Thursday, July 15, 2010
அம்பிக்கும் அதே போல புரியாமல்விழிப்பவர்களுக்கும்:)
நான் கேள்விப்பட்ட சம்பவத்தை ஒரு கதையாக
பதிவிட வேண்டும் என்று ஆரம்பித்த தொடர், அனுமார் வால் போல நீண்டது போதாது என்று,:)
வல்லிமா எதோ பதிவு போட்டு இருக்காங்க பார்க்கலாம் வந்தவங்களுக்கு
முன்னும் புரியவில்லை பின்னும் புரியவில்லை.
அதனால இது ஒரு விளக்க(மொக்கை)பதிவாகப் போட வேண்டி வந்துவிட்டது.
மக்களே உங்க எல்லோருக்கும் தெரிஞ்சக்க ஒரு விஷயம், நான் கணினி விஷயத்தில் அத்தனை போறாது என்பது.
அதில அப்பப்போ நானும் குழம்பி ,தெரிஞ்சவங்களை, குழப்புவது ஆறு மாசத்துக்கு ஒரு தடவையாவது நடக்கும்.
ஜனவரி முதல் தேதி, பயங்கர
களையபரம் செய்து துளசி கோபால் அவர்களையும் அந்த
சைடில மாட்டிவிட்டு பிறகு தெளிவானது, உலகம்,அதாவது பதிவுலகத்தில் பாதி பேருக்குத் தெரிஞ்ச விஷயம்.
இங்க அதுக்கெல்லாம் சுட்டி கொடுக்க முடியாது.
ஏன்னு கேட்டா சிம்பிள்.
தெரியாது.
ஆனானப் பட்டவங்க சொல்லித் தர முயற்சி செய்தும் நான் கத்துக்காததுன்னால கைவிடப்பட்ட கதை அது.
இப்ப ரீஜண்ட்டா ஒரு மேஜர் குழப்பம் வந்தது.
அதாவது பதிவின் பெயர் தெரியும்.
ஆனால் பதிவு தெரியாது.:((((
படங்கள் மட்டும் தெரியும். கதை காணாமல் போயிருக்கும்.
சரி ஓவர் புலம்பல் ஆயாச்சு.
இன்னிக்கு நடந்த கதைக்கு வரலாம். மூன்று நாட்களாக ஒரு தொடர் எழுதிக் கொண்டு வருகிறேன்.
அதுவோ முடிவேனா என்று தெரியாமல் ஓடுகிறது.
நமக்கோ பிரசி ((precise) ரைட்டிங் பள்ளிநாட்களிலேயே
வராது.
இதுல பாதில இந்தக் கதையைக் கேட்டுட்டு
''அம்பி'' அதுதான் (நம்ம தக்குடுவோட அண்ணா) ரொம்ப நாளுக்கப்புறம் இங்க வந்துட்டு சீதை யாரு ராமன் யாரு, ராவணன் வந்துட்டானான்னு கேட்கிறார்.
ஆகக் கூடி மக்களே தெரியாமல் ஒரு கோபத்தில் கதை எழுத வந்துட்டேன்.
இந்தப் பதிவுக்கு முன்னால இருக்கற மூணு பதிவுகளும் ஒரு கதையின் மூன்று பாகங்கள்.
படிக்க முடிந்தவர்கள் கஷ்டப்பட்டு படித்துவிடுங்கள்.:)
அடுத்த பதிவில முடிச்சுடறேன் .
அம்பிக்காக ...
பாமா....ஒரு பெண்
ராதா ..அவளுடைய நாத்தனார் .
இவர்களுக்கிடையே நடக்கும் கதை.
உபசாரம், விருந்து இரண்டு வார்த்தைகளையும் மறந்த இரு தம்பதியினரின்
கதை.
ஓகேயா.
எல்லோரும் வாழ வேண்டும்.
