Tuesday, May 21, 2019

வேப்பம்பூ ரசம்.....கதை...1

வல்லிசிம்ஹன்

வேப்பம்பூ ரசம்.....கதை.

Vallisimhan
எல்லோரும்  இன்பமாக வாழ  என்  வாழ்த்துகள்.


ஜானம்மா   திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்தார்.
 காலையில் உள் சென்ற காப்பி செரித்துவிட்டு மறு பசி வந்துவிட்டது.

பாட்டீ.... வேப்பம்பூ ரசம் எப்படி வைக்கணும். அம்மா கேட்கிறாங்க
என்று கீச்சிட்டாள் பேத்தி குயிலி.

சிரமப்பட்டு கீழே இறங்கி உள்ளே சென்ற ஜானம்மா, மருமகளிடம் 
ரசம் வைக்கும் விதத்தைச் சொல்லிவிட்டு,
ஏம்மா கொஞ்சம் கஞ்சி கொடுக்கிறாயா தலை சுத்தற மாதிரி
இருக்கு என்று சொன்னதும் முகம் சுளுக்கினாள் மருமகள் செண்பகா.

ஏற்கனவே உங்க பெரிய மகனும் குடும்பமும் வராங்கன்னு
போன் வந்திருக்கு. இந்த ஊரோட வரப் போறாங்களாமே.

கண்டிப்பா சொல்லி வைங்க ஊருக்கு வெளிய தாம்பரம்
 பக்கத்துல வீடு பார்த்துக்கச் சொல்லி.
அடிக்கடி வரப் போக இருக்க வேண்டாம் என்று சிடுசிடுத்தாள்.

அப்படியா, எனக்குத் தெரியாதே எப்ப வராங்க என்றார்.
மதியம் சாப்பாட்டுக்கு வராங்க.
வேப்பம்பூ ரசம் வைக்கப் போறியா. கசப்பாயிடுமே தாயி என்று கெஞ்சினாள்
மாமியார்.
கசக்கட்டும். பாவக்காய் கறியும், வெறும் குழம்பும் இன்னிக்கு செய்தாச்சு.
அவங்களே புரிஞ்சுக்கட்டும் என்று சமையலறைக்குள்
புகுந்து கொண்ட மருமகளைத் திகைப்போடு பார்த்தார்.
தனக்குக் கஞ்சி கிடைக்காது என்று புரிந்து கொண்டு 
வாசல் திண்ணையில் படுத்துக் கொண்டார்.
பேத்தி மங்களா ,பாட்டியிடம் இரண்டு பிஸ்கட்டைக் கையில் வைத்து அழுத்தினாள்.
ரகசியக் குரலில் சாப்பிடு பாட்டி. மோர் கொண்டுவரேன் என்று ஓடிவிட்டாள்.

உள்ளே செண்பகா தன் தாயிடம் உரக்கப் பேசுவது கேட்டது. 
அந்த அம்மாவும்  இல்லாதப் பட்டவங்க கண்ணுல படாம முக்கியமான
பொருளை மறைச்சு வச்சிடு.
கெட்டும் பட்டணம் சேருன்னு வராங்க போல என்று மகளுக்குப்
புத்திமதி சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஜானம்மாவின் பெரிய மகன் கொஞ்சம் அப்பாவி. 
ஏதோ போக்குவரத்துக் கழகத்தில்  சிறிய வேலையில்
இருந்தான். அவனுக்கும் இரண்டு மகன்கள்  பத்து,எட்டு வயதில் இருந்தார்கள்.

மருமகள் வாடாமல்லி, ஜானம்மாவின் சொந்த ஊரான செய்யாறிலிருந்து வந்தவள்.
கிராமப் பழக்க வழக்கங்களோடு கட்டுப் பெட்டியாக இருப்பாள்.
அதுவே செண்பகத்துக்கு இளப்பமாகத் தெரியும்.
சென்னையில்  தண்டையார்பேட்டையில் வளர்ந்தவளுக்கு
பள்ளி இறுதி வரை படிக்க வாய்ப்பு கிடைத்தது.
கணவனுடன் பேசிப் பழகி ,தனக்குப் பிடித்த பொருட்களை
 வாங்கிச் சேமித்து வைத்திருந்தாள். மாமியாரை வீட்டுக்குக் காவல் வைத்துவிட்டு, சினிமா
,உறவினர் வீடு என்று சென்று வர ஒரு ஸ்கூட்டரும் 
வாங்க வைத்திருந்தாள்.
மருமகளின் சாமர்த்தியத்தை மெச்சினாலும்,
தன்னை ஒதுக்கி வைப்பதைப் புரிந்து பல நேரம் வருந்துவார் ஜானம்மா.

