Wednesday, May 15, 2019

வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக  வாழ வேண்டும்.
 இந்த மாதம் கல்யாண  மாதம்

என் பெற்றோர்  திருமண நாள்
என் முரளியின் மே  14
என் தம்பி ரங்கனின், மே  31
என் நாத்தனார் கல்யாணி ஹேமா இவர்களின் திருமண நாட்கள் மே  23
 எல்லாவற்றையும்  கொண்டாடும் விதமாக
அவர்களுக்குப் பிடித்த பாடல்களை  பதிவிடுகிறேன்.

முரளி வசந்தி தம்பதியருக்கு


தம்பி ரங்கன் வைதேஹிக்கு


என்னால் அவர்களுக்குக்  கொடுக்க முடியும் வான் வழி பரிசு.

Sunday, May 12, 2019

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன்

 அம்மா அப்பா....1988  பாகம் 4.

அம்மாவுக்கு சொல்ல முடியாத பிரச்சினை வந்த போது
அறுவை சிகித்சையால் குணப்படுத்தலாம்
என்று முடிவெடுத்தோம்.
ஸுலப அறுவை தான். மயக்கம்  தெளிந்த பிறகு வந்த
இருமல் தான் மிக்க வலி கொடுத்தது.
அப்பா அம்மா பக்கத்தை விட்டு நகரவே இல்லை.

இரவு படுத்திருந்து விட்டு,என்னை அம்மாவுக்குத் துணை வைத்துவிட்டு,
வீட்டுக்குப் போய்க்
குளித்து சாப்பிட்டு அம்மாவுக்கும் சாப்பாடு கொண்டு வருவார்.
ஒரு நாள் இரவு இருமல் அதிகமாகி நெஞ்சு பக்கமாக வலி.
நானும் ரங்கனும் மட்டும் இருந்தோம்.
அம்மா டாக்டரை அழைக்கச் சொன்னார்.
இது வெறும் இருமல் இல்லை. கொஞ்சம் சீரியஸ் தான்.
டாக்டர் அம்மாவைக் கூப்பிடு.
உடனே பார்க்காவிட்டால் தவறாகி விடும் என்று வற்புறுத்தினார்.
ஸ்டாஃப் நர்ஸிடம் சொல்லி
விழயத்தை விளக்கினேன் .
அவர் கொஞ்சம் அலுப்போடு டாக்டரை அழைக்கப் போனார்.
டாக்டர் வந்ததும் இசிஜி எடுக்கச் சொல்லி,
லேசான மார்படைப்பு
உடனே கவனிக்க வேண்டும்
என்று உடனே இஸபெல் ஹாஸ்பிட்டலில்
சேர்க்கும்படி தொலைபேசியில் ஆம்புலன்ஸ் வரவழைத்து
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த 4000 ரூபாய் ஊசி போடப்பட்டு
ஐசியுவில் அனுமதித்து விட்டார்.
 ஒரு மாறுதலுக்காக வீட்டுக்குப் போயிருந்த அப்பா,தம்பியுடன் வண்டியில் வந்துவிட்டார்.
48 மணி நேர கெடுவுக்குப் பிறகு அம்மா கண் திறந்தார்.
அந்த வருடம் அம்மாவுக்கு 60 வயது பூர்த்தியாகி
இருந்தது.
ஏப்ரில் 3 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப் பட்ட அம்மா 4 வாரம் அங்கே சிகித்சை
எடுத்துக் கொண்டார்.
நடுவில் வந்த என் பிறந்த நாளையும் மறக்கவில்லை.
சைகையினால் என்னை உள்ளே அழைத்து
அப்பாவோடு போய் ரங்காச்சாரியில் நல்ல புடவை வாங்கிக் கொள்.
என்றதும் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

எப்பொழுதும் பெற்ற மக்களின் நினைவுதானா உங்கள் இருவருக்கும்./
நீ நலம் அடைந்த பிறகே புதிது உடுத்துவேன்
என்று உறுதியாகச் சொல்லி விட்டேன்.

