Blog Archive

Tuesday, April 07, 2020

காணி சோம்பல் 2007 pathivu

வல்லிசிம்ஹன் காணி சோம்பல் 


MONDAY, MARCH 17, 2008

காணி சோம்பல்...










இந்தப் படங்களுக்கும், கீழே வரும் கதைக்கும் சம்பந்தம் இல்லை:)

ஒரே ஒரு ஊரிலெ ஒரு அம்மா. அந்த அம்மாவுகு வயதாகி விட்டது.
இருந்தாலும் மனது இளமையா இருந்தால் உடலும் சொன்ன பேச்சு கேட்கும் என்ற பரிபூரண நம்பிக்கை.

தப்பு இல்லைதான்.
அதே சமயம் ஆரோக்கியமும் பேணிக்காக்க வேண்டியதுதான்
என்பதில் கொஞ்சம் அசிரத்தை அந்த அம்மாவுக்கு.
என்ன, அந்த அந்த வேளைக்கு உண்டான மருந்தை உட்கொண்டால்
தானே உடல் வயப்படும்.'' என்று எண்ண.

அந்தச் சிந்தனைக்கு ஒரு தடை போடுவது போல, ஒரு நிகழ்ச்சி,.
கொசுக்களும், கரப்பான்பூச்சிகளும் திடிர்ப்பெருக்கம் செய்து வீட்டில் நிறைந்தன.
இந்தத் திடீர் தாக்குதலுக்கு என்னடா காரணம் என்று தேடியதில்,
பக்கத்து மனையில் பெஸ்டிசைட் நிறைய போட்டு, அங்கிருந்து தப்பி வந்த ஜீவராசிகள்.
சுற்றுச் சுவரைத் தாண்டியதும் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டன,.
ஒரு எலி,
ஒரு பெருச்சாளி, இதெல்லாம் பெரிய ஜந்துக்கள்.
நம்ம சாம்பர்(பூனை) சாரும் வேட்டைக்களத்தை மாற்றிவிட்டதால்
அம்மாவுக்கு ஆதரவு கொடுக்க யாருமில்லை:)
சரி என்ன செய்யலாம்னு யோசித்த அம்மா, தங்களோட சிங்கத்துக்கிட்ட சொல்லி
சாளரங்கள்:)
எல்லாவற்றுக்கும் கொசு வலை அடித்தாச்சு.
அது இனிமேல் கொசு வராம இருக்கும்.


ஏற்கனவே அடைக்கலாமாகி விட்ட கட்டில்களுகுக் கீழே,
கோத்ரேஜ் பீரோ மேலே ,சாமி ரூம் படங்களுக்குப் பின்னால்...
இடமா இல்லை.
அப்போது குழந்தைகள் பேரன்கள், பேத்தி வீட்டில் இருந்த காரணத்தால்
அவர்களை ஒரு பகலுக்கு வெளியே அனுப்பி விட்டு
வீடு முழுக்க பேகான் அடித்தாச்சு.
நமக்கு சுவாசம் சம்பந்தப் பட்ட பிரச்சினை ஏதுமில்லை,

அதனால் குளிக்கும் அறைகளுக்கு நாமே அமிலம் ஊற்றி மிச்ச மீதி
பாக்டீரியா அமீபா இனங்களை வெளியேற்றி விடலாம்னு அம்மா நினைச்சாங்க..
அங்க வந்தது காணி சோம்பல்.
எல்லாவற்றையும் பொறுமையாக முடிக்கும் போது,
நம்ம கொத்ஸ் சொல்லுவாரே:)
இதை இவன் முடிப்பான் என்று அதை அவன்கண் ஒப்படைப்பதுனு ஒரு வாக்கியம்

அந்த வாக்கியத்தை மறந்து,
மூக்கில துணி போட்டு மறைக்காமல் அப்படியே அத்தனை அமிலத்தையும் சீராக
மாடி குளியலறை, கீழே இருக்கும் குளியலறை என்று ஒரு துளி இடம் விடாமல் தூவியாச்சு.
அசட்டுத்தனம் தான்.
இப்ப தான் ஹார்பிக் வந்துடுத்தே, ஏன் இன்னும் அமிலம் என்று நீங்க கேட்டீங்கன்னா
ரொம்ப வம்பாப் போயிடும் சொல்லிட்டேன்.

