Wednesday, August 20, 2008

யு.எஸ்.ஏ பயணம் 3,பகுதி 2

சி.என் டவர்ஸ், டொரண்டோ


தங்கியிருந்த விடுதியில் ஒரு ஓவியம்



விடுதி ஜன்னல் வழியே ஒரு வியூ




இரட்டை வானவில் மழையினூடே வந்து ஆ!!! போட வைத்தது:)





டெட்ராய்ட்...டொரண்டோ சாலை






மழையினில் மாக் டி தேடல்....







கனடா விசாவுக்கும், நாட்டுக்குள் நுழைவதற்கும் நின்ற இடம்.








டோல் கேட்!!









டொரண்டோ நுழைந்ததும் முதலில் பார்த்த வான்வில். பக்கத்திலியே இன்னோரு வான்வில்லும் உருவானது டபிள் கொண்டாட்டம்:0)










மழையில் நனைந்த வீதிகள் மழை நின்றபிறகு ஒரு குளித்த தோற்றம்.











அடடா,விமானம் செங்குத்தாகக் கிளம்பிவிட்டதே.












பெண் வீட்டுத் தோட்டத்தில் பூத்த கெர்பரா டெய்சி.






இப்படியாகத்தானே பலவித டீல்களையும் பார்த்து ஒரு வார ஆராய்ச்சியில் ஹோட்டல் விடுதிகளை இணையத்தில் தேடி,ரிவார்ட்ஸ் பாயிண்டுகளைப் பயன்படுத்தி மாரியாட்(டொரண்டோ) விடுதியில் இரண்டு அம்மா அப்பா,இரண்டு குழந்தைகள் தங்க ஒரு அறை ஏற்பாடு செய்தார்கள். முதல் கட்டம் முடிந்தது.
அடுத்தது நயகரா புக்கிங். நயகரா கொட்டும் அழகைப் பார்த்தவாறு ஒரு அறை வேண்டும் என்று தேடி அதுவும் கிடைத்தது:)
14ஆம் தேதி ஒரு மணிக்கு மதியம் கிளம்ப நினைப்பு. ம்ஹூம் நாங்கள் கிளம்ப மணி நாலு ஆச்சு. டெட்ராய்ட் போய்ச் சேர 5 மணிநேரம் பிடிக்கும்.
மாப்பிள்ளையின் நண்பர் அங்கெ இருக்கிறார்.
அவர் வீட்டில் இரவு தங்கி,அடுத்தநாள் கனடியன் விசா எடுப்பதாகவும்,எடுத்த கையொடு பயணம் தொடர உத்தேசம்.
நடுவில் சூசன் அம்மாவை வேற வாங்க வேண்டி வந்தது. அவங்க கூடவே வந்து வழிகாட்டியதால் தான் எல்லா இடங்களையும் ஒழுங்காகக்
கடந்தோம்! அதான் இந்த ஜிபிஎஸ்ஸின் மகிமை.
ஆனால் ஒன்று கொஞ்சம் ரோடு மாறினாலும் அந்த அம்மா,'கீப் ரைட் 'சொல்ல ஆரம்பித்துவிடுவார்,.
அப்படியெல்லாம் மகா சௌகரியமாக ஆரம்பமான பயணம்,பாதியில் நிதானப் படவேண்டி வந்தது.
ஒரு பெரிய 'மாக்' ட்ரக் மழையில் கண் மண் தெரியாத வேகத்தில் வந்து,
கவிழ்ந்து விட்டது.
நல்ல வேளை அந்த வண்டி ஓட்டுனருக்கு அடியில்லாமல் தப்பித்திருந்தார்.
அந்த விஷயத்தில் போக்குவரத்தை ஒழுங்கு செய்த சாலைப் போலீசாரை மெச்சவேண்டும்.
ஒரு வண்டி அந்த இடத்தைக் கடப்பதற்கே 10 நிமிடம் ஆகியது.
வெகுஜாக்கிரதையாக மழையில் ஒளிபாய்ச்சியபடி நின்றவர்களைப் பார்த்து
அதிசயப் பட்டேன்.
இப்படி அப்படியாக நண்ப்ர் வீட்டுக்குப் போய்ச்சேர இரவு 1 மணி ஆகியது.
அவர்களும் கதவைத் திறந்த நொடியிலிருந்து எம்க்களுக்கு படுக்க வசதி செய்து கொடுத்து தூங்கப்போகையில் மணி இரண்டு!
இதெல்லாம் இருக்கட்டும்.
என்னுடைய மறதி மகிமை அடுத்த நாள் காப்பியுடன் வெளிவந்தது.
இரத்த அழுத்த மாத்திரை மட்டும் எடுத்துவர மறந்திருந்தேன்.
அலுப்பாக இருக்கிறதா:)
நாளை பார்க்கலாம்.














Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Monday, August 18, 2008

யுஎஸ் ஏ பயணம் 3,,,,பகுதி 1

வீட்டுக்குப் பின்னால் இருக்கும்(எனக்கு) வினோதமான மரம்.







பக்கத்தில் இருக்கும் பூங்கா.






வீட்டுத் தோட்டத்தில் பூத்த ரோஜா









இரண்டு மைல் தொலைவில் இருக்கும் நர்சரி.










விதவிதமான (தோட்டத்தில் வைக்கும்) பொம்மைகள்











அங்கே பூத்திருந்த அழகிய மலர்கள்.












இது இவர்கள் பாட்டியோ(patio) என்று அழைக்கும் டெக். சாயந்திர வேளைகளில் அமைதியாக உணவு அருந்த உபயோகிக்கிறோம்..




2006 நவம்பரில் அனுபவித்த குளிர் மறந்து போய்விடும் அள்வுக்கு இப்போது வசந்த காலம் செழிப்பாக இருக்கிறது. எங்கும் பூக்கள் அவவப்போது மிரட்டும் மழை.




மற்றபடி நம் கிராமங்களுக்கும் இந்த நேப்பர்வில்லுக்கும் நிறைய வித்தியாசம் இல்லை. அங்க வண்டியும் மாடும். இங்க வீட்டுக்கு இரண்டு கார்கள்.




கிட்டத்தட்ட ஏழெட்டு தமிழ்க்குடும்பங்கள். இந்தியர்கள். இங்கேயெ பிறந்து வளர்ந்து இந்தக் கலாசாரத்தை உடம்பில் உறிஞ்சிக்கொண்ட பெண் ஆண் குழந்தைகள்.


அவரவர் மதத்துக்கு ஏற்ற வேத வகுப்புகள். பரத நாட்டியம்,பாட்டு,பியானோ வகுப்புகள். கராத்தே ,டாய்சி மற்றும் கிரிக்கெட் குழுக்கள். சைக்கிளில் 'கடலை' போடும் டீனேஜ் பசங்க. அவர்களைத்தாண்டும்போது மட்டும் கிளுகிளுக்கும் பெண்கள்.;)
தொலைக்காட்சியில் வரும் கொஞ்சம் வயதுக்கு மீறின குழந்தைகளுக்கான் நிகழ்ச்சி. நல்லவேளையாக பேரன் இன்னும் ஸ்பன்ஞ் பாப் பார்க்கிறான்.


அதுவும் பின்க் பான்தரும் போதும் அவனுக்கு.

தாத்தாவோடு விஞ்ஞான சானலையும் பார்க்கிறான்.
போதாக்குறைக்கு ஒலிம்பிக்ஸ் வந்துவிட்டது.


