1976இல் திருச்சியை விட்டுச் சென்னை வந்தோம்.
இப்போதைய பெரியவர்கள் அப்போது சின்னப் பசங்க:)
நவராத்திரி
நாட்கள் வந்தன.
மகளுக்கு மாடவீதி பொம்மைகளைப் பார்த்து ஒரே ஆவல்.
அப்போது நம்மிடம் இருந்தது ஒரே ஒரு ஸ்ரீராமப் பட்டாபிஷேக செட்டும்,
கண்ணன், மீனாக்ஷி பொம்மைகள் மட்டும் தான்.
முப்பெருந்தேவியரும் கொலுவிருந்து நம்மைக்காக்கும் காலங்கள் இறைவன் உலகைப் படைத்த நாளிலிருந்து நடை பெறுகிறது.
தயை,கருணை,அன்பு,இரக்கம் எல்லாக் குணங்களும் கொண்ட தாய்களாக
அவர்கள் நம் வீட்டைச் சிறப்பிக்க வருவது இந்த நவராத்தி நாட்களில்.
நம் தமிழ்நாட்டில் இந்த புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களுமே கோலாகலமாகக் கொண்டாட்டம்.
அன்னையைர் மூவருக்கும் மூன்று நாட்கள் ஒதுக்கி,முதலில் துர்கா,பிறகு லக்ஷ்மி தேவி,கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை
ஆவாஹனம் செய்து பிரத்தியேகப் பூகைகள் செய்வதும்
புகுந்த வீட்டு வழக்கம். ஆஜிப்பாட்டி சொல்லி , நான் பின்பற்ற ஆரம்பித்தேன்
அந்த வருடம்.
அவளோ நச்சரிக்க ஆரம்பித்தாள்.
அம்மா கொலு அம்மா கொலு என்று.
பாட்டி சரின்னு சொன்னால் வைக்கலாம் என்று நல்ல நேரம் பார்த்து(!)
பாட்டியிடம் வரம் கேட்டேன்.
நிறைய பேர் வந்து போகிற இடம்.
இத்தனூண்டு கூடத்தில் எங்கே வைப்பாய்.
உனக்குப் படிகள் கூடக் கிடையாதே.
முதலில் பொம்மை எல்லாம் இங்க இல்லையே .எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டேனே.
ஒரே ஒரு லக்ஷ்மி ,சாயமெல்லாம் போய் ஆனால் மகாக் களையோடு இருக்கிறாள்.
அவளை வைத்து ஆரம்பி. பின் 'மகளே உன் சமத்து என்று ஒரு ஐம்பது ரூபாயைக் கொடுத்தார்.
கச்சேரி ரோடு ராஜா கல்யாண மண்டபத்தில் கொலு பொம்மைகள் வைத்திருக்கிறார்களாம்.
அம்பாள்,
குழலூதும் கண்ணன் பளிங்கில்
அங்கே போய்ப் பார்த்து வேலையை முடி என்று அனுப்பினார்.
பூனைக்குட்டிகள், ஒரு அம்பாள்,இரண்டு பாவைகள்,ஒரு கிருஷ்ணன் இவை 48 ரூபாயில் வாங்கிவிட்டோம்.
பஸ் சார்ஜுக்கு ஒரு ரூபாய்,கொறிக்க வேர்க்கடலை...
சந்தோஷமாகத் திரும்பி வந்தோம்:)
பாட்டியிடம் காட்டினால்
'அடி காமாட்சி என்று முகத்தில் கைவைத்தார்.
இதில மூணு படி எப்படித் தேத்துவே என்றும் கேட்டார்.
பொண்ணொட படிப்பு மேஜை ரெடி
தேநீர் வைக்கும் டீ டேபிள் ரெடி.
கடைசியாக சின்னவனின் உட்காரும் ஸ்டூல்
இவற்றைப் பரபரவென்று ஜன்னலோரம் வடக்குப் பார்த்து வைத்தோம்.
மாமனாரோட சலவை வேஷ்டியைக் கேட்டு வாங்கி வந்தான் பெரியவன்.
நடு நாயகமாக மஹாலஷ்மி முகம் நிறையப் புன்னகையோடு அமர்ந்தாள்
அவளுக்குப் பக்கத்தில் அம்பாள். அந்தப் பக்கம் சரஸ்வதிபடம்.
இரண்டாம்படிக்கு கிருஷ்ணனும் பாவை விளக்குகளும் ,சுற்றிவர சின்னவனின் டின்கி டாய் கார்கள்.
மூன்றாம் படிக்கு பூனைக் குட்டிகளும் இன்ன்னும் கையில் கிடைத்த
குட்டி ப்ளாஸ்டிக் பொம்மைகளும்.
ஈஸி சேரில் சாய்ந்தபடி எங்களைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார் பாட்டி.
இப்ப என்ன.? கோலம் நைவேத்யம் எல்லாம் வேண்டாமா
என்றார்.
எனக்குத் தெரிந்த மயில் கோலம் அரிசிமாவு,காப்பிபொடி, ராபின் ப்ளு, மஞ்சள் பொடி குங்குமம் என்று கலந்து கோலம் போட்டு ஸ்ரீராமஜயமும் எழுதிவிட்டேன்.
மாமியார் உள்ளே யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.
''கமலா வா வா,. இந்த நண்டும் சிண்டும் வைத்த கொலுவைப் பார் ''என்று கூவினார்.
கொலுவா என்றபடி வந்த மாமியாருக்கு முதலில் சிரிப்பு வந்தாலும்
கையோடு கேசரி கிளறி
கொலு முன் வைத்தார்.
முதல் முதல் வைத்த கொலு விருத்தியாகட்டும்.
சாயந்திரம் சுண்டல் செய்துவிடலாம் என்று சந்தோஷமாகச் சொன்னார்:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
13 comments:
கொலு நினைவுகள் அருமை.
ஒவ்வொரு ஆண்டு கொலுவும் ஒவ்வொரு நினைவுகளை நமக்கு விட்டு சென்று இருக்கிறது. நினைத்து பார்த்து மகிழும் காலம்.
பொம்மைகள் வாங்கி சேர்த்த காலங்கள் மனதில் வந்து போகிறது.
அக்கம் பக்கம் நட்புகள், சொந்தங்கள் பேசியவையும் அவர்கள் நினைவுகளும் கூடவே வருகிறது.
கொலு நாட்கள் வருகின்றன. நாங்களும் மருமகளின் விருப்பத்தால் இரண்டு வருடங்களாக கொலு வைத்தோம். இந்த முறை முடியாது. சாஸ்திரத்துக்கு இரண்டு சாமி கிட்ட வைக்கணும்.
50 ரூபாய்க்கு இத்தனை பொம்மைகளா? அந்தக் கால விலைவாசி.. இப்போது நினைத்துப் பார்க்க வியப்பாகத்தான் இருக்கிறது. அதிலேயே ட்ரான்ஸ்போர்ட்டும், கொறிக்க வேர்க்கடலையும் வேற... ஆஹா..
கொலு கிழக்கு பார்த்து வைக்கணுமா, வடக்கு பார்த்தா? நாங்கள் கிழக்கு பார்த்து வைத்தோம்.
அந்த காலகட்டத்துக்கே கூட்டிப் போயிடறீங்க. சாதாரண ஆசைகள், அவை நிறைவேறும்போது அலாதியான சந்தோஷம்.
அன்பின் தங்கச்சி வாழ்க வளமுடன். நவராத்திரிக்கு ஸாரும் உதவி செய்வது நினைவுக்கு வருகிறது. கைவேலை தெரிந்தவர். இப்போது மகனும் உற்சாகப் பங்கெடுப்பார் என்று நினைக்கிறேன். பேரன் நன்றாகச் செய்து கொடுப்பார். எல்லோரும் வளமாக இருக்க வேண்டும்.
