Blog Archive

Saturday, June 12, 2021

சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்......


வல்லிசிம்ஹன்

வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல்
தம்பி முகுந்தன்.   உபயம்.

#குமுறல்

சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... 

எது மேட்டர் தெரியுமா? 



இன்னைக்கு சமைக்குறது; அப்புறம் நாளைக்கு சமைக்குறது; அப்புறம் நாளன்னைக்கு சமைக்குறது; சமைச்சுக் கிட்டே இருக்குறது.

ஒவ்வொரு நாளும் சமைக்கனும், நேத்து சமைச்ச மாதிரி இல்லாம இன்னிக்கு சமைக்கனும், புதுசு புதுசா சமைக்கனும், ருசியா சமைக்கனும், அது எல்லார்க்குமே பிடிக்கனும், உப்பு கூடிடக் கூடாது, சோறு குழைஞ்சிடக் கூடாது, பிடிக்காத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது, 

ஒவ்வாத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது, 

இருக்குற பொருள்களை வச்சு அட்ஜஸ்ட் பண்ணனும்.. 

வேஸ்ட் பண்ணிடக் கூடாது. இருக்குற காச வச்சு சமைக்கனும். 

பட்ஜெட் இடிச்சிடக் கூடாது. 

ஒவ்வொரு நாளும் விடியுறப்போ, இன்னைக்கு என்ன வாங்கலாம், என்ன சமைக்கலாம், வீட்டில என்ன இருக்கு, வீட்டில என்ன இல்லன்னு யோசிச்சே  விடியும்.

சாப்பிட்டு முடிச்சதும் பாத்திரம் கழுவி வைக்கனும். 

இதையே ஒரு நாளைக்கு நாலு தடவை பண்ணனும். பகல் சமைச்சத கழுவுறப்போ திரும்ப இரவுக்கும் இதையே பண்ணனுமேன்னு மனசுல யோசிக்கும். நாளைக்கும் முதல் இருந்து இது எல்லாமே பண்ணனும்லன்னு யோசிக்கும். ஆனாலும், நாளைக்கும் விடியும். நாளைக்கும் பசிக்கும். நாளைக்கும் சமைக்கனும்.

சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டர் இல்ல. 

ஆனா.. தொடர்ந்து நாலு நாளைக்கு சமைக்குறது மேட்டர் தான். 

அதையே நாப்பது நாளைக்கு சமைச்சா? 

நாப்பது வருசமா சமைச்சுக்கிட்டே இருந்தா?

சமைக்குறதுல இருக்குற சவால்கள் எல்லாம் புரியுது. 

கஷ்டம் தெரியுது. வெறுக்குது. 

இவ்வளவும், எனக்காக மட்டும் சமைக்குறப்போ. இதுவே இன்னும் அஞ்சு பேர்க்கு சேர்த்து சமைச்சா?

அந்த அஞ்சு பேருக்குமே வேற வேற டேஸ்ட் இருந்தா? 

அந்த அஞ்சு பேருமே, அவர்களுக்கு சமைச்சுக் கொடுக்கத் தான் நான் பிறந்ததேன் என்கிற நினைப்புல இருந்தா?

உக்கார்ந்த இடத்துல இருந்துக்கிட்டே சாப்பாட்ட கொண்டு வரச் சொன்னா?

அதுல உப்பு இல்ல, இதுல உறைப்பு இல்லன்னு கம்ப்ளய்ன் பண்ணா? 

சாப்பிட்டு அப்படியே அதே இடத்துல விட்டுப் போனா?

நம்ம வீட்டுல நமக்காக சமைக்குறவங்கள நாம எந்த அளவுக்கு கவனிச்சிருக்கோம்?

எந்தளவு அங்கீகரிச்சிருக்கோம்? 

எந்தளவு சப்போர்ட்டிவ்வா இருந்திருக்கோம்?

