
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்.. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.
உண்மை தான். அன்பு வார்த்தைகள் அதிகம் பேசாமல்
முதுமை கழிவது மிகச் சிரமம்.
அதைவிடச் சிரமம்
செய்யாத செயலுக்குப் பழி ஏற்பது. லக்ஷ்மிப்
பாட்டி ஒரு தடவை இது போல மாட்டிக் கொண்டார்.
மருமகள் கணவனிடம் சொல்ல,
மகன் பாட்டியிடம் சுடு சொல் சொல்ல
பாட்டி விழித்தார்.
நான் ஒண்ணும் சொல்லலியேப்பா.
பக்கத்துவீட்டுச் செல்லியிடம் சாதாரணமாகத்தான் சொன்னேன்.
அவளுக்கு ஏதோ மனக்குறை. சரியா சாப்பிட முடியலை. ஒவ்வொரு தடவையும்
அவள் ...மருமகள்
கணக்கு எழுதும்போது நான் ஏதோ தப்பு செய்யற மாதிரி இருக்கு. இப்படின்னு.,,,,,
புத்திசாலிதான் அவள். 65 வயதில் இத்தனை கிழடு தட்டிப் போச்சென்னு
வருத்தமாக இருந்தது.
ஆதரவா நாலு வார்த்தை சொன்னேன். அவளுக்கு நாலும் பிள்ளைகள்.
இரண்டு நாட்கள் அங்கே போய் இருந்துவான்னு.
மத்தபடி இந்த அகத்தைப் பற்றிப் பேசலியே என்று.
இனிமே அங்கே போகாதே. நீ அவளைவிடப் பெரியவள்.
எத்தனையோ சௌகர்யமாக இருக்கிறாய்,
வாயால் கெடுத்துக் கொள்ளாதே என்று பொரிந்துவிட்டுப் போய்விட்டான்.
ஆஹா,நமக்கென்று ஒரு நல்ல தோழி இருந்தாள்.
இனி எப்படி என்றவளுக்கு, வரப்பிரசாதம் பேத்தி வழியாகக்
கிடைத்தது. புத்தக சந்தையில் வாங்கியதாக, லக்ஷ்மி கடாக்ஷம்,
அமரதாரா, கள்ளிக்காட்டு இதிகாசம் எல்லாம்
கொடுத்துவிட்டுப் போனாள்.
கையில் வைத்துப் படித்தால் கை வலிக்கும் என்று கூடவே
ஒரு அலுமினிய மேஜையும் வாங்கி வந்திருந்தாள்.
நெல்லுக்கு இறைத்த நீர் பாடல் தான்
நினைவுக்கு வந்தது லக்ஷ்மி பாட்டிக்கு.
தாளுண்ட நீரைத் தலையால் தரும் தென்னை
போன்ற பேத்தியை ஆதரவுடன் அணைத்துக் கொண்டாள்.