Blog Archive

Wednesday, August 23, 2017

மெந்தியக் குழம்பு, அம்மா,நான்...4

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

ஆண்டா, இங்க வா.
என்னம்மா குழம்பெல்லாம்பண்ணச்  சொல்றே. கசகசன்னு புளி  ஒட்டிக்கும்.

கத்துக்க வேண்டாமா. உனக்குத்தான் குழம்பு பிடிக்குமே.
ஒண்ணுமே பெரிய காரியம் இல்ல.

சரியா வர்லைன்னால் என்னை ஒன்னும் சொல்லக் கூடாது .

யாரும் சொல்லப் போவதில்லை.
நீ முதலில் குமுட்டி அடுப்பில் இன்னும் கொஞ்சம் கரி  போடு சொல்றேன்.
கொஞ்சம் விசிறிக்கொடு.
தணல் மேலே  உருளி யை வைம்மா.
வைத்து  சூடாவதற்கு முன்னால்
வேண்டும்கற சாமான்களை  எடுத்து வச்சுக்கோ.

சரி,
 அஞ்சறைப் பொட்டில என்ன எல்லாம் இருக்கு.
கடுகு, மேந்தியம், மிளகாய் வத்தல்,கடலைப் பருப்பு ,உளுத்தம் பருப்பு, மஞ்சள் பொ டி .
அது அந்தக்கால மர அஞ்சரைப்   பொட்டி .
எல்லாம் ஒரு ஆழாக்கு சமாச்சாரம் கொள்ளும்.

அப்பா   புளி கரைத்துவைத்திருக்கிறார்  இல்லையா

ஆமாம்.

இப்ப நான் சொல்றதை அப்படியே பண்ணனும் சரியா.

சரி சொல்லு.

உருளில நாலு முட்டைக் கரண்டி நல்லெண்ணெய்  விடு.

ஆவி வரதுமா.

முதல்ல   மெந்தியம் போடு.
பொறுமையா இரு. சிவந்தவுடன் கடுகு போடு.
கடுகு வெடிக்கணும்.

ஒண்ணொண்ணா  வெடிக்கிறது,

அதுக்குள்ள மிளகாய் வத்தல்  அஞ்சு எடுத்துக் கிள்ளிப்போட்டு , துவரம்பருப்பு, கடலைப் பருப்பு,உளுத்தம் பருப்பு  எல்லாம்  ரெண்டு ரெண்டு ஸ்பூன் போடு.

பின்னால் இருந்து சின்னவன் பெரியவன்  கிட்ட, முரளி,, ஆண்டாள் மிளகாயைக் கிள்ளறாளாம் ம் என்று   சிரிக்கிறான்.
எனக்கு கோவிக்கக் கூட நேரம் இல்லை.

உடனே மஞ்ச பொடி   போட்டு, புளி  ஜலம் விடு.
 நன்னா கரைத்துக்  கோது இல்லாம  விடணும்.
கையை சுட்டுக்காதே.
இரண்டு தரம் கரைச்சு விட்டியாம்மா.
விட்டாச்சு மா.

தான் ஒன்னும் வேண்டாமா.

வேண்டாம்.
நீ போய் கருவேப்பிலை பறிச்சுண்டு வா.

அடில இருக்கிறதை பறி .
முகத்தைக் கடுகடுன்னு வச்சிக்காதேம்மா.
 சந்தோஷமா தளிகை பண்ணினால்தான்  வயித்து வலி வராது.
ம்ம்.சரி.
கொதிக்கறதான்னு பாரு.
கொஞ்சமா கொதிக்கிறது. அப்பாவை அரிசிமாவு எடுத்துத்தரச் சொல்லு.
பக்கத்தில் பேப்பர் படித்தபடி முகத்தில் புன்னகையோடு
பார்த்துக் கொண்டிருந்த அப்பா மேல் தட்டிலிருந்து மாவு எடுத்துக் கொடுத்தார்.
கொஞ்சம் கரைத்துக் கொடுத்துடுங்கோ. இது அப்பாவுக்கு.

பார்த்துக்கொண்டிடுக்கும் போதே     குழம்பு   ரெடி. மரவையில் இருக்கிற பெருங்காய  ஜலம் விட்டுட்டு   கருவேப்பிலை போடும்மா. அப்படியே அப்பா கொடுக்கும் அரிசி மாவுக் கரைசலையும் விடு . ஆச்ச்சு   போ.
சமத்து.......