பெரியவனுக்கு வருமானம் போதாது. தான் அவனுக்குப் பாரமாக இருக்கக்
கூடாது என்றே சிறியவனுடன்  இருந்தார். தொடரும்.

Monday, May 20, 2019

நீண்ட பயணம்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக   வாழ வேண்டும்.

உலக வாழ்க்கைப் பயணம் 
நீ ஒப்புக்கொண்ட பயணம் 
அது முடியும் பொது தொடரும் 
தொடரும்போது முடியும்.
இது ஒரு  அவசிய நாடகமே.

Wednesday, May 15, 2019

வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக  வாழ வேண்டும்.
 இந்த மாதம் கல்யாண  மாதம்

என் பெற்றோர்  திருமண நாள்
என் முரளியின் மே  14
என் தம்பி ரங்கனின், மே  31
என் நாத்தனார் கல்யாணி ஹேமா இவர்களின் திருமண நாட்கள் மே  23
 எல்லாவற்றையும்  கொண்டாடும் விதமாக
அவர்களுக்குப் பிடித்த பாடல்களை  பதிவிடுகிறேன்.

முரளி வசந்தி தம்பதியருக்கு


தம்பி ரங்கன் வைதேஹிக்கு


என்னால் அவர்களுக்குக்  கொடுக்க முடியும் வான் வழி பரிசு.

Sunday, May 12, 2019

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன்

 அம்மா அப்பா....1988  பாகம் 4.

அம்மாவுக்கு சொல்ல முடியாத பிரச்சினை வந்த போது
அறுவை சிகித்சையால் குணப்படுத்தலாம்
என்று முடிவெடுத்தோம்.
ஸுலப அறுவை தான். மயக்கம்  தெளிந்த பிறகு வந்த
இருமல் தான் மிக்க வலி கொடுத்தது.
அப்பா அம்மா பக்கத்தை விட்டு நகரவே இல்லை.

இரவு படுத்திருந்து விட்டு,என்னை அம்மாவுக்குத் துணை வைத்துவிட்டு,
வீட்டுக்குப் போய்க்
குளித்து சாப்பிட்டு அம்மாவுக்கும் சாப்பாடு கொண்டு வருவார்.
ஒரு நாள் இரவு இருமல் அதிகமாகி நெஞ்சு பக்கமாக வலி.
நானும் ரங்கனும் மட்டும் இருந்தோம்.
அம்மா டாக்டரை அழைக்கச் சொன்னார்.
இது வெறும் இருமல் இல்லை. கொஞ்சம் சீரியஸ் தான்.
டாக்டர் அம்மாவைக் கூப்பிடு.
உடனே பார்க்காவிட்டால் தவறாகி விடும் என்று வற்புறுத்தினார்.
ஸ்டாஃப் நர்ஸிடம் சொல்லி
விழயத்தை விளக்கினேன் .
அவர் கொஞ்சம் அலுப்போடு டாக்டரை அழைக்கப் போனார்.
டாக்டர் வந்ததும் இசிஜி எடுக்கச் சொல்லி,
லேசான மார்படைப்பு
உடனே கவனிக்க வேண்டும்
என்று உடனே இஸபெல் ஹாஸ்பிட்டலில்
சேர்க்கும்படி தொலைபேசியில் ஆம்புலன்ஸ் வரவழைத்து
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த 4000 ரூபாய் ஊசி போடப்பட்டு
ஐசியுவில் அனுமதித்து விட்டார்.
 ஒரு மாறுதலுக்காக வீட்டுக்குப் போயிருந்த அப்பா,தம்பியுடன் வண்டியில் வந்துவிட்டார்.
48 மணி நேர கெடுவுக்குப் பிறகு அம்மா கண் திறந்தார்.
அந்த வருடம் அம்மாவுக்கு 60 வயது பூர்த்தியாகி
இருந்தது.
ஏப்ரில் 3 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப் பட்ட அம்மா 4 வாரம் அங்கே சிகித்சை
எடுத்துக் கொண்டார்.
நடுவில் வந்த என் பிறந்த நாளையும் மறக்கவில்லை.
சைகையினால் என்னை உள்ளே அழைத்து
அப்பாவோடு போய் ரங்காச்சாரியில் நல்ல புடவை வாங்கிக் கொள்.
என்றதும் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

எப்பொழுதும் பெற்ற மக்களின் நினைவுதானா உங்கள் இருவருக்கும்./
நீ நலம் அடைந்த பிறகே புதிது உடுத்துவேன்
என்று உறுதியாகச் சொல்லி விட்டேன்.

