Blog Archive

Monday, December 31, 2012

நாயகனாய் நின்ற நந்தகோபன்

நந்தகோபன் மாளிகை



நென்னலே வாய் நேர்ந்தான்
 நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
      கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
  ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
      தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
      நேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய்    

********************************************************
ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவையில் 16ஆவது பாசுரம்  மிகவும் முக்கியமானது. கோவிலுக்குச் செல்லும் வழி முறைகளை விளக்கி பக்தியின்  பாதையைக் காட்டுகிறாள் நம் பூங்கோதை. பத்து தோழிகளையும் எழுப்பியாகிவிட்டது.  இனிப் பரமனைத் தொழவேண்டும். அவன் கோவிலை அடைய வேண்டும். உள்ளிருக்கும் மன்னவனான கண்ணனை, மணிவண்ணனை முன்னிட்டே  போகிறார்கள்.  ஆனால் அதற்கு முன்னால்  வாயிலில் நின்று அவனைக் காப்பவர்களையும் வணங்க வேண்டும் அல்லவா. கண்ணனுக்கு எதற்குக் காவல்.  பிறந்த அன்றிலிருந்து  அவனுக்கு வந்த எதிரிகள் தான் எத்தனை பேர். இன்றோ அவனுக்குத் திருமணம் கூட நடந்துவிட்டது.
அப்படியும்    நந்தகோபனுக்குப் பயம் விடவில்லை.
ஏதாவது உருவம் எடுத்து இன்னும் யாராவது வருவார்களோ,கம்சன் போனாலும் வேறு  யாரும் வருவரோ என்ற கலக்கம் எப்போதும் இருக்குமாம்.

அதற்காகவே கண்ணன்   திருமாளிகைக்கு வாயில் காப்போர்கள்
ஏற்பாடு செய்யப் பட்டார்கள்.

துவாரகை மன்னன்  ஆயர்பாடிக்கண்ணன்  இன்னும் குழந்தையாகவே
நந்தகோபனுக்குத் தெரிகிறான்.

நம் கோதைக்கும் இது தெரியும். அதன் காரணமாகவே  கொடிகள் பறக்கும் 
தோரணங்கள்   ஆடும்  நந்தகோபன் மாளிகையை மெல்ல அணுகும்போதே
மனதில் பொங்கும் மகிழ்ச்சி மேலீட்டால் பக்தியை மறக்காமல்
வாயிலில் காவல் இருப்பவர்களையும் வணங்கித் தயவாகக் கேட்டுக் கொள்கிறாள்.

அவர்களோ வழிவிடத் தயங்குகிறார்கள். இவளோ  பணிவாகச் சொல்கிறாள். மணிவண்ணன் எங்கள் கண்ணன் நேற்றே  எங்களுக்கு வருவதற்கு அனுமதி
கொடுத்துவிட்டான். நாங்கள்  உள் சென்று  அவனைத் துதி பாடி,புகழ் பாடி அவனை   நல் துயிலெழுப்ப வேண்டும்.
நாங்களோ ஆயர் சிறுமியர் . அவனையே  நினைத்து நோன்பு
நோற்றுத் தூய்மையாக  வந்திருக்கிறோம்.

நீங்கள் எங்களை வேறாக  நினைக்கவேண்டாம்.
மறுத்து ஏதும்   சொல்ல வேண்டாம்.
எப்படி   எல்லோருக்கும்  வழிகாட்ட  ஒரு குரு வேண்டுமோ அது
போல இந்தவாயில் கதவுகளைக் காப்பவர்களும் ஒருவகையில்
ஆச்சார்யர்கள்தான். அவர்கள் காட்டிய வழியில் போகவேண்டிய ஜீவன்கள்

இந்தப் பாவையர்.
அது அவர்களுக்கும்நன்றாகத் தெரியும்.
அதனாலயே அவர்களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
நேய  நிலைக் கதவம் நீக்கு''

அன்பும் மகிழ்ச்சியும்  திகழும்  மாளிகையின்  அழகுக் கதவுகளைத்
தாழ்ப்பாள்களைத் திறந்துவிடு  அம்மா என்று அவர்களை  பிரார்த்திக்
கொள்கிறாள்.

