Thursday, March 31, 2016

அடை மாங்காய் ஊறுகாய்



  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அடை மாங்காய் ஊறுகாய்.
+++++++++++++++++++++++++++++++
 பாட்டியின் ஸ்பெஷாலிடி  இந்த ஊறுகாய்.
பெரும்பாலும் ருமானி மாங்காய் உபயோகப் படுத்துவார்.
 அவரவர் வீட்டு அரிவாள் மணைகளை எடுத்துக்கொண்டு 
அக்கம்பக்கம்  மாமிகள் வந்துவிடுவார்கள்.
கொத்தவால் சாவடியில் இருந்து வாங்கிவந்த மாங்காய்கள் மூட்டை நிறைய இருக்கும்.
  அவரவர்  முடிந்த வரை அரிந்து தள்ளிவிடுவார்கள்.
நாலைந்து விறகடுப்புகள்  திகுதிகு என்று எரிந்து கொண்டிருக்கும்.

அதில் இரண்டு படி கொள்ளும் அண்டாக்கள். உள்ளே ஈயம் பூசப்பட்டவை.

அவைகளில் பாதி அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றப்படும். மாங்காய்த் துண்டுகள் உப்பில் புரட்டப் பட்டிருக்கும்.
ஒருபடி மாங்காய்த் துண்டுகளுக்கு இரண்டு ஆழாக்கு உப்பு தூள். இரண்டு ஆழாக்கு மிளகாய்த்தூள்,
ஒரு கட்டிப் பெருங்.

காயம் வறுத்துப் பொடி செய்யப் பட்டிருக்கும். மஞ்சள் பொடி
ஒரு ஆழாக்கு. மெந்தியம் வறுத்துப் பொடித்தது அரை ஆழாக்கு.

இங்கே ஒரு படி என்பது எட்டு ஆழாக்கு.
கிட்டத்தட்ட ஒண்ணரைக் கிலோ.
இப்போது ஒரே ஒரு அடுப்பைப் பார்க்கலாம்..
அதில் அண்டாவில் ஒன்றரைக் கிலோ எண்ணை ஊற்றிக் கொதிக்க வைப்பார்கள்.
சூடானதும் இரண்டு கைப்பிடி கடுகு முதலில் போட்டு வெடித்ததும்
உப்பு மாங்காய்த்துண்டுகள்  போடப்படும்.
தளதள வெனக் கொதிக்கும் போது அடுப்பைக் குறைத்துவிடுவார்கள்.
மரக்கரண்டி பெரிதாக இருக்கும் அதனால் அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டிருப்பார்கள்.
ஏதோ கணக்குப் பார்த்து,ஒரு துண்டை எடுத்து பதம் பார்த்து வெந்துவிட்டதா 
என்று உறுதி  கொள்வார்கள். உடனே மஞ்சள் பொடி,மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி போடப்பட்டு மீண்டும்  விரைவாகக் கிளறுவார்கள்.
அதற்குள்  ஊறுகாயை ஆற வைக்கும்  பாத்திரம் தயாராகும்.
எண்ணெய்  மேலாக வந்ததும் அந்த அடுப்பு அணைக்கப் படும்.
இரண்டு பேராக அந்த அண்டாவை இறக்கிவைப்பார்கள். ஆறிய
 பின் வறுத்துப் பொடித்த மெந்தியத்தூள்   ஊறுகாயின் மேல் தூவப்பட்டு மீண்டும் மேலும் கீழுமாகக்  கிளறப்படும்.
அப்போது  தெரியும் துண்டாக உள்ளே அனுப்பப்பட்ட மாங்காய் உருமாறியோன்றோடொன்று ஒட்டி இருக்கும்.  அதனால் தான் அந்த அடைமாங்காய் என்ற பெயர்.

ஆறும் வரை ஊர்க்கதைகள் பேசப்படும்.
மீண்டும் குளிர்ந்த பாத்திரத்துக்கு மாற்றப்படும்.
இதற்காகத் தயாராக இருக்கும் உயர ஜாடியில் மரக்கரண்டியினால் மாற்றப்படும்.
 யாருக்கு வேணும்  அடை மாங்காய்.....






































