Blog Archive

Monday, February 22, 2021

ரயிலே ரயிலே என் ஆசை ரயிலே!!

ஷண்டிங்க் யார்ட்...
   எத்தனை அழகு இந்தப் புகை வண்டி!!!
மின்சார வண்டி வந்த புதிது

  எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்.

வல்லிசிம்ஹன்

பயணங்கள்  வாழ்க. தொடர்க.அன்பு வெங்கட் நாகராஜ் பதிவில் சில ரயில்களைப் பார்த்துப்
படித்ததும்

Ian Manning பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். எத்தனை புகைப்படங்கள்!!
அத்தனையையும் தீராத ரயில் தாகத்துடன் 
பார்த்து சில படங்களைச் சேமித்துக் கொண்டு 
இங்கே பகிர்கிறேன்.
திரு நெல்வேலியில் ஆரம்பித்த பெற்றோரின்
பயணம் ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம்,திண்டுக்கல்,
மதுரை என்று தொடர்ந்து 
என்னைச் சிங்கம் அவர்களின் பயணத்தில் அன்புடன் கோர்த்து விட்டது.

ரயிலையும், அது நிற்கும் நிலையத்தையும் பார்ப்பது எங்களுக்கு வாடிக்கை.
அடுத்த பயணம் எப்போது என்று தந்தையைக் கேட்ட
வண்ணம் இருப்போம்.
அதற்காக திருமங்கலம், மதுரை பாசஞ்சர் ரயிலில்
அழைத்துப் போனார்.

அந்தப் பயணம்,புதுக்கோட்டை, சேலம், கோவை ,திருச்சி என்று சுற்றி
மீண்டும் சென்னைக்கே கொண்டுவிட்டது.
மீட்டர் காஜ், ப்ராட் காஜ் பயணம் மீண்டும்
பாம்பே வரை சென்று
திரும்பியது. இப்போது 
விமானங்களில் தொடர்கிறது.

ஆனால் பழைய நாட்களின் இனிமை புதிய
வண்டிகளில் கிடைக்கவில்லை.அதுவும் கடைசி தடவையாக பங்களூர் சென்னை பயணம்
வயிற்றுப் பிரச்சினையில் முடிந்த பிறகு

நிறைய யோசிக்க வேண்டி இருக்கிறது.இந்த ரயில் பயணம் துபாய், ஸ்விட்சர்லாண்டு, லண்டன்,சிகாகோ
என்று தொடர்கிறது.
எல்லா இடங்களிலும் சுத்தமாகக் காட்சிதரும்
டாய்லெட்கள்.
இவைதான் என்னை ஈர்த்தவை. பயமில்லாமல் பயணம் செய்யலாம்.

இன்னும் திருச்சி ஜங்க்சனில் கிடைக்கும் வறுத்து உப்பிட்ட
முந்திரிப்பருப்பும், கதம்பமும், செங்கல்பட்டுக் காப்பியும்
நினைவில் ருசி சேர்க்கின்றன.

ஸ்விஸ் ரயிலின் வருகை,புறப்பாடு மாறவே மாறாது.
லண்டன் ரயிலில்
ஒவ்வொரு நிலையம் வரும்போதும்
''இறங்கும்போது பார்த்து இறங்கவும். ரயிலுக்கும்
நடைமேடைக்கும்  உயர வித்தியாசம் பார்த்துக்
காலைவைக்கவும் ''என்பார்கள் கிட்டத்தட்ட 
100 வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களோ?:))))
அனைவரும் அவரவர் பயணங்களில்
வெற்றி பெற வாழ்த்துகள்.





24 comments:

நெல்லைத் தமிழன் said...