புனிதமும் பக்தியும் மேலிட கோதை பாடிய இந்தப் பாடல் நம்
மனக் கசடுகளையும் நீக்கி இறைவனிடம் சேர்க்கட்டும்.





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

2013 பிறக்கிறது பொழுது நல்லதாகட்டும்.

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே

 அன்பர்கள் அனைவருக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும்
வரும் புத்தாண்டு நல்ல செய்திகளையும்
நல்ல ஆரோக்கியத்தையும்   மகிழ்ச்சிகளையும் கொண்டுவர இறையருள்
வேண்டி    வாழ்த்துகிறோம்.
அன்புடன்
வல்லி&சிம்ஹன்.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, December 30, 2012

எல்லே இளங்கிளியே

இளங்கிளியே  எழுந்திரு!
வல்லானைக் கொன்றானை



 எல்லெ  இளம்கிளியே  இன்னம் உறங்குதியோ
சில்லென்றழையேன்மின்  நங்கைமீர்  போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய்  உனக்கென்ன வேறுடைமை
எல்லாரும் போந்தாரோ போந்தர் போந்தெண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை  மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
***************************************************

15 ஆம் நாள் பாசுரமாக மலர்கிறது   கிளிப்பாட்டு.
கடைசியாக  எழுப்பப்படும் பெண்  வம்பு பேசுகிறாள்.
சின்னம்சிறு கிளிபோல ஓயாமல் பேசுபவளே
இன்னும் எழுந்திருக்காமல் இருப்பது ஏன் என்று குழு கேட்கிறது.

ஏற்கனவே  குளிருகிறது,நீங்கள் வேறு சுள்ளென்று  பேசாதீர்கள் வரேன் வருகிறேன் என்றுவிட்டு மீண்டும் அமைதியாகிறாள்.

ஆஹா உன் பேச்சைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா
பேச்சில் வல்லவள்  நீயல்லவோ, எங்களைச் சொல்லாதே அம்மா''

என்கிறது குழு.சரி நானாகவே இருக்கட்டும் என்ன செய்யவேண்டும் என்கிறாள். கொஞ்சம் வெளியே வா,வந்து  எங்களைப் பார் என்கிறார்கள் வெளியே நிற்பவர்கள்.
மற்றவர்கள் எல்லாரும் வந்துவிட்டார்களோ என்று மீண்டும் கேட்கிறாள்
துயிலைக்கலைக்க விரும்பாத அந்தப் பெண்.

வந்துவிட்டார்கள் வெளியே வந்து எண்ணிப்பார்.
இப்படி ஒருத்தி இருப்பாளா. நாம் பாட வேண்டாமா  கண்ணன் புகழை.
எப்பேர்ப்பட்டவன் அவன்.
எல்லா  உயிர்களிலும்   நிறைந்திருப்பவன் ,மாயன்  அப்படியும் கொடுமை இழைக்கவந்த குவலயாபீடம் என்னும் யானையை  சின்னம் சிறுவயதில் வீழ்த்தியவனை, தர்மத்துக்கு எதிராக நடப்பவர்களை,அப்படி நடந்த  கம்சனையும் கொன்றான்.
அவனைப் பாட  உனக்கென்ன  தயக்கம் என்று தூண்டி அவளையும் அழைத்துச் செல்கிறாள்  நம் கோதை.
விட்டுணு சித்தனின் மகளே அவர் குலநந்தன  கல்பவல்லியே
கண்ணனின் அருள் பெற்று ஸ்ரீரங்கராஜனின் குங்குமசந்தனமாகத்திகழ்பவளே
அடியோங்களின் பாபங்களை விலக்கி  அருள்வாய்.






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Posted by Picasa

Saturday, December 29, 2012

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து
ஆம்பல் வாய் கூம்பினகாண்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்  பங்கயக் கண்ணான்.
கோதை நம்மைக் காக்கட்டும்


 உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

பெண்



திரௌபதியின் கண்ணீர்  ஒருகோடி மனிதர்களை அழித்தது.
****************************************************************8


அந்தக் காலத்திலும் கொள்ளை கொலை இருந்திருக்கலாம்.
பிஞ்சுகளையும்,பேதை,பெதும்பைப் பருவம் என்றேல்லாம் பார்க்காமல்  சிதைப்பவர்கள்
யார்.
அவர்களும் யாருக்கொ மகன்,சகோதரன்,தகப்பன்.
இந்த வெறி துச்சாதனன் துரியோதனன் காலத்தோடு போனது
என்று நினைத்ததுதான் நம் தவறு.
மது எனும் அரக்கனை மாதவன் அன்று ஒழித்தான்.
மதுவினால் வாழ்பவர்களை    அப்புறப்படுத்த யார் வருவார்.
இன்று  உலகத்தில் உள்ள அனைத்து ஆண்மகன்களும் தன் குழந்தைகளைக் காக்க
  மாதவன்களாக மாற வேண்டிய நிலை.


