Wednesday, May 20, 2026

குடும்பம் ஒரு கதம்பம்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


  என் அருமை ரங்கன்.

அக்கா அண்ணா இருவரிடமும் மாட்டிக் கொண்டு விழிப்பான்.
 கேலி காட்டுவதில் மன்னன்.
நடிப்பு பாட்டு எல்லாவற்றிலும் ஆர்வம்.

பதின்ம வயதுகளில் அவன் தலைமுடியைச் சீவி விட்டுக்கொள்ளும் லாகவத்தைப்
பார்க்கவேண்டும்.
தலை சொட்ட ஈரம் செய்து கொண்டு.
 குட்டி மரபீரோ மேலிருக்கும் கண்ணாடியில் இப்படி ஒருதரம் அப்படி ஒருதரம்
வாரிக்கொள்வான்.
என்னிடம் வந்து எப்படி டீ இருக்கு.
தெய்வ மகன் சிவாஜி மாதிரி இருக்கா என்பான்.
சகிக்கலையே. முடி வெட்டுக் கொள்ளேண்டா. .
என்பேன்.
ரசனையே இல்லை என்று போய்விடுவான்.
மகா குறும்புக்காரன். மஹா உதவியாளன்.
எள்+எண்ணெய் டைப். திருச்சியில் ,குடும்பமே அம்மா அருள் வந்து
இருக்கும் போது தைரியமாக வந்து  இளனீர் சப்ளை செய்தான்.

1967இல்  எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது அவன் ஆடிய ஆட்டம்.
சொல்லி முடியாது. உட்கார்ந்து கொண்டு ,குழந்தையைத் தொடாமல் பார்த்துக் கொண்டே இருப்பான்.
  '' ஏய் அவன் அத்திம்பேர் மாதிரி தான் வருவான்.பெரிய கண்ணும் இமைகளும்.
உன்னை மாதிரி சின்னக் கண் இல்ல//''

தான் குழந்தையோடு இருக்கணும் என்பதற்காக
சினேகிதன் வீட்டிலிருந்து முப்பது நாற்பது காமிக்ஸ் புத்தகங்கள்
கொண்டு வந்து கொடுப்பான்.
மூன்றாவது குழந்தை பிறக்கும் போது மற்ற இரண்டு குழந்தைகளும் 
இவன் கழுத்தைக் கட்டிக் கொண்டுதான் தூங்கின.
அவர்களோட ''டங்க மாமா.'' இருவருக்கும் ''ர'' நா வராது.
எப்பொழுது கடிதம் எழுதினாலும் , நீ எப்ப வருவே. கேள்விதான்.
அப்பா அம்மாவின் உயிர் நாடி. அவன். நானும் இன்னோரு தம்பியும் வேறு ஊர்களில் இருக்கும் போது அம்மா அப்பாவை வைத்தியரிடம் அழைத்துச் செல்வதும் அவன் தான். 

திடீரென அப்பா மறைந்த போது நாங்கள் மூவரும்
கடற்கரையோரம் அஸ்தி கரைக்க நின்றோம்.
அப்பொழுது அவன் செய்து கொடுத்த சத்தியம் இது.
 நீ எப்ப வேணாக் கூப்பிடு, இருபது  நிமிடத்தில் உன் வீட்டில்
இருப்பேன்'' இப்போது எல்லாரும் அழைக்க
முடியாத தூரத்துக்குப் போய் விட்டார்கள்.

அடுத்த ஜன்மத்தில் கட்டாயமாக அவர்களைக் கேட்பேன்.
ஏன்  இப்படி விட்டுச் சென்றீர்கள் என்று.

இங்கே பக்கத்தில் இருக்கும் ஒரு பெண், தன் குடும்பத்தில் 
நிகழும் சொத்து தகறாரைப் பற்றிப் பேசும்போது
என் பெற்றோரோ தம்பிகளோ  பணத்தைப் பற்றியே
பேசாமல்  நேர்மையாகப் பாசத்துடன் நடந்து கொண்டார்கள் என்று இப்பவும்
நன்றியுடன் நினைக்கிறேன்.
வாழ்க வளமுடன்


16 comments:

ஸ்ரீராம். said...

அருமையான குடும்பம்.  குடும்ப உறவனுகள் அருமையாக பேணிப்பாதுகாக்கபப்ட்டிருக்கிறது.  உங்கள் தம்பி ரங்கன் பற்றி முன்பு பலமுறை படித்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

என்னுடைய அக்கா குழந்தைகளும் சரி, என்னுடைய என் அக்கா பெண்களும் சரி, என் தங்கை குழந்தைகளும் சரி..  என்னிடம் மிக பிரியமாக இருக்கிறார்கள்.  இதே என் அண்ணன் மீதோ என் தங்கை அக்கா மீதோ - பிடிக்காது என்றில்லாமல் அவர்களுக்கு அவ்வளவு ஓட்டுதல் இல்லை. 