அப்பா அந்தக் குழம்பை இறக்கினார்.
உ.கிழங்கு கரேமது  ஆரம்பமாச்சு.

 வாசனை பிடித்தவாறே   பழைய கதை புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டேன்.

சாப்பிடும்போது கொஞ்சம்  ஆவலாக மற்றவர்கள் முகம் பார்த்தேன் . முரளி ஒருத்தன்தான் நன்னா இருக்குடின்னான்.

ரங்கன் எனக்குப் பசிக்கவே இல்லை, பருப்புப்   பொடி , சாதம் நெய் வி ட்டுக் கொடுப்பா என்று விட்டான்.

பெரிய யாகம் செய்த திருப்தி எனக்கு.
அடுத்த மூன்று நாட்கள் கழித்து பக்கத்தகத்து மாமியிடம்
அம்மா எங்க ஆண்டா நன்னா சமைக்கக் கத்துகொண்டு விட்டாள் என்று சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டார் .

  இப்படியாகத்தானே என் சமையல் அறைப் பிரவேசம் ஆரம்பித்தது.



Saturday, August 19, 2017

மெந்தியக் குழம்பு,அம்மா, நான்..3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

திருமங்கலம்  1958... அப்பாவும் வந்து விட்டார்.  அடுப்புகளும் தயார்.
 விரைவில் அரிசி களைந்து வெண் கலப்பானையில்
போட்டாச்சு. பருப்பும் போட்டாச்சு. அதாவது அப்பாவின் 
வேலைகளைச் சொல்கிறேன்.
 கரி அடுப்பில் அப்பளம் சுடும் பணி ,என்னுது.
முறையே கரிந்த அப்பளம், சிவந்த அப்பளம் ,வெள்ளை அப்பளம் என்று வரிசையாக
பெரிய சம்புடங்களில் போட்டாச்சு.
திருமங்கலத்தில் அப்போது எவர்சில்வர் பாத்திரக் கடை வரவில்லை.
எல்லாவற்றுக்கும் மதுரை போகணும்.
இல்லையானால் சென்னை வருடாந்திர  விசிட்டில் கனமான பாத்திரங்களை அம்மா வாங்கி வருவார்.
அதை அழகாத் துணிகளில் சுற்றி
அம்மா கொண்டு வரும் அழகே தனி.

ஓ..அப்பளத்தை வீட்டூ வீட்டெனே.
 வேலைகள் ஆரம்பிக்கும் போது அம்மா செய்யும் முதல் வேலை 
புளி உப்பு தண்ணீரில் ஊறப் போடுவதுதான்.
ரசத்துக்குத் தனி, குழம்புக்குத் தனி.

எல்லாருக்கும் பிடித்த உ.கிழங்கை அரிவாள் மணையில் 
நறுக்க அப்பா சொல்லிக் கொடுத்தார். 
 ஒவ்வொன்றாக நான் அரிவதற்கு நேரம் ஆயிற்று.
அம்மாவின் குரல்., எல்லாருக்கும்  பழைய சாதம் சாற்றோடு, உப்பு
போட்டு,நல்லெண்ணெய் விட்டுக் கொடும்மா.
 உ.கிழங்கை என்ன செய்யறது. நான் பதில் கத்தல்.
அதை விட்டுடு. அப்பா பாத்துப்பார் என்று சொல்லி முடிப்பதற்குள்.,
 நான் பழய சாதம் இருக்கும்  பெரிய மூடி போட்ட 
பாத்திரத்துக்குத் தாவியாச்சு.
 பிடித்த வேலை.
கை அலம்பிக்கோ..அடுத்த உத்தரவு. 
சரி ஆச்சு.
 கரைத்து அப்பா,அம்மா,நான், ,முரளி, ரங்கன் எல்லோரும் சாப்பிட்டு
நாகம்மாவுக்கும் கொடுத்தாச்சு.
பாப்பா கை தங்கக் கை என்றபடி அவளும் மெச்சிக் கொண்டாள்.
   சரி அப்பா ரசம், உ.கிழங்கு செய்வார். நீ மெந்தியக் குழம்பு செய் என்றாளே 
பார்க்கணும்.
 குழம்பு செய்யும் பாத்திரம் மஹா கனம் பொருந்திய வெங்கல உருளி.
 சரி .நாளை முடித்துவிடலாம். இன்றைய மொளகூட்டலுக்கு காய் தயார்.
என் பொறுப்பில் மகள் விட்டு இருக்கிறாள். 
 அதைச் செய்யப் போகிறேன். சரியாகச் செய்யணும். தொடரும் பணி.
..

