Blog Archive

Sunday, April 11, 2021

இப்போது இன்றைய உலகம்.....

வல்லிசிம்ஹன்

தடுப்பூசிகள் போடப்படும் வேகத்தில் 
தொற்றும் அதிகரிப்பது
ஒரு வேதனைதான்.
தடுப்பூசி போட்டால் எல்லாம் சரியாகி விட்டது என்றும் இன்னும் கூட்டம்
அதிகமாகி விட்டது. 

இப்போது ஈஸ்டர் விடுமுறையில் அனைவரும் 
சந்தித்து ,ஏர்போர்ட்டில் குழுமி,
வேறு ஊர்களுக்குச் சென்று.,
தங்களால் ஆன (பரப்பும்)சேவைகளைச் செய்கிறார்கள்.

முகக் கவசம் அணிவது ஒரு வேடிக்கையாகி விட்டது.
இந்தியாவில் ஒரு திருமணத்தில்
எல்லோரும் பத்திரமாக இருங்கள் என்று சொன்னதே
தவறாகி விட்டது.

Spoilsport பட்டம் வேற. மனது கேட்காமல் தான் சொன்னேன்.

நாங்கள் எல்லோரும் மிக சௌக்கியமாக இருக்கிறோம்.
உன் வார்த்தை பலிக்கவில்லை
என்ற கேலி வேறு.ஒரே நாளில் 100000 க்கு மேல் பாதிப்பு.
நம்மூரில் எண்ணிக்கை கேட்கவே வருத்தமாக இருக்கிறது.

திருமணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
குறைவான கூட்டம் என்று 200 நபர்கள் கூடுகிறார்கள்.
சின்ன மண்டபத்தில் தான் நடக்கிறது.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் போட்டுக் கொள்ளாதவர்கள்
கலந்துதான் நடக்கிறது.

என் தோழி முகக் கவசம் போட்டுக் கொண்டதால் கேலி செய்தார்களாம். அவள் மதிய உணவுக்கே
போகவில்லை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்கள் அக்கம் பக்கத்தில் எல்லோரும் இரண்டு ஊசியையும்
போட்டுக் கொண்டாகிவிட்டது.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி
ரியாகஷன்.
ஊசி போட்ட இடத்தில் இன்னும் வலி.மூன்று முழு நாட்கள்
ஆனபிறகும்!!
நோய்த்தடுப்பு நன்மை என்பதால் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
++++++++++++++++++++++++++++++++++++++++
என் வயதொத்தவர் திருச்சியில் திடீர் என்று மறைந்தார்.
தடுப்பூசி போட்ட பிறகும் பத்து நாட்களில்
வெளியே வரப்போக இருந்திருக்கிறார்.
அவர் வேலை அப்படி.
அவர் மனைவியிடம் அழைத்துப் பேசக்கூட
தயக்கமாக இருக்கிறது.அத்தனை பூஜை,புனஸ்காரம் என்றிருப்பவர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னையில் ஆன்லைனில் வாங்கி இருந்த புடவைகள், மருந்துகள் ,பிந்தி
எல்லாவற்றையும் நண்பர் ஒருவர் பணம் கொடுத்த உலகப் 
பிரசித்தி பெற்ற நிறுவனம் மூலம் அனுப்பி இருந்தார்.
ஒருமாதமாக அந்தத் துறைமுகத்தில் தங்கி இருந்தது.
என்ன புடவை,பொட்டுகள் எப்படி செய்தார்கள் இத்யாதி 
செலவுக்கு 110$ அனுப்புங்க என்று சொல்லிவிட்டார்கள்.
அனுப்பிய பிறகு இதோ நேற்று வந்தது.
சுண்டைக்காய் கால் சுமைகூலி முக்கால்
நினைவுக்கு வருகிறதா!!!!!



Tony Brent - Amore, Ammammaa.

இந்தப் பாட்டின் தமிழ் வண்ணம் அம்மம்மா..மனோகர்,ஷீலா
நடிப்பில்.  வேதா இசையில்.



Saturday, April 10, 2021

Cheeni Kum Title Track | Full Video Song | Cheeni Kum | Amitabh Bachchan...

 2007இல் துபாயில் இருக்கும் போது பார்த்த படம். மிக
நளினமான காதல் கதை. 
கொஞ்சமும் வேறு நினைப்பு வராமல் தபுவும் அமிதாப்
பச்சனும் நடித்திருக்கும்
சிறந்த காட்சிகள்.

