Saturday, June 02, 2018

வாழ்க்கையின் குரல் 11.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 முதன் முறையாகச் சந்திரா வீட்டில் இல்லாத சூன்யத்தை உணர்ந்தான் சுந்தரம்.

அதல பாதாளத்தில் விழுந்து, ஏற வழியில்லாமல் தவிக்கும் சுய பச்சாதாபத்தில்
 யாரை நோவது என்றே புரியவில்லை.
தந்தையின் தோழர் பார்த்தது இன்னும் அவமானம்.

இப்போது சேகர் மாமா காட்டும் வழியில்
போகத்தான் வேண்டும்.
அத்தோடு ,காசியிடமிருந்து அந்த வளையல்களையும் மீட்க வேண்டும்.

பசியில்லாத நிலையிலும்  சாப்பிட்டே ஆகவேண்டும் என்று  கட்டாயப் படுத்தின
நல்லசிவம் தம்பதியினரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டன்.
இரவு முழுவதும் தூங்காமல் கழித்த சுந்தரத்தைத் \
திடீரென கண்ணாடி உடையும் சத்தமும், நல்லசிவம் அம்மவென்று வலியில் அலறியது
காதில் விழ ,அறையை விட்டு வெளியே வந்தான்,.
 மனைவியின் கையைப் பிடித்தபடி எழுந்திருக்க முயன்றபடி இருந்த
நல்லசிவம் நெற்றியில் ரத்தக் காயம்.
 ஐய்யா கேட்டைத்  தாண்டி வந்து ஜன்னல் வழியே
இந்தக் கல்லை எறிந்திருக்கிறார்கள் ஐயா
என்றவனுக்கு எழுந்திருக்க முடியவில்லை.
 சுந்தரத்துக்கு உடல் எல்லாம் பதறியது. சரஸ்வதி அம்மாவை வீட்டைப்
பூட்டிக்  கொள்ளச் சொல்லிவிட்டு  , வெளியே போய் முனையிலிருந்து ஆட்டோ
அழைத்து வந்தான்.
 ஆஸ்பத்திரியில் நல்லசிவத்துக்கு  டாக்டர்  ,கட்டுப் போட்டு, மருந்து மாத்திரைகள்
கொடுத்து,
ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லவம் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தான்.
தான் மாட்டி இருக்கும் பயங்கரக் கும்பலின் வன்மம் புரிந்தது.
சரஸ்வதியிடம் தங்கள் வீட்டுக்கே போகும்படி சொன்னாலும்
அவர்கள் கேட்கவில்லை. இனிமேதான் நாங்க ஐயாவுக்குத் துணை இருக்கணும்.


என்றபடிக் கணவனை பின்கட்டில் பாய் போட்டுப் படுக்க வைத்துவிட்டுத் தன் தம்பியை
வரச் சொல்லி தொலைபேசியில் அழைக்க அவன் வாசல் காவலை ஏற்றுக் கொண்டான்.
சுந்தரத்துக்குச் செய்து வைத்திருந்த உப்புமா சட்னியைச்
சாப்பிட்டு விட்டு அலுவலகம் விரைந்தான்.

தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை விளக்கி ,உடனடியாகத் தன்னை
வேலையிலிருந்து விடுவிக்க வேண்டு கோள்
விடுத்தான்.
அவனையும் அவன் வேலைத்திறமையையும்
உணர்ந்தவரான மேலதிகாரி ஒரு வாரத்தில்
அவன் கணக்குகளைச் சரிபார்த்து அவனை,
நல்ல நடத்தை சான்றிதழுடன் அனுப்புவதாகவும்
சொன்னார்.
 அங்கிருந்து கிளம்பியவன் சேகர் மாமாவின்
இல்லத்தை  அடைந்து , தான் தயாரித்த  கடன் தொகையை
குனிந்த தலையுடன் கொடுத்தான்.
 அவர் கேட்கும் முன்னரே வீட்டில் நடந்ததைச் சொன்னான். முகத்தை நிமிர்த்த
வழியில்லாமல் இருந்தவனுக்கு
சேகர் மாமாவின் முகத்தில் படர்ந்த அதிர்ச்சியைப் பார்க்க
சக்தி இல்லை.
ஒரு மாதிரி சமாளித்துக் கொண்ட, அவர் ,நீ எத்தனை பெரிய
கும்பலில் மாட்டி இருக்கிறாய் தெரியுமா.
இவன் பெரிய தாதா இங்கே.
இவனை  நாமிருவரும் பார்த்தால் போதாது.
ஒரு நிமிடம் இரு என்று காவல் துறை அதிகாரி 4
ஒருவருக்குப்
போனில் தொடர்பு கொண்டு, தங்களுக்குப் பாதுகாப்பு
தேவை என்று கேட்டுக் கொண்டார்.
சுந்தரத்துக்கு அச்சம் அதிகரித்தது.