அன்பின் ஸ்ரிராம். எல்லாம் நலமாக நடக்கும். அடுத்த வருடம் இன்னும் சிறப்பாகச் செய்தால் போச்சு. நல் நவராத்திரி வாழ்த்துகள்.
ஆமாம் ஶ்ரீராம். பஸ் டிக்கட்டிலிருந்து எல்லாமே சல்லிசுதான். மைலாப்பூர் திருவான்மியூர் ஆட்டோவுக்கு 7.50பைசா தான். வறுத்த வேர்க்கடலை, வேக வைத்த வேர்க்கடலை எல்லாம் பொட்டலம் 15 25 பைசா:)
நான் இந்தப் பதிவு எழுதியகாலத்தில் பாட்டியோட பெரிய ஈஸிசேரை அனுசரித்துத் தான் கொலு ஶ்ரீராம். கிழக்கு, பெஸ்ட்.
உண்மைதான் முரளிமா. அப்போது இருந்த நிறைவைத்தான் இப்போது காண முடிவதில்லை. நன்றி மா.
வணக்கம் சகோதரி
பதிவு அருமை. கொலு நினைவுகள் அருமை. நம்மை அந்தக்காலத்துக்கே அழைத்துச் செல்கின்றன. நீங்கள் முதல் கொலு ஆரம்பித்த விதம் நன்றாக மனதிற்கு நிறைவாக இருந்தது. அதற்கு வீட்டில், அனைவரும் ஊக்கமளித்ததும் சிறப்பு. உங்கள் நினைவுகள் எனக்கும் தொற்றிக் கொள்கிறது.
எங்கள் அம்மா வீட்டில் பழைய பொம்மைகள் நிறைய இருந்தன. ஆனால் ஒவ்வொன்றும் திடகாத்திரமாக அழகாக இருந்தன . அதன் பின் எங்கள் அண்ணா அவர் உழைப்பால், எவ்வளவு பொம்மைகள் வாங்கி குவித்தார் என்பது கணக்கே கிடையாது. இப்போதும் நிறைய பொம்மைகளுடன் அம்மா வீட்டில் கொலு சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு வருடமும் மன்னி அழைப்பார்கள். போய் வருவதற்குத்தான் குழந்தைகள் படிப்பு, என் கணவரின் அலுவலக வேலைகள் என எங்களுக்கு சௌளகரியப்படாது. அப்படியும் மதுரையில் (திருமங்கலத்தில்) இருந்த போது ஓரிரு தடவைகள் அங்கு சென்று கொண்டாடி விட்டு வந்துள்ளேன். நினைவுகள்தாம் நம் பொக்கிஷங்கள் இல்லையா.? தொடர்கிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் சகோதரி கமலா ஹரிஹரன், மிக ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் திருமங்கலத்தில் இருந்தீர்களா. மிக அருமை. நாங்கள் அங்கே 1955லிருந்து 1960 வரை இருந்தோம். நீங்கள் எல்லாம் பிறந்து கூட இருக்க மாட்டீர்கள். நம் ஶ்ரீராமும் அங்கே போய் வந்திருக்கிறார். துளசி கோபாலின் அம்மா அங்கே வைத்தியராக இருந்திருக்கிறார். மிக மிக ஆச்சரியமான விஷயம் இது.
அன்பி கமலா, உங்கள் அண்ணா வீட்டுக் கொலுவைப் படம் எடுத்திருக்கிறீர்களா? பழைய பொம்மைகளைப் பார்க்க ஆசை.
சிலசமயம் இந்த மாதிரி கொலுவுக்குச் செல்ல முடியாமலும் போகும். திருச்சியில் அதுபோலப் பல நிகழ்வுகளைப் பார்க்காமல் விட்டு இருக்கிறேன். அன்பு சகோதரி மனம் நிறை நவராத்திரி வாழ்த்துகள்.மங்கல தங்கட்டும்.
Post a Comment