எனக்கு புதீசா வரப் பொருட்கள் மேல அவ்வளவு நம்பிக்கை போதாது.
அதுக்கு மாத்தா எங்க வீட்டு உதவிக்கு வர இரண்டு அம்மாக்களுக்கும் அமிலத்தைக் கண்டாலே பயம்.
''ஐய்ய அத்தை யாரு திறக்கறது.
கையெல்லாம் பொரிஞ்சு போயிடும்மா. நீ பெனாயிலைக் கொடு களுவறேன்'' என்று விலகிக் கொள்ளுவார்கள். பினாயிலுக்க் அடங்குகிற ஜன்மங்களா இந்தக் கரப்பான் பூச்சிகள்???

அதுவும் திடீர் தீடீரனு பாய்ச்சல் வேற காட்டும் ,பறக்கும்
.பெண் மருமகள் உட்பட அத்தனை பெரும் அலறுவார்கள்.
ஏம்மா இத்தனை ஜீவராசிகளை வளர்க்கறே வீட்டுக்குள்ள?? என்று கடுப்பேத்துவார்கள்.
நாம் பெற்ற செல்வங்களைக் காப்பது நம் கடமையலாவா என்றுதான் அமிலத்தைக் கையிலெடுத்தார்.
அம்மா:))


அப்படிப் பொறுப்பாக வீசும்போது கொஞ்சம் தன் கால் களிலும்(இதற்குத்தான் அறியாமை விபத்து என்று பெயர்)
தெளித்துவிட்டார்:((

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது''னு யாராவது பாடுவதற்குள் இந்த ஆசிட் விஷயத்தை மறைத்து அதற்கு சந்தனம் பர்னால்,வெண்ணை,தோசை மாவு எல்லாம் அபிஷேகம் செய்து
உடை மாற்றிக்கொண்டு பழைய அம்மாவாகவே வளைய வந்து அவர்களை எல்லாம் ஊருக்கு அனுப்பிய பிறகு வைத்தியரிடம் போனால்,
நாகரீகமாக என்னை வைதார். '' நீங்க எல்லாம் படிச்சவங்கதானே.
காயம் பட்ட அன்னிக்கே வந்திருந்தா இவ்வளவு பெரிதாகி இருக்குமா.
இப்போ மூணு பெரிய புண்களான இவைகளுக்கு சிகிச்சை அளித்துக் குணமாவதற்கு 40 நாட்களாவது ஆகும்''
என்றார் அவர்.
ஏதோ இரண்டு மாதங்கள் ஓடி விட்டது.
அவர் சொன்ன வைத்தியம்  பலிக்கவில்லை.கேட்கவில்லை.
காலைக் கீழே வைக்கக் கூடாது, நடக்கக் கூடாது....இத்தியாதி இத்தியாதி.

அப்புறம் ஒரு தோல் வைத்தியரைப்  பார்த்தால், ஒரு சின்ன ஆப்பரேஷன் செய்து தோலை எடுத்துவிட்டார். ஐந்து நாட்களில் குணமாகியது.
இழுத்தடித்த  பழைய  டாக்டர் மேல் கோபம் வந்தது.



சும்மா இருக்க முடியாமல்
துளசியிடம் மட்டும் புலம்பிவிட்டு
உங்களையெல்லாம் பயங்கரமான சவுக்கார் ஜானகிப் புலம்பலில் இருந்து காப்பாற்றி,
மீண்ட ஆரோக்கியத்தோடு இதோ சிரித்துக் கொண்டே பதிவு போட்டு விட்டேன்.
அறிவுரை.
அமிலம் பக்கம் போகாதீர்கள்.
அன்புடன்:)))

19 comments:

நெல்லைத் தமிழன் said...

நல்லது செய்யப்போய் இப்படி ஆச்சுதா....