தொடரின்...3 ஆம் பாகம்
ராதாவும் பாமாவும் பேச ஆரம்பிப்பதைப் பார்த்து,சின்னப் பொண்ணு பெட்டிகளைத் தனிதனி அறைகளில் கொண்டு வைத்தாள். படுக்கை விரிப்புகளை மாற்றி, மீண்டும் அறைகளைச் சுத்தம் செய்தாள்.'அம்மா வெந்நீர் எல்லாம் ரெடி. பிள்ளைங்க குளிக்கடுமா'' என்கிற கேள்வியோடு வந்தவள்,
பாமாவின் கண்களில் கண்ணீரைக் கண்டதும்'
அந்த இடத்தைவிட்டு அகன்றாள்.
பாமாவின் கைகளைப் பிடித்த வண்ணம் காவிரியைப் பார்த்தபடி இருந்த வராண்டாவுக்கு வந்தாள் ராதா,
'ஏன் இந்த மாதிரி ஆச்சு பாமா,உன் பசங்க இருவரும் மிக நல்ல பிள்ளைகளாகத்தான்
எனக்குத் தெரியும்.
பதினைந்து வருஷம் இருக்குமா திருமணமாகி.? அதற்குள் நம் வீட்டில் இத்தனை மாற்றமா.
என்னிடம் கூடச் சொல்லவில்லையே.''
எவ்வளவு ஒற்றுமையாக நாம் இருந்தோம். இப்படி ஆவதற்கு வந்த பெண்களா காரணம்?''
என்ன சொல்கிறாய்.''அடுக்கிக் கொண்டே போனாள் ராதா.
பாட்டி பசிக்கிறது,நாம போலாமா என்ற வண்ணம் வந்த பட்டுவைப் பார்த்ததும்,தன்னைச் சமாளித்துக் கொண்ட
பாமா,''பாரேன் உங்களை இப்படியே நிக்க வச்சிட்டேனே,
ஒரு நிமிஷம்..''
என்றவாறு அந்த வீட்டின் சமையலறைக்குப் போய்ப் பாலைச் சுட வைத்து ,
காஃபியும்,
சின்னப் பொண்ணுவின் உதவியோடு நிமிடங்களில் அனைவருக்கும்
ப்ரெட் சாண்ட்விச்சும் தயார் செய்துவிட்டாள் பாமா.
குளித்துவந்த கோவிந்தன், ''வாய்க்கு வாய், கைக்கு கை,''
''தான்க் யூ பாமா''
பசி வந்தாச்சு எல்லாருக்கும் ''என்றவாறு சாப்பாட்டு மேஜையருகில் வந்தார்.
கூடவே வந்த குழந்தைகளும்,கண்ணன்,க்றிஸ்டினா,ஸ்ரீராம்,கிருஷ்ணாவும்
உடனே சாப்பிட ஆரம்பித்தனர்.
பட்டம்மா, நீயும் எடுத்துக்கோடா என்று குழந்தையை விளித்தாள் ராதா.
வேண்டாம் அத்தை நான் வீட்டுக்குப் போய்த்தான் சாப்பிடணும். இல்லாட்ட அம்மா
கோவிச்சுப்பார்'' என்ற குழந்தையை,
ஒரு நிமிடம் பார்த்துவிட்டுச் சரி இந்த பிஸ்கட்டாவது எடுத்துக்கோ என்றவாறு கைப்பையில் வைத்திருந்த
பிஸ்கட்டைக் கொடுத்ததும் பட்டு அதை மறுக்காமல் சாப்பிட்டாள்.
villas apartments
சாப்பிட்டு முடித்தவுடன் குழந்தைகள் குதூகலமாகக் காரை நோக்கி நடந்தனர்.
ஸ்ரீரங்கத்து வீதிகளைக் கடந்து,கொஞ்சம் காவேரிக் கரையோரம் நடந்துவிட்டு மீண்டும்
மேற்கு உத்தர வீதியில் இருந்த தன் பிறந்த வீட்டுச் சிந்தனைகளோடு
ராதாவும்,மேற்கொண்டு என்ன செய்வது என்ற யோசனையோடு பாமாவும்
அந்தப் பெரியவீட்டை வந்து அடைந்தனர்.
