Saturday, June 15, 2019

தண்ணீர் தண்ணீர்

வல்லிசிம்ஹன்

 கோவையில் இருக்கும்போது, அது இருக்கும் 46 வருடங்களுக்கு முன்னால்,
தடாகம் ரோடு ,டிவிஎஸ் நகரில் பெரியவீடுகள். எல்லோர் வீட்டிலும் கிணறு. எட்டிப் பார்த்தால் தலை சுற்றும் ஆழத்தில் தண்ணீர் இருக்கும்.
சில வீடுகளில் ஒரு கிணற்றுக்கு இரண்டு மோட்டார்கள் வைத்திருப்பார்கள். தினந்தோறும் கிணற்றை ஆழப் படுத்துகிறேன். இன்னும் தண்ணீர் வரும் என்று சொல்லி
கிணறு தோண்டும் பணியில் இருப்பவர்கள்
வருவார்கள்.

ஒரு அடி அந்தக் கற்பாறைகளில் உளிகள் மோத 5 ரூபாய்.
காலையில் அந்த உழைப்பாளி உள்ளே இறங்க மனைவி குழந்தைகளோடு
வெளியே இருந்து பேச்சுக் கொடுப்பாள். நானும் குழந்தைகளும்
சமையலறைக்கு வெளியில் இருக்கும் வராந்தாவில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்போம்.
தண்ணீர், வெற்றிலை,புகையிலை ,பீடி என்று கீழெ அனுப்பிக் கொண்டிருப்பாள்
அவள்.
ஒரு மணி அளவில் அவன் வெளியே வருவான்.
நானும் குழந்தைகளும் சாப்பிட்டு முடித்திருப்போம்.
அவர்களுக்கும் ஒரு பாத்திரத்தில் நிறைய சாதம் போட்டுக்
குழம்பையும் விட்டு அவளிடம் கொடுப்பேன்.
ஒரு பச்சை மிளகாய், வெங்காயம் குடு அம்மிணி
என்பாள்.
சப்புனு இருக்கு எப்படிச் சாப்பிடறீங்க என்று
வினவியபடி பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும் கல்வாழை  இலைகளைப்
பறித்து சின்னக் குழந்தைகளுக்கு
முதலில் கொடுத்து விட்டுக் கணவனுக்கும் கொடுப்பாள்.
தானும் சாப்பிடுவாள்.
கொஞ்சம் டீத்தண்ணி குடு அம்மிணி என்றும் கேட்டுக் கொள்ளுவாள்.
இந்த சிரம பரிகாரம் முடிந்து
அவன் மீண்டும் கிணற்றுக்குள் இறங்குவான்.
சிலசமயம் அவனுடைய மச்சினர் என்று சொல்லிக் கொண்டு
இன்னொருவனும் இறங்குவான்.
இவர்கள் பேசிக்கொள்வது மேலே கேட்கும்.
சாயந்திரம் 4 மணிக்கு மேலே வந்து விடுவார்கள்.
பத்தடி தோண்டிவிட்டதாகவும்
அடுத்த நாட்கள் காலையில் இரண்டு அடிகளுக்கு மேலே
தண்ணீர் வந்துவிடும். இன்னும் ஆறு மாதங்கள் கவலை இல்லை
என்பான்.

நானும் தலை ஆட்டிவிட்டு, அவர்கள் கையில் நூறு ரூபாயும் அந்தத்
தேவானைக்குப் புடவை,
குழந்தைகளுக்குச் சட்டைகள் என்று கொடுத்து விட்டுக் கிணற்றை எட்டிப் பார்ப்பேன். கலங்கலான காவி வண்ணத்தில் அறுபது
 அடிகளுக்குக் கீழே தண்ணீர் தெரியும்.
சரி இன்று தண்ணீர் வண்டியை வரச் சொல்லி விடலாம்.
நாளைக்கு மோட்டார் போட முடியும்.
மேல் தொட்டியில் தண்ணீர் நிரம்பும்.
எல்லோரும் நன்றாகக் குளிக்கலாம் என்ற கனவுகளுடன்
படுக்கைக்குச் செல்வேன்.

