Blog Archive

Monday, June 17, 2019

மனம் ஒரு குரங்கு

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக இருக்க வேண்டும் .
1960 களில்

எங்கள்  நண்பரில்  ஒருவர்  காவிரிக்  கரையோர
கிராமம்  ஒன்றில் வளமாக வாழ்ந்து வந்தார் .

இப்பொழுதும்  நன்றாகத் தான் இருக்கிறார்  85 வயதில் .
மகாதேவன்  என்று பெயர் வைத்துக் கொள்ளலாமா.
மனைவி  அகிலம்.
விடுமுறை நாட்கள் கிடைக்கும் போது ,புதுக்கோட்டையிலிருந்து
  40 மைல்கள் தள்ளி இருந்த அந்தக் கிராமத்துக்குப்
போய் வருவோம்.
 வீடு விசாலமாகக் கட்டி இருந்தார். மொசைக் இழைத்த அறைகள்.
கூடம்.... அதன் நடுவே ஊஞ்சல்.
அதை விட்டு இறங்கினால் முற்றம். அதில் குடி நீருக்கான குழாயும்  மிகப் பெரிய தொட்டியும்.

அதனருகி ல்  போடப் பெற்ற சிமெண்ட் இருக்கைகள்.
சுற்றிலும் பசுமை..காவிரி வறத நாட்கள் அவை.
முற்றத்தின் மேல் வளைந்து நிழல் கொடுக்கும்
மரங்கள்.

பின் கதவைத் திறந்து வெளியே சுற்றிலும் போடப் பட்ட நடைபாதை. அதற்கப்புறம் எல்லாவிதமான பழ மரங்கள்.
படர் கொடிகள், புடலங்காய் ,அவரைக்காய் கொடிகள்.

மணம் சேர்க்கும்  மலர்களின் கொடிகளும் செடிகளும் .
 அவருக்கு  வாய்த்திருந்த மனைவியும் பாரம்பரிய உடை உடுத்தி,   மிக்க கம்பீரமாக  இருப்பார்.

மாமியார்,மாமனார், மைத்துனர்கள்  என்று பெரிய குடும்பம்.

நல்ல படிப்பாளர்கள்.
எல்லாருடைய குழந்தைகளும் அங்கிருந்த  சிறு  பள்ளியில் படித்து வந்தன.
மொத்தம் பத்து  குழந்தைகளாவது இருக்கும்.

மிக  சந்தோஷமான  குடும்பத்தில்
ஒரு மூன்று வருடங்கள்  போல்  ஒரு சலனம் .

ஒரு வேண்டாத நட்பு, அதன் மூலம் ஒரு குழந்தை
பெரியவருக்கு  இருப்பது,  குடும்பத்துக்கு
வழக்கமாக  எண்ணெய் கொடுத்துவரும்
நல்ல கண்ணு   சொல்லித் தெரிய வந்தது.
அதுவும்  வீட்டுப் பெரியவரிடம்  அந்த வேண்டாத செய்தியைச் சொல்லி விட்டுப்  போய்விட்டார்.

மகனின்  செய்கையில்  மனம் சிதைந்தாலும் நிதானம் இழக்காத
பெரியவர் , மகாதேவனையும் ,அகிலாவையும் அழைத்து, அறுவடை முடிந்த அடுத்த அமாவாசைக்கு
ராமேஸ்வரம் சென்று   சமுத்திர ஸ்நானம்,
தானம், ராமநாத சுவாமி தரிசனம்  செய்து வருமாறு
சொன்னார்.

அப்பாவின் திடீர்க்கட்டளைக்கு  மகன் மறு  வார்த்தை பேசவில்லை.

அகிலத்துக்கு இந்தப் பயணத்தில்  விருப்பமில்லை.
மனம் ஒட்டவில்லை.
தன்னை மறுத்து இன்னொருவளிடம்  சந்தோஷமாக இருப்பதென்றால் தனக்கு அந்த வீட்டில் என்ன மதிப்பு, வாழ்வதில்தான் என்ன
பயன் என்று குமுறினாள்  என்னிடம் .
எனக்கும் இவருக்கும்  மிகுந்த  சங்கடம்.
நண்பர் வயதில் மூத்தவர் என்பதாலும்  அறிவுரை எல்லாம் சொல்லத்  தயக்கம்.
மேலும்  அவர்  ஒரு டிவிஎஸ் கஸ்டமர். அவர் வீட்டு வண்டிகள்
புதுக்கோட்டைக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை    ஒழுங்கு  படுத்துவதற்காக  வரும்.

புதுக்கோட்டையில்  வந்து  ராமேஸ்வரம்  செல்ல வந்திருந்தார்கள்.
இரவு தங்கி மறு  நாள் செல்வதாக ஏற்பாடு.

தன்  குழந்தைகள்  நான்கும்  பெரியவர்களை சங்கடப் படுத்தாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை.

விருப்பம் இல்லாத தாம்பத்யமாகப் போய்விட்டதே என்ற வருத்தம்.
தாம்பத்யத்தில் தன்னிடம் என்ன குறை கண்டு
அந்தப் பெண்ணை நாடினார்  என்ற கோபம் எல்லாம் அவரை வாட்டின.
 எனக்கு  அனுபவம் போதாது என்பதோடு  இப்படி எல்லாம் கூட  நடக்குமா என்ற பிரமிப்பு.
அடுத்த நாள்  காலையில் வண்டியை எங்கள் வீட்டில் விட்டு விட்டு ராமேஸ்வரத்துக்கு வண்டி ஏறினார்கள்.

மீண்டும் பார்ப்போம்.

















15 comments:

வெங்கட் நாகராஜ் said...

மனம் ஒரு குரங்கு.... சரியாகத் தான் சொல்லி இருக்கிறார்கள்....

மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

நெல்லைத்தமிழன் said...

அதான் சரியான தலைப்பை வைத்துவிட்டீர்களே....

வாழ்க்கைல நிறைய இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் வரும்போது அதனை உடனே தவிர்த்துடணும். கொஞ்சம் ஆசை அந்த சமயத்தில் வந்துவிட்டால், அது நிறைய பிரச்சனைகளைக் கொண்டுவந்துவிடும். நான் ரொம்பவும் 'வெளி உலகில் என்னுடைய இமேஜை மெயிண்டெயின்' செய்வேன். நான் எல்லாவிதத்திலும் 'நல்லவன்' என்று. அது எனக்கு பல முறை உதவியிருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
வாழ்க்கையில் எத்தனை மனிதர்களைச் சந்திக்கிறோம்.
அப்போதுதான் எங்களுக்குத் திருமணம் முடிந்து
புதுக்கோட்டை வந்திருந்தேன். இவர்கள் வீட்டுக்குப் போக மிகவும் பிடிக்கும்.
அந்தத்தாத்தா எங்கள் தாத்தா போல முறை வழுவாத வாழ்க்கை
வாழ்ந்தவர்.
நம் கதை நாயகன் கொஞ்சம் மிராஸ்தார் மாதிரி நடந்து கொள்வார்.
இரண்டு நாட்களில் முடித்து விடுகிறேன். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன்,

ஆமாம். நம் வாழ்க்கை முறை ஒழுங்காக இருந்தால் தான் நம் மக்களுக்கு அறிவுரை சொல்ல முடியும்.

நீ மத்திரம் அப்படி நடந்து கொண்டாயே என்று ஒரு வார்த்தை திருப்பிக் கேட்கக்கூடாது
இல்லையா.
அவர்கள் கேட்காவிட்டாலும் மனதில் நினைத்தாலே
அவமானம்.
மேலும் ஊருக்கு ஒப்ப வாழ வேண்டும்.
இளம் வயதிலெத்தனையோ ஜாலம் புரிந்தே
வெளி வரவேண்டும்.. இறைவன் தான் துணை.
நன்றி மா,.மனம் நிறைந்த பாராட்டுகள். வெளி நாட்டில் இருந்து,குடும்பத்தைப்
பிரிந்து வாழ்பவர்களுக்கு எத்தனை சோதனைகள் மா.
துபாயில் நிறையப் பார்த்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

பொருத்தமான பாடல், தலைப்பு. பாவம் அந்தப் பெண்மணி... மனதளவில் மிகவும் நொறுங்கிப்போயிருப்பார். பாதிக்கப்பட்ட இன்னொருபெண்ணின் நிலையென்னவோ.... என்ன கட்டாயமோ....

துரை செல்வராஜூ said...

மனம் ஒரு குரங்கு.. ஆனாலும் அதை கட்டுக்குள் வைத்திருப்பது எது?...

அதை அறிய முடியாமலேயே பலருக்கும் வாழ்க்கை முடிந்து விடுகிறது...

சரியான இடத்தில் திருப்பம் வைத்திருக்கின்றீர்கள்...

Geetha Sambasivam said...

பாவம் அந்தப் பெண்மணி. கூனிக் குறுகி இருப்பார். தவறும் செய்துவிட்டு அதையும் மறைத்த கணவன் அந்தக் காலத்து மிராசுதார் தான் நீங்க சொல்லி இருப்பது போல்! சந்தேகமே இல்லை!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
உண்மையே. இது பச்சைத் துரோகம் இல்லையா.
இத்தனைக்கும் அகிலாமா மிக அழகான வடிவான பெண்மணி.

மஹா பொறுமைசாலி..
ஆமாம்,அந்தப் பெண் அந்தக் காலத்து அந்த மாதிரி குடும்பத்துப் பெண்.
எப்படியோ இவருக்கும் அவளுக்கும் சீட்டாடப்
போன இடத்தில் நட்பு ஏற்பட்டதாக இவர் சொல்வார்.
எல்லாமே கசந்தது எனக்கு.
எங்கள் வீட்டில் நண்பர்கள் சீட்டாட வருவார்கள்.
அதெல்லாவற்றையும் முதலில் நிறுத்தினேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை இனிய காலை வணக்கம்.
தங்கள் கதையைப் படித்து விட்டுக் காவிரியில் குளித்த
தூய உணர்வு.
நீங்களும் படித்துப் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்.

அந்தக் காலத்தில் நாகரீகம் தெரிந்த மனிதராகத்
தோற்றம் கொடுத்தவர்.
ஆளழகு துப்பட்டிக்காரன் என்று என் மாமியார்
சொல்வார்.
வெற்றிலை,அத்தர் மணத்துடன்,பட்டு சட்டை அவர் வருவதைப் பார்த்தாலே
பிரமிப்பாக இருக்கும்.
கதை தெரிந்த பிறகு மதிப்பில் இறங்கி விட்டார்.
இதோ செவ்வாய் புதனில் பூர்த்தி செய்யப் பார்க்கிறேன்.
நன்றி மா.

KILLERGEE Devakottai said...

மனக்குரங்கை கட்டிப் போடுவது மாமனிதர்களுக்கு மட்டுமே இயலும்.

தொடர்கிறேன் அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. தங்களைக் காணாமல் கவலையாக இருந்தது.
இன்று உடல் நலம் தேவலையா.
ஆமாம் முதல் முறையாக இது போல
பளபளப்பான ,குணமில்லாத,அதை மறைக்கத் தெரிந்த மனிதரைப் பார்த்தேன்.
பாதிக்கப் பட்டது இரு பெண்கள்.
அகிலம் மனைவியாக இருந்து மிகவும் சிரமப்பட்டார்.

அந்தக் காலத்தில் இப்போது போல விட்டுப் போவதெல்லாம் நடக்காதே.
நன்றி மா. உடல் நலமாகட்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

மனம் ஒரு குரங்கு...

பெண்மணியின் நிலை பாவம். அந்தப் பெரியவரின் நிலை என்னவோ? ஏன் இப்படி நடந்தது? சூழல் என்னவாக இருக்கும் என்று எனக்கு கற்பனை விரிந்து தோன்றிட என் மனதில் வேறொரு கோணத்தில் கதை விரிகிறதே...

என்னவாக இருக்கும் என்று அறிய ஆவல் தொடர்கிறேன் அம்மா..

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி.
இனிய காலை வணக்கம்.

மனதை அடக்கி ஆண்டவர்களையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா.
இது போல பணம் படைத்தவர்களோ,
குணம் கெட்டவர்களோ...... பார்க்க நேர்ந்தால்
சங்கடமாகப் போய்விடுகிறது.
நன்றி மா.நலமுடன் வாழ்க.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா.
இனிய காலை வணக்கம்.
இத்ற்கெல்லாம் அப்போது பெரிய நியாயம் எதுவும் தேவையாக
இருந்ததில்லை.
கட்டுப்பாடு இல்லாத மனம்,உடல்.
பணமிருந்தால் எதுவும் செய்யலாம் என்கிற இதயம்.
பொதுவில் குடும்பத்தின் மீது பாசம் வைக்காதவர்களின் போக்காக இருந்தது.

நன்றி மா. சென்னைப் பயணம் முடிந்து வாருங்கள்.

கோமதி அரசு said...

எனக்கு பிடித்த பாடல்.
மனதை அலைய விடாமல் கடிவாளம் போட தெரியவில்லை என்றால் அவமானம், கவலை, எல்லாம் அடைய வேண்டியது தான்.

எப்படி எல்லாம் மனிதர்களை சந்தித்து இருக்கிறீர்கள்.
ராமேஸ்வரத்தில் முழுக்கு போட்டு புதியவாழ்க்கையை நல்லபடியாக ஆரம்பித்தாரா?