அம்மாவும் நலம் பெற்றார்.
அப்பாவின் முகத்தில் தெளிவு பிறந்தது.
எங்கள் குடும்பம் முழுவதும் ஈ ப்ளாக்கில் 21 ஆம் நம்பர்
அறையில் இருப்பதும்
பக்கத்தில் இருந்த எங்கள் வீட்டுக்கு காப்பி,டிபன்
வகையறாவுக்கும் வருவதும்
ஓய்வு எடுப்பதுமாக கடத்தினோம்.
எங்கள் எல்லோருடன் இருந்ததாலோ என்னவோ அம்மா விரைவில் தேறி
சிங்கம் வண்டி ஓட்ட,தன் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தார்.

எந்த வித சோதனையிலும் அம்மா அசந்து போனதே இல்லை.
மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையே அவருக்கு ஆதாரம்.

அனைவரிடமும் இந்த பாசிட்டிவ் எண்ணங்கள் பெருகவேண்டும்.
அம்மாவின் சார்பிலும் என் சார்பிலும்,என் மகள் சார்பிலும்

எல்லோருக்கும் அன்னையர்  தின நல்வாழ்த்துக்கள்.. 

Saturday, May 11, 2019

அம்மா 1970 ........3

வல்லிசிம்ஹன்
அம்மா  1970  ஏப்ரில்  மாதம்,
எனது  மூன்றாவது  கரு ஆறு மாதம் என்ற நிலையில் உடல்
முழுவதும் சிவப்பு சிவப்பாக  ராஷஸ் .
கோவைக்கு மாற்றலாகி வந்த புதிது.

இவருக்கு என் நிலைமை பயத்தைக் கொடுக்க அப்பா அம்மாவுக்கு தொலை பேசியில் விஷயத்தைச் சொல்லி விட்டார்.

காரைக்குடியில் இருந்தவர்கள் இரண்டு நாட்களில்  கோவை வந்து விட்டார்கள்.
மணல்வாரியாக இருக்கப் போகிறதே
என்று பயந்து விட்ட அம்மா,முதலில் வேண்டிக்கொண்டது ஷீர்டி பாபாவிடம் தான். யார் சொல்லி அதுபோல் செய்தாரோ தெரியாது.

வைத்தியரிடம் அழைத்துக் காட்டியபோது உப்பு,புலி,காரம் சேர்க்காமல் முயன்று நாட்கள் இருக்கச் சொன்னார்.
மணல்வாரியாக இருந்தால் குழந்தையைப் பாதித்து இருக்கும்.
நல்ல வேலை அது இல்லை என்றதும்  அம்மா என்னை படுக்கையில் இருக்க வைத்து, மற்ற இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு  சமையலும் செய்து
ஒரு வழியாக  அந்த ஒவ்வாமை மறைந்ததும்,
பக்கத்தில் இருந்த சாயிபாபா காலனி  அழைத்துச் சென்று உப்பும் மிளகும் என் கைகளில் கொடுத்து கோவில் பின்னால் இருந்த தொட்டியில்    போடச்  சொன்னார்.

அம்மாவுக்குத்

தெய்வத்திடம் இருந்த பரிபூரண நம்பிக்கை
எனக்குப் பின்னாட்களில் வந்த சோதனைகளை
சமாளிக்கத் துணை இருந்தது.

மூன்று மாதங்கள் கழித்து   பெரிய தம்பி வந்து என்னையும் குழந்தைகளையும்
அழைத்துச் சென்று காரைக்குடியில்  விட்டான்.
அப்போது அவனுக்கு இருபது,
எனக்கு 22.

ஆவணி மாதத்தில் சின்னவன் பிறக்கும் சமயம் பாட்டி வந்து சேர

ஒரு நல்ல பௌர்ணமி  நாளில் மூன்றாவது பையன்
ஜனனம்.

ஒரு குறையும் வைக்காமல்  என் உடம்பைத் தேற்றி,

என்னைப்  பார்க்க வந்த கணவருடன், சின்னக்குழந்தையையும் என்னையும் அனுப்பி வைத்து,
மற்ற இரண்டு குழந்தைகளைத் தானே
கவனித்துக் கொண்டார்கள்  அந்த  அருமைப்
பெற்றோர்கள்.
இத்தனைக்கும்  அப்பாவுக்கு  வயிற்றில் அல்சர் இருந்தது.
அவரையும் பத்திய சாப்பாடு கொடுத்துக் கவனித்துக் கொண்டு,
என் குழந்தைகளையும் ஆறு மாதங்கள்
கவனித்துக்  கொண்ட  பெருந்தன்மையை  என்ன சொல்வது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏




Thursday, May 09, 2019

அன்னை. 1956

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
அன்னை. 1956

அம்மாவுக்குத் தாரக் நாத் என்கிற பெயர் மிகப் பிடிக்கும்.
திருமங்கலத்தில் இருக்கும் போது பக்கத்து வீட்டு வைகுந்தம்
மாமாவீட்டுக்கு வந்திருந்த இளம் தம்பதிகளுக்கு
ஒரு சின்னப் பாப்பா, ஒரு மூன்று மாதம் இருக்கலாம்.
அதன் பெயர் தாரக நாத்.

அம்மாவுக்கு அந்தக் குழந்தையிடம் அத்தனை பிரேமை.
நானும் சின்னத்தம்பி ரங்கனும் அம்மாவுடன் போவோம்.

ரங்கன்  அம்மாவுடன் எப்பவும் ஈஷிக் கொண்டே இருப்பான்.
எங்கள் இருவருக்கும் அம்மா அந்தக் குழந்தையை மடியில் வைத்துக்
கொண்டு கொஞ்சுவது பார்த்துக் கொஞ்சம்
பொறாமையாகக் கூட இருக்கும்.

அப்பா மற்றவர்கள் வீட்டுக்கு அவ்வளவாகப் போக மாட்டார்.
அம்மா அந்தக் குழந்தையைப் பற்றி அடிக்கடி
பேசுவதை வேடிக்கையாகப் பார்ப்பார்.

அந்த வார சனிஞாயிறுகளில் ராமு மாமா வந்திருந்தார்.
அவர்களுக்கெல்லாம் அக்காவிடம் பேசுவது, ஒரு கவுன்சிலிங்க் போய் வந்த
தெம்பு கொடுத்தது என்று இப்போது புரிகிறது.

ராமசாமி ,பக்கத்து அகத்தில் ஒரு  அழகான பாப்பா வந்திருக்கிறது.
அவர்கள் இன்று ஊருக்குக் கிளம்புகிறார்கள்.
வாயேன் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்ற
அக்காவை வினோதமாகப் பார்த்தார் மாமா.
//பாப்பா நீ வெளியில் வந்தே நான் பார்த்ததில்லையே.
நீ கூட படி தாண்டுவியா என்று புன்னகையோடு
கேட்டார். சரிதான் வா என்னுடன் என்று அழைத்துப் போனார்.

அவர்கள் போய் அரைமணி நேரம் கழித்து அப்பாவும்
ஆபீஸிலிருந்து வந்து விட்டார்.
காப்பியை எதிர்பார்த்து வந்தவருக்கு  அம்மா இல்லாததே
ஒரு அதிசயம். பக்கத்து வீட்டுக்குப் போயிருக்கார்ப்பா என்றதும்,
கழற்றின சட்டையைப் போட்டுக்கொண்டு மீண்டும் படியிறங்கி பக்கத்து வீட்டுக்குப்
போனார்.
நான் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த நாகம்மாவிடம்
அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.
வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்டு ஓடினேன்.
எனக்கு மாமாவுடன் சினிமா போக ஆசை.
மின்னல் வீரன் என்ற படம் வந்திருந்தது. ZORRO வின் தமிழ்ப்
பதிப்பு.

மூவர் முகத்தையும் பார்த்தால் எனக்கு அதைக் கேட்கத் தோன்றவில்லை.
மாமா எங்கள் மூவரையும் வெளியே அழைத்துப் போய் மீனாக்ஷி பவனில்
மசாலா தோசை, வாங்கிக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.
கூடவே கை நிறையக் காராசேவ் எல்லோருக்கும் வாங்கிக் கொண்டார்.

