






இவர் ஜடாயுவின் மூத்த சகோதரர்.
வானரர்களைக் கண்டு சேதி அறிந்ததும் ராவணனைப் பற்றியும் இலங்கை போகும் வழியையும் காட்டுகிறார்.
தன் தம்பியைக் கொன்றவனைப் பழி வாங்க உடலில் சக்தி இல்லையே என்று கோபம் பொங்குகிறது. ஆனாலும் அத்தனை சோகத்திலும்
அறிவு பிறழாமல் வழி சொல்கிறார்.
எத்தனை மகாத்மாக்களை ராமாயணம் நமக்குக் காட்டிக் கொடுக்கிறது!
எப்படியும் இருக்கலாம் என்கிற எண்ணத்தை வளர விடுவதே இல்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற முறை, கட்டுப் பாடுகளை வரையறுத்து
வழிநடத்துகிறது. மகேந்திர மலையின் அடிவாரத்தில் அங்கதன் தலைமையில் ஆலொசனை நடக்கிறது.
எல்லா வானரங்களும் தங்களால் எத்தனை யோசனை
தாண்ட முடியும் என்று
தங்களையே சோதித்துக் கொள்ளுகிறார்கள்.
கடலின் அளவு நூறு யோசனை.
கடைசியில் கடைசியில்தான் அனுமன் வருகிறான்.
மகேந்திரமலை உச்சிக்கு எல்லோரும் போகிறார்கள்.
(இப்போது எங்கள்  திருக்குறுங்குடியில் இருக்கும் அதே மகேந்திர மலைதான்.)
அங்கிருந்து ஸ்ரீராம நாம தியானத்தை ஆரம்பிக்கிறான் 
அனுமன்.
சர்வ  மருத்கணங்களையும்,ஐம்பூதங்களையும்,தேவர்களையும்  தியானித்துத், தன்  குரு கிருபையுடன்  வெற்றிகிடைக்க  வேண்டுகிறான்  ஆஞ்சனேயன்.
!!ஸ்ரீ ராம்  ஜெயராம்  ஜெய ஜெய ராமா!!
ராமன்  வில்லிலிருந்து  புறப்பட்ட  அம்பு  போன்ற வேகம்  கொண்டு,
,வல்லமை  பொருந்திய  வஜ்ரதேகத்துடன்
அனைவரும் பார்த்திருக்க ஒரு நூறு சூரியனுக்கு ஒப்பான தேஜஸுடன்
விண்ணை நோக்கிப் பாய்கிறான்,.
அனுமனின் வால் வீர விலாசத்தில் கொடிபோல் பறக்கிறது.
அவன் கால் ஊன்றிய வேகத்தில் மலையில் உள்ள பாறைகள் பொடியாகின்ற்ன.
கீழே வானர கோஷம் அவனைப் பின் தொடர்கிறது.
சீதையோடு திரும்புவேன் என்று சூளுரைத்து மேலும்
உயரத்தை எட்டுகிறான்.
அவனது வீர கர்ஜனையில் அலைகள் அலைக்கப் பட்டு எழும்பி விழுகின்றன.
கடலுக்கடியில் உள்ள திமிங்கலம் கூட ஆழத்திற்குப்
போகிறதாம்.
இப்படிப் பறக்கும் அனுமனை நோக்கிப் பொன் வண்ணம் கொண்ட  மலைச் சிகரம் ஒன்று வானை நோக்கி எழுகிறது. 
  மைனாகம்  என்ற  பெயர் கொண்ட  அந்த  மலை
முற்காலத்தில்  இறக்கைகள்  கொண்ட  மலைகளில் ஒன்றாக இருந்தது.
மலைகளுக்கு  இறக்கை?
ஆராய  வேண்டிய  விஷயம்தான்.
மலைகள்  உற்சாகமாகப் பறந்துக்  கண்ட   இடங்களில் இறங்கிய  வேகத்தில் ,
 உயிரினங்கள் பாதிக்கப்  படுவதைக் கண்டு  தேவேந்திரன்  அவைகளின்  இறக்கைகளை  வெட்டிவிட்டானம்.
அவன்  ஆயுதத்துக்குப்  பயந்து ,வாயுவின்  உதவியை
மைனாகம்  நாட  அவன்  இந்த மலையைக்
கடலுக்கடியில்  கொண்டு சேர்த்தானாம்.
அனுமன் வாயுவின் மைந்தன்  அல்லவா,.
