Blog Archive

Saturday, June 01, 2019

அம்மாவின் மூக்குத்தி

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
அம்மாவின் மூக்குத்தி .

மூக்குத்தி போட்டுக் கொள்ள,நல்ல மூக்கு வேண்டும்.
கூர் நாசி. எட்டுக்கல் பேசரி போட நாசியும் ஏற்றுக்கொள்ளும்படி

செழிப்பாக இருக்க வேண்டும். அதுவும் ஒரு பக்கம் ஒற்றைக்கல்
இன்னோரு பக்கம் பேசரி.
ஆஹான்ன்ன். வைரமில்லை. புஷ்பராகம்.

ஆனால் அதையே அம்மா பாதுகாப்பில் வைத்திருக்கும் போது வைரமாக மின்னும்.
வெள்ளி தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
 ஏதாவது வெள்ளிக்கிழமை விடுமுறை இருந்தால் அம்மாவோட காரியங்களைப் பக்கத்திலிருந்து பார்ப்பேன்.
தேய்க்க வேண்டிய வெள்ளி,பித்தளை,வெண்கலப் பாத்திரங்களை
எடுத்து வைத்து என் துணையுடன் தேய்த்து வெய்யிலில் வைப்பார்.

அடுத்தாற்போல் ஒரு பாயை விரித்து அதில் அமர்ந்து கொண்டு
மூக்குத்திகளையும்,காது தோடுகளையும் கழற்றி.,
சர்ஃப் பொடி நிறைந்த தண்ணீர்க் கிண்ணத்தில் ஜாக்கிரதையாக வைப்பார்.
வளையல்களும் இன்னொரு பெரிய டபராவில் வைக்கப்படும்.
முகத்துக்குப் பாலேடு,மஞ்சள் இதைக் குழைத்துப்
பூசிக்கொண்டு கிண்ணத்தில் நல்லெண்ணெய் எடுத்துக் கொண்டு
 குளியல்றைக்குச் சென்று விடுவார். அம்மாவுக்கு நீண்ட தலைமுடி. அடர்த்தியாக இல்லாமல் நளினமாகப் பின்னலிடப்பட்டு
முடிபோட்டிருக்கும்.
வெளியே போகும்போது மட்டும் அது  சுற்றப்பட்டுப் பந்து போல கழுத்தில் அமர்ந்துவிடும். எண்ணி ஆறே கொண்டை ஊசிகள்.அதற்குள்
அடங்கிவிடும் அந்த கொண்டை.
இதுதான் எஸ் கட்டாமா என்று கேட்டால் அம்மா முகத்தில் குறும்பு
மின்னும்.
அடுத்த தடவை எதிர்வீட்டு மாதவனின் அம்மா வந்து கிளம்பும்போது சுட்டிக் காட்டுவார்.
அது சற்றே குறைவான தலைமுடி உள்ளவர்கள் தலையுடன் பொருத்தும் எஸ் வடிவில்
இருக்கும்.

அம்மா குளித்துத் தலைமுடியையை உலர்த்தி நுனி முடிச்சுப் போட்டுக் கொண்டு
அடுப்புகளை மூட்டி,கரியடுப்புப் பக்கத்தில் உட்காரும்போது,
அந்த அடுப்புகளின் வெளிச்சத்தில் தோடுகளும் ,மூக்குத்திகளும் மின்னும்.
நேற்றுப் பார்த்த உதிரிப்பூக்கள் சினிமாவின் தாக்கம் இந்தப் பதிவு.

அழகிய கண்ணே பாடல்தான் எவ்வளவு அழகு.
நல்ல வேளை  எனக்கு நல்ல அப்பா கிடைத்திருந்தார்.
அவர் துணையில் தான் எங்கள் குடும்பம் செழித்தது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏19 comments:

KILLERGEE Devakottai said...

நினைவோட்டங்கள் அருமை
உதிரிப்பூக்கள் பாடல் மறக்க முடியுமா ?

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு தேவகோட்டை ஜி.
அம்மாவையும் அந்தப் பாடலையும் மறக்க முடியாது தான்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மூக்குத்தி, முகத்திற்கு தரும் அழகிற்கு இணை அதுவே. அனுபவத்தை, ரசித்து பகிர்ந்து விதம் அருமை.

Geetha Sambasivam said...

எத்தனை வருடங்கள் ஆனாலும் அம்மா, அம்மா தான்! அம்மாவை மறக்க முடியுமா!

ஸ்ரீராம். said...

ஒத்தக்கல்லு பேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு...

பாடல் வரி நினைவுக்கு வருகிறது!

இனிமையான நினைவுகள் அம்மா.

ஸ்ரீராம். said...

'அழகிய கண்ணே' அருமையான பாடல்.

இசையிலும் சரி, வரிகளின் செழிப்பிலும் சரி.. காட்சி அமைப்பிலும் சரி.

துரை செல்வராஜூ said...

மூக்குத்தி அழகே அழகு...

மங்கல அணிகலன்களுள் அதுவும் ஒன்று...
இன்று பெரும்பாலான பெண்கள் அணிகின்றார்கள் இல்லை..