Friday, August 18, 2017

வத்தக் குழம்பும் வெந்தியக் குழம்பும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வத்தக் குழம்பும்  வெந்தியக் குழம்பும்
***************************************************************
இரண்டும் ஒன்றல்ல.
வத்தல் போட்டுத், தானில்லாத குழம்பை நாங்கள் வத்தக் குழம்பு என்போம்.
மெ...வெந்தியக் குழம்பில்  பருப்புகள் கலவை சேரும்.
குழம்புப் பொடியும் உண்டு.
புளிக்கரைசலோடு உப்பு, குழம்புப் பொடி,தனியாப் பொடி கரைத்து வைத்துவிடுவேன்.
பிறகு நாலு கரண்டி நல்லெண்ணெய் விட்டு,
மெந்தியம் இரண்டு ஸ்பூன்
அது சிவந்த பிறகு கடுகு, வெடித்த பிறகு,
துவரம் பருப்பு,கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு
எல்லாம் போட்டுச் சிவந்தவுடன் நறுக்கிய, வெங்காயம், வேணும்னால் இரண்டு பூண்டு
போட்டுப்
புளிக்கரைசலை அதன் தலையில்
சேர்க்க வேண்டும். ஒரு கட்டிப் பெருங்காயம் போடலாம். சுண்டைக்காய்
அளவு சொல்லலாம்.
கொதிக்க விட்டுக் கொஞ்ச நேரமானதும்
எண்ணெய் பிரியும் நேரம் கருவேப்பிலை ,கொத்தமல்லி சேர்க்கலாம்.
பூர்த்தியாகிறது வெ..மெ குழம்பு..

இதையே, வறுத்த பருப்புகளை அரைத்தும் சேர்க்கலாம். இந்தக் குழம்புக்கு, நிலக்கடலையை வறுத்துப் போட்டால் அமிர்தம்.

அப்பளம்  பொடித்துப் போடுவதும் உண்டு.

Thursday, August 17, 2017

மெந்தியக் குழம்பு,நான்,அம்மா...

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
....
-------------------------------------
--------------------------------------.
இன்று மெந்தியக் குழம்பு செய்யும் போது முதன்முதலில் அம்மா சொல்லி (மஹா பொறுமை .பாவம்.) நான் செய்த நாள் நினைவு வந்தது.
ஆண்டா... என்று மென் குரல் என்னை அதிகாலையில் எழுப்பினால் ஒரே ஒரு காரணம். அம்மா விலகி இருக்க வேண்டிய நாட்கள்.
வரும் பாரு ஒரு கோபம். .. போம்மா ,அவன்கள் ரெண்டு பேரையும் எழுப்ப வேண்டியதுதானே. மாட்டேன் என்று திரும்புவேன். 10 வயதுக் கோபம்.
இல்லம்மா நல்ல பொண்ணு பல் தேய்சசுட்டு வா, கரி அடுப்பு, விறகடுப்பு எல்லாம் அப்பா ரெடி பண்ணிட்டு ,காய்கறி வாங்கப் போயிருக்கிறார். நீ பாலாவது காய்சசுமா.
மனமில்லாமல் கிணற்றங்கரை போய்த் தண்ணீர் எடுத்து பல் தேய்தது , பெருமாள் முன்னம் நின்று சாந்தாகாரம் சொல்லி, சமையலறைக்குள் நுழைந்தாச்சு.  

மெ கு, நான் அம்மா..2
****************************************
 கரியடுப்பில் அப்பா கரியை நிரப்பி, அடியில் எரு வரட்டியை 
கெரசினில் தோய்த்து வைத்திருந்தார்.
ஒரு விளக்கு பக்கத்தில் எப்பவும் இருக்கும். 
 ஈர்க்குச்சியில் முதலில் பற்ற வைத்து அடுப்பைப் 
பற்ற வைக்கவேண்டும். அதே போல விறகு அடுப்பில் கட்டை விறகு,
சிராய்த்துண்டுகள் மேலாக அடுக்கி வைதிருக்கும். அதே எரு விராட்டியால் 
அங்கேயும் பற்ற வைக்கணும்.
அது நிதானமாக எரிய ஆரம்பிக்கும் போது வெங்கலப் பானையில் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும்.. கொடி அடுப்பில் பருப்புக்கான பாத்திரத்தில்
தண்ணீர் வைத்து, து.பருப்பைப் போடவேண்டும்.