முப்பது வருசமா‌ அம்மா சமைக்குறாங்க.
இடையில வெளில வாங்கிக்கலாம் சொன்னா, சமைக்கிறத தவற வேற வேலை என்ன? அதைக் கூட செய்ய முடியாதானு பேசுவோம், இங்க வந்து கிண்டலா பதிவு போடுவோம்.

என் வீட்டுல மனைவிக்கு கிச்சன் எங்க இருக்குதுனே தெரியாதுனு பதிவை போட்டுட்டு ஸ்மைலி எமோஜிஸ் வந்ததும், எதையோ சாதிச்ச மாதிரி, "சாப்பாடு ரெடியானு" குரல் கொடுப்பாங்க.

இதுல வீட்டில் சமைப்பதே ஆரோக்கியம். இப்போல்லாம் தோசைலருந்து அதுக்கு தேவப்படற மாவு வரைக்கும் கடைல வாங்குறாங்க.
இப்போ covid புண்ணியத்துல  எல்லாரும் வீட்ல சமைச்சி சாப்பிட்டு நிம்மதியா இருக்காங்கனு போஸ்ட்டா போட்டுத் தள்ளுறாங்க!

மூணு வேளையும் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டு நிம்மதியா இருப்பாங்க தான்!

ஆனா சமைக்கிறவங்க....
ஆறு நாள் அடுப்படி வேலையா இருக்கியே, இந்தா ஒரு நாள் உனக்கு ஓய்வுனு வீட்டில யாராவது சொன்னா யாரும் ஹோட்டல வாங்கிக்கிட்டா தேவலனு யோசிக்க மாட்டாங்க!

இதுல தோசைக்கு  மாவு அரைக்குற அர்ப்பணிப்பு இருக்கே! அதுக்கே ஆரத்தி காட்டணும்!

இன்னொரு தடவ வீட்டில சமையலைப் பத்தி பேச்செடுத்தாலோ, வெளில வாங்கி சாப்புட்றதப் பத்தி பிரசங்கம் பண்ணாலோ, மாவரைச்சு கிரைண்டர்  கழுவி வச்சிட்டுத் தான் போகணும்னு ஸ்ட்ரிக்ட்டா  சொல்லிடுங்க, அதுக்கப்பறம் நக்கலா பேச மாட்டார்கள்.

கருவறை பத்து மாசம்னா, சமையலறை வாழ்நாள் மட்டும்.
தனக்குப் பசியில்லாத போதும், பிறர்க்காய் சமைக்கும் 

ஒவ்வொரு தாய்க்கும், மனைவிக்கும்
சமர்ப்பணம்!🙏🙏




அனைத்து பெண்மணிகளுக்குமான குமுறல்

வாட்ஸாப் உபயம் தம்பி முகுந்தன்.


36 comments:

கோமதி அரசு said...

//கருவறை பத்து மாசம்னா, சமையலறை வாழ்நாள் மட்டும்.
தனக்குப் பசியில்லாத போதும், பிறர்க்காய் சமைக்கும்

ஒவ்வொரு தாய்க்கும், மனைவிக்கும்
சமர்ப்பணம்!🙏🙏//

பாடலும் பதிவும் மிக அருமை.

நேரா நேராத்திற்கு சமைத்து கொடுத்து, காலையில் பெட் காப்பி கொடுத்து என்று பழகி விட்டு இப்போது சமைக்காமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது. எல்லாம் மருமகள் சமைக்கிறாள் இங்கு. கூடமாட ஒத்தாசை மட்டுமே!

தோசை சுடுவது, டீ போட்டு கொடுப்பது பேரனுக்கு உணவு கொடுப்பது மட்டும் இப்போதைய வேலை. மருமகள் கொடுக்கும் உணவை பாராட்டி சாப்பிட்டு வருகிறேன்.

இடை இடையே வெளியில் உணவு ஆர்டர் செய்து மருமகள் வேலை பளு குறைப்பான், அவளுக்கு உதவியாக பல வேலைகள் செய்து தருகிறான். அதற்கும் அவனை பாராட்டுகிறேன்.