மாரத வீரர் மலிந்த நன்னாடு
மாமுனிவோர் பலர் வாழ்ந்தபொன்னாடு
பாரத நாடு பழம் பெரும் நாடு
பாடுவோம் ஈதை இதற்கில்லை ஈடே.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, December 28, 2012

புள்ளின்வாய்க் கீண்டானின் கீர்த்திமை

புள்ளும் சிலம்பினகாண் போதரிக்கண்ணினாய்
பாவைக் களம்  புகுந்தார்
கோதண்டராமனைப் பாடுவோம்
Add caption
பக்தியால் உன்னைத் தொழுதேன் கண்ணா  அருள்வாய்
  ஸ்ரீஆண்டாள் அருளிச் செய்த  13 ஆம் நாள் பாசுரம்.
*********************************************************************************8
 புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவை களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண்; போது அரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்!
*************************************************************

அடுத்த வீட்டுப் பெண்ணை எழுப்ப வந்தாள் கோதை தன் தோழிகளோடு. அவர்களோ
நோம்பு நூற்க வேண்டிய பாவைக் களம் சென்று கண்ணனைப் பாடவேண்டும்
என்று துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
  தோழியின் வீடோ அரவமற்று இருக்கிறது. அவள் ஆழ்துயிலில்
ஆழ்ந்திருக்கிறாள்.
கோதை பாட ஆரம்பிக்கிறாள்.
அம்மா,  வெள்ளி எழுந்துவிட்டது.
வியாழம் உறங்கிற்று.

இந்த நிகழ்வு சரித்திர ஆராய்ச்சிகளில் மிக முக்கியமானது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழுமாம்.
ஆண்டாள் பாடிய காலம் கிபி 731 ஆம் ஆண்டாக இருக்கச் சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தமிழ்ப் பேராசியர் ,ஆராய்ச்சியாளர்  திரு.மு.ராகவையங்கார்   சொல்கிறார்.  எவ்வளவு அருமையான நிகழ்வு. அதையும் அவள் விட்டுவைக்கவில்லை.

மகாபெரிய  அசுரன் பகாசுரன். கொக்கு வடிவத்தில் பாலகிருஷ்ணனைக் கொல்ல   வந்தான். அவன் வாயைக் கிழித்து அவனை அழித்தான் கிருஷ்ணன்..

யசோதைக்கு கோகுலத்தில் எதைப் பார்த்தாலும் ஒரு அசுரன் போலத் தோன்றியதாம்..அந்தக் கவலையில் கண்ணனைக் கட்டுப்படுத்த  முயன்றாலும்  அது முடியாத காரியமாக இருந்ததாம். காற்றை வீசாதே என்று யாரால் கட்டுப் படுத்த  முடியும்!

இதே போல கருணையே வடிவமான இராமனின்  கோபாவேசம்
இராவணனின் மேல் பாய்கிறது.
 பலவிதமாக அவனை இம்சிக்கிறான்   இராவணன்.,.

இறுதிநாள்  யுத்தத்தில் பத்துத் தலைகளையும் கிள்ளி எறிவதாகக் கோதை குறிப்பிடுகிறாள்.
நரசிம்ஹாவதாரத்தில்  நொடிப் பொழுதில் இரணியனை வீழ்த்திய நாராயணனுக்கு,இராவணன் ஒரு   தூசுதான்.
 பகைவனுக்கும் அருளும் நெஞ்சம்  இருந்ததால்  கொஞ்சமே தாமதித்தான்.
இதையும் சொல்லி அந்தப் பெண்ணை  எழுப்புகிறாள்.

