Blog Archive

Thursday, August 17, 2017

மெந்தியக் குழம்பு,நான்,அம்மா...

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
....
-------------------------------------
--------------------------------------.
இன்று மெந்தியக் குழம்பு செய்யும் போது முதன்முதலில் அம்மா சொல்லி (மஹா பொறுமை .பாவம்.) நான் செய்த நாள் நினைவு வந்தது.
ஆண்டா... என்று மென் குரல் என்னை அதிகாலையில் எழுப்பினால் ஒரே ஒரு காரணம். அம்மா விலகி இருக்க வேண்டிய நாட்கள்.
வரும் பாரு ஒரு கோபம். .. போம்மா ,அவன்கள் ரெண்டு பேரையும் எழுப்ப வேண்டியதுதானே. மாட்டேன் என்று திரும்புவேன். 10 வயதுக் கோபம்.
இல்லம்மா நல்ல பொண்ணு பல் தேய்சசுட்டு வா, கரி அடுப்பு, விறகடுப்பு எல்லாம் அப்பா ரெடி பண்ணிட்டு ,காய்கறி வாங்கப் போயிருக்கிறார். நீ பாலாவது காய்சசுமா.
மனமில்லாமல் கிணற்றங்கரை போய்த் தண்ணீர் எடுத்து பல் தேய்தது , பெருமாள் முன்னம் நின்று சாந்தாகாரம் சொல்லி, சமையலறைக்குள் நுழைந்தாச்சு.  

மெ கு, நான் அம்மா..2
****************************************
 கரியடுப்பில் அப்பா கரியை நிரப்பி, அடியில் எரு வரட்டியை 
கெரசினில் தோய்த்து வைத்திருந்தார்.
ஒரு விளக்கு பக்கத்தில் எப்பவும் இருக்கும். 
 ஈர்க்குச்சியில் முதலில் பற்ற வைத்து அடுப்பைப் 
பற்ற வைக்கவேண்டும். அதே போல விறகு அடுப்பில் கட்டை விறகு,
சிராய்த்துண்டுகள் மேலாக அடுக்கி வைதிருக்கும். அதே எரு விராட்டியால் 
அங்கேயும் பற்ற வைக்கணும்.
அது நிதானமாக எரிய ஆரம்பிக்கும் போது வெங்கலப் பானையில் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும்.. கொடி அடுப்பில் பருப்புக்கான பாத்திரத்தில்
தண்ணீர் வைத்து, து.பருப்பைப் போடவேண்டும்.

அன்று சனிக்கிழமை யாதலால் ,அம்மாவுக்கு எனக்கு டிரெயினிங்க் கொடுக்கத்
தோன்றிவிட்டது.
கரியடுப்பில் பாலைக் காய்ச்சு, முற்றத்திலிருந்து குரல். 
சரி வச்சுட்டேன். கையில இருக்கிற விகடனைக் கீழ வச்சிடு. பால் பொங்கிடும்.

திருட்டு முழியுடன் அம்மாகிட்ட அந்தப் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு வரவும்
 பால் பொங்கவும் சரியாக இருந்தது.
மூணு டம்ப்ளரில் பாலை விட்டு கோகோ போட்டுக்கோ.
திப்பி திப்பியாக கோக்கோ பாலைப் பார்த்துத் தம்பிகள் 
சுணங்கினார்கள்.

ஃபில்டரில் டிகாஷன் இருக்கா பாரு. 
  ம்ம் ம். இருக்கு
 பால் சூடாக இருக்கும்போதே எனக்குக் கொஞ்சம் காப்பி கொடுக்கிறயா.
 எனக்கு ஓன்னு கத்தணும் போல இருக்குமா என்றேன்.
அப்புறம் கத்திக்கோ, முதல்ல பாலைக் குடி
பிறகு எனக்குக் காப்பி.
அப்பா வெளியில் சாப்பிட்டு வந்துவிடுவார்.

சரி.
ஆச்சு.
கையைச் சுட்டுக் கொண்டாயா
ஆமாம்.
பிடி துணியே இங்க இல்லை.
வெளில நாகம்மா வந்திருக்கா பாரு.
அவளுக்கு நேத்துப் பாத்திரத்தைக் கொண்டு வந்து போடு.
இந்த வேலைக்குத் தம்பிகள் வந்தார்கள்.

அக்கா கிட்ட இந்தத் துணிகளைக் கொடு ராஜா
என்று நாகம்மா கொடுத்தனுப்பிய துணியை வைத்து
அப்பா வரக் காத்து இருந்தேன். தொடரும்.



தொடரும்.

17 comments:

நெல்லைத் தமிழன் said...

60களை கண்ணில் கொண்டுவந்துவிடுகிறீர்கள். சிவசங்கரியின் பாலங்கள் படித்த நினைவு வந்துவிட்டது.

மாதேவி said...

விளையாடி திரியும் அந்த வயதில் எல்லாருக்கும் வரும்கோபம்தான்.
இன்று இனிய நினைவுகள்.

அம்மம்மா எங்களுடன் இருந்ததால் அவருக்கு ஒத்தாசை செய்வதில் நாங்கள் தப்பித்துக் கொண்டோம்.

இருந்தும் நானாகவே விரும்பி எனது ஒன்பது வயதில் வேலைகள் கற்றுக்கொள்ளஆரம்பித்தேன்.

ராஜி said...

இப்பத்திய பிள்ளைகள் குளிக்காமயே அடுப்படியில் புழங்குதுங்க

ஸ்ரீராம். said...

ஏன் மெந்தியக்குழம்பு என்று சொல்கிறீர்கள்? அது வெந்தயக்குழம்பு இல்லையோ? பேச்சு வழக்கமோ?