.

Monday, March 28, 2016

கீரை வடையும் நானும். 1982

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வடைப் பிரியர்களால் நிறைந்தது இந்த உலகம்.
எலியிலிருந்து  ஏந்தி பவன் வரை
 மடைப் பள்ளியிலிருந்து  மரினா கரைவரை எங்கும் வடை மணம்.

என் மாமா எனக்கெழுதிய கடிதத்தில் மாமி செய்த கீரைவடையை வெகுவாகச் சிலாகித்து
என்னை இன்ஸ்டண்ட் கீரை வடை மோகத்தில் ஆழ்த்திவிட்டார்.
கூடவே நீ தில்லி வந்தால் வடை கிடைக்கும் என்று சவால் வேற.

இது ஒரு வருடக் கல்லூரி வாழ்க்கை முடிந்து ,மதுரையில்
ஃபெமினா,பொம்மை,பழைய தொடர்கதைகள், ரேடியோ சிலோன்
 என்று  நேரம் கழிந்த காலம்.

இந்தக் கீரைவடை படித்ததும்  அம்மாவிடம் சொன்னேன். மாவில் கீரையை அலசிப் போட்டு
   வறுத்தெடுத்தால் போதும்  என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
அம்மாவுக்கு  என் சமையலறை  வேகம் விவேகம் இரண்டுமே தெரியும்.
  ஒரு நாள் செய்கிறேன் என்றார்.
அதற்குள்  வாழ்க்கை திருமணத்தைப் பார்த்துத் திரும்பிவிட்டது.
தில்லியிலிருந்து வந்திருந்த  மாமியிடம் கேட்டேன். கீரை வடை சாப்பிடலாமே போறேனுன்னு.
மாமி அழுதுவிட்டார்.
    இதை நான் எதிர்பார்க்கவில்லை. அச்சோ மன்னி அந்தவடையை நான் போகுமிடத்துகல் எப்படியாவது பழகிக் கொள்கிறேன்   என்று சொல்லி சமாதானப் படுத்தினேன்.

          கீரைவடையை மறந்தும் போனேன்.
பிறகு  பத்துவருட தனிக்குடித்தனம் முடிந்து மாமியார் வீட்டுக்கும் வந்துவிட்டோம்.
கீரை வடை மட்டும் அங்கிருந்த சமையற்காரர் செய்யவில்லை.

வேறு என்னவெல்லாமோ டிபன் காஞ்சீவரம் இட்லி, அழகர் கோவில் தோசை,
சேம்பு இலை அடை  என்றெல்லாம்  வந்தாலும் எனக்கு ருசிக்கவில்லை.
கொக்குக்கு ஒண்ணே மதி..
 அப்பொழுது கிண்டி அருகே தனி  பணிமனையும், லேத் பட்டறையும்   வைத்து நடத்தி வந்தார் சிங்கம்.
மதியம் சாப்பாடு வீட்டில் தான்.
அப்போது ஒரு நாள் வாசனையாகப் பொட்டலம்  ஒன்று கொண்டுவந்தார். ஆஹா மிளகாய் பஜ்ஜி
  என்று பிரித்தேன். அங்க இருந்ததோ வண்ண மயமான  பச்சைப் பசெல் என்ற கீரைவடை.
மசாலா வடைதானேமா என்றி வரிடம் கேட்டதற்கு, கீரை சேர்த்திருக்கான் மா. அதுவும் ஸ்பினச்
என்றதும் ஆ  வென வாய் பிளந்தேன்.
கிண்டி ராஜ் பவன் அருகே ராஜ்பவன் என்றே ஹோட்டல் ஒன்று இருக்கும். அங்கு போனபோது,
குடும்பத்துக்கும் கொண்டு வந்துவிட்டது சிங்கம்.  என் வடை மோகம் பற்றி அவருக்குத் தெரியாது.ஏதோ மனல்ல அலைவரிசை இருந்ததால் அவர் வழியாக எனக்குக் கீரைவடை கிடைத்தது.
பிறகு கேட்பானேன். தினசரி வடை பஜ்ஜியோடு  சாப்பாடு.
         இதுவரை  நான் கீரைவடை செய்யவில்லை.