பாசஞ்சர் இரயில் எனக்கு எப்போதுமே பிடிக்கும். ஒவ்வொரு ஸ்டேஷனாக நின்றுவிட்டு, ஆங்காங்கே வியாபாரிகள் ஏறி ஏதேனும் விற்றுக்கொண்டு..என்று அருமையாக இருக்கும். ஒருவேளை ப்ளாட்பாரத்தில் சாமான்கள் வாங்கிக்கொண்டிருந்தால், இரயில் புறப்பட ஆரம்பித்தாலும் ஏறிவிடலாம். (By the by, எனக்கு இரயில் பயணங்களில் ஸ்டேஷன்களில் இறங்குவதற்கு பயப்படுவேன்..இரயில் கிளம்பிவிடுமோ என்று)

சிறியவயதில் அப்பாவுடன் இரயில் பயணம் மேற்கொண்டது நினைவுக்கு வருது (மதுரை-பரமக்குடி)

வெளிநாட்டில் இரயில் பயணம் சுகம்... என்றாலும் நம் ஊர் பயணம் போல வராது (சாயா சாயா, போளி, டிபன் என்ற குரல்கள் ஒவ்வொரு ஸ்டேஷனிலும்)

வெங்கட் நாகராஜ் said...

ரயில் படங்கள் அனைத்தும் நன்று. எத்தனை பழமையான படங்கள். இங்கே இரயில் அருங்காட்சியகம் ஒன்று உண்டும்மா. அங்கே சென்று பழைய இரயில் இஞ்சின்கள், அதன் பாகங்கள் என பார்த்து பகிர்ந்ததுண்டு.

பதிவில் என்னையும் குறிப்பிட்டு இருப்பதில் மகிழ்ச்சி.

Geetha Sambasivam said...

எங்களுக்கும் இப்போது ரயில் பயணம் செய்வதன்றால் பயமாகவே இருக்கிறது. எல்லாம் என் வயிற்றுப் பிரச்னையால் தான்! அழகான தொகுப்பு. தேடித் தேடித் தொகுத்திருக்கிறீர்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ரயில் பயணம் என்றும் இனிமை...

மனோ சாமிநாதன் said...

பயணங்கள் என்றுமே சுவாரஸ்யமானவை தான்! எனக்கும் சின்ன வயதில் சென்ற ரயில் பிரயாணங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. என்ன தான் ஐக்கிய அரபுக்குடியரசில் இருந்து கொண்டு கடந்த 43 வருடங்களாக விமானப்பயணங்களில் பறந்து கொண்டிருந்தாலும் அந்த சின்ன வயது ரயில் பிரயாணங்களும் ஜன்னலோர இருக்கைகளில் அமர்ந்தவாறே ரசித்த பேருந்து பிரயாணங்களும் கொடுத்த இனிமையே வேறு தான்!!

ஸ்ரீராம். said...

விமானம், ரயில் எல்லாம் அழகு.  எனக்கு என்னவோ ரயில் பயணத்தை விட பஸ் பயம் பிடிக்கும்.  ரயில் பயணம் வசதிதான்.  ஆனாலும் ஏனோ எனக்கு அப்படி!

KILLERGEE Devakottai said...

இரயில் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் நிறைய அமையவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
பரமக்குடி...இங்கே எல்லாம் போனதே இல்லை.ராமேஸ்வரம் செல்லும் வழியில் வருமோ?
நினைவில்லை.

ஆமாம் மெதுவாகச் செல்லும் பாஸஞ்சர் வண்டி...
அதை ஓட்டுபவருக்கும் பயணிகளுக்கும் ரயிலின் மொழி
ஒரு ரிதம் போல மெதுவாகப் பின் வேகமாக
எஞ்சின் சத்தத்தோடு ஒரு இசை போலக் காதுகளை
அடையும்.
காஃஃபி.டீ.சாய்...முறுக்கு ஆஹா இன்பமான நாட்கள்.
மிக மிக நன்றி முரளிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நன்றி மா.
உங்கள் பதிவே என் நினைவுகளை மீட்டியது.
இல்லாவிடில் இந்தப் பதிவு இத்தனை
ஆனந்தமாக வந்திருக்காது.
அந்த இயான் மானிங்க் தான் எத்தனை ஆராய்ந்து இருக்கிறார்!!!!

what kind of passion drove him to do it!!!!!!!Thank you for intoducing him to us.
ரயில் அதுவும் அந்த கண்ணாடிகள் தடுக்காத
பயணங்கள். எல்லாமே இனிமை.
கடவுள் அளித்த இனிமைகளில் ரயிலும் ஒன்று.
மீண்டும் நன்றி மா.மகன் இருக்கும் ஊரில் ரயில் அருங்காட்சியகத்தைப் பார்த்து இருக்கிறேன்.
இஞ்சின் ஓட்டுபவருடன் ஃபோட்டோவும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்:)

நெல்லைத் தமிழன் said...