என் அப்பா, என கணவர் எல்லாம் தட்டில் உணவு வந்தால் சாப்பிட்டு செல்லும் ரகம். அப்பா வாய் நிறைய பாராட்டுவார்கள்.
இவர்கள் கல்லூரி செல்லும் போது பாராட்டு கிடைக்காது நிதானமாக வீட்டில் இருக்கும் போது மட்டும் பாராட்டு கிடைக்கும்.

என் தம்பி தங்ககைகளிடம் "பசியே தெரியாது எனக்கு வேளாவேளைக்கு உணவு கொடுத்து விடுவாள் உங்கள் அக்கா" என்பார்கள் அதுவே பெரிய பாராட்டு.

நீங்கள் நேர்காணலில் சொன்னது போல் அம்மா கையால் பரிந்து பரிந்து உணவு கொடுத்தது, சூடாக தோசை சுட்டு கொடுத்தது மனதில், நிறைவு.
அதுவும் பிரசவ காலத்தில் கையில் உருட்டி போடுவார்கள் நாமாக சாப்பிட்டால் குறைவாக சாப்பிடுவோம் என்று. கண்ணீர் வரவழைக்கும் நினைவுகள்.

கோமதி அரசு said...

வாட்ஸாப் உபயம் என்பதை கடைசியில்தான் படித்தேன்.
கிரைண்டரில் மாவு அரைக்க சொல்லவேண்டும் என்றால் ஆட்டுக்கல்லில் கையால் மாவு அரைத்தவர்களை என்ன சொல்வது!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

ஆகா...ஒவ்வொன்றும் நமக்காவே சொல்லப்பட்ட மாதிரி குமுறல் நன்றாக உள்ளது. ஆனால், வீட்டில் மற்றவர்களுக்காக எல்லா வேலைகளும் செய்து,செய்து வாழும் போது அதில் கிடைக்கும் சந்தோஷம் (அது ஒருவகையான லேசான தற்பெருமை என்று கூட வைத்துக் கொள்ளலாம்.) தரும் போனஸ் பலங்கள்தான் நம்முடைய வருடாந்திர உழைப்பிற்கு மூலதனமென்றும் எண்ணுகிறேன்.பதிவு அருமையாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நேற்று உங்கள் நேர்காணல் பேட்டி நன்றாக இருந்தது.அருமையாக பேசி,பதில்கள் தந்து அழகாக பாடி இருக்கிறீர்கள். உங்கள் குரல் இனிமையாக உள்ளது. அதைப்பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.பாராட்டுக்கள் சகோதரி. இங்கு தொடர்ந்த நெட் தடை காரணமாக உடன் பதில் தர முடியவில்லை. மன்னிக்கவும்.அதற்குள் வந்த இந்தப் பதிவிலேயே என் மகிழ்வை தெரிவித்து விட்டேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
ஆமாம். அரைக்கும் எந்திரம் எங்க வீட்டுக்கு
2000 ஆம் ஆண்டு தான் வந்தது. அதுவரை
உரலும் ,அம்மியும் தான். சுமீத் இருந்தது. ஆனால்
அவசரத்துக்கு அம்மி தான் உதவும்.
அனுப்பின தம்பி அக்காவுக்குப்
பிடிக்கும் என்று நம்பி அனுப்பி இருக்கிறான்.:)

வல்லிசிம்ஹன் said...

உணவு கொடுப்பது மட்டும் இப்போதைய வேலை. மருமகள் கொடுக்கும் உணவை பாராட்டி சாப்பிட்டு வருகிறேன்...///////


அதுவும் பிரசவ காலத்தில் கையில் உருட்டி போடுவார்கள் நாமாக சாப்பிட்டால் குறைவாக சாப்பிடுவோம் என்று. கண்ணீர் வரவழைக்கும் நினைவுகள்.///////

பெருமூச்சு தான் வருகிறது. இங்கு நானும் சொல்லும் உதவிகளைச் செய்கிறேன். மருமகனும்
பாத்திரங்கள் தேத்து டிஷ்வாஷரில் போடுவார்.

