக்கொண்ட கதைதான்..,..
மீண்டும் வம்பு கிடைக்கும் போது எழுதுகிறேன்.
-

Friday, May 11, 2007

நல்ல பயணம்,இனிய ஆரம்பம்










பயணங்கள் முடிவதில்லை படத்தின் பெயர்தான் நினைவு வருகிறது.
உண்மையாகவே உடலால் மேற்கொள்ளும் பயனங்கள் ஓரிடத்திலிருந்து ஆரம்பித்து மறு இடத்தில் முடிகிறது.
மீண்டும் ஒரு அசைவு.
வாழ்க்கையின் வேறு வேறு நிகழ்வுகளும்,
அந்த அந்தப் பருவத்துக்கு ஏற்றவிதத்தில்
தொடங்குகின்றன.
ஆதலினால் , இயங்கும் சக்திக்கும் முடிவில்லை.
ஆசைகளுக்கும் அளவில்லை.
தொடரும் பந்தங்கள்,
நட்புகள் எத்தனையோ.
நினைக்காத விதத்தில் எனக்குக் கிடைத்த இணைய நட்புகள்
இங்கே வட அமெரிக்கா வந்ததும் பெருகின.
இப்போது ஆறு மாதங்களுக்குப் பிறகு
பிரியும் போதும்,
பதிவுகளில் சந்திப்போம் என்ற நம்பிக்கை இருப்பதால் பாரமாகத் தோன்றவில்லை
அழகிய அர்த்தமுள்ள இந்தப் பயணம் வேறு ஒரு இடத்தில் ஆரம்பிக்கீறது.
அங்கிருந்து மீண்டும் பேசிக்கொள்ளலாம்.:-)

Wednesday, May 09, 2007

சித்திர ராமன்.....18 யுத்தம் முடிந்தது, ஸ்ரீராமஜயம்











பதினெட்டு பதிவாக வந்துவிட்டச் சித்திரம்,
பதினெட்டு நாள் யுத்தம் முடியும் வரை வந்துவிட்டது.
கும்பகர்ணனின் வீரமூம் விஸ்வாசமும்,
இந்திரஜித்தின் நிகும்பலையும்,
மண்டோதரியின் அழியாத பதிபக்தியும் ராவணனைக் காக்கத் தவறின.
அனுமனின் சஞ்சீவி சாகசம்,
ராமனுக்குச்
சூரியக் கடவுளின் மந்திர உபதேசம்,
ராமனின் கருணா விலாசம்,
இலக்குவனின் பக்தி,




சகல வானரங்களின் உற்சாகம்
எல்லாவற்றிற்கும் மேல் நன்மையே ,
தர்மமே
வெல்லும் என்ற உறுதிப்பாடு
இவையே யுத்தகாண்டம் முழுக்கக் காண்கிறொம்.
வானர சேனைகள் சகிதம்ஸ்ரீராமன்
இலங்கையில் கால் வைத்த முகூர்த்தம்,ராவணனின்
நெஞ்சில் பாரம் ஏறியது..
உப்பரிகையில் நின்று ராம சைன்யத்தை
அளவிடுகிறான்.
ராவணன் நிற்பதை ராமனும் பார்க்கிறான்.
அப்போதும் அவனுக்கு தூது அனுப்பி,
ரத்தம் சிந்தாமல்
சீதையை மீட்கத்தான் தோன்றுகிறது.
அங்கதன் தூது செல்ல , தோல்வியுற்று வருகிறான்
ராவணனின் மனதில் மாற்றம் இல்லை.
யுத்தம் துவங்கி 18 நாட்கள் ,சமர் நடக்கிறது.
சகல அரக்கர்களையும் அழித்து,
யுத்தம் முடிகிறது.
ராவணனோடு மண்டோதரியும் உயிர் துறக்கிறாள்.
சீதாபிராட்டியின் அக்கினிப் பிரவேசம் முடிந்து,
ராவணனுக்கு உண்டான கிரியைகளை விபீஷணன் முடித்து,
அனைவரும்
பூரண மனமகிழ்ச்சியுடன்
அயோத்தி நோக்கிப் புறப்படுகிறார்கள்.
அவர்களுக்கு முன்னால் ஸ்ரீராம நாமம் பதித்த கணையாழியுடன்
அனுமன் சென்று,
, பரதனையும், குகனையும் காக்க.
ராமன் வரவுக்குமுன்னால் அவர்களுக்கு நல்ல செய்தியைக் கொடுத்து அவர்கள் உயிரையும் மீட்கிறான்.
அனுமா உன் நாமம் வாழி.
மரவுரி நீக்கி ராம,லக்குவ, சீதை
அயோத்திப் பிரவேசம் நடக்கிறது..
பிரிந்தவர்கள் கூடுகிறார்கள்.
வசிஷ்டர் ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்கும் நாள் குறித்துவிடுகிறார்.
அந்தப் புண்ணியநாளும் வந்தது வசந்தமாக.


