அதனால் மிச்சமிருக்கும் ஒரு வாரம் ஓடிவிடும்.அப்புறம்
இருக்கவே இருக்கு பள்ளிப்பாடங்களும் ப்ராஜெக்டுகளும்:)
சின்னவனுக்குப் பல்லும் நகமும் நல்ல சுறுசுறுப்பு.
யாரையாவது படம் பார்க்கும் அராய்ச்சியில் இருக்கிறான். நேத்துதான் நகம் வெட்டினேன்,இன்னிக்கு இப்படிப் பிறாண்டறானேன்னு யோசிக்கிறாள். பெண்.
வச்ச பேரோட மகிமை.
லூட்டிக்குக் குறைவே இல்லை.
அவன் மாடிக்குப் போகாமல் இருக்கப் போட்டிருக்கும் தடுப்புகளை யாராவது தெரியாமல் திறந்தால் போச்சு.
எங்கேயிருந்துதான் வருவானோ ஒரு செகண்டுக்குள்ளுக்குள் படியேறிவிட்டு'பாட்டினு கத்தல் வேற. ஏன்னால் ஏறத்தெரிந்தவனுக்கு, இறங்கத் தெரியாது:)
எப்படியோ நமக்கு நல்ல எக்சர்சைஸ்:)
அவனுக்கு என்று பாம்பே சகோதரிகளோட தாலாட்டுப் பாட்டு வாங்கி வைத்திருக்கிறது.
தூக்கம் வரும்போது 'தானே 'அற்புதமே உந்தன் அழகான கொண்டைக்கு அரும்பு முடிந்ததார்ரூஊஊஊ'
என்று மழலையில் பாடிக்கொள்ளுவான்.
நாம் மிச்சப் பாட்டைப் போட்டால் தூக்கம்தான்.
மீண்டும் இந்தக் குட்டிச் சூறாவளி எழுந்திருப்பதற்குள்
நாமும் ஒரு தூக்கம் போடவேண்டும்:)
பெண் தன் மூத்த பையனை எதற்காவது கடிந்து கொண்டால் இதுவும் ''ம்ம்'........அண்ணா!!!
என்று மிரட்டுகிறது.:)
மற்றபடி அதே ரொடீன். தினம் தரை கார்ப்பெட் சுத்தம்,
மாடியில் துணிதுவைக்கும் மெஷின். ரெண்டு குடித்தனம் மாதிரி வேலை நடக்கிறது.
நேரம் தான் போதவில்லை.
நடுவே இணையத்துக்கு வரலாம் என்றால், பெரிய பேரன் தன் டி.எஸ் (D.S)ஐ எடுத்துக்கொண்டு வந்து எதையொ நெட்டில் தரவிறக்கம் செய்து கொள்வான்.
நடுநடுவே தனக்குத்தானே ஒரே சிரிப்பு.
என்னடா னு கேட்டு முடியாது. 'ஜோக் பாட்டி'ன்னு பதில் வரும்.
அதாவது ஒரு 500மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் அவன் தோழர்களோடு
சாட்டிங் என்று நினைக்கிறேன்.
சரி ''டிரேக் அண்ட் ஜாஷ்' பார்க்கிறதுக்கு இது பரவாயில்லைனு விட்டு விடுவேன்.
ஒரு நாள் சாயந்திரம் எல்லாக் குழந்தைகளும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த போது திடீரென இரண்டு ஆம்புலன்ஸ் வரும் சத்தம் ,சைரன் கேட்டது.
நல்லவேளையாக ஒரே ஒரு ஜன்னல் திறந்துவைத்ததால் இந்த சத்தமாவது உள்ளே வந்தது.
இல்லாவிட்டால் ஒன்றும் காதில் விழாது.
அவசரமாக வெளியில் படபடப்போடு வந்தோம். இரண்டு வீடு தள்ளி, பாக்யார்டில் ஒரே கூட்டம். அங்கே ட்ராம்போலின் இருப்பதால் குழந்தைகள் நிறைய அங்கே போய்  விளையாடும்.
யாருக்கு அடி பட்டதோ தெரியவில்லையே என்று ,விஷ்ணுவை முதலில் தேடினேன். அவனும் அங்கெ நிற்பதைப் பார்த்து என்ன விஷயம் என்று சைகையில் கேட்டால், ஓடி வந்துவிட்டான்.
பில்லி  காட் ஹர்ட் பாட்டி.
ஹிஸ் லெக் இஸ் ப்ரோகன்''
என்ன விஷயம் என்று விசாரித்தால் ஏகப்பட்ட குழந்தைகள் அந்த ட்ராம்போலின் மேல ஏறிக் குதித்ததில் இந்த ப்ரையன் வழுக்கி,
கால்மடங்கி விழுந்திருக்கிறான். பாவம் தொடையிலிருக்கும் எலும்பு முறிந்துவிட்டது.
இத்தனைக்கும் அவன் பெற்றோர்கள் வீட்டில் தான் இருந்தார்கள்.
இருவரும் வேலைக்குப் போகிறவர்கள்.
அன்று அந்தப் பையனோட நல்ல நேரம்,அவர்களும் 911க்கு போன் செய்ய ,பாராமெடிக்ஸும் உடனே வர அவனைப் பக்கத்தில இருக்கும் ''ரஷ் காப்லி'' மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவசர அறுவை சிகிச்சை செய்தார்கள்.
அவன் கால் சரியாகி நடக்க நான்கு மாசம் ஆகுமாம்.
நானும் அதுக்கு ரொம்பப் பிடித்த இட்டிலியும் சாம்பாரும் செய்து கொண்டு ,அவர்கள் வீட்டுக்குப் போய்ப் பார்த்தேன்.
அதுமாட்டுக்கு சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு 'வீ'' கேம் விளையாடிக்கொண்டிருந்தது.
அந்தப் பையனோட அம்மா அப்பா முகம் தான் பார்க்க சகிக்கவில்லை.
இங்கே இருக்கும் அவனொத்த வயசுப் பிள்ளைகள் எல்லோரும்
ஒவ்வொரு நாளும் ஒருத்தர் என்று போய் அவனோடு உட்கார்ந்து விளையாடுகிறார்கள். ஒருமணி நேரம் கணக்கு.
பள்ளியிலும் அவனுக்காக சிறப்பு டியூட்டர் ஏற்பாடு செய்துவிட்டார்கள். நல்ல குழந்தை.
சீக்கிரம் எழுந்து நிற்க வேண்டும்.
பில்லி  விழுந்த நாளிலிருந்து ஒரு அம்மா அப்பாகூட அந்த ட்ராம்போலின் பக்கம் தன் குழந்தைகளை அனுப்பவில்லை.
ஒருகால் கொஞ்சம் பயம் தெளிந்த பிறகு அது நடக்குமோ என்னவோ.:(
யாராவது பெரியவர்கள் கூட இருந்து கவனித்துக் கொண்டால் ஒழிய
இந்த மாதிரி விளையாட்டுகளை அனுமதிக்கக் கூடாது என்றே நினைக்கிறேன்.


