இன்றைய சாம்பார், கறி என் பொறுப்பு.
நமக்கும் செய்து கொண்டே இருந்தால் தான் நிம்மதி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள் அம்மா.
இந்தப் பதிவு என் மதுரைத் தம்பி,
சித்தப்பா மகன் அனுப்பியது.
இப்பொழுது நிறைய இது போன்ற
தகவல்கள் சுற்றி வருகின்றன.

நாம் சமைத்து ,மக்கள் ருசித்துச் சாப்பிடும் இன்பம் தனி தான்.
இப்பொழுது மகள் சமைப்பதைக் காணும்போது
இந்த ஊரின் அசரா உழைப்பு என்னைச் சற்றே
அலுக்க வைக்கிறது.

நானும் பங்கு கொள்கிறேன் பல விஷயங்களில்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
இணையம் தடை செய்தால் எப்படி வருவது. அதெல்லாம் ஒன்றும் தப்பில்லை.
நேர்காணல் அனைவருக்கும் பிடித்தது.

நமக்குத் தெரிந்த கையளவு
வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டேன்.

இந்தவயதில் குரல் சுமுகமாக இல்லை.
பாட்டில் ஆசை. தோழியும் கேட்டதும் உற்சாகம்:)
நீங்கள் கண்டு மகிழ்ந்ததே எனக்கு மகிழ்ச்சிமா.
அன்பின் நன்றி.

ஸ்ரீராம். said...

கஷ்டத்தை உணர்ந்து பதிவு.  பிறருக்கும் பெண்களின் இந்தச் சிரமங்களை உணர்த்தும் பதிவு.  சமைத்து விடலாம்.  பாத்திரம் தேய்ப்பதுதான் பெரிய வேலை.  சமைத்தவர்களுக்கு பாராட்டு சொல்லா விட்டாலும் பரவாயில்லை, குறை சொல்லாமல் இருந்தால் அதுவே போதும்.  எதற்கெடுத்தாலும் என் அம்மா சமைப்பது போல இல்லை என்று சொல்லும் ஆண்களின் கஷ்டத்தையும் பெண்கள் தாங்க வேண்டும்!

Geetha Sambasivam said...

அருமையான உணர்வு பூர்வமான பதிவு. நம் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்து விட்டாரோ? எனக்கும் அதிகம் பாராட்டுக்கள் கிடைத்தது இல்லை. என் மருமகன்கள் தான் அத்தை சாப்பாடு என்பார்கள். பெண் சொல்லுவாள். பையருக்குப் பிடித்தது எல்லாம் இப்போ மாறிவிட்டன. ஆகவே அவர் என்னுடைய சாப்பாடை விரும்பிச் சாப்பிடுவது என்பதும் குறைந்து விட்டது. ஆனால் மருமகள் சாப்பிடுவாள். அதிலும் சாம்பார் சாதம் ரொம்பப் பிடிக்கும். நம்மவர் ஒண்ணும் சொல்லாமல் சாப்பிட்டாலே பாராட்டுத்தான்! :))))) நான் எதிர்பார்த்ததும் இல்லை. என்றாலும் நாம் சமைத்துப் போட்டுச் சாப்பிடுபவர்கள் வயிறும், மனமும் நிறையும்போது நமக்குச் சாப்பிடாமலேயே அந்த உணர்வு கிடைத்துவிடும். அவ்வப்போது எனக்கும் சமைப்பதில் அலுப்பு வரத்தான் செய்கிறது. உதறிவிட்டுக் கொண்டு செய்கிறேன். மனதில் நமக்கு நாமே தான் புத்துணர்வை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். யாரேனும் நன்றாய் இருக்கிறது என்று சொன்னால் மனதுக்கும் மகிழ்ச்சி.

Geetha Sambasivam said...