நாங்கள் பரமக்குடியில் இருந்தோம். திருநெல்வேலிக்கு வருவதற்கு, பரமக்குடி-மதுரை-திருநெவேலி இரயில் பயணம் என நினைக்கிறேன்.

இன்னொன்று, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து அவ்வப்போது கண்களில் கரித்தூள் வந்து விழுந்துவிடும். அப்போல்லாம் கரி எஞ்சின் அல்லவா?

இரயில் பயணத்தில் மறக்க முடியாதது, மிளகாய்பொடி தடவின இட்லியும், தேங்காய் துவையலுடன் கூடிய தயிர் சாதமும். நீங்கள் கையில் ஏதேனும் எடுத்துச் சென்றிருக்கிறீர்களோ?

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
உண்மைதான். அதுவும் சத்தமாக மொபைல் ஃபோனில் பேசுவதும் தலை
வேதனை.சதாப்தி முன்ன சுகமாக இருந்தது. இப்போது இல்ல.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

@ Nellaith thamizhan
அன்பு முரளி மா,
ரயிலை விட்டு நானும் இறங்க மாட்டேன். என் அப்பா, சிம்மு இவர்களையும் இறங்க விட மாட்டேன்.
அதாவது சின்ன வயசில:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,

உண்மைதான் ராஜா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ,
அப்போதெல்லாம் மர இருக்கைகள் தான். வழவழ என்று இருக்கும். நிறைய இடம். நான் சின்னவளாக இருந்திருப்பேன்:)
நானும் தம்பிகளும் மாற்றி மாற்றி ஜன்னலோரம் உட்கார்ந்து கொள்வோம்.

இப்பொழுதும் விமானத்தில் ஜன்னலோர இருக்கைதான்.மேகங்களோடு பயணம்.
நம் எல்லோர் எண்ணங்களும்
ஒரே மாதிரி இருப்பதைக் கவனித்தீர்களா!!!!
மறக்க முடியாத நாட்களைக் கொடுத்த நம் பெற்றோருக்குத் தான்
நம் நன்றி எல்லாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
எல்லாப் பயணமும் நம்மை ஒரு suspended state இல் வைக்கிறது. கிளம்பின இடத்துக்கும் வந்து சேரும் இடத்துக்குமான இடைவெளி நிம்மதி. பஸ்ஸில் இரவுப் பயணம் எனக்குக் கிடைத்த போதெல்லாம் அனுபவித்திருக்கிறேன்.
சென்னை சேலம் [அயணத்தில் உளுந்தூர்ப்பேட்டையில் கேட்ட
உயர்ந்த மனிதன் பாடல் கூட நினைவிருக்கிறது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
இதற்காகவே உங்க சிகப்பாயியை விட்டு விட்டு ஒரு ரயில் பயணம்
சென்று வாருங்கள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நம்ப மாட்டீர்கள் அன்பு முரளிமா,
இப்பத்தான் பெரியவனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன், பாபு இது போல எழுதி இருக்கேண்டா என்று. உனக்கு நன்னா எழுத வரது. எனக்குத்தான் படிக்க முடியவில்லை என்றான். அவர்கள்
தமிழ் படிக்காதது என் தப்புதான்.

நீங்கள் சொன்ன கரிப்புகை, கம்பி இல்லாத ஜன்னல்,
யாராவது வந்து கழத்து சங்கிலியைப் பறிப்பானோ
என்று பயமில்லாத பயணம்.வெளியே நம்முடன் பயணம் செய்யும் நிலா
எல்லாமே மாஜிக்தான்,.
நீங்கள் அதுபோலப் பயணம் செய்தீர்கள் என்பதே
அதிசயமாக இருக்கிறது.
பரமக்குடி,மதுரை ,திரு நெல்வேலியா. பேஷ் பேஷ்.
நியனிவுகளுக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

ரயில் பயணம் என்றுமே இனிமை
அருமை

கோமதி அரசு said...