ஏன் மாமா அம்மாவும் அப்பாவும் என்னவோ மாதிரி இருந்தார்கள்
அந்தப் பாப்பா ஊருக்குப் போறது எனக்குக் கூட வருத்தம்தான் என்று நானும் சொல்லிக் கொண்டேன்.
அது இல்லமா. அம்மாவுக்கு நீ பிறப்பத்ற்கு முன்னால்
ரங்கராஜன் என்று ஒரு குழந்தை, தங்கக் கட்டி மாதிரி பிறந்து பத்து மாதம் இருந்து
பெருமாளிடம் போய்விட்டது.
அம்மா வெளிலே சொல்லிக்க மாட்டா.
இந்தத் தாரக் நாத் கிட்டத்தட்ட அதே போல இருக்கு மா.
நீண்ட ஆயுசுடன் நன்றாக இருக்கணும். என்று பெருமூச்சுடன் சொன்னார்.

அன்று நாங்கள் அனைவருமே மௌனமாக இருந்தோம்.
சாப்பிட்ட பிறகு அம்மா வழக்கமான கலகலப்புடன்
விசாகப்பட்டணம் பயணம் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
அப்பாவும் சேர்ந்து கொள்ள

கேட்டபடியே அம்மாவின் மடியில் ரங்கன் தூங்கி விட்டான்.
பொறுமையின்  மறு உருவம் என் அன்பு அம்மா.

Friday, May 03, 2019

சித்திரை ,வைகாசி,ஆனி திருமண மாதங்கள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  இனிதாக வாழ வேண்டும்.

மே  இரண்டு அன்பு அம்பி மாமாவும் ஜெயா மன்னியும் இணைந்த நாள்.
அதற்காக  நாங்கள் ஒரு பட்டாளமே சென்னையிலிருந்து கிளம்பி ஆந்திராவின் குண்டூருக்குப் போனோம் இது 1957 இல்.
 மன்னியின்  அப்பா மிகப் பெருந்தன்மையான மனிதர்.
சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தி அருள வேண்டுகிறேன் என்றதும்.
சினிம்மாப்  பாட்டியின் பிறந்தக மனிதர்கள், , என் வயதொத்த நண்டு சிண்டுகள்.
கோடியகத்து நரசிம்மாச்சாரி தான் வரவில்லை.

முதல் முறையாக அகலப் பாதையில் செல்லும்
ரயிலைப் பார்த்தோம்.
எங்களுக்கு ஓடி விளையாட எதுவாக  நிறைய இடம். ஜன்னலோர நீண்ட இருக்கைகள்.

அந்த ஐந்து  மணி  நேர பயணத்தில்  வெய்யிலிலும்
சுகம் காணும் வயது.
அது ஒரு  மதிய  நேர பயணம்.

மாலை வரும்போது குண்டூரில்  வரவேற்க  ஜெயா மன்னியி ன் அப்பா வந்திருந்தார்.
  அம்பி மாமாவின் மாப்பிள்ளைத் தோழன் க்ளாக்ஸோ  கிட்டு, குண்டூர் வந்தாச்சுடா மாப்பிள்ளே பாடியது நினைவில் இருக்கிறது.

ஆழ்வார் மாமா அனைவருக்கும் இளநீர் வாங்கி கொடுத்ததும் நினைவில் நிழலாடுகிறது.

நானும் தோழி ஆண்டாளும்  அந்த மஹா பெரிய பந்தலை வல ம் வந்து அதிசயித்தோம்.
 அம்பி யும் மன்னியும் அழகுப் பொருத்தத்தில் ஜொலித்தார்கள்.

திருமண நாள் வேகமாக ஓடிவிட்டது.
அடுத்த நாள் எங்களுக்கெல்லாம் பஸ்ஸில் சுற்றுலா. சுற்றி இருக்கும் கோவில்கள் சென்று வந்தோம். மறக்க முடியாதது பானக நரசிம்மர்.மங்களகிரி மலை மேல் உத்ஸாக ஏறி.,
ஈ மொய்க்காத   அண்டா நிறைய இருந்த    பானகத்தை பார்த்து  அதிசயப்  பட்டு  அந்தக் குகையின் பின்புறம் ஏதாவது  வழி இருக்கிறதா, நரசிம்மர் வாய் வழியே   சென்ற பானகம் என்ன ஆச்சு என்று  விசாரம். பாட்டி அதட்டவே ஓடுவதை நிறுத்தினோம்.😃😃😃😃?😃😃

அடுத்து  வந்தது 21 வருடங்கள் கழித்து தம்பி முரளி வசந்தி திருமணம். மே 14.
  பிறகு 17 ஆம் தேதி வரும்  பெற்றோர் திருமண நாள்.

