Blog Archive

Thursday, May 31, 2018

வாழ்க்கையின் குரல் கதை வந்த விதம் 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  வாழ்க்கையின் குரல் கதை வந்த விதம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  உண்மையில் நடந்த சம்பவம் ,சில நாட்களாக
இல்லை இல்லை பல நாட்களாக
உறுத்திய சின்னமுள்.
பலவீனமாக மதிக்கப் பட்ட பெண், பலம் உள்ளவனாக உணரப்பட்ட ஆண்,
 இருவரில் உண்மையில் யாருக்கு மன் உறுதி இருந்தததோ அவர்கள்
வளைந்து கொடுக்க, அதற்குப் பிறகு மனம் திருந்திய கணவன்.

இந்தக் கதையை முக நூலில் பதியவில்லை.
அந்த அளவு பொறுமை அங்கே படிப்பவர்களுக்கு இருக்குமா
என்று சோதிக்க எனக்குத் தெம்பில்லை.

மகள் இடைவிடாது கணினி முன் உட்கார்ந்திருப்பதைக்
கண்டிக்க ஆரம்பித்துவிட்டாள்.
இத்தனைக்கும்  6 மணி நேரம் சேர்ந்தாற் போல் இங்கே உட்காருவதில்லை.

படித்துக் கருத்து சொல்பவர்கள் அத்தியந்த நட்புகளே.
நான் ஒருவரது பதிவுக்கும் போவதில்லை. பின் அவர்கள் எப்படி
 இங்கு வருவார்கள் ஹாஹா.
இல்லை இதை எழுத வேண்டிய அவசியம் அதைத் தாண்டியது.
 இந்தக் கதையின் நாயகனும் நாயகியும் இப்போது
ஒன்று சேர்ந்துவிட்டார்கள். கிட்டத்தட்ட ஆறு வருடப் பிரிவு.
கடல் கடந்து சென்ற கதையின் நாயகன், பொருள் ஈட்டிய பிறகே
 மீண்டும் வந்தான். முற்றும் திருந்தியவனாக
மனதில் அன்பு நிறைந்தவனாக மூத்த மகளுக்குத் திருமணம் செய்யும் தகுதியோடு
வந்துவிட்டான்.
அந்தத் திருமணப் பத்திரிகை, இந்தக் கதையைத் தைரியமாக
எழுதலாம் என்று அச்சாரம் கொடுத்தது.

கடைசி முடிச்சுகள் அடுத்த அத்தியாயத்தில் அவிழ்ந்துவிடும்.
 இது அல்லாமல், சூதிலோ,குடியிலோ , பெண்மோகத்திலோ
ஆட்பட்ட  குடும்பங்கள் எத்தனையோ. முன்பே சொல்லி இருப்பேன். ஒரு டி அடிக்ஷன் செண்டரில் சில காலம் ஒரு மனோ வைத்திய நிபுணருக்கு
பார்ட் டைம்  உதவியாளராகச் சில மாதங்கள்
வால்ண்டியராக இருந்த  நிகழ்வைப் பற்றி.
 கேட்கவே குலை நடுங்கும் அந்தக் குமுறல்கள்.
தாங்கிக் கொள்ள சக்தி இல்லாதததால் வெளி வந்து விட்டேன்.
1981 அந்த வருடம். இன்னும் மறக்க முடியவில்லை.
இந்தக் கதை அதன் வடிகால். இனி எல்லாம் சுபமே.
Add caption

14 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
ஒரு சிறு கால இடைவெளிக்குப் பிறகு இன்றுதான் வலையுலகிற்குத் திரும்பியுள்ளேன்.
இனி தொடர்வேன்
நன்றி

ஸ்ரீராம். said...

குடியினால் சீரழிந்த ஒரு குடும்பத்தை எனக்கு நெருக்கமாகத் தெரியும். சீர்திருத்தவே முடியாமல் போனது. அவர் சமீபத்தில் மறைந்தும் போனார். அதுபோல இல்லாமல் திருத்தக்கூடிய அளவில் இருக்கும் பலவீனமாக இருந்ததும் வசதியானது போலும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார் நலமா மா. அதனால் என்ன விட்ட
இடத்திலிருந்து தொடங்கலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அடக் கடவுளே ஸ்ரீராம்.

இறக்கும் அளவுக்கு உடல் நலம் கெட்டு விட்டதா.
பாவமே. அந்தக் குடும்பம் என்ன பாடுபடுகிறதோ.
வருங்காலத்துக் குழந்தைகளை இந்த மது அரக்கன்
கையில் பிடிபடாமல் எப்படிக் காப்பாற்றப் போகிறோம்.
முன்பு நடைகர்களைச் சொல்வார்கள். பின்னர் நடிகைகளும் அந்த
வரிசையில் சேர்ந்தார்கள்.
மேல்தட்டு மனிதர்கள்,நடுத்தர மக்கள், மிக ஏழைகள் என்று இந்த வியாதியால்
அழிந்த உன்னதமான மனிதர்கள் எத்தனை பேர்.
மனம் நடுங்குகிறது.
நல்ல வழியில் வாழ்க்கை நடக்க இறையை வேண்டுவோம்.நன்றி மா.
நீங்கள் சொல்வது உண்மைதான்.