Saturday, March 26, 2016

இங்கு இளவேனில் ஈஸ்டர் விடுமுறை

எல்இப்போது சின்னப் பசங்க எல்லாம்
எங்க வீட்டில் வருபவர்களும் போகிறவர்களும் ஒரே மும்முரமாக இருக்கும்.
வெளியில் அழைத்துப் போவது என்பது ஆடி,அமாவாசை கணக்குத் தான்.
காப்டன் ஹாடாக்,டின் டின், ஸ்னொயீ ,கால்குலஸ்
இவர்கள் எல்லொரும் எங்கள் வாழ்க்கையில் நுழைந்தது அப்போது அந்த வருடங்களில்தான்.
எல்லொரும் காமிக்ஸ் புத்தக பாத்திரங்கள்.
ஆஸ்டரிக்ஸ்,ஓபிலிக்ஸ் இவர்களும்
எங்களோடு இணைந்ததும் இந்தக் காலத்தில்.
.







அப்போ எல்லாம் மழை வரும், இது ஒரு மழைக்காலம் என்று சொன்னால் மழை பெய்யும். அநேகமாக செப்டம்பர் மாத விடுமுறைகளில் மேய்த்துக் கட்டுவது மகா சிரமம்.
எத்தனை தடவை காரம்போர்ட் விளையாடுவது, டிரேட்,சீட்டுக் கட்டு எல்லாம் அலுத்த பிறகு வானம் வெளி வாங்கும் நேரம்,
அவர்களை அழைத்துப் போக ஒரு நல்ல இடம் மௌண்ட்ரோடு எனும் அண்ணாசாலைதான்.
முதலில் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யுட்.
மூன்று மாடிகளும் பார்த்து, ஒரு கூடை, ஒரு பிள்ளயார், ஒரு சிப்பி(எல்லாம் சேர்ந்து 30ரூபாயில் அடங்கி விடும்.) அடுத்த படையெடுப்பு ஸ்பென்சர் கட்டிடம். அங்கே போய் இருக்கும் கடைகளைப்பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல்---எல்லாம் பட்ஜெட்டுக்கு மேல் இருக்கும்.
அடுத்து நடந்து ஹிக்கின்பாதம்ஸ் வருவோம்.நடுவில் கொறிக்க ஏதாவது உண்டு.ஹிக்கின்ஸில் குழந்தைகள் பக்கம் இப்போது போலவே நல்ல புத்தகங்கள் இருக்கும்.ஒன்றொன்றாகப் படித்து விட்டு கடைசியில் ஒரு மனதாக லேடிபேர்ட் புஸ்தகம் ஓன்றும் (5ரூ) டின்டின் புஸ்தகம்(18ரூ) ஒன்றும் வாங்கி வருவோம்.
ஸ்பெஷல் டிரீட் ஆட்டொவில் வீடு வருவதுதான்.பிறகு வீடே கலகலப்பாகி விடும்.
முதலில் பெரிய பாட்டியிடம் வாங்கி வந்த பொருட்களைக் காண்பிக்க வேண்டும்.பிறகு சின்னப் பாட்டியிடம்(ஆங்கிலம் படித்த பாட்டி) சொல்ல வேண்டும். அவர்கள்இருவரும் அவசியமான கேள்விகளைக் கேட்டு இவர்கள் மூவரும் பதில் சொன்ன பிறகுதான் படிக்கும் படலம்.
இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்.இவைகளைத் தவிர லெண்டிங் லைபிரரிப் புத்தகங்கள் ,,திருப்பிக் கொடுக்கும் நாளுக்கு முன்னால்காணாமல் போகும்.
.டியூ டேட் முடிந்து பள்ளிக்ககூடம் திறந்த பிறகு, நான்தானேஇருப்பதை திருப்பி கொடுக்கப் போக வேண்டும்!
எங்க வீட்டு மூன்று தலை முறைக்கும் நான்தான் லைபிரரி உமன்.பெரிய பாட்டியோட வடுவூர் துரைசாமி,வை.மு.கோதைநாயகி அம்மாள்.
மாமியாருடைய லக்ஷ்மி,தேவன், கல்கி புத்தகங்கள்,
என்னுடைய சிவசங்கரி,சுஜாதா, பி வி ஆர், சாவி ,வாசந்திஇதற்குப்பிறகு பசங்களோட புக்ஸ்.
விடுமுறை முடிந்து எல்லாப் புத்தகங்களையும்
திருப்பிக் கொடுக்க எடுத்தால்
இரண்டு மூணு காமிக்ஸ் காணாமல் போயிருக்கும்!
இப்பவும் சொல்லுவார் அந்த லைபிரரிசொந்தக்காரர்
105 ருபா புஸ்தகம் வரவே இல்லைம்மா என்று.