அன்று சனிக்கிழமை யாதலால் ,அம்மாவுக்கு எனக்கு டிரெயினிங்க் கொடுக்கத்
தோன்றிவிட்டது.
கரியடுப்பில் பாலைக் காய்ச்சு, முற்றத்திலிருந்து குரல். 
சரி வச்சுட்டேன். கையில இருக்கிற விகடனைக் கீழ வச்சிடு. பால் பொங்கிடும்.

திருட்டு முழியுடன் அம்மாகிட்ட அந்தப் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு வரவும்
 பால் பொங்கவும் சரியாக இருந்தது.
மூணு டம்ப்ளரில் பாலை விட்டு கோகோ போட்டுக்கோ.
திப்பி திப்பியாக கோக்கோ பாலைப் பார்த்துத் தம்பிகள் 
சுணங்கினார்கள்.

ஃபில்டரில் டிகாஷன் இருக்கா பாரு. 
  ம்ம் ம். இருக்கு
 பால் சூடாக இருக்கும்போதே எனக்குக் கொஞ்சம் காப்பி கொடுக்கிறயா.
 எனக்கு ஓன்னு கத்தணும் போல இருக்குமா என்றேன்.
அப்புறம் கத்திக்கோ, முதல்ல பாலைக் குடி
பிறகு எனக்குக் காப்பி.
அப்பா வெளியில் சாப்பிட்டு வந்துவிடுவார்.

சரி.
ஆச்சு.
கையைச் சுட்டுக் கொண்டாயா
ஆமாம்.
பிடி துணியே இங்க இல்லை.
வெளில நாகம்மா வந்திருக்கா பாரு.
அவளுக்கு நேத்துப் பாத்திரத்தைக் கொண்டு வந்து போடு.
இந்த வேலைக்குத் தம்பிகள் வந்தார்கள்.

அக்கா கிட்ட இந்தத் துணிகளைக் கொடு ராஜா
என்று நாகம்மா கொடுத்தனுப்பிய துணியை வைத்து
அப்பா வரக் காத்து இருந்தேன். தொடரும்.



தொடரும்.

Sunday, August 13, 2017

வேப்பமரமும் மகிழம்பூ மரமும்.

மகிழம்பூ 
வேப்ப மரம்.
மகிழ மரம் ,வகுளம் 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

  முன்னொரு காலத்தில் எங்கள் வீட்டில்  சுற்றுச்சுவரை ஒட்டி  வேப்ப மரம் ஒன்றிருந்தது.
அதன் அடிப்பாகம் ஒருவர்  சுற்றி வளைக்க முடியாத அளவு பெரியதாக இருந்த நினைவு.
  எங்கள் சிங்கம், தண்ணீர்ப் பஞ்ச நாட்கள் 1983 இல் வந்த பொது பழைய  கார்ப்பரேஷன் குழாய்களை அகற்றி புது குழாய்கள் போட முடிவு செய்தார். நாம் தான் ஒரு ப்ளம்பரை கூப்பிட்டு  அதை செய்ய மாட்டோமே .
 தானே நிலத்தில் பள்ளம் தோண்டி,  பழைய  குழாய்களை அகற்ற ஆரம்பித்தார்.

ஒரு மூன்றடி ஆழத்தில் இருந்த குழாய்கள்  இற்றுபோயிருந்தது தெரிய வந்தது.
குழாய் முடியும் இடத்தில் வேப்ப மரத்தின் வேர்கள்
தடுத்துக் கொண்டிருந்தன.