அம்மாவும் நலம் பெற்றார்.
அப்பாவின் முகத்தில் தெளிவு பிறந்தது.
எங்கள் குடும்பம் முழுவதும் ஈ ப்ளாக்கில் 21 ஆம் நம்பர்
அறையில் இருப்பதும்
பக்கத்தில் இருந்த எங்கள் வீட்டுக்கு காப்பி,டிபன்
வகையறாவுக்கும் வருவதும்
ஓய்வு எடுப்பதுமாக கடத்தினோம்.
எங்கள் எல்லோருடன் இருந்ததாலோ என்னவோ அம்மா விரைவில் தேறி
சிங்கம் வண்டி ஓட்ட,தன் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தார்.

எந்த வித சோதனையிலும் அம்மா அசந்து போனதே இல்லை.
மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையே அவருக்கு ஆதாரம்.

அனைவரிடமும் இந்த பாசிட்டிவ் எண்ணங்கள் பெருகவேண்டும்.
அம்மாவின் சார்பிலும் என் சார்பிலும்,என் மகள் சார்பிலும்

எல்லோருக்கும் அன்னையர்  தின நல்வாழ்த்துக்கள்.. 

Saturday, May 11, 2019

அம்மா 1970 ........3

வல்லிசிம்ஹன்
அம்மா  1970  ஏப்ரில்  மாதம்,
எனது  மூன்றாவது  கரு ஆறு மாதம் என்ற நிலையில் உடல்
முழுவதும் சிவப்பு சிவப்பாக  ராஷஸ் .
கோவைக்கு மாற்றலாகி வந்த புதிது.

இவருக்கு என் நிலைமை பயத்தைக் கொடுக்க அப்பா அம்மாவுக்கு தொலை பேசியில் விஷயத்தைச் சொல்லி விட்டார்.

காரைக்குடியில் இருந்தவர்கள் இரண்டு நாட்களில்  கோவை வந்து விட்டார்கள்.
மணல்வாரியாக இருக்கப் போகிறதே
என்று பயந்து விட்ட அம்மா,முதலில் வேண்டிக்கொண்டது ஷீர்டி பாபாவிடம் தான். யார் சொல்லி அதுபோல் செய்தாரோ தெரியாது.

வைத்தியரிடம் அழைத்துக் காட்டியபோது உப்பு,புலி,காரம் சேர்க்காமல் முயன்று நாட்கள் இருக்கச் சொன்னார்.
மணல்வாரியாக இருந்தால் குழந்தையைப் பாதித்து இருக்கும்.
நல்ல வேலை அது இல்லை என்றதும்  அம்மா என்னை படுக்கையில் இருக்க வைத்து, மற்ற இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு  சமையலும் செய்து
ஒரு வழியாக  அந்த ஒவ்வாமை மறைந்ததும்,
பக்கத்தில் இருந்த சாயிபாபா காலனி  அழைத்துச் சென்று உப்பும் மிளகும் என் கைகளில் கொடுத்து கோவில் பின்னால் இருந்த தொட்டியில்    போடச்  சொன்னார்.

அம்மாவுக்குத்

தெய்வத்திடம் இருந்த பரிபூரண நம்பிக்கை
எனக்குப் பின்னாட்களில் வந்த சோதனைகளை
சமாளிக்கத் துணை இருந்தது.

மூன்று மாதங்கள் கழித்து   பெரிய தம்பி வந்து என்னையும் குழந்தைகளையும்
அழைத்துச் சென்று காரைக்குடியில்  விட்டான்.
அப்போது அவனுக்கு இருபது,
எனக்கு 22.

ஆவணி மாதத்தில் சின்னவன் பிறக்கும் சமயம் பாட்டி வந்து சேர

ஒரு நல்ல பௌர்ணமி  நாளில் மூன்றாவது பையன்
ஜனனம்.

ஒரு குறையும் வைக்காமல்  என் உடம்பைத் தேற்றி,

என்னைப்  பார்க்க வந்த கணவருடன், சின்னக்குழந்தையையும் என்னையும் அனுப்பி வைத்து,
மற்ற இரண்டு குழந்தைகளைத் தானே
கவனித்துக் கொண்டார்கள்  அந்த  அருமைப்
பெற்றோர்கள்.
இத்தனைக்கும்  அப்பாவுக்கு  வயிற்றில் அல்சர் இருந்தது.
அவரையும் பத்திய சாப்பாடு கொடுத்துக் கவனித்துக் கொண்டு,
என் குழந்தைகளையும் ஆறு மாதங்கள்
கவனித்துக்  கொண்ட  பெருந்தன்மையை  என்ன சொல்வது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏




Thursday, May 09, 2019

அன்னை. 1956

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
அன்னை. 1956

அம்மாவுக்குத் தாரக் நாத் என்கிற பெயர் மிகப் பிடிக்கும்.
திருமங்கலத்தில் இருக்கும் போது பக்கத்து வீட்டு வைகுந்தம்
மாமாவீட்டுக்கு வந்திருந்த இளம் தம்பதிகளுக்கு
ஒரு சின்னப் பாப்பா, ஒரு மூன்று மாதம் இருக்கலாம்.
அதன் பெயர் தாரக நாத்.

அம்மாவுக்கு அந்தக் குழந்தையிடம் அத்தனை பிரேமை.
நானும் சின்னத்தம்பி ரங்கனும் அம்மாவுடன் போவோம்.

ரங்கன்  அம்மாவுடன் எப்பவும் ஈஷிக் கொண்டே இருப்பான்.
எங்கள் இருவருக்கும் அம்மா அந்தக் குழந்தையை மடியில் வைத்துக்
கொண்டு கொஞ்சுவது பார்த்துக் கொஞ்சம்
பொறாமையாகக் கூட இருக்கும்.

அப்பா மற்றவர்கள் வீட்டுக்கு அவ்வளவாகப் போக மாட்டார்.
அம்மா அந்தக் குழந்தையைப் பற்றி அடிக்கடி
பேசுவதை வேடிக்கையாகப் பார்ப்பார்.

அந்த வார சனிஞாயிறுகளில் ராமு மாமா வந்திருந்தார்.
அவர்களுக்கெல்லாம் அக்காவிடம் பேசுவது, ஒரு கவுன்சிலிங்க் போய் வந்த
தெம்பு கொடுத்தது என்று இப்போது புரிகிறது.

ராமசாமி ,பக்கத்து அகத்தில் ஒரு  அழகான பாப்பா வந்திருக்கிறது.
அவர்கள் இன்று ஊருக்குக் கிளம்புகிறார்கள்.
வாயேன் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்ற
அக்காவை வினோதமாகப் பார்த்தார் மாமா.
//பாப்பா நீ வெளியில் வந்தே நான் பார்த்ததில்லையே.
நீ கூட படி தாண்டுவியா என்று புன்னகையோடு
கேட்டார். சரிதான் வா என்னுடன் என்று அழைத்துப் போனார்.

அவர்கள் போய் அரைமணி நேரம் கழித்து அப்பாவும்
ஆபீஸிலிருந்து வந்து விட்டார்.
காப்பியை எதிர்பார்த்து வந்தவருக்கு  அம்மா இல்லாததே
ஒரு அதிசயம். பக்கத்து வீட்டுக்குப் போயிருக்கார்ப்பா என்றதும்,
கழற்றின சட்டையைப் போட்டுக்கொண்டு மீண்டும் படியிறங்கி பக்கத்து வீட்டுக்குப்
போனார்.
நான் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த நாகம்மாவிடம்
அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.
வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்டு ஓடினேன்.
எனக்கு மாமாவுடன் சினிமா போக ஆசை.
மின்னல் வீரன் என்ற படம் வந்திருந்தது. ZORRO வின் தமிழ்ப்
பதிப்பு.

மூவர் முகத்தையும் பார்த்தால் எனக்கு அதைக் கேட்கத் தோன்றவில்லை.
மாமா எங்கள் மூவரையும் வெளியே அழைத்துப் போய் மீனாக்ஷி பவனில்
மசாலா தோசை, வாங்கிக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.
கூடவே கை நிறையக் காராசேவ் எல்லோருக்கும் வாங்கிக் கொண்டார்.

ஏன் மாமா அம்மாவும் அப்பாவும் என்னவோ மாதிரி இருந்தார்கள்
அந்தப் பாப்பா ஊருக்குப் போறது எனக்குக் கூட வருத்தம்தான் என்று நானும் சொல்லிக் கொண்டேன்.
அது இல்லமா. அம்மாவுக்கு நீ பிறப்பத்ற்கு முன்னால்
ரங்கராஜன் என்று ஒரு குழந்தை, தங்கக் கட்டி மாதிரி பிறந்து பத்து மாதம் இருந்து
பெருமாளிடம் போய்விட்டது.
அம்மா வெளிலே சொல்லிக்க மாட்டா.
இந்தத் தாரக் நாத் கிட்டத்தட்ட அதே போல இருக்கு மா.
நீண்ட ஆயுசுடன் நன்றாக இருக்கணும். என்று பெருமூச்சுடன் சொன்னார்.

