எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
அந்த நாளும் விடிந்தது.
கடைசி மாமாக்கள் எல்லோரும் சுறு சுறுப்பானார்கள்.பாட்டி யின்
அண்ணா அவரது மனைவி இத்தனை நபர்களும் இயங்கினார்கள்:) வீட்டின் முன் அறைகள் சுத்தம் செய்யப்பட்டு திரைச்சீலைகள்
மாற்றப்பட்டன.
சமையல் அறை பஜ்ஜி, கேசரி, புது காப்பிப் பொடி போட்டு
இரண்டு ஃபில்டர்கள் நிறைய டிகாக்ஷன்.
புதிதாகக் கறந்த பால் பொங்கும் வாசனை எல்லாமாக
நிறைந்தது.
பன்னிரண்டு மணி வரை தோழிகளுடன் அரட்டை.
அவர்களின் வீட்டிலிருந்து எங்கள் முன்னறையைப்
பார்க்கமுடியும். தோழி சந்திராவின் தம்பி அவர்கள் வீட்டு
ஜன்னல் அருகே புதிதாக வாங்கிய டேப் ரிகார்டரில்
அவளுக்கென்ன அழகிய முகம்'' பாடலைப் போட்டுக்
கொண்டிருந்தான்.:)
அப்பா இதை அவ்வளவாக ரசிக்கவில்லை. நான் வானொலியில்
ரேடியோ சிலோன் சத்தமாக வைத்தாலே
அவருக்குப் பிடிக்காது:)
நான் வீட்டுக்கு வந்து முகம் கழுவி புதுப் புடவையைக்
கட்டி முடிக்க ஒரு மணி ஆச்சு.
தடுக்காமல் ஓரிடத்தில் உட்கார்'' பாட்டியின் கட்டளை.
உட்கார்ந்தேன். பெற்றோர் கொஞ்சம் படபடப்பாக இருந்தது தெரிந்தது.
3 மணி அளவில் வாசலில் இரண்டு அம்பாசடர் வண்டிகள் நிற்கும் சத்தம் கேட்டது.
உடனே பின்னறைக்குப் போகச் சொல்லி உத்தரவு.
நான் ஜன்னல் அருகே நின்று தோழியின் தம்பியிடம் எத்தனை பேர் என்று சைகையால் கேட்டேன். மொத்தம் ஏழு என்று விரல்கள் விட்டு எண்ணினான்.
எனக்கே கொஞ்சம் பயம் வந்தது அப்போதுதான்.
அவர்கள் எல்லோரும் உள்ளே வரும் சத்தம். மாமாக்கள் அவர்களை உபசரிப்பது எல்லாம் கேட்டது.
முன்பே தொலைபேசியில் கேட்டிருந்த கமலம்மாவின்
''எங்களுக்குக் காப்பி மட்டும் போதும்.
சாயந்திரம் கல்யாண ரிசப்ஷனுக்குப் போகணும் என்று சொல்வது கேட்டது.
அப்பாவின் பெரியப்பா மகன் ராம் மாமா குரல்
என்னை அழைத்தது.
இங்கே எங்களோடு வந்து உட்கார். நாமெல்லாம் ஒரே குடும்பம்தானே என்றது.
புடவை தடுக்காமல் அலுங்காமல் போய் மாமா காட்டின
நாற்காலியில் உட்கார்ந்து தலையைக் குனிந்து கொண்டேன்.
இன்னதென்று தெரியாத பயம்.
'' தலை நிமிர்ந்து பார்க்கலாம்'' சொன்னவர் மாமனார்.
என் மாமா ஒரு நாற்காலியின் பின் நின்று கொண்டிருந்தார். தலையை நிமிர்ந்தால் நான்கு வேட்டிகள் தான் தெரிந்தன.
யார் மாப்பிள்ளை???????
எல்லோரும் முழுக்கை சட்டை. என் பக்கத்தில் மாமியார்,சின்ன மாமியார்,
அந்தப் பக்கம் அப்பா எல்லோரும் என்னையே
பார்த்த வண்ணம் இருந்தனர்.
சட்டென அம்பி மாமாவின் கை உயந்து அவருக்கு முன் இருந்த
நீல வண்ண சத்தை பக்கம் நீண்டது.
அந்தக் கை போன வழியில் உட்கார்ந்திருந்த உயர மனிதரைப் பார்த்துச் சட்டென குனிந்து கொண்டேன்.