அடுத்த நாள் எழுந்திருக்கும் போதே உளிச் சத்தம் கேட்கும்.
என்ன வென்று ஜன்னல் வழியே பார்த்தால்
அடுத்த வீட்டில் தேவானை கிணற்றுப் பக்கம் நின்று கொண்டிருப்பாள்.
ஆஹா, தண்ணீர் அங்கே போய்விடுமே என்ற பரபரப்பில் மோட்டார் போடுவேன்.
அது அரை மணி நேரம் ஓடி பாதித்தொட்டி நிரம்பும்.
பின்னால் சிங்கத்தின் குரல் கேட்கும்.
நூறு ரூபாய்க்கு ஒரு நாள் தண்ணீர் வாங்கிட்டியா என்று சிரிப்பார்.
அடுத்தவாரமும் தேவானைக்கு நூறு எடுத்து வை என்று
சொல்லியபடி மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளம்பி விடுவார்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 

இப்போது எல்லோரும் போர்வெல் போட்டிருப்பார்கள்.

Thursday, June 13, 2019

மாறாத காலங்கள்...

தம்பி ரங்கன் திரு மோகனின்   பரம விசிறி 
வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழவேண்டும். அஞ்சலிகளும் அன்பும்.திரு  மோகன்.

Monday, June 10, 2019

பிறந்த நாள் நினைவுகள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்

ஜூன் பத்தாம் நாள், 1952 ஆம் ஆண்டு.
அம்மாவுக்கு மிகப் பிடித்த நாள். அம்மாவுக்கு
எண்கள் ,நியுரமாலஜி
மிகவும் பிடிக்கும். அதற்காகவே பல
புத்தகங்கள் படிப்பார். இந்தியன் எக்ஸ்ப்ரஸ்
ஞாயிறு அன்று வெளியாகும் சண்டே ஸ்டாண்டர்டில் முதலில் அவர் படிப்பது பீட்டர் விடாலின் அந்த வாரத்துக்கான  ஜோசியக்குறிப்புகள் தான்.

1 ஆம் நம்பர் சூரியனுக்குரியது. அதில் பிறந்தவர்கள்
எல்லாவற்றிலும் ,துறைகளிலும் பிரகாசிப்பார்கள்.
என்றெல்லாம் சொல்வார். அவரது பிறந்த நாள் 9 ஃபெப்ரவரி
என் பிறந்த நாள் நம்பர் 9..ஏப்ரில்.தனக்கும் எனக்கும் உள்ள வேறுபாடுகளையும்
சொல்வார். உனக்கு சாலஞ்சஸ் இருந்தால் தான்
நீ பிரகாசிப்பாய். இல்லாவிட்டால் ஒடுங்கி விடுவாய் என்று என் முயற்சிகளுக்கு
ஊக்கம் கொடுப்பார்.

அவர் அப்பாவின் வார்த்தைகளுக்கு மறு வார்த்தை சொல்லி நான் பார்த்ததில்லை.
நானோ சவால் என்றால் சரி என்று வருவேன்.
தம்பிகள் இருவரும் 1 ஆம் எண்ணின் ஆதிக்கம் இருந்தாலும்
 எல்லோருடனும் ஒத்துப் போவார்கள். ஆனால்
நினைத்ததை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக
இருப்பார்கள்
அம்மா நினைத்தபடி தம்பிகள் இருவரும் அவரவர் துறைகளில்
 முனைப்போடு இருந்து வெற்றி பெற்றார்கள்.
கடின வேலைகளுக்கு அஞ்சியதில்லை.
அம்மா மனம் கோணும்படி எதுவும் செய்ய மாட்டார்கள்.
அப்பாவின் வார்த்தைக்கு என்றும் கட்டுப்படுவார்கள்.
அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பிடித்த மாப்பிள்ளை சிங்கம்.
5 ஆம் எண்ணுக்குரியவர்.
அம்மாவின் கணிப்புப்படி இந்த எண்ணுக்குரியவர்கள்
எல்லோரிடமும் தராசுபோல நியாயம் பார்த்து
அனுசரித்துப் போவார்கள்.
சிங்கம் என்னைக் கவனித்துக் கொண்ட அழகில் பூரித்துப்
போவார்.
அவரது செல்ல மகன் என் பெரிய தம்பிக்கு அவனது 42 வயதில்
மாரடைப்பு வந்த போது அவன் அந்தப் பூட்டுக்குத் தப்பிவிடுவான் என்பதில் திடமாக இருந்தார்.
நான் விஜயா ஹாஸ்பிடலே கதி என்று இருக்க
அம்மா அங்கு வரவே மறுத்தார்.
சின்னத்தம்பி நான் அப்பா மூவரும் ஆஸ்பத்திரி வராந்தாவே
வீடு போல இருந்தோம்.
சாப்பாடு மட்டும் வண்டியில் வந்துவிடும்.
அப்பா மனம் தளரக் கூடாது என்பதில் கவனமாக
இருந்தார் அம்மா.
அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. தம்பி  பைபாஸ் சர்ஜரியும்
முடித்து நலமே வீட்டுக்குத் திரும்பினான்.