சமீபத்தில்கூட ஒரு குடும்ப நிகழ்வில் என்னை இன்னொரு உறவு மறைக்கமுகமாக குறைகூற, வரிந்து கட்டிக் சண்டைக்கு வந்தாள் தங்கை பெண்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு ஶ்ரீராம். என் பசங்க கூட அலுத்துக் கொள்வார்கள். ஏம்மா இப்படி மனசை வருத்திக்கறே ந்னு சொல்வார்கள். என்னை விடச் சின்னவர்களாக இருந்ததால் அக்கா வாக வருத்தம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஒரு வகையில் கொடுத்து வைத்திருக்கிறீர்கள் ஶ்ரீராம். என் விஷயத்தில் தம்பிகளோடு இருந்த ஒட்டுதல் அவர்கள் குழந்தைகளோடு இல்லை. ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே இருக்கும். எல்லோரும் மிக மிக நலமாக இருக்க வேண்டும். சகோதரர்களின் பிரதியாகத்தான் அவர்களைப் பார்க்கிறேன். இறைவன் எத்தனையோ அன்புள்ளங்களை வலையுலகத்தில் கொடுத்திருக்கிறார் பாருங்கள்.

கோமதி அரசு said...

உறவுகள் அதுவும் அண்ணன் , தம்பி உறவுகள் நம் மீது பாசம் அதிகம் வைத்து இருப்பார்கள். உங்கள் பதிவு மூலம் தம்பிகள் உங்கள் மீது வைத்த பாசம் அவர்கள் படம் எல்லாம் நினைவில் இருக்கிறது.

என் அண்ணாவும் என்மேல் மிக பிரியம் என் குழந்தைகள் மேல் மிகவும் பிரியம் கொடுத்து வைக்கவில்லை அந்த பிரியம் தொடர. அண்ணன் சிறு வயதில் எங்களை விட்டு சென்றாலும். அண்ணி, அண்ணன் குழந்தைகள் பாசைத்தை தொடர்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம். பெண்கள் எப்போதும் பிறந்தகத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதுவும் மாமா என்ற பந்தம் மிக அருமையானது. என் மகளும் எந்தம்பிகள் பற்றி யாராவது சொல்லி விட்டால் புலியாகப் பாய்ந்து விடுவாள். இது ரத்த உறவு இல்லையா. மிக நன்றி மா.

மாதேவி said...

இவரைப்பற்றி நீங்கள் முன்பும் எமக்கு அறிமுகப் படுத்தி உள்ளீர்கள்.

நல்லதோர் குடும்பம் அன்பு என்றும் மனதில் நிலைத்து இருக்கும்.

நெல்லைத் தமிழன் said...

அருமையான எண்ணவோட்டம்..

ஏன் நம்மை விட்டு நமக்குப் பிரியமானவர்கள் மறைந்துவிடுகிறார்கள்? நாம் போன பிறகு அவர்கள் போகக்கூடாதா என்ற எண்ணம் தோன்றவைக்கும் பதிவு.

பசங்க மனதில் அவர் இருப்பார்.

நெல்லைத் தமிழன் said...

மாமா என்ற பந்தமே தனி.

சில நேரங்களில் உறவுச் சிக்கல்களினால், அதன் உறவு விரிசல் ஏற்படும்போது, அதனால் பாதிக்கப்படும் மருமகன்கள் அந்தச் சோகத்தை வெளியில் சொல்ல இயலாது. எங்கள் வீட்டில் அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது.

நெல்லைத் தமிழன் said...

குடும்பப் படம் (ஏஐ) மிக அழகு. அதில் ஒவ்வொருவரையும் தேடினேன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி கோமதி என்றும் வாழ்க வளமுடன்.. உடனே பதில் சொல்ல முடியவில்லை. உங்கள் அண்ணா பற்றி முன்பு எழுதி இருக்கிறீர்கள். பாசம் எப்போதும் தொடரவேண்டும். அண்ணன் குழந்தைகள் உங்களிடம் தொடர்ந்து அன்பாக இருப்பத்ஹு மிக மிக அருமை. நான் இங்கே தள்ளி வந்துவிட்டேன். அதனாலும் இருக்கலாம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி. எப்பவும் நன்றாக இருக்கணும். ஆமாம் நிறைய எழுதி இருக்கிறேன். மீண்டும் வந்து படித்து அலுக்காமல் பதிலிடுகிறீர்கள். இந்த அன்பு போதும் . நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா. உண்மைதான். அந்த ஏன் க்குப் பதில் கிடையாது. பசங்க கொண்டாடிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தைப் பார்க்காமல் வருவதில்லை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அச்சோ நிஜமாவா முரளிமா. ஆமாம் மன விரிசல்கள் நிகழத்தான் செய்யும். எனக்கும் நான்கு மாமாக்கள். என்னால் அவர்களுக்குச் சில தொந்தரவுகள் வந்தது. அவர்களால் எனக்கு சங்கடம் இல்லை. பெண்ணாக இருந்ததால் என்று நினைக்கிறேன். இதுவே எங்க தம்பி சின்னவன் இருந்திருந்தால் வேற கதை,.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா, நன்றி. படத்தில் முதலில் இருப்பது தம்பியின் மனைவி, பிறகு தம்பி, அவன் பெண்,இன்னோரு தம்பியின் மகன், எங்கள் பெரிய பையன்
கீழ் வரிசையில் நானும் எங்கள் மகளும்.

மீட்கப் படும் புகைப்படங்கள்

வல்லிசிம்ஹன் 15.5/1996 எல்லோரும் வளமாக வாழ வேண்டும் மகளின் திருமணத்தின் போது எடுத்த படம். அருமையான  தருணங்கள் 30 வருடங்களுக்கு முன். 1965 வா...