Monday, June 08, 2026

நயாகரா 2

வல்லிசிம்ஹன்

நயாகராப் பயணம்  முடிவானதும் வண்டியையும்  தயார் செய்தார்கள். 

முதல் பார்வை

 பக்கத்தில் போனால்.....
    பொங்கும் பிரவாகம்

நீல உறைக்குள் ஒளிந்து அருவியின் அருகாமையை உணர்ந்த அபூர்வ வினாடிகள். நானும், சிங்கமும், மகளும் அருவிக்கு மிக அருகில் சென்று சாரலை அனுபவித்தோம்:) அந்த உணர்ச்சிக்கு ஈடாக
வேறெதையும் சொல்ல முடியவில்லை.



தொடவேண்டாம் என்ற எச்சரிக்கையோடு சின்னஞ்சிறு குழந்தை பொம்மைகள்.

எங்க நிறுத்தினேன் கதையை. ஆ! வண்டியை இடித்து பிறகு வீட்டிற்குப் போகும் சமயம் அந்த பொண்ணு(நம்ம வண்டி கிட்ட ராங் செய்த பொண்ணு வந்து''கான் ஐ டிராப் யூ சம்வேர், ஏதாவது வாங்கிக்கொடுக்கட்டுமா'' என்று வேறு கேட்டாள்.

நாங்கள் தர்மசங்கடமாக முகத்தை வைத்துக் கொண்டு வேணாம்ம்மா.நாங்களே பார்த்துக்கறோம். எங்களுக்கு இங்கே நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டோம். பிறகு எண்டர்ப்ரைசஸ் என்ற கம்பெனிக்கு போன் செய்து ஒரு டாட்ஜ் வண்டி வாடகைக்கு எடுத்து அடுத்த நாள் மதியம் கிளம்பி டெட்ராய்ட்டிலிருந்து டொரண்டோ வந்தோம்.
ஆர்ச்சார்ட் லேக் ரோட்+ மைலைத் தாண்டும் போது எல்லோருக்குமே படபடப்பாகத்தான் இருந்தது. சரி ஏதோ போதாத நேரம்தான். ஒரு நாள் வீணாகிப் போனது. லயன் சஃபாரி போக முடியவில்லை. குழந்தைகளும் நாங்களும் மிகவும் எதிர்பார்த்தது இந்தக் காட்டுப் பயணத்தைத்தான்.
டொரண்டோ வந்து சேர்ந்த போது ஆறு மணியாகிவிட்டது. விடுதியில் உடை மாற்றிக்கொண்டு 'சப்வே ' தேடிப்போனோம்.
ஒரு இந்தியர்தான் அந்தக் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவ்வளவு சுமுகம் இல்லை. போனால் போகிறது. எங்களுக்கு வானவில்லையும், ஏர்போர்ட் அழகும், பிளேன் வந்து இறங்கும் அழகும் பற்றிப் பேசவே நேரம் சரியாக இருந்தது . அடுத்த நாள் சிஎன் டவர் பார்த்து விட்டு நயாகரா கிளம்ப வேண்டும் என்கிற ஆவலே உற்சாகமாக இருந்தது. காலையில் எழுந்து கீழே வந்து இலவச காலை உணவையும் உள்ளே தள்ளி, இணையத்தையும் பார்த்து முடித்தபோது 11 மணியாகிவிட்டது.
சிஎன் டவர் கூட்டம் நிறைய இருக்கும்.அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு.
நினைத்தது போலவே கியூ நீளமாக இருந்தது டவர் அடிவாரத்தில்.
இரண்டரை மணி நேரமாவது நிற்கவேண்டும் என்றார்கள். என்னடா செய்யலாம் என்று யோசித்தபோது மாப்பிள்ளைக்கு நல்ல யோசனை ஒன்று தோன்றியது.
'இந்த டவர் கூட பார்க்கவில்லைன்னா நம்ம பயணம் குறையாகவே இருக்கும். இதன் முக்கால் உயரத்தில் ஒரு சுழலும் ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்கே போகலாம். அத்ற்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை'என்றார். அதாவது சிஎன் டவர் என்கிற இந்தக் கோபுர சுமார் 1800 அடி உய்ரம் என்றால், இந்த உணவு விடுதி 1500 அடியில் இருந்தது. அதற்கு 360 டிகிரி என்று பெயர். அது ஒரு சுற்று முடிக்க 72 நிமிடங்கள் ஆகிறது என்று எழுதி வைத்திருந்தார்கள். இதைவிட உயரமானது நம்ம துபாய் டவர்தான். (ஆமாம் நாம்தானே கட்டினோம்:) நாம இல்லாட்ட என்ன நம்ம அபி அப்பா கட்டியிருக்கிறாரே:)
அந்த உணவு விடுதியில் வெஜிடேரியன் உணவு கேட்ட போது ''இருக்கு' ''என்றார்கள். எல்லாம் பெரிய சைஸ். குடமிளகாய், எக்ப்லாண்ட்,தக்காளி எல்லாவற்றையும் ஆலிவ் எண்ணெயில் வதக்கிக் கொண்டு வந்து வைத்தார்கள். நாங்கள் ஏறி வரும்போது நகரத்தின் ஒரு பக்கத்தை கண்ணாடிச் சுவரில் பார்த்தபடியே (லிஃப்டில்) ஏறினோம். அங்கு சாப்பிட்டால் அந்த ஸ்கை வாக் பகுதியும் பார்க்கமுடியும் என்றார்கள். படு கமர்ஷியல்மா. இல்லாவிட்டால் இவ்வளவு பணம் இங்க சேருமா!!
சரிதான் நாம் க்ராண்ட் கான்யானிலியே அந்த ஸ்கைவாக் பார்க்கவில்லை. இங்கயாவது பார்க்கலாம். என்று சாப்பிட்டு முடித்தவுடன் அங்கே போனோம். ஒரு முப்பது சதுர அடி இருக்கும் ன்று நினைக்கிறேன். நானும் அந்தக் கண்ணாடித் தரையில் நின்று பார்த்தேன். என் பெண் வர மறுத்து விட்டாள். நானும் இரண்டு பேரன்களும் நின்று படம் பிடித்துக்கொண்டோம்.திகில்தரைதான் அது எல்லோரும் படுத்துக் கொண்டு படமெடுத்துக் கொண்டார்கள். அதில் தமிழ் அம்மாக்கள் அதிகமாகவே இருந்தார்கள். நமக்கெ வீரம் அதிகம்தான்:)
கீழே பார்த்துவிட்டால் கொஞ்சம் நடுக்கம்.கீழே சாலையில் போகும் கார் மற்றவாகனங்கள் எறும்பாகத் தெரிந்தன,.
அப்போது எப்பவோ கேட்ட ஜோக் ஞாபகத்துக்கு வந்தது.''பாருடா கீழே காரெல்லாம்,மனிதரெல்லாம் எறும்பாகத் தெரிகிறார்கள் என்று ஒரு அப்பா தன் முதல் விமானப் பயணத்தில் சொல்ல ,அது நிஜ எறும்புப்பா. இன்னும் ப்ளேன் கிளம்பவே இல்லை என்று பையன் சொல்லுவான்:)''
இது அந்த மாதிரி இல்லை. உண்மையாகவே பூமிக்கும் நமக்கும் இடையில் இந்தக் கண்ணாடித்தரைதான். த்ரில்லிங்காக இருந்தது.
கீழே வந்து வழக்கமா வாங்குகிற குட்டி சூவனீர்கள் எல்லாம் வாங்கி கனடியன் டாலரைக் கொடுத்து வெளியே வந்தோம்.
மாப்பிள்ளை வண்டி ஓட்ட, அவருக்குத் தூக்கம் வராம இருக்க சிங்கம். பேசிக்கொண்டு வர நான் கிருஷ்ணாவின் பக்கத்து சீட்டில் அமர்ந்து அவன் மழலைப் பேச்சு கேட்க, பெரிய பேரனும் பெண்ணும் அதற்குப் பின்னால் இருந்த சீட்டில் ஹாரி பாட்டர் பார்க்க, வந்து சேர்ந்தோம் நயாகராவுக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நயாகரா காட்சிகள் மேலே/