எங்க மாப்பிள்ளைக்குக் குக்கரில் சாதம் மட்டும் வைக்க வரும். என்ன உடம்பானாலும் பெண் தான் சமைக்கணும். அதைப் பார்க்கையில் நம்ம ரங்க்ஸ் நிறையச் சமைச்சுப் போட்டிருக்கார். தோசை, இட்லி, அடைனும் செய்து கொடுத்திருக்கார். அதுவும் மாமியாரால் முடியாத சமயங்களில் அலுவலகம் போகும் முன்னர் அனைவருக்கும் சமைத்து வைத்துவிட்டுப் போவார். எனக்குத் தனியாகச் சாப்பாடு எடுத்து வைப்பார். எதையும் விட்டதில்லை. இப்போது பையரும் அவ்வப்போது உதவிகள் அப்படிச் செய்தாலும் அநேகமாய் மருமகள் தான் எல்லாம் செய்கிறாள்.

மனோ சாமிநாதன் said...

Hats off என்று உடனேயே பாராட்ட வேண்டும் போலிருக்கிறது! வருடம் 365 நாட்களும் இப்படி உழலும் நிறைய பெண்கள் எழுந்து நின்று கைத்தட்ட வேண்டும் இந்தப்பதிவிற்கு! ஒரு பெண்ணின் மன உணர்வை இதை விட யாரும் துல்லியமாக எழுதி விட முடியாது! இப்படி அருமையாக பெண்களின் உணர்வுகளை எழுதியவருக்கும் அதை இங்கே வெளியிட்ட உங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள், இனிய வாழ்த்துக்கள் வல்லிசிம்ஹன்!

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவும் பாடலும் அருமை...

கரந்தை ஜெயக்குமார் said...

பெண்களின் சிரமங்களை உணர்த்தும் பதிவு.

வெங்கட் நாகராஜ் said...

தொடர்ந்து ஒரே வேலை - அதுவும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக சமையல் என்றால் கடினம் தான். சமையலும் சாப்பாடும் மட்டுமே பிரதானமாக இருந்தால் இன்னும் கடினம்!

நீண்ட நாள் கழித்து இந்தப் பதிவில் இணைத்த பாடலைக் கேட்கிறேன்! நல்ல பாடல். கேட்டு ரசித்தேன் மா!

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா லவ்ட் த போஸ்ட்!!!!

செம செம !!! அதானே!!!

அம்மா சமையல் பெரிய கஷ்டம் இல்லை...ஆனால் அதுக்கு அப்புறமான வேலைகள் க்ளீனிங்க், பாத்திரம் தேய்த்தல் ஒழித்து வைத்தல் இதெல்லாம் தான்...

எண்ணை பிசுக்கு க்ளீனிங்க்...

கடைசி டயலாக் எனக்கு ரொம்பப் பொருந்திப் போகும். சின்ன வயசுல அப்படித்தான் ஹா ஹா ஹா நினைவுகள் தொடர் பதிவில் எழுத நினைச்சுருக்கேன் பார்ப்போம்

கீதா

மாதேவி said...

மனம் நெகிழ்ந்த பகிர்வு.
'எங்க மாப்பிள்ளைக்குக் குக்கரில் சாதம் மட்டும் வைக்க வரும். " என் கணவருக்கும் அதுமட்டும்தான் தெரியும்.அதுவும் நான் இல்லாத போதுதான். காப்பி,ரீ கூட போடத்தெரியாது :)))
பிள்ளைகள் மனம் நிறைந்து சாப்பிடுவதில் சந்தோசம்.

Thulasidharan V Thillaiakathu said...

நான் உரலில் தான் இட்லி தோசைக்கு மாவு அரைத்திருக்கிறேன் மகன் பிறந்து பள்ளி சென்ற போதும்..அதன் பின் என் அத்தை எனக்கு அப்போ எல்லாம் வருமே பெரிய குழவி வைத்து க்ரைண்டர் அது வாங்கிக் கொடுத்தார். அதுவும் கிட்டத்தட்ட உரல் போலத்தான் குழவி கனமாக இருக்கும் ஆனால் அத்தையின் அன்பில் அந்தக் கனம் பஞ்சு போல இருந்தது. என் அத்தை எனக்கு நிறைய செய்திருக்கிறார்.