கை நடுக்கம் தெரியாமல் இருக்க கைவளையல்களைப் பிடித்துக் கொண்டேன். ஒரு நொடியில் அவரைப் பிடித்து விட்டது.
காப்பி உபசாரம் மற்ற பேச்சுகள் எல்லாம் எனக்குக் கேட்கவில்லை:)
கிளம்பலாமா என்று மாமனார் கேட்கவும் எல்லோரும்
எழுந்திருந்தோம்.
சின்ன மாமியார் அப்பாவிடம். பாட்டி ரேவதியைப் பார்க்க வேண்டும்
நீங்கள் அனைவரும் இன்னோரு வண்டியில் வரலாம்
என்றார்.
ஒரு காரில் நான் ,பெற்றோர், மாமா மாமி எல்லோரும் பின் சீட்டில் உட்கார
முன்சீட்டில் சிங்கமும் ,அவரது சித்தியும் உட்கார்ந்தார்கள்.
முதன் முதலில் அவரது குரல் கேட்டதும் விநோதமாக இருந்தது:)
இன்னும் மறக்கத்தான் இல்லை.
மீண்டும் பார்க்கலாம்.


8 comments:
புது டிகாக்ஷன் ஆஹா.. அப்படிதான் நான் தினசரி காலை காபி போட்டு குடிக்கிறேன்! கறந்த பால் காலமெல்லாம் போயே போச்!
// அப்பா இதை அவ்வளவாக ரசிக்கவில்லை. //
சந்திராவின் தம்பி உங்களை விட இளையவராகத்தான் இருந்திருக்க வேண்டும். அந்தப் பாடல் அவர் யதேச்சையாகத்தான் போட்டிருப்பார். இல்லையா?
இனிமையான நினைவுகள் அம்மா. அவர் எதிரில் அமர்ந்து, இதில் யார் மாப்பிள்ளை என்ற குழப்பம் வந்து, மாமா கைகாட்டி, அவரைப் பார்த்து..
இன்னும் ஒரு நொடி பார்த்திருந்தால்தான் என்ன.. ஒரு நொடியிலா தலையை குனிவீர்கள்?!!
நன்றி ஶ்ரீராம். சென்னையில் சிங்கம் இருந்த போது பால்காரப் பையன் மாடு கொண்டு வந்து கறப்பான். அது நம் வீட்டுப் புல்லைத் தின்ன ஆரம்பித்ததும் நிறுத்தி விட்டோம்:))
ஹாஹா. குமாருக்கு எங்களைவிட இரண்டு வயது கம்மி. 15. மஹா குறும்புக்காரன். இப்போது நல்ல தாத்தாவாக இருக்கிறான்:) வேண்டும் என்றுதான் அந்தப் பாட்டை வைத்தான்.:)
ஆமாம் பார்த்திருக்கலாம். அதான் என் எஜமானப் பாட்டி நிமிராதே என்று ஆணையிட்டு விட்டாரே. அவா என்ன நினைத்துக் கொள்வார்கள் இதான் அவளது கவலை. இதுவும் இனிமைதான் மா. மிக மிக நன்றி. கூடவே பயணிக்கிறீர்கள். என்னுடைய அறியாமையை விளக்க ஒரு புத்தகமே போட வேண்டும்:)பாவம் சிங்கம்.
இனிமையான நினைவுகள் மா... கறந்த பாலில், புது டிகாக்ஷனுடன் காஃபி - ஆஹா... படிக்கும்போதே சுவைக்கத் தோன்றுகிறது - காஃபியை விட்டு விட்டேன் என்பதால் நினைவில் மட்டுமே சுவைக்க வேண்டும்! :)
ஒவ்வொரு நிகழ்வும் அப்படியே கண்முன் தெரிகிறது - உங்கள் எழுத்து வழி. தொடர்கிறேன் மா.
அன்பின் வெங்கட், நலமுடன் இருங்கள்.60 வருடங்களுக்கு முன் எல்லாமே அருமையாகத்தான் இருந்தது. சென்னையில் நல்ல தண்ணீர் வீட்டுக்கே வரும். அருமையான சுற்றுப்புற கிராமங்களில் பச்சைக் காய்கறிகள் கிடைக்கும். நெல்லூர் அரிசி, சித்தூரிலிருந்து மணமான வெண்ணெய் என்று அமோகமான வாழ்வு. நடந்ததை நான் எழுத நீங்கள் நல்ல வார்த்தை சொல்வதும் ஆறுதல். நன்றி மா.
Post a Comment