அன்று நாங்கள் அனைவருமே மௌனமாக இருந்தோம்.
சாப்பிட்ட பிறகு அம்மா வழக்கமான கலகலப்புடன்
விசாகப்பட்டணம் பயணம் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
அப்பாவும் சேர்ந்து கொள்ள

கேட்டபடியே அம்மாவின் மடியில் ரங்கன் தூங்கி விட்டான்.
பொறுமையின்  மறு உருவம் என் அன்பு அம்மா.

Friday, May 03, 2019

சித்திரை ,வைகாசி,ஆனி திருமண மாதங்கள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  இனிதாக வாழ வேண்டும்.

மே  இரண்டு அன்பு அம்பி மாமாவும் ஜெயா மன்னியும் இணைந்த நாள்.
அதற்காக  நாங்கள் ஒரு பட்டாளமே சென்னையிலிருந்து கிளம்பி ஆந்திராவின் குண்டூருக்குப் போனோம் இது 1957 இல்.
 மன்னியின்  அப்பா மிகப் பெருந்தன்மையான மனிதர்.
சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தி அருள வேண்டுகிறேன் என்றதும்.
சினிம்மாப்  பாட்டியின் பிறந்தக மனிதர்கள், , என் வயதொத்த நண்டு சிண்டுகள்.
கோடியகத்து நரசிம்மாச்சாரி தான் வரவில்லை.

முதல் முறையாக அகலப் பாதையில் செல்லும்
ரயிலைப் பார்த்தோம்.
எங்களுக்கு ஓடி விளையாட எதுவாக  நிறைய இடம். ஜன்னலோர நீண்ட இருக்கைகள்.

அந்த ஐந்து  மணி  நேர பயணத்தில்  வெய்யிலிலும்
சுகம் காணும் வயது.
அது ஒரு  மதிய  நேர பயணம்.

மாலை வரும்போது குண்டூரில்  வரவேற்க  ஜெயா மன்னியி ன் அப்பா வந்திருந்தார்.
  அம்பி மாமாவின் மாப்பிள்ளைத் தோழன் க்ளாக்ஸோ  கிட்டு, குண்டூர் வந்தாச்சுடா மாப்பிள்ளே பாடியது நினைவில் இருக்கிறது.

ஆழ்வார் மாமா அனைவருக்கும் இளநீர் வாங்கி கொடுத்ததும் நினைவில் நிழலாடுகிறது.

நானும் தோழி ஆண்டாளும்  அந்த மஹா பெரிய பந்தலை வல ம் வந்து அதிசயித்தோம்.
 அம்பி யும் மன்னியும் அழகுப் பொருத்தத்தில் ஜொலித்தார்கள்.

திருமண நாள் வேகமாக ஓடிவிட்டது.
அடுத்த நாள் எங்களுக்கெல்லாம் பஸ்ஸில் சுற்றுலா. சுற்றி இருக்கும் கோவில்கள் சென்று வந்தோம். மறக்க முடியாதது பானக நரசிம்மர்.மங்களகிரி மலை மேல் உத்ஸாக ஏறி.,
ஈ மொய்க்காத   அண்டா நிறைய இருந்த    பானகத்தை பார்த்து  அதிசயப்  பட்டு  அந்தக் குகையின் பின்புறம் ஏதாவது  வழி இருக்கிறதா, நரசிம்மர் வாய் வழியே   சென்ற பானகம் என்ன ஆச்சு என்று  விசாரம். பாட்டி அதட்டவே ஓடுவதை நிறுத்தினோம்.😃😃😃😃?😃😃

அடுத்து  வந்தது 21 வருடங்கள் கழித்து தம்பி முரளி வசந்தி திருமணம். மே 14.
  பிறகு 17 ஆம் தேதி வரும்  பெற்றோர் திருமண நாள்.

இவர்கள் திருமணத்துக்கு நான் செல்லவில்லை.

நம் கீதா சாம்பசிவத்துக்கும்   அதுதான் திருமண நாள் 

அப்புறம் வருவது  சின்னத்தம்பியின் மண  நாள். மே  31.
அனைவரும் நலமே வாழ இறைவன் திருவருள் நிறையட்டும்.





சுதந்திரம் அடைய என்ன தேவை?

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் . விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். குடும்பத் தளையிலிருந்து விடுபடுவது கூட அவ்வளவு சிரமம் இல...