புதுக் குழாய்  போட வேண்டுமானால்  வேர்களை அகற்ற வேண்டும். அதுகூடப் பெரிதில்லை.
 மரத்தின்  ஆணி வேர் மிகப் பெரிய அளவில் தட்டுப்பட்டது. அது நீண்டு கொண்டே போய் வீட்டின் அடித்தளத்துக்குப் போவதைக் கண்டு பிடித்தோம். அடுத்த வீட்டிற்கும் போய் விட்டது இந்த வேர். மிகப் பெரிய பிரச்சினை எங்களை எதிர்நோக்கியது.
  ஒருபக்கம் 70 ஆண்டு பழைய மரம். இன்னொரு பக்கம் ...
வீட்டின் பாதுகாப்பு. மாமியார் இவர் எல்லோரும் கலந்து ,மிகுந்த மன வருத்தத்துடன் மரத்தை வெட்டும் முடிவுக்கு வந்தார்கள்.
 மரவெட்டியை அழைத்து போது , ரொம்பப் பெரிய மரம் சார்,இரண்டு நாட்கள் தேவைப்படும். அதுவும் வேரை  எடுக்க மாட்டோம் என்று அட்வான்ஸ் பணம் வாங்கி கொண்டு போய்விட்டார்.
அன்று பூராவும் அந்த மரத்துடனேயே  எல்லோரும் இருந்தோம். அதில் ஊஞ்சல் காட்டியது. பழைய வீட்டில் இருக்கையில் மர  வீடு கட்டினதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார், குழந்தைகளும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
மறு  நாள்,வெட்டும் சத்தமும், ரம்பம் கொண்டு அறுக்கும் சத்தமும் எங்கள் மனதைக்  காயப்படுத்தின .
ஒரு லாரி நிறைய வேப்பமரத் துண்டுகள்.
 அதற்கு மேல் எடுக்க முடியாதவற்றை சென்னை கார்ப்பரேஷனுக்குப் பணம் கொடுத்து அப்புறப் படுத்தினோம்.
பிறகு இவர் அந்தப் பள்ளத்தில் இறங்கி மூன்று நாள் உழைத்து,மரத்தின் வேரை  எடுத்தார்.
 இரண்டடி அகலமும்  நான்கு  அடிகள் நீளமும் கொண்ட இரு துண்டுகள் கிடைத்தன. ஒன்று இன்னும் வீட்டின் பின்புறம் இருக்கிறது.
இன்னொன்றை  நன்கு  பாலிஷ் செய்து பத்திர படுத்தி
வீட்டிற்குள் அலங்காரமாகக் கொலு பொம்மை போல் நெடு நாட்கள் இருந்தது படம் கிடைத்தால் போடுகிறேன்.

நெடுநாள் வேறு பல செடிகளுக்கு இடமாக இருந்த அந்த நிலத்தில் 2013 செப்டம்பர் மாதம் நான் ஆசைப்பட்டேன் என்று மகிழ மரக்கன்றை வைத்தார்,
இப்போது அது அன்றாடம் பூச் சொரிகிறது.
குனிந்து எடுக்கத்தான் தெம்பில்லை. ராணி கொண்டு வந்து கொடுத்தால்  இறைவனுக்கு அர்ச்சனைப் பூக்களாக  உபயோகித்தேன். வீடெங்கும் நல்மணம் .
ஒரத்தில்  இருப்பது தான் வேர்.

Saturday, August 05, 2017

நானும் புதிய சமையல் முறைகளும் 1966

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

ரசமான  பதிவுகள் போடும் கீதா சாம்பசிவம்
அவர்கள் பதிவில் புது ரசம் பற்றிக் குறிப்பு பார்த்தேன்.

திருமணமான புதிதில் எனக்கு சமையல் கற்றுத்  தந்தவர்கள்
 சில நல்லவர்கள்.
அம்மாவீட்டில் அப்பா  கைமணத்திலேயே ருசி கண்டு, அவசரக் குறிப்புகள் சில அம்மா கைப்பட எழுதிகே கொடுத்ததை வைத்துக் காலம் ஓட்ட ஆரம்பித்தவள்,
சிங்கம் படும் பாட்டை மனதில் கொண்டு கொஞ்சம்

அக்கறை காட்ட ஆரம்பித்த ஒரு நாலு மாதங்கள் கழித்து.

மதியம் சாப்பிட வருபவரை முதலில் சாப்பிடச் சொல்லி முகத்தைப் பார்த்திருப்பேன்.
பரிதாபமாக  அவர் முகம் மாறினால் நான் அந்த சாமையைச் சாப்பிட மாட்டேன். வெறும் தயிர் சாதம் போதும் என்று
அப்பளம் துணையோடு பசி போக்கிக் கொள்வேன். இரவு வரும்போதே ஏதாவது  சாப்பிட வாங்கி வந்துவிடுவார்.