பெரிய முகப்போடு அழிகள் போட்ட வராந்தா,இரு பக்கத் திண்ணைகளோடு அழகிய ஓவியமாகக்
காட்சி அளித்த தன் பிறந்த வீட்டைப் பார்த்ததும் ராதாவுக்கு மீண்டும் தொண்டையில் கரகரப்பு.
இரு வண்டிகளும் விருந்தாளிகளும் பெரியம்மாவும் இறங்குவதைக் கண்ட ரங்கநாதன்,அந்த வீட்டுக் காரியக்காரர்
நீண்ட பெரிய கதவுகளைத் திறந்தார்.
வாங்க பசங்களா பாட்டிதாத்தா வீட்டைப் பார்க்கலாம் என்றபடி கோவிந்தன் உள்ளே நுழைந்தார்.
சத்தம் கேட்காததால் திரும்பிப் பார்த்தார்.நிகிலும் நிதினும் அந்தப் பெரிய வேலைப்பாடுகள் கொண்ட கதவுகளையே பார்த்தவண்ணம் இருந்தனர்.
அவர்களை ரசிக்க விட்டு விட்டு குளிர்ந்த பெரிய கூடத்தில் நுழைந்தனர் மற்றவர்கள்.
எல்லோரும் வாழ வேண்டும்.
ஒரு எண்பதாண்டு சரித்திரம் கொண்ட வீடு அது.கூடம் அதைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் நடமாடும் இடம். கூடத்தின் நடுவே நல்ல ரோஸ்வுட் ஊஞ்சல்.
பளபளக்கும் பித்தளைச் சங்கிலிகள்.
கூடத்திலிருந்து பிரியும் அறைக்கதவுகள். கதவுகளுக்கு மறைக்காமல் தொங்கும் திரைச்சீலைகள்.
கூடத்தின் கடைசியில் ஒரு வாயில் ,அங்கு நுழைந்தால் பக்கத்துக்கு இரண்டு வாசல். ஒன்று ஸ்டோர் ரூம், இன்னொன்று சமையலறைக்குச் செல்லும்.
அந்தக் காலத்துத் தொட்டி ஒரு சுவற்றோடு ஒட்டிக் கட்டப் பட்டிருக்கும். கம்பிகள் இல்லாத ஜன்னல் வழியாகக் கிணற்றுத் தண்ணீர் இறைத்துக் கொட்டுவார்கள்.
ராதா பார்த்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்து நாணிப்பாட்டி வந்தார். ஒரு எண்பது இருக்குமா மாமிக்கு!
ராதாவுக்கு இன்னோரு வியப்பு. இவர்களுக்கு எல்லாம் உழைப்பைத் தவிர வெறொன்றும் தெரியாதா' என்று நினைத்தவாறு,
அந்த மாமியின் அருகில் சென்றாள்.
ராதாக் குட்டி எத்தனை நாளாச்ச்சு பார்த்து,எப்படிடா கண்ணு இருக்கே.
உனக்குப் பிடிச்சதெல்லாம் பண்ணி வச்சிருக்கேன் வா வா. ''என்று உச்சி மோந்தார் அந்த மூதாட்டி.
பாமாவைப் பார்த்தாள் ராதா. ரிடையராகலியா மாமி? எலும்பும் தோலுமா இருக்காளே
என்றாள்.
உனக்காக வந்திருக்கிறார். இப்போ சமையல் செய்வது அவருடைய மருமகள் தான்
என்று புன்னகை காட்டினாள் பாமா. அப்புறம்''எங்க உன் பையன்களும் மாட்டுப் பொண்களும்
என்று சுற்றுமுற்றும் கண்ணைச் செலுத்தினாள் ராதா.
''அத்தைப் பாட்டி ! பெரியப்பா பெரியம்மா ரெண்டு பேரும் காலேஜில வேலை செய்கிறா.