இப்ப இல்லைனு ரொம்பக் குறை உண்டு.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ரொம்ப வித்தியாசமா பதிவு எல்லாம் போடறீங்க சூப்பர்!!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
உள்ளபடியே இதுதான் நிலை.
என் மகளைப் பார்க்கும் போது அவ்வளவு மனசுக்குக் கஷ்டமாக இருக்கும்.
நடுவில் அலுவலக வேலையும்,ஆன்லைன் ஆர்டரிங்க் எல்லாம் செய்ய வேண்டும்.
உடலால் என்ன உழைப்பைத் தர முடியுமோ அதை செய்கிறேன்.

இருந்தாலும் பொறுப்பு அவளுடையது தானே!!

ரோபோ சுத்தம் செய்யும் மெஷின் வந்ததில்
அந்த வேலை குறைந்திருக்கிறது.
மலைப்பாகத் தான் இருக்கிறது.
மாப்பிள்ளை முடிந்த போது செய்வார்.
தொடர்ந்து அலுவலக வேலை
இருப்பதால் அவ்வளவு தான் செய்ய முடியும் பாவம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
ஹை ஃபைவ்!!!!
அதேதான் கதை. மகளுக்கு நம் சமையல் பிடிக்கும். மருமகனுக்கும் பிடிக்கும்.
பையங்களுக்கு வேறு கை பழகிவிட்டது.
பெரிய மருமகளுக்கு என் சமையல் மிகப்
பிடிக்கும்.:)
இங்கே சின்னவன் அம்மாவுக்குக் கூட மாட
உதவி செய்வான். குக்கர் வைப்பான்.
பாத்திரம் எடுத்துவைப்பான். பேல்பூரி செய்து கொள்வான்.
சமர்த்து.

என் தம்பி மனைவி அசராமல் சமைத்துக் கொண்டே இருப்பாள்.
வேலைக்கு ஆள் வந்து போகிறார்.
அவளுக்கும் 65 வயது ஆகப் போகிறது.பாவம்.
இந்தப் பதிவு அதனால் தான் என்னைக் கவர்ந்தது.

மற்றவர்கள் பாராட்டு கிடைக்கிறது. ஆனாலும் திட்டம் போட்டு
சமைத்து வைத்துப் பரிமாறி ,பாத்திரம் தேய்த்து என்று நீள்கிறது
லிஸ்ட்.
எல்லோருக்கும் அலுப்புதான்.
வெளியில் இருந்து வரவழைக்க கொஞ்சம் யோசனைதான்.
மாப்பிள்ளை ஒத்துக்க வேண்டும்.
பார்க்கலாம் நிலைமை மாறும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மனோ,
அப்படியே நம் நிலைமையைச் சொல்கிறது இல்லையா?

எழுதினவரின் திறமை அசர வைக்கிறது.
யார் எழுதினார் என்று தெரியவில்லை.

வெகு நுணுக்கமான பதிவு.
உணர்ந்து பாராட்டியதற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார்,
மிக உண்மை. இதை அனுப்பிய தம்பிக்கு
கடமைப் பட்டுள்ளேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
மிக யதார்த்தமாக இருக்கிறது இல்லையாமா?
பழைய படங்களை அதுவு மிகப் பழைய படங்களில்
அனுபவ பூர்வமான சூழ்னிலைகள் காண்பிக்கப் படும்.
இந்தப் பாடலும் பதிவும் ஒத்துப் போனதாக நினைத்தேன் மா.
நன்றி.
குடும்பங்களில் இது போன்ற நிலைமை
இருக்கிறது. வீட்டின் மற்றவர்களும் ஒத்துழைத்தால்
நன்மை விளையும். எல்லோரும் உணர வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
நிறைய வீடுகளில் கணவர்களும்
ஒத்துழைத்து வேலை செய்கிறார்கள். இந்த ஊரில் சில கணவர்களைப்
பார்க்கிறேன். பெருமையாக இருக்கிறது.