அவனுக்கு அடுத்து வந்த மூன்று மாதங்களும்
என் பெற்றோர் நம்பிக்கையுடன் வாசித்த சொல்லிய பிரபந்தமும்,சுந்தரகாண்டமும் அவன் ஆயுளை நீட்டியது.
அவன் மனைவியின் சலிப்பில்லாக் கவ்னமும்
அந்த வெற்றிக்குக் காரணம்.
எங்கள் குழந்தைகளின் வளமான எதிர்காலத்தில்
என் தம்பிகள் காட்டிய அக்கறை அளவிட முடியாதது.

யாரையிம் வன்சொலால் தாக்கி அறியாத மென்மை
படைத்தவன் முரளி.
அவன் பிறந்த அதே ஜூன் மாதம் அவனுக்குப் பேரனும் பிறந்து விட்டான்.
அன்பு முரளி,
உன்னுடைய சந்தோஷ நாட்களை நான் அனுபவிக்கிறேன்.
உன் மகன் ,அவனுடைய மகளுடனும்,மகனுடனும்,
அன்பு மனைவியுடனும் பல்லாண்டு நிறை வாழ்வு வாழ வேண்டும்.

அடுத்த பிறவி என்று உண்டெனில் உனக்கு
நான் எல்லாவிதத்திலும் உதவி உறுதுணையாக இருக்கக்
கடவுள் அருள் வேண்டும்.
ஏனெனில் சில கடன்கள் அடைக்க முடியாதவை.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரா.

Friday, June 07, 2019

திருக்கண்ணமுது

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
திருக்கண்ணமுது

புதுக்கண்ணன் பிறந்ததை ஒட்டி
பெருமாளுக்கு நிவேதனம் செய்ய இந்தப் பால் பாயசத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
நாங்கள் திருப்புல்லணை ஆதி ஜகன்னாதன் கோவிலுக்குச் சென்ற போது
 காலை மணி பதினொன்று இருக்கும்.
அமிர்தமான பாயசப் பிரசாதம் கிடைத்தது அவன் அருளாக.
அந்த மாதவ பட்டாச்சார்...அப்போது அங்கே இருந்த அர்ச்சகர்

இந்த கண்ணமுதைச் செய்யும் விதம் சொன்னார்.

பச்சரிசியை வறுத்துக் கொண்டு ஒன்றுக்கு மூன்று
என்ற விகிதத்தில் நீர் சேர்த்து
 நன்றாகக் குழைய வேகவைத்து,
ஒரு முழுத்தேங்காயின் பால் இரண்டு தடவையாக எடுத்துக் கொண்டு

இரண்டாவது பாலையும், ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வெல்லத்தூள்
இரண்டையும் கொதிக்கும் சாதத்தில் கலந்து ஒரு கொதி
வந்தபின்னால்,
முதலாவதாக எடுத்த பாலையும் கலந்து அதுவும் ஒன்று சேரக் கொதித்த பின்னர்
இறக்கி,
ஏலக்காய் பொடி தூவி, முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துக் கலந்து
கண்ணனுக்குப் படைக்க வேண்டும்.
குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் செய்தது.
இனி நாமகரணத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன்.
Add caption
Add caption
என்றும் வாழ்க வளமுடன்.
ஸ்ரீனிவாச பெருமாள்  சிகாகோ
படத்தில் இருப்பது கூகிள் குழந்தை.


Thursday, June 06, 2019

புது வரவு

வல்லிசிம்ஹன்
புது வரவு
எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்.
புதுக் கண்ணன் பிறந்தான்.

அரங்கன் அருள், திருமலையான் அருளில்  எங்கள் பிறந்தகத்தில் புதுக் கண்ணன் வருகை தந்திருக்கிறான் தம்பி முரளியின் மகனுக்கு, ஜூன்  5 அன்று மாலை  குழந்தை ஜனனம்.
முருகனை எழுதிய வேளையில்  பிறந்த தால் கந்தன் கருணையும் அவனுக்கும் இருக்கும் என்று பிரார்த்திக்கிறேன்.

இந்த நாள் நிகழ்வைப் பதியும் பாக்கியத்தைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சீரோடும் சிறப்போடும் வாழ இந்த அத்தைப் பாட்டியின் ஆசிகள்.

