நூறு வருடப் பழைய வீடு ''சம்பகா'' |
எல்லோரும் நிறைவுடன் வாழ வேண்டும்.
சென்னையின் ஹெரிடேஜ் வாக் நடத்தும் திரு ஸ்ரீராம் அவர்களின்
விளம்பரம் மைலாப்பூர் பேப்பரில் வந்ததும்
முதலில் பார்த்தது தான் நீலாதான்
உடனே ராணி மேரியில் தன்னுடன் படித்த
சந்திராவுக்கு அழைப்பு விடுக்க அவளும் தானும் தன் பழைய
கல்லூரித் தோழனும் வருவதாகச் சொல்லி மூவரும்
பதிவு செய்தார்கள்.
முன்பு நடந்த அடையார் வாக், சென்னை பல்கலைக் கழகம் எல்லாவற்றையும்
தெரிந்து வைத்துக் கொண்டாள்.
இந்த வருடப் பயணம் மகிழ்ச்சி தருவதாக
இருக்கப் போகிறது என்று புது உணர்வு வந்தது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முன்பு 12 வருடங்களுக்கு முன்னால் திண்டுக்கல் கதை ஒன்று
எழுதி இருந்தேன். அதே ஜானகிராமன் நீலா கதை
இங்கே தொடர்கிறது.
அதுவும் நடந்ததுதான். இப்போது எழுதுவதும் நடந்தது தான்.
ஊர் பெயர்கள் கொஞ்சம் மாறி இருக்கும்.
இனி மீண்டும் கதையைச் செதுக்கலாம்:)
ஜானகிராமன்60, இப்போது ரிடயர்ட் பாங்க் மானேஜர். தனிமரம்........
நீலா 58 திருமணம்,குழந்தைகள்,கணவன் மறைவு, பேரன் பேத்தி
என்று தொடர்ந்த வாழ்க்கை ,மாற்றம் வேண்டி
சென்னைக்குத் திரும்பிய நிலை.
சந்திராவும் கணவர் சுந்தர்,அவளுடைய பழைய நாள் தோழன்
பாலு மூவரும் ஞாயிறு காலை எட்டுமணி அளவில்
மயிலை கபாலீஸ்வரர் கோவிலை
வந்து சேர்ந்தனர்.
அங்கே ஏற்கனவே சேர்ந்திருந்த நண்பர்களைச்
சந்திக்க விரைந்தாள்.
செல்ஃபோன் பாட ஆரம்பித்தது. நீலா அழைப்பதை உணர்ந்து
''எங்கே இருக்கப்பா, சீக்கிரம் வா'' என்று வேண்டுகோள்
விடுத்தாள். மயிலையைச் சுற்றிப் பல இடங்களுக்குப் போவதாக
ஏற்பாடு. லிஸ்ட் படி, மாடவீதி, கச்சாலீஸ்வரர் கோவில்,
கேசவ பெருமாள், முண்டகக் கண்ணி அம்மன், சமஸ்கிருதக்
கல்லூரி, கலைமகள் அலுவலகம்,சாந்தோம் சர்ஸ், லஸ் சர்ச் சாலை எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்வதாக
நிகழ்ச்சி நிரல் சொல்கிறது.
எல்லாரும் வந்தாச்சா என்று இன்னோரு வயதானவர் கேட்க
''ஜானியைக் காணோமே'' என்று இன்னோரு நண்பர் சொல்ல
நீலாவுக்கு ஒரு ஏதோ ஒரு நினைவு தட்டியது.
என்ன பெயர், என் கல்லூரித் தோழி பெயர் கூட ஜானிதான்
என்று ஆவலுடன் தலையைத் திருப்பினாள்.
வந்தது அவளுடைய ஜானி இல்லை ஜானி என்கிற ஜானகிராமன்!!!
''எல்லோரும் தங்களை அறிமுகப் படுத்திக்
கொள்ளலாம் என்று குழுத்தலைவர் சொல்ல
அங்கு கூடி இருந்த 30 பேரும் தங்களுக்குக் கொடுத்திருந்த
பெயரட்டையுடன் இருந்த குழு அடையாளச் சங்கிலியை கழுத்தில் அணிந்து
எளிமையாக அறிமுகப் படுத்திக் கொண்டனர்.
ஜானகிராமனைப் பார்த்ததிலிருந்து நீலாவுக்கு, இருந்த துளி சந்தேகம்
அவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதும்
சட்டென்று விலகியது.
உடம்பில் ஒரு பரபரப்பு வந்தது.
43 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு சந்திப்பா?
தன் முறை வந்ததும், பிறந்த இடம், இப்போது இருக்கும் இடம்
சொல்லிவிட்டு ஜானகிராமனைப் பார்த்துப்
புன்னகைத்தாள்.
அவர் திகைப்பிலிருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை.
ரொம்ப காலமாச்சு பார்த்து என்றபடி அருகில்
வந்தவர் ''நீங்கள் நிறைய மாறிவிட்டீர்கள்'' என்றார்.
அடுத்த சுவாரஸ்யத்தை இரண்டு நாட்களில் தொடர்கிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++இதுதான் முடிந்த கதையின் ஆரம்பம். பதிதாகப் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கப் பதிகிறேன் நன்றி