உலகத்தைக் காக்க வந்திருக்கும் மாலவனைப் பாட உனக்கேன் பிணக்கம்.  உடலும் உள்ளமும் குளிர  நீரில் மூழ்கித் தூய்மையாக் வா. கள்ளத்துயிலை நீக்கு. எங்களோடு வந்து கலது கொள்வாய் பெண்ணே   என்று அன்புடன் அழைக்கிறாள்.   ஆண்டாள்.
அவள் திருவடிகளில்   சரணடைகிறோம்.










 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

மார்கழி முழுநிலா

கருணைவெளிச்சம்  கொடுக்கும் நிலா
Add caption
வெள்ளை நிலா
இன்றுதான் பௌர்ணமியோ
Add caption



 எண்ணிலாக் கனவுகளைக் கொண்டுவரும் வெண்ணிலா  இந்த மாதம் ஒத்துழைத்த வான் நிலையில் ஒளிவிட்டது.
பக்கத்துவீட்டு  மாடி அறையை விட்டுத் தலையை நீட்டக் காத்திருந்தேன்.
பலன் கிடைத்தது.
மாதங்களில் அவன் மார்கழி.
மார்கழியில் அவன் முழுநிலா.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Thursday, December 27, 2012

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிறங்கி

ஸ்ரீராமபட்டாபிஷேகம்
இராம ராவண யுத்தம்
திருமங்கைஆழ்வார்
கண்ணாடி அறையில் ஆண்டாளின் பாசுரம் வடிவு
மாலழகன்

 அன்ன வயல் புதுவை ஆண்டாள் 
அரங்கற்குப் பன்னு திருப்பாவை
பல்பதியம் பாடிக்கொடுத்தாள்
நற்பூமாலைச் சூடிக்கொடுத்தாளைச் சொல்லு
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே
தொல்பாவைபாடிக்கொடுத்த
பைவளையாய்
நாடி நீ வேங்கடவற்கு எம்மை விதி
என்ற இந்நாமம் நாம் கடவா வண்ணமே நல்கு.

**************************************************
இன்றைய பாசுரம்  12 ஆம் நாள் மார்கழி

கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இறங்கி
நினைத்துமுலை வழியே  நின்று   பால் சோர
நனைத்தில்லம்  சேறாக்கும்  நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழ  நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக்கினியானை பாடவும் நீ  வாய்திறவாய்
இனித்தா ன்  எழுந்திராய்  ஈதென்ன பேருறக்கம்!!
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர்  எம்பாவாய்!!
****************************************************
எம்பாவாய்,  மாஹாலக்ஷ்மியே சீதையாக அவதரித்தாள். பட்ட மஹிஷி அவள். ஸ்ரீராமனைப்   பின்பற்றிக் கானகம் சென்றாள்.

அவள்   உலகத்து மக்களை ரட்சிப்பவள்.
அவளைப் போலவே   இதோ இந்த  மஹிஷமும்
தன்கன்றின் மேல் கோண்ட பாசத்தால் யாரும் கறக்காமல்
தானாகவே  பாலைச் சொரிகிறது..
அந்தப் பாலோ கட்டுக்கடங்காமல்  பெருகி உன்வாசலில் இருக்கும் நிலத்தை நனைத்துச் சேறாக்கிவிட்டது.

சில்லென்ற பனி எங்கள் தலையில்  இறங்குகிறது.
காலடியில் சில்லென்று பால்சேறு இன்னும் குளிரைக் கூட்டுகிறது.


ஸ்ரீராமனுக்குக் கோபம் வந்தது சில நேரங்களில் தான். அவன் இனியவன். மனத்தால் நினைத்தாலே குளிர வைப்பவன்.
தம்பி இலக்குவன் வீழ்ந்தபோது வந்து காப்பாற்றிய
அனுமனை இராவணனின் பாணங்கள் தாக்கி
பொன்மலையில் சிவந்த(ரத்தம்வழிய)  பூக்கள் பூத்தது போல
தன் பக்தன் நின்ற கோலம் அவனைச் சீற்றத்துக்குள்ளாக்கி

ஸ்ரீராமன்  எய்தான் தன் பாணத்தை. வென்றான் இலங்கைக் கோமானை.
அவனைப் பாட வேண்டாமா.
எழுந்திரம்மா. இப்படி உறங்கலாமா. அக்கம்பக்கம் எல்லோரும் அறிவார்கள் நீ
இன்னும்  எழவில்லை என்று. சீக்கிரம் அவர்கள் மெச்ச
எங்களுடன் வந்து இறைவனை நாடுவாய்  என்று இனிதாக மொழிகிறாள்.






