எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
ஆமாம்... இன்று தான் வானம் கண்ணில் தெரிகின்றது.
போன வாரம் முழுவதும் கருமேகங்கள் நிறைந்து
சத்தமும் ஈரமும் மனதை உறுத்தின.
சென்னையை விட்டு வந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது.
அதனால் மனம் வருந்துகிறதோ. சிங்கமிருக்கும்போது
திட்டம் இடுவது மட்டும் என் கையில். உடன் நிறைவேற்றுவது மட்டும் அவர் பொறுப்பு.
சென்னையை விட்டு நகர்வது அவருக்குப் பிடிக்காத விஷயம்.செடிகள் ,மழைக்காலத் தொந்தரவுகள்
என்று மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.
இருந்தும் மறுக்க மாட்டார்.
அவ்வாறு மறுத்து நான் மட்டும் இந்த ஊருக்கு வந்தபோது
மூன்றே மாதங்களில் விடாத இருமலில் அவர் பாதிக்கப் பட,
தம்பி எனக்கு அவசரமாக உடனே கிளம்பி வரும்படி தொலைபேசினான்.:(
அடுத்த ஒரு வாரத்தில் மூன்று மாதங்களே ஆன பேரனுடன்
நானும் மகளும் கிளம்பினோம்.
அதற்குள் இவர் தேவகிக்குச் சென்று சிகித்சை பெற்று, மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கும் வந்துவிட்டார்.
அப்போது எடுத்த முடிவுதான். பிறகு சிங்கம் இல்லாமல்
பயணம் இல்லைஎன்று ஆகிவிட்டது.
அடடா, ஒரு கருமேகம் வந்து இத்தனை பின் சென்று விட்டதே மனம் என்று யோசிக்கிறேன்.
இதோ 13 வருடங்கள் கடந்து வந்துவிட்டேன். சகிப்புத் தன்மை மட்டும் இல்லாவிட்டால் வாழ்வு கடினம் என்பதை
நன்றாக உணர வைக்கிறது வாழ்க்கை.
கடந்த காலத்தை நினைக்க மனம் கனக்கும்
நிகழ்காலத்தைச் செப்பனிடு
வருங்காலம் நிறைவு கொடுக்கும் என்பது இப்போதைய
மந்திரம்.

10 comments:
நாம் நம் இஷ்டப்படி இருப்பது என்பது ஒரு கட்டத்தில் முடியாமல் போகிறது. என் மாமியார் செயலாக இருந்தபோதே பலமுறை திருச்செந்தூர் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நானும் இதுவரை பார்த்ததில்லை. ஒருநாள் போகலாம், ஒருநாள் போகலாம் என்று செல்லவே இல்லை.
நீங்கள் சொல்வது போலதான்... இவர் அப்படி ஒருமுறை சொல்லி விட்டால் அவர் கணவர் உடனே நிறைவேற்றி விடுவார். அவரேயும் அவ்வப்போது திருப்பதி, ஒப்பிலியப்பன் கோவில், ஸ்ரீரங்கம் என்று அழைத்துச் சென்று வருவார். இப்போது மாமியார் படுக்கையை விட்டு எழ முடியாமல் இருக்கிறார். ஓரளவு தேறினாலுமே அவரால் இனி இப்படி பயணம் செய்ய முட்டியுமா தெரியாது!
நமக்கு அடாத மழையும் கஷ்டம். விடாத வெயிலும் கஷ்டம். சென்னை வியர்வை தாங்க முடியவில்லை. வெப்பம்.
ஆனால் மழையும் அதனால் ஏற்படும் வெள்ளத்தின் பயமுறுத்தலுக்கு வெய்யில் எவ்வளவோ தேவலாம் என்று தோன்றும்!
அன்பின் ஶ்ரீராம், நலமுடன் இருங்கள். கை கால்கள் செயலுடன் இருக்கும் போது பயணம் செய்ய வேண்டும். பிறகு இறைவன் விட்ட வழி. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முக்தி நாத் வரை சென்று வந்தார்கள். ஒரு வேளை நான் அங்கே இருந்தால் கூடவே போயிருக்கலாமோ என்னவோ. வயதானவர்களைக் கூட்டி செல்வது மற்றவர்களுக்குப் பாரம் தான். உங்கள் மாமியாரை நினைத்துக் கவலையாக இருக்கிறது. பாவம் நலமாக இருக்கட்டும். யூ டியூபில் தான் எல்லா ஷேத்திரமும் வருகிறதே. அதில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். நன்றி மா.
உண்மைதான் , இப்படி ஒரு நிலைக்கு இயற்கை நம்மைத் தள்ளி விட்டது. மழை மட்டுமா. கூடவே ஶ்ருதி சேர்த்துக் கொண்டு கண்ட கண்ட வைரஸ்களும் வருமே. வெய்யில் தாங்கும் உடல் நமக்கு. வெள்ளம் தாங்க முடியாது. கடவுள் காக்கட்டும். நன்றி மா.
உடம்பில் வலு இருந்தாலும் எங்கும் செல்ல முடியாதபடி தளைகள், கட்டுகள்..!!!
கருமேகங்கள் தந்த நினைவுகள் அதை தொடர்ந்து எடுத்த முடிவுகள் எல்லாம் சரியானவை.
இப்போது நம் வாழ்க்கை தனி த்து போக கூடாது எங்கு சென்றாலும் அவர்களுடன் போனோம் . ஆனால் அவர்களை தொடர்ந்து அவர்களுடன் போக முடியவில்லயே!
இறைவன் விட்ட வழியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
சென்னையில் எல்லோருக்கும் காய்ச்சல் வருகிறது என்று உறவினர் சொன்னார்கள்.
வாழ்க வளமுடன் அன்பு தங்கச்சி. ஆமாம் இறைவன் கொடுத்த வழி இதுதான். இறைவன் துணையோடு ஒரு 100க்கு மேல் வயதான மூதாட்டி திருமலை ஏறிவந்த செய்தி படித்தீர்களா. என்னைத் தான் மனதில் திடம் இல்லை. நீங்கள் சொல்வது போல் யாரும் தனியாக விடுவதாயும் இல்லை. ஆரோக்கியத்துடன் வாழ்வைப் பேணி. நிம்மதி கிடைக்க அவனே துணை. நன்றி தங்கச்சி.
வாழ்க வளமுடன் தங்கச்சி. நானும் தினமலரில் படித்தேன். புது வைரஸ் + மேலும் டெங்கு காயச்சல் பரவி இருக்கிறதாம். இறைவன் காக்கட்டும்.
அன்பின் ஶ்ரீராம். என்றும் நலமாக இருக்கணும். நானும் வீட்டுத் தளையிலிருந்து விடுபட காத்திருந்தேன். மாமியார் பரமபதித்தவுடன் இரண்டு நாட்கள் அஹோபிலம் சென்று வந்தேன். அப்புறம் மகள் திருமணத்துக்குப் பிறகு தான் நாங்கள் இருவரும் சென்றோம். வாழ்வே ஒரு நெடிய பயணமாகிறது.
Post a Comment