Blog Archive

Monday, June 25, 2018

கங்கையிலே குளித்தோமே ராமா ஹரே. 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


  கங்கை என்ற வார்த்தை காதில் பட்டதும்  வஞ்சும்மாவுக்குத் தனி உற்சாகம்.
உடனே பெண்ணுக்கும், மகனுக்கும் எழுதிப் போட்டுவிட்டு,
ஏற்பாடுகளில் முனைந்தாள்.

செப்டம்பரில் போவதால் வெய்யிலும் ,குளிரும் சேர்ந்தே
என்று சொன்ன நண்பரின் சொல்லுக்கு ஏற்ப
உடைகளை   எடுத்து வைத்துக் கொண்டார்கள்.
பெண்ணும் பிள்ளையும் குடும்பத்துடன் வந்து விட்டார்கள்.
முன்பே சொல்லி இருந்தால்
நாங்களும் உங்களுடன் சேர்ந்து கொள்வோமே
என்று குறைப்பட்டுக் கொண்ட பெண்ணை
வஞ்சும்மா செல்லமாகக்  கோபித்துக் கொண்டார்.
உன் பெரிய கூட்டுக் குடும்பத்தை விட்டு
எப்படி வருவாய்.
மாமியார், பாட்டி எல்லோரும் நீ ,இல்லாவிட்டால்
சிரமப்பட மாட்டார்களா.
இன்னும் பத்து வருடம் போகட்டும், நீங்களும் போகலாம் என்றாள்.
ஆமாம் ஒவ்வொருத்தர் பொண்ணு பிள்ளை எல்லாம் அழைச்சிண்டு போவார்கள்.
நீ தான் நீதி போதிப்பதிலியே இருப்ப, என்று முகத்தைச் சுளிக்கும் மகளைக் கண்டு சிரிப்புதான்
வந்தது வஞ்சும்மாவுக்கு.

சமையல்கார மாமியுடன் சேர்ந்து, பெற்றோர்களுக்குச் சத்துமாவு,
அவல்பொரித்தது,
 ரயில் பயணத்துக்குச் சப்பாத்தி,
பயத்த லாடு என்று செய்து அழகாக  சம்புடங்களில்
போட்டுப் பெட்டியில் அடுக்கினாள்.
காசியில் அவர்கள் தங்கும் விலாசத்தை வாங்கிக் கொண்டாள். அலுவகம் வழியாக
நல்ல இடத்தையே ரிசர்வ் செய்திருந்தார் ஸ்ரீனிவாசன்.

கங்கைத் துறையின் அருகில் இருந்த விடுதி அது,.
மனைவியின் கங்கை மோகம் அவருக்கு நன்றாகவே தெரியும்.
 இந்தப் பயணம் அவளுக்கு நல்லதொரு
அனுபவமாக இருக்கத்தான் அவர் கவனமாக இருந்தார்.
அவர்களுடன் வருபவர்கள்
முன் பின் பழக்கமானவர்களே.

மனைவிக்காகவே, முதல் வகுப்பிலியே டிக்கெட்டுகள் பதிவு செய்திருந்தார்,
ஒரு நல்ல வியாழன் அன்று, ஆக்ரா வழியாக தில்லி செல்லும்
 விரைவு வண்டியில் இருவரும் ஏறிக்கொள்ள,
வழியனுப்ப ,மகனும் மளும் வந்தனர்.
மகன் ஜாஸ்தி பேசாதவன். அம்மாவிடம், மருந்து விசாரணை நடத்தி உறுதி செய்துகொண்டான்.
இருவருக்கும் சூடான பால் வாங்கிக் கொடுத்தான்.
அம்மாவுக்குப் பத்திரிகை வாங்கப் போனவனைப்
பார்த்து ஸ்ரீனிவாசன் சிரித்துக் கொண்டார்.
ஏண்டி அவன் பொறக்கறத்துக்கு முன்னாடிலேருந்தே
உன்னை நான் பார்த்துக் கொள்ளவில்லையொ
என்று சீண்டினார்.
அம்மா முகம் சிவப்பதைப் பார்த்து,பெண்ணுக்குச் சிரிப்பு வந்தது.
ஆஹா, எத்தனை நல்ல தம்பதி இவர்கள்
என்றவாறு அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு
அம்மா கன்னத்தில் முத்தமிட்டு
இறங்கினாள்.
என்ன முகம் பூரா பூரிப்பு என்று கேட்ட அண்ணாவிடம்
அண்ணா, அம்மா அப்பா இருவரும் படு ரொமாண்டிக்
என்று புன்னகைத்தாள்.

எனக்குத் தெரியுமே,
இதுக்கு நடுவிலே நீயும் புகுந்து கொள்ளப் பார்த்தியே என்று நகைத்தான்
அண்ணன்.
சரி இதோ வண்டி கிளம்புகிறது. என்றவாறு, அம்மாவிடம்
 விகடன்,கல்கி, கலைமகள் என்று கொடுத்தான்/,.
அம்மா, அப்பாவைப் பத்திரமாப் பார்த்துக்கோ.கங்கையில நீந்துகிறேன் என்று ஆரம்பித்துவிடுவார் என்று பத்திரப் படுத்தினான்.
போடா பயலே. நாங்கள் பத்திரமாப் போய் வரோம்
நீங்கள் பத்திரமாக இருங்கள் என்றபடி விடை பெற்றனர் பெற்றோர்.
மீண்டும் காசியில் பார்க்கலாம்.