Tuesday, June 04, 2019

எட்டுக்குடி,சிக்கில்,என்கண் முருகன்

வல்லிசிம்ஹன்,
எல்லோரும் இனிதாக  வாழ வேண்டும்.

http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_07.html

http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_08.html


http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_09.html
http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_8297.html  அன்புத் தோழி  கீதா சாம்பசிவம்  பதிவுகள்இல்  
இன்னும் விரிவாக  விவரங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.  நன்றி  கீதாமா.





சிக்கில் சிங்காரவேலா பாடலைக் கேட்டதும் நினைவு வந்ததென்னவோ,
 நம் ஷண்முகசுந்தரமும் , மோஹனாம்பாளும் தான்.

பிறகுதான் பொதிகையில் முன்னம் ஒரு காலம்
எப்பொழுதோ ஆலய தரிசனம் நிகழ்ச்சியில் கேட்ட தல வரலாறு நினைவுக்கு
வந்தது.
எட்டுக்குடி வேலவனில் ஆரம்பித்து
சிக்கில் முருகன், எங்கண் முருகன் என்று விளக்கமாகச் சொன்னவர் பெயர் நினைவில்லை.
ஏனெனில் குரல் மட்டுமே பின்னணியில் ஒலித்தது.

ஆலய செய்திகளும்,படங்களும் காணக்கிடைத்தது 2012 இல் என்று நினைக்கிறேன்.
இப்பொழுதும் அது போல ஒளிபரப்பாகிறதா என்று தெரியவில்லை.

அப்போது கேட்ட வரலாறு.
எட்டுக்குடி முருகனை வடிவமைத்த சில்பியின் முருகனின் அருள்
நிறைந்த மனத்துடன் இரவு பகல் என்று பார்க்காமல்
 வடித்த முருகன்,வள்ளி, தெய்வயானை
 மயிலில் அமர்ந்த கோலம் பார்த்தவர் மனமெல்லாம்
அருள் வெள்ளம் பாய்ந்தது. அதிசயத்திலும் அதிசயம்
சிற்பி வடித்த மயில் உயிர் பெற்றுப் பறக்க ஆரம்பித்ததாம்.

உறைந்து போன மக்கள் எட்டிப்பிடி எட்டிப்பிடி என்றதும்\
உடனே சிலர் உடனே பிடித்து உரித்தான இடத்தில்
அமர்த்தி முருகன் அதன் மேல் அமர,
 தேவியர் விக்கிரகங்களையும் இருபக்கலிலும் இருத்தினராம். இந்தக்
கோவிலில் மட்டுமே  மயில் இடப்பக்கம்
முகம் திருப்பிப் பார்ப்பது போல இருக்குமாம்.
எட்டிப்பிடி என்பது எட்டுக்குடி என்று மறுவியதாம்.
இந்த ஆச்சரிய நிகழ்வைக் கேட்டு வந்த மன்னன், வேறு எந்த இடத்திலும் இது
போல அழகு முருகன் இருக்கக் கூடாது என்ற
உத்தரவில் சிற்பியின் வலது கட்டை விரலை எடுக்கச் சொல்ல
அப்படியே நடந்தததாம்.

இதற்குப் பிறகு திருமுருகன் கனவில் தரிசனம்
கொடுத்து சிக்கிலிலும்  தன்னை எழுந்தருளச் சொன்னதால்
ஒரு கட்டை விரலும் ,முருகன் துணையும் இருக்க
சிக்கிலில் முருகப்பெருமான் விக்கிரகத்தை வடித்தார் அந்த
அதிசயச் சிற்பி.
இந்தத் தடவை அவரின் கண்கள் பறிக்கப் பட்டதாம்.

மூன்றாம் தடவையும் கனவில் வந்த முருகனார், இன்னோரு
சிலையும் இதே போல் வடிக்கச் சொல்ல
மகளின் துணையுடன் தெய்வத்தை வடிக்க ஆரம்பித்த போது
மகளின் சிற்பியின் உளி மகள் கையில் பட  ரத்தம் பீறிட்டதாம்.
அது சிற்பியின் கண்ணில் பட அவருக்கு உடனே
கண்ணில் ஒளிவர் மீண்டும் பார்வை பெற்றாராம்.
என் கண் என் கண் என்று கதறி
கந்தனைப் பாட,அந்த ஊருக்கு எங்கண் என்றே பெயர் வந்ததாம்.
பங்குனி மாதத்தில் காவடி பிரசித்தம் இந்த மூன்று
ஊரிலும் என்று சொல்லி முடித்தார் அந்த நிகழ்ச்சியை.
முருகன் திருவருள் எங்கும் நிறையட்டும்.
உங்களில் பலருக்கும் இந்தத் தகவல் தெரிந்திருக்கும்
என் மன திருப்திக்காக இங்கு பதிகிறேன்.
அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும்.