இவர்கள் திருமணத்துக்கு நான் செல்லவில்லை.

நம் கீதா சாம்பசிவத்துக்கும்   அதுதான் திருமண நாள் 

அப்புறம் வருவது  சின்னத்தம்பியின் மண  நாள். மே  31.
அனைவரும் நலமே வாழ இறைவன் திருவருள் நிறையட்டும்.





Sunday, April 28, 2019

மதுரை அருள்மிகு செல்லத்தம்மன் கோவில் ,Simmakkal

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ என் பிரார்த்தனைகள்.

மதுரை  அருள்மிகு செல்லத்தம்மன் கோவில்

திரு துரை  செல்வ ராஜு   அவர்களின் ஸ்ரீ கண்ணகி  காளி
பதிவைப் பார்த்து படித்ததும்
மதுரையில் கண்ணகிக்கு  கோவில் இல்லையா
என்ற துக்கம் ஏற்பட்டது.

அவள் சினத்தால் எரியுண்ட  மதுரைக்காரர்களுக்கு அவளிடம் பயமே  இருந்திருக்குமோ.

மன்னனும், பொற்கொல்லனும் செய்த தவறு
மக்கள் மீது விடிந்தது.

இதை எல்லாம் தாண்டிவந்து, அந்தக் கற்புக்கரசிக்கும் கோவில் கட்ட முனைந்திருக்கிறார்கள் மதுரைக்காரர்கள் .
 ஒரு தடவை கட்டி அந்த இடமே எரிந்து விட்டதாம்.
பிறகு   கண்ணகி அம்மா சிலையோடு
அன்னை பராசக்தியின்  வடிவத்தையும்
ஸ்தாபித்தார்களாம்.  அதன் பிறகு  அந்தக் கோவில் செழிப்படைந்ததாம்.

செண்பகத்தம்மன் மருவி செல்லத்தம்மன்  ஆனதாம்.

என் சித்தி மதுரையில் பிறந்து இப்பொழுதும் மதுரையில் இருப்பவர்.

பழைய காலங்களில் ,நாங்கள் சிறுவர்களாக, அவர்கள் கையில் பிசைந்து போட்ட தயிர் சாதம் சாப்பிடும்போது
பல  மந்திர தந்திர கதைகள் சொல்வார்.
அதில் இந்தக் கதையும் கேட்டிருக்கிறேன்.
இப்போது  கூகிள்  சித்தியிடமும் கேட்ட பொது படங்களுடன் செய்திகள் வந்தன.
இப்பொழுது புரிகிறது , எங்கள் உறவினர்களின் பெண் குழந்தைகளுக்குச் செல்லி என்று
பெயர்  வைத்தார்கள் என்று. எனக்கும் இன்னும் ஒரு தோழி அந்தப் பெயரில் மதுரையில் இருக்கிறாள் .

https://temple.dinamalar.com/en/new_en.php?id=479
இந்த இணைப்பில் படங்களும் புராணமும்
இருக்கின்றன.

ஒரு நிம்மதி. மதுரைக்காரர்கள்  கண்ணகியை
மறக்கவில்லை. கீதா சாம்பசிவம், துரை செல்வராஜு, கோமதி அரசு ,எங்கள்பிளாக் ஶ்ரீராம் அனைவருக்கும்.  நன்றி.

Saturday, April 27, 2019

1978 இல் ஒரு திருமலா பயணம்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும் .

 1978 இல் ஒரு திருமலா பயணம்.
++++++++++++++++++++++++++++++++++++++1977இல் சிங்கத்தின் அப்பா
ஒரு வைகாசி மாதம் இறைவனடி சேர்ந்தார்.. ஒரு வருடம் மாதா மாதம் வைதீகக்
காரியங்கள் முடிந்த பிறகு
திருப்பதி செல்வது வழக்கம்.
பாட்டி சொல்லிவிட்டார்.  குழந்தைகள் புதிதாக வேறு வேறு பள்ளிகளில் சேர்ந்திருந்ததால்
உடனே விடுமுறை எடுக்கத் தயக்கமாக இருந்தது.

மாமியார் இரண்டு நாட்களுக்குத் தான் பார்த்துக் கொள்வதாகவும்
நானும் இவரும் நாத்தனார் கல்யாணி குடும்பத்துடன்
அவர்கள் பெரிய வண்டியில் திருப்பதி போய் வரலாம் என்றும் சொன்னார்.

கல்யாணியின் கணவர் இன்னோரு மகன் மாதிரி தான் நடந்து கொள்வார்.

மிக மிக இதமான மனிதர்.
அவர்கள் ஐவரும்,நாங்கள் இருவருமாகக் கிளம்பிவிட்டோம்.
ஒரு நல்ல காலை நேரம்.
இப்போது இருக்கும் கனத்த சரீரம் அப்போது இல்லை இருவருக்கும்

அதனால் சிங்கம் காரை ஓட்ட ,அத்திம்பேரும் ,அவர்களின்
மூத்தமகனும் முன்னால் உட்கார், கல்யாணி,நான்,அவர்களது பெண், இளையமகன்
பின்னால் உட்கார பத்தரை மணி அளவில் கீழ்த் திருப்பதிக்கு வந்து விட்டோம்.

அப்போதெல்லாம் இப்போதிருக்கும் கூட்டம் தள்ளு முள்ளு இருந்ததாக நினைவில்லை.
அலர்மேல்மங்கைத்தாயாரை மனமார வழிபட்டு

அங்கேயே  ஒரு மரத்தடியில் கொண்டு போயிருந்த உணவைப்
பகிர்ந்து உண்டுவிட்டு,மதியம் மூன்று மணி அளவில்

மலையேறத் துவங்கினோம்.
ஒன்றரை மணி நேரம் கழித்து ஏற்கனவே  பதிவு செய்திருந்த
மூன்று அறைகள் கொண்ட  காட்டேஜ் ஒன்றில்
இறங்கிக் கொண்டோம். எனக்கு அங்கப் பிரதட்சிண வேண்டுதல் இருந்ததால்

சீக்கிரம் உறங்கத் தயாரானேன்.. தானும் துணைக்கு வருவதாகக் கல்யாணி சொல்லவே
எட்டு மணி அளவில் வுட்லாண்ட்ஸ்  உணவு விடுதியில்
சாப்பாட்டை  முடித்துக் கொண்டோம். நல்ல சாப்பாடு கிடைத்த காலம்.

குளிர்காற்று சில்லென்று வீடிய காலம் அது. திருமலை தெய்வீகக் காட்சி கொடுக்கும்.
இப்போது மக்கள் வசதிக்காக பலவிதமாகச் சாலைகள்
பலவித வசதி கொண்ட விடுதிக் கட்டடங்கள் அப்போது இல்லை.
உயர்ந்த மரங்கள் வளைந்து செல்லும் பாதைகள்

அமைதியாகச் செல்லும் மக்கள் வரிசை எல்லாமே என் மனதுக்கு
இதமாக இருந்த நினைவு இருக்கிறது.
அப்புறம் திருமலைக்குச் சென்ற வருடங்களில் கூட ஸ்வெட்டரோ
சால்வையோ எடுத்துச் சென்ற ஞாபகம்.

விடுதிக்கு வந்து உறங்கி,  ஒரு மணி அளவில்,குளித்துவிட்டு
கோவில் வாசலுக்குச் சென்றுவிட்டோம்.
அப்போது  கோபுரவாசலிலிருந்தே அங்கப் பிரதட்சிணம் செய்பவர்கள்
நேரே உள்ளே போய்விடலாம்.
அங்கப் பிரதட்சணம் செய்யும் போது புடவை விலகாத வண்ணம்
பார்த்துக் கொண்டு ,முனை வந்தால் சரியாகத் திருப்பிவிட்டு
கோவிந்தா கோஷங்களோடு பெருமாள் கருணையால்
நல்லபடி பூர்த்தி செய்து சன்னிதி வாசலுக்கு துவஜஸ்தம்பம் அருகிலிருந்து
வரிசையில் சேர்ந்து கொண்டோம்.

அந்தத் தரிசனத்தை என்னவென்று சொல்வேன்.

அங்கப்பிரதட்சணம் செய்தவர்களுக்கான்  தனி வரிசை.
குளிர் காற்று,புடவையைக் காயவைத்த அதிசயம்.
மனம் முழுவதும் கோவிந்த நாமம்.கண்முன்னே நீண்ட நெடிய தங்க மய ஜோதியாக
கோவிந்தன்.
என்ன புண்ணியம் செய்தேன் என்று என்னை அழைத்தாய் கோவிந்தா
என்று அரற்றியவாறு கூப்பிய கைகளுடன் ஜருகண்டி சொல்லாத தள்ளாத
மனிதர்களுக்கு நடுவில் அடுத்து வருபவர்களுக்கும்
நான் அருள்வேண்டும் என்று அவன் சொல்வது போல ஒரு தோற்றம்.
கல்யாணிக்கும் அதே நிலை. முடக்குவாதம் ஆரம்ப நிலை அவருக்கு.

அதை அவன் சரி செய்துவிடுவான் என்று சொன்னபடியே சன்னிதியைச் சுற்றி வெளிப்பிரகாரத்தில் கிடைத்த சர்க்கரைப் பொங்கலையும்
புளியோதரயையும் அந்த  அதிகாலை மூன்று மணிக்கு
மனதினிக்க சாப்பிட்டது அமிர்தமான நினைவு.
 கால் நடையாகவே விடுதிக்கு வந்து புடவை மாற்றி உறங்க நினைத்தேன்.
பெருமாளைத் தரிசித்த நிறைவு எங்களைத் தூங்க விடவில்லை.
மீண்டும் திருமண உத்சவத்துக்குப் போக வேண்டும் என்று நினைப்பில்
வெளியே வந்து காப்பி விற்றவரிடம் எல்லோருக்கும் காப்பி வாங்கிக் கொண்டு
எல்லோரையும் எழுப்பினோம்.
உத்சவத்துக்கு ஏற்பாடு செய்திருந்த கல்யாணி ,சின்னி அத்திம்பேர் இருவரும்
வைணவ உடையாக முறையாகப் பஞ்சகச்சம், ஒன்பது கஜப் புடவை என்று
உடுத்திக் கொள்ள,மற்ற அனைவரும் புதிய உடைகளை அணிந்து
கொண்டு  காலை உணவை  முடித்து மீண்டும் கோவிலுக்குப் புறப்பட்டோம்.
அந்த முறையும் நேராகக் கல்யாண மண்டபத்துக்குப் போய்விட்டோம்.

தம்பதிகள் சங்கல்பம் செய்து கொள்ள இரண்டு மணி நேரம்.
தாயாரும் பெருமாளும் ஆனந்த தரிசனம் கொடுத்தார்கள்.

தெய்வத் திருமணம் முடிந்த கையோடு மீண்டும் ஸ்ரீனிவாச தரிசனம்..
 மீண்டும் எங்களை அழைத்துத் தரிசனம் அருள்வாய்
என்று மனதார வேண்டிக் கொண்டு  பனிரண்டு பெரிய லட்டுகள்,
வடைகள் எல்லாம் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு,
தயிர்சாதம், புளியோதரை என்று கூவிகூவிக் கொடுத்ததை வாங்கி அங்கேயே மண்டபத்தில்
உட்கார்ந்து சாப்பிட்டுக்
கொண்டுபோயிருந்த பாட்டில்கள் நிறைய திருமலைத் தீர்த்தத்தை நிரப்பிக்
கொண்டு வண்டி ஏறினோம்.
நானும் சிங்கமும் மீண்டும் மீண்டும் கல்யாணிக்கும் அத்திம்பேருக்கும்
 நன்றி சொல்லிக் கொண்டே வந்தோம்.
அது போல நிறைவான பயணம் கிடைக்க வழி செய்த என் அருமை நாத்தனார்
 மூன்று நாட்களுக்கு முன் உண்மையிலியே வைகுந்த தரிசனத்துக்குக் கிளம்பிவிட்டார்.

சுதந்திரம் அடைய என்ன தேவை?

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் . விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். குடும்பத் தளையிலிருந்து விடுபடுவது கூட அவ்வளவு சிரமம் இல...