ரயில் பயணம் , வாழ்க்கை பயணம் எல்லாம் இணைத்து மலரும் நினைவுகளுடன் சொன்னது மகிழ்ச்சி.

அத்தனையும் அருமை.
ரயில் படங்கள் எல்லாம் அழகு.
எனக்கும் ரயில் பயணம் பிடிக்கும்.

கோமதி அரசு said...

முன்பு செய்த ரயில் பயணம் நன்றாக இருக்கும் அக்கம் பக்கம் பேசுவார்கள் இப்போது எல்லோரும் அவர் அவர் வேலைகளை பார்க்கிறார்கள். ரயில் சிநேகம் இப்போது இல்லை.
பக்கத்தில் அமர்ந்து இருப்பவர்களுடன் பேசவே மாட்டேன் என்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார். எல்லோர் அனுபவங்களையும் கேட்க ஆவல்.
வேறு யாராவது பயணம் பற்றித் தொடர்வார்களோ
என்று பார்க்கிறேன்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
இட்லி, புளியோதரை, தயிர் சாதம் எல்லாம் உண்டு. அப்போதைய திரு நெல்வேலி எக்ஸ்ப்ரஸ்
முதல் நாள் சாயந்திரம் 6 மணிக்குக் கிளம்பினால்
மறு நாள் காலை 9 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
பளபள வெங்கல கூஜா நிறைய நல்ல தண்ணீர். அதில் ஒரு குட்டி டம்ப்ளர்,
ஒரு ஹோல்டால், இரண்டு பெட்டி நிறைய
துணிமணிகள் எல்லாம் உண்டு.
திண்டுக்கல் நிலையம் வந்ததும் சாப்பாடும்,சிறுமலைப் பழமும்.
உள்ளே [போகும்.
பிறகு தூக்கம், விழுப்புரம் ,விருத்தாசலம்
வந்ததும் விழிப்பு.
செங்கல்பட்டு வந்ததும்.
அம்மா கீழே இறங்கிக் காஃபி வாங்கி
வருவார்.
அன்று காஃபி குடிக்கும் பாக்கியம் கிடைக்கும்.
ரயிலில் பல் தேய்த்து,காப்பியும்,பிறகு
இட்லியும் சாப்பிடுவோம்:)
எழும்பூர் வரும் நேரம் ஜன்னல் வழியே மாமாக்கள் முகங்களைத் தேடுவோம்.
இருவராவது வந்திருப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
அந்த நாள் ரயில் பயணங்களில்
நீங்கள் சொல்வது போல ஊர் ,வீட்டு நிலவரம் எல்லாம் பேசி,
நட்பு கொண்டு விடுவோம்.
இனிமையான நாட்கள்.
அவரவர் இடம் வந்ததும் இறங்கினால் மனம் சிறிது சோர்வடையும்.
புதிதாக ஏறுபவர்களுடன் பேச்சு தொடரும்.
நல்லதொரு எண்ணத்தை இங்கே பகிர்ந்தீர்கள்.

இப்போதெல்லாம் நீ நலமா, எந்த ஊர் பேச்சு எல்லாம் கிடையாதுதான்.

நன்றி மா. விகல்பம் இல்லாத நாட்கள் அவை.

வல்லிசிம்ஹன் said...

இப்போது விடாமல் பேச அலைபேசி வந்து விட்டதே.
அதில் பேசிக்கொண்டே வந்து, ஒரு அம்மா அன்று செய்யவேண்டிய
, வாங்க வேண்டிய மெனுவையே
வீட்டுக்காரரிடம் சொல்லிக் மொண்டு வந்தார்.
நன்மைதான். ஆனால் ஏன் இவ்வளவு சத்தம் என்று தான் தெரியவில்லை. மீண்டும் நன்றி மா.