''அம்மாவும் அப்பாவும் சி.ஏ வகுப்புகள் எடுக்கிறார்கள் அடுத்த தெருவில''
என்று சொல்லிவிட்டுத் தன் சிநேகிதர்களை அழைத்துக் கொண்டு
புழக்கடைத் தோட்டத்துக்கு ஓடினாள் பட்டு.
''அண்ணா எங்க பாமா? ஏன் வரலை எங்களைப் பார்க்க என்றபடி அண்ணா, என்ன உனக்கும் வயசாயிடுத்தா
இங்க வா''என்று கூவினாள்.
ராதா அண்ணாவால வர முடியாதும்மா. போன வாரம்தான் பக்கவாதம் மாதிரி வந்துட்டது. வயல் பக்கம் போனவர் வெய்யிலில் ரொம்ப நேரம் நின்றிருந்திருக்கிறார்.
இரத்த அழுத்தம் அதிகமாகி இப்படி ஆகிவிட்டது.
இப்போ பரவாயில்லை.
ப்ரைவேட் நர்ஸ் போட்டு இருக்கு.
அவர் குளித்து சுத்தமானதும் நாம் வாசல் அறைக்குப் போகலாம்,''என்ற தன் அண்ணியைக் கலக்கத்துடன் பார்த்தாள் ராதா.
Monday, July 12, 2010
தொடரும்..2 ஆம் பகுதி
எல்லோரும் வாழ வேண்டும்.
பட்டு என்கிற பத்மினிக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. எட்டு வயதுக்கு உண்டான கூர்ந்து ஆராயும் தன்மை,,வியப்பு எல்லாம் அவளைக் கவ்விக் கொண்டது.அடுத்தாற்போல் இறங்கின இன்னோரு ஆண்ட்டி,அன்கிள் என்று உலகம் விரிந்து கொண்டே போனது.
ராதா அத்தையின் மகள் கிருஷ்ணா,
''கிருஷ்ணாவா'' என்று இன்னும் ஆச்சரியப்பட்டாள். பொண்களுக்குக் கிருஷ்ணான்னு பேரு வைப்பாளா பாட்டி, என்று தன் பாட்டியின் கைகளை உலுக்கினாள்.
வைப்பாம்மா. இந்த ராதா அத்தையின் மாமா பேரு என்ன தெரியுமா,கோவிந்தன்!'' என்று
சிரித்தாள்.
ஓஓஒ!!இன்னும் அகலமாகக் கண்ணும் வாயும் விரிந்தன பட்டுவுக்கு.
ராதா அத்தையின் பேரன்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
இரண்டு பெயர்கள் ஒவ்வொருத்தருக்கும்.
ஒரு பையன் 10 வயது இருக்கும் அவன் கைகளை நீட்டி'' ஹை ,ஐ யாம் நிதின் நிகொலஸ் கண்ணன்''
என்றான்.அடுத்த பையன் ''ஹை ஐ யாம் நிகில் நிகோலஸ் கண்ணன்'' என்றான். அவனுக்கு எட்டு வயது இருக்கும்.
மூணு பேரா உனக்கு என்று இருவரையும் கேட்டவள்,அவர்களுக்குத் தமிழ் தெரியுமோ என்ற கேள்வியோடு பாட்டியைப் பார்த்தாள்.
வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிக்கலாம் வா என்று அனைவரும் ,
பாமா வாடகைக்கு எடுத்திருந்த இரண்டு பெரிய வண்டிகளில் ஸ்ரீரங்கம் நோக்கி விரைந்தனர்.
ஸ்ரீரங்கம் கோபுரம் கண்ணில் பட்டதும் கைகளை உயர்த்தி வணங்கிக் கொண்டாள், ராதா. அவள் செய்வதையே அவள் மருமகள் க்றிஸ்டினாவும், பேரன்களும் செய்தனர்.