Thursday, August 14, 2008

ஆகஸ்ட் போட்டிக்கான படம்





பயணம் தொடங்கிய போது மழை ஆரம்பித்தது. இருண்ட மேகங்களுக்கு நடுவில் வானம் வெள்ளையாய்ச் சில நொடிகளுக்குத் தெரிந்தது. அது முதல் படம்



டொரண்டொ விமான நிலையம் அருகே இருந்த மாரியாட் விடுதி ஜன்னலில் இருந்து எடுத்த படம். அடுத்தது வானவில்லை ஒரு விமானம் கடந்தபோது எடுத்தது.


இரண்டு வான்வில்களைப் பார்க்கும் மகிழ்ச்சி ஒரு சாயந்திர மழைத் தூறல் நடுவே கிடைத்தது மகிழ்ச்சியே. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.:0)

இரண்டாவது படம் போட்டிக்கு அனுப்புகிறேன்.

பங்கு கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

Thursday, August 07, 2008

ஒரு வாரம் லீவில போறங்க.

நயகரா அருவி கனடா சைடுல
சிங்கம் உலாவற பார்க் டெட்ராய்ட் நகரம் இங்க எல்லாம் போகலாமுன்னு ஒரு திட்டம்.


எனக்கும் சிங்கத்துக்கும் விசா கிடைக்கணும்.
போய் வந்து சேதி சொல்றேன்.
அதுவர எல்லாம் பத்திரமா இருங்க:)