கரி அடுப்பு நான் அடுப்பின் கீழே ஒரு பேப்பர் சுருளை கெட்டியாகச் சுருட்டி வைத்து பற்ற வைப்பது வழக்கம். மென்மையாக விசிற வேண்டும். கரி லேசாகப் பற்றிக்கொண்ட உடன் நன்றாக விசிறி பெரிது படுத்தலாம். நான் விசிறும் வேகத்துக்கு மத்தாப்பூவாய் பொறி பறக்கும்! திருமணமான புதிதில் ஓர் அவசர / அவசிய நாளில் கரி அடுப்பிலேயே முழு சமையல் முடித்தேன்.

பால் போன்றவற்றுக்கு இடுக்கி ஓகே. சாதத்துக்கு பிடிதுணியே சிறந்தது. காஞ்சி வடிக்க வசதி!

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன், சிவசங்கரியோட எழுத்து மாபெரும் ஜாம்பவான் வேலை.
இது ஒரு நாள் முயற்சி. மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
உண்மைதான். ஏன் கோபப்பட்டேன் என்று இப்போது யோசிக்கிறேன்.
அம்மா என் கோபத்தையெல்லாம் பொருட்படுத்தியதே இல்லை.
சிரிப்புதான் வருகிறது. உங்கள் அம்மம்மாவுக்கு வணக்கங்கள்.
நீங்கள் இப்போது எழுதுகிறீர்களா..

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ராஜி. என்னால் முடியாத ஒன்று அது.
காலம் மாறிவிட்டதே அம்மா.

வல்லிசிம்ஹன் said...

தெரியவில்லை ஸ்ரீராம். அம்மா சொன்னது அப்படியே.
மெந்தியமாகிவிட்டது. வெந்தயம் தான் சரியான சொல்.
அடடே நீங்களும் கரி அடுப்பில் சமைத்தீர்களா. என்ன வாகாச் சொல்கிறீர்கள்.அப்பாடி.

தாத்தாவுக்குக் கூட விரட்டியை வீணாக்கக் கூடாது. கிழிந்த பேப்பர்க் கத்தை சமயலறை மூலையில் இருக்கும். எனக்கும் அந்த பொறி பறப்பது மிகவும் பிடிக்கும்.
ரொம்பப் பிடித்த அடுப்பு கும்மட்டி அடுப்புதான். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

பிடிதுணி கஞ்சி வடிக்க வாகு.
ஸ்ரீராம். வயது வந்த பிறகு இடுக்கி.

மாதேவி said...

பிள்ளைகளிடம் அடிக்கடி வருவதால் எழுத முடிவதில்லை. வேலைகளும் அதிகம்.இடையிடையே கைபேசியில் படித்து ஊட்டமிடவே சரியாகிவிடுகிறது.

ராமலக்ஷ்மி said...

பத்து வயதில் எங்களுக்கு முதல் பாடம் அம்மியில் சட்னி அரைப்பது:). தொடருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அமெரிக்கா வருகிறீர்களா மாதேவி. உங்களை அந்த வயதில் என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. நலமாக இருங்கள். உங்கள் சின்னு ரேஸ்றீ யாஈ மீகாவூம் மீஸ்
செய்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். அது பெரிய விஷயமாச்சே ராமலக்ஷ்மி.
எங்க வீட்டு அம்மி கொஞ்சம் பெரிசு. அந்தக் குழவியைத் தூக்கத் தனியா சாப்பிடணும்,.
பலம் வருவதற்கு. தேங்காய் தட்டுவதற்குள் ஒரு விரலாவது நசுங்கும் ஹாஹா.
எழுதுகிறேன் அம்மா.

Anuprem said...

ரொம்ப சுவாரஸ்யமா கதை போல சொல்றீங்க
...

Thulasidharan V Thillaiakathu said...

ரொம்ப ஸ்வாரஸ்யம் நானும் செய்திருக்கேன் அம்மா. பிடி துணி வைச்சு கஞ்சி வடித்தல்...எளிதாக இருக்கும். இப்போது கூட சாதம் கஞ்சி வடித்துத்தான் சாப்பிடுகிறோம் ஆனால் கரி அடுப்பெல்லாம் இல்லை ஹைட் டெக்காக...

அம்மி உரல் எல்லாமும்..சில வருஷம் முன்பு வரை கூடப் பயன்படுத்தியிருக்கேன்...

அழகாக பழைய நினைவுகளை மீட்டெடுத்த பதிவுகள் வல்லிம்மா..என் பாட்டிகளையும் நினைவுபடுத்தியது!!!!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனு. ஆமாம் டா ரொம்பப் பழைய கதை கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, இப்போது எல்லாம் மாறித்தான் விட்டது.
மகன் வீட்டில் இப்போதும் கஞ்சி வடித்தே சாப்பிடுகிறார்கள்.
சாப்பாடே பட்டன் தட்டி ஆகிவிடுகிறது.
அப்போது சமையல் ஒரு சந்தோஷம்..
இந்த தேசம் வந்த பிறகு எனக்கும் அது
விருப்பமாகிவிட்டது.
வியர்வை இல்லை. ருசித்து சாப்பிடப் பேரப் பசங்கள்.
பெண்ணுக்கும் கொஞ்சம் விடுதலை கொடுத்தாப்பில ஆச்சு.
அம்மி உரல் எல்லாமே ஒரு தெரபி அப்போது. அழகாகப் படித்துக் கருத்து சொல்லும் உங்கள் அக்கறை மிகப் பிடித்திருக்கிறது அம்மா.