ஆனா பாருங்க... ரெண்டு நாள் முன்னால, இங்க ஹவுஸ் க்ளீனிங் ஆட்கள்ட, டாய்லட்டை பளிச்சுனு வைக்க அவங்க என்ன உபயோகப்படுத்தறாங்கன்னு கேட்டேன். இதுக்கு முன்னால டீப் க்ளீனிங் என்று வந்த டீம், ஆசிட் உபயோகப்படுத்தறோம்னு சொன்னாங்க.

நீங்க சொல்றதைப் பார்த்தால் பாவம்.. அவங்க கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால் ஆபத்து போலிருக்கு.

நெல்லைத் தமிழன் said...

அந்தக் குளத்தை எங்க பார்த்திருக்கிறேன் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். பிடிபட மாட்டேன் என்கிறது. (அந்தப் படத்தை நீங்கள் போட்ட நாளிலிருந்து)

Avargal Unmaigal said...

நிகழ்வை அழகாக சொல்லி சென்றவிதம் அருமைம்மா.....வூட்டு வேலை செய்யும் போது மிக கவனம் தேவைம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா, அது நவ திருப்பதி போனபோது எடுத்த படம்.
இரட்டைத் திருப்பதின்னு நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆசிட் உப்யோகிப்பதில் தவறில்லை. அலட்சியமாக உபயோகித்ததில் தான் தவறு.
முரளிமா.
எத்தனையோ அசட்டுத்தனத்தில் இதுவும் ஒன்று.
கரப்பான் பூச்சியின் அருவருப்பில் வந்த கோபம் அது.
கோபம் ,பாபம் ,சண்டாளம்னு சும்மாவா சொன்னார்கள்:(

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு துரை.:(
பத்திரமாக எங்க வீட்டுக்காரர் உப்யோகப் படுத்துவதைப்
பார்க்கணும்.
வெகு நிதானமாகச் செய்வார் .உடல் உழைப்புக்கு அஞ்சாத ஆத்மா
அவர்.

Avargal Unmaigal said...

நானும் உடல் உழைப்பிற்கு அஞ்சாதவந்தான் அதனால்தான் என் வீட்டில் அனைத்து வேலைகளையும் நானே செய்கிறேன். சமைப்ப்பதில் இருந்து க்ளினிங்க் வரை.. ஆனால் கடந்த வாரத்தில் முதன் முதலாக காய்ச்சல் வந்து படுத்த போது க்ரோனோவா இருக்கும் என்று நினைத்து என்ன்னை அதுவும் தொடவிடாமல் என் மனைவியும் குழந்தையும் கஷ்டப்பட்டு வீட்டு வேலைகளை செய்த போது கண்ணில் இருந்து கண்ணீரே வந்துவிட்டதும்மா

கோமதி அரசு said...

//அமிலம் பக்கம் போகாதீர்கள்.//

சிலோன் மனோகர் பாட்டு நினைவுக்கு வந்து விட்டது.
(கள்ளுகடை பக்கம் போகதே)

நம்ம கொத்ஸ் சொல்லுவாரே:)
பழைய பதிவுகளில் கொத்ஸ் அடிக்கடி சொல்லும் வார்த்தையா?

மாயவரத்தில் ஒரு வயதான அம்மா வீட்டில் இப்படி கரப்பான் பூச்சி பகலில் கூட நடமாடும் அவர்கள் லட்சுமி அதை அடிக்க கூடாது என்பார்கள் . எல்லோரும் அவர்களை லட்சுமி பாட்டி என்று பெயர் வைத்து கேலி செய்வார்கள்.




ஸ்ரீராம். said...

அப்போ இப்படி ஒரு பயங்கரம் நடந்ததா? ஜாக்கிரதையாக இல்லாததன் விளைவா... அம்மாடி...

எங்கள் வீட்டில் நானும் இதையெல்லாம் செய்வேன்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை, எங்கள் எல்லோரையும் ஒரு கலக்கு கலக்கிவிட்டது
உங்கள் அறிவிப்பு.
சரி யாகிற்று என்று சொன்னபிறகு தான் நிம்மதி.
உழைப்பவர்கள் எப்பொழுதும் உயர்ந்தவர்கள்.
பெருமையாக இருக்கிறது.
என்றும் நன்றாக இருக்க வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா படங்கள் அட்டகாசம்...அதுவும் அந்த சிறிய ஓடை போல இருப்பது ஆஹா ஆஹா என்ன பசுமை!! கண்ணிற்கு இதம் மனதிற்கும்!!