நம் பக்க பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறாள் போலிருக்கிறது என்று அன்போடு தன் நாத்தனாரை நோக்கிய பாமா, தன் பேத்தி வந்திருக்கும் பையன்களோடு சரிசமமாக ஆங்கிலத்தில் வளவளப்பதைப் பார்த்துப் பூரித்தாள்.
எத்தனை நாட்களாச்சு இந்தக் கலகலப்பைக் கண்டு என்று மனம் நிறைந்தது.
ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரி தோட்டம் அருகில் வந்திருக்கும் புதுக் குடியிருப்பு வளாகத்தில் வண்டி நுழைவதைப் பார்த்து
கேள்விக் குறியோடு பாமாவைப் பார்த்தாள் ராதா. நம் வீட்டுக்குப் போகலையாப்பா? இங்க யரு இருக்கிறார்கள் என்றதும்,
இங்க ஒரு அபார்ட்மெண்ட் ஒரு மாதத்துக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறேன் ராதா, உங்கள் அனைவருக்கும் இந்த இடம் சௌகர்யமாக இருக்கும். ஏசி,கொசு நெட் எல்லாம் போட்டிருக்கிறது.
தண்ணீரும் நிறைய வாங்கி வைத்திருக்கிறேன்.
குளியல் எல்லாம் முடித்துக் கொண்டு சாப்பிட நம் வீட்டுக்கு வந்துவிடலாம் என்றாள்.
நம்ம பாஷா ட்ராவல்ஸ் வண்டிதான். ட்ரைவர் ரொம்ப மரியாதையாக இருப்பார். கார் இங்கயே இருக்கட்டும்''
சரியா என்றபடி அவர்களை வீட்டை நோக்கி அழைத்துச் சென்றாள் பாமா.
ராதா ஒன்றும் சொல்லவில்லை.
படு நேர்த்தியாகக் கட்டப் பட்டிருந்த அந்தக் குடியிருப்பு இன்னும் வியப்பாக இருந்தது. நல்ல பாதுகாப்போடு
விசாலமான இடமாக இருந்தது. லிஃப்டில் பெட்டிகளை அடுக்கிக் கொண்டு முன்னே சென்று கதவைத் திறந்து வைத்து அவர்களுக்காகக் காத்திருந்தாள் பாமா.
இன்னும் அகலாத சிந்தனையோடு ராதாவும்,அவரவர் எண்ணங்களோடு மற்றவர்களும்
அந்த அபார்ட்மெண்டின் உள்ளே நுழைந்தார்கள். அங்கே காத்திருந்த ''சின்னப் பொண்ணு''வைப் பார்த்ததும் அவள் முகம்
மலர்ந்தது. ஏய் எப்படி இருக்கே. இன்னும் நம் வீட்டில் தான் வேலை செய்கிறாயா. உனக்குக் கல்யாணம் ஆகிக் குழந்தைகள் லாம் இருக்கா என்ற வண்ணம்,அவளை அப்படியே அணைத்துக் கொண்டாள்.
அவள் அணைப்பில் கூச்சத்தோடு நெளிந்த சின்னப் பொண்ணூ ,நீ நல்லா இருக்கியாப்பா,இதில்லாம் உன் பேரப் பசங்களா, வெள்ளைக்காரத் தொரை மாதிரி இருக்குங்களே'' என்றபடி அவர்களை நெருங்கி,''கண்ணூங்களா, நானும் உங்களுக்கு ஒரு ஆயா மாதிரித்தான்'' என்று அன்புடன் சிரித்தாள்.

அன்புடையார் என்றும் ,பகுதி --1
ரயில் வருவதற்கான அறிகுறிகளாக ப்ளாட்ஃபாரத்தில் பரபரப்பு அதிகமானது.
திருச்சி ஜங்ஷனின் காலை பரபரப்பு பாமாவுக்கு மிகவும் பிடிக்கும்.