Wednesday, August 06, 2008

அமெரிக்கா!! திரும்புகிறோம்























ஜுலை19,
ஜுங்ஃப்ரௌவிலிருந்து திரும்ப சாயந்திரம் ஆகிவிட்டது.
அங்கே சந்திக்கக் கிடைத்த தமிழர்கள் தான் ஒரே காரணம்.....
சீதா ட்ராவல்ஸ் மூலம் வந்த ஒரு குழுவும்,தாமஸ்குக் குழுவொன்றும் நிறைய இந்தியர்களை இறக்கியது.
அவர்களைக் காபந்து செய்து கூட்டிக் கொண்டு வந்தவர் கிட்டத்தட்ட ஆடு மாடுகளை மேய்ப்பது போல் காட்சி அளித்தார்,.
அங்கேயும் ஒரு பாலிவுட் ரெஸ்டாரந்த், இந்திய சாப்பாடு தயராக வைத்திருந்தது. அதில் ஜெயின் சாப்பாடு வேற.
என் திலகத்தைப் பார்த்து இரண்டு(என்னைவிட வயதான) பாட்டிகள் ஜாக்கிரதையாக விசாரித்துக் கொண்டார்கள். ''நோ கார்லிக் நோ ஆனியன்''
இதுதான் தாரக மந்திரம்.
நம்மைவிட இவர்கள் இன்னும் மகா ஆசாரம் உணவு விஷயத்தில்
என்று புரிந்து கொண்டேன்.
மரபு முறையைப் பின்பற்றுவதில் அவர்கள் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக இருப்பதை என் பெண் ஏற்கனவே சொல்லி இருக்கிறாள்.
அவளுடைய வீட்டு மனையைத் தேடிக்கொடுத்த ஒரு ஏஜண்ட்
ஜெயின் தானாம்.
கிரண் என்று பேரு. அந்த அம்மாவும் ஒரு தடவை இங்க
நேபர்வில் வீட்டுக்கு சாப்பிட வந்திருந்தார்கள்.
அப்போதுதான் அஹமதாபாத் போய் வந்திருந்தார்கள். அங்கே துவாரகா பக்கத்தில் ஒரு கோவில் அவங்களோட சமண மத குருக்களோடது இருக்காம்.
தன் பெண் திருமணம் நல்ல படியா நடக்க வேண்டும் என்பதற்காக,
மூன்று மாதம் அங்கே ஒரு குடில்(காட்டேஜ்) எடுத்துத் தங்கி,
தினம் காலையில் குளித்து விட்டு உணவு அருந்தாமல் அந்த மலையை ஏறி சாமி கும்பிட்டுவிட்டுக் கீழே இறங்கி மதியம் மூன்று மணிக்குத் தான் உணவு அருந்துவார்களாம்.!!
சேனு போச்சுப்பா.
நாமும் இருக்கோமே. பெண், பையன்கள் கல்யாணத்துக்கு வரன் தேடினதையே ஒரு பெரிய போர் நடத்தின மாதிரி நினைத்துக் கொண்டிருந்தோமே, இந்த அம்மாவை ப் பார்த்துக் கத்துக் கொள்ளணும்னு நினைத்தேன்.
இவர்களுக்குப் பணம் குறைவில்லை. படிப்பக் குறைவில்லை.
ஒரே ஒரு கட்டுப்பாடு அவர்கள் பிரிவுக்குள்ளேயே பையனோ பெண்ணோ
பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் இவர்கள் பின் பற்றும் அதே குருவை வணங்குபவர்களாகவும் சைவ முறையை அனுசரிப்பவர்களாகவும் இருக்க வேண்டுமாம்.
என்னையும் அவர்கள் வீட்டுக்கு அழைத்திருக்கிறார்கள் சாப்பிட.
கைகால் நகம் எல்லாம் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுப் போகவேண்டும்.:)
கிரணோட பெண் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கிறது. மாப்பிள்ளை கிடைக்கத்தான் சிரமப் படுகிறார்கள்.
சரி இப்ப நாம ஜுங்ஃப்ரௌவில இருக்கிற பனிக்கட்டி குகைக்குப் போகலாமா.
அங்கே இருக்கும் சிற்பங்களைப் போன பதிவில் போட்டிருந்தேன்.
அந்தக் குகைக்குள் நான் போகவில்லை.
ஆக்சிஜன் குறைவு,குளிர் அதிகம்.
ஏற்கனவே டிட்லஸ் மலையில் இன்னும் வயது குறைவாக இருந்த போது ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னால் பார்த்தாச்சு.
அங்கே உள்ளே போய்விட்டு முகம் வெளுத்து வருபவர்களைப் பார்த்தேன்....ம்ஹூம் நமக்கு ஒத்து வராது. வழி நெடுகக் கைப்பிடி இருக்கும். என்ன தொந்தரவு என்றால் அதுவும் வழுக்கும்.
ஐஸ் மாதிரி இருக்கும்.ஐஸ் மாதிரி என்ன ஐசேதான்.
இந்த அழகில நாட்டியக் குதிரை மாதிரி நாம் போயி,அங்க வேற யாராவது சைனீஸையோ,ஜப்பான்காரனையோ பிடித்துத தள்ளி....நினைக்கவே பயமாக இருந்தது.:)
அதுகள் பேசுவதே ஏதோ கீச்சு கீசென்று ஆனைச்சாத்தன் மாதிரி இருக்கு.கொஞ்சம் கட்டை ஆனைச்சாத்தான் வச்சுக்கலாமே:)
இன்னும் ....வேண்டாம்பா, இருக்குமிடம் வைகுந்தம் என்று நல்லா வெயில் உறைக்கும் இடத்தில் பேத்தி தூங்க நானும் காவலுக்கு ஒரு சூடான காப்பியோடு உட்கார்ந்து விட்டேன்.
அப்போதுதான் மைலாப்பூரிலிருந்து வந்த இரண்டு பெண்களைப் பார்த்தேன். கணவர்களை வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு,
இருவரும் விடுமுறை எடுத்து வந்திருந்தார்களாம்.
ஆளுக்கு முறையே ஒரு பெண்ணும் பையனும். கல்லூரியில் படிக்கிறார்களாம்.
அதிசயமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.
நாட்கள் மாறிவிட்டன.!!
இன்னிக்கு நாம பாசல் திரும்புகிறோம். நாளைக்கு (ஜூலை 20)மீண்டும் ஸ்விஸ் ஏரில் சிகாகோ பயணம்.
ஒன்பதரை மணி நேரம்!!!
ம்றுபடி சந்திக்கும் வரை............தொடரும்.