மலரும் நினைவுகள் அருமை அம்மா...

மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சி - என்றொரு திரைப்பாடல்..
மூக்குத்தியைச் சொல்லும் பல பாடல்கள் உண்டு...

வாழ்க நலம்..

கோமதி அரசு said...

அக்கா, அம்மாவின் மூக்குத்தியை சொல்லி அருமையான பாடல் பகிர்ந்து விட்டீர்கள். நான் சின்ன மூக்குத்தி சிவப்புக்கல்தான் போட்டு இருக்கிறேன்.

முதலில் மீன் வடிவில் முத்து மூக்குத்தி., அப்புறம் மீன் மூக்குத்தி சிவப்புக்கல். இப்போது பூ மாதிரி சிவப்புக்கல்.
என் அம்மாவும் இரண்டு பக்க மூக்குத்தி போட்டு இருப்பார்கள்.
அம்மாவைப்பற்றிய படிக்க பகிர்வு ரசனையாக இருக்கிறது.

Geetha Sambasivam said...

//ஒத்தக்கல்லு பேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு.//

அது எட்டுக்கல்லு பேசரி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒத்தக்கல்லில் பேசரியே கிடையாது! :)))))) 3 கல்லுனா முக்கட்டி

ஸ்ரீராம். said...

//அது எட்டுக்கல்லு பேசரி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒத்தக்கல்லில் பேசரியே கிடையாது! :)))))) 3 கல்லுனா முக்கட்டி//


அவசி

ஆமாம்க்கா....!

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஜம்புலிங்கம் ஐயா,
நலமா.
ஆமாம் மூக்குத்தியும் சிறப்பு. அம்மாவும் சிறப்பு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா,

அம்மாவின் பொறுமையில் காலளாவாவது எனக்கு வந்திருக்கலாம்.
ஒத்தைக்கல்லு பேசரி ஹாஹ்ஹா.

தப்பா எழுதிட்டாரே வாலி.
உடம்பு தேவலியாமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

அம்மா நம் உலகம்.அவளை மிஸ் பண்ணாமல் ஒரு
நாள் கூட செல்லாது.
கீதா சொல்லியாச்சு.ஒத்தக் கல்லு பேசரியாகாது. தனி மரம் தோப்பாகாது.

அழகிய கண்ணே மாதிரி இன்னோரு பாடல் கிடைப்பது
அரிது.பாலு மஹேந்த்ராவின் காமிரா, ராஜாவின் இசை,
அஷ்வினியின் தாய் முகம், அந்தக் குழந்தைகளின்
இன்னொசென்ஸ்.ம்ஹூம் சொல்லி முடியாது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துரை செல்வராஜு,
ஆமாம் எங்கள் காலத்தில் அது முக்கியம்.
நானும் கீழே விழுந்திராவிட்டால்.
கழற்றி இருக்க மாட்டேன்.

மூக்குத்தி சிந்தனையைச் சீர்ப்படுத்தும், பல
நாடிகளில் மூக்குத்தி துவாரமும் ஒன்று.

மாணிக்க மூக்குத்தி மீனாட்சி பாடல் நான் கேட்டதில்லையே. தேடிப் பார்க்கிறேன்.
வந்து படித்துக் கருத்திட்டதற்கு மிக நன்றி மா,

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கச்சி கோமதி,
மீன் வடிவத்தில் மூக்குத்தியா.அதுவும் சிகப்புக் கல்.
அச்சோ எத்தனை அழகாக இருந்திருக்கும் உங்கள் முகத்திற்கு.
மதுரையில் கிடைக்குமா மா.
இப்போது பூப்போல் மூக்குத்தி.
அழகோ அழகு. ஒரு முகத்தையே களையாக்கிவிடும் மூக்குத்தி.

துரை மாணிக்க மூக்குத்தி பற்றி சொல்லி இருக்கிறார்.
அம்மாவின் படம் இருந்தால் எனக்குக் காண ஆசை.
நீங்கள் பகிர்ந்திருப்பீர்கள்.
மறந்து விட்டது மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மாவின் முக்குத்தி ஜொலிக்கிறது!!

அருமையான நினைவுகள்!

அழகிய கண்ணே அருமையான பாடல் மா...

மூக்க்குத்தி பூ மேல காத்துன்னு ஒரு பாட்டு உண்டே அது நினைவுக்கு வந்தது அம்மா...

கீதா

மாதேவி said...

அம்மாவின் மூக்குத்தி பல கதைகள் சொல்கின்றன.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள் அம்மா...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தங்கள் அம்மாவின் மூக்குத்தி கதையை அழகாக விவரித்திருக்கிறீர்கள். படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அந்த கால அம்மாக்களின் மங்களகரமான மூக்குத்திகளின் அழகே அழகுதான். படித்ததும் எனக்கும் என் அம்மாவின் நினைவு வந்தது. என் அம்மாவின் மூக்குத்திகளும் ஜொலிக்கும். அதை புஷ்பராகந்தான். இப்போதுள்ள கற்களில் அந்த ஜொலிப்பு இல்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.