ஒன்றும் சொல்லாமல் தலையாட்டினான்.
காலை உணவு சாப்பிட்டியா என்று கேட்டவர்,
கிளம்பு என்று கைத்தடியை எடுத்துக் கொண்டார்.
முதலில் அந்த ரிடையர்ட் காவல் அதிகாரியை அழைத்துக் கொண்டார்,
அவர் முகத்தை தொலைக்காட்சியில்தான்
பார்த்திருக்கிறான் சுந்தரம். எத்தனை கண்டிப்பானவர் என்று
தெரிந்தவன்.

 அண்ணா சாலையில் இருந்த பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த கிளப்பிற்குள்
நுழைந்ததும் ,பல கண்கள் சுந்தரத்தைக் கண்டு வெறுப்பை உதிர்த்தன.
 அவனுடன் வந்த பெரிய மனிதர்களைக் கண்டு  வியப்பும் பயமும்
அவர்களுக்குள் ஏற்படுவதைக் கண்ணால் கவனித்தான்.
இந்தச் சலசலப்பை கேட்டு வெளியே வந்த காசி போலீஸ் அதிகாரியைக்
கண்டு அப்படியே நின்றான்.
குழப்பம் அவனைச் சூழ்ந்தது.
என்ன சுந்தரம் விளையாட அழைத்து வந்திருக்கிறாயா என்று சாமர்த்தியமாகப் பேசினான்.
அவனை அடக்கிய போலீஸ் அதிகாரி, சுந்தரத்தின் கடன்
 விவரம் தேவை.
ஒழுங்கான தேதி விவரங்கள், ஆட்களின் பெயர்கள்
உடனே இங்கே இந்த மேஜையில் வை. என்றதும் அவன் மறுப்பு சொல்லவில்லை.
அவனும் தன் எடுபிடிகள், மற்றும் விளையாடுபர்களின் குறிப்புகளை
எடுத்துக் கொண்டு வந்தான்.

சேகரும், போலீஸ் அதிகாரியும்,
சுந்தரம் கொடுத்த லிஸ்டையும் காசி கொடுத்த பட்டியலையும்
ஒப்பு நோக்கினார்கள். சில இடங்களில் அதிகமாக இருக்கவே ,
அதிகாரி புருவத்தை உயர்த்தினார்.

சுந்தரத்தின் தலை உயர்ந்தது. அது தவறான கணக்கு என்றான்.
அனைவரும் இங்கே வாருங்கள் என்றதும் அனைவரும்
தயங்கிபடி வந்தார்கள்.
தயாராகக் கொண்டு வந்திருந்த செக்குகளில் அவரவருக்கான்
பணத்தை எழுதி ,
கையோடு கொண்டு வந்திருந்த பத்திரங்களில்
அவர்களின் கையெழுத்துகளையும் சாட்சி கையெழுத்துகளையும்
வாங்கி முடிக்க இரண்டு மணி நேரம்  ஆகிவிட்டது.
மொத்தம் 80 ஆயிரத்துக்குப் பக்கம் கணக்காகி இருந்தது.

சந்திராவின் வளையல்களை மீட்க இன்னோரு
இருபதாயிரம் ஆயிற்று.