இந்தக் கதையெல்லாம் கொஞ்ச நாட்களுக்கு.
1966 ஆடி
சேலத்துக்கு  இட மாற்றம்  ஆனது.
நான் இரண்டானேன். பசி அதிகமாக என் சமையலை
முன்னேற்ற வேண்டிய  கடமை வந்தது.
தோதாக அமைந்தாள்   சின்னப் பொண்ணு. அதுதான் அவள் பெயர்.
 ஒரு நாற்பது வயதிருக்கும்.
உணக்கியா சாப்பிட  ஆசையில்லயா.. அம்மிக்கல்லு வாங்கியாறேன் . அரைச்சு சமையல் செய் , குட்டி  அம்மிக்கல்லும், குழவியும்  கொண்டு வந்து போட்டுவிட்டாள் .

அம்மி ரொம்பப் பிடித்தது. பருப்புத் தொகையில் , தேங்காயத் துகையால், மிளகு குழம்பு ,காரக்  குழம்பு என்றெல்லாம்   செய்து கொள்ள ஆரம்பித்தேன்.

பூண்டு பழகக்  கொஞ்ச நேரம்  ஆச்சு.,
மருந்தாக எடுத்துக் கொள்கிறோம் என்ற நினைவில்  சாப்பாடு உள்ளே போனது.
அப்பொழுது சின்னப் பொண்ணு கற்றுக் கொடுத்தது ஈஸி ரசம்....

புளி , தக்காளி, கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை, துவரம்பருப்பு, சீரகம், மிளகு, பூண்டு, தனியா, எல்லாவற்றையும் ஒன்றாக வறுத்து, பெருங்காயமும் சேர்த்து  அம்மியில் கொட்டும் பொழுதே பசி வயிற்றைக் கிள்ளும். கூ டவே சிறு வெங்காயத் துண்டுகளும் சேர  அமோக மணம்

அரைக்க அரைக்க மேலே வரும்.
 வெழுமூன அரைத்து   ,மிச்சம் இருக்கும் பொடிகளையும் அம்மியிலிருந்து வழித்தெடுத்து
தண்ணீரில் கரைத்து  , வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் கடுகு,சீரகம், வத்தல் மிளகாய் போட்டுத் தாளிக்க வேண்டும் அடுப்பில் ஏற்றிக்  கொதிக்கும் போது உப்பு சேர்க்கலாம்.

ஒரு இன்ஸ்டன்ட்  ருசி ரசம் ரெடி.
ஒரு வருடம் கழித்து மீனாக்ஷி அம்மாள் அவர்களின் சமைப்பது எப்படி  புத்தகக் கடையில் மூன்று பாகங்களாக வாங்கிய பிறகு ஒரு புது உலகமே வந்துவிட்டது.
மனம் நிறைந்த வணக்கங்கள் அந்த அம்மாவுக்கு.



Friday, August 04, 2017

ஜெய லக்ஷ்மி என்னும் என் தாயார்...

 லக்ஷ்மி என்ற சொல்லுக்கு என்னைப் பொறுத்த வரையில் அர்த்தம் என் அம்மா தான்.

  முதன்முதலில் கால்ண்டர் லக்ஷ்மியை பெரிய ஃப்ரேமில் வடிவு செய்து என் தந்தை பூஜை அறையில் மாட்டிய போது ,அப்பாவிடம் கேட்டது நினைவுக்கு வருகிறது வரைந்தவர் நம் அம்மாவைப் பார்த்திருக்கிறாரா என்பதுதான். அப்பாவுக்கு எவ்வளவு சந்தோஷம் என்று சொல்லி
முடியாது.

 அவளும் தன் தாமரை விளக்கில் வெள்ளி தவறாமல் விளக்கு பூஜை செய்வாள். பால் பாயசம் உண்டு. 
அப்பாவின் சுந்தர காண்டம் உண்டு.
 எனக்கும் குரு முகமாக விளக்குப் பூஜை செய்யக் கற்றுக் கொடுத்தார்கள். இந்த அடங்காப் பிடாரியும் அடங்கி வணங்கியது அந்தத் தெய்வத்தை.

