Blog Archive

Wednesday, January 07, 2015

மாரிமலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

ப்ரஹ்லாத வரதன் கிருஷ்ணசிம்ஹம்
சிங்கத்துக்குக் காத்திருக்கும் பாவைகோதை
அறிவுற்றுத் தீவிழித்து
சீரிய சிங்காதனத்திருந்து
23 ஆம் பாசுரம்  சிங்கப்  பெருமானுக்கு
***************************************************************

 மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
*******************************************************
கோளரி  மாதவன் கோவிந்தன் என்றொரு  காளை புகுதக் கனாக் கண்ட
கோதா  தேவியின்  பாதகமலங்களில் சரண்.

இந்தப் பாடல்  பிரகலாதன் என்னும் சின்னஞ்சிறு குழந்தையைக் காக்க வந்த சிங்கப் பெருமாளின் பெருமை பாடி  யாதவசிம்ஹமாகக் கண்ணனை
எழுப்புகிறாள்  கோதை.

ஸ்ரீரங்கத்தில்   உறங்கும் ரத்தினம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சயனித்திருக்கும்
ஆல மரத்து இலையில் துயில் கண்ணனாக வடபத்ர  சாயி எல்லோரையும் மனம் நிரம்பி கண்கள் பொங்கப் பொங்கக்  கண்டு  நரசிங்கத்தைப்
பாடுகிறாள்.மார்கழி மாதம் குளிர் உறைக்கின்ற மாதம்.
மழை ஓய்ந்த மாதம்.
வசந்தம் வரப் போகிறது தைமகள்   பிறக்கப் போகிறாள்.
குளிரில்  உறங்கிக் கொண்டிருந்த குகை வாழ்
சிங்கம் கண்விழிக்கிறது.

அதுவும் எந்த மாதிரி சிங்கம் அது.!!  அழகிய சிங்கம்.
எங்கும் உளன் கண்ணன் என்று ஓர் ஐந்துவயது பாலகன்
கூப்பிட்ட   குரலுக்கு அபயம் கொடுத்த  சிங்கம்.
அஹோபிலம் என்ற குகையில் இன்றும்  ஆனந்தம் தரும் சிங்கம். நாடிவருகிறவர்களின்  மனம் நிறைய அருள் பாலிப்பவன்.

அந்தச் சிங்கமாகக் கண்ணனை வர்ணிக்கிறாள்  ஆண்டாள்.
கண்ணா நீ எழுந்துவரவேண்டும்  எப்படித் தெரியுமா. மழைக்காலத்துக்கு மலைக் குகையில் உறங்கிய  சிங்கம், பக்தர்களின் குரல் கேட்டுச் சட்டென்று எழுந்து,உடலெல்லாம் சிலிர்க்கச் சோம்பல் முறித்து, தலையில் இருக்கும் வேரி மயிர் பொங்க எழுந்து நிற்கிறதாம்.

யோகநித்திரை முடியும்போது உடலில் பாயும் புது இரத்தம்  அந்தச் சிங்கத்தைக் கர்ஜிக்க வைக்கிறது. வேட்டையாட வெளியே வரவேண்டுமே. அந்தக் கர்ஜனை கேட்டுப் பாபம் செய்ய நினைப்போரைக் கூட விரட்டிவிடுகிறதாம்..
அந்தச் சிங்கம் நடந்து வரும் அழகோ!கண்கொள்ளாகாட்சி. குகை வாயிலில் நின்று சுற்றுமுற்றும் பார்க்கிறது.பாதமோ பெரியது வலியது.
ஆனாலும் பூமாதேவிக்கு வலிக்காமல் மெத்து மெத்தென்று  வருகிறது வீரநடையாக.
நினைக்கவே  மெய்சிலிர்க்கிறது.
கோதை வேண்டுவதும் இதைத்தான். அந்தசிங்கம் அன்று நடந்தது. இன்று நீ கண்ணா, கட்டிலில் இருந்து எழுந்து கம்பீரமாக சிங்கநடை
நடந்து ராஜனாக  வந்து உன் சீரிய சிங்காதனத்தில் வந்து அமர்வாய்.
கண்ணன் மனம் உருகிவிட்டதாம். இந்தப் பெண்களும் கோதையும் தான் எத்தனை நாட்களாகக் காத்திருக்கிறார்கள். இனித் தாமதிக்கக் கூடாது என்று வீர நடை ராஜநடை சிம்ஹ கதி என்று  சபைக்கு வந்துவிடுகிறான். அவன் வரும்கோலத்துக்கு மங்கலம் சொல்லி,எம்  வார்த்தைகளைக் கேட்பாய் ,எங்களுக்கு வேண்டும்   விஷயங்களை அறிவாய்,கண்ணா என்று அவனிடம் உரைக்கிறாள்  நம் கோதை.
தாயே கோதா ஸ்ரீ!!அத்தனை அவதாரங்களையும் சொல்லி மகிழ்விக்கும் தாயே !!!உனக்குக் கோடி கோடி நமஸ்காரங்கள்.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அனைத்து சிங்கக்களுக்கும் நன்றி 

6 comments:

துளசி கோபால் said...

// மழைக்காலத்துக்கு மலைக் குகையில் உறங்கிய சிங்கம், பக்தர்களின் குரல் கேட்டுச் சட்டென்று எழுந்து,உடலெல்லாம் சிலிர்க்கச் சோம்பல் முறித்து, தலையில் இருக்கும் வேரி மயிர் பொங்க எழுந்து நிற்கிறதாம்.//

ஹைய்யோ!!!! என்னா சிங்கம்ப்பா!!!!!!

சூப்பர்படம். பார்க்கும்போதே....

சிலிர்த்துப்போச்சு உடம்பு.

ராமலக்ஷ்மி said...

/பிரகலாதன் என்னும் சின்னஞ்சிறு குழந்தையைக் காக்க வந்த சிங்கப் பெருமாளின் பெருமை பாடி யாதவசிம்ஹமாகக் கண்ணனை
எழுப்புகிறாள் கோதை./

மிக அழகான விளக்கம். சிலிர்த்து நிற்கிற சிங்கம் கம்பீரம்.

கோமதி அரசு said...

தாயே கோதா ஸ்ரீ!!அத்தனை அவதாரங்களையும் சொல்லி மகிழ்விக்கும் தாயே !!!உனக்குக் கோடி கோடி நமஸ்காரங்கள்.//

கோதை நாச்சியாருக்கும், வல்லி நாச்சியாருக்கும் கோடி கோடி நமஸ்காரங்கள்.

RAMA RAVI (RAMVI) said...

ஆம் வல்லி மேடம், பக்கதருக்காக ஓடி வருபவர் அந்த பிரகலாதனுக்காக ஓடிவந்த சிங்கப்பெருமாள்தான்.விளக்கம் மிக அருமை
படங்களை பார்த்ததும் சிலிர்த்தது.

Ranjani Narayanan said...

கோதையின் வேண்டுதலுக்கு இரங்கி சிம்மமாக நாளை நடந்து வரப் போகிறான் கண்ணன். அதையும் எழுதுங்கள், வல்லி. உங்கள் எழுத்தில் இன்று யாதவ சிம்மத்தை தரிசித்தேன்.

Unknown said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வல்லியம்மா !!!!
சிம்ஹனின் படம் அருமை !!!
உங்கள் முகப்பு படமும் வெகு அழகு . நீங்கள் எடுத்ததா?. கண்ணுக்கு குளிர்ச்சி .