Wednesday, April 07, 2021

Yeh Jeevan Hai | Kishore Kumar | ..வாழ்க்கை இது தான்

பாடகர் கிஷோர் குமாருக்காக இசைப் பேரரசி லதாமங்கேஷ்கர் பாடிய பாடல்.

இருவரும் எத்தனையோ பாடல்களினால்
நம்மை மகிழ்வித்திருக்கிறார்கள்.


கிஷோரும் ஆஷாஜியும்



Tuesday, April 06, 2021

நினைவலைகள் 1960s


ஏப்ரில் ஃபூல் பாடல் யதேச்சையாக அமைந்தது,:)




Monday, April 05, 2021

அன்னையும் தந்தையும் தானே.


வல்லிசிம்ஹன்

பெற்றோர் நினைவு நம்மை விட்டு அகலாது என்பது
எல்லோரும் உணர்ந்தது.
அவர்களும் எங்கிருந்தாலும் நம்மை
நினைத்து அருள் செய்வார்கள்,
அவர்களின் புண்ணியங்கள் நம்மைக் காக்கும்

எண்ணங்கள் நம்மைத் தொடரும் 
என்பதை நிரூபித்திக் கொண்டே இருக்கும் ஒரு நிகழ்வு.
தினமும் அப்பா அம்மா படத்தை வணங்கிவிட்டு
படுக்கச் செல்வேன். ஒரு நாள் இரவில் 
"வெளிச்சமே போதவில்லையே''  என்று குரல் 
கேட்டது.
மகள் அறையை நோக்கினேன். குறட்டை சத்தம். பேரன் 
இருவர்களின் அறை நிசப்தம்........
நானே உளறினேனா என்று யோசித்ததில்
அதை எல்லாம் நிறுத்தி 25 வருடங்கள் ஆனது நினைவுக்கு வந்தது.;0)
மீண்டும் படுத்துக் கொண்டால் உறக்கம் வரவில்லை.
காலை 5.30க்கு  இறங்கி வரும்போது கீழே நல்ல இருட்டு.
என் கணினி இருக்கும் அறைக்குச் சென்று
விளக்கைப் பொறுத்தி மீண்டும் பெற்றோரை வணங்கிவிட்டு
காப்பி ஏற்பாட்டில் இறங்கும் போது,

நினைவுக்கு வந்த விஷயம் இதுதான்.
அப்பா எப்பொழுதும் தன் படுக்கைக்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியில்
நல்ல டார்ச் லைட், மற்றும் சொம்பில் தண்ணீர் வைத்துக்
கொண்டுதான் படுப்பார்.
அம்மாவுக்கு உடல் நலம் இல்லாத போது, 
அவருக்கு இரவில் எழுந்து கழிவறைக்குச் செல்ல 
டார்ச் போட்டுக் கொண்டுதான் வழிகாட்டுவார்.

அம்மா திரும்பி வந்ததும் தான் மீண்டும் தூங்குவார்.

ஏதோ மனதில் தோன்ற மகளிடம்,
தாத்த பாட்டி படத்துக்குச் சின்னதாக விளக்கு வைக்கலாமா
என்று கேட்டேன்.
அதுக்கென்ன பாட்டரி செல் போட்டு
எல் இ டி விளக்கு கிடைக்கும். 
 40 மணி நேரம் எரியும் . மீண்டும் சார்ஜ் செய்யலாம் என்றாள்.

அதையே ஒரு டஜன் அமேசானில் சொல்லி வந்தும் விட்டது.
இங்கே அலங்கார விளக்குகள் எப்பொழுதும் 
கிடைக்கும்.

நானும் தூங்கப் போகும் சமயம் அந்த விளக்கை
ஏற்றி விட்டுச் செல்வது வழக்கமாகிவிட்டது.
கீழே காலையில் வந்ததும்  விளக்கை அணைத்து விடுவேன்.
ஆறாம் நாள் அதை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று நினைத்த போது
அதன்  wire காணோம்.:(

ஒரு வேலையைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்று வருந்தியவாறு
சரி இருக்கிற வரை வெளிச்சம் தரட்டும்.
என்று குட்டி விளக்கை பெற்றோர் படம் 
பக்கத்தில் வைத்துவிட்டுச் சென்றேன்.
அடுத்த நாள் காலையில் எனக்கு அதிசயம் காத்திருந்தது.
அந்த விளக்கு எரிந்து கொண்டுதான் இருந்தது.

இது நடந்து 40 நாட்கள் ஆகிறது. இன்னும்
ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரம்
எரிந்து கொண்டுதான் இருக்கிறது.

இது எப்படி என்றே புரியவில்லை.
Any time...any help , ஃபோன் பண்ணு என்று அப்பா,
அம்மா இருவரும் சொல்வதுதான் 
நினைவில் நிற்கிறது.
நன்றி அப்பா.


Sunday, April 04, 2021

VR 360 Video of Top 5 Roller Coaster Rides 4K Virtual Reality

பேரன் புதிதாக வாங்கி இருக்கும் வர்ச்சுவல் 
ரியாலிட்டியில் 
நான்uம் பங்கெடுத்து
அந்தக் கண்ணaடியைக் கண்களில் மாட்டிக் கொண்டதுதான் 
தெரியும் இன்னோரு புதிய உலகத்துக்குப் போய் வந்து விட்டேன்.
இந்த ரோலர் கோஸ்டரில் சென்று வந்தேன்.


 வாழ்வில் முதன் முறை சென்று வந்தது
மிக அருமை.
அப்படியே நிஜத்தில் நடப்பது போல
இருந்தது.
வயிறு கொஞ்சம் மேலே கீழே சென்று வந்ததுதான் 
பயங்கரமான த்ரில்.அந்த வளைவுகளில் உடலும் வளைந்து கொடுப்பதைப்
போலத் தோற்றம்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Friday, April 02, 2021

ரயிலும் பயணங்களும் நாங்களும்.


புதிதாக வந்திருக்கும்  பல பூக்கள்

               1967 செப்டம்பர் மாதம்   பெரியவனுக்குப் பத்துமாதங்கள் ஆகி இருந்தன.  சிங்கத்துக்கு வருடாந்திர  லீவுக்கான நேரம். பெற்றொர் அப்போது    இராமேஸ்வரத்தில்  இருந்தார்கள்.   அங்கே போய் வர  இருவரும் முடிவெடுத்தோம்.  போகவர    செலவு கம்பெனி ஏற்கும். சேலத்திலிருந்து  திருச்சி. திருச்சியிலிருந்து இராமேஸ்வரம்     மெயில்.  குழந்தைக்கான சாப்பாடு,  ஹாமர்மாஸ்டர் ஃப்ளாஸ்க்  இரண்டு என்று இரண்டு பெட்டி.   அதிகாலையில் விழித்துக் கொண்டு பாம்பன் பாலத்துக்காக் காத்துக் கொண்டிருந்தேன்.                                                                                      

 ரயில் நெருங்க நெருங்க  மனம் முழுவதும்    உற்சாகம். அம்மா வெகு விவரமாக ராமேஸ்வர வாழ்க்கையையும் ,அடிக்கும் காற்று,மழை,புடவை தின்னும் மாடுகள்,
 பர்வதவர்த்தினி அம்பாள் என்று ஒவ்வொரு கடிதத்திலும்  எழுதி வந்தார். 

ஆடி மாதம் காற்றில்   சிலசமயம் வண்டிகள்  பாம்பன் பாலத்தில் வரத்தடை உண்டு அதனால் அடுத்த மாதம் வரலாம் என்று யோசனை சொல்லி இருந்தார். அப்போது மதுரை ராமேஸ்வரம் சாலை கிடையாது  . யோசித்து   கொண்டிருந்தபோதே   தங்கச்சி மடம் வந்துவிட்டது. பிறகு       பாம்பன்  ஸ்டேஷன்.  அதைத் தாண்டியதும் பாலம்.

 கண்ணுக்கெட்டிய வரை கடல்.   ரயில் பாலத்துக்கு மேல் மெதுவாக ஊறத்தொடங்கியது. இவருக்கோ ஒரே துடிப்பு. குழந்தை இதையெல்லாம் பார்க்க வேண்டும்.           '' ரேவ்,பாபுவை எடுத்துக் கொண்டு வா. கீழே  அலை  மோதுகிறது பார். அப்பா ஜீஸஸ்  என்ன காத்து.  எஞ்சாய்  மா''
  என்று  கதவோரம் நின்று  அழைத்துக் கொண்டிருந்தார். எனக்கோ ஜன்னல் வழி பார்த்த கடலே போதும் என்றாகிவிட்டது.                     பரபரப்பு இருந்தாலும் பயமும் இருந்தது. நீங்கள் முதலில் உள்ளே வாருங்கள் குழந்தை கூப்பிடுகிறான் என்று    போய் இழுக்காத குறையாக அழைத்து வந்தேன்.