ஞாயிறு என்றால் கணவர்களும் பிள்ளைகளும்
முழு சமையலும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

அந்த வீடுகளில் அனைவருமே
சந்தோஷமாக இருக்கிறார்கள்.
எல்லோருமே இதைப் போல்
ஒத்துழைத்தால் இனிமைதான்.ஆமாம் சமையலைத் தவிர மற்ற வேலைகள்
விழி பிதுங்க வைக்கின்றன.
இந்தப் பதிவு நல்ல உணர்ச்சிப் பதிவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
எங்க வீட்டுக்காரருக்கும் ஒன்றுமே தெரியாது. காப்பி போட மட்டும் தெரியும்:)

என்னவோ அப்படியே பழகி விட்டார்.
சிரிப்புதான் வருகிறது. நன்றி மாதேவி.

வல்லிசிம்ஹன் said...

நான் உரலில் தான் இட்லி தோசைக்கு மாவு அரைத்திருக்கிறேன் மகன் பிறந்து பள்ளி சென்ற போதும்..அதன் பின் என் அத்தை எனக்கு அப்போ எல்லாம் வருமே/////


என் அன்பின் கீதாமா,
ஆமாம் அரைப்பதும் ஒரு நினைவுப் பொக்கிஷம்தான். பாட்டி அரைத்து, அம்மா அரைத்து நானும் அரைத்திருக்கிறேன்.பிறகுதான்
க்ரைண்டர் வந்தது.
நீங்கள் சொல்வது சௌபாக்யா வெட் க்ரைண்டரோ?
ஹம்மாடி. பெரிசுமா. அது.
என்னவோ கடந்து வந்திருக்கிறோம். நன்றாக
எழுதுங்கள் . வாழ்த்துகள் மா.

நெல்லைத் தமிழன் said...

பதிவில் எழுதியிருப்பது முற்றிலும் உண்மை. எழுதாம விட்டது, நேரத்துக்குச் சாப்பிடாம, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரத்துக்குச் சாப்பிட வருவது. அவங்களுக்கு போதுமோ போதாதோன்னு வச்சால், அதுல பாதி மிஞ்சிடும். கடைசில, சமையல் பண்ணினவங்க, வீணாக்காம தேவைக்கு அதிகமா சாப்பிடவேண்டி வந்துவிடும்.

நான் கரண்டி பிடிக்கும் நாட்களில், நான் சரியாக சாப்பிடுவதில்லை என்பதையும், இரண்டு வேளைக்கு மேல் பண்ணுவதற்கு, என்ன பண்ணலாம் என்று குழம்புவதையும், வேலை ரொம்ப அதிகமாக இருப்பதாக எண்ணுவதையும் நினைத்துக்கொள்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

வெறும் சமையலை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் ஏகப்பட்ட வீட்டு வேலைகள், அதுவும் வருடம் முழுதும்..... ஆனா வெளில பேரு, கணவன் வேலை பார்த்து சம்பாதிக்கிறார் என்று. இதெல்லாம் எனக்குப் புரிந்தது, நான் சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகுதான்.

ஹவுஸ் மேக்கர் மாதிரி சல்லியம் பிடித்த வேலை, ரெகக்னிஷன் இல்லாத வேலை உலகத்தில் வேறு எதுவும் கிடையாது.

வல்லிசிம்ஹன் said...

பதிவில் எழுதியிருப்பது முற்றிலும் உண்மை. எழுதாம விட்டது, நேரத்துக்குச் சாப்பிடாம, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரத்துக்குச் சாப்பிட வருவது. அவங்களுக்கு போதுமோ போதாதோன்னு வச்சால், அதுல பாதி மிஞ்சிடும். கடைசில, சமையல் பண்ணினவங்க, வீணாக்காம தேவைக்கு அதிகமா சாப்பிடவேண்டி வந்துவிடும்.////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

இது மிக மிக முக்கியம். என் மகளுக்கு மிகவும் வருத்தம்
தரும் விஷயம்.
ஆனால் கேட்க யாரும் தயார் இல்லை.