ராம காரியமாகப்  போகும்  அவனைப்  பார்க்கவும்,
தேவ  கோஷங்கள்,வானரர்களின்  இறைச்சல்  இவையெல்லாம்  காதில்  விழ  உடனே  வாயுமைந்தனுக்கு  உதவி  செய்யவும்  மைனாகம்  கடலின் மேல் மட்டத்திற்கு  வருகிறது.
மாருதிக்கு  இது  ஒரு  தடை என்று  தோன்ற தன்
தோளால்  அதைத் தடுக்கிறான்.
உடனே மைனாகம் மனித உருக் கொண்டு அவனை இனிய  சொற்களால்  விளித்துத்  தன் கதையைச் சொல்லி
அவனை  உபசரிக்கிறது.
தான்  போகும் வேகத்தைக் குறைக்காமல்,  மீண்டு வரும்போது  உபசாரங்களை  ஏற்றுக்கொள்வதாகக்
கனிவோடு  மைனாகத்தைத்  தட்டிக்  கொடுத்து 
விரைகிறான்  வாயுமைந்தன்.
//மெய் வருத்தம் பாரார்,பசி நோக்கார்,கண் துஞ்சார்
கருமமே  கண்ணாயினார்//
என்றெல்லாம்  படித்தது  அனுமனின்  கடல்
தாண்டும்  படலம் படிக்கும்  ஒவ்வொருதடவையும்  நினைவுக்கு  வரும்.
என்ன  ஒரு  விவேகம்.
இந்திரியக் கட்டுப்பாடு, சொல்லாண்மை நம்  அனுமனுக்கு.
மீண்டும் பயணத்தைத்  தொடரும்  மாருதி இன்னும்  மேலே  எழும்புகிறான்,.
புவி  ஈர்ப்புக்குமேலே  போய் விட  முயற்சிக்கையில்  யாரோ  தன்னைத்  தடுக்க  எழுவதைப்  பார்க்கிறான்.
அவள் பெயர் சுரசா.
தேவர்களால்  அனுமனைச் சோதிக்க  அனுப்பப் பட்டவள்.
கடலில்  பரந்து நிர்கும் அவளினுருவத்தைப் பார்த்த  அனுமன் வீண் சண்டை வேண்டாமென்று தான்  பயணிக்கும்  நோக்கத்தை எடுத்துச் சொல்ல  அவள் அதை எதிர்த்துத் தன் வாயில்  அவன்  தன் உணவாக  நுழைய வேண்டும்  என்று கட்டளையிட,
நுணுக்கமாகத் தன் உடலைச்  சுருக்கி  அவள்  வாயில்  புகுந்து காதுத் துவாரம்  வழியே  வெளி வருகிறான் வீர  ஆஞ்சனேயன்.
சுய உருவெடுத்து அவனைப் பாராட்டும்  சுரசை எடுத்தக் காரியத்தில் வெற்றி பெற வாழ்த்தி விடைபெறுகிறாள்.
ஒரு  நல்ல  வேலைக்கு  எத்தனை தடை வந்தாலும்  எப்படி , கருத்தோடு, எண்ணிய வெல்லாம்  
துணிந்து முடிக்க வேண்டும்  என்று  நமக்கு  உரைக்க  அனுமனைத் தவிர  வேறுயார்.?
இன்னும் மேலே  உயரத்துக்குத்  தாவும்  மாருதியின் நிழலைப்  பற்றி  இழுக்கிறாள்  ஸிம்ஹிகை.
இந்த  அரக்கியைப் பற்றி  ஏற்கனவே  சுக்ரீவன்  அனுமனுக்கு  எச்சரித்து இருப்பதால்,
நிதானிக்கும் அனுமன்  அவளைக்  கடக்கச்  செத முயற்சி  வீணாக,
மீண்டும்  தன்  உருவத்தைச்  சுருக்கி,
அவள் இதயத்தில்  பாய்ந்து  உயிரை மாய்க்கிறான்.
அரக்கியிம்  மாபெரும்  உருவம்  கடலில்  வீழ்கிறது.
வெற்றியுடன்  எழும்  அனுமன்
ஸ்ரீராம  சீதாராமனின்  நாமப்  பிரபாவத்தை  எண்ணிய  வண்ணம்  கடலின்  கரையைக்  கான்கிறான்.
அழகான  இலங்கைத்  தீவு கண்ணில்  பட  அதன்  முக்கிய  சிகரங்களில்  ஒன்றான  லம்ப மலையில்  காலைப்  பதித்துக்
கீழே  இறங்குகிறான்  ஆஞ்சனேய  சூரன்.