Monday, August 04, 2008

யுங் ஃப்ரௌ பகுதி ..2

கூடவந்தவங்க யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒருவர் முர்ரன் ஸ்டேஷனில்!

ரயில் சென்ற பாதையில் இன்னொரு கிராமம்.




இந்த இரண்டு பேரில் யார் க்ராஃப்னு சொல்லுங்க பார்க்கலாம்:)





ஆழ்ந்த யோசனையில் இருக்கு சக பயணி. இவர் தலையை நான் பிடிக்கவில்லை:)







தங்கியிருந்த விடுதி வாசலில் வரவேற்கும் ஆடுகள்.









யங்ஃப்ராவின் முதல் வியூ


July19th காலையில்

ரெசிடென்சி யின் இலவச காலை உணைவை முடித்து எட்டரை மணிவாக்கில் கிளம்பி விட்டோம்.


எங்களோட இந்தக் குட்டிப் பேத்தியும் தயாராகக் காலைக் கொட்டிக் கொண்டு நின்றதுதான் அதிசயம். அதுக்கு ஒரே உற்சாகம்.

போன வருடம் இருந்த அழுகை எல்லாம் இப்போது இல்லை.
இந்தக் காலைக் கொட்டிக் கொண்டு என்க்கிற வார்த்தைக்கு ஒரு கதை உண்டு.
புக்ககத்தில் இதை தாமல் கிராமத்தில் இருந்து வந்த இன்னோரு பாட்டி சொல்வதைக் கேட்டேன்.
அதாவது வீட்டில் அடைந்து கிடப்பதை விரும்பாமல் வெளியே சுற்றும் மருமகளைப் பற்றிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தார் எங்க ஆஜிப் பாட்டியிடம்.
''கேட்டியோம்மா, இந்த அநியாயத்தை!(இப்ப நீங்கள் தோள் பட்டையில் முகத்தை இடித்துக் கொள்வதை கற்பனை செய்ய வேண்டும்:)) )
இன்னாரோட மருமகள் சாப்பாடு ஆன கையோட, காலைக் கொட்டிக் கொண்டு மத்த வீடுகளுக்கு வம்பு பேசவும், காஞ்சீபுரத்துக்குச் சினிமா பார்க்கவும் கிளம்பும் அதிசயத்தைச் சொல்லுவார்.
'எங்க பாட்டிக்கு அவ்வளவு ரசிக்காது. போனப் போறதும்மா. சின்ன வயசு தானேன்னு'' பேச்சை மாற்றி விடுவார்.
நானும் மாடிப்படி வளைவில் சுஜாதாவையோ,புஷ்பா தங்கதுரையையோ நிறுத்திவிட்டுக் காதைத் தீட்டிக் கொண்டு ஒட்டுக் கேட்பேன்:)
கொஞ்ச நேரத்துக்குச் சத்தமே வராது.
இடுக்கு வழியாக எட்டிப் பார்த்தால் வந்த பாட்டி சைகை பாஷையில் என்னைப் பற்றி கேட்டுக் கொண்டிருப்பது தெரியும்.
அடராமா இப்பத்தானே சூடா காப்பியும், நேத்திக்குச் செய்த மைதாமாவு பிஸ்கட்டையும் உங்க கையில கொடுத்தேன் அதுக்குள்ள என்னைப் பத்தியே கேக்கிறாங்களேன்னு சுர்ருன்னு ஒரு கோபம் வரும்.
எங்க பாட்டி அசர மாட்டார்.
''அவள் நாம பேசும்போது இங்க நிற்க வேண்டாம்னு மாடிக்குப் போயிட்டாள்'
அப்படீன்னு சத்தமா சொல்லுவார்,.
அடுத்த கணம் நிஜமாவே மாடி அறைக்குப் போய்விடுவேன்.:)