.

எட்டுக்குடி வேலவன்.





Saturday, June 01, 2019

அம்மாவின் மூக்குத்தி

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
அம்மாவின் மூக்குத்தி .

மூக்குத்தி போட்டுக் கொள்ள,நல்ல மூக்கு வேண்டும்.
கூர் நாசி. எட்டுக்கல் பேசரி போட நாசியும் ஏற்றுக்கொள்ளும்படி

செழிப்பாக இருக்க வேண்டும். அதுவும் ஒரு பக்கம் ஒற்றைக்கல்
இன்னோரு பக்கம் பேசரி.
ஆஹான்ன்ன். வைரமில்லை. புஷ்பராகம்.

ஆனால் அதையே அம்மா பாதுகாப்பில் வைத்திருக்கும் போது வைரமாக மின்னும்.
வெள்ளி தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
 ஏதாவது வெள்ளிக்கிழமை விடுமுறை இருந்தால் அம்மாவோட காரியங்களைப் பக்கத்திலிருந்து பார்ப்பேன்.
தேய்க்க வேண்டிய வெள்ளி,பித்தளை,வெண்கலப் பாத்திரங்களை
எடுத்து வைத்து என் துணையுடன் தேய்த்து வெய்யிலில் வைப்பார்.

அடுத்தாற்போல் ஒரு பாயை விரித்து அதில் அமர்ந்து கொண்டு
மூக்குத்திகளையும்,காது தோடுகளையும் கழற்றி.,
சர்ஃப் பொடி நிறைந்த தண்ணீர்க் கிண்ணத்தில் ஜாக்கிரதையாக வைப்பார்.
வளையல்களும் இன்னொரு பெரிய டபராவில் வைக்கப்படும்.
முகத்துக்குப் பாலேடு,மஞ்சள் இதைக் குழைத்துப்
பூசிக்கொண்டு கிண்ணத்தில் நல்லெண்ணெய் எடுத்துக் கொண்டு
 குளியல்றைக்குச் சென்று விடுவார். அம்மாவுக்கு நீண்ட தலைமுடி. அடர்த்தியாக இல்லாமல் நளினமாகப் பின்னலிடப்பட்டு
முடிபோட்டிருக்கும்.
வெளியே போகும்போது மட்டும் அது  சுற்றப்பட்டுப் பந்து போல கழுத்தில் அமர்ந்துவிடும். எண்ணி ஆறே கொண்டை ஊசிகள்.அதற்குள்
அடங்கிவிடும் அந்த கொண்டை.
இதுதான் எஸ் கட்டாமா என்று கேட்டால் அம்மா முகத்தில் குறும்பு
மின்னும்.
அடுத்த தடவை எதிர்வீட்டு மாதவனின் அம்மா வந்து கிளம்பும்போது சுட்டிக் காட்டுவார்.
அது சற்றே குறைவான தலைமுடி உள்ளவர்கள் தலையுடன் பொருத்தும் எஸ் வடிவில்
இருக்கும்.

அம்மா குளித்துத் தலைமுடியையை உலர்த்தி நுனி முடிச்சுப் போட்டுக் கொண்டு
அடுப்புகளை மூட்டி,கரியடுப்புப் பக்கத்தில் உட்காரும்போது,
அந்த அடுப்புகளின் வெளிச்சத்தில் தோடுகளும் ,மூக்குத்திகளும் மின்னும்.
நேற்றுப் பார்த்த உதிரிப்பூக்கள் சினிமாவின் தாக்கம் இந்தப் பதிவு.

அழகிய கண்ணே பாடல்தான் எவ்வளவு அழகு.
நல்ல வேளை  எனக்கு நல்ல அப்பா கிடைத்திருந்தார்.
அவர் துணையில் தான் எங்கள் குடும்பம் செழித்தது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



ஃபிசியோ தெரபி 15 வருடங்களுக்கு முன்னால்.......

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கால் புராணம் +++++++++++++++++++++++ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி:( பிசியோ வலியோ தெரபி 199...