Blog Archive

Sunday, May 14, 2017

அன்னையர் தின வாழ்த்துகள் மே 14 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
என் அம்மாவுக்கு என் தலை முடியை சீவி
சிடுக்கெடுத்து, நீண்ட பின்னலை
சிலும்பில்லாமல் பின்னி, துளியே துளி
நுனி முடி விட்டு ரிப்பனும் கட்டிவிடுவதில்
அத்தனை இஷ்டம்.

என்னைவிட அடங்காப் பிடாரியாக என் முடி சிடுக்குகள்.
எண்ணெய் தேய்த்து, கண் எரியாமல் உசிலம்பொடி
போட்டு அலசித் தேய்த்து ,உலர்த்தி,
சொகுசாக சாம்பிராணிக் கூடையில் உலர்த்தி
 இரட்டைப் பின்னல் வெள்ளியன்று உண்டு.
தலையில்  ஏதோ திண்டுக்கல் உஷ்ணத்தில்  வந்த கட்டிக்காக எத்தனை கைவைத்தியம்
பார்க்கமுடியுமோ அத்தனையும் செய்தாள்.
சிறிவெங்காயம் அரைத்து வதக்கிப் பற்றுப் போடுவாள். அவள் போற்றீப்
பாதுகாத்த முடியைக் காப்பாற்றமுடியாமல் இருபது வருடங்கள் தவித்தேன்.
என் மாமியார் இறைவனிடம் சென்றவுடன் மெல்ல ஆரம்பித்தது
முடிவெட்டும் புராணம்.
என் மகளின் தோழிகள் அதிர்ந்தார்கள்.வேண்டாம் ஆன்ட்டி
என்று சொல்லிப் பார்த்தார்கள் .அவர்கள் அனைவருக்கும் நீளமுடிதான்
என் பெண்ணையும் சேர்த்து.
 கொத்தமல்லிக்கட்டாக முடிந்த முடியை
இதோ இரண்டு வருடங்களாக அம்மாவுக்காக வளர்க்கிறேன்.
இந்த வயதில் தேவையா என்று தோன்றினாலும்,
பாவம் எங்க அம்மா எங்கிருந்தாவது
பார்த்துக் கொண்டிருப்பார்,மகிழ்வார் என்றே நம்புகிறேன்.
என் பேத்திகளுக்கும்  நீளமுடிதான். ஒரு அங்குலம்.
கூட  நறுக்க விடமாட்டார்கள்.

14 comments:

'பரிவை' சே.குமார் said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்...

இராய செல்லப்பா said...

நீளமான கூந்தல்...அடடா...அந்த நீளத்தின் அழகே அழகு! இன்றோ, அதை நாலில் ஒரு பங்காகக் குறைத்து, அப்படி குறைக்கப்பட்டதற்கு அலங்காரம் செய்வதற்கே மாதம்தோறும் முன்னூறு ரூபாயாவது செலவழிக்கும் நடுத்தர மக்களைப் பார்க்கும்போது ..அந்தக் காலத்து அன்னையர்கள் எப்படிப் பொருமுவார்கள் என்று எண்ணிப்பார்க்கிறேன்.... அவர்களின் பொறுமை கடலினிற் பெரிதுதான்! வாழ்க அன்னையர்கள்!

-இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

நெல்லைத் தமிழன் said...

உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். இப்போவும் நீள் சடையாக வளர்க்கும் பெண்கள் இருக்கிறார்களா? ஆச்சர்யம்தான்.

ஸ்ரீராம். said...

அம்மாவின் நினைவு. அன்னையர் தின நல்வாழ்த்துகள்மா

Angel said...

அம்மாவின் நினைவுகள் அருமைம்மா ..நானும் அதே வேலைதான் செய்தென் ..சின்னதில ரெண்டு பின்னல் எண்ணெய் சீயக்காய் போட்டு மயில் தோகை போல வளர்த்ததை போனி டெயில் ஆக்கிட்டேன் ..ஆனா அதை இனி வளர்க்க கஷ்டம் என்னால் முடிஞ்சது இப்போ விதவிதமா சமைக்கிறேன் :)
அழகான நினைவுகள் .இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

அன்பு பரிசை குமார் வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

சிகை பராமரிப்பு என்பது பெரிய விஷயம் திரு செல்லப்பா.
அந்த நாட்களில் அன்னையர் கைகளில் வளம் பெற்றது.
இன்னாட்களில் அழகு நிலையங்களில் தலையைக் கொடுத்துவிடுகிறார்கள்.

அது இந்தத் தலைமுறைக்கானது.
மழித்தலும் நீட்டலும் வேண்டா. உலகம் பழிக்காமல் வாழ்ந்தால் போதும்.

வல்லிசிம்ஹன் said...

எல்லாருக்கும் ஆனதுதான் அன்னையர் தினம்.நெல்லைத்தமிழன்.
உங்கள் அம்மாவுக்கும், மனைவிக்கும் என் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். அம்மாவின் நினைவு எங்கே போகும். நம்மையும் பின்னாட்களில் மக்கள் நினைப்பார்கள். அன்பு வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல், அம்மாக்களின் மனம்,கைகள்
எல்லாம் மகள்கள் நலத்தில் தான். நீங்களும்
உங்கள் மகள் மேல் பாசம் பொழிந்த வண்ணமே இருப்பீர்கள்.
அவளும் உங்களைப் பற்றி எழுதுவாள். இப்படியே ஒரு அன்புப் பரம்பரை தொடரும். இந்த இணைய அன்னையிடமிருந்து உங்களுக்கு வாழ்த்துகள் மா.

Anuprem said...

அருமையான நினைவுகள் அம்மா..

எங்க அம்மாவும் முடி வளவதர்க்காக இன்னுமும் எனக்கு எண்ணெய் காய்சி தராங்க...


அம்மாக்களின் அன்புக்கு அளவேது...

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுராதா., அம்மாவும் எனக்கு செம்பருத்தியும்,மெந்தியம் கலந்து
வெய்யிலில் வைத்து எனக்கு அனுப்புவார்.
அன்னையர் வாழ்க.

ராமலக்ஷ்மி said...

நிச்சயம் அம்மா மகிழ்வார். பேத்திகளுக்கும் நீள முடி என்பது மகிழ்ச்சி.

ஒவ்வொரு வாரமும் எண்ணெய்க் குளியல் போக, வீட்டில் காய்ச்சிய கற்றாழை எண்ணெய் தேய்த்து அம்மா பராமரித்த காலத்தில் எனக்கும் முடியின் அடர்த்தி அதிகமாக இருந்தது.
குறிப்பாகப் பள்ளி வயதில், இரு கைகளால் சேர்த்துப் பிடிக்க முடியாது உன் கூந்தலை என இப்போதும் அம்மா பெருமூச்சுடன் சொல்கிறார்கள்:).

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் எனக்கு அவ்வளவு நீளம் இல்லைனாலும் அடர்த்தி அதிகம். இப்போதோ தலையில் இடைவெளி தெரிய ஆரம்பித்து விட்டது! வயது, நோய் என்று காரணம் இருந்தாலும் நான் முடியின் நீளத்தைக் குறைத்தது இல்லை. எங்க பெண் அமெரிக்கா சென்றதும் அவளோட அழகான கூந்தலைக் குட்டையாக வெட்டிக் கொண்டதும் நான் மனதளவில் தவித்தேன். இந்தக் கூந்தலுக்கு எவ்வளவு போஷாக்கு செய்திருக்கோம்னு நினைவலைகள் தோன்றின.