நான் என்ன சொல்லுவேன்?புத்தகங்கள் பைண்டு செய்து ஸமத்தாகச் சின்னவனோட அலமாரியில் இருக்கிறது என்றா?
அதற்குப் பிறகு அவர் கடைக்கே நிறைய புத்தகங்களைசும்மாவாகவே கொடுத்து சரி பண்ணி விட்டேன்.அதுவும் இந்த புத்தகங்கள்,
லியான் யுரிஸ், அலிஸ்டர் மாக்லீன்,

ஹாட்லி சேஸ்,
ஹரால்ட்ராபின்ஸ்,மரியோ பூசோ,இர்விங் வாலஸ்,ஆர்தர் ஹெய்லி,இயன் ஃப்ளெமிங்,பீட்டர் பென்ஜி லி ஆகியவர்களின் பேப்பர்பாக் நாவல்கள்.


மேலும் சிலருடைய புத்தகங்களைஇடம் பற்றாக் குறையால் கிலொ கணக்கில் கொடுக்க வேண்டி வந்தது!!. அறிவு தானம் நல்லதுதானே1அதனாலே பரவாயில்லை என்று நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டோம்.
இன்னும் பார்த்துப் பார்த்துச் சேர்த்த பழைய ஒலிநாடாக்கள்.
45 ஆர்பி எம் ஒலித்தட்டுகள்.
எல்லாமே ஒரு காலத்துக்கு மேல்
வைத்துக் கொள்ள முடியவில்லை.
நினைவுகளோடு சேர்ந்து விட்டன.எல் லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, March 18, 2016

vaazhka Valamudan Nalamudan.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இரண்டு மணி நேரம் இணையம் இல்லை.. .ஆஹா இந்தத் தொல்லை இங்கேயும் வந்துவிட்டதா என்றால்  ஆமாம். நடுவில்   ,மாப்பிள்ளை இந்த விஷயத்தில்  என்பதால் தற்காலிக கனெக்ஷன் கொடுத்திருக்கிறார்.
 காம்காஸ்ட் என்ற நிறுவனம் தான் தொலைபேசி, இணையம்,தொலைகாட்சி எல்லாம் கொடுக்கிறது. இருப்பதில் சிறந்ததுன்னு அதுக்குப் பேர் வேர.
கைபேசிக்கு இருப்பது இன்னொருத்தர். அவரோட இணையத்தை கணினிக்குத் திருப்பியாச்சு.
இதுக்குத் தான் இரண்டு மனம் வேண்டும்  கண்ணதாசன் அன்னிக்கு சொன்னார்.
இரண்டு கனெக்ஷன். அதாவது கணினிக்கு மட்டும்..
கிடைத்தவரை லாபம் என்று  வந்துவிட்டேன்.

-+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Thursday, March 10, 2016

தண்ணீர் ராசி!

குடங்கள். கவிழ்த்து வைக்கக் கூடாது என்று பாட்டி சொல்வார்
கோயம்பத்தூரில் இந்த மாதிரிதான்  கிணறு தோண்டுவார்கள்


இணையத்தில் கிணற்றுத் தண்ணீர் பற்றிப் பேச்சு வந்தது. சென்னைக்கு வந்த  புதிதில்  பாட்டி வீட்டுக் குழாயை அதிசயமாகப் பார்த்துச்  சந்தோஷப்படுவேன்.  குடத்தைத் தூக்கிக் கொண்டு  கிணற்றுக்குப் போக வேண்டாம். அதுதான்  முதல் காரணம்.
நாங்கள் தெற்குச் சீமைகளில் இருந்த இடத்திலெல்லாம் அப்போது குழாய் வசதி கிடையாது. அப்பாவுக்கு மாற்றலாகும் இடங்களில் கிடைக்கும் வீட்டில் முதலில் நாங்கள் பார்க்க ஓடுவது
கிணற்றைத்தான்.