மூவரும் எழுந்ததும் போலீஸ் அதிகாரி, அவர்கள் எல்லோரையும் பார்த்துக்
கம்பீரமான குரலில் எச்சரிக்கை விடுத்தார்.
இவனுக்கு நல்ல மனைவி வாய்த்தது அவன் அதிர்ஷ்டம்.
உங்களையும் யார் வந்து காக்கப் போகிறார்கள் என்று
பார்க்கப் போகிறேன்.
சுந்தரம் வீட்டில் கல் எறிந்தது யார் என்று
தெரிந்து வைத்திருக்கிறோம்.
இனி யாராவது அந்தத் தெருவுக்குள் வந்தால் எனக்கு விவரம் வந்துவிடும்.
அது உனக்கும் தான் காசி.
இந்தக் கிளப்பை மூட எனக்கு அரசு வரை போக முடியும்.
அதனால் இனி அதிக ஆட்டம் வேண்டாம்.

அந்த இடத்திலிருந்து  விலகினார்கள் மூவரும்.

சுந்தரத்தை அந்த அதிகாரி பார்த்த பார்வை அவனைக் கூச வைத்தது.
இனி இந்த பள்ளத்தில் விழமாட்டாய் என்று நினைக்கிறேன்.

சரி,நான் உன்னை வீட்டில் விடுகிறேன்.
மாமா நான் வேலையை விட்டு விட்டென்.
இழந்த பணத்தை மீட்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில்
 நான் மலேஷியாவுக்குப் போகிறேன்.
பொய்யில்லை மாமா. என் சினேகிதன் வெகு நாட்களாக
அழைத்துக் கொண்டிருக்கிறான்.

அங்கு புதிதாக வேலை நல்ல சம்பளத்தில் கிடைக்க வழி செய்து
தருவதாகச் சொல்லி இருக்கிறான்.
எனக்கும் இவர்களுக்குத் தொந்தரவில்லாத இடத்துக்குப் போக
எண்ணம்.
முடிந்தால் சந்திரா ,அம்மா அப்பாவிடம் சொல்லிவிடுங்கள் என்று, ஏதோ,
தொண்டையில் அடைக்கத் தன்வீட்டில் இறங்கிக் கொண்டான்.

அடுத்த இரு வாரங்களில் வீடே மாறியது.
பெண்கள் இருவரின் பரீட்சைகள் முடிந்தன.
சந்திரா வீடு வந்து சேர்ந்தாள்.
 செய்தி கேட்ட சுந்தரத்தின் பெற்றோர்கள் உடனடியாக
தங்கள் வீட்டிற்கு வந்து, சுந்தரை அழைத்தனர்.
குடும்பத்தோடு சென்ற சுந்தரை
அணைத்துக் கொண்டார் அம்மா.
ஊரைவிட்டா போகிறாய் அப்பா என்றார்.  ஆமாம் அம்மா
எல்லாம் சரியாகும் வேளை வந்துவிட்டது.
இரண்டு முதல் ஆறு வருடங்கள் தான்.
சந்திராவும் குழந்தைகளும் உங்களோடு இருக்கத்தான்
என் விருப்பம்.
என் பயம் இன்னும் தெளியவில்லை என்று தந்தையை நோக்கினான்.

அவரும் அவனை அருகில் வரச் சொல்லி உட்கார வைத்தார்.
பேத்திகளைப் பார்த்து அப்பா வெளியூர் போக உங்களுக்குச் சம்மதமா என்று
கேட்டார். சம்மதம். அப்பா சந்தோஷமாகப் போய் வரட்டும். ஆனால் வாரா வாரம் எங்களுடன்
பேச வேண்டும்.என்றார்கள்.
இப்படியாக ஆரம்பித்தது சந்திரா சுந்தரத்தின் புது வாழ்க்கை.

இதன் முடிவுரை அடுத்த பாகம்.வாழ்க வளமுடன்.
Add caption

8 comments:

நெ.த. said...

மலை போலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும் என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது. எழுத்தில் சுருக்கமாக்க் கடந்துவிட்டாலும் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் மன உளைச்சல்தான். புயலைப்போல் வீட்டைப் புரட்டிப் போட்டுவிட்டதே

கோமதி அரசு said...