19 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்வாரஸ்யமாகத் தொடங்குகிறது பயணம். அன்பான பாட்டி தாத்தா....வாசிக்கவே இதமாக இருக்கிறது அம்மா- துளசிதரன்

கீதா: அட! ரொமாண்டிக் கப்பிள்!!! கிட்டத்தட்ட எபியில் வெளியான அந்தக் கதையில் தாத்தா பாட்டி போல!!! அட அட அட!!! சூப்பர். அம்மா செமையா இருக்கு அடுத்து என்னனு ஆர்வம்..தொடர்கிறோம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

காசி பயணம் வெகு சிறப்ப. போன பதிவையும் படித்தேன் இந்த வாரத்திலிருந்து நானும் தங்கள் பதிவை பின் தொடர்கிறேன் நன்றி

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

"பையனின்" பாசம் மனதில் நிற்கிறது. அதற்கு அப்பாவின் கமெண்ட் புன்னகைக்க வைக்கிறது.

உள்ளார்ந்த அந்த பாசங்களை வெகு அழகாகக் காட்சிப் படுத்தி இருக்கீங்கம்மா....

Geetha Sambasivam said...

அருமையாயும் ஆதரவாயும் பயணம் ஆரம்பித்துள்ளது. சுவாரசியம். தொடர்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தொடர்கிறேன் சகோதரியாரே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நாங்கள் காசி சென்ற நாள்கள் நினைவிற்கு வந்தன.

நெல்லைத் தமிழன் said...

சுவாரசியமாகச் செல்கிறது. தொடர்கிறேன்.

போகப் போக அபூர்வ இடங்களுக்குச் செல்வதே மிகவும் சுலபமாக ஆகிவிட்டது (காசி, பத்ரி, முக்திநாத் பொன்று). முந்தைய காலகட்டங்களில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்..

Bhanumathy Venkateswaran said...

என்ன இந்த வாரம் ஒரே புனித பயணமாக இருக்கிறது? கீ.சா. அக்கா குல தெய்வ வழிபாடு, துரை சார் திருமலை, கூட்டான்சோறு காஞ்சீபுரத்தில் பார்க்க வேண்டிய பத்து கோவில்களை பட்டியலிடுகிறது. முனைவர் ஐயா பட்டீஸ்வரம் முத்துப்பந்தல் நிகழ்ச்சியை விவரிக்கிறார், நீங்கள் காசிக்கு கிளம்பி விட்டீர்கள்..! ஆடி மாதம் இன்னும் பிறக்கவில்லையே?

கோமதி அரசு said...

காசி பயணம் இனிமையாக இருக்கிறது.
அம்மா , மகள் உரையாடல், கணவன் மனைவி உரையாடல், சகோதர, சகோதரி உரையாடல் எல்லாம் அருமையாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, மிக நன்றி மா. ஆதர்ச தம்பதிகள் இப்படித்தான் இருக்கணும்.

அன்பு கீதா, ஓ அந்த தாத்தா பாட்டி ஜாடை இதுல வந்துடுத்தே.
இது ஒன்பது கஜப் பாட்டி கீதா. 1983ல நடக்கிறது.

உண்மையான அன்பிருப்பவர்களின் வாழ்வு அழகு இல்லையா. நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சகோதரி கமலா, உங்களைப் போன்றவர்கள் படிப்பது இன்னும் பெருமை.
எனக்குப் பயணம் அதுவும் ரயில் பயணம் மிகவும் பிடிக்கும்.
நீங்கள் சேர்வதில் மகிழ்ச்சியே. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தை ஜெயக்குமார்,,
அருமையான பின்னூட்டத்துக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே ஸ்ரீராம். இதில் கொஞ்சம் சொந்த அனுபவமும் கலக்கிறது.
எல்லா நல்ல தந்தைகளையும் ஸ்ரீனிவாசனுக்குள்
பார்க்கிறேன். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

இப்படித்தான் தம்பதிகள் இருக்க வேண்டும் என்கிற
கட்டமைப்பு மனதில் இருக்கிறது.
கீதாமா, எழுதவும் படிக்கவும் இனிமை இல்லையா.

வல்லிசிம்ஹன் said...

அன்பான இனிய நினைவுகளை அள்ளி வந்திருக்கிறிப்பீர்கள்
என்று நம்புகிறேன். முனைவர் ஐயா. மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஓ யெஸ் .நெ.தமிழன். அந்தப் பாட்டி காலப் பயணம் இன்னும் எழுதப் படாமல் இருக்கிறது. அதை எழுத வேண்டும்.
மிக மிக நன்றி நினைவுக்குக் கொண்டதற்கு.
எழுதிவிடலாம் அந்தக் கடினப் பயணத்தை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா.
அப்படித்தான் இருக்கவேண்டும்.
இதில் என் பதிவு பாதி கற்பனை.
மற்றவர்களோடது எல்லாம் உண்மையில் நடக்கும் சம்பவங்கள்.
அக்கறையாக வந்து படித்தது மிகப் பிடிக்கிறது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்புத் தங்கை கோமதி,
நான் காசி சென்றதில்லை. சென்று வந்து
தாய் தந்தை சொன்னதை வைத்து எழுதப் பார்க்கிறேன்.
காசிப் பயணம்,வாழ்க்கைப் பயணம் எல்லாமே அன்பால் நடத்தப் பட வேண்டும்
என்று நம்புகிறேன்.
அதன் வழி நம் பிள்ளைகளும் நடப்பார்கள் என்ற வேண்டுதல்
கூடுகிறது. வாழ்க வளமுடன் அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

இனிதாகத் துவங்கியது பயணம். நானும் தொடர்கிறேன்.