சென்னையிலிருந்து வரும் மலைக்கோட்டை எக்ஸ்ப்ரசின் மீது ஒரு கண்ணும்,
கையில் பிடித்திருக்கும் பேத்தியின் மேல் ஒரு கண்ணுமாக,வெகு ஆண்டுகளுக்கப்புறம் வரும்
தன் நாத்தனாரையும் அவர் கணவர்,பையன்களையும் வரவேற்க ஆயத்தமானாள்.
இந்த அத்தைப் பாட்டி உன்னைவிடப் பெரியவரா'என்னும் பேத்தியின் கேள்விக்கு ஆம் என்று தலையை ஆட்டிவிட்டுப்
பெட்டிகளில் தெரிந்த முகத்தைத் தேடினாள்.
பளிச்சென்று சிரித்த ராதாவின் முகத்தைப் பார்த்ததும்
பாமாவுக்கும் உற்சாகம் பிடித்துக் கொண்டது.
'ஹேய்! என்று பழைய சிநேகிதிகளைப் போல இருவரும் கைகளைப் பிடித்துக்
கொள்வதைப் பார்த்துப் பேத்தி
பட்டு, தன் விழிகளை விரித்தாள்.
அத்தைன்னு சொன்னியே பாட்டி, இது உன் ஃப்ரண்டா?
ஆமாம் ஃப்ரண்டும், அத்தையும் தான்:)
என்று பட்டுவை ராதாவுக்கு அறிமுகப் படுத்தினாள்.
இத்தனை கார்த்தாலைல எழுந்து உன்னோட வந்துடுத்தா,
அட பட்டுக் குட்டி, என்று தன்னை அணைக்க வரும் இந்தப் புதிய உறவை மிகவும் பிடித்துவிட்டது
பட்டுவுக்கு.!
அத்தை நீ இங்கயே இருக்கப் போறியா என்று கேட்கும் குழந்தையைப் பார்த்து
சிரித்த ராதா, உம்மாச்சி சேவிச்சுட்டுப் போயிடுவேண்டா செல்லம்'
என்றாள்.
பக்கத்தில் திரும்பி வயதான தன் கணவருக்கு கைலாகு கொடுத்தாள்.
பின்னால் வரும் மகன் குடும்பதையும்,மகள் குடும்பத்தையும்
கவனமாக இறங்குமாறு பார்த்துக் கொண்டாள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாமா' இன்னும் உன் பால்யத்திலியே இருக்கியா
ராதா,அவர்களுக்கு வயதாகி விட்டது.
அம்மாப் பறவை மாதிரி கவனிக்கிறீயே என்று கேலி செய்தாள்.
புன்னகையோடு கேட்டுக் கொண்ட ராதா,
''இதுகள் வெளியூர் போய் இருபது வருஷமாச்சு
பாமா, இப்பத்தான் நம்ம ஊருக்கு வருகிறார்கள். ஆரம்பத்திலியே
அவர்களுக்கு ஜாக்கிரதை செய்து விட்டால் சமாளித்துக் கொள்வார்கள்.''
என்றபடி மகன் கண்ணனையும்,மாப்பிள்ளை ஸ்ரீராமையும் பாமாவுக்கு அறிமுகம் செய்தாள்.
ஹலோ பாமா மாமி! நீங்க அப்படியே தான் இருக்கிறீர்கள் என்று
புன்னைகையோடு அணுகும் மருமகனை அன்போடு பார்த்தாள் பாமா.
நீயும் அப்படியே தான் இருக்கேன்னு நான் சொல்ல மாட்டேன் என்று
அவன் தலை முடி,தொப்பை என்று கண்ணோட்டம் விட்டு சிரித்தாள்.
என்ன ஆச்சு உன்னோட எக்ஸர்சைஸ் ரொடீன் எல்லாம்,
என்றபடி அவன் மனைவி க்ரிஸ்டினாவையும் வரவேற்றாள்.
