Blog Archive

Friday, January 07, 2022

அமைதி வேண்டும் என்னாளும்...


vallisimhan


அனைவரும் நலமாக இருக்க இறைவன் துணை.
எங்கு தேடுவேன் என்று அமைதியைத் தேடாமல்
தானே அதைத் தன்னிடம் காண்பது
இசையின் வழியே.

சப்தம் நம்மை எப்பொழுதும் சுற்றிக் கொண்டு இருக்கிறது.
அந்த சப்தத்திலிருந்து
(   சப்தம் என்றால் சொல் என்றும் ஒரு பொருள் உண்டு  ))

நாம் எடுத்துக் கொள்ளும் சந்தோஷம், அமைதி, நேர் எண்ணங்கள்
எல்லாமே
நமக்கு நன்மை கொடுப்பவையே. 
அது கிடைப்பது மனம் செய்யும் மாயம்.


ஓடங்கள் நம்மை சிலசமயம் ஆட்டம் காண வைத்தாலும்,
சரியான ஓட்டுபவர் கைகள்,
தண்ணீர் ஓட்டத்தைத் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு
போராடாமல் நதி வழியே
செல்வதும் ஒரு நன்மையே.
இறைவன் கருணை இருக்குமானால்
நல்ல கரையை அடைவோம்.

எத்தனை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்!!!!!!
எத்தனை கதைகளில்  படித்திருக்கிறோம்.
ஸ்ரீ ரபீந்திர நாத் டாகூரின்  The Wreck  நினைவுக்கு வருகிறது.
அதைப் பின்புலமாக வைத்து எத்தனை படங்கள்,கதைகள்.:)
அந்த அமைதி நம்மிடம் இருக்கும் போது
நாம் சொல்லும் வார்த்தைகளும் பலிக்கும்.

முடிந்த வரை பேரப் பசங்களுடன்
செலவிடும் மாலை நேரப் பாவை வகுப்புகளில்
அதைத்தான் சொல்கிறேன்.
சின்னவன் கொஞ்சம்  இருக்கையில் தவிப்பான். அவனுக்கு விளையாட நண்பர்கள்,
இணையத்தில் காத்துக் கொண்டிருப்பார்கள்.பாவம் என்று
   ஒரு பாசுரத்துடன் விட்டு விடுவேன்.:)
 பெரியவன் அலுவலக வேலைகள்
முடிந்தவுடன் ஆற அமர நான் சொல்வதைக் கேட்பான்.

அவனுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வான்.

வாழ்க வளமுடன்.
உடனே ஞாபகம் வருவது நம் கோமதி அரசைத்தான்.
அவர்கள் மதுரைக்குச் சென்றதில் இருந்து ஒரே வேலை.

நலமுடன் இருக்க வேண்டும். மீண்டும் வலை உலகிற்குள்
வரவேண்டும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய பாசுரமான மாரி மலை முழைஞ்சில்





ஆண்டாள் விவரிக்கும் சிங்கத்தின் அழகே தனி. நம்
கண்ணெதிரே  தலையை உலுக்கிக்
கர்ஜனை செய்யும் காட்டரசன்.
அவனைப் போலவே நடந்து வரவேண்டுகிறாள்
கண்ணனi. அவன் நம்மைப் பரிபாலனம் செய்யட்டும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++

மனதுக்கு மிகப் பிடித்த நடிகர் Sidney Poitier

இன்று இறைவன் திருவடி அடைந்தார்.
அவர் நடித்த படங்கள் அனைத்திலும் அவரது உழைப்பு மிகச் சிறப்பாக 
இருக்கும்.
எங்கள் கால ஆணழகன் கூட. 94 வயது நிறைவாழ்வு.


22 comments:

ஸ்ரீராம். said...

அமைதி பற்றிய விவரங்களும், பாடல்களும் அருமை.  சப்தம் என்றால் சொல் என்றும் பொருள் உண்டு என்பது தகவல்.  உங்கள் கால ஆணழகன் நடிகர் பற்றி நான் அறிந்ததில்லை!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்.
என்றும் நலமுடன் இருங்கள்.
வான் வழி வரும் சப்தம், வாய் வழி வரும் சொல்.

சர் சிட்னி உலகப் புகழ் பெற்ற அமைதியான நடிகர்.
வேற்றின மக்களிடமிருந்து
ஒரு ஆஸ்கார் வாங்குவது எத்தனை சிரமம்!!
அதைச் செய்து காட்டினார்.
அவருக்கப்புறம் நிறைய அந்த வர்ணத்தினர் வந்துவிட்டார்கள்.
அவரே ஒரு முன்னோடி.
நன்றி மா.

KILLERGEE Devakottai said...

அமைதியைக் குறித்து நல்ல கருத்துக்கள் அம்மா.
டி.ராஜேந்தரின் "அமைதிக்கு பெயர்தான் சாந்தி' பாடலும் நினைவு வந்தது.

Thulasidharan V Thillaiakathu said...

சப்தம் நம்மை எப்பொழுதும் சுற்றிக் கொண்டு இருக்கிறது.
அந்த சப்தத்திலிருந்து
( சப்தம் என்றால் சொல் என்றும் ஒரு பொருள் உண்டு ))

நாம் எடுத்துக் கொள்ளும் சந்தோஷம், அமைதி, நேர் எண்ணங்கள்
எல்லாமே
நமக்கு நன்மை கொடுப்பவையே.
அது கிடைப்பது மனம் செய்யும் மாயம்.//

உண்மை உண்மை அம்மா. மனம் தான் மிக மிக முக்கியம். அது ரொம்பவே படுத்துகிறது!!!

பதற்றம் இல்லாமல் மனதுள் மறைந்த பதற்றமும் இல்லாமல் மனம் அமைதியாக இருந்தால் ஆயுளும் நன்றாக இருக்கும் என்று சொல்லப்படுவதுண்டுதான்.

ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அட! உங்கள் காலத்து ஆணழகன்! சர் சிட்னி பற்றி மகன் சொல்வான். நீங்கள் ஸ்ரீராமிற்கு கொடுத்திருக்கும் பதிலில் இருந்தும் தெரிந்துகொண்டேன்

அவர் ஆன்மா அங்கும் அமைதி அடையட்டும்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அமைதி பற்றிய உங்கள் கருத்து அருமை.

சர் சிட்னி poitier மறைந்துவிட்டாரா? நல்ல நடிகர். ஆஸ்கார் பெற்றவர் இல்லையா? வயதாகியிருக்குமே. கூகுள் செய்தி பார்க்கிறேன்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

இரு பாடல்களும் நல்ல பாடல்கள்

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அமைதி என்றதுமே முதலில் நினைவுக்கு வந்தது முதல் பாடல் அமைதியான நதியினிலே ஓடும் சொல்ல நினைத்தேன் நீங்களும் பகிர்ந்திருக்கிறீர்கள்

இரண்டாவது பாடலும் அருமை

ஆமாம் கோமதிக்கா ரொம்ப பிஸி வந்ததிலிருந்து. சொன்னாங்க

கீதா

மாதேவி said...

'இறைவன் கருணை இருக்குமானால் நல்ல கரையை அடைவோம்' நிச்சயமாக.

பேரன்களுக்கு பாசுரங்கள் படித்துகாட்டி அவர்கள் கேட்பது சிறப்பு.

Geetha Sambasivam said...

நீங்கள் சொன்ன நடிகர் பற்றி அறிந்திலேன். :((( மற்றபடி நல்லதொரு பதிவு. பேரன்களுக்குப் பாசுரம் கற்றுக்கொடுப்பது அறிந்து மனம் நிறைவடைகிறது. கோமதி அரசு மதுரை போய்ச் சேர்ந்துவிட்டார் என்பதை அறிந்து சந்தோஷம் என்றாலும் தனியாக எப்படி இருக்கப் போகிறார் என்றும் கவலையாக உள்ளது!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
நலமுடன் இருங்கள்.

ஆமாம்மா. அந்தப் பாடலை மறந்துவிட்டேன்.
இன்னும் நல்ல பாடல்களைப்
பதிந்திருக்கலாம்.

மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

''உண்மை உண்மை அம்மா. மனம் தான் மிக மிக முக்கியம். அது ரொம்பவே படுத்துகிறது!!!

பதற்றம் இல்லாமல் மனதுள் மறைந்த பதற்றமும் இல்லாமல் மனம் அமைதியாக இருந்தால் ஆயுளும் நன்றாக இருக்கும் என்று சொல்லப்படுவதுண்டுதான்.

ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அம்மா''


அன்பின் கீதாமா,

என்றும் நலமுடன் இருங்கள்.
மனம் அமைதியில்லாமல் தான் தானும் கெட்டு நம் இருப்பையும்

நலம் கெட வைக்கிறது.
நம் கையில் யாருடைய மனதையும் மாற்றும் சக்தி
இல்லையே.

நம் அளவிலாவது சந்தோஷமாக இருக்கத்தான் முயல வேண்டும். உங்கள்
வாழ்வில் என்றும் சுகம் நிறைய வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
நலமுடன் இருங்கள்.

சிட்னி , சர் பட்டம் பெற்றதும் உன்னதம்.
உன்னத நடிப்பு. நிஜ வாழ்விலும் ஜெண்டில்.

நல்ல வாழ்க்கை வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

உண்மைதான் அப்பா. ஆஸ்கார் அவருக்குக் கிடைத்தது
நமக்கெல்லாம் கூடப் பெருமை.

ஒரு கட்டுப்பாடுடன் வாழ்வையும், நடிப்பையும்
செய்து காட்டினார்.
94 வயதாகிவிட்டது மா.
நல்ல வாழ்க்கைதான். நிம்மதி பெறட்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
பாடல்களைக் கேட்டு ரசித்ததற்கு மிக நன்றி மா.
நாலு பாட்டுகள் பதிந்த நினைவு.
சென்று பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
என்றும் நலமுடன் இருங்கள் அம்மா.

''கரையை அடைவோம்' நிச்சயமாக.

பேரன்களுக்கு பாசுரங்கள் படித்துகாட்டி அவர்கள் கேட்பது சிறப்பு.''

நல்ல கரையும் நம் வாழ்வில் கிடைக்க வேண்டும். எத்தனையோ சங்கடங்களைத் தாண்டி வந்தாலும் வந்து சேரும் இடம் சரியாக
இருக்க இறைவனே துணை.
நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

ஆமாம் நம் கோமதிக்கு இப்போது கூடவே இருக்கிறது.

அவர் தங்கைகளும் தம்பியும் மதுரையில் இருக்கிறார்கள்.
வந்து பார்க்க முடியாவிட்டாலும் தொடர்பில் இருப்பார்கள்.

அவர் நல்ல படியே தனிமையை சமாளிக்க பகவான் துணை.

நடிகர் சர் சிட்னி,
ஆர்பாட்டம் இல்லாத நல்ல நடிப்பைப் பெற்றவர்.
எனக்கும் இவருக்கும் மிகப் பிடிக்கும்.
நம் ஊர் மேஜர் சுந்தரராஜன் போல.
நன்றி மா.

கோமதி அரசு said...

வணக்கம் வாழ்க வளமுடன் அக்கா.
உங்கள் பதிவு மிக அருமை.

அமைதி அதுதான் வேண்டி இருக்கிறது.
உறவுகள், நட்புகள் , மற்றும் மகன், மருமகள் , பேரன் என்று இப்போது இருக்கிறார்கள்.

பதிவில் என்னை நினைத்து எழுதியதற்கு நன்றி அக்கா.
அனைவரும் காட்டும் அன்புக்கும் பரிவுக்கும் நன்றி .
விரைவில் இறைவன் அருளால் வருவேன்.

வெங்கட் நாகராஜ் said...

அமைதி குறித்த விவரங்கள் மற்றும் தேர்ந்தெடுத்து பகிர்ந்த பாடல்கள் என அனைத்தும் சிறப்பு. மிகவும் ரசித்தேன். எங்கும் அமைதி நிலவட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி கோமதிமா,
வாழ்க வளமுடன்.
நலம் தொடரட்டும்.

உங்களை நினைக்காமல் எப்படி இருப்பது.

எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்.
அனுபவங்களைச் சேகரித்துக் கொண்டு பின்னால்
எழுதவும்.
மகனும் குடும்பமும் நலமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள்.
மனம் வேதனைப் படும்போது இசையே
அமைதி கொடுக்கிறது.

எல்லோரும் வேண்டுவது எதை? இந்த அமைதியைத்தானே.
நோய் நொடி இல்லாமல் எல்லோரும்
மகிழ்வாக இருக்கப் பிரார்த்தனைகள்.