என் தந்தை வீட்டில் அந்த எட்டு மணிக்கு எல்லோரும்
சாப்பிட உட்கார வேண்டும். பாவம் அம்மா. தனியாக உட்கார்ந்து
சாப்பிடுவாள். மருமகள் வந்ததும் மாறியது நிலைமை.

ஏன் அந்தக் கட்டுப்பாடு இப்போது இல்லை?
டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடுவது...இப்படி எழுதிக் கொண்டே
போகலாம். நீங்கள் இப்போது செய்வது நல்ல
விஷயம் மா. குழந்தைகளிடம் பேசிச் சரி செய்ய முயற்சிக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
தாங்க்லெஸ் ஜாப்.
என்ன செய்யலாம்.
மகள்களாவது கொஞ்சம் உணர்வார்கள் .
இந்தக் காலத்துப் பசங்களுக்குப் புரியுமோ
புரியாதோ.
எல்லாம் ஜீன்ஸில் இருக்கணும். நன்றி மா.

Angel said...

வாஆவ் !!! வல்லிம்மா உங்க காணொளி பார்த்தேன் யூ டியூபில் .சூப்பரா பேசி அழகா நினைவுகளை பகிர்ந்திருக்கிங்க .கட்டிப்பிடிச்சு  air hugs air kisses கொடுக்கறேன் உங்களுக்கு .உங்க நேர் காணல் வீடியோ லிங்க் ஆச்சி அனுப்பியிருந்தாங்க .

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஏஞ்சல்,
மிக மிக நன்றி.
ஆச்சி ஆச்சி அனுப்பினாங்களா?
தங்கச்சி கோமதியா. வாவ்.:)

என்னமோ பேசினேன் பா. யாரோ சொன்னாங்க, குழந்தை மாதிரி இருக்குன்னு.:))))))))
நீங்க ரசித்ததுதான் மகிழ்ச்சி. அணைப்பும் மற்ற எல்லா அன்பும் வந்தன.
திருப்பி அனுப்பி இருக்கிறேன்.
உங்களுக்கு இதற்குள் வந்திருக்கும் என்று நம்புகிறேன். தாங்க்ஸ் கண்ணா.

Geetha Sambasivam said...

நாங்க 87 ஆம் வருஷம் கிரைண்டர் வாங்கினோம். பெரிய கிரைண்டர். அப்போதைய குடும்பத்துக்குத் தேவை என்பதால். வாங்கிய இரண்டு மாசத்திலேயே அம்மா போய்விட்டார். :( அது வரைக்கும் நான் கல்லுரலில் அரைப்பதைப் பார்த்து வருந்திக் கொண்டிருந்தார் அம்மா. அதிலும் எங்க வீட்டுக்குப் பெரிய படி பக்காப்படி ஒரு படி அரிசி போடணும். அரிசி மூன்று முறை, உளுந்து மூன்று முறை என அரைத்து எடுக்கணும். கிரைண்டர் வாங்கி எனக்கு சௌகரியம் வந்தப்போப் பார்க்க அம்மா இல்லை. :(

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
ஆசையோடு அரைத்த நாட்களும் உண்டு. மலைத்த நாட்களும் உண்டு.
உங்கள் அம்மாவை நினைத்து வருத்தமாக இருக்கிறது. நம்மை விட நம் குழந்தைகள் வருந்தினால் பாதிப்பு அதிகம் தான்.

அரைப்பதை நிறுத்திய பிறகு தான்
தோள்வலி கால்வலி எல்லாம் வந்தது.

எல்லாம் பழங்கதையாகி விட்டது.
எல்லோரும் நன்றாக இருப்போம்.

mrufinas said...

கிட்டத்தட்ட இரண்டு வருடம் நான் இதை எழுதி. கண்கள் பணிக்கிறது இங்குள்ள கமெண்டுகளை வாசிக்கும்போது. இந்தப் பதிவை எழுதியது ஒரு ஆண்தான் என்று தெரிந்து கொள்ளும் போது உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகலாம். எல்லோருக்கும் நன்றிகள்.