அவர்களின் குழந்தைகளும் பட்டுவைச் சுற்றிக் கொண்டார்கள். சமவயதுடைய
அவர்களின் ,பழுப்பு நிறத்தலைமுடியை, நீல நிறக் கண்களை
ஆச்சரியத்தோடு பார்த்தாள் பட்டு.
எல்லோரும் வாழ வேண்டும்.
Thursday, July 08, 2010
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
சமீபத்தில் ஒரு திருமணம், ஒரு புதுமனை புகு விழா, ஒரு பிறந்தநாள் அறுபதாவது பிறந்த நாள் என்று வரிசையாக விழாக்களில் கலந்து கொள்ளும் அனுபவம் கிடைத்தது. மகிழ்ச்சி தான் எல்லா இடங்களிலும். அதில் அந்தப் புதுமனை புகு விழாதான் என்னை மிகவும் ஈர்த்தது. ஆறு சகோதர சகோதரிகளைக் கொண்ட குடும்பம். தந்தை தாங்கள் வாழ்ந்த பழைய வீட்டை விற்று விட்டு அபார்ட்மெண்ட்களாகக் கட்டிக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டார்.புத்திசாலித் தந்தை .தனக்கும் அதில் ஒரு அபார்ட்மெண்டை வைத்துக் கொண்டார்.
வெகு விமரிசையாக நடந்த அந்த விழாவில் அவருடன் தனியாகப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நான்கு கிரௌண்டு நிலம்.அதில் பழைய வீடாக இருந்து அத்தனை குழந்தைகளும் வளர்ந்து, தண்ணீர்,பணம்,உடல் நலம் கெடுதல் அத்தனையையும் அந்த வீடு பார்த்திருக்கிறது அதே போல மூன்று சகோதரிகள் மூன்று சகோதரர்கள் வளர்ந்து திருமணம் செய்து அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்து தனித்தனியே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
பெரியவருக்கே சென்ற வருடம் எண்பது வயது பூர்த்தியாகி அந்த நிகழ்ச்சிக்கும் நாங்கள் சென்றிருந்தோம். சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையே இருந்த பிணைப்பைக் கண்டு அசந்து போனேன். மகன்களும் அவர்களின் மனைவிகளும் மகள்களும் அவர்களின் கணவர்களும் கண் படும் அளவுக்கு அத்தனை ஒற்றுமையாக அந்த விழாவை இரண்டு நாட்களாக ஒரு சிறு சுளிப்புக் கூட காட்டாமல் துளிக் கூட அவசரம் காண்பிக்காமல் சாஸ்திர சம்பந்த விசேஷங்கள் நிறைவேறின.
ஒரு பைபாஸ் அறுவைசிகித்சையைத் தாண்டி வந்திருக்கும் அந்தப் பெரியவரின் கண்டிப்பும்,கனிவும் எப்பவுமே பிரசித்தி.
அவர் மனைவியோ கேட்கவே வேண்டாம். அவர் சொல்லைத் தாண்டி ஒன்றும் செய்ய மாட்டார்.அவர்கள் இருவரையும் பார்க்கையில் எனக்கு எப்பவுமே படிக்காத மேதை என்ற பழையபடத்தில் வரும் ரங்காராவும் கண்ணாம்பாவும் தான் நினைவுக்கு வருவார்கள்:)
அவருக்கு ஏற்ற உடல் பருமனும் முகவிலாசமும் , சிரிக்கும் கண்களும் வெகு பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள். பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும். இருவரும் ஒருவருக்கொருவர் பார்வையிலியே தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திவிடுவார்கள்.
அவர் தோற்றம் ஆஜானுபாகுவாகத் தெரிந்தாலும் இந்த அம்மா பக்கத்தில் இருக்கும் போது அவ்வளவு பருமன் தெரியாது. நான் அவர்களை மிஸ்டர் அண்ட் மிசஸ் சாண்டா என்று அழைப்பேன் .
எங்க குடும்பத்திற்கும் அவங்களுக்கும் நல்ல உறவு .கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள்.