9 comments:

வெங்கட் நாகராஜ் said...

அழகான காட்சிகள். எத்தனை நேரம் பார்த்தாலும் அலுக்காத காட்சிகளில் ஒன்று அருவிகள்......

தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா வெங்கட். அலுக்காத நாலு காட்சிகளில் குழந்தை,யானை,கடல் என்று வரிசயாக நினைக்கும் போது அருவியும் சேர்கிறது. மிக உண்மை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமா.? பதிவு அருமை. நயாகரா நீர்வீழ்ச்சி படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது. அருவியின் அழகை காணொளியாக கண்டு மகிழ்ந்தேன். பதிவு உங்கள் அழகான வார்த்தைப் பிரயோகத்தில் அருவியுடன் இணைந்து மனதுக்கு ஜில்லென்ற சுகத்தைத் தருகிறது. அருமையான பயணம். அதுவும் குடும்பத்துடன் செல்லும் போது மனதுக்கு மிகவும் மகிழ்வைத் தரும். நான் சென்ற பதிவை படிக்கவில்லை. மன்னிக்கவும் சகோதரி. அதையும் படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சகோதரி கமலா, மிக நன்றி மா. நான் மிகப் பழைய பதிவுகளை எடிட் செய்து புத்ஹுப்பிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலா, நன்றி சகோதரி. மன்னிப்பெல்லாம் எதற்குப்பா. நான் பழைய பதிவுகளை எங்கள் மகனுக்காக எடிட் செய்து புதுப்பிக்கிறேன் அம்மா. மிக மிக நன்றி. என்றும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

ஸ்ரீராம். said...

மறக்க முடியாத நினைவுகள் இல்லையாம்மா?

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஶ்ரீராம். நயகரா மறக்கக் கூடிய இடம் இல்லை. நன்றி மா.

மாதேவி said...

முன்னர் உங்கள் பகிர்வில் பார்த்து வியந்து ஊட்டமிட்டது நினைவுக்கு வருகிறது.

என்றும் மறக்க முடியாத இடங்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு மாதேவி. கொஞ்சமே புதுப்பித்தேன்.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...