Blog Archive

Thursday, January 16, 2025

முழுமை பெற்ற காதல் எல்லாம்...7ஆம் பகுதி

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்




 நீலா மைலாப்பூரில் குடி வந்தது ஜானிக்குத் தெரியாது
என்று சொல்லி போன பதிவை முடித்திருந்தேன்.

பெற்றோரின் வீட்டுக்கு வேண்டிய வசதிகள்
செய்து முடிக்கும் வேலைகளை முடித்துக் கொண்டான்.
அவன் வேலை செய்யும் இடத்தில் 
ஒரு நெருக்கடியான நிலமை வந்ததால்
திரும்பிப் போகும் நாளைக் குறித்து
டிக்கெட்டும் வாங்கிக் கொண்டான். நீலாவைப் போய்ப்
பார்க்க வேண்டும் என்று மனம் விரும்பினாலும்
வேலைப் பளுவினால் முடியவில்லை.
யதேச்சையாகப் பேரனுடன் வெளிவந்த நீலா,
ஜானகிராமன்  ,பெட்டிகளை ஏற்றி ஊருகுக் கிளம்புவதைக்
காண நேர்ந்தது.
அதிர்ச்சியில் நகரக் கூட முடியவில்லை.
''ஜானியா அது.!! தலை நரைத்து வயதான தோற்றம் வந்துவிட்டதே''
என்று தொண்டையில் துக்கம் சேரத் தன்னைக் கட்டுப்
படுத்திக்கொண்டாள்.

 அதற்குப் பின் வந்த வருடங்களில் நீலாவின் வாழ்வில் 
மேலும் மாற்றம். பெற்றோர் இருவரும் ஒருவர் பின் ஒருவர் இயற்கை எய்த

தன் வாழ்க்கை முறையில் பல முடிவுகளுக்கு வர வேண்டி இருந்தது.
மகன் மகள் இருவரும் அவரவர் வாழ்க்கைத் துணைகளோடு
நியூசிலந்திற்கும்,சிங்கப்பூருக்கும் செல்ல

அவளும் அவர்களோடு இருக்க வேண்டிய சூழ்னிலை
வந்தது.அடிக்கடி வீட்டைப் பூட்டிவிட்டு அவர்கள் தேவைக்கேற்ப
சென்று வந்து கொண்டிருந்தாள். ஜானியின் 
சகோதரிகளையோ,பெற்றோரையோ
பார்த்துப் பேச அவள் முயற்சி செய்ய நேரமோ மனமோ
இருக்கவில்லை. ஒரு வெறுமையான விரக்தியான
மன நிலை அவளை எப்பொழுதும் சூழ்ந்திருந்தது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜானி தன் தந்தை ,தாய் உடல் நிலை தளர்ந்ததும்
அடிக்கடி சென்னை வந்தாலும்
அவனும் நீலாவும் சந்திக்கவே முடியவில்லை.
2023 கோடையில் அவன் வந்தது தந்தையின் 
இறுதிச் சடங்குகளை நிறைவேற்றவே.
அடுத்த வருடம் வருஷ முடிவு சடங்குகளைப்
பூர்த்தி செய்துவிட்டுத் தன் தாயுடன் சிறிது
நாட்களைச் செலவழித்துக் கொண்டிருந்தான்.

மனம் மட்டும் நீலாவைக் கண்டு பேசவில்லை
என்று மிகமிக வருத்தப் பட்ட நிலையில் தான்
தோழன்  யோசனைப்படி கபாலி கோவில் 
பயணத்துக்கு வந்து சேர்ந்தான்.
அங்கு வந்தவர்களுடன் கலந்து கொள்ளவும் முடியாமல்
பிரிந்து நிற்கவும் முடியாமல் அவன் கண்கள் 
சுற்றுப் புறத்தைப் பார்த்துவரும்போது தான் நீலா
தோழியுடன் வந்தாள். ஒரு நிமிடம் ஜானிக்கு மூச்சே நின்று விடும்போல் 
இருந்தது. அவசரமாக அவளை நோக்கி விரைந்த
கால்களைச் சிரமப்பட்டு அடக்கி மெல்ல அவளை நோக்கி நகர்ந்தான்.

தன் அருகில் வந்து நின்ற ஆறடி உயரக் கம்பீரமான
ஆண் உருவத்தைக் கண்ட நொடியில்
ஜானகிராமனை அறிந்து கொண்டாள்.
இத்தனை நாட்களாக உயிர்ப்பே இல்லாமல் 
இருந்த உடலில் திடீரென்று சக்தி பாய்ந்தது போல
உணர்ந்தாள்.

18 வயதில் இருந்த சிலிர்ப்பு,உத்சாகம்,மன ஈர்ப்பு
இவை எல்லாம் இப்போது இல்லை.
எல்லாவித இடர்களையும் கவலைகளையும்
கடந்த பிறகு வரும் அமைதியே இருந்தது.
இருந்தாலும் ஒருவரை ஒருவர் காணும் போது
மனதில் பொங்கிய ஆனந்தம் முகங்களிலும் தெறித்தது.

அந்த ஒரு கணத்தில் அவர்களது எதிர்காலம் முடிவானது.

ஜானியின் குடும்பத்தைச் சந்தித்த நீலா,

சஞ்சலம் இல்லாமல் அவனுடன் சாந்தோமிலிருந்த
சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று  திருமணத்துக்கான
லைசென்ஸ் வாங்கிக் கொண்டாள்.

இரண்டு நாட்களில் வீடியோ கான்ஃபரன்சில் மகளும் மகனும் கலந்து கொள்ள
ஜானகிராமன் நீலா திருமண பந்தத்தில் இணைந்தனர்.
மற்றவர்களின் சம்மதம் ,மறுப்பு என்று எதையும் யோசிக்கவில்லை.
அந்த நிலையைத் தாண்டிய முதுனிலையை அடைந்து விட்டதால்

முழு சுதந்திரத்துடன் கைகள் கோர்த்து,
எதிர்காலத்தில் காலடி வைத்தனர்.
என்றும் மகிழ்வுடன் சேர்ந்திருக்க நம் வாழ்த்துகள்.
இன்னும் நிறைய உணர்வுகளை எழுதி இருக்கலாம்.
ஆனால் எனக்குச் சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை.:))))))))))))))))))))))))))))))))))))))))
++++++++++++++++++++++++++++++++++++++++++++

மேலும் நான் பேச அங்கே ஒரு செய்தியும் இல்லை!!!!

இந்தக் கதை என் அன்புக் கணவர் சிங்க்கத்துக்கு சமர்ப்பணம்







No comments: