Blog Archive

Saturday, March 17, 2007

நாராயணா! என்னும் திவ்ய நாமம்

















நாராயணன் கோவில் என்றதும் உடனே சரி, பார்க்கவேண்டும் என்று நினைத்தேன்.
அப்புறம் சொன்னாங்க அது ஒரு குருவுக்காக எழுப்பபட்ட மந்திர் என்றார்கள்.
நமக்குத்தான் பம்பாய்க்கு மேலே போன வழக்கமே இல்லை.
கண்ஷாம் என்று வேறு போட்டு இருக்கிறது.
பிள்ளையார் கோவில் போலிருக்கிறது.
நல்லதாப் போச்சு ,இதெல்லாம் என் மனதில் ஓடிய எண்ணங்கள் இந்த நாரயண் மந்திர் பற்றிக் கேள்விப் பட்டதும்.
இன்று துளசி எழுதி இருப்பதைப் பார்த்ததும் தான்
ஆதியோடு அந்தமாக எல்லாம் புரிந்தது.
இந்தக் கோவிலில் என்னை ரொம்பக் கவர்ந்தது
இந்த ஹவேலிதான்.
கலாச்சார மையத்துக்கு அப்படிச் சொல்லுவார்களம்.
எனக்கு 'புனியாத்'' தொடர் ஹவேலிராம் ஒண்ணுதான் தெரியும்.:-0)
அதில் கூரையில் பதித்திருந்த
யானைகள் முகம்.!!
யானை என்பது குறிக்கும் தத்துவம் தான் என்ன.?
ஏன் அதற்கு இத்தனை முக்கியம்?
சாது, பெரிய உருவம், தும்பிக்கை,குட்டிக் கண்,
முறமான காது,தந்தம்
இவ்வளவுதானே.
ஏன் இந்த யானையப்பனைப் பார்க்கும்போது இத்தனை சந்தோஷமா இருக்கு.
நமக்கு முன்னாடியே டீச்சரம்மா
இந்தக் கோவில் தல புராணம் எல்லாத்தையும் சொல்லிட்டதாலே அவங்களோட பதிவுலக
நட்புக்கு இந்தப் பதிவு.
அப்புறமா எந்த வார்த்தை வேணா போட்டுக்கலாம்.
அர்ப்பணம்,வாழ்த்துக்கள் இப்படி......
படம் அத்தனையும் இணையத்தில இருந்து எடுத்தது.
அங்கே ' காமிரா நாட் அல்லௌட்'
இத்தாலியிலிருந்து பளிங்கு.
துருக்கியிலிருந்து லைம்ஸ்டோன்!
இதையெல்லாம் இந்தியாவுக்கு வரவழைச்சு,
அங்கே செதுக்கிக்,
கப்பலில் ஏற்றி, இங்கே கொண்டுவந்து
கட்டி இருக்காங்க சாமி.
எட்டு மாதங்கள் ஆச்சாம் கட்டி முடிக்க.
இந்த ஊருக்கு வரவங்க பார்க்க வேண்டிய முக்கியமான் இடம் இந்தக் கோவில்.





Thursday, March 15, 2007

சித்திரராமன்....11..சுந்தரகாண்டம் 2ஆவது பகுதி





























அஞ்சனா நந்தன் மற்ற வானரர்களோடு மகேந்திர மலைகளை அடையும் போது சம்பாதி எனும் கழுகரசனை சந்திக்கிறான்.



இவர் ஜடாயுவின் மூத்த சகோதரர்.


வானரர்களைக் கண்டு சேதி அறிந்ததும் ராவணனைப் பற்றியும் இலங்கை போகும் வழியையும் காட்டுகிறார்.



தன் தம்பியைக் கொன்றவனைப் பழி வாங்க உடலில் சக்தி இல்லையே என்று கோபம் பொங்குகிறது. ஆனாலும் அத்தனை சோகத்திலும்



அறிவு பிறழாமல் வழி சொல்கிறார்.



எத்தனை மகாத்மாக்களை ராமாயணம் நமக்குக் காட்டிக் கொடுக்கிறது!



எப்படியும் இருக்கலாம் என்கிற எண்ணத்தை வளர விடுவதே இல்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற முறை, கட்டுப் பாடுகளை வரையறுத்து



வழிநடத்துகிறது. மகேந்திர மலையின் அடிவாரத்தில் அங்கதன் தலைமையில் ஆலொசனை நடக்கிறது.
எல்லா வானரங்களும் தங்களால் எத்தனை யோசனை
தாண்ட முடியும் என்று
தங்களையே சோதித்துக் கொள்ளுகிறார்கள்.
கடலின் அளவு நூறு யோசனை.
கடைசியில் கடைசியில்தான் அனுமன் வருகிறான்.
மகேந்திரமலை உச்சிக்கு எல்லோரும் போகிறார்கள்.
(இப்போது எங்கள் திருக்குறுங்குடியில் இருக்கும் அதே மகேந்திர மலைதான்.)
அங்கிருந்து ஸ்ரீராம நாம தியானத்தை ஆரம்பிக்கிறான்
அனுமன்.
சர்வ மருத்கணங்களையும்,ஐம்பூதங்களையும்,தேவர்களையும் தியானித்துத், தன் குரு கிருபையுடன் வெற்றிகிடைக்க வேண்டுகிறான் ஆஞ்சனேயன்.
!!ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராமா!!
ராமன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போன்ற வேகம் கொண்டு,
,வல்லமை பொருந்திய வஜ்ரதேகத்துடன்
அனைவரும் பார்த்திருக்க ஒரு நூறு சூரியனுக்கு ஒப்பான தேஜஸுடன்
விண்ணை நோக்கிப் பாய்கிறான்,.
அனுமனின் வால் வீர விலாசத்தில் கொடிபோல் பறக்கிறது.
அவன் கால் ஊன்றிய வேகத்தில் மலையில் உள்ள பாறைகள் பொடியாகின்ற்ன.
கீழே வானர கோஷம் அவனைப் பின் தொடர்கிறது.
சீதையோடு திரும்புவேன் என்று சூளுரைத்து மேலும்
உயரத்தை எட்டுகிறான்.
அவனது வீர கர்ஜனையில் அலைகள் அலைக்கப் பட்டு எழும்பி விழுகின்றன.
கடலுக்கடியில் உள்ள திமிங்கலம் கூட ஆழத்திற்குப்
போகிறதாம்.
இப்படிப் பறக்கும் அனுமனை நோக்கிப் பொன் வண்ணம் கொண்ட மலைச் சிகரம் ஒன்று வானை நோக்கி எழுகிறது.
மைனாகம் என்ற பெயர் கொண்ட அந்த மலை
முற்காலத்தில் இறக்கைகள் கொண்ட மலைகளில் ஒன்றாக இருந்தது.
மலைகளுக்கு இறக்கை?
ஆராய வேண்டிய விஷயம்தான்.
மலைகள் உற்சாகமாகப் பறந்துக் கண்ட இடங்களில் இறங்கிய வேகத்தில் ,
உயிரினங்கள் பாதிக்கப் படுவதைக் கண்டு தேவேந்திரன் அவைகளின் இறக்கைகளை வெட்டிவிட்டானம்.
அவன் ஆயுதத்துக்குப் பயந்து ,வாயுவின் உதவியை
மைனாகம் நாட அவன் இந்த மலையைக்
கடலுக்கடியில் கொண்டு சேர்த்தானாம்.
அனுமன் வாயுவின் மைந்தன் அல்லவா,.
ராம காரியமாகப் போகும் அவனைப் பார்க்கவும்,
தேவ கோஷங்கள்,வானரர்களின் இறைச்சல் இவையெல்லாம் காதில் விழ உடனே வாயுமைந்தனுக்கு உதவி செய்யவும் மைனாகம் கடலின் மேல் மட்டத்திற்கு வருகிறது.
மாருதிக்கு இது ஒரு தடை என்று தோன்ற தன்
தோளால் அதைத் தடுக்கிறான்.
உடனே மைனாகம் மனித உருக் கொண்டு அவனை இனிய சொற்களால் விளித்துத் தன் கதையைச் சொல்லி
அவனை உபசரிக்கிறது.
தான் போகும் வேகத்தைக் குறைக்காமல், மீண்டு வரும்போது உபசாரங்களை ஏற்றுக்கொள்வதாகக்
கனிவோடு மைனாகத்தைத் தட்டிக் கொடுத்து
விரைகிறான் வாயுமைந்தன்.
//மெய் வருத்தம் பாரார்,பசி நோக்கார்,கண் துஞ்சார்
கருமமே கண்ணாயினார்//
என்றெல்லாம் படித்தது அனுமனின் கடல்
தாண்டும் படலம் படிக்கும் ஒவ்வொருதடவையும் நினைவுக்கு வரும்.
என்ன ஒரு விவேகம்.
இந்திரியக் கட்டுப்பாடு, சொல்லாண்மை நம் அனுமனுக்கு.
மீண்டும் பயணத்தைத் தொடரும் மாருதி இன்னும் மேலே எழும்புகிறான்,.
புவி ஈர்ப்புக்குமேலே போய் விட முயற்சிக்கையில் யாரோ தன்னைத் தடுக்க எழுவதைப் பார்க்கிறான்.
அவள் பெயர் சுரசா.
தேவர்களால் அனுமனைச் சோதிக்க அனுப்பப் பட்டவள்.
கடலில் பரந்து நிர்கும் அவளினுருவத்தைப் பார்த்த அனுமன் வீண் சண்டை வேண்டாமென்று தான் பயணிக்கும் நோக்கத்தை எடுத்துச் சொல்ல அவள் அதை எதிர்த்துத் தன் வாயில் அவன் தன் உணவாக நுழைய வேண்டும் என்று கட்டளையிட,
நுணுக்கமாகத் தன் உடலைச் சுருக்கி அவள் வாயில் புகுந்து காதுத் துவாரம் வழியே வெளி வருகிறான் வீர ஆஞ்சனேயன்.
சுய உருவெடுத்து அவனைப் பாராட்டும் சுரசை எடுத்தக் காரியத்தில் வெற்றி பெற வாழ்த்தி விடைபெறுகிறாள்.
ஒரு நல்ல வேலைக்கு எத்தனை தடை வந்தாலும் எப்படி , கருத்தோடு, எண்ணிய வெல்லாம்
துணிந்து முடிக்க வேண்டும் என்று நமக்கு உரைக்க அனுமனைத் தவிர வேறுயார்.?
இன்னும் மேலே உயரத்துக்குத் தாவும் மாருதியின் நிழலைப் பற்றி இழுக்கிறாள் ஸிம்ஹிகை.
இந்த அரக்கியைப் பற்றி ஏற்கனவே சுக்ரீவன் அனுமனுக்கு எச்சரித்து இருப்பதால்,
நிதானிக்கும் அனுமன் அவளைக் கடக்கச் செத முயற்சி வீணாக,
மீண்டும் தன் உருவத்தைச் சுருக்கி,
அவள் இதயத்தில் பாய்ந்து உயிரை மாய்க்கிறான்.
அரக்கியிம் மாபெரும் உருவம் கடலில் வீழ்கிறது.
வெற்றியுடன் எழும் அனுமன்
ஸ்ரீராம சீதாராமனின் நாமப் பிரபாவத்தை எண்ணிய வண்ணம் கடலின் கரையைக் கான்கிறான்.
அழகான இலங்கைத் தீவு கண்ணில் பட அதன் முக்கிய சிகரங்களில் ஒன்றான லம்ப மலையில் காலைப் பதித்துக்
கீழே இறங்குகிறான் ஆஞ்சனேய சூரன்.
இராவணின் அழிவை எண்ணி இடது காலை முன்னே வைப்பதாகப் பாடல்வரிகள் அமைகின்றன.
அனுமன் அடி போற்றி.
சீதாராமனுக்கு ஜயம். வந்தனம்.








Tuesday, March 13, 2007

யார் பேச்சை யார் கேட்கிறார்கள்?






மரியாதைக்காக நாம்
சில பல வேளைகளில் சில பல சொற்களைக் கேட்கிறோம்,அதன்படி நடக்கிறொம், செய்கிறொம்.

சின்ன வயதில் பெற்றோர் வாக்குக்கு உடன் பட்டாலும்
சில சமயம் மறுப்பதும் உண்டு.

அதே நாம் ,நமது குழந்தைகளைப் பார்த்து
அறிவுரை இனாமாக, இலவசமாகக் கொடுக்கிறொம்

அவர்கள் 60 சதவிகிதம் காதில் வாங்கி, 40 சத்ிகிதம் நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன்னால் இதேதான் நடந்தது.
இப்போதும் இதேதான் நடக்கிறது

அப்போதும் திருமணம் முடியும் வரை தாய்,தந்தையரை

நம் முதல் அட்வைசர்ஸ் ஆக வைத்து இருப்போம்.
நமக்கு ஏதுவாக இருப்பதை எடுத்துக் கொள்வோம்.

திருமணம் முடிந்த பிறகு கணவர்
சொல்வது வேதவாக்கு.
அது பிறந்த வீட்டு வார்த்தைகள் பாணியில்இருக்காது.
இருந்தாலும் சொல்வது கணவர் இல்லியா.
அதனால் அதுபடி நாம நடக்கணும்.

நாம்,

'எங்க 'வீட்டிலெல்லாம் இப்படித்தானப்பா என்று அம்மா அப்பாவிடமே கதை அளக்கும் போது
அவர்களும் சிரித்துக் கொள்வார்கள்.

இங்கே சுருதி எப்போது குறையும் தெரியுமா.
பெண் வந்து புகுந்த வீட்டு சிறப்புகளை அள்ளி விடும்போது மகிழத்தெரிந்தவர்களுக்கு,

தன் வீட்டுப் பையன்கள் தங்கள் மாமனார் வீட்டுக்கு
அடிக்கடி போனாலோ,
அந்த மாமியார் சமையல் திறனை எடுத்துப்
பேசினால் வீட்டில் ஒரு சங்கடம் வந்து விடும்.

ஒண்ணுமே உப்புப் பெறாத விஷயத்துக்கு எல்லாம்
அம்மாக்காரிக்கு சிணுசிணூப்புக் காட்ட
வேண்டி இருக்கும்.

சாதாரணமாக இருக்கும் பையனும் அம்மா முகத்தைப் பார்த்து, அம்மாவுக்குப் பிடித்ததையே பேசுவான்.
அதில் சில சமயம் பொய்யும் சொல்லி மாட்டிக்
கொள்ளுவான்.:-))
அம்மா கேட்கும் கிராஸ் கேள்விகளில் மாட்டிக்காதவங்க யாரு.
இதோ நம் மெரினா சாரின் ஊர்வம்பு நாடகத்திலிருந்து
சில வரிகள்..
''கணேசன்..........லலிதா பொறந்தாத்துக்குப் போறென்னு சொல்லறா.
'அம்மா----ஏண்டா அவள் ஒருமாசம் போனா குழந்தை படிப்பு என்னா ஆறது. '
'அந்த ஊரு அழுக்குத் தண்ணியும்,ரோடு புழுதியும் அவனுக்கு ஒத்துக்காது.
அதுக்குத்தான் சொல்லறேன்.
அப்புறம் உன்பாடு அவள்பாடு. ''

காட்சி மாறுகிறது. கணேசனும் தர்மபத்தினியும்
லலிதா, ''எனக்கு ஒரே ஓச்சலா இருக்கு.
நான் வாயைத்திரந்து ஒரு வார்த்தை உங்ககிட்ட சொல்லலை.//
அப்பா ஊருக்குப் போகும்போது நானும் போயி 2 வாரம் இருந்துட்டு வரேனே. ''
கணேசன்.........''.அத்தை சுரேஷ் படிப்பு கெட்டுடும்னு சொல்லறா// ''
லலி.......''ஆமாம் சொன்னாள். அவளுக்கு நான் ஊருக்குப் போனா பிடிக்குமா ஏதாவது சாக்கைச் சொல்லி நிறுத்தப் பாக்கிறா..// ''
கணே...''அவளுக்கு சுரேஷப் பத்திதான் கவலை// ''
லலி... //''ஆம்மாம் அவ்ன காலெஜ் படிக்கிறான்!!

அத்தை சொல்லறதைக் கிளி போலச் சொல்லுங்க.
நான் இங்கேயே உழைச்சு உழைச்சு துரும்பாப் போறேன்.''(கண்ணைக் கசக்குகிறாள்)
கணேசன் தலையைப் பிடித்துக் கொள்கிறான்.
இந்தப் ப்ரச்சினை எல்லா வீட்டிலும் இருக்கிறதுதானே. :-0)


எனக்குத் தெரிந்த ஒரு தோழி மிக்க கலகலப்புடன் இருப்பவள். பாட்டு,சித்திரம்,பக்தி எல்லாம்
ஒரே ஈடுபாடு.
ஆனால் மருமகள் வந்தபோது, மாமியார்-மருமகள்
ஹனிமூன்
பீரியட் என்பது இரண்டு வாரங்கள் தான் நீடித்தது.

வந்த மருமகள் உடனே ஆஸ்திரேலியாவுக்கு,
கணவனுடன்
கிளம்பிவிட்டாள்.
அங்கே ஏர்போர்ட்டில் மகனை இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பார்க்க முடியாத சோகத்தோடு என் தோழி.
பெற்றோரை விட்டுக் கிளம்பும் மனைவி கண்ணீரோடு இருப்பதைப் பார்த்த மகன் அம்மாவை அம்போனு விட்டு மனைவியைச் சமாதனப்படுத்தப்

போய் விட்டான்.

நான் கூட இருந்ததால் தோழியின் முக மாறுதலைப் பார்க்க முடிந்தது.
மகன் ஊருக்குப் போற சோகத்தைவிட , மருமகளை அணைத்து அவன் ஆறுதல் சொல்வது இவளுக்கு
மஹா கஷ்டமாகி விட்டது.
ஏர்போர்ட்டில இருக்கிறவர்கள் எல்லாம் அவனுடைய ப்ஃஇசிகல் டெமான்ஸ்டிரஷனைப் பார்ப்பதாக அனுமானித்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

பெண்களுக்கு சூட்டிகை ஜாஸ்தி.

மாமியாரை எட்டிப் பார்த்த மருமகளும் ,'கொஞ்சம் தள்ளிப்
போங்கொ ' உங்க அம்மாவுக்கு பிபி ஏறுகிறது' என்று திருப்பி விட்டாள்.

அன்று ஆரம்பித்த பனிப்போர் இன்னும் தொடருகிறது.

மகனோ மாப்பிள்ளையோ,மகளொ, மருமகளொ
எல்லோரிடமும் முழுமனசுடன் அன்பைக் கொடு என்று சொல்ல முடியாது.
அதே போல நாமும் அவர்களிடம் மொத்த அன்பையும்
--கேள்வி கேட்காமல் செலுத்தினால் ஒரு வேளை

சந்தோஷமும், அமைதியும் திரும்பும் என்று நினைக்கிறேன்
உங்க அனுபவம் எப்படி??
நானும் மாமியார் தான்.
எனக்கும் நிறைய ஆவலாதி உண்டு.

யாருக்குக் கேக்க நேரம் இருக்கு/
யார் சொல்லி யாரு கேக்கறது?

Sunday, March 11, 2007

THE QUEEN......படம் பார்த்த கதை

அமெரிக்கா வந்ததிலிருந்து வேறு ஒரு முனைப்பே இல்லாமல் ராப்பகல் காத்து கண்விழித்து


வேலை வேலை என்று உழைத்து இதோ நாலு மாதமும் ஆச்சு.
ஒரு சினிமா உண்டா, ஒரு பைத்தியக்கார டிராமா உண்டா
ஒரு பொதிகை சானல் உண்டா, சுடச்சுட குபீர் சேதிகள் கொடுக்க தமிழ் சூரியன் தான் உண்டா என்று புலம்புவது
எப்படியோ:-) என் பெண்ணின் காதில் விழுந்துவிட்டது.!!
ராமச்சந்திரா புலம்பாதெயேன்.'
இது அவள்.
குளிர்ல வாக்கிங் போக முடியலை, எனக்காவது கார்பெண்ட்ரி,கார் ரிபேர்,
கராஜ் ஒழிக்கிறது இப்படி பொழுது போறது.
அம்மா பாவம்:-( இது எங்க சிங்கம்.
அடப்பாவி மன்னாரே!
சென்னைலே மூலைக்கு மூலை சபா. சத்யம் பக்கத்தில இருக்கு.ஏதோ ஒரே ஒரு படம் போகலாம்னா,
''lost interest in movies ma.
take muniyammaa and go.''
எனக்கு அந்த சத்தம் ஒத்துக்கலை.''
இப்படிச் சொல்லிக் கழுத்தை அறுப்பவர்,இங்கே
வந்து பெண்ணு கிட்டே சிபாரிசு செய்கிறார் என்று
ரோசமாக இருந்தாலும்,
படம் எதாவது ஒன்று பார்க்க வேண்டும்.
அதுவும் பாப் கார்ன் சாப்பிட்டுக் கொண்டு பார்க்கணும் என்ற ஆசை
தீவிரமானது.
ஆச்சு. ஆஸ்கார் நைட்.
ரெட் கார்பெட். ஏதோ நடுவில பாப்பாவும் அழாம, சமையலும் ஒரு மிளகுரசம், சுக்கினி கூட்டு,சலாட்
என்று முடிவாகிச் செய்துவிட்டு
என் அரசாங்கத்திலிருந்து இருபதடி தள்ளி இருக்கும்
டிவி பக்கத்தில் வந்து உட்கார்ந்து விட்டேன்.
அடடா, இப்படிக்கூட இன்னோரு உலகமா ஆஆ
என்று லயித்துப் பார்க்கும்போது இந்த ஹெலன் மிர்ரன் அம்மா வந்தாங்க.
கொஞ்சம் வெள்ளைத்தலையா இருக்கே
ஒரு வேளை ஹீரோயினியோட அம்மாவோ
என்று பெண்ணைப் பார்த்து கேட்க,
ஆஸ்கார் நாமினிம்மா இவர்.
ஒப்ரா ஷோ ல கூட வந்தாங்களே.
''ஓ நீ அதைப் பார்க்கலியா. சரி சரி, இவங்க க்வீன் படத்தில ராணி எலிசபெத்தா வந்து இருக்காங்க.
செலக்ட் ஆவாங்களொ என்னவோ''
சட்டுனு பேச்சைத் திசை மாற்றி மேலெ பார்க்க
ஆரம்பித்தோம்.
எல்லென் என்கிற பெண் ஆஸ்கார் நிகழ்ச்சியைப் பிரமாதமாகத் தொகுத்து அளித்தார்.
ஒரு தொய்வு இல்லை. அவரே ஒரு தொலைக்காட்சி அமைப்பின் நடத்துனராம்.
ஆஸ்கார் முடிந்து பெஸ்ட் ஆக்டிரெஸ்
அவார்டும் இந்த ஹெலன் அம்மாவுக்குக் கிடைச்சு,
அடுத்த நாள் ஒப்ரா ஷொவிலயும் வந்துட்டாங்க.
இப்படி 61 வயதில உடம்பைச் சிக் னு வச்சுக்கிட்டு
ஒரு டிராமடிக் ரோல் வேற செய்து
ஆஸ்கார் வேறத் தட்டியாச்சு.
ஹ்ம்ம். எங்களுக்கெல்லாம் சான்ஸ் இருந்தா எங்கேயோ போயிருப்போம்.
எங்கே ஆசை,தாசில்,மாடு என்று நான் பழமொழிகள் உதிர்க்கும் முன்ன என் பெண் ''இந்தப் படம் நாம பர்க்கணும்ம்மா' என்று டிக்ளேர் செய்தாள்.
நடைமுறைக்கு ஒவ்வாத பேச்சா இருக்கேனு நான் முறைத்துக் கொண்டேன்.
எல்லாம் முகத்தில் காட்ட மாட்டேன்.
அன்னியன் மாதிரி உள்ள ஒரு குரல், வெளில ஒரு
குரல்.!:-)
ஆனால் பாருங்கள் ஒரு வெய்யில் அடிச்சுது நேற்று.
வீடே கலகலத்துப் போச்சு.!!
சுறுசுறுப்புன்னாச் சொல்லி மாளாது!
கார் சீக்கிரம் கிளம்பறது. கதவு சீக்கிரம் திறக்கிறது.
சமையல் சீக்கிரம் முடிகிறது.(கத்திரிக்காய் கலந்த சாதம்,வெங்காயப் பச்சடி, உருளை கொத்சு)
எல்லாம் ஆதித்தனோட பெருமை!
சனிக்கிழமையா வேற போச்சா.
மாப்பிள்ளை,மாமனாரோடு குடும்பத்தை மேய்ப்பதாகச் சொல்லவும், விட்டோம் சவாரி ..
ஏஎம்சி காம்ப்ளெக்ஸுக்கு.
ஆன்லைன்ல டிக்கெட் விலை அதிகம்.
நேரிலேயே வாங்கிக்கலாம் என்று பத்துமைல்கள் கடந்துவந்தோம்.
வரிசை நீளமோ.கைக்குக் கிடைச்சு வாய்க்குக் கிடைக்காதொ என்று பயம் வந்தது. ஏனெனில் பார்க்கிங் லாட் பூராவும் ஒரே கார்கள்மயம்.
அப்புறம் தெரிந்தது 20 தியெட்டர்கள் இருக்காம்.
நாங்க பார்க்க வந்த 'குவீனு'க்கு எகப்பட்ட இடம் காலியாக இருந்தது.
பாப்கார்ன், ப்ரெட்சல் சகிதம் உள்ளே வந்தாச்சு.
ஒரே நிசப்தம். எண்ணிப் பதினைந்து பேர் இருப்பார்கள்.



படமும் ஆரம்பித்தது.
இளவரசி டையனா விபத்துக்குள்ளாகி,
இறந்து அரச குடும்பம்
பிரச்சினையில் மூழ்கிய ,பத்துவருடங்களுக்கு முன்பு நடந்த கதை.
லேசா நம்ம ஊரு மாமியார்,மருமகள் சண்டைதான்.
ஆனால் இத்தனை அரசு கட்டுப்பாடுகள், விதிமுறைகள்,கணவனின் தப்பான போக்கு எல்லாவற்றையும் கணித்து ,அதையும் மீறி அந்தப் பெண்ணுக்கு இருந்த தைரியம் அசர வைக்கீறது.
ஏற்கனவே ' ஹர் ராயல் ஹைனெஸ்' பட்டத்தை இழந்துவிட்ட டயானா ,தன் காதலனுடன் வெளியில் சுற்றினாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க, அதுவரை ஏகபோக கவனிப்பிலிருந்து விலக்கப் படுவது
யாருக்குமே கஷ்டம்தான்.
அதுவும் பரம்பரைக் கௌரவம், ரிஜிட் ரூல்ஸ்,
இறுக்கமான முகம் இதை ஒன்றுமே விட்டுக் கொடுக்காமல், எலிசபெத் மகராணி இதை எப்படிச் சமாளிப்பார் என்று நான் அப்போது வேடிக்கை பார்த்தேன். டிவியில்தான்.
இப்போது இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஹெலன் மிர்ரன்
அப்படியே அரச முகபாவத்தைக் கண் முன்னால் கொண்டுவந்துவிட்டார்,.
குற்றம் சொல்ல முடியாத நடிப்பு. இயல்பான
வலு இழந்த ராணியைக் காட்டி இருக்கும் முகம்.
'என் மக்களை நான் புரிந்து கொள்ளவில்லை'
என்று பிரதம மந்திரியிடம் ஒப்புக்கொள்ளும் விதம்
தனிமையில் ஒரு பாறையின் மேல் உட்கார்ந்து மறைந்த மருமகளுக்காக அழுவது.,அது தன்னிரக்கமாகவும்
இருக்கலாம்,
தன் அம்மா குவீன் மதரிடம் மனம் விட்டுப் பேசுவது,அசட்டுத்தனமாகப் பேசும் கனவனை ஒரு பார்வை பார்ப்பது, பேரன்களின் நலனில் ,யோசனையில் முகம் குவிவது,,
அத்தனையும் வெகு அழகாகக் காட்டி இருக்கிறார்.
இவரைத்தவிர டோனி ப்ளேறாக நடிக்கும்
மைக்கேல் ஷீனும், பிரின்ஸ் பிலிபாக ந்டிப்பவரும் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.









நல்லதொரு படைப்பு.
தைரியமாகப் பார்க்கலாம்.
இந்தப் படத்துக்கான ரெவியூக்கள் இணையத்தில் நிறைந்திருக்கின்றன.
லின்க் இதோ.
THE QUEEN..
www.thequeenmovie.co.uk/

Thursday, March 08, 2007

சித்திரராமன்........9----வாலி,சுக்ரீவா











மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரத்தைக் கண்ணெதிரே காண்கிறான் வாலி.


வில்லைக் கையில் பிடித்து அதன் முனையைத் தரையில் ஊன்றி நிற்கும் ராமனைக் காணும்போது அவனுக்குத் திகைப்பாக இருக்கிறது.


ஒரு கார்மேகத்தில் தாமரை பூக்குமா. பூத்திருக்கிறது.


ஒன்றல்ல இரண்டல்ல. ராமன் உருவமெ தாமரைகளாகத் தெரிகிறது.


சுக்ரீவனும் ராமனும் நட்புப் பூண்டது தெரியும்.


தன்னை வெல்ல ராமன் வருவான் என்று


தெரியாது.
இதற்கு முன் நடந்த காட்சிகள்:
ராமனைத் தரிசிக்கும் அனுமான்.
தன் சரித்திரத்தைச் சொல்லி முடிக்க,
லக்ஷ்மணனும் தங்கள் கதையைச் சொல்கிறான்.
ராமன் அனுமனைக் கண்டு வியக்கும் விதம்
அதிசயம். அவன் பேசும் தோரணையைவைத்தே
இவன் நவவியாக்கிரத.... ஒன்பது விதமான இலக்கணங்களையும் வேதங்களையும் கற்றுத் தெளிந்தவன். வினயமே வடிவு கொண்டவன்.
ப்ரம்மச்சாரி.
எடுத்த காரியத்தை முடிக்கும் சமர்த்தன்.
பலம் படைத்தவன்.
முன் யோசனை மிக்கவன்.
என்றெல்லாம் தம்பியிடம் உரைக்கிறான்.
அனுமனுக்கு ரமனைப் பார்த்ததுமே 'என்பெ'ல்லாம்
உருகியதாம். தன் வாழ்க்கையின் முழுப்பயனை அடைந்ததாகச் சுக்ரீவனிட்ம சொல்கிறான்.
ரிஷிபத்தினி அளித்துப் பின் சீதை
தன் மேனியில் பூட்டி இருந்த ஆபரணங்களைக் கண்டு சோகிக்கும் ராமனைத் தேற்றும் சுக்ரீவன் ,இவனுடைய துன்பத்தை உணரும் ராமன் இருவருமே அக்னி சாட்சியாக ஒருவருக்கு ஒருவர்
உதவ ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.
ராமனின் பலத்தைச் சோதிக்க,சுக்ரீவனுக்கு யோசனை கொடுப்பதே அநுமன்தான்.
ஏழு ஆச்சா மரங்களையும் ஒரே அம்பில் வீழ்த்தும் ராமனைக் கண்டு மனஉறுதி பெறும் அவன், தன்னிடம்
இருக்கும் எல்லாம் ராமன் வசம் என்று சரணாகதி
செய்கிறான்.
ராமன் அவனை வாலியைப் போருக்கு அழைக்கச் சொல்லி அறிவுறுத்த
சுக்ரீவனும் கோட்டை வாயிலில் சென்று
அண்ணனை அழைக்கிறான்.
முதலில் நம்பாத வாலி, தாரை(அவன் மனைவி)யின் வார்த்தைகளையும் தட்டிவிட்டு
வெளியே வருகிறான்.அங்கெ
சுக்கிரீவனைக் கண்டதும் பொங்கி எழும் கோபத்தோடு பொருதுகிறான்.
இரு மலைகள்,இரு கடல்கள் இவை மோதுவதுபோல் இவர்களின் சண்டை-மல்யுத்தம் வளர்கிறது.
வாலியின் பலத்துக்கு முன்னல் சுக்கிரீவன் அசந்து போகிறான்.
ராமனின் பாணம் வந்து வாலியின் மேல் பாயும் என்றால் அதையும் காணோமே/.
மீண்டு ராமனிடமே ஓடி வருகிறான்.
நீ ஏன் வாலியைக் கொல்லவில்லை என்று ராமனைக் கோபத்தோடு வினவுகிறான்.
உனக்கும் அவனுக்கும் வேறுபாடே தெரியவில்லை.
என்று ஒரு பொன்னிற மாலையை அவன் தோளிகளில் போட்டு அனுப்புகிறான்.
இந்த தடவைப் போரில் வாலி சுக்ரீவனைத் தலைக்குமேல் தூக்கி,
கீழே வீசி எறியப் போகும் தருணத்தில் ராமன் தன் வில்லில் பூட்டிய அம்பைத் துறக்கிறான்.
கீழே விழும் வாலிக்கு அம்பு துளைத்த வலியைவிடத் தன்னை வீழ்த்தியவன் யார் என்று தெரிவதற்காக
அம்பைப் பார்க்கிறான்.
அதில் எழுதி இரூக்கும் 'ராமா' என்ற எழுத்துகளைப் பார்த்து நிமிர்ந்து ராமன் மரத்து மறைவிலிருந்து
வருவதைப் பார்த்துக் கோபத்தின் உச்சிக்கே போய்விடுகிறான்.
ராமா தசரதன் மைந்தனா நீ?
நான் உனக்குப் பங்காளியோ தாயாதியோ இல்லையே.
உன் மனித ஜாதி கூட நான் இல்லை.
உனக்கும் என்ககும் தனிப்பகை கிடையாது.
உன் ராஜ்ஜியத்தின் பகுதியில் நான் இல்லை.
அத்துமீறி எந்தக் குற்றமும் ( நான்)செய்யவில்லை.
எதற்காக ந்னைக் கொன்றாய்?
ஒருவேளை உங்கள் மனு நீதியில் ''அரக்கன், உங்கள் குலப்
பெண்ணைக் கடத்தினால்,ஒரு குரக்கனைத் தண்டித்தால் பாபம் தீரும் '' என்று எழுதி வைத்திருக்கிறதோ என்ரெல்லாம் கேட்கிறான்.
ராம்ன எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு
தன் நீதியை எடுத்து உரைக்கிறான்.
'வாலி நீ எனக்குப் பங்காளிதான்.
எங்கள் அரசுக்குக் கட்டுப்பட்ட நிலத்தில் தான் நீ
அரசு புரிகிறாய்.உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது.
பரதனின் அரசாட்சி நடக்கும்போது
அதன் பிரதிநிதியாய் உன்னைத் தண்டிக்க எனக்குக் கடமை உண்டு.
நீ தவறு இழைத்து இருக்கிறாய்.
மாற்றான் மனைவியை உன் வீட்டில் வைத்தாய்.
சரணடைந்த தம்பியைத் துரத்தினாய்.
நீ வன மிருக ஜாதி என்று நீயே சொன்னாய்.
மிருகங்களுடன் நேர்மைப் போர் புரிய முடியாது.
சிங்கத்தையோ புலியையோ மறைந்து நின்று தாக்குவதுபோலத் தான் நானும் உன்னைக் கொன்றேன்;'
என்று அமைதியாகப் பேசும் ராமனின் சொல்லை அப்படியே உள்வாங்கி வாலி தன் சலனத்தை
விடுகிறான்.
நிறை புத்திசாலி,கோப வசப்பட்டதால் வாழ்வை இழக்கிறான்.
தன் மகன் அங்கதனைக் கைப்பிடித்து சுக்ரீவராமர்களிடம் ஒப்படைக்கிறான்.
அனுமனை எப்பொதும் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறான்.
நீ அயோத்தி செல்லும்போது அங்கே யாரும் என் தம்பியை இழிவாகப் பேசாமல் பார்த்துக்கொள்.
அவன்,
'இந்தச் சின்ன பூமியைத்" தான் எடுத்துக் கொண்டு பெரியமோட்சத்தை உன்மூலம் கொடுத்துவிட்டான் ராமா''
என்ற வண்ணம் கண் மூடுகிறான்.
செய்தி அறிந்து ஓடிவந்த தாரை
வாலியின்மரணத்துக்கு துயரப் படுகிறாள்.
ராமனைத் துதித்து வானரர்களைக் காக்கும்படி வேண்டுகிறாள்.
வாலியின் சடங்குகள் முடிந்ததும் சுக்ரீவ பட்டாபிஷேகம்.
ராமனும் லட்சுமனனும் மால்யவான் குகைப் பிரதேசத்துக்குப் போகிறார்கள் மழைக்காலத்தைக் கழிக்க.
நாமும் பொறுத்து இருப்போம்.

பின்னூட்டப் பதிவுகள்

பதிவுகள்,
பின்னூட்டங்கள் என்று தமிழ்மண வாழ்க்கை போகிறதேனு நினைக்கும்போதே
மறுபடி ஏதோ சொந்த செலவு சூன்யம் செய்துவிட்டேனோ தெரியவில்லை.

சும்மா இருக்காமல் சோதனை செய்யப் போய்,
செட்டிங்க்ஸில் ,ஏதாவது மாற்றி விட்டேனோ.

மறுபடித் தமிழ்மண உதவி தகவல் பக்கத்தை
மீண்டும் உதவிக்கு அழைத்து
சரி செய்து,
டெம்ப்ளேட் மாத்தி............,
தேவுடா!!
எத்தனை தீவிரமா நானும் இத்தனை வேலைகளுக்கு நடுவிலக் கஷ்டம் பாக்காம,:-)
சேவை செய்யணும்னு நினைக்கிறேன்.
ம்ம்ம்ம். நடக்கலியே.

பார்க்கலாம்.
யாரவது மந்திர மாயம் தெரிஞ்சவங்க கொஞ்சம் என் ப்ளாகுக்கு ஆசீர்வாதம் செய்யுங்க.

நோயெல்லாம் தெளிஞ்சுடும்.

மகளிர்தின வாழ்த்துகள்.




மாதவம் செய்து மங்கையராகப் பிறந்தோம் என்பது சொல்வழக்கு.
மா தவமே வாழ்க்கையாக இல்லாமல் சாதாரண ,போராட்டம் இல்லாத வாழ்க்கை அமைந்தாலே
போதும் என்ற நிலைமை நம்மில் சிலருக்கு.
குடும்பத்தில் ஒரே ஒரு பெண் சந்தோஷமாக இல்லாவிட்டால் மற்றவர்கள் வாழ்க்கையும் சிரமப்படும்.
ஆரம்பத்தில் தெரியாவிட்டால் கூட,
நாள் ஆக ஆக மாற்றங்கள் தெரியும்.
தந்தை தாய் இருவரும் இன்பமாகக்
குடும்பம் நடத்தாவிடில்
குழந்தைகள் பாதிக்கப்படும்.
அந்தக் குழந்தைகள் வளர்ந்து தனியாகக் குடும்ப்ம அமைக்கும்போது
தாங்கள் சிரு பருவத்தில் சந்தித்த ஏமாற்றங்கள்
எதிர்ப்புகள் அவர்கள் பெறும் சிறார்களையும்
அவதிக்குள்ளாக்கும்.
இவைகள் நடந்தேறாமல் முதல் பெண்மணியான தாயை
மதித்து தந்தை மற்றும் அனைத்து நபர்களும் நடக்கும்போது,
பெண்மை சமமாகக் கருதப்படும் போது,
நாம் மகிழ்வோம்.
மகளிர் நலம் பெருக
மங்கையர் தின வாழ்த்துக்கள்.

Tuesday, March 06, 2007

சோதனைப் பதிவு


வலையில் பதிவு ஒன்று
செய்தால்
தெரிய வருமா
இல்லையா என்று பார்க்க இந்தப் பதிவு.:-)

Friday, March 02, 2007

சித்திரராமன்..8 கபந்தன் சபரி மோட்சம்,அனுமன் வந்தான்




அனுமன் அருள் புரியும் அழகு மிகு காண்டம் கிஷ்கிந்தா காண்டம்.


சீதையைப் பிரிந்த சோகத்தில் ராமன். அவனைத் தேற்ற வழி தெரியாமல் வருந்தும் லக்ஷ்மணன்.

தானே கேள்விகேட்டுத் தானே பதில் சொல்லிப் புலம்பிக் கொண்டே அலைபாயும் தமையனை ஆதரவுடன் வழி நடத்தி வருகிறான்.

மரம் செடி கொடி நதி எல்லாவாற்றையும் கேட்கிறான் ராமன். என் சீதையைப் பார்த்தீர்களா என்று.

கோதாவரி நதியையும் பார்த்து கேள்வி தொடுக்கிறான்.

உன்னிடம் சீதை ஏதாவது சொன்னாளா என்று.

எப்போதும் சல்சலக்கும் கோதாவரி அப்போது மவுனமாகிவிடுகிறாள், ராவணனுக்குப் பயந்து.






















அப்போதுதான் குற்றுயிராய்க் கிடக்கும்
ஜடாயுவைப் பார்க்கிறார்கள். அந்த பறவையின அரசன்,
தான் சீதைக்குக் கொடுத்த வாக்குப் பிரகாரம் ராவணன் ரதம் சென்ற திசையைக் காண்பித்து,
சிறு விவரம் சொல்லி ராமனின் கைகளில் அமைதியாகீறார்.
கண்களில் சீதையைக் காப்பாற்ற முடியாமல்
போன தவிப்பு.
தந்தையைப் பிரிந்த துன்பத்திலிருந்தே வெளிவராத ராமன்
அவருக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களை ஜடாயுவுக்குச் செய்து கரைஏற்றுகிறான்.
ஏதோ ஒரு அடையாளமாவது தெரிந்த தெளிவில் மதங்க முனிவரின் ஆசிரமம் அடைகிறார்கள்.
வழியில் எதிர்ப்பட்டக் கபந்தனுக்கும் ராமன் கையால் விடுதலை கிடைக்கிறது.
'' தாயும் பிள்ளையும் ஒண்ணு வாயும் வயிறும் வேறு''
நமக்குத் தெரியும்.
இங்கே கபந்தனுக்கோ வயிறே வாய்.
அப்படி ஒரு சாபம்.
இரண்டு கைகளாலும் ராமலட்சுமணர்களை வாரியெடுத்து
வாயில் போட வந்தவனை ராமலட்சுமணர்களின்
சமயோசிதம் வெல்கிறது.
அவர்களின் ஆசிகளோடு சொர்க்கம் அடைகிறான்.
அவனிடமிருந்து வழியறிந்து சபரியிருக்கும் மதங்க
மாமுனிவர் ஆசிரமம் அடைகிறார்கள்.
தன் குரு வார்த்தை மீறாத சபரியின்
கைகளிலிருந்து அவள் சுவைத்து ருசி கண்ட
பழங்களை உண்கிறான்.
ராமன், சபரியின் விருப்பப்படி அவளைத் தன்
குருவுடன் வைகுண்டம் சேர்வதற்கு
வழி செய்கிறான்,.
அவள் ரிசியமுக பர்வத்துக்குப் போகும் வழியைச் சொல்லுகிறாள்.
பம்பை நதி, சுற்றுச் சூழல் அழகு அமைதி
எல்லாம் ராமனின் கலக்கத்தை அதிகரிக்கின்றன.
லக்ஷ்மணா, விடியுமா. சீதையைப் பார்க்கும் நாள் வருமா என்று அதீதமான சோகத்தில் புலம்பும்போது வருகிறான் நம் ஸ்ரீராம பக்த ஆஞ்சனேயன்.
அனுமானே நீ எப்படிப் பட்டவன்!
அஞ்சனை மைந்தா ஸ்ரீராமன் சோகத்துக்கே முடிவு கண்டாயே.
எங்கள் துன்பம் உனக்குக் குளத்து அளவு நீர்தானே?
ஒரு கண்பார்வையில் எங்களை
ஞானக்கரையில் அமர்த்திவிட மாட்டாயா?
ஆஞ்சனேயன் அடிபோற்றி.







Thursday, March 01, 2007

மழை,மின்னல்,இடி பயமா?




















படங்களைப் பார்க்கக் கூட பயந்த காலம் உண்டு.
வில்லிபுத்தூரிலோ, திருமங்கலத்திலோ தெரியவில்லை,
சினிமா பார்க்கப் போகும் முன்னமேயே மழைக் காட்சி வருமா என்று கேட்டுவிட்டுப் போகும்
வழக்கமும் இருந்தது.
பெற்றோர் மழுப்பி அழைத்துப் போவார்கள்.
பின்ன?/அப்பாவுக்கோ ஆடிக்கொருதரம் நேரம் கிடைக்கும்,அதில் ஒரு வீரபாண்டியக் கட்டபொம்மனோ, சம்பூர்ண ராமாயணமோ தான் பார்க்க அனுமதி.
சின்ன ஊர்களில் அம்மாவுக்கு தனியாக எங்களை அழைத்துப் போக அனுபவம் பற்றாது.
பரமசாது.
அதனால் எல்லோரும் வெளியில் சேர்ந்து போகும் வேளையில், தொந்தரவு செய்யாமல் ஒரு கலர், ஒரு மிக்ஸர் என்று இனிமையாக(?) போனோமா வந்தோமா என்றீல்லாமல் சினிமாவில் மழை வந்தாலே கண்ணு காது மூடும் பெண்ணை என்ன செய்ய முடியும்?
இத்தனை தூரம் இடி மின்னலைப் பார்த்து கேட்டு மிரளுபவர்கள் இருக்கிறார்களா என்று தெரிய வேண்டும்.
இது ஒரு ஃபோபியாவோட சேர்த்தியா?
கன்சல்டிங் சைக்காலஜிஸ்ட் கிட்ட போக வேண்டிய கேசா.?
தானா சரியாப் போறதுக்கு இன்னும் நிறைய நேரம் எல்லாம் கைவசம் இல்லை.
சில பேர் சொல்கிறமாதிரி இடிமழை ப்ஓது வெளியில் நின்று எதிர் கொள்ள வேண்டுமா.?
சேசே அது செய்ய முடியாது.
இப்போது நேற்று இரவெ எடுத்துக் கொள்ளுங்கள்.
எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது
எனக்கு மட்டும் ஒரே ஒரு மின்னல் கீற்று வெளிச்சம் ப்அட்டதும் விழிப்பு வருவானேன்.
இந்த ஊரில எல்லாம் கண்ணாடி.
ஒரெ வெள்ளைவெளேர்னு பளிச்சிடும் மின்னல்.
அதைவிடக் கொடுமை இடி வரக் காத்திருப்பது.
விறுவிறுனு எழுந்து துணிமணி மாட்டி வைக்கும்
(வாக் இன்)வார்ட்ரோபில் போய் உட்கார்ந்துவிட்டேன்.
இரண்டு மணீயிலிருந்து 4 மணி வரை ராம ஜபம்.
அதெப்படி சரியாக அங்கே போனேன் என்று நினைக்கீறீர்களா/
அதெல்லாம் ஒரு சுய பாதுகாப்பு தான்,
வெதர் சானலில் மழை, இடியுடன் கூடிய மழை என்று சொன்னத்,
செவ்வாய்க் கிழமை.
அன்றிலிருந்தே நம்ம ரேடார் வேலை செய்ததால்
ஒளிய இடம் கண்டுபிடிக்க முடிந்தது.:-0)
யாரோ சொன்னார்கள், இந்த ஊருகிற
சாதி இருக்கிறதே அதாம்பா அந்த பேர் சொல்லாத
படம் எடுக்குமே,
அதுவாக நான் போன ஜன்மத்தில் இருந்து இருப்பேனாம்.
ஏதாவது இடி சத்ததிலே,
பொட்டுனு சாமிகிட்ட போயிடருப்பபேனாம்.
அதான் பூர்வ ஜன்ம வாசனை இப்படிப் போட்டுத் தாக்குதாம்.
அதுக்காக இப்ப என்ன செய்ய முடியூம்.
நாடி ஜோசியம் பாக்கலாம்.
அவங்க சொல்ற கோவிலுக்கெல்லாம் போயி விளக்கேத்தலாம்.
அதுவும் மழை சீசனா இல்லாமல் இருக்கணும்.:-)
ஒரே ஒரு பரிகாரம் கேக்கப் போயி,
ஒன்பது ஜென்ம பாபங்களையெல்லாம் வரிசையாகச் சொல்லுவதைக் கேட்டு
இடியே தேவலைனு திரும்பி வரலாம்.
யாருக்கெல்லாம் என்ன என்ன பயம்னு சொல்லுங்கப்பா. நானும் மனசைத் தேத்திக்கறேன்.