சுந்தரம் தப்பியதும் ஒருவிதத்தில் அற்புதமே.

Geetha Sambasivam said...

//இத்தனைக்கும் 6 மணி நேரம் சேர்ந்தாற் போல் இங்கே உட்காருவதில்லை.//

கொஞ்சம் குறைச்சுக்குங்க. விட்டு விட்டு உட்காருங்க! ஒரேயடியாய் ஆறு மணி நேரம் என்பது அதிகமே! யாராக இருந்தாலும். நடுவில் கொஞ்சம் எழுந்து போய் வெட்டவெளியைப் பார்த்துட்டு வாங்க. அல்லது வீட்டிலேயே ஒரு சுத்துச் சுத்துங்க! எனக்குப் பூத்தொடுத்தாலோ அல்லது புத்தகம் படித்தாலோ அடுத்த ஒரு மணி நேரத்துக்குக் கணினியைப் பார்க்க முடியாது! ஆகவே பேசாமல் போய்ப் படுத்துடுவேன். நான் காலை ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம்(எப்போவானும்) மதியம் மட்டும் இடைவெளி கொடுத்து இரண்டு இரண்டரை மணி நேரம், மாலை அரை மணி நேரம் உட்கார்கிறேன். ஆறு மணிக்குப் பின்னர் கணினியை அவசியம் நேர்ந்தால் தவிரத் திறக்க மாட்டேன். உங்கள் உடல்நிலைக்கு இன்னும் ஓய்வு தேவை! நீங்கள் என்பதால் உரிமையுடன் சொல்லி விட்டேன். :)))))

Geetha Sambasivam said...

சுந்தரம் எப்படி வெளியேறினான் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல்!

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா, குடி போதை, பெண் மோகம் போன்ற கட்ட பழக்கங்கள் ஒரு குடும்பத்தைச் சீரழித்தாலும் அதுவும் அந்த ஆணோ பெண்ணோ திருந்தாமல் (பெண்ணும் குடி சிகரெட் என்ற சில கெட்ட பழக்கங்களுக்கு ஆளாவதுண்டு சீரழிவதுண்டு) அக்குடும்பம் சீரழிவதுண்டு என்றாலும், இப்படிக்கெட்ட பழக்கங்கள் எதுவுமே இல்லாமல், அடிப்படையில் நல்லவனாக இருந்தாலும் அதீத ஈகோ, செருக்கு, அதனுடன் சேர்ந்த மூட்ஸ்விங்க்ஸ் அதனால் பெர்சனாலிட்டி ஷேட்டர் டிஸார்டர் ஆவது போன்றவற்றாலும் குடும்பம் கஷ்டப்படுவதுண்டுதான் இல்லையா. எது எப்படியோ மனம்/மூளை சரியான பாதையில் பயணித்தால் அனைத்தும் நலமே...இப்படியான குடும்பங்களில் பெண்களுக்கு வேலை என்று ஒன்றிருந்தால் கொஞ்சம் சமாளித்துவிடலாம்....சந்திரா பாவம் வேலையும் ஆதரவாகப் பெரியவர்களும் இருந்ததால் பிழைத்தார்...நல்லபடியாக அக்குடும்பம் ஒன்று சேர்ந்து இப்போது மகிழ்ச்சியாக வாழ்வது அறியும் சந்தோஷமாக இருக்கிறது.

கோலம் அழகாக இருக்கு வல்லிமா...மங்களகரம்!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா நீங்கள் மறுவாழ்வு மையத்தில் வாலண்டியராக இருந்தீர்களா!! வாவ்!!!

அப்போ நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்குமே. ஆனால் அம்மா அந்த மையத்தை எல்லாம் மனதில் தில் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும். மனம் ஒடிந்துவிடும். நம் எதிரிக்கும் கூட இப்படி எல்லாம் வரக் கூடாது என்று நம் மனதில் தோன்றிவிடும். மட்டுமல்ல மனமும் பக்குவப்படும்.

உங்கள் அனுபவங்களைக் கதையாக எழுதலாமே அம்மா...

கொண்டவன் துணை இருந்தால் கூரை மீது ஏறிக் கூவலாம் ஒரு பெண் என்ற வசனம் எவ்வளவு உண்மை!!!

கீதா

வல்லிசிம்ஹன் said...

ஹாஹா. அன்பு கீதா மா. நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்கிறேன்.

அந்த ஆறு மணி நேரம் மொத்த செலவீடு. சேர்ந்தாற்போல்
இல்லை. இதோ இப்போ வந்தேன். காப்பி ஆச்சு. 8 மணிக்குக் கஞ்சி போட்டு சாப்பிடுவேன். பிறகு மாடியில் துணி மடித்தல்,குளித்தல் எல்லாம்.
அப்புறம் மதியம் 4 மணிக்குத்தான் மீண்டும் கணினி அருகில்.
முதலில் பிடித்த பாடல்கள் சினிமா என்று பொழுதுபோக்கிவிட்டு

எங்கள் ப்ளாக் . உங்கள் ப்ளாக்,கோமதி எழுதுவது என்று பார்ப்பேன்.
அதுக்குள் முதுகுவலி வரும். மொபைல் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்துவிடுவேன்.

நன்றி கீதா மா. அடுத்த பதிவில் சுந்தரம் வெளியூர் போன சேதியைச் சொல்லிவிட்டால்
கதை முடிந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, துளசி

கொண்டவன் சரியா இருந்தால் கூரை மேல ஏறி நின்னு கூவலாம்னு மாமியார் அடிக்கடி சொல்வார்.
கூட்டுக் குடும்பத்தில் ,மாமனார் பல நேரம் வீட்டிலியே இருக்க மாட்டார்.
எல்லோரும் உதவி செய்தாலும்,
மாமியாருக்குத் தன் கணவன் அந்த வேலையைச் செய்யணும்னு ஆவல் இருக்கும்.
நீங்க சொல்ற மாதிரி
இயல்பாகவே பொறுப்பில்லாதவகளை என்ன செய்ய முடியும்.
என் அப்பா நினைவு வருகிறது.
பணம் அளவாக இருந்தாலும் கோப்யமான குடும்பத்தலைவன் இருந்தால்
எல்லாம் நலம்.
பொறுப்பில்லாத அதுவும் பைபோலார் மாதிரி நடந்து கொள்ளும் கணவன்கள்
வேணவே வேணாம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி டா கீதா. மயிலை கோலப் போட்டியில் எடுத்த படம்.

வல்லிசிம்ஹன் said...

வெறும் ஆறு மாதம் ,அங்கே இருந்தேன். கீதா. அதுவும் பகுதி நேரம்.
குழந்தைகள் ,கணவர் பள்ளிக்குச் சென்ற பிறகு ஒரு நான்கு
மணி நேரம்.
குடிப்பழக்கத்தை நிறுத்திய பிறகு வரும் கணவர்கள்
மனைவிக்கு மிகவும் அடங்கி இருப்பார்கள். ஆனல் குழு தெரபி வரும்போது ,மனைவி சொல்லும் அனுபவங்கள் மிகக் கொடுமையாக இருக்கும். அனைவரும் ஒரு தனியார் தொழில்
வளாகத்தில் வேலை செய்பவர்கள்.
அவர்களின் குழந்தைகளுடன் பேசும் வேலையை எடுத்துக் கொண்டேன். எப்போதும் ஒரு திகில்
அந்த இளம்பிஞ்சுகளின் கண்களீல்.
நான் அவைகளை மறக்க நினைக்கிறேன் கண்ணா.
அந்த நினைவுகளிலிருந்து ஒதுங்கி இது தனி அது தனி என்று பார்த்திருக்க வேண்டும்.
அது என்னால் முடியவில்லை.

கோமதி அரசு said...

//
மனோ வைத்திய நிபுணருக்கு
பார்ட் டைம் உதவியாளராகச் சில மாதங்கள்
வால்ண்டியராக இருந்த நிகழ்வைப் பற்றி.
கேட்கவே குலை நடுங்கும் அந்தக் குமுறல்கள்.//

மனதைரியம் வேண்டும் இதற்கு இல்லையா?
சந்திராவின் வாழ்வில் நல்ல நிலை வந்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே கோமதி மா.

மிகவும் ஏழைகள். நல்ல வேலை தெரிந்த ஆண்கள்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து வரும் தொழிலாளர்கள்.
சிலர் திருந்துவார்கள். சிலர் மீண்டும் குடிக்கப் போய் விடுவார்கள்.

வீட்டில் இருக்கும் பண்டங்கள் விலை போகும். மனைவியின் மேல் சந்தேகம்.
சில சமயம் மனதினால் பிரிந்து விட்ட தம்பதிகளை இணைப்பது வெகு சிரமம்.

நாம் எத்தனை பேசினாலும், அவர்கள் உணர்ச்சிகளை முழுவதும்
பேசிப் புரிந்து கொள்ள முடியாது.
வேலை போய்விடுமோ என்கிற பயத்தில்
சிலர் மாறுவார்கள்.
அது ஒரு தனி உலகம். மிக மிக நன்றி மா கோமதி.