 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, December 26, 2012

கணங்கள் பல கறக்கும் கற்றுக் கறவைகள்

ஆண்டாள் கோவிலும் பால்கோவாவும்
கறவைகள்
Add caption




குற்றமொன்றிலாத கோவலன்
 மற்றொரு வீட்டுப் பெண்ணையும் எழுப்ப வருகிறாள்  ஆண்டாள்.
அந்த வீடோ பல நூறு கறவை மாடுகளையும் கொண்டது.
அந்தக் கறவை மாடுகளோ நிற்காமல் பால் சுரப்பவை.  ஆஅண்டாள் தன் வில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாக நினைத்ததுமே பகவான் திருமால்,
அந்த ஊரையே பசுக்கள் அதுவும் வள்ளல் பசுக்கள் கொண்ட ஊராக  மாற்றிவிட்டானாம்.  மனைவி நினைத்ததையே  செய்யும்   கண் அவன்!!


அந்தவீட்டுடையவனோ   காவலன் ஒரு கோவலன். கோக்களைக் காத்து ரட்சிப்பவன்.   தன்னைப் பகைக் கண்ணோடு பார்ப்பவர்களை அழித்து தன் சுற்றத்தைக் காப்பவன்.
அவனுடைய தங்கையோ பொற்கொடி போன்ற அழகு   கொண்டவள்.


புனமயிலே என்று அழைக்கிறாள் ஆண்டாள்.எழுந்திரு அம்மா. அக்கம்பக்கத்துத் தோழிகள் அனைவரும் வந்துவிட்டார்கள்.
உங்கள் வீட்டு முற்றத்தில் காத்து நிற்கிறார்கள். முகில்வண்ணன்  எனும் பெருமாள்  ,அவனைப் பாடக் காத்திருக்கிறார்கள்.
நீயோ இப்படி ஒரு மாய உறக்கத்தில் ஆழ்ந்து  ஒரு சிறு சொல் கூடப் பேசாமல்

உறங்குவது முறையல்ல  எழுந்திரு என்கிறாள்.

வில்லிபுத்தூர்வளம் பாடும் பாசுரம் இதோ.

கற்றுக் கறவை கணங்கள் பல கலந்து 
செற்றார் திறலழிய சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலன் தன் பொற்கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
ம்ற்றம் புகுநு முகில்வண்ணன் பேர்பாட'
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி  நீ
எற்றுக்கும் உறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.


அன்பினால் ஆண்டாளை வணங்குவோம்.







எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Tuesday, December 25, 2012

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

அனைவரையும் விழிக்க்வைத்து புத்துணர்வு கொடுத்தவள்



நோற்றுச் சுவர்க்கம் பதிவு காணொம்.
பாடல் பாசுரம் இது.
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ  வாசல் திறவாதார்.
நாற்றத்துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்றல் அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.
இதை  எழுதிப் பிரசுரித்து  பின்னூட்டங்கள் வந்து நான் பதில் எழுதி எல்லாம் ஆச்சு.

ஒரு வேளை மாயன் கொண்டு போனானோ.:)



கும்பகரணனின் கொடையால் ஒரு பெண் தூங்கிவிடுகிறாள்.
ஆண்டாளுக்கோ இவள்   நாராயணனை மறந்து உறங்குகிறாளே.

நோன்பிருந்து சுவர்க்கம் போகும் வழியைப் பார்க்க வேண்டாமா.
நாராயணன் தரும் பறையை வாங்க வேண்டாமோ.
ஊரெங்கும்  துளசி மணம் சூழ அதை அனுபவிக்காமல்


ஆற்றல் இருந்தும்  பண்புகள் நிறைந்த மங்கையாக
 இருந்தும் உறங்குகிறாளே  இவள் இந்த அனுபவத்தை விட்டு விடக் கூடாதே என்று எழுப்புகிறாள்.


அம்மா தாயே  கோதாம்மா  நீ சொன்ன அர்த்தத்தில் என் பதிவு வேறு படாமல் இருக்க நீயே அருள் வேண்டும்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa