Blog Archive

Saturday, June 29, 2019

முன்னும் பின்னும் ....

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  இருக்க வேண்டும் .

முன்னும்  பின்னும் ....

2012  ஒரு நாள் காலை .
 4 மணி. எஸ்விபிசி  காட்சி ஆரம்பித்து சுப்ரபாதம்,
மக்கள் தொலைகாட்சி கந்த ஷஷ்டி கவசம்
சங்கரா டிவி  ஸ்ரீ கணேஷ் ஷர்மா   பிரவசனம் எல்லாம் கேட்டு முடித்துக் கணினி திறந்து
உலகமெங்கும் உள்ள தமிழ் வலை உலகில்
கருத்துக் களை   மேய்ந்து, நம்  பின்னூட்டங்களைப்  பதிந்து
நிமிரவும்,
சிங்கம்  காப்பி குடித்து முடித்து  ஹிந்துவை அலசி, எங்க பார்த்தாலும் கொலை கொள்ளை என்று தினசரி அலுப்பைக் காட்டிவிட்டு,
தோட்டத்தில் தன்  செடிக் குழந்தைகளைக்
கவனிக்கப் போகவும் என் உதவிக்கு வரும்,ராணி உள்ளே வரவும் சரியாக இருக்கும்.

இன்னாம்மா, பாப்பாவெல்லாம் பேசிடுச்சா. எப்படி இருக்காங்க எல்லாம்
இப்பவே பாத்திரம் எல்லாம் போட்டுடு,
மதியம் வரமாட்டேன்.
ஆசுபத்திரிக்குப் போகணும், முதுகெல்லாம் வலிக்குது என்றதும் ,

செய்யும் வரை செய்துட்டுப்போ,
நாளைக்குப் பார்த்துக்கலாம்  என்று சொல்லி என் குளியல்,கடவுள் உபாசனை
எல்லாம் முடிக்கவும் ,சிங்கம் இரண்டாம் காப்பி
கேட்கவும் சரியாக இருக்கும்.

காப்பி கொடுக்கும் போதே சொல்வார், எங்க போகணுமா லிஸ்ட் போட்டுக்கோ,
எத்தனை மணிக்குன்னு சொல்லு ,அப்புறம் மாறக்கூடாது.
இப்ப போலாமா.

இப்ப எப்படிப் போகிறது,சமையல் மாமி வரணும்,
இஸ்திரிக்குக் கொடுக்கணும், துணிகளை மாடியில் உலர்த்தணும்  பத்தரையாவது ஆகும்//

சரி என் மிச்ச வேலைகளை பார்க்கிறேன்.
  பாங்க்  வேலை இருக்கு,
அப்படியே காயலான் கடைக்குப் போய்விட்டு வருவேன். தேடாதே,, 1 மணி ஆகும் //

சரி வெய்யிலுக்கு முன்னால்
வந்துடுங்கோ. எனக்கும் கொஞ்சம் பணம் எடுக்கணும் செக் தரேன் என்று கொடுப்பேன்.

எல்லோரும் அவரவர் வேலையை முடித்துக் கொண்டு கிளம்ப மீண்டும் கணினி, ரேடியோ மிர்ச்சி என்று
என்று பொழுது போகும்,
நல்ல பசி எடுக்கும் போது,,,, சிங்கம் வராது.
நான் சாப்பிட்டுவிடுவேன்.
பிறகு அவர் வர,

சமையலில் தனக்குப் பிடித்ததை மட்டும் சாப்பிட்டுவிட்டு மத்திய ஒய்வு எடுத்துக் கொள்வார்.

மீண்டும் 3 மணி அளவில் என்ன போகலாமா என் வேலையைப் பார்க்கட்டுமா  என்பார் .
இஸ்திரி செய்து துணிகள் வாங்கி வைக்கணும், ஒரு கதை
பாதியில் இருக்கு முடிக்கணும்
இன்னும் ஒரு மணி நேரத்தில போகலாமா என்பேன்.

ஏம்மா கரெக்ட்டா நான் ஜிம் போகிற நேரம் உனக்கு,மருந்து,மல்லிப்பூ ,ராகவேந்திரர் எல்லாம்
போகணுமா. ஆறு மணிக்கு வரேன்// என்று கிளம்பிவிடுவார்.
ஆறு மணிக்கு வரும்போது கூடவே வால்  மாதிரி இரண்டு நண்பர்கள் வந்துவிடுவார்கள்.
ஆண்ட்டி  சவுக்கியமா. அங்கிள் இன்னிக்கு எவ்வளவு வெயிட் தூக்கினார் தெரியுமா என்று பேச உட்கார்ந்து விடுவார்கள்.

அவனுக்கு காப்பி கொடு  என்று குளிக்கப் போவார்.

எப்படி ஆண்ட்டி பொழுது போகிறது உங்களுக்கு.
அவராவது நிறைய வெளியில் போகிறார் .
நீங்கள் சிரியல் பார்த்துப் பொழுது கழித்து விடுவீர்களா என்று அந்தப் பிள்ளை கேட்கும்.

மேலேயிருந்து குரல் வரும் ஆண்ட்டிக்கு நேரமே கிடையாதுப்பா.
தினம் 24 மணி நேரமும்  வேலைதான் என்று சிரிக்கும் சத்தம் கேட்கும்.
ஆமாம்ப்பா     அசட்டுக்கு  அறுபத்தி நாழியும் வேலைன்னு எங்க மாமியாரே சொல்லி இருக்கார் என்பேன் நானும் சிரித்தபடி.

இனிமேல் இந்த மாலைப் பொழுதில் அவரை வண்டி எடுக்கச் சொல்ல முடியாது.
நாளை பார்க்கலாம் என்ற முடிவுடன்,எழுதி வைத்த லிஸ்ட்டில் தேதியை மாற்றுவேன்.

அவைகளும் இனிய நாட்கள் தான்.









Wednesday, June 26, 2019

தாயார்..

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும். தாயார்

அன்பின்  உருவாக்கவே எனக்கு சம்பந்தி வாய்த்தார்.
அதிரப்  பேசி நான் பார்த்ததில்லை.
நல்ல வட்ட முகத்தில் குங்குமமும் புன்னகையும் ஆபரணங்கள்.

ஐந்தாறு வருடங்களாகவே  உடல் நலம் சரியில்லை.
அனைத்தையும் வெகு பொறுமையாகப்
பொறுத்துக்க கொண்டவர்.

அவருக்கு வாய்த்த மருமகள்களும் மாமியாரின் அருமை தெரிந்து
அனுகூலமாக நடந்து கொண்டவர்கள்.
அதிலும் முதல் மருமகள்   மஹாலக்ஷ்மியின்
பொறுமையும் சகிப்புத்தன்மையும் கொண்ட
நல்ல பெண்.

மாமனாரின் மதிப்பைப் பெற்ற  மருமகள் .
திருமணமானதிலிருந்து மாமியாரைப் பிரியாதவள்.

அவர்கள் பெற்ற செல்வங்களைபி போற்றி வளர்த்தவர்கள் இந்த மாமியாரும் மாமனாரும்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன் தன கணவர் பிரிந்ததிலிருந்து,
மாமியின் முகத்தில் ஒளி இல்லை.

இருவரும்  அத்தனை ஒற்றுமையான தம்பதி.
மனைவியிடம் அதீதப் பாசம்  வைத்திருந்தார்,
திரு கஸ்தூரி ரங்கன்,.

மூத்த மகனும் மருமகளும் இடைவிடாத அறிய சேவை செய்து பார்த்துக் கொண்டார்கள்.
எங்கள் மாப்பிள்ளை இங்கிருந்து தினமும்  ஸ்கைப் வழியாக அம்மாவிடம் இரண்டு மணி நேரம் செலவழிப்பார்,
இன்னொரு மகன் அடிக்கடி பெங்களூரிலிருந்து வந்து
பார்த்துக் கொள்வார்.
அன்பு மகள் வருடத்துக்கு ஒரு முறையாவது
அமெரிக்காவிலிருந்து போய் அம்மாவுடன் இருந்து விட்டு வருவார்.

இந்த நால்வரின் அன்புத் தாய், சென்னை உஷ்ணத்தில் வயதான காலத்தில்

நிமோனியா வந்த இரு நாட்களில் அவர்கள் குலதெய்வம்
அரங்க நாதன் திருவடி அடைந்தார்.

எல்லாப் புதல்வர்களும் கூடி அம்மாவுக்குச் செய்ய வேண்டிய
கிரியைகளை செய்து வருகிறார்கள்.
என்னுடைய அன்பு சிநேகிதி 
கணவருடன் இறைவனின் திருப்பாதங்களில் மகிழ்ந்திருப்பார்.











Friday, June 21, 2019

வருத்தம் ,குழப்பம் தீர இறைவனே துணை ..3

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

வருத்தம் ,குழப்பம் தீர  இறைவனே துணை

ராமேஸ்வரம்  மங்கலான வெளிச்சத்திலும் கலகலப்பாக இருந்தது . இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும்  இருந்து வந்த  யாத்திரிகர்கள் , அவர்களின் பேச்சு,
ஆடி மாத விழாவிலே  பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடு.

ஆடி  மாத அம்பாள் உலா 

என்று இருந்த மெயின்  ரோடு, உற்சாகம் கொடுத்தது.
அகிலத்தின் அம்மா சொன்னபடி  தம்பதிகள் இருவரும் நீராடி,
பட்டுடை உடுத்திக் கோவிலுக்குச் சென்றனர்,

அங்கிருந்த 32  தீர்த்தக் கிணறுகளில் நின்று
அங்கு நின்றவர்கள் வாளியால் இறைத்த நீரில்
குளித்து, மனம் முழுக்க இறைவன் நினைவில் மூழ் க
அகிலம் கணவனுடன்  அருள்மிகு ராமநாதர் சுவாமிகளின்  சந்நிதியில் வந்து நின்றாள்  .

அகிலத்தின் மனமெல்லாம் ஈசனிடம் இறைஞ்சியது.
எனக்கு என்ன வழி காட்டப்  போகிறாய் ஈசா 🙏🙏
என்று கண்ணில் நீர் வழிய நின்றாள்.
இதைக் கவனித்த பெற்றோருக்கு மனம் சஞ்சலப் பட்டது.
அவர்களை அழைத்துக் கொண்டு  அருள்மிகு பர்வத வரத்தினை அம்மன் சந்நிதிக்கு வந்த பொது
தரையில் அமர்ந்து நமஸ்கரிக்க  அகிலம் அப்படியே சரிந்துவிட்டாள் .
அங்கிருந்த  அனைவரும் பதறிப் போக
மகாதேவன் அவளுக்கு இந்த அலைச்சல் எல்லாம் தாங்காது.
விடுதிக்குச் செல்லலாம் என்றான்.
அவனை அமர்த்திய ராமலிங்க குருக்கள்.
முகத்தில் அபிஷேக ஜலத்தைத் தெளித்து,
அம்மா மனம் வருந்தாதே, அம்பாள் உன் குறை தீர்ப்பாள்
என்று ஆதரவு சொல்லி  அபிஷேகப் பாலை அருந்தும்படி கொடுத்தார்.

மீண்டும் எழுந்த அகிலம் மனத்தெளிவுடன்  அம்பாளின் திருமுகத்தின்  அழகைப் பருகியபடி இருந்தாள்.


இரண்டு சமுத்திரங்கள் கலக்கும் இடம் தனுஷ்கோடி 

அம்பாளும் ஈஸ்வரனு ம் உலா வரும் காட்சியைத் தரிசித்தபடி வெளி வந்து , தனுஷ்கோடி சென்று வந்தனர்.
ஆக்ரோஷமாக அரபிக்கடல் மோத , சாத்விகத்துடன் 
வங்காளக்கடல் இருக்க  ,அந்தக் காட்சியை தன்  வாழ்க்கையாகப்  பார்த்தாள்  அகிலம்.

திரும்பி வந்து சாப்பிட்டதும் வெளியே போய்விட்டான் மஹாதேவன்.
//என்ன ஆச்சு உங்கள் இருவருக்கும். நீ  மயங்கி விழுந்ததைக் கூட மாப்பிள்ளை பார்த்துக் கொண்டே வெளியேறி 
விட்டாரே.
என்ன மனஸ்தாபம் என்று வினவிய அம்மாவைக் கண்டவள் மெதுவாக  அவர் மனம் இங்கே இல்லை அம்மா. ஊரில் அவரது காதலியுடனும் மகனுடனும் இருக்கிறது 
என்றதும் தூக்கி வாரிப் போட்டது  பெற்றோருக்கு.
நடந்த விஷயங்களை சொன்னதும் 
அசந்து உட்கார்ந்து விட்டனர். //நான் என்ன முடிவெடுக்கட்டும் அம்மா. பொறுமையாக இதே  
வாழ்க்கையையில் இருக்கட்டுமே.இல்லை பிறந்த  வீடு திரும்பி விடட்டுமா. என்னால் இந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை.

இந்தக் கடலில் குளித்தால் எங்கள் பிரச்சினை  தீருமா.
மனம் மாறுமா //சொல்லுங்கள்  என்றாள் .
அம்மா விசித்து அழ ஆரம்பிக்க, தந்தை அவளை அதட்டினார்.
ஆறுதல் சொல்லாமல் அழாதே  என்ற தந்தையை வியப்புடன் 
பார்த்தாள்  அகிலம்.
நீங்கள் ஆண்கள்  அனைவரும் அடக்குவது என்று  ஈடுபட வேண்டாம் அப்பா. அவளுக்கு எத்தனை அதிர்ச்சி.
அழட்டுமே.//
இல்லை அம்மா மாப்பிள்ளை  தப்பாகப் புரிந்து கொள்ளப் 
போகிறாரே  என்று நினைத்தேன் என்ற தந்தையை 
நம்ப முடியாமல் பார்த்தாள் .😔 

தவறு செய்தவர் அவர் அப்பா.
இப்போது சொல்கிறேன் கேளுங்கள் என் முடிவை.
நாளை புதுக்கோட்டை திரும்புகிறோம். வண்டியை எடுத்துக் கொண்டு  குளித்தலை செல்கிறோம்.

எனக்கு அப்படியே வீட்டைவிட்டுக் கிளம்ப  எண்ணமில்லை.
என் குழந்தைகளுக்கு அங்கே உரிமை  இருக்கிறது.
அவர்களுக்கு தந்தையின் ஆதரவு வேண்டும்.

எனக்கு என்னை ஏமாற்றிய  கணவனின் உறவு வேண்டாம் .
ஆனால் அந்த வீட்டில் எனக்கும் பாத்தியதை இருக்கிறது.

அவர் மனம் மாறி  அந்த உறவை விட்டுவிட்டால் சந்தோசம்.
இல்லை  அந்தக் குடும்பமும் வேண்டும் என்றால் எனக்கு சம்மதம் இல்லை.
இதை நான்  மாமனாரிடமும் சொல்லப் போகிறேன்.

வெறும் உடல்  மட்டுமே தாம்பத்தியம் இல்லை.
மனம் இணையாவிட்டால்  அங்கே பொருள்  இல்லை.

நாலு குழந்தைகளின் தாயாக அங்கே தொடருவேன்.
என்று  தெளிவான முகத்துடன்  பெற்றோரைப் 
பார்த்தாள் .

கேட்டுக் கொண்டே வந்த மஹாதேவன்  ,தூங்கச்  சென்று 
விட்டான்.

அகிலம் முடிவு செய்த படியே  வாழ்க்கை தொடர்ந்தது.
அவளின் சந்நியாச வாழ்க்கையை உறுதி படுத்த 
அந்த  நவநீதத்துக்குப் பெண் குழந்தையும் 
பிறந்தது.

மாமனார், நிலபுலன் சொத்துக்களைப்  பேரக் குழந்தைகள் 
கைக்கு  வருவது  போல 
உயில் எழுதினார். அகிலத்தை அவர்களுக்கு  காப்பாளராக வைத்து  ஏக்கம் நிறைந்த மனதுடன் மறைந்தார்.

நாங்கள்  சேலம்  மாறி வந்த பிறகு  அங்கே சென்று பார்த்து வந்தோம். மனத்தெளிவுடன்  இருந்த 
அகிலம் என் கண்ணுக்கு கன்யாகுமரியாகத்தான் தோன்றினாள் .
இவ்வளவு மன திடம் யாருக்கு வரும்.✌✌✌✌✌✌

அகிலத்தின் பெற்றோர் மகளின்  வீட்டுக்குப் பிறகு வரவில்லை.
பேரன் பேத்திகள் மட்டும் விடுமுறைக்குத் திருச்சி சென்று வந்தனர்.

தெளிவான மனமுடன் வாழ்ந்து 
தன மக்களின் திருமணங்கள்  நடந்து பத்து வருடங்களில் 
அகிலமும்  தன்  விருப்ப தெய்வமான  அகிலாண்டேஸ்வரியின் பாதங்களைச்  சேர்ந்தாள் . 

அந்தக் கால  எண்ணங்கள் படி அவள் தீர்மானம் 
தவறாக இருக்கலாம். எனக்கு அவள் புதுமைப்பெண்.
அனைவரும் வாழ்க வளமுடன்.✌









Wednesday, June 19, 2019

மனம் வசப்பட்டால் வாழ்க்கை நேராகும் 2

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வளமாக வாழ வேண்டும்.

மனம் வசப்பட்டால் வாழ்க்கை நேராகும் .



ராமேஸ்வரம் விரைவு வண்டி,
பாம்பன் பாலத்தைக் கடந்த போது, ஜன்னல் வழியே அலைகளை வெறித்த
வண்ணம் அமர்ந்திருந்த அகிலம்
மனமும் அலை பாய்ந்தது. இந்தக் குழந்தைகள் மட்டும் இல்லாவிட்டால்
இப்படியே குதித்து விடுவேனே.
அப்பாவும் நேரில்லை. அம்மாவும் இறந்து விட்டாள்
என்றால் அந்தக் குழந்தைகளின் கதி என்ன ஆகும். மாமியார் மாமனாருக்கு
மகாதேவன் கடைசிப் பிள்ளை.
 மாமனார் எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்.

அவர் இவ்வளவு தூரம் தன் மேல் பாசம் வைத்திருப்பதால்
ஏதோ தீர்வு காண விழைகிறார்.
நான் நினைத்தது போல எதையும் செய்ய முடியாது.
பொறுத்துதான் பார்க்க  வேண்டும்.
அந்தப் பொறுமையை அம்பாள் தான் அளிக்க வேண்டும்.
உடனே பெற்றொர் நினைவு வந்து  கண்களில் நீர் வடியத் தொடங்கியது.

கூடவே வரும் யாத்திரீகர்கள் நினைவு வந்து ஜன்னலை நோக்கித் திரும்பிக்

கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
கடைக்கண்ணால் அவள் செய்கையைக் கவனித்த மகாதேவன் மனம்
சிறிதே கலங்கியது.குற்ற உணர்வு மேலிட இனி வரும்
எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசிக்க ஒன்றும் புலப்படவில்லை.

உலகத்தில் இதெல்லாம் புதிது இல்லையே. கோவலன்
 காலத்திலிருந்து நடப்பதுதானே.
இவளுக்கு என்ன குறை வைத்து விட்டேன்.
வீடு,நல்ல பெற்றோர்,குழந்தைகளுக்கு நல் வாழ்வு
பாதுகாப்பு எல்லாம் இருக்கிறதே.
எல்லாம் சரியாகி விடும் என்னால் நவனீதத்தைக் கைவிட முடியாது.
நற்குலத்துப் பெண்டிரை விட உயர்ந்தவள்.
அப்பா மனம் மாறும் என்று தீர்மானத்துடன்
அகிலத்தை நோக்கி// நாம் இறங்கணும்// என்று சுருக்கமாகச் சொல்லி
ராமேஸ்வரம் நிலையத்தை எதிர் நோக்கினான்.
அங்கு சுழன்றடித்துக் கொண்டிருந்த காற்றுக்கு
நடுவே அவன் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது.
அகிலத்தின் பெற்றோர் கனிவு கண்களில் மின்ன
இவர்களை வரவேற்றனர். அகிலம்,மகாதேவன் இருவருக்குமே
அதிர்ச்சி. அகிலம் ஒரு நிமிடத்தில் தன உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி  தன்  அம்மாவை அணை த்துக் கொண்டாள் .

எப்படிம்மா இங்கே நீங்கள் என்று திணறினாள்

சம்பந்தி குழந்தைகள் அங்கே பரிகாரம் செய்ய
வருகிறார்கள் என்று  தொலைபேசியில் சொன்னார் அம்மா.
//////உங்களுக்குத் துணையாக எங்களை வரச்சொன்னார்.
நேற்று இதே ரயிலைத்  திருச்சியில் 

 பிடித்து  இங்கே வந்தோம் . ஆடிக்காற்றின்  பொது
ரயிலைப் பாம்பனிலேயே நிறுத்தி விடுவார்களாம்.
அப்படி ஒன்றும் நேராமல் நீங்கள்  வந்து சேர்ந்தது நிம்மதி. சங்கர மடத்தில் தங்க
ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்று கோவிலுக்குப் போய்விட்டு வந்து விடலாம். நாளை சமுத்திர ஸ்நானம்
முடித்துக் கொண்டு தேவிப் பட்டினம் போய் வரலாம்.

அடுத்த நாள்  நீங்கள் புதுக்கோட்டைக்குத் திரும்பலாம்.
நாங்களும் உங்களுடன் திரும்புகிறோம்
சரியா மாப்பிள்ளை//// என்றார் அகிலாவின் அப்பா .
திகைப்பிலிருந்து மீளாத மகாதேவனுக்குத்  தலை ஆட்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
அடுத்த பதிவில்  பூர்த்தி செய்து விடலாம்.



Monday, June 17, 2019

மனம் ஒரு குரங்கு

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக இருக்க வேண்டும் .
1960 களில்

எங்கள்  நண்பரில்  ஒருவர்  காவிரிக்  கரையோர
கிராமம்  ஒன்றில் வளமாக வாழ்ந்து வந்தார் .

இப்பொழுதும்  நன்றாகத் தான் இருக்கிறார்  85 வயதில் .
மகாதேவன்  என்று பெயர் வைத்துக் கொள்ளலாமா.
மனைவி  அகிலம்.
விடுமுறை நாட்கள் கிடைக்கும் போது ,புதுக்கோட்டையிலிருந்து
  40 மைல்கள் தள்ளி இருந்த அந்தக் கிராமத்துக்குப்
போய் வருவோம்.
 வீடு விசாலமாகக் கட்டி இருந்தார். மொசைக் இழைத்த அறைகள்.
கூடம்.... அதன் நடுவே ஊஞ்சல்.
அதை விட்டு இறங்கினால் முற்றம். அதில் குடி நீருக்கான குழாயும்  மிகப் பெரிய தொட்டியும்.

அதனருகி ல்  போடப் பெற்ற சிமெண்ட் இருக்கைகள்.
சுற்றிலும் பசுமை..காவிரி வறத நாட்கள் அவை.
முற்றத்தின் மேல் வளைந்து நிழல் கொடுக்கும்
மரங்கள்.

பின் கதவைத் திறந்து வெளியே சுற்றிலும் போடப் பட்ட நடைபாதை. அதற்கப்புறம் எல்லாவிதமான பழ மரங்கள்.
படர் கொடிகள், புடலங்காய் ,அவரைக்காய் கொடிகள்.

மணம் சேர்க்கும்  மலர்களின் கொடிகளும் செடிகளும் .
 அவருக்கு  வாய்த்திருந்த மனைவியும் பாரம்பரிய உடை உடுத்தி,   மிக்க கம்பீரமாக  இருப்பார்.

மாமியார்,மாமனார், மைத்துனர்கள்  என்று பெரிய குடும்பம்.

நல்ல படிப்பாளர்கள்.
எல்லாருடைய குழந்தைகளும் அங்கிருந்த  சிறு  பள்ளியில் படித்து வந்தன.
மொத்தம் பத்து  குழந்தைகளாவது இருக்கும்.

மிக  சந்தோஷமான  குடும்பத்தில்
ஒரு மூன்று வருடங்கள்  போல்  ஒரு சலனம் .

ஒரு வேண்டாத நட்பு, அதன் மூலம் ஒரு குழந்தை
பெரியவருக்கு  இருப்பது,  குடும்பத்துக்கு
வழக்கமாக  எண்ணெய் கொடுத்துவரும்
நல்ல கண்ணு   சொல்லித் தெரிய வந்தது.
அதுவும்  வீட்டுப் பெரியவரிடம்  அந்த வேண்டாத செய்தியைச் சொல்லி விட்டுப்  போய்விட்டார்.

மகனின்  செய்கையில்  மனம் சிதைந்தாலும் நிதானம் இழக்காத
பெரியவர் , மகாதேவனையும் ,அகிலாவையும் அழைத்து, அறுவடை முடிந்த அடுத்த அமாவாசைக்கு
ராமேஸ்வரம் சென்று   சமுத்திர ஸ்நானம்,
தானம், ராமநாத சுவாமி தரிசனம்  செய்து வருமாறு
சொன்னார்.

அப்பாவின் திடீர்க்கட்டளைக்கு  மகன் மறு  வார்த்தை பேசவில்லை.

அகிலத்துக்கு இந்தப் பயணத்தில்  விருப்பமில்லை.
மனம் ஒட்டவில்லை.
தன்னை மறுத்து இன்னொருவளிடம்  சந்தோஷமாக இருப்பதென்றால் தனக்கு அந்த வீட்டில் என்ன மதிப்பு, வாழ்வதில்தான் என்ன
பயன் என்று குமுறினாள்  என்னிடம் .
எனக்கும் இவருக்கும்  மிகுந்த  சங்கடம்.
நண்பர் வயதில் மூத்தவர் என்பதாலும்  அறிவுரை எல்லாம் சொல்லத்  தயக்கம்.
மேலும்  அவர்  ஒரு டிவிஎஸ் கஸ்டமர். அவர் வீட்டு வண்டிகள்
புதுக்கோட்டைக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை    ஒழுங்கு  படுத்துவதற்காக  வரும்.

புதுக்கோட்டையில்  வந்து  ராமேஸ்வரம்  செல்ல வந்திருந்தார்கள்.
இரவு தங்கி மறு  நாள் செல்வதாக ஏற்பாடு.

தன்  குழந்தைகள்  நான்கும்  பெரியவர்களை சங்கடப் படுத்தாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை.

விருப்பம் இல்லாத தாம்பத்யமாகப் போய்விட்டதே என்ற வருத்தம்.
தாம்பத்யத்தில் தன்னிடம் என்ன குறை கண்டு
அந்தப் பெண்ணை நாடினார்  என்ற கோபம் எல்லாம் அவரை வாட்டின.
 எனக்கு  அனுபவம் போதாது என்பதோடு  இப்படி எல்லாம் கூட  நடக்குமா என்ற பிரமிப்பு.
அடுத்த நாள்  காலையில் வண்டியை எங்கள் வீட்டில் விட்டு விட்டு ராமேஸ்வரத்துக்கு வண்டி ஏறினார்கள்.

மீண்டும் பார்ப்போம்.

















Saturday, June 15, 2019

தண்ணீர் தண்ணீர்

வல்லிசிம்ஹன்

 கோவையில் இருக்கும்போது, அது இருக்கும் 46 வருடங்களுக்கு முன்னால்,
தடாகம் ரோடு ,டிவிஎஸ் நகரில் பெரியவீடுகள். எல்லோர் வீட்டிலும் கிணறு. எட்டிப் பார்த்தால் தலை சுற்றும் ஆழத்தில் தண்ணீர் இருக்கும்.
சில வீடுகளில் ஒரு கிணற்றுக்கு இரண்டு மோட்டார்கள் வைத்திருப்பார்கள். தினந்தோறும் கிணற்றை ஆழப் படுத்துகிறேன். இன்னும் தண்ணீர் வரும் என்று சொல்லி
கிணறு தோண்டும் பணியில் இருப்பவர்கள்
வருவார்கள்.

ஒரு அடி அந்தக் கற்பாறைகளில் உளிகள் மோத 5 ரூபாய்.
காலையில் அந்த உழைப்பாளி உள்ளே இறங்க மனைவி குழந்தைகளோடு
வெளியே இருந்து பேச்சுக் கொடுப்பாள். நானும் குழந்தைகளும்
சமையலறைக்கு வெளியில் இருக்கும் வராந்தாவில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்போம்.
தண்ணீர், வெற்றிலை,புகையிலை ,பீடி என்று கீழெ அனுப்பிக் கொண்டிருப்பாள்
அவள்.
ஒரு மணி அளவில் அவன் வெளியே வருவான்.
நானும் குழந்தைகளும் சாப்பிட்டு முடித்திருப்போம்.
அவர்களுக்கும் ஒரு பாத்திரத்தில் நிறைய சாதம் போட்டுக்
குழம்பையும் விட்டு அவளிடம் கொடுப்பேன்.
ஒரு பச்சை மிளகாய், வெங்காயம் குடு அம்மிணி
என்பாள்.
சப்புனு இருக்கு எப்படிச் சாப்பிடறீங்க என்று
வினவியபடி பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும் கல்வாழை  இலைகளைப்
பறித்து சின்னக் குழந்தைகளுக்கு
முதலில் கொடுத்து விட்டுக் கணவனுக்கும் கொடுப்பாள்.
தானும் சாப்பிடுவாள்.
கொஞ்சம் டீத்தண்ணி குடு அம்மிணி என்றும் கேட்டுக் கொள்ளுவாள்.
இந்த சிரம பரிகாரம் முடிந்து
அவன் மீண்டும் கிணற்றுக்குள் இறங்குவான்.
சிலசமயம் அவனுடைய மச்சினர் என்று சொல்லிக் கொண்டு
இன்னொருவனும் இறங்குவான்.
இவர்கள் பேசிக்கொள்வது மேலே கேட்கும்.
சாயந்திரம் 4 மணிக்கு மேலே வந்து விடுவார்கள்.
பத்தடி தோண்டிவிட்டதாகவும்
அடுத்த நாட்கள் காலையில் இரண்டு அடிகளுக்கு மேலே
தண்ணீர் வந்துவிடும். இன்னும் ஆறு மாதங்கள் கவலை இல்லை
என்பான்.

நானும் தலை ஆட்டிவிட்டு, அவர்கள் கையில் நூறு ரூபாயும் அந்தத்
தேவானைக்குப் புடவை,
குழந்தைகளுக்குச் சட்டைகள் என்று கொடுத்து விட்டுக் கிணற்றை எட்டிப் பார்ப்பேன். கலங்கலான காவி வண்ணத்தில் அறுபது
 அடிகளுக்குக் கீழே தண்ணீர் தெரியும்.
சரி இன்று தண்ணீர் வண்டியை வரச் சொல்லி விடலாம்.
நாளைக்கு மோட்டார் போட முடியும்.
மேல் தொட்டியில் தண்ணீர் நிரம்பும்.
எல்லோரும் நன்றாகக் குளிக்கலாம் என்ற கனவுகளுடன்
படுக்கைக்குச் செல்வேன்.

அடுத்த நாள் எழுந்திருக்கும் போதே உளிச் சத்தம் கேட்கும்.
என்ன வென்று ஜன்னல் வழியே பார்த்தால்
அடுத்த வீட்டில் தேவானை கிணற்றுப் பக்கம் நின்று கொண்டிருப்பாள்.
ஆஹா, தண்ணீர் அங்கே போய்விடுமே என்ற பரபரப்பில் மோட்டார் போடுவேன்.
அது அரை மணி நேரம் ஓடி பாதித்தொட்டி நிரம்பும்.
பின்னால் சிங்கத்தின் குரல் கேட்கும்.
நூறு ரூபாய்க்கு ஒரு நாள் தண்ணீர் வாங்கிட்டியா என்று சிரிப்பார்.
அடுத்தவாரமும் தேவானைக்கு நூறு எடுத்து வை என்று
சொல்லியபடி மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளம்பி விடுவார்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 

இப்போது எல்லோரும் போர்வெல் போட்டிருப்பார்கள்.

Thursday, June 13, 2019

மாறாத காலங்கள்...

தம்பி ரங்கன் திரு மோகனின்   பரம விசிறி 
வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழவேண்டும். அஞ்சலிகளும் அன்பும்.திரு  மோகன்.

Monday, June 10, 2019

பிறந்த நாள் நினைவுகள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்

ஜூன் பத்தாம் நாள், 1952 ஆம் ஆண்டு.
அம்மாவுக்கு மிகப் பிடித்த நாள். அம்மாவுக்கு
எண்கள் ,நியுரமாலஜி
மிகவும் பிடிக்கும். அதற்காகவே பல
புத்தகங்கள் படிப்பார். இந்தியன் எக்ஸ்ப்ரஸ்
ஞாயிறு அன்று வெளியாகும் சண்டே ஸ்டாண்டர்டில் முதலில் அவர் படிப்பது பீட்டர் விடாலின் அந்த வாரத்துக்கான  ஜோசியக்குறிப்புகள் தான்.

1 ஆம் நம்பர் சூரியனுக்குரியது. அதில் பிறந்தவர்கள்
எல்லாவற்றிலும் ,துறைகளிலும் பிரகாசிப்பார்கள்.
என்றெல்லாம் சொல்வார். அவரது பிறந்த நாள் 9 ஃபெப்ரவரி
என் பிறந்த நாள் நம்பர் 9..ஏப்ரில்.தனக்கும் எனக்கும் உள்ள வேறுபாடுகளையும்
சொல்வார். உனக்கு சாலஞ்சஸ் இருந்தால் தான்
நீ பிரகாசிப்பாய். இல்லாவிட்டால் ஒடுங்கி விடுவாய் என்று என் முயற்சிகளுக்கு
ஊக்கம் கொடுப்பார்.

அவர் அப்பாவின் வார்த்தைகளுக்கு மறு வார்த்தை சொல்லி நான் பார்த்ததில்லை.
நானோ சவால் என்றால் சரி என்று வருவேன்.
தம்பிகள் இருவரும் 1 ஆம் எண்ணின் ஆதிக்கம் இருந்தாலும்
 எல்லோருடனும் ஒத்துப் போவார்கள். ஆனால்
நினைத்ததை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக
இருப்பார்கள்
அம்மா நினைத்தபடி தம்பிகள் இருவரும் அவரவர் துறைகளில்
 முனைப்போடு இருந்து வெற்றி பெற்றார்கள்.
கடின வேலைகளுக்கு அஞ்சியதில்லை.
அம்மா மனம் கோணும்படி எதுவும் செய்ய மாட்டார்கள்.
அப்பாவின் வார்த்தைக்கு என்றும் கட்டுப்படுவார்கள்.
அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பிடித்த மாப்பிள்ளை சிங்கம்.
5 ஆம் எண்ணுக்குரியவர்.
அம்மாவின் கணிப்புப்படி இந்த எண்ணுக்குரியவர்கள்
எல்லோரிடமும் தராசுபோல நியாயம் பார்த்து
அனுசரித்துப் போவார்கள்.
சிங்கம் என்னைக் கவனித்துக் கொண்ட அழகில் பூரித்துப்
போவார்.
அவரது செல்ல மகன் என் பெரிய தம்பிக்கு அவனது 42 வயதில்
மாரடைப்பு வந்த போது அவன் அந்தப் பூட்டுக்குத் தப்பிவிடுவான் என்பதில் திடமாக இருந்தார்.
நான் விஜயா ஹாஸ்பிடலே கதி என்று இருக்க
அம்மா அங்கு வரவே மறுத்தார்.
சின்னத்தம்பி நான் அப்பா மூவரும் ஆஸ்பத்திரி வராந்தாவே
வீடு போல இருந்தோம்.
சாப்பாடு மட்டும் வண்டியில் வந்துவிடும்.
அப்பா மனம் தளரக் கூடாது என்பதில் கவனமாக
இருந்தார் அம்மா.
அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. தம்பி  பைபாஸ் சர்ஜரியும்
முடித்து நலமே வீட்டுக்குத் திரும்பினான்.

அவனுக்கு அடுத்து வந்த மூன்று மாதங்களும்
என் பெற்றோர் நம்பிக்கையுடன் வாசித்த சொல்லிய பிரபந்தமும்,சுந்தரகாண்டமும் அவன் ஆயுளை நீட்டியது.
அவன் மனைவியின் சலிப்பில்லாக் கவ்னமும்
அந்த வெற்றிக்குக் காரணம்.
எங்கள் குழந்தைகளின் வளமான எதிர்காலத்தில்
என் தம்பிகள் காட்டிய அக்கறை அளவிட முடியாதது.

யாரையிம் வன்சொலால் தாக்கி அறியாத மென்மை
படைத்தவன் முரளி.
அவன் பிறந்த அதே ஜூன் மாதம் அவனுக்குப் பேரனும் பிறந்து விட்டான்.
அன்பு முரளி,
உன்னுடைய சந்தோஷ நாட்களை நான் அனுபவிக்கிறேன்.
உன் மகன் ,அவனுடைய மகளுடனும்,மகனுடனும்,
அன்பு மனைவியுடனும் பல்லாண்டு நிறை வாழ்வு வாழ வேண்டும்.

அடுத்த பிறவி என்று உண்டெனில் உனக்கு
நான் எல்லாவிதத்திலும் உதவி உறுதுணையாக இருக்கக்
கடவுள் அருள் வேண்டும்.
ஏனெனில் சில கடன்கள் அடைக்க முடியாதவை.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரா.

Friday, June 07, 2019

திருக்கண்ணமுது

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
திருக்கண்ணமுது

புதுக்கண்ணன் பிறந்ததை ஒட்டி
பெருமாளுக்கு நிவேதனம் செய்ய இந்தப் பால் பாயசத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
நாங்கள் திருப்புல்லணை ஆதி ஜகன்னாதன் கோவிலுக்குச் சென்ற போது
 காலை மணி பதினொன்று இருக்கும்.
அமிர்தமான பாயசப் பிரசாதம் கிடைத்தது அவன் அருளாக.
அந்த மாதவ பட்டாச்சார்...அப்போது அங்கே இருந்த அர்ச்சகர்

இந்த கண்ணமுதைச் செய்யும் விதம் சொன்னார்.

பச்சரிசியை வறுத்துக் கொண்டு ஒன்றுக்கு மூன்று
என்ற விகிதத்தில் நீர் சேர்த்து
 நன்றாகக் குழைய வேகவைத்து,
ஒரு முழுத்தேங்காயின் பால் இரண்டு தடவையாக எடுத்துக் கொண்டு

இரண்டாவது பாலையும், ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வெல்லத்தூள்
இரண்டையும் கொதிக்கும் சாதத்தில் கலந்து ஒரு கொதி
வந்தபின்னால்,
முதலாவதாக எடுத்த பாலையும் கலந்து அதுவும் ஒன்று சேரக் கொதித்த பின்னர்
இறக்கி,
ஏலக்காய் பொடி தூவி, முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துக் கலந்து
கண்ணனுக்குப் படைக்க வேண்டும்.
குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் செய்தது.
இனி நாமகரணத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன்.
Add caption
Add caption
என்றும் வாழ்க வளமுடன்.
ஸ்ரீனிவாச பெருமாள்  சிகாகோ
படத்தில் இருப்பது கூகிள் குழந்தை.


Thursday, June 06, 2019

புது வரவு

வல்லிசிம்ஹன்
புது வரவு
எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்.
புதுக் கண்ணன் பிறந்தான்.

அரங்கன் அருள், திருமலையான் அருளில்  எங்கள் பிறந்தகத்தில் புதுக் கண்ணன் வருகை தந்திருக்கிறான் தம்பி முரளியின் மகனுக்கு, ஜூன்  5 அன்று மாலை  குழந்தை ஜனனம்.
முருகனை எழுதிய வேளையில்  பிறந்த தால் கந்தன் கருணையும் அவனுக்கும் இருக்கும் என்று பிரார்த்திக்கிறேன்.

இந்த நாள் நிகழ்வைப் பதியும் பாக்கியத்தைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சீரோடும் சிறப்போடும் வாழ இந்த அத்தைப் பாட்டியின் ஆசிகள்.

Tuesday, June 04, 2019

எட்டுக்குடி,சிக்கில்,என்கண் முருகன்

வல்லிசிம்ஹன்,
எல்லோரும் இனிதாக  வாழ வேண்டும்.

http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_07.html

http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_08.html


http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_09.html
http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_8297.html  அன்புத் தோழி  கீதா சாம்பசிவம்  பதிவுகள்இல்  
இன்னும் விரிவாக  விவரங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.  நன்றி  கீதாமா.





சிக்கில் சிங்காரவேலா பாடலைக் கேட்டதும் நினைவு வந்ததென்னவோ,
 நம் ஷண்முகசுந்தரமும் , மோஹனாம்பாளும் தான்.

பிறகுதான் பொதிகையில் முன்னம் ஒரு காலம்
எப்பொழுதோ ஆலய தரிசனம் நிகழ்ச்சியில் கேட்ட தல வரலாறு நினைவுக்கு
வந்தது.
எட்டுக்குடி வேலவனில் ஆரம்பித்து
சிக்கில் முருகன், எங்கண் முருகன் என்று விளக்கமாகச் சொன்னவர் பெயர் நினைவில்லை.
ஏனெனில் குரல் மட்டுமே பின்னணியில் ஒலித்தது.

ஆலய செய்திகளும்,படங்களும் காணக்கிடைத்தது 2012 இல் என்று நினைக்கிறேன்.
இப்பொழுதும் அது போல ஒளிபரப்பாகிறதா என்று தெரியவில்லை.

அப்போது கேட்ட வரலாறு.
எட்டுக்குடி முருகனை வடிவமைத்த சில்பியின் முருகனின் அருள்
நிறைந்த மனத்துடன் இரவு பகல் என்று பார்க்காமல்
 வடித்த முருகன்,வள்ளி, தெய்வயானை
 மயிலில் அமர்ந்த கோலம் பார்த்தவர் மனமெல்லாம்
அருள் வெள்ளம் பாய்ந்தது. அதிசயத்திலும் அதிசயம்
சிற்பி வடித்த மயில் உயிர் பெற்றுப் பறக்க ஆரம்பித்ததாம்.

உறைந்து போன மக்கள் எட்டிப்பிடி எட்டிப்பிடி என்றதும்\
உடனே சிலர் உடனே பிடித்து உரித்தான இடத்தில்
அமர்த்தி முருகன் அதன் மேல் அமர,
 தேவியர் விக்கிரகங்களையும் இருபக்கலிலும் இருத்தினராம். இந்தக்
கோவிலில் மட்டுமே  மயில் இடப்பக்கம்
முகம் திருப்பிப் பார்ப்பது போல இருக்குமாம்.
எட்டிப்பிடி என்பது எட்டுக்குடி என்று மறுவியதாம்.
இந்த ஆச்சரிய நிகழ்வைக் கேட்டு வந்த மன்னன், வேறு எந்த இடத்திலும் இது
போல அழகு முருகன் இருக்கக் கூடாது என்ற
உத்தரவில் சிற்பியின் வலது கட்டை விரலை எடுக்கச் சொல்ல
அப்படியே நடந்தததாம்.

இதற்குப் பிறகு திருமுருகன் கனவில் தரிசனம்
கொடுத்து சிக்கிலிலும்  தன்னை எழுந்தருளச் சொன்னதால்
ஒரு கட்டை விரலும் ,முருகன் துணையும் இருக்க
சிக்கிலில் முருகப்பெருமான் விக்கிரகத்தை வடித்தார் அந்த
அதிசயச் சிற்பி.
இந்தத் தடவை அவரின் கண்கள் பறிக்கப் பட்டதாம்.

மூன்றாம் தடவையும் கனவில் வந்த முருகனார், இன்னோரு
சிலையும் இதே போல் வடிக்கச் சொல்ல
மகளின் துணையுடன் தெய்வத்தை வடிக்க ஆரம்பித்த போது
மகளின் சிற்பியின் உளி மகள் கையில் பட  ரத்தம் பீறிட்டதாம்.
அது சிற்பியின் கண்ணில் பட அவருக்கு உடனே
கண்ணில் ஒளிவர் மீண்டும் பார்வை பெற்றாராம்.
என் கண் என் கண் என்று கதறி
கந்தனைப் பாட,அந்த ஊருக்கு எங்கண் என்றே பெயர் வந்ததாம்.
பங்குனி மாதத்தில் காவடி பிரசித்தம் இந்த மூன்று
ஊரிலும் என்று சொல்லி முடித்தார் அந்த நிகழ்ச்சியை.
முருகன் திருவருள் எங்கும் நிறையட்டும்.
உங்களில் பலருக்கும் இந்தத் தகவல் தெரிந்திருக்கும்
என் மன திருப்திக்காக இங்கு பதிகிறேன்.
அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும்.

.

எட்டுக்குடி வேலவன்.





Saturday, June 01, 2019

அம்மாவின் மூக்குத்தி

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
அம்மாவின் மூக்குத்தி .

மூக்குத்தி போட்டுக் கொள்ள,நல்ல மூக்கு வேண்டும்.
கூர் நாசி. எட்டுக்கல் பேசரி போட நாசியும் ஏற்றுக்கொள்ளும்படி

செழிப்பாக இருக்க வேண்டும். அதுவும் ஒரு பக்கம் ஒற்றைக்கல்
இன்னோரு பக்கம் பேசரி.
ஆஹான்ன்ன். வைரமில்லை. புஷ்பராகம்.

ஆனால் அதையே அம்மா பாதுகாப்பில் வைத்திருக்கும் போது வைரமாக மின்னும்.
வெள்ளி தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
 ஏதாவது வெள்ளிக்கிழமை விடுமுறை இருந்தால் அம்மாவோட காரியங்களைப் பக்கத்திலிருந்து பார்ப்பேன்.
தேய்க்க வேண்டிய வெள்ளி,பித்தளை,வெண்கலப் பாத்திரங்களை
எடுத்து வைத்து என் துணையுடன் தேய்த்து வெய்யிலில் வைப்பார்.

அடுத்தாற்போல் ஒரு பாயை விரித்து அதில் அமர்ந்து கொண்டு
மூக்குத்திகளையும்,காது தோடுகளையும் கழற்றி.,
சர்ஃப் பொடி நிறைந்த தண்ணீர்க் கிண்ணத்தில் ஜாக்கிரதையாக வைப்பார்.
வளையல்களும் இன்னொரு பெரிய டபராவில் வைக்கப்படும்.
முகத்துக்குப் பாலேடு,மஞ்சள் இதைக் குழைத்துப்
பூசிக்கொண்டு கிண்ணத்தில் நல்லெண்ணெய் எடுத்துக் கொண்டு
 குளியல்றைக்குச் சென்று விடுவார். அம்மாவுக்கு நீண்ட தலைமுடி. அடர்த்தியாக இல்லாமல் நளினமாகப் பின்னலிடப்பட்டு
முடிபோட்டிருக்கும்.
வெளியே போகும்போது மட்டும் அது  சுற்றப்பட்டுப் பந்து போல கழுத்தில் அமர்ந்துவிடும். எண்ணி ஆறே கொண்டை ஊசிகள்.அதற்குள்
அடங்கிவிடும் அந்த கொண்டை.
இதுதான் எஸ் கட்டாமா என்று கேட்டால் அம்மா முகத்தில் குறும்பு
மின்னும்.
அடுத்த தடவை எதிர்வீட்டு மாதவனின் அம்மா வந்து கிளம்பும்போது சுட்டிக் காட்டுவார்.
அது சற்றே குறைவான தலைமுடி உள்ளவர்கள் தலையுடன் பொருத்தும் எஸ் வடிவில்
இருக்கும்.

அம்மா குளித்துத் தலைமுடியையை உலர்த்தி நுனி முடிச்சுப் போட்டுக் கொண்டு
அடுப்புகளை மூட்டி,கரியடுப்புப் பக்கத்தில் உட்காரும்போது,
அந்த அடுப்புகளின் வெளிச்சத்தில் தோடுகளும் ,மூக்குத்திகளும் மின்னும்.
நேற்றுப் பார்த்த உதிரிப்பூக்கள் சினிமாவின் தாக்கம் இந்தப் பதிவு.

அழகிய கண்ணே பாடல்தான் எவ்வளவு அழகு.
நல்ல வேளை  எனக்கு நல்ல அப்பா கிடைத்திருந்தார்.
அவர் துணையில் தான் எங்கள் குடும்பம் செழித்தது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