இராவணின்  அழிவை  எண்ணி  இடது  காலை முன்னே  வைப்பதாகப்  பாடல்வரிகள் அமைகின்றன.
அனுமன் அடி போற்றி.
சீதாராமனுக்கு  ஜயம். வந்தனம்.

 
10 comments:
சுருங்கச் சொன்னாலும் அருமையாக செல்கிறது...மிக்க நன்றி வல்லியம்மா!
நான் தான் முதலிலானு தெரியலை. ம்ம்ம்ம், ஒரு வழியா இலங்கைக்குப் போயாச்சு. ஸ்ரீராமநவமி அன்னிக்குப் பட்டாபிஷேஹமா சிகாகோவிலே? வடை, பாயாசம், வடைப்பருப்பு, சுண்டல், பானகம், நீர்மோர் எல்லாம் உண்டா கதை கேட்ட எங்க எல்லாருக்கும்? :))))))))))
ரொம்பவே அனுபவிச்சு எழுதி இருக்கீங்க வல்லி. நல்லா வந்திருக்கு, படங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப அருமை! எங்கே இருந்து எடுக்கறீங்க?
ஸ்ரீராமதூதனைப் பாடுவதற்கும் பேசுவதற்கும் எத்தனை கோடிவார்த்தைகள் வேண்டும் மௌலி.
எது என்னை எழுத வைத்தது என்று எனக்கு இதுவரை புரியவில்லை.நீங்க வந்துசொல்வது ரொம்ப சந்தோஷம்.
இந்த ராமதாகம் முடியாமல் தொடர அவன்தான் அருளவேண்டும்.
கீதா,ஆமாம் இலங்கைக்கு வந்தாச்சு. மத்த நாட்களையும் அத்தியாயங்களையும் சீக்கிரம் சுவையாகக் கடக்கலாம்.
ஆமாம் பலஸ்ருதியோடு பட்டாபிஷேகம் உண்டு ராமன் கிருபையில்.
நீங்க வந்தால் இங்கேயே கொண்டாடலாம்.:-)
அருமை அருமை.
நம்ம படிக்கிறதுலே நேத்துதான் கணையாழியைக் கொடுத்துட்டு, சூடாமணியை
நேயடு வாங்கி பத்திரமா முடிஞ்சு வச்சுக்கிட்டார்.
உபந்நியாசம் புத்தகம் இருக்கறது எனக்குத் தெரியாமப் போச்சேப்பா.........(-:
இப்போ வால்மீகிதான் படிக்கிறோமுன்னாலும், நம்ம கம்பர் எழுதுனதும்
வாங்கிக்கணுமுன்னு ஒரு ஆசை வந்துருக்குப்பா.
பார்க்கலாம், எல்லாம் அவன் சித்தம்.
மதுரையம்பதிகிட்டே சொல்லிக்கறேன்.
அந்த ராமாஷ்டகம் எட்டு ஸ்லோகங்களை தட்டச்சு செஞ்சு போடுங்களேன். எல்லாருக்கும்
பயனாக இருக்கும்.
துளசி,
புத்தகம் அப்பா வழி உறவினர் நாற்பது வருடங்களுக்கு முன்னால் எழுதினது. பதிவில் இருக்கும் படம்(புத்தகம்) நெட்டில் எடுத்தது.
பாலகிருஷ்ண சாஸ்திரிகள் டேப் முன்ன நிறைய கேட்டு இருக்கேன்.
எல்லாம் ஒரு கதம்பமா இங்கே நினைவுக்கு வரதை எழுதுகிறேன்.:-)சுபம் நிலவ ராமாயணம் வேண்டும்.
அதான் தாரக மந்திரம்.
கீதா படங்கள் அனைத்துமே இணையத்திலிருந்து எடுத்ததுதான்.
அலுவல் காரணமாக தொடர் பயணங்கள். இருந்தாலும் வல்லியம்மாவின் சுந்தரகாண்டத்தைப் படிக்காமல்/பாராயணம் செய்யாமல் இருக்கமுடியுமா
பின்னர் விரிவாக பதில் வரும்
நீங்க வந்து படிக்கிறதே எனக்குப் பெருமைதான் தி.ரா.ச.
மெதுவாகவே படிக்கலாம். ராமன் எப்போதும் துணை இருக்கட்டும்.
துளசியக்கா, ராமாஷ்டகம் அடுத்த சித்திரராமன் பகுதியின் பின்னூட்டத்தில் இடுகிறேன். எடுத்துக்கொள்ளுங்கள்.
Post a Comment