''ஆஹா. உங்க அம்மாவைப் பாருடா குட்டிப்பையா    இதுக்குப் போய் பயப் படுகிறாள்.    நான் இங்கே இருந்தே கடலில் டைவ் அடிப்பேன் தெரியுமா. ''
  என்றதும் எங்கே சொன்னதைச் செய்துவிடுவாரோ என்று குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டேன்:))
''நான் பெட்டிகளைச் சரியாக எடுத்து வைக்கிறேன் .  நீங்கள் இவனை வைத்துக் கொள்ளுங்கள். அப்பா ஸ்டேஷனுக்கு வந்திருப்பார். நாம் ரெடியாக இருந்தால் இறங்கிவிடலாம்.  வீட்டுக்குப் போய்க் குளிக்கணும். கோவிலுக்குப் போகணும். அம்மா கிட்டப் பேசணும்''   என்று எதேதோ பேசிசமாளிக்கப் பார்த்தேன். நிமிர்ந்து பார்த்தால்  ஆளைக் காணொம்.     
                                                                                    என்னடா     இந்த மனுஷனோட அவஸ்தையாப் போச்சு என்றபடி   கம்பார்ட்மெண்ட்   கதவுக்குப் பக்கத்தில் போனால் அப்பாவும் பிள்ளையும் ஹாய் ஹூய் என்று  கடலை அழைத்தவண்ணம் இருந்தனர். இவர் கையில் பையன்.அவன் கையில் கரடி பொம்மை.










சரிதான் என்று நானும் அங்கேயே  நின்று கொண்டேன். ஒரு வழியாகத் தொங்கு பாலம் கடந்து ராமேஸ்வரம்    ஸ்டேஷனும் வந்தது. மதியம் 12 மணி இருக்கும்.    என்   அப்பாவைப்     பார்த்ததும்    கையில் குழந்தை தாவி விட்டான். கூட வந்த ரங்கனுக்கோ  உடம்பெல்லாம் மகிழ்ச்சி.   அவனுக்கு என்னிடம் சொல்ல நூறு செய்தி. ராமேஸ்வரத்துக்கு வரும் வி ஐ பி களுக்கெல்லாம் அவன்தான் அஃபிஷியல் கைட்.             

 உங்களையும் எல்லா இடத்துக்கும் அழைத்துப் போகிறேன் என்று அவன் சொன்னதுதான் தாமதம். இவர் அவனை வளைத்துக் கொண்டார். ''கோவில்  அக்கா போகட்டும் .நானும் நீயும் தனுஷ்கோடி போகலாம் சரியா'' என்றார்.   கிட்டத்தட்ட ஏழு மைல் நடக்கவேண்டும். அப்பா சரின்னு சொன்னால் போகலாம் என்றது அந்தப் பிள்ளை.   அப்பா தயங்கினார். சீக்கிரம் காலையில் போகணும். கொஞ்ச நேரமானாலும்    டைட்ஸ்( tides)   வந்து  வழி மூடி விடும். பிறகு தண்ணீர் வடிந்தபிறகே     வரமுடியும் என்றார்.#இதுஒருமீள்பதிவு.


2021 April 2 nd.
+++++++++++++++++++++++
சமீப காலமாக ரயில் பயணங்களைப் 
பார்த்து வருகிறேன். எத்தனை விதமான ரயில்கள்.
எத்தனை வேகம்.

நடுவில் வரும் ஸ்டேஷன்கள்.
அதில் கேட்கும் 'காப்பி,டீ சாய் கோஷங்கள்.

ஜன்னலருகே பயமில்லாமல் உட்கார்ந்து வெளியே உடன் வரும் நிலாவோடு

பேசிய பாடிய நாட்கள். ஒரு suspended life.
கிளம்பும்போது ஒரு உற்சாகம். 
முடியும் போது ஒரு எதிர்பார்ப்பு.
நல்ல பயணங்களை மட்டும் நினைவில் இருத்தும்போது
கடவுள் என்னிடம் கருணையோடு இருந்த நாட்களுக்கு
நன்றி சொல்கிறேன். இது 55 வருடங்களுக்கு
முன் மேற்கொண்ட  கனவுப் பயணங்கள்
வகையைச் சேர்ந்தது.
பதிவில் இருந்த பிழையைச் சுட்டிக்காட்டின
தேவகோட்டைஜிக்கு நன்றி. 
தங்கச்சிமடம் என்ற ஊர், பாம்பன் பாலம் தாண்டிய பிறகே
வரும். அந்த map இங்கே கொடுத்திருக்கிறேன்.
நன்றி மா.