தம்பி தன் சினேகிதன் கொடுத்த பெரிய லக்ஷ்மி படத்தை ஒரு நாள் பரிசாகக் கிடொத்தான். அவளுக்கும் அழகான ஃப்ரேம் வாய்த்தது.
 ஒரு கொலுவுக்கு 20 ரூபாயில் லக்ஷ்மி பொம்மையும் கொண்டுவந்து கொடுத்தான்.
அக்கா வாழ்வில் பொன்னும் பொருளும் குவிய வேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வம்.
உண்மையான பக்தியுடன் என்  லக்ஷ்மியைப் பூஜித்தேன்.
வளம் பெருகியது.
 பெற்ற மக்கள் பூரிக்கும் படியாகப் படித்து முடித்து வாழ்வும் அமைத்துக் கொண்டார்கள்.

 என் அம்மா வருடா வருடம் ஏதாவது ஒரு லக்ஷ்மி ரூபத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பாள். அவள் கை என்றும் வற்றியதில்லை.
இதயமும் விசாலம்.
வாழ்வில் சோதனை மேல் சோதனை வந்தும் 
அவள் தன் தெய்வத்தைப் பூஜிப்பதை நிறுத்தவே இல்லை.
மகனையே இழந்தவுடன்  மலைத்தாலும் மனம் கோணி தெய்வத்தைச் சபிக்கவில்லை.

பூமா தேவியைப் போல் துயரம் காத்தாள்.
தவக்கோலம் கொண்ட அம்மன் போல ,மெய்யடக்கி உயிரையும் தியாகம் செய்தாள்.

 அவள் கொடுத்த  அத்தனை 


தெய்வ  உருவங்களையும் பார்க்கிறேன்.
 எல்லாவற்றுக்கும் மேலே   என் தாய். அவள் தான் என் லக்ஷ்மி. அம்மா வணக்கம். உன் பரம்பரையைக் காப்பாற்று. எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.



Wednesday, August 02, 2017

ஆடாத நீர் நிலைகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்........ ஆடி பதினெட்டு வருகிறதென்றால் அத்தனை உற்சாகம் வரும்.
அத்தனை நீர் நிலைகளுக்கும் போகாவிட்டாலும் காவிரித்தாயின் படத்தையாவது கண்டு களிப்பதுவும்,
வீட்டுக் கிணற்றுக்குப் பூஜை செய்வதும், கலந்த சாதம் செய்வதும்
  அமர்க்களமாக இருக்கும்.
தண்ணீரின் அருமை அறிந்தவர்களாக இருந்தோம்.

இன்று பழையதை நினைத்துப் புழுங்க வைத்துவிட்டார்கள் மனித உருவில் வந்த
  அசுரர்கள்.
தண்ணீர் இல்லாத காவிரியைப் பார்க்கத்தான் முடியுமா.
நிலத்தை நம்பி வாழ்ந்த அத்தனை விவசாயிகளின் உயிருக்கு யார்
பொறுப்பு.
 தண்ணீருக்காகப் போராடிய சென்னை நாட்கள் நெஞ்சை வரள வைத்துவிட்டன.
தண்ணீர் வாங்க பணம் இருப்பவர்கள் பிழைத்தார்கள்.
  நடு இரவில்  நிலத்தடி பம்ப் அடித்து இரண்டு மூன்று குடங்கள் சேமித்த எங்கள் ராணி போன்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்.
எப்பொழுதுமே வரளாத எங்கள் கிணறு ஆரத்தி கரைத்த மாதிரி வண்ணத்தில் நீரைக் கொண்டது ஏன்.
  போர்வெல்லிலும் அடைப்பு. வரிகட்டித் தண்ணீர் அனுப்பிக் கொண்டிருந்த
அரசுக்கு வேறு எத்தனையோ கவலைகள். பணம் கட்டி வீட்டுக்கு வந்த Metro லாரியில்
எங்கள் Sump வரை அனுப்ப பைப்பின் நீளம் பற்றவில்லை. அந்த இடத்திலேயே,
அந்த வண்டி ஓட்டுனர் வேறு ஒருவருக்குத் தண்ணீர் விற்றுவிட்டார்.
இணையத்தில் பார்த்தால் Water delivered என்று வருகிறது.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திரு நாடு.
ஆடிப்பெருக்குக்கான வாழ்த்துகள்.