அதில் எட்டிப் பார்த்துத் தண்ணீர் அருகில் இருந்தால் ஒரே சந்தோஷம்.
திருமங்கலம் வீட்டில் கிணற்றில் தடுப்பு போட்டிருக்கும்.
ஒரு பக்கம் சமையலறைக்கும்
மறுபுறம்    குளிக்க,துவைக்க, பாத்திரம் தேய்க்க  என்று தனியாக வேறு கயிறும் வாளியும் இருக்கும்.
சமையலறைப் பக்கம் அன்னன்னிக்குத் தேய்த்து வைக்க ஒரு குடம்.

அதன் பக்கத்தில் ஒரு சிமெண்ட் தொட்டி.அதற்கு ஒரு மூடி..
அதிலிருந்து  சமையலுக்கு உள்ளே கொண்டு நிரப்ப ஒரு அண்டா..
அப்பா சாமீன்னு ஆகிவிடும்.
அம்மாவுக்கு   அல்சர் வந்து குணமாகி வந்த நேரம்.
அதனால் நான்  உதவி செய்வது வழக்கம்.  கைசிவந்து போய்விடும். புதுக்கயிறு அப்படித்தான் இருக்கும் என்று அப்பா கைக்கு தேங்காயெண்ணெய் தடவி விடுவார்.

திண்டுக்கல்லுக்கு மாற்றலாகியது. அங்கு செயிண்ட் ஜோசஃப் பள்ளியில்
அப்பா சேர்த்துவிட்டார்.
இங்கயும் கிணறு தானாப்பா    என்பதுதான் என் முதல் கேள்வி. ஆமாம்ம்மா ஆனால் நல்ல தண்ணீர்க் கிணறு என்று   ஒன்று இருக்கு. அங்கதான்   போய் எடுத்துக் கொண்டு வரணும் என்றார்.
முதல்நாள் அலுவலகத்திலிருந்த வந்த  பியூன்  கொண்டு போய்க் காட்டினார். நான் பெரிய குடம்.தம்பி சின்னக் குடம். தண்ணீர்  இல்லாத  கல் பூமி.காற்று என்னவோ பிரமாதமாக அடிக்கும்.காய்கறி எல்லாம் கொடைக்கானலில் இருந்து வரும். பள்ளிக்குப் பக்கத்தில்
இருக்கும் மேட்டுப்பட்டி என்ற  இடம். பள்ளியில் மணி அடித்தால் இங்கே கேட்கும்.

அவசரத்துக்கு அங்கே  போனோம். தாத்தா பாட்டி வந்த போது அவர்களுக்கு அங்கெ
பிடிக்கவில்லை.
நாராயணா   கிணத்துதண்ணிக்குக் குழந்தையை அனுப்பாம இருக்கிற வீடா பாரு. 12 வயசில
ஒரு பர்லாங் நடந்து தூக்கிக் கொண்டு வரதே. வேற வீடு பாருன்னு சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

பிறகு கிடைத்த வீடுதான் கிருஷ்ணாராவ்  ஸ்ட்ரீட் என்னும் தெருவில் ஒன்று போல் அமைந்த பத்துவீடுகள் கொண்ட      காலனி வீடு.. அழிக்கதவு போட்ட வராந்தா,ஒரு நடை ஒரு ஹால் ஒரு குட்டி  பெட்ரூம் நல்ல சமையலறை புகைபோக்கி என்று(விறகடுப்ப்தான் அப்ப எல்லாம். ஒருஸ்டவ் உண்டு. கரியடுப்பும் உண்டு.) எங்கள் மூவருக்கும் பிடித்துவிட்டது.
சின்னத்தம்பிக்கும் எனக்கும் ஏகப்பட்ட தோழர்கள் தோழிகள் கிடைத்தார்கள்.
தூரத்தில் சௌந்தரராஜா மில் தெரியும். அந்த நாளிலேயே  சொந்த விமானம் வைத்திருந்தார் என்று கேள்வி..
ஒரே  ஒரு குறை இங்கயும் கிணற்றுக்கு மூன்று வீடு தாண்டி போக வேண்டும்.
பெர்ர்ர்ர்ர்ர்ர்ரிய கிணறு. நாலைந்து ராட்டினம்.
நம் ராட்டினத்தையும் கயிற்றையும்   நாம்   தான் எடுத்துக் கொண்டு போக வேண்டும்.