ஸ்ரீராம பட்டாபிஷேகம்
வைதேகி சகிதம் சுரத்ரு மதலே
ஹைமே மகாமண்டபே//
மத்யே புஷ்பகமாசனே
மணிமயெ வீராசனே சூஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்சன சுதே
தத்வம் முனிப்யபரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபிஹி பரிவ்ருதம்
ராமம் பஜே ச்யாமளம்//
ஸ்ரீராம வள்ளலுக்கு, சுவாமிக்கு வசிஷ்டர்
உலகின் புனித நீரெல்லாம் நிரம்பிய குடத்தைக்
கையில் பிடித்து ராஜ்யாபிஷேகம் செய்கிறார்.
சுந்தரவதனன் என்றும் மாறாத புன்னகையோடு மணிமுடி ஏற்றுக்கொள்ளுகிறான்.
அருகில் வைதேஹி,
சீதாபிராட்டி ,நம் தாயார் இந்தப் பட்டாபிராமனைப் பார்த்துப் பூரிக்கிறாள்.
பரதன் குடை பிடிக்க,
இலக்குவனும் சத்ருக்கினனும் சாமரம் வீச,
அங்கதன்
அரியாசனத்தைத் தாங்கிப்பிடிக்க
அனுமன் கைகூப்பி என்றும்
பக்தனாய்ச் சிரஞீவியாய் நிற்க
சுற்றமெல்லாம் மங்கள கோஷம் எழுப்ப
ராம பட்டாபிஷேகம் இனிதே பூர்த்தியானது.
ஸ்ரீராம கதையைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும்
பூரண ஆயுசும்
சகல சம்பத்தும், புத்திர பாக்கியமும்,
பித்ருக்களின் ஆசியும் பரிபூரணமாக இருக்கும்.
எப்போதெல்லாம் மனம் சஞ்சலப் படுகிறதோ அப்போதெல்லாம் ராமனையும்,
அவன் தூதனான அனுமனின்சுந்தர வைபவத்தையும்
நினைத்து ருசிப்பவர்கள்,
படிப்பவ்ர்கள்
என்னாளும் சோர்வடைந்தது இல்லை.
எல்லாம் நலமே.
ஸ்ரீராகவம் தசராத்மய அப்ரமேயம்
சீதபதிம் ரகுகுலான்வய ரத்ன தீபம்
ஆஜானு பாகும் அரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர வினாசகரம் நமாமி.
அன்புச் சக பதிவர் அனைவருக்கும் நன்றி.
ஆயிரம் பிழைகள் இருக்கும்,.
சொல், எழுத்து, வழ்ங்கிய விதம்
என்று
அனைத்துப் பிழைகளையும் பொறுத்து
படித்தவர்கள்,
உங்களுக்கு எப்போதும் நன்றி.
ஆனாலும் ராமன் இங்கே தன் நாமத்தைத் தந்து
எழுதவைத்தான்..
அதனாலேயே சித்திர ராமாயணம் பதிய முடிந்தது.
ஜெயஜெயராம் ஜானகிராம்.