//நம்ம சாம்பர்(பூனை) சாரும் வேட்டைக்களத்தை மாற்றிவிட்டதால்
அம்மாவுக்கு ஆதரவு கொடுக்க யாருமில்லை:)//

ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன்..

அதே போல //இப்ப தான் ஹார்பிக் வந்துடுத்தே, ஏன் இன்னும் அமிலம் என்று நீங்க கேட்டீங்கன்னா
ரொம்ப வம்பாப் போயிடும் சொல்லிட்டேன்.//

ஹா ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் அம்மா. மீதியும் படிச்சுட்டு வருகிறேன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் அம்மா அமிலம் பயன்படுத்தவே கூடாது அதுவும் அதை ஊற்றும் போது மூக்கு என்னவோ செய்யும்,. நல்லதே அல்ல...அதை மிக மிக மிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். பல வருடங்களுக்கு முன் எல்லாம் ஹார்ப்பிக் இல்லையே அப்போது என் அம்மா அமிலம் தான் யூஸ் செய்வார். அவருக்குக் கையில் சிலப் பிரச்சனைகள் வந்தது. அமிலத்தை அப்படியே பயன்படுத்தவும் கூடாது. அதில் இத்தனை பங்கு தண்ணீர் தெளித்துப் பயன்படுத்த வேண்டுமாம்..

அம்மா உங்களுக்கு வந்தப் பிரச்சனையை மிகவும் நகைச்சுவையாகச் சொல்லியிருக்கீங்க...

கீதா

வெங்கட் நாகராஜ் said...

ரொம்பவே கவனம் தேவை...

நலமே விளையட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு அறிவுரை அம்மா...

அமிலம் வேறுவிதமாக என் வீட்டில் ஒருமுறை நடந்தது...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
உண்மைதான். அப்போது எல்லோரும் இணைந்திருந்த
காலம், கொத்ஸ் அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.
எல்லோரும் முக நூலோடு இணைந்து விட்டனர்.

அமிலம் கொடுமையானது. அன்று எப்படித்தான்
கத்தாமல் இருந்தேனோ.
மடத்தனம் தான். பாத்ரூம் டைல்ஸ் போட்டதிலிருந்து அதை உபயோகப் படுத்துவது கிடையாது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். சுத்தம் செய்யும் வெறி என்றுதான் சொல்ல வேண்டும்.
நல்ல வேளை இத்தோடு போச்சு.
விபரீதம் ஒன்றும் ஆகவில்லை. அந்தத் தோல் நிபுணர்
சரியான நேரத்தில் காப்பாற்றினார்.

எது செய்தாலும் ஜாக்கிரதையாகச் செய்யுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
ஏதோ ஒரு பைத்தியக்காரத்தனம், உதவி செய்கிறவர்களும் மறுத்து,
படுக்கை அறைக்குள்ளும் எட்டிப்பார்த்து மீசையைக் காட்டிய
அந்த ஜந்துக்களை நினைத்தாலே அருவறுப்பு.

பிறகு அதை எப்படி உப்யோகிக்க வேண்டும் என்று கற்றேன்.
ஈர்க்குச்சிவிளிம்பில் பஞ்சு சுத்தி, பொறுமையாகச் செய்ய வேண்டும்.
உங்க அம்மாவும் கஷ்டப்பட்டார்களா. பாவம்.
ஓ அந்த ஓடை மகன் வீட்டுக்குப் பக்கத்தில் பார்க்கில் ஓடும்
சிறிய வாய்க்கால்.சலசல்வென்று சங்கீதமாய் ஓடும்.
இனிமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், உணமிதான். புத்தியுடன் செயல்பட வேண்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
அமிலத்துக்கு இப்போது பலவகை
உப்யோகம் ஊழிக்காலம் கொண்டு வந்துவிட்டது.
எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். நன்றி ராஜா,