அப்பா அம்மாவைத் தண்ணீர்  இறைக்க விடமாட்டார். அலுவலகம் கிளம்பும் வரை
முடிந்த பாத்திரம் பண்டங்களில்    எல்லாம் தண்ணீர் நிரப்பிவிட்டுத் தான் போவார்
தம்பிகளுக்கு பத்தும் எட்டும்   வயது
நான் தான் பெரிய மனுஷி.
எனக்கு  ஸ்ட்ரிக்ட் ஆர்டர்ஸ்   போட்டுவிட்டு அப்பா கிளம்புவார்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, March 05, 2016

ஒரு சிறு குறிப்பு

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சிலர் பிறப்பார்கள் வாழ்வார்கள் மரிப்பார்கள்.
சிலருக்கே வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக அமையும்
எதையாவது சாதிக்கவேண்டும் என்கின்ற
 ஆர்வம் எல்லோருக்கும் இருப்பதில்லை.
நானே ஒரு உதாரணம்.
 திருமணமான புதிதில் வேலை நேரம் போக
உலாவச் செல்வது உண்டு.
இரவு  ,நடு இரவு வரை பெரிய  ட்ராஃப்ட்ஸ்மன்  பலகையில் வெள்ளைத்தாளில் பின்ஸ் குத்தப்பட்டு வரைந்து கொண்டிருப்பார்.
நானும் கூட உட்கார்ந்திருப்பேன்.
வெறும் தண்ணீர்+காற்றில்  ஓடும் வண்டியை  அமைப்பதில்
ஈடுபட்டிருந்தார்.
யாரிடமும் இருந்தும் உற்சாகம் கிடைக்காவிட்டாலும்
கேலிகள் கிடைத்தன.
 அதே போல் ஒரு சின்ன மோட்டாரை வாங்கி அதை இயக்கவும் செய்தார்.
மேலே பணம் போட வசதி இல்லை.

வேலை செய்த தொழிற்சாலையில்  உழைப்பு அதிகம்.
ஒவ்வொரு சக ஊழியரின் நன் மதிப்பையும் பெற்றிருந்தார்.

டிசம்பர் வந்தால்,எல்லா ஊழியர்களின் ஜாப் கார்ட்  என்பதில் அவரை
அவர் நடவடிக்கைகளைப் பார்த்து மதிப்பீடு கொடுத்தால் தான் அவர்களுக்கு மேற்கொண்டு
சம்பளம் உயரும்.
வேலையில்  சலிப்புக் காண்பிப்பவர்களை நல்ல வார்த்தை சொல்லி
 வேலை செய்ய வைத்து அவர்களுக்கு நல்ல
சம்பள உயர்வையும் சிபாரிசு செய்து விடுவார்.
   அத்தனை உள்ளங்களின் வாழ்த்துகள் தான் எங்களை இன்னும் நல்லபடியாக
வைத்திருக்கின்றன..  நன்றியுடன்  மிஸஸ்.சிம்மு.

Singam 76....March

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
எட்டமுடியாத தூரத்தில் இருப்பதாக எண்ணவில்லை.
எனக்கும் வயதாகி வருகிறது . இன்னும் கொஞ்ச நாட்கள்
சென்றால் நானும் வந்துவிடுவேன் .
 அதுவரை எவருக்கும் தொந்தரவு இல்லாமல் எல்லாக்குழந்தைகளும்
பேரன் பேத்திகளும் உற்றார் சுற்றம் நட்புகள் எல்லோரும் நலமாக இருக்க ப பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...