Saturday, May 05, 2007

கிராண்ட் கான்யான் 3











ஐமாக்ஸ் பெரிய திரையில்
கிராண்ட் கான்யான் பிறந்த கதையைச் சொல்லுவார்கள் என்று ஆசையுடன் போன எனக்கு அதன் நிகழ்கால
மூவாயிரத்துச் சொச்ச கதையைக் காண்பித்தார்கள்.
ஏதோ அட்வெஞ்சர் படம் பார்த்த நினைவு வந்தது.
இருந்தாலும் வரலாறு தானே.
ரசிக்கும்படியாகவும் இருந்தது.
கொஞ்சம் ரீல் கொஞ்சம் ரியல் என்று 30 நிமிடப் படம்.
அதிரடியாக ஓடும் கொலராடோ நதி இத்தனை ஆழத்தில் இருக்கிறதே என்று வருத்தமாக இருந்தது.
நேரே பார்க்க முடியாவிட்டால் ,
என்ன பலன்?
இந்தப் பள்ளத்தாக்கு,(?)
ஒரு மைல் ஆழம்.
விஸ்தீரணம் 277 மைல்கள் நீளமும்
கிட்டத்தட்ட 12 மைல்கள் அகலமும்
இடத்துக்கு இடம் வித்தியாசமாக இருக்கும் என்றார்கள்.
மலையைச் சுற்றி வர 7 நாட்கள்
கூட எடுக்கலாமாம்.
அங்கேயும் குடி இருப்பவர்கள்.
ஹோட்டல்கள்,
காபின் அமைப்பில் இருந்து கொண்டு நடப்பவர்கள்.
பூகோள ஆராய்ச்சி செய்பவர்கள்,
விடுமுறை கழிக்க வந்தவர்கள்,
என்று ஒரு சிறிய நகரமே இயங்குகிறது.
வயதானவர்கள் நல்ல உடல் நலத்தோடு
இரு கைகளிலும் வாக்கிங் ஸ்டிக் உதவியோடு கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
போக மூன்று, ஏறி வர ஐந்து மணிநேரம் என்று நல்ல ஆரோக்கியத்தில்
இருப்பவர்களுக்கே
அவ்வளவு நேரம் ஆகுமாம்.
நமக்குத் தான் இன்னோரு வீக்னஸ் உயரமாச்சே.
என்னுடைய உயரம் பத்தி சொல்லலை.
க்ராண்ட் உயரத்தைச் சொல்கிறேன்.
வியூ பாயிண்ட் என்று ஏகப்பட்ட இடங்கள்.
அதிலேருந்து பார்க்கும்போது ஏஞ்சல் கான்யான் தான் ரொம்பப் பிடித்தது.
மேலிருந்து பார்க்கும்போது அதுபாட்டுக்கு ஒரு குட்டிக் கான்யானாகப் போய்க் கொண்டே இருந்தது.
நல்ல பச்சை நிறத்தில் கீஈஈஈஈஈஈஈஈஈழேஏஏஏ
கொலராடொ நதி நெளிந்து கொண்டிருந்தது.
அதில் வெள்ளைநிற ராபிட்ஸ் (rapids) நுரைத்துக் கொண்டுபோவதும் தென்பட்டது.
river rafting நடக்கிறது.
மியுல்ஸ் எனப்படும் கோவேறு கழுதைகள் கட்டிவைக்கப் பட்டுக் காத்திருக்கின்றன.
நானென்ன வைஜயந்திமாலாவா.
பாட்டுப்பாடவா கேட்டுக்கொண்டே
அதுமேல் போக.
கண்ணால் எல்லவாற்றையும் ஆசீர்வாதம்தான் பண்ணமுடியும்:-)
எதற்கு என்கிறீர்களா.
அங்கே வந்த இரட்டை நாடி தேகங்களைச்
சுமந்து கொண்டு நடக்கணும்.
கால் வழுக்காமக் கொண்டுபோய்ச் சேர்க்கணூம்.
இதுக்கெலாம்தான். அதுகள் பாவம்தானே.
எனக்கென்னவோ சு. என் சுந்தரி கதையில் நாகேஷ் விரட்டப் பின்னாலேயே போகும் குதிரை
தான் ஞாபகம் வந்தது.;-0)
எனக்கு அதுமாதிரி ஏறிப் பயணம்
செய்ய முடியாதேங்கிற பொறாமையாக் கூட
இருக்கலாம்:-)
இப்படியாகத்தானே சுற்று முற்றும் பார்க்கும்போடு,
கிடைத்த கூழாங்கற்கள்,
மரத்துண்டுகள் எல்லாவற்றையும் பொறுக்கிக்
கொண்டோம் நானும் என் பேரனும்.
அவ்வப்ப்போது
மலை முனையில் காலைத் தொங்கப்போட்டுக்
கொண்டுப் போஸ் கொடுக்கும் ஜோடிகள், காளைகள்
கன்னிகள் எல்லோரையும் வேடிக்கை பார்த்தேன்.
வியர்டூனு சொல்ல முடியாது.
அதற்கு மேலோர்கள் அவர்கள்.
கரணம் தப்பினால் மரணம்
என்ற நிலையில் ,
புகைத்தபடி,
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதானு பாட வேண்டுமா:-)
ஓ.இவர்கள் அனைவரும் 'ஹார்லீ டேவிட்சன்
பைக்கர்ஸ்.'
இவங்க தனி உலகத்தைச் சேர்ந்தவர்கள்.
அதற்குப் பிறகு வருண ராஜா வந்துவிட்டார்.
அதனால் படங்களை அடுத்த பதிவில் போடுகிறேன்.