இப்போது இந்த விழாவுக்கு வருவோம். நான் அவர் அருகில் உட்கார்ந்து,
''என்ன மாமா,மீண்டும் எல்லாரும் ஒன்று சேரப் போகிறீர்களா.
இன்னும் நெருக்கம் அதிகமாகும். பேரன்கள் பேத்திகளுக்கும் தாத்தா பாட்டியோட இருக்கும்
சந்தர்ப்பம் கூடுகிறது 'என்றேன்.
அவர் ஆமாம்மா,ம்மீண்டும் ஒன்று சேரச் சந்தர்ப்பம்.
வருவதையும்,வாடகைக்கு விடுவதையும் அவர்களிடம் விட்டு விட்டேன்.
சுதந்திரமாக இருக்கப் பழகி விட்டார்கள்.
நாங்களும் அப்படியே எங்கள் வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்ற மாதிரி
மாற்றி அமைத்துக் கொண்டோம்.
நான் இன்னும் ஆரோக்கியமாகத் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறேன்.
அவளுக்கும் ஒன்றும் குறைவில்லை.
இதே போல வாழ்க்கை நடக்கும் வரை கவலை இல்லை.
பிள்ளைகளின் துணை தேவை என்பது பல வேளைகளில் ஏற்படக் கூடும்.
அப்போது அவர்களின் உதவி கிடைத்தால் சுகம்தான்.
இருபக்கமும் சுதந்திரமும் வேண்டும். தொந்தரவும் இருக்கக் கூடாது.
பெரியவனுக்கே ஐம்பத்திரண்டு ஆகப் போகிறது.
அவன் குழந்தைகளும் வளர்ந்து பெரிய பேத்திக்குக் கல்யாணவயசு வந்தாச்சு!!
அதனால் நான் ரொம்ப நிதானமாகத் தான் இந்தக் கட்டிட வேலைகளைச் செய்தேன்.
அவரவர் இஷ்டப்படி செய்யட்டும் என்று முடித்தார்.
உங்களுக்கு அவர்கள் உங்கள் அருகில் இருப்பது நல்லதுதானே மாமா'
என்றேன்.
நல்லதுதான். அவர்களுக்கும் அது நல்லதாக இருக்கணும்.
சட்டென்று அலுப்பு வரச் சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது பார்த்தியா''
என்றார்.
எனக்குச் சட்டென்று காலமான என் தந்தையே அங்கே உட்கார்ந்து பேசுவது போலத் தோன்றியது.
என் கண்கள் கலங்குவதை அவர் கவனித்திருக்க வேண்டும்.
ரொம்ப யோசிக்காதம்மா.
காலத்தை அதன் போக்கில் விட்டு விடு.
போய்ச் சாப்பிட்டுவிட்டு,வெற்றிலை,பாக்கு தாம்பூலம் வாங்கிக் கொண்டு போ.
மாமி உனக்குப் பிடித்த பச்சை வர்ண கல்கத்தா புடவை வாங்கி வைத்திருக்கிறாள்.'
என்று சிரித்த வண்ணம் சொன்னார்.
நான் காஞ்சீபுரம் காட்டன் தானே கேட்டேன் என்று நானும் சிரித்தவண்ணமெ
எழுந்துவிட்டேன்.
அப்பாவையும் அம்மாவையும் நினைத்தபடி அவர்களை நமாஸ்கரித்துவிட்டு
வெளியே வந்தேன்.
எங்களுடைய எண்பது எப்படி இருக்கும்.நல்லபடியே இருக்கும் என்று
நடையைக் கட்டினேன்
எல்லோரும் வாழ வேண்டும்.
Monday, July 05, 2010
சோதனைப் பதிவு
Subscribe to:
Posts (Atom)
ஃபிசியோ தெரபி 15 வருடங்களுக்கு முன்னால்.......
வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கால் புராணம் +++++++++++++++++++++++ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி:( பிசியோ வலியோ தெரபி 199...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...