அப்பவும் காலைக் கொட்டுவது எப்படி என்று யோசனையாக இருக்கும். கைகளைக் கொட்டலாம். காலை??
இப்படியாகத்தான் இருக்கும், இந்த மாஜிக் படத்திலெல்லாம் ஒரு பெண் கண்ணை இமைத்ததும் காட்சி மாறுமே அப்படி...காலைக் கொட்டி விட்டு நடப்பார்கள் போலிருக்கிறது.:)
கிட்டத்தட்ட பரத நாட்டியப் போஸ் மாதிரி இருக்கும்.
வாசலில் செருப்பப் போட்டுக் கொள்வதற்கு முன்னால் காலைக் கொட்டினால்
எப்படி இருக்கும்னு யோசித்தேன். அந்த சமயத்தில் வெறும் திண்ணையே இருந்தது . சாலையோடு போகிறவர்கள் எல்லாரும் பார்க்கலாம்.
ஏதுடா இந்தப் பெண் அபிநயம் பிடிக்கிறதே என்று கூட நினைக்கலாம்:)
காலைக் கொட்டிக் காயைக் கூப்பி
''ஆஜி நான் லைப்ரரி போயிட்டு வரேன்''
என்று சொல்லிப் பார்த்தேன் அநியாயத்துக்குச் சிரிப்பு வந்தது.
ஆகக்கூடி ஜுங்ஃப்ரோவுக்குப் போகலாம இப்ப. அது ஒரு பத்தாயிரம் அடி உயரத்தில இருக்கிறது.
க்ரிண்டெல்வால்டிலிருந்து சாதாரண ரயிலில் ஒரு பயணம்,பிறகு பல் சக்கரம் வைத்த குட்டி ரயில் ஒரு பயணம்.
நடு நடுவில் குளிருக்கு இதமாகக் கீழே இறங்கணும்னு நினைச்சோமோ
போச்சு.
விரைத்துப் போய்விடும் கைகால்கள்.
செங்குத்தாக ஏறும்போது உட்கார்ந்திருக்கும் இருக்கையோடு முதுகு ஒட்டிக் கொள்ளும்.
ஞொய்னு காது அடைத்துக் கொள்ளும்.
எல்லாவற்றையும் தாண்டி கடைசில் ஜுங்ஃப்ரௌ வந்ததும் அந்தச் சிகரங்களோட அழகை வர்ணிக்க முடியாது. கூடவே நம்ம இமயமலை மாதிரி வருமா. கங்கை மாதிரி வருமா என்ன என்று நினைப்புத் தோன்றும்.
இத்தனைக்கும் இரண்டையும் பார்த்ததில்லை:)
எங்கள் பெற்றொர் பார்த்துச் சொன்ன அனுபவம்தான்.
நம்ம ஊரிலிய்ம் இவ்வளவு போக்கு வரத்து வசதி இருந்தால் இன்னும் எத்தனை பேர் பணம் செலவழித்துப் போவார்கள் என்றும் தோன்றியது.
கஷ்டமோ இல்லையோ நம்ம கீதா(சாம்பசிவம்) அழகாப் போய்விட்டு வந்து பயணக் கட்டுரையும் எழுதினாங்க.
இன்று ஆடிப்பூரம். மானிடராகப் பிறப்பவருக்குத் தெய்வ தரிசனமே அரிது.
அதிலும் அந்த ஆண்டவனையே மணாளனாகவும் அடைந்த அவள் பெருமை
என்னவென்று சொல்வது.
இப்போது முழங்கும் பாசிடிவ் தின்கிங் அப்பவே அவளுக்கு இருந்திருக்கிறது.
முடியுமா என்ற சந்தேகமே இல்லை. நடத்திக் காட்ட்விட்டாள்.
ஆண்டாள் திருவடிகளுக்கு வணக்கங்கள் சொல்லி மீண்டும் பார்க்கலாம்.










கூகிளில் கிடைத்த யுங்ஃப்ரௌவும் வெண்ணிலாவும்.











Saturday, August 02, 2008

யுங் ஃப்ரௌ மலைச் சிகரம்




































July 18th. 2008
ஜூலை 18 யுங் fரௌ என்னும் ஐரோப்பாவின் மிக உய்ரமான சிகரத்தைப் பார்க்கப் போவ்தாக திட்டம்.
ஷில்தார்ன் போய் வரும்போது ஒரே மழை. வீதிகளில் அதிக நடமாட்டம் இல்லை. காச் மூச்னு
மைனாக்கள் மாதிரி ஜப்பானியர்கள் கும்பல் கலகலவென்றுக் கடந்து போகும். அடுத்தாற்போல இந்த
ஊரிலியே இருக்கிறவங்க,காய்கறியோ பழமோ ஏதோ வாங்க ஒரு சைக்கிளை மிதிச்சுக் கொண்டு,சந்தோஷமா அவர்களுக்குள்ள பேசிக்கொண்டு,

சின்னதா ஒரு ரொட்டியோ, இரண்டு ஆப்பிளொ வாங்கிக்கொண்டுஒரு உற் சாக பானம் ஒண்ணையும் திறந்து,
என்ன அழகான மழைன்னு விமரிசனம் செய்து கொண்டு,
மழைக்கோட்டையும் போட்டுக் கொண்டு மீண்டும் திரும்புவார்கள்.

இதெல்லாம் நடுவில முர்ரன் எகிற கிராமத்தில்.
 பையனுக்கு நான் நடந்தால் தேவலை என்று தோன்றி
விட்டது.''இந்த மாதிரி என்னிக்குமா மழைல நனையப் போற. ஜாலியா வா''.

முதலில் அந்தப் பள்ளம் மேட்டுச் சாலையைப் பார்த்துப்பயந்தாலும்,ஏனெனில் நாம்தான் எல்லார் தலை கால் எல்லாவற்றிலயும் விழுவார் தொழுவார்ஆச்சே.அந்த பயம் கொஞ்சம் தயக்கம் கொடுத்தது.

அதனால் பள்ளம் இல்லாத மலைப் பக்கமா,
 திடீர் மின்னல் இடி ஒண்ணும் இருக்கக்கூடாது சாமி. மத்தவங்களுக்குக் கஷ்டம் கொடுக்காம் என்னை ரயில் நிலயத்திலகொண்டு போய் விட்டுவிடு, என்று நடந்தேன்.
பேத்தி சுகமாப் பிராம்ல தூங்கிண்டு வந்தாள். முதல் ஜோடி அவங்கதான்.பின்னால சம்பந்திகள்.அவர்கள் அப்படியே ஒலிம்பிக்குக்கு மாரத்தான் நடக்கற மாதிரிநல்லா நடக்கிறாங்க.

அவங்களுக்குப் பின்னால நம்ம சிங்கம்.
சீக்கிரம் வாம்மான்னு அப்பப்போதிரும்பிப் பார்த்தபடி ஆர்டர் வரும்.
எனக்கோ மழை ரொம்பப் பிடித்துவிட்டது. அனுபவித்தபடி மெள்ளவே நடந்தேன்பூக்கள் நிறைந்த பால்கனிகள்.மூடிய கதவுகள். திறந்திருக்கும் டீக்கடைகள்.

சத்தமே இல்லாத தெருக்கள்.
அப்பப்போ போகிற போலீஸ் வண்டிகள்,சாலைப் பாதுகாப்பு வண்டிகள்.
இப்பத்தானே ஒரு வண்டி போச்சு அதுக்குள்ள இன்னோண்ணா.என்று எண்ணியபடி மகனைக் கூப்பிட்டு என்னடா இவ்வளவு வண்டீன்னு.
அவன் சொன்னான் இரண்டு வண்டிதான்மா.ஊரு சின்னது பாரு இரண்டு வீதியைச் சுத்திச் சுத்தி வராங்க. என்றான்.
அப்படியே பேசியபடி ரயில் நிலையத்தை வந்தடைந்தோம் சூடாகக் காப்பி கிடைத்தது.
கூடவே சாப்பிட ஆளுக்கு ஒரு மஃபின்.
ரயில் நிலையத்தில் எங்களைத் தவிர யாருமில்லை. நிறையப் படங்களை எடுத்து உள்ள தள்ளினேன்.
மெதுவாகக் கணினியில் ஏற்றிப் பார்த்து அனுபவிக்கத்தான்:)
பதிவு நீண்டதால் மறுபாகத்தை நாளை பதிகிறேன்







அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...