குழந்தைகள் விருப்பபடி குழந்தைகளிடம் பேசி அவர்களை மகிழ்விக்கட்டும் சுந்தரம்.நல்ல காலம் வந்து விட்டது சந்திராவிற்கு.
சந்திராவின் பொறுமையின் பரிசு.

Thulasidharan V Thillaiakathu said...

ஒரு வழியாக சுந்தரம் மீண்டுவிட்டார் தன் தன்னைச் சுற்றியிருந்த வலையிலிருந்து நல்லதே நடக்கட்டும்...தொடர்கிறோம் அம்மா

துளசிதரன், கீதா

வல்லிசிம்ஹன் said...

நல்லது செய்தால் நல்லது கிடைத்தது மா,, நெ.த.
சரியான நேரத்தில் சந்திரா எடுத்த
முடிவுகள் கடவுள் கிருபையால் மட்டுமே
நல்ல முடிவுகளைக் கொடுத்தன. எல்லோருக்கும் இந்த

ஆசி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பெற்றோர்
செய்த தர்மம் தான் காத்தது. பழைய காதல் ,அன்பு இல்லாவிட்டாலும், கணவன் மனைவியாக
பெண் திருமணத்தை நடத்த முடிந்தது.
இனிமேலாவது மனம் ஒன்று பட என் பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

முற்றிலும் உண்மை கோமதி மா.
பொறுமையும் திடமும் அவளுக்கு
இருந்தது.
கடவுளின் கருணையும் சேர்ந்தது. இனியாவது நன்றாக இருக்க வேண்டும் இல்லறம்.

வல்லிசிம்ஹன் said...

சந்திரா கூட நம்பிக்கைப்படவில்லை தன் வாழ்வு நேராகும் என்று.

நிகழ்வுகள் எல்லாம் முன் கூட்டியே தீர்மானித்தது போல நடந்தன.
அவள் நினைத்தது பிரிய.
மகள்களின் எதிர்காலம் முன்பு நிற்கவே ,
தீர்மானங்களை மாற்றினாள். அவள் எதிர்பார்த்ததற்கு
மேலேயே நன்மைகள் நடந்தேறின. பெரியோர்களின் உதவியும்
இறைவன் அருளும் வாழ்க்கையை மாற்றி அமைத்தன.
இந்த யாத்திரையில் நீங்கள் இருவரும் தொடர்ந்ததில்
எனக்கு மிக சந்தோஷம்
அன்பு துளசி, கீதாமா.

Geetha Sambasivam said...

எல்லாம் நல்லபடியாக முடிந்தது பெரிய விஷயம். எல்லாத்துக்கும் மேலே சுந்தரம் மனம் மாறி மீண்டும் சம்பாதிக்க ஆரம்பித்தது அதைவிடப் பெரிய விஷயம். எனக்குத் தெரிந்தவர் குடும்பத்தில் கடைசி வரை அந்தக் கணவன் திருந்தவே இல்லை. அதோடு பெண்கள் இருவரை மூத்த மாப்பிள்ளை கட்டாயப்படுத்திக் கல்யாணமும் செய்து கொண்டார். :( தட்டிக் கேட்கும் அப்பாவோ சீட்டு மோகத்தில்! என்ன நடந்தாலும் கவலையில்லை என்று இருந்து விட்டார். :(

வல்லிசிம்ஹன் said...

ரொம்பப் பெரிய விஷயம் கீதாமா.
சூதுக்கு அப்புறம் செழித்த குடும்பங்களைப் பார்த்ததில்லை.

இவர்கள் பிழைத்தார்கள். சுந்தரமும் சந்திராவும்
நிறைய ஆன்மீகத்தில் ஈடுபட்டு விட்டார்கள்.
நீங்கள் சொன்ன குடும்பத்தை நினைத்து வருத்தமாக இருக்கிறது.
இப்படிக்கூட பெண்ணாசை நீளுமா.
அந்த